COMMUNIST PARTY OF INDIA (MARXIST - LENINIST) - LIBERATION

COMMUNIST PARTY OF INDIA (MARXIST - LENINIST) - LIBERATION, TAMILNADU

Tuesday, July 31, 2018

கால் பந்து உலகக் கோப்பை

எஸ்.குமாரசாமி

இறுதிப் போட்டி
பிரான்சும் குரோஷியாவும்தான் கால் பந்து உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் இந்த முறை விளையாடின. பிரான்ஸ் பொருளாதாரம், உலகின் ஏழாவது பெரிய பொருளாதாரமாகும்.
2016ல் பிரான்சின் மக்கள் தொகை 6.69 கோடி. அதன் பொருளாதாரத்தின் அளவு 2.47 லட்சம் கோடி யுஎஸ் டாலர் ஆகும். 2016ல் குரோஷியாவின் மக்கள் தொகை 41.7 லட்சம். அதன் பொருளாதாரத்தின் அளவு 5042.53 கோடி யுஎஸ் டாலர் ஆகும்.
15.06.2018 அன்று ரஷ்யாவில் நடந்த இறுதிக் கோப்பை ஆட்டம் மாலை 8.30 மணி முதல் இந்தியாவில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. ஆட்டம் முடிவடைந்தபோது, பந்து குரோஷியா வசம் 66 சதமும் பிரான்ஸ் வசம் 34 சதமும் இருந்தது.
முதல் 10 நிமிடங்கள் குரோஷியா தாக்குதல் மேல் தாக்குதல் நடத்தியது. கிரைஸ்மேன் பிரான்சுக்கு வழங்கப்பட்ட ஃப்ரீ கிக்கை பனெட்டாவது நிமிடம் உதைக்க, குரோஷிய வீரர் மரியோ மண்டுசுகிச் அதனைத் தலையால் முட்டி வெளியே தள்ளப் பார்த்தார். ஆனால் அது குரோஷியா கோல் வலையில் விழுந்தது. உலகக் கோப்பை இறுதிப் போட்டி முதல் கோல், அணியினரே தம் சொந்த கோல் வலை யில் பந்தைத் தள்ளும், ஓன் (ஞரச) கோலாக மாறியது. அடுத்த பத்தாவது நிமிடம் குரோஷியாவின் பெரிசிச் தமது அணியினர் தந்த பந்தை வலது காலில் வாங்கி இடது காலுக்கு நகர்த்தி மின்னல் வேகத்தில் கோல் அடித்தார். 1 - 1 என ஆட்டம் சம நிலைக்கு வந்தது. கதாநாயகன் பெரிசிச் அடுத்த 10 ஆவது நிமிடம் வில்லன் ஆக்கப்பட்டார். பிரான்ஸ் வீரர் உதைத்த பந்து குரோஷிய கோல் முனையில் பெரிசிச் கையில் பட்டது. பிரான்ஸ் வீரர்கள் பெனால்டி கேட்டார்கள் அர்ஜென்டீனா நடுவர் நெஸ்டர் பிடானா, வீடியோ உதவி நடுவர் உதவியை நாடினார். இந்த உலகக் கோப்பையில்தான் முதல் முறையாக வீடியோ உதவி நடுவர் முறை பயன்படுத்தப்பட்டது. நடுவரின் முடிவு தயங்கி தடுமாறி பெனால்டி என அறிவிக்கப்பட்டது. பிரான்சின் கிரைஸ்மேன் பெனால்டியை அடிக்கத் தயாராக, காணும் உலகம் முழுவதின் கண்களும் அவர் மீதே பதிந்து இருந்தன. குரோஷியா கோல் கீப்பர் தவறான திசையில் செல்ல, மிகுந்த திறமையுடன் கிரைஸ்மேன் பெனால்டியை கோல் ஆக்கினார். பிரான்ஸ், குரோஷியாவுக்கு எதிராக 2 - 1 என மீண்டும் முன்னிலை பெற்றது. இடைவேளை வரை அதே நிலை தொடர்ந்தது. இடைவேúளைக்குப் பிறகு குரோஷியா கோல் போட தீவிர முயற்சிகள் எடுத்தது. 2 - 1 எப்போது 2 - 2 ஆகும் என எதிர்பார்ப்புக்கள் அதிகரித்தன. 6 நிமிடங்களில் குரோஷியா தலையில் இரட்டை இடிகள் இறங்கின. உலக கோப்பையில், சரியான வாய்ப்புக்காகக் காத்திருந்த, பால் போக்பா, தமது முதல் கோலை, பாபே தந்த பந்தை உதைத்து, குரோஷியாவுக்கு எதிராக 59ஆவது நிமிடம் போட்டார். இறுதிப் போட்டியின் மீது தனது அதிவிரைவு முத்திரை ஓட்டத்தை மீண்டும் பதிவு செய்த பிரான்ஸ் இளைஞர் பாபே 65ஆவது நிமிடம் கோல் அடிக்க பிரான்ஸ் 4 - 1 என்ற கிட்டத்தட்ட அசைக்க முடியாத முன்னிலை பெற்றது. 69ஆவது நிமிடம் பிரான்ஸ் கோல் கீப்பர் லோரிஸ் மிகவும் சுலபமான பந்தை குரோஷியா வீரர் காலுக்குத் தர மரியோ மண்டுசுகிச் கோல் போட, பிரான்ஸ் முன்னிலை 4 - 2 என மாறியது. இறுதி வரை இந்த நிலை தொடர, பிரான்சே வென்றது.
குரோஷியாவின் முதல் கோலை 36 அடி தூரத்திலிருந்து அடித்த இவான் பெரிசிச், தமது 16ஆவது வயதிலிருந்தே குடும்பத்தைக் காப்பாற்ற பிரான்சில் வாழ்ந்து வருகிறார்.
பிரான்ஸ் 2 - 1 முன்னிலை பெற்ற பிறகு குரோஷிய வீரர் லிடா ஆகாயத்தை நோக்கி முணுமுணுத்தது, ஏதோ தெய்வீக தலையீட்டை கோருவது போல இருந்தது என்று இன்டியன் எக்ஸ்பிரசில் விஷ்ணு பிரசாத் எழுதினார்.
இந்த உலக கோப்பை கால்பந்து போட்டியின் சிறந்த வீரராக தங்க கால்பந்து விருதை குரோஷியாவின் லுக்கா மொட்ரிச் வென்றார். 6 கோல்கள் என அதிக கோல் அடித்த இங்கிலாந்தின் ஹாரிகேன் தங்க காலணி விருதை வென்றார். சிறந்த கோல் கீப்பருக்கான தங்க கை உறை விருது பெல்ஜியத்தின் திபா கொட்டாய்க்கு வழங்கப்பட்டது. சிறந்த இளம் வீரர் விருதை பிரான்சின் கிளியன் பாபே வென்றார். இந்தப் உலகக் கோப்பை போட்டியில் 18 ஓன் (ஞரச) கோல்கள் போடப்பட்டன.
இந்த உலகக் கோப்பையின் சிறந்த வீரர் விருது பெற்ற குரோஷியாவின் லுகா மொட்ரிச், பிரான்சின் முதல் இரண்டு கோல்களும் தவறான விதத்தில் தரப்பட்டது என்றார். 18ஆவது நிமிடம் கிரைஸ்மேனுக்கு தரப்பட்ட ஃப்ரீ கிக் சரியல்ல என்றும் அதுவே தமக்கு எதிரான கோலாக முதல் கோலாக விழுந்தது என்றும் சொல்கிறார். தப்பாட்டம் (ஃபவுல்) இல்லாமலே, ஃப்ரீ கிக் தந்திருக்கக் கூடாது என்கிறார். 28ஆவது நிமிடம் தமது அணி வீரர் கையில் அவர் எதிர்பாராதபோது பட்ட பந்திற்கு, வேண்டுமென்றே செய்ததற்கான பெனால்டி தந்திருக்கக் கூடாது என்றார்.
உலகக் கோப்பையில் யார் இருந்தனர்?
யார் இல்லை?
இந்த உலகக் கோப்பையில் ஆசிய பிராந்தியத்தில் இருந்து தென்கொரியா, சவுதி அரேபியா, ஈரான், ஜப்பான் ஆஸ்திரேலியா என்ற 5 நாடுகள் கலந்துகொண்டன. ஆப்பிரிக் காவிலிருந்து, எகிப்து, மொராக்கோ, துனிஷியா, செனகல், நைஜீரியா என்ற 5 நாடுகள் கலந்து கொண்டன. அமெரிக்க கண்டத்திலிருந்து, அர்ஜெண்டினா, பிரேசில், கொலம்பியா, பெரு, கோஸ்டாரிகா, உருகுவே, மெக்சிகோ, பனாமா என்ற எட்டு நாடுகள் கலந்துகொண்டன. அய்ரோப்பாவிலிருந்து அய்ஸ்லாண்ட், டென் மார்க், ஸ்பெயின், போர்ச்சுகல், போலந்து, இங்கிலாந்து, பிரான்ஸ், சுவீடன், சுவிட்சர்லாந்து, ரஷ்யா, குரோஷியா, ஜெர்மனி, பெல்ஜியம், செர்பியா என்ற 14 நாடுகள் கலந்துகொண்டன. மொத்தம் 32 நாடுகள் கலந்துகொண்டன.
சீனா, இந்தியா, இந்தோனேஷியா, அய்க்கிய அமெரிக்கா என்ற 300 கோடி மக்கள் வாழும் நாடுகளுக்கு இந்த உலகக் கோப்பையில் கலந்துகொள்ள வாய்ப்பு இல்லை. முக்கிய கால் பந்தாட்ட நாடுகளான, இத்தாலி, நெதர்லாண்ட், சிலி, கேமரூன், அய்வரி கோஸ்ட் ஆகிய நாடுகள் கலந்து கொள்ளவில்லை.
209 நாடுகள் 21 முறை உலக கோப்பையில் விளையாடி உள்ளனர். 17 நாடுகள் உலகக் கோப்பை விளையாட்டுகளை நடத்தி உள்ளன. பிரேசில் 5 முறையும், ஜெர்மனி, இத்தாலி தலா 4 முறையும், அர்ஜெண்டினா உருகுவே, பிரான்ஸ் தலா 2 முறையும், ஸ்பெயின், இங்கிலாந்து தலா 1 முறையும் வென்றுள்ளன.
இந்த உலகக் கோப்பை போட்டியின்
சில காணத்தக்க விசயங்கள்
பெரிய நாடுகள் என்று கருதப்படும் பெரிய வீரர்களான மென்ஸி இடம் பெற்ற அர்ஜெண்டினா, ரொனால்டோ இடம் பெற்ற போர்ச்சுகல் ஆகிய நாடுகள் கால் இறுதிக்குக் கூட முன்னேற முடியவில்லை. ஜெர்மனி முதல் சுற்றிலேயே வெளியேறியது. நெய்மர் பங்கேற்ற பிரேசில், கால் இறுதியில் வெளியேறியது. பெரியோர் எல்லாம் பெரியரும் அல்ல, சிறியோர் எல்லாம் சிறியரும் அல்லர்.
ரஷ்யா எதற்கும் லாயக்கற்ற நாடு என்ற மேற்கத்திய நாடுகளின் பிரச்சாரம் தகர்ந்தது. ரஷ்யா உலகக் கோப்பைக்காக ரூ.21,000 கோடி செலவழித்து உள்கட்டுமான வசதிகளை, சிறந்த நிர்வாக ஆற்றலை வெளிப்படுத்தியது.
ஊழலில் ஊறித் திளைக்கும் உலகக் கால் பந்தாட்ட அமைப்பு, பெண்கள் மீது கூருணர்வு உள்ளதாகக் காட்டிக் கொள்ள, தொலைக் காட்சி அலைவரிசைகள் உடலைக் காட்சிப்ப டுத்தும் விதத்தில் உடையணிந்துள்ள பெண் ரசிகர்களைக் காட்ட வேண்டாம் எனத் தெரிவித்தது. ஆனால் ரஷ்யா நெடுக நடந்த ஆட் டங்களில் பிரான்சில் நடந்த வெற்றிக் கொண்டாட்டங்களில் பெண் நிருபர்களும் ரசிகர்களும் மலினமான கேலிக்கும் தடவுதல் அழுத்துதலுக்கும் (ஜோக்ஸ் & க்ரோப்ஸ்) ஆளாக்கப்பட்டனர்.
இந்த உலகக் கோப்பை அரை இறுதியில் ஆடிய பெல்ஜியம், பிரான்ஸ், இங்கிலாந்து, குரோஷியா ஆகிய அனைத்தும் அய்ரோப்பிய நாடுகளே. உலகக் கோப்பை கால்பந்தின் பன்முகத்தன்மை போய், அது அய்ரோப்பியமயாகிய சமகால உலகமயமாதல் போக்கு வெளிப்பட்டது.
இந்த உலகக் கோப்பையில் எஞ்சியுள்ள ஒரே ஆப்பிரிக்க அணி பிரான்ஸ்தான் என்று பேசும் கிண்டல் பேச்சுக்களும் இருக்கவே செய்தன. பிரான்சின் 23 பேர் கொண்ட குழுவில் 14 பேர், மாலி, காங்கோ ஜனநாயக குடியரசு, கேமரூன், கினியா, அல்ஜீரியா, மொராக்கோ, நைஜீரியா என்ற ஆப்பிரிக்க நாடுகளின் வம்சா வழியினர்.
பிரான்ஸ், அரை இறுதிப் போட்டியில் பெல்ஜியத்திற்கு எதிராக ஒரு கோல் போட்டுத்தான் வென்றது. அந்த ஒரு கோலை தலை யால் முட்டி அடித்த சாமுவேல் உம்டிடி ஆப்பிரிக்க வம்சா வழியினர். இறுதிப் போட்டியில், குரோஷியாவின் ஓன் (ஞரச) கோல் சர்ச்சைக்குரிய பெனல்ட்டி தவிர்த்த இரண்டு கோல்களையும் போட்ட பால் போக்பாவும் பாபேயும் ஆப்பிரிக்க வம்சா வழியினரே. பிரான்சின் உலகக் கோப்பை கால் பந்து போட்டி வெற்றி, அய்ரோப்பா எங்கும் பரவி வரும் நிற வெறி இனவெறிக்கு தடை போடாது என்றாலும் நிச்சயமாக ஓர் அடி கொடுத்துள்ளது.
கால் பந்தின் உலகமயம்
1924 ஒலிம்பிக்கில் தன் கால் பந்தாட்ட, மந்திரத் திறமையால் பாரிசை வசப்படுத்திய உருகுவேயின் கருப்பு அதிசயமான ஜோஸ் லியாண்ட்ரோ அண்ட்ராடே, நாடு திரும்பும்போது, ஒரு பட்டு கிமோனோ, சாம்பல் கை உறைகள், ஒரு கைக் கடிகாரம் மட்டுமே கொண்டு வந்தார். அப்போது கால்பந்து மதுவுக் காக, நல்ல உணவுக்காக, மகிழ்ச்சிக்காக விளையாடப்பட்டது. அவர் கடைசியில் வீதிக ளில் செய்தித் தாள்கள் விற்றார். தன் பதக்கங்களை விற்றார். அவர்தான் உலகின் முதல் நட்சத்திர கருப்பு கால் பந்தாட்ட ஆட்டக்காரர். இது எட்வர்டோ கலியானோவின் வர்ணனை.
இன்று என்ன நிலைமை? இப்போது உலகின் சிறந்த கால் பந்தாட்ட நாடுகளை அடையாளம் காட்டும் மேடையாக உலகக் கோப்பை இல்லை. 736 விளையாட்டு வீரர்கள், 32 பயிற்சியாளர்கள், 400 உதவியாளர்கள், கால் பந்து கிளப்புகள் ஏலமெடுக்க நிறுத்தப்பட்டுள்ளனர்.
ஆப்பிரிக்காவின் திறமையான வீரர்கள் அய்ரோப்பாவில் ஆடுகிறார்கள். செனகல் அணியின் 23 பேரில் 22 பேர் அய்ரோப்பாவில் ஆடுகிறார்கள். நைஜீரிய அணியின் கோல் கீப்பர் தவிர மற்றவர்கள் எல்லாம் ஆப்பிரிக்காவுக்கு வெளியில் ஆடுகிறார்கள். தொட்டிலில் இருக்கும்போதே அய்ரோப்பிய கிளப்புகள் திறமையானவர்களைக் கைப்பற்றி விடுகிறார்கள். கால் பந்தாட்டம் உலகமயத்தால் உதை படுகிறது. நாட்டுக்கு  ஆடுவதைக் காட்டிலும், புகழுக்கு ஆடுவதைக் காட்டிலும் பணத்துக்கு ஆடுவது முதல் நிலைக்கு வந்துவிட்டது. பிரேசிலின் 1236 வீரர்கள். பிரான்சின் 821 வீரர்கள், அர்ஜெண்டினாவின் 781 வீரர்கள் வெளியில் விளையாடுகின்றனர். வளர்ந்த நாடான ஸ்வீடனின் 23 விளையாட்டு வீரர்களில் 21 பேர் வெவ்வேறு அய்ரோப்பிய கிளப்புகளுக்கு ஆடுகின்றனர். உலகமயம் கால் பந்தைக் கைப்பற்றித்தான் உள்ளது.
ஆனாலும் கால்பந்து விளையாட்டின் அந்த அற்புத கணங்கள் இப்போதும் மனித மனங்களுக்கு மகிழ்ச்சி தருகின்றன. கிறிஸ்டியானோ ரொனால்டோ இந்த உலகக் கோப்பையில் மூச்சை அடக்கி உடலை மனதை ஒருமுகப்படுத்தி, வீரர்கள் நிற்கும் தடுப்பரண் தாண்டி, தொலை தூரத்தில் இருந்து போட்ட கோல் எப்போதும் கண்களில் நிற்கும். நீங்காத நினைவாய் நீடிக்கும்.
கால் பந்தின் வேறுவேறு அற்புத கணங்கள் நமக்கு இனியும் தேவையே. 

Search