COMMUNIST PARTY OF INDIA (MARXIST - LENINIST) - LIBERATION

COMMUNIST PARTY OF INDIA (MARXIST - LENINIST) - LIBERATION, TAMILNADU

Tuesday, July 31, 2018

தோழர் பக்ஷி: சில நினைவுகள்

எஸ்.குமாரசாமி

தோழர் பக்ஷியின் இறந்த உடல் முன் நானும் தோழர் என்கேயும் அஞ்சலி செலுத்திய பிறகு, எனக்கும் தோழர் திபங்கருக்கும் ஒரே நேரம், ஒரே நினைப்பு வந்தது.
அவர் உறங்கிக் கொண்டிருப்பது போல் தெரிகிறது. இறந்ததாகத் தெரியவில்லை. இதில் உளவியல் சிக்கல் எதுவும் இல்லை. இரண்டு நாட்களுக்குப் பின் சென்னை வந்து 29.07.2018 அன்று, அவரது அஞ்சலிக் கூட்ட புகைப்படம் பார்த்தபோதும், அவர் நம் எதிரில் ஏதோ உட்கார்ந்திருப்பது போல் தெரிந்தது. தோழர் பக்ஷி தோழர்களின் நினைவுகளில் தோழராய்த் தொடகிறார். உத்வேகப்படுத்துகிறார்.
என்னைப் பொறுத்தவரை, தோழர்கள் ஸ்வப்பன், கணேசன் எரியூட்டப்பட்டபோது உடன் இருந்து, 27.07.2018 அன்று தோழர் பக்ஷி எரியூட்டப்படும் போது கூட இருந்தது சற்று மன அழுத்தம் தரத்தான் செய்தது. (எர்ணஸ்ட் ஹெமிங்வே, ஊர்ழ் ரட்ர்ம் பட்ங் ஆங்ப்ப் பர்ப்ப்ள்) யாருக்காக மணி அடிக்கிறது என்ற ஒரு நாவல் எழுதியுள்ளார். அந்த கேள்விக்கு ஒரு கவிதை பதில் சொல்லும். யாருக்காக மணி அடிக்கிறது எனக் கேட்காதே. அது உனக்காகக் கூட இருக்கலாம். (அள்ந் சர்ற் ஊர்ழ் ரட்ர்ம் பட்ங் ஆங்ப்ப் பர்ப்ப்ள்...ஊர்ழ் ஐற் ஙஹஹ் பர்ப்ப் ஊர்ழ் பட்ங்ங்). 1967லிருந்து 1980வரை இருபது வயதுகளில் கட்சியில் நுழைந்தவர்கள், இன்று 71, 60வயது தாண்டி உள்ளனர். பல நோய்கள். உடல்நலக் குறைவுகள். எம்எல் அப்டேட்டில், லிபரேஷன் பத்திரிகையில் நிறையவே அஞ்சலிச் செய்திகள் வருகின்றன. ஒரு பழைய தலைமுறை, தலைமறைவுக் கட்சி காலத்திலிருந்து கட்சியில் இருந்தவர்கள் கட்சி கட்டியவர்கள், இன்று எண்ணிக்கைச் சிறுபான்மையினர் ஆகிவிட்டனர். ஈடுபாட்டுடன் மார்க்சியம் கற்றவர்கள், கற்றதற்கேற்ப வாழ்ந்தவர்கள்  தலைமுறையின், ஒரு முக்கிய கண்ணி அறுந்துள்ளது.
அதே நேரம், இறுதி நிகழ்ச்சியில், 18ல் இருந்து 40 வயது வரை உள்ள நிறைய பேரைக் காண முடிந்தது. தோழர் மதுரிமா பக்ஷியின் பொருள் பொதிந்த அஞ்சலிக் குறிப்பு ஆறுதல் தந்தது. புதிய மத்திய கமிட்டியில் நிறைய இளம் தோழர்கள் இருப்பதும் கவலையை போக்குகிறது. தோழர் பக்ஷி போன்றவர்கள், அவர்களுக்கு மாற்று இல்லை என்ற நிலையை மாற்றும் விதம் பணியாற்றி உள்ளனர். அவர் சென்ற இடம் எல்லாம், செயல் வீரர்கள், ஊழியர்கள், அமைப்பாளர்கள், கட்டமைப்புகள், பத்திரிகைகள் என உருவாயின. மாற்றத்துடன் கூடிய தொடர்ச்சி சாத்தியமானது. அதனால்தான் தோழர் பக்ஷியின் மரணம் அசாதாரணமானது.
தோழர் பக்ஷி, நாடெங்கும் கட்சி கட்டுவதில் பங்களித்தவர். ரஷ்ய, சீனப் புரட்சிகள், மார்க்சியம் பற்றிய நல்ல ஞானம் கொண்ட அவர், தலைமறைவுக் கட்சி காலத்தையும், கட்சி வெளிப்படையாகச் செயல் படத் துவங்கிய காலத்தையும், கார்ப்பரேட் மதவெறி பாசிச காலத்தையும், மக்கள் இந்தியா படைப்பதன் தேவையையும், நன்கு உணர்ந்தவர். அவருக்கு, உணவு, கலாச்சாரம், மொழி, கட்சி வேலைகளில் தடையாக இருந்த தில்லை. அவர் எப்போதும், தங்கியிருந்து வேலை செய்யும் கம்யூனிஸ்ட் வேலை நடையில், முன்மாதிரியாக இருந்தவர். மேலோட்ட மான மேலாளர் வேலை நடை என்பதற்கு நேர் எதிராக, ஆழமான தீவிரமான அக்கறையுள்ள, விளைவுகள் தரும், விளைவுகளுக்குப் பொறுப்பேற்கும், திட்டமிட்டது நடக்கிறதா என்று சரி பார்க்கும் உணர்வுபூர்வமான புரட்சிகர வேலை நடை, அவருக்கு கை கூடியது. தமிழ்நாட்டிற்கு வந்தால், தொடர்ந்து இருப்பார். அவசரப்பட மாட்டார். ஊர் ஊராகச் செல்வார். கேட்பார். உரையாடுவார். ஊடாடுவார். வழிகாட்டுவார். சிக்கல்கள் தீர கூடவே இருந்து உதவுவார். எடுத்தேன் கவிழ்த்தேன் என்ற தடாலடி, பரபரப்பு வெளிச்சம் தேடும் நடையின் சுவட்டைக் கூட அவரில் காண முடியாது.
இன்று தமிழ்நாட்டில் நடைபெறும் கிராமப்புற நகர்ப்புற வேலைகளில், தோழர் பக்ஷியின் முத்திரை உள்ளது என உறுதியாகச் சொல்ல முடியும். சீர்காழியில் நடந்த கிராமப்புற வேலைகளை முன் எடுப்பதற்கான பயிற்சிப் பட்டறையிலும், அதன் பின் மாவட்டம் விட்டு மாவட்டம் சென்று அனைத்திந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் கட்டியதிலும் அவரது பங்கை நேரில் காண  முடிந்துள்ளது. மாநில மட்ட விவசாயத் தொழிலாளர் அமைப்பும், கூர்மையான கிராமப்புற விவசாயப் போராட்டங்களும் தோழர்  பக்ஷியால் வலியுறுத்தப்பட்ட விஷயங்களாகும்.
அவர் தமிழ்நாடு முழுவதும் தோழர்களின் பலங்களைத் தேடித்தேடி அடையாளங்கண்டு உறவாடி வளர்த்தார். வேலைகளில், தொழிலா ளர் வர்க்க வேலைகளில் மேற்கொள்ளப்பட்ட புதிய முயற்சிகளை அவற்றின் முக்கியத்துவம் உணர்ந்து மற்றவர்களுக்கு உணர்த்தியவர் தோழர் பக்ஷி. கிராமப்புறங்களுக்குத் தொழிலாளர்களை அனுப்பிய முயற்சி, திருவொற் றியூர், பூந்தமல்லி ஒருமைப்பாடு மன்ற வேலைகளை ஆர்வத்துடன் கேட்டறிந்தார். பரப்பினார். சமீப காலங்களில், இளைஞர்கள் மத்தியிலான வேலைகளுக்குத் தரப்படும் முக்கியத்துவத்தை தோழர் பக்ஷி நன்கு உணர்ந்திருந்தார்.
தோழர் பக்ஷி நிறைய கற்றுத் தருவார். அவர் தயங்காமல் கூச்சப்படாமல் இடை விடாமல் கற்றுக் கொண்டவர். இற்றைப்படுத்திக் கொண்டவர்.
புரட்சிக்கான தயாரிப்புக் காலங்களில், புரட்சிகரமான விதத்தில் வேலை செய்வதில் அவர் கட்சிக்கு ஒரு முன்மாதிரி. எமக்குத் தொழில் புரட்சி என்று சத்தம் போட்டுச் சொல்லாமலே, ஒரு புரட்சியாளராக கம்யூனிஸ்டாக சிந்தித்து, செயல்பட்டு, வாழ்ந்தவர் தோழர் பக்ஷி.
அவருக்கு இயங்கியல் மிகவும் பிடித்த விஷயம். அது அதுவாக இருக்கிறது. அது அதுவாக அல்லாமலும் இருக்கிறது. தோழர் பக்ஷி நம்மோடு இல்லை. தோழர் பக்ஷி நம்மோடு சேர்ந்து செய்த வேலைகளில், சொல்லித் தந்து நம்மைச் செய்ய வைத்த விஷயங்களில் நிச்சயம் தோழர் பக்ஷி இருக்கிறார். தோழர் பக்ஷி நீங்கள் இல்லைதான். ஆனால் நீங்கள் இருக்கிறீர்களே!

இககமாலெயின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினராக, பல்வேறு மாநிலங்களின், தொழிலாளர் வர்க்கத் துறையின் பொறுப்பாளராக நீண்ட காலம் பணியாற்றிய, கட்சியின் பத்தாவது காங்கிரசில் மத்திய கமிட்டிக்கு மீண்டும் தேர்ந்தெடுக் கப்பட்ட மத்திய கமிட்டி உறுப்பினரான தோழர் டி.பி.பக்ஷி, 26.07.2018 அன்று மறைந்தார்.

Search