COMMUNIST PARTY OF INDIA (MARXIST - LENINIST) - LIBERATION

COMMUNIST PARTY OF INDIA (MARXIST - LENINIST) - LIBERATION, TAMILNADU

Tuesday, July 17, 2018


எதிர்ப்புப் போராட்டங்கள் காலத்தின் கட்டாயம்

எஸ்.குமாரசாமி

உலகப் புகழ் பெற்ற எழுத்தாளர் எடுவர்டோ கலியானோகிட்டத்தட்ட நம் அனைவரின் கதைகள்என்ற துணை தலைப்புடன், ‘முகம் பார்க்கும் கண்ணாடிகள்’ (மிர்ரர்ஸ்), என்ற நூல் எழுதி உள்ளார்.
அந்த நூலில், இந்தியாவில் ஏற்பட்ட பஞ்சம், ஆட்சியாளர் அணுகுமுறை, மக்கள் எதிர்ப்பு பற்றியும் சில விஷயங்கள் சொல்லி உள்ளார். அவற்றில் இருந்து இரண்டு விஷயங்களை மட்டும் பார்ப்போம்.
1.            இயற்கையின் பெருமைகள் (நேச்சுரல் குளோரிஸ்)
லார்ட் லிட்டன், இந்தியாவை பிரிட்டிஷார் சார்பாக ஆண்டார். அவரது கவிதைகளை இங்கிலாந்து மகாராணி விக்டோரியா படித்தார். ஒரு கட்டத்தில் (கிழக்கிந்திய கம்பனிக்குப் பதிலாக, இந்தியாவை இனி நேரடியாக இங்கிலாந்து ஆளும் என்று சொல்லும் விதம்), இந்தியாவின் பேரரசியாக இங்கிலாந்து மகாராணி விக்டோரியா முடிசூட்டிக் கொண்டார். அப்போது லார்ட் லிட்டன் ஒரு மாபெரும் விருந்துக்கு ஏற்பாடு செய்தார். தம் கவிதைகளை ராணி படிப்பதற்காகவோ அல்லது தேசப்பற்று மேலோங்கியதாலோ, அந்த விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தார். டெல்லியில் ஏழு பகல்கள் ஏழு இரவுகள் லிட்டனின் அரண்மனையில் நடந்த விருந்தில் 70,000 விருந்தினர் அழைக்கப்பட்டனர். உலக வரலாற்றில் மிகவும் பிரும்மாண்டமான மிகவும் அதிக செலவு ஒரு சாப்பாட்டிற்கு ஆன விருந்து இதுவே என டைம்ஸ் பத்திரிகை குறிப்பிட்டது.
இந்தியாவில் அப்போது பஞ்சம் தாண்டவமாடியது. வயல்கள் பகல்களில் வெடித்தன. இரவுகளில் உறைந்தன. அந்த நேரத்தில் நடந்த அந்த மாபெரும் விருந்தில், பேரரசி விக்டோரியா, இந்திய மக்களுக்கு மகிழ்ச்சியும் வளமை யும் நல்வாழ்க்கையும் கிடைக்கட்டும் எனச் சொன்ன வாழ்த்துச் செய்தி லார்ட் லிட்டனால் படித்துக் காட்டப்பட்டது.
விருந்து நேரத்தில் அங்கிருந்த ஆங்கிலேய பத்திரிகையாளர் வில்லியம் டிக்பி, இந்த மகத்தான விருந்து நடந்த ஏழு பகல்கள் ஏழு இரவுகளில், பஞ்சத்தால் பசியால் பத்து லட்சம் இந்தியர்கள் இறந்தார்கள் என கணக்கிட்டுச் சொல்கிறார்.
2.            வறியவரின் பொறுமைஎன்ற தலைப்பில் ஃபிளாரன்ஸ்  நைட்டிங்கேல் எழுதியதை கலியானோ சுட்டிக்காட்டுகிறார்: ‘இந்தியா எங்கும் விவசாய கலகங்கள் மிகவும் சகஜமான வையாக மாறும். பொறுமையாக, வாயைத் திறந்து பேசாமல் இருக்கும் கோடிக்கணக்கானவர்கள், எப்போதும் வாய் மூடி மவுனமாக இருப்பார்கள் என நாம் நினைத்துவிடக் கூடாது. பேசாதவர்கள் பேசுவார்கள். காது கொடுத்து கேட்காதவர்கள், கேட்க வேண்டி வரும்’.
கொல்லப்பட்டவர்களின் மண்டை ஓடுகளிலிருந்து அமிர்தத்தை பருகுகிற அருவருக்கத்தக்க பழங்கால விக்ரகம் போலவே, காலனிய காலத்து வளர்ச்சி இருந்ததாக மார்க்ஸ் நியுயார்க் டிரிப்யூன் நாளேட்டிற்கு 08.08.1853ல் எழுதினார். காலனிய இந்தியாவில், 10 லட்சம் பேர் பசியால் சாக, 70,000 பேர் பிரும்மாண்ட விருந்து உண்டதை கலியானோ வெளிச்சம் போட்டுக் காட்டினார். அதே கலியானோ, இந்தியாவில் பெரிய கலகம் வரப்போகிறது என பிளாரன்ஸ் நைட்டிங்கேல் சுட்டிக்காட்டியதையும் குறிப்பிடுகிறார்.
பழனிச்சாமியின் மோடியின் காவல்துறை, நகர்ப்புற நக்சல், அரை மாவோயிஸ்ட் என, வில்லியம் டிக்பியையும், பிளாரன்ஸ் நைட்டிங்கேலையும் தேடினாலும் தேடுவார்கள். பழனிச்சாமி அவர்களே, டிஜிபி ராஜேந்திரன் அவர்களே, பெரிய கலகம்  வரப் போகிறது என, சமூகத்தைக் கணித்து வருகிற எவருக்கும் தெரியும். வாழ்க்கை பறிபோகும்போது, எதிர்ப்பு நசுக்கப்படும்போது கலகம் வரத்தான் செய்யும். எங்கெல்லாம் ஒடுக்குமுறை இருக்கிறதோ, அங்கெல்லாம் எதிர்ப்பும் இருக்கும் என்பது வரலாற்றின், வாழ்க்கையின் விதி.
பழனிச்சாமி பதற்றத்துடன் சொல்லும் விஷயங்களை சற்று பகுத்து ஆராய்ந்து பார்ப்போம். 1. எட்டுவழிச் சாலை விஷயத்தில் நாங் கள் விவசாயிகள் எவரையும் கைது செய்ய வில்லை. 2. எட்டுவழிச் சாலை, மத்திய அரசின் திட்டம், 3. எட்டு வழிச்சாலை இறுதி வடிவம் எடுக்க அய்ந்து ஆண்டுகள் ஆகும்.
அய்ந்து ஆண்டுகளுக்கு பிறகு வரும் சாலைக்கு இப்போது ஏன் இவ்வளவு தீவிரம், அவசரம் என்ற மூன்றாவது விஷயத்திற்கு இந்தத் திட்டம் மோடியின் திட்டம் எனச் சொல்வதோடு தொடர்புண்டு. திட்டம் மோடி திட்டம், துஷ்டனை (தீயவரை) கண்டால் தூர விலகு என எச்சரிக்கவும் கூட அவ்வாறு சொல்லலாம். நான் என்ன செய்ய முடியும், சொல்வதைத்தானே செய்கிறேன் என்ற ஓர் அடிமையின் ஒப்புதல் வாக்குமூலமும் அதில் இருக்கலாம். அய்ந்தாண்டானாலும் நாங்கள் இருக்கும் போது, இருக்கும் வரை இதிலும் சம்பாதிப்பது எனத் திட்டமிட்டுள்ளதால் அவசரம் என ஆளும் கூட்டம் நடவடிக்கைகள் எடுப்பதாக மக்கள் நினைப்பது போலவும் இருக்கலாம். ஆனால் அடிப்படையான செய்தி கார்ப்பரேட் வளர்ச்சி நடந்தே தீரும், எவரையும் தடுக்கவிட மாட்டோம் என்பதுதான். ஜின்டாலுக்கு, அதானிக்கு, அம்பானிக்கு ஆதரவான தொழில் வளர்ச்சி நடந்தே தீரும். அதுவே வளர்ச்சி அதுவே முன்னேற்றம். அதனை எதிர்ப்பது பயங்கரவாதம். 13 பேரை தூத்துக்குடியில் படுகொலை செய்தவர்கள், கொலைவாளை, ஒடுக்குமுறை தடிகளை கீழே போட மறுக்கிறார்கள். சிறைக் கதவுகளைத் திறந்து வைக்கிறார்கள். ஸ்டெர்லைட்டைத் திறக்கத் திட்டமிடுகிறார்கள். அதனால்தான், வெளியாள் பூதம் என்ற கதை பேசப்படுகிறது. அதனால்தான், பழனிச்சாமி, விவசாயிகள் இல்லாதவர்கள் கைது செய்யப்படவில்லை என்கிறார். அதாவது, நேரடியாக நிலம் இழக்கும், வீடிழக்கும் சில லட்சம் பேர் நீங்கலாக, தமிழ்நாட்டில் மீதமுள்ள 7.5 கோடி பேர் எட்டு வழிச்சாலை பற்றி பேசக் கூடாது என்கிறார். காவல்துறையும் அதற்கேற்ப செயல்படுகிறது.
வளர்ச்சிதான் பயங்கரவாதத்தை அகற்றும் என்கிறார் மோடி. அவர் சொல்வதை திருப்பிப் போட்டால் பயங்கரவாதமே வளர்ச்சியைத் தடுக்கிறது. எட்டு வழிச்சாலை எதிர்ப்பு, மீத்தேன், ஹைட்ரோகார்பன், அனல்மின் நிலை யம், நியுட்ரினோ, கூடங்குளம் எதிர்ப்பு எல்லாமே பயங்கரவாதம். அதனால்தான் பழனிச் சாமியின், எஜமானர்களின் எஜமானரான ஆர்எஸ்எஸ்சின் 24.06.2018 ஆர்கனைசர் ஏடு எழுதுகிறது: ‘எல்லா வகை கிறிஸ்துவ தேவாலயங்களின் உதவி பெற்ற, இந்த இயக்கங்களின் துவக்கம், நடவடிக்கைகள் மற்றும் இவற்றுக்கான வழிகாட்டுதலில், இடதுசாரி தீவிரவாத அமைப்புகள், இசுலாமிய அடிப்படைவாதிகள், மற்றும் தமிழ் பிரிவினைவாதிகளின் செல்வாக்கு இருக்கிறது என்பது திரும்பத் திரும்ப நிரூபணமாகிறது’.
அப்புறமென்ன, ஆர்எஸ்எஸ் சொல்லும்படி மோடி, பழனிச்சாமி அரசுகள் செய்ய வேண்டியதுதானே. காஞ்சி மாவட்ட ஆட்சித் தலைவரும் உயர்நீதிமன்ற நீதிபதி ராஜாவும் சமீபகாலத்தில் மிகவும் கவனத்தை ஈர்த்தார்கள். தவறான காரணங்களுக்காகத்தான். காஞ்சிபுரம் மாவட்டத்தில் எட்டு வழிச்சாலைக்காக திருபெரும்புதூர், உத்திரமேரூர் ஒன்றியங்களில் மட்டும் 1,300 ஏக்கர் நிலம் கைப்பற்றப்பட உள்ளது. 03.07.2018 அன்று ஆட்சியர் பொன்னய்யா அவசர அறிக்கை வெளியிட்டார். ‘சென்னை சேலம் இடையே அமையவுள்ள 8 வழிச்சாலைக்கு காஞ்சிபுரம் மாவட் டத்தில் 59.1 கி.மீ தூரத்திற்கு நிலம் எடுப்பு செய்யப்பட உள்ளது. இதற்கான அறிவிக்கை இந்திய அரசிதழில் ÷ன் 26ல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த நில எடுப்பில், நில உரிமையாளர்கள் அல்லாதவர்கள் குறிப்பாக வெளியூர் நபர்கள் ஊடுருவி நில உரிமையாளர்களுக்கு மனமாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன் செயல்பட்டாலோ, அமைதிக்குப் பங்கம்  விளை விக்கும் விதத்தில் நடந்து கொண்டாலோ, சட்டம் ஒழுங்கைச் சீர்குலைக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டாலோ, கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இந்த நடவடிக்கையில் ஈடுபடுபவர்களின் வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு உரிமம் ரத்து செய்யப்படும்’. எட்டு வழிச்சாலை விஷயத்தில் தமிழ்நாட்டு மக்களின் அடிப்படை உரிமைகள் சுதந்திரங்கள் தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளன என ஆட்சியர் பொன்னய்யா மூலம் பழனிச்சாமி அரசு திட்டவட்டமாகச் சொல்லியுள்ளது.
மத்திய அரசின் சுற்றுச் சூழல், வனம், பருவ நிலை மாற்றம் அமைச்சகத்தின் (பாதிப்பு மதிப்பீடு பிரிவு) இயக்குநரும் அறிவியலாளருமான ரகு குமார் கோடாலி 08.06.2018 அன்று இந்திய தேசிய நெடுஞ்சாலை கழகத்தின் (நேஷனல் ஹைவேஸ் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா) திட்ட இயக்குநருக்கு ஒரு கடிதம் எழுதி உள்ளார். அந்தக் கடிதத்தின் பத்தி 4 படி சில குறிப்பான நிபந்தனைகள் சொல்லப்பட்டுள்ளன. அவை விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டிய கூடுதல் எழுவினாக்களாக்கப்பட்டுள்ளன (டெர்ம்ஸ் ஆஃப் ரெஃபரன்ஸ்):
1. சுற்றுச் சூழல் கோணத்தில் இருந்தும் மறுவாழ்க்கை மறு குடியமர்த்துதல் கோணத்தில் இருந்தும் சாத்தியமான வழிகளின் பொருத்தப்பாடு பற்றி மறு பரிசீலனை 2. கல்வராயன் குன்று வனம் தவிர்க்க, செங்கம் சேலம் வழி தவிர்ப்பது 3. நன்செய் நிலம், குளம், நீர்நிலை கள் உள்ளிட்ட சாலை அமைதல் பற்றி முழுமையாக மதிப்பீடு செய்வது. தணிப்பு நடவடிக்கைகள்.......... 6. ஒரு தேசிய அளவில் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம் மூலம், சாலையால் உள்ளூர் பல்லுயிரித் தன்மைக்கு, வன விலங்குகள் தாழ்வாரங்களுக்கு என்ன பாதிப்பு, என்ன தணிப்பு என்ற அனைத்தும் தழுவிய மதிப்பீடு, மேற்கொள்ளப்பட வேண்டும் எனச் சொல்லப்பட்டுள்ளது.
சூழல் பாதிப்பு மதிப்பீடு (ஈஅய்ஏ), சூழல் நிர்வாகத் திட்டம் (ஈஎம்பி) ஆகியவை பற்றிய நகலறிக்கை தயாரிக்கப்பட்டு, அவற்றின் மீது மக்களிடம் கலந்து பேசி, பொது விசாரணையில் மக்கள் கருத்துக்களை அறிய வேண்டும்; இவை அனைத்தையும் உள்ளடக்கிய அறிக்கை மத்திய அமைச்சகத்தின் ஒப்புதலைப் பெற வேண்டும் என கடிதத்தின் பத்தி 6 கூறுகிறது.
இப்போதுதான் ஈஅய்ஏ, ஈஎம்பி நகல் அறிக்கை தயாரிக்கும் பொறுப்பு அய்அய்டி கரக்பூரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
வண்டிக்கு முன்னால் குதிரையை நிறுத்த வேண்டும். குதிரைக்கு முன் வண்டியை நிறுத்துகிறார்கள். சூழல் அனுமதி/ஒப்புதல் கிடைக்கலாம், கிடைக்காமல் போகலாம் என்றுதான் அரசு பார்க்க வேண்டும். பசுமை நலனில் சூழல் அனுமதி கிடைக்காவிட்டால், பசுமை வழிச் சாலை அமைய முடியாதே! இந்த விஷயங்களை மக்கள் மத்தியில் சொல்லக் கூடாது என்பவர்கள்தானே, சட்ட விரோதமாகச் செயல்படுபவர்கள்.
ராஜா என்ற பெயர் பொதுவாக சமீப காலத்தில் சர்ச்சைக்குரிய பெயர்.  தமிழ்நாட்டு மக்கள் குடியரசை வெகுவாக நேசிப்பதால் ராஜாக்கள் சிக்கலானவர்கள் ஆகிறார்கள். தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி எட்டு வழிச் சாலை பற்றி மக்களிடம் பேச ஒரு பொது கூட்டம் நடத்த அனுமதி கோரி காவல் ஆய்வாளரிடம் மனு தந்தது. மனு மீது காவல்துறை உத்தரவு போடாததால் உயர்நீதிமன்றத்தை அணுகியது. நீதிபதி டி.ராஜா 05.07.2018 அன்று ஓர் உத்தரவு போட்டார். ‘இந்த ரிட் மனுவைப் போட எப்படி முன்வந்தனர் என்பதே எனக்குப் புரியவில்லை. அரசாங்கம் சென்னைக்கும் சேலத்துக்கும் இடையிலான எல்லா கிராமங்களை யும் சிறு நகரங்களையும் முதன்முறையாக இணைக்கிற, பயண நேர தாமதத்தை வெகுவாக குறைக்கிற சாலையான எட்டு வழிச் சாலை போடுகிறது என நினைக்கிறேன். எனது நன்கு யோசிக்கப்பட்ட கருத்துப்படி இந்த சாலை பல தொழில்கள், தொழிற்சாலைகள், பன்னாட்டு நிறுவனங்கள் தொழில் துவங்க உதவும். ஏனெனில் சரக்கு போக்குவரத்து தாமதமின்றி நடக்கும். அதனால் திறன் அற்ற ஓரளவு திறன் உள்ள, திறன் உள்ள தொழிலாளர்கள் வேலை பெற உதவும். திட்டத்தின் விளைவுகளையும் நோக்கங்களையும் முழுமையாக அறியாமல் இத்தகைய கூட்டத்தை நடத்தக் கூடாது. கூட்டம் அனைவரின் பயன்கள் மற்றும் உபயோகங்கள் என்ற கோணத்தில் தவிர்க்கப்பட வேண்டும்’.
இதற்கும் பிறகு சட்டத்தில் இதுவரை சொல்லப்படாத முறையில் ஒரு பொது விசாரணை நடத்தி, அவரது நீதிமன்றத்தில் அன்று கூடிய வழக்கறிஞர்கள் திட்டத்துக்கு ஒப்புதல் கொடுத்துவிட்டதாகச் சொல்கிறார். மாண்புமிகு நீதிபதி டி.ராஜா நான்கு தவறுகள் செய்துள்ளார்.
1.            நீதிபதி ராஜா முன்பு எட்டு வழிச்சாலை சரியா தவறா என்ற வழக்கு எதுவும் விசாரணையில் இல்லாதபோது, நடக்காத வாதாடப் படாத வழக்கில், எட்டு வழிச்சாலை தேவையான ஒன்று என தீர்ப்பு வழங்கி இருக்கக் கூடாது.
2.            எட்டு வழிச்சாலை நடைமுறைப்படுத் தப்படுவது சரிதானா என்பதை இரு நீதிபதிகள் அமர்வம் விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ளபோது, தனி நீதிபதியாக ராஜா அதுபற்றி முடிவு தெரிவிப்பது, நீதிமன்ற கட்டுப்பாட்டை மீறியதாகாதா?
3.            எட்டு வழிச்சாலை விஷயத்தில் வலுவான, விவரமான எதிர்ப்பு இருக்கும்போது, எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் கருத்து அறியாமலே நீதிபதி ராஜா தீர்ப்பு வழங்கியது இயற்கை நீதிக் கோட்பாடுகளுக்குப் புறம்பானதல்லவா?
4.            நீதிபதி ராஜா அரசியலமைப்புச் சட்ட அடிப்படை உரிமைகளை உயர்த்திப் பிடிக்கிற வேலை பார்க்காமல், அரசின் காவல்துறை போல் செயல்பட்டிருக்கக் கூடாது. ஈஅய்ஏ ஈஎம்பி, பொது விசாரணை என்ற சட்ட நடை முறைகளை எல்லாம் கேலிக்குரியதாக்கி, நீதிமன்ற அறையில் சம்பந்தமில்லாதவர்கள் கொண்டு பொது விசாரணை நடத்தி இருக்கக் கூடாது.
பழனிச்சாமி, காவல்துறை, நீதிபதி ராஜா போன்றோர் ஒரே குரலில் வளர்ச்சி பற்றிய, எதிர்ப்பாளர்கள் பற்றிய போராட்டக்காரர்கள் பற்றிய ஆளும் வர்க்கக் கருத்தொற்றுமையை உயர்த்திப் பிடிக்கின்றனர். ஆனால் எதிர்க்கட்சி அதுவும் முதன்மை எதிர்க்கட்சி எட்டு வழிச்சாலை பற்றி என்ன சொல்கிறது? என்ன செய்கிறது? தினமலர், திமுக செயல்தலைவர் ஸ்டாலினைப் பாராட்டி, அவரது 8 வழிச் சாலை பற்றிய கருத்தைப் பிரசுரித்துள்ளது. ‘8 வழிச்சாலை திட்டத்தை அரசியலாக்க விரும்பவில்லை. அந்தத் திட்டத்திற்கு விவசாயிகள் பொதுமக்கள் சம்மதம் தெரிவித்தால், அரசோடு சேர்ந்து இந்தத் திட்டத்தை நிறைவேற்ற ஒத்துழைப்பு தருகிறேன்’.
காஞ்சிபுரம், திருவண்ணாமலை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம் என எல்லா மாவட்டங்களிலும் திமுக கணிசமான வெற்றி பெற்றது. வாக்குகள் பெற்றது. விவசாயிகளும் மக்களும் இந்தத் திட்டத்தை எதிர்க்கிறார்கள் என்ற விவரத்தை திமுகவின் வேர்க்கால் மட்டம் வரையிலான அமைப்புகள், ஸ்டாலினுக்குச் சொல்லவில்லையா? அல்லது எதிர்ப்பை சமாளியுங்கள், எதிர்ப்பு எழாமல் பார்த்துக் கொள்ளுங்கள் என ஆலோசனை சொல்கிறாரா?
தமிழ்நாடெங்கும் எதிர்ப்பு உள்ளது. சேலம், தர்மபுரி, திருவண்ணாமலை, காஞ்சி மாவட்ட எதிர்ப்புகள் எல்லா தடைகள் தாண்டியும் ஊடக கவனம் பெறுகின்றன. இடதுசாரி இயக்கத் தோழர்கள், விவசாய அமைப்புகள் அரசாணையை எரித்து சிறை சென்றனர். சிறை மீண்டவர்களுக்கு நல்ல வரவேற்பு  இருந்தது.
மாநில அரசின் மொத்த காவல்துறையும், அரசு நிர்வாகமும், வாக்குச்சாவடி முகவர்கள்போல், சம்பந்தப்பட்ட ஊராட்சிகளில் நாள் தோறும் நிர்ப்பந்தம் தருகின்றனர். மக்கள் ஒன்றுகூடிப் பேச விவாதிக்க, எட்டு வழிச்சாலை பற்றி கருத்துப் பிரச்சாரம் செய்ய அனுமதி மறுக்கிறார்கள். துண்டுப் பிரசுரம் வெளியிட அனுமதி இல்லை. கூட்டம் நடத்த அனுமதி இல்லை. பாதிக்கப்பட்ட விவசாயிகளை அரசு முற்றுகைக்குள்ளாக்கி, வெளி உறவைத் துண்டித்துள்ளது. போராடினால் கைது செய்து மாலையே விடும் பழைய சகஜ நிலைக்குப் பதிலாக, போராடினால் சிறை, அறிவிக்கப்படாத அவசர நிலை என்ற புதிய சகஜ நிலை வந்துள்ளது. மக்கள் இயக்கங்களும் இடதுசாரி இயக்கப் போராட்டக்காரர்களும் சிறைக்குச் செல்லும் போராட்டம், தடியடி, இரத்தம் சிந்துதல், துப்பாக்கிசூடு வந்தாலும் போராட்டங்கள் நிச்சயமே என்ற புதிய சகஜ நிலையை (நியு நார்மல்) உருவாக்க வேண்டும்.
(இந்த கட்டுரை வெளியாகும்போது இகக மாலெ முன்னணித் தோழர்கள் 8 வழிச்சாலை எதிர்ப்புப் பிரசுரம் வெளியிட்டு கைதாகி இருப்பார்கள்).

Search