COMMUNIST PARTY OF INDIA (MARXIST - LENINIST) - LIBERATION

COMMUNIST PARTY OF INDIA (MARXIST - LENINIST) - LIBERATION, TAMILNADU

Tuesday, July 31, 2018

எல்லா மரணங்களும் சமமானவையல்ல! 
செவ்வணக்கம் தோழர் பக்ஷி!

தோழர் பக்ஷி. முகம் சுளித்திருக்கிறாரா? கடிந்து பேசியிருக்கிறாரா? குரல் உயர்ந்திருக்கிறதா? கோபப்பட்டிருக்கிறாரா?
உடல் நலக் குறைவு, உணவு பிடிக்கவில்லை, லேசாக தலை வலி, அசதி... இப்படி ஏதாவது சொல்லியிருக்கிறாரா? இப்போது தேடிப் பார்த்தால் 17 ஆண்டு கால ஊடாடலில் அப்படி ஒரு நிகழ்வு கூட நடந்ததாக நினைவு இல்லை. அப்படி எதுவும் நடக்கவில்லை. முகத்தில் எப்போதும் ஒரு மெல்லிய புன்னகை இருந்தது. இந்த இதழின் அட்டைப் படத்தில் இருப்பது போல.
அர்ப்பணிப்பு, கடுமையான உழைப்பு, எளிமையான வாழ்க்கை என்ற கம்யூனிஸ்ட் இயல்புகளின் உருவமாக இருந்தார் தோழர் பக்ஷி.
தேநீர் போதுமானது. தேநீர் சொல்லவா என்று கேட்டால், தேநீர் எப்போது வேண்டுமானாலும் குடிக்கலாம் என்பார். பான் வேண்டும். மேற்குவங்கத்தில், வட மாநிலங்களில் அவருக்கு பழக்கப்பட்ட பான் வகையை தேடிப்பிடித்து தோழர்கள் அவருக்கு வாங்கி வைத்துவிடுவார்கள். தமிழ்நாட்டின் எந்த மாவட்டத்துக்குச் சென்றாலும் அந்தந்த மாவட்ட தோழர்கள், தோழர் பக்ஷி வருகிறார் என்றால் பான் ஏற்பாடு உறுதி செய்து விடுவார்கள். அவர் இதுதான் வேண்டும் என்று குறிப்பாக எதையும் கேட்டதில்லை. இது அவருக்கு பிடிக்கும் என தோழர்கள் தெரிந்து கொண்டுவிட்டதால் அதை வாங்கித் தர தவற மாட்டார்கள். ஏனெனில் அவர் தோழர் பக்ஷி!
காலில் பட்ட துப்பாக்கி குண்டு அவரது நடையை சற்று சாய்த்துவிட்டது. அவரது பார்வையில், பேச்சில், விவாதங்களில் எந்தச் சாய்வையும் பார்க்க முடியாது. மாவோ வழி விவாத முறையில், எதிர்வரும் எந்த ஒரு பிரச்சனையிலும் அதன் பல்வேறு அம்சங்களையும் அடையாளம் கண்டு, அவற்றின் குறிப்பியல்புகளுக்கு ஏற்ப நமது திட்டங்களை எப்படி வகுத்துக் கொள்ள வேண்டும் என்று மிகத் தெளிவாக, மிகவும் பொறுமையாக, அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி, ஏற்றுக்கொள்ளும் வரை, கேட்பவர் சலிப்புறாமல், வெவ்வேறு அம்சங்களை விளக்கி எடுத்துச் சொல்வது அவரது சிறப்பு.
தோழர் பக்ஷி நீண்ட காலமாக அரசியல் தலைமைக் குழு உறுப்பினர். கட்சி துவங்கிய நாளில் இருந்து பல போராட்டங்களுக்கு தலைமை தாங்கி நடத்தியவர். தொழிலாளர் வர்க்க வேலைகளுக்கு பொறுப்பாளர். தமிழ்நாட்டு வேலைகளுக்கு பொறுப்பாளர். இன்னும் பல மாநிலங்களில் கட்சி வேலைகளுக்கு பொறுப்பாளர். எந்த அளவுக்கு செருக்கு இருக்க வேண்டும்? வந்தவுடன் துவக்க விசாரிப்புகள் முடிந்த பிறகு, தான் பார்த்துவிட்டு வந்த வேலைகள் பற்றி ரிப்போர்ட் செய்வார். இங்கு என்ன நடக்கிறது என்று கேள்வி கேட்கும் நிலையில் இருப்பவர், அவர் பார்க்கும் வேலைகளில் அடுத்து என்ன திட்டமிடப்பட்டுள்ளது என்று விவரிப்பார். பிறகு உங்களுக்கு வேறு வழி இருக்கிறதா? வசியப்படுத்தப்பட்டது போல், நீங்கள் என்ன வேலை செய்கிறீர்கள், என்ன முன்னேற்றம், என்ன திட்டம் என, அவர் ஒரு கேள்வி கூட கேட்காமலேயே, அவரிடம் நீங்கள் சொல்லிக் கொண்டிருப்பீர்கள். அவர் பார்த்துவிட்டு வந்துள்ள வேலைகள் பற்றிச் சொல்லும் போதும், நான் ஒரு பெரிய தலைவர் என்ற தொனி இருக்கவே இருக்காது. மிகவும் இயல்பாக, நமது மட்ட தோழர்களுடன் நாம் பேசும்போது நாம் எவ்வளவு இயல் பாக இருக்க முடியுமோ, அதே அளவுக்கு அவருடன் பேசும்போதும் இருக்க முடியும். அந்த வெளியை, அந்த இலகுச் சூழலை அவரால் மற்ற தோழர்களுக்கு எப்போதும் உருவாக்க முடிந்தது.
மொழி அவருக்கு ஒரு தடையாக இருந்ததே இல்லை. நமது லட்சியம் ஒன்று, அதுவே, நமது உரையாடலுக்கு போதுமானது என்று அடிக்கடி சொல்வார். கட்சியின் அகில இந்திய தலைவர்களில் ஒருவர் என்றபோதும் தமிழ்நாட்டின் மாவட்ட மட்டங்களில் உள்ள பல தோழர்களுடனும் அவரால் நெருக்கமான ஊடாடல்கள், உரையாடல்கள் நிகழ்த்த முடிந்தது. தமிழ்நாட்டின் பல தோழர்களுடனும் உறவாட, உரையாட கணிசமான நேரம் ஒதுக்குவது அவரது வேலைநடைகளில் ஒன்றாக இருந்தது. பல தோழர்களும் கட்சி வேலைகள் பற்றி வெளிப்படுத்தும் கரிசனங்களை அக்கறையுடன் கேட்டுக்கொள்வது, உடனடியாக அதில் கருத்து, அறிவுரை என்று ஆரம்பித்துவிடாமல் கேட்பது, கேட்பது, கேட்பது என்பது, எளிதில் அணுகிப் பேசக் கூடிய தலைவராக அவரை தோழர்கள் கருத காரணமாக இருந்தது.
அரசியல், அமைப்பு வேலைகள் பற்றி மட்டும் எப்போதும் பேசிக் கொண்டிருப்பவர் அல்ல தோழர் பக்ஷி. திரைப்படம், பாடல்கள், இசை, கவிதை, கிரிக்கெட் (எனக்கு கிரிக்கெட் பிடிக்காது என்பதால் என்னிடம் கிரிக்கெட் பேச மாட்டார்), கால்பந்து, டென்னிஸ் இப்படி பல விசயங்கள் பற்றியும் பல தோழர்களிடமும் பேசுவார். ஒரு முறை என்னிடம் கோலம் போடுவது பற்றி கூட பேசிக் கொண்டிருந்தார்.
தமிழ்நாட்டின் கட்சி வேலைகள், கிராமப்புற வேலைகள், அன்றைய அவிதொச வேலைகள் ஆகியவற்றை ஓர் உயர்ந்த தளத்துக்குக் கொண்டு செல்வதில், அவரது பணி திட்டமிட்ட விளைவுகள் உருவாக்கியது.
கட்சி வேலைகளுக்கு வழிகாட்டுவது என்பதை ஆலோசனைகள் சொல்வதுடன் நிறுத்திக் கொள்ளாமல் உடனிருந்து கவனித்து விளைவு உருவாக்குவதை உறுதிப்படுத்தினார். அவரது வருகைக்குப் பிறகு தமிழ்நாட்டின் கிராமப்புற வேலைகளில் மிக முக்கியமான முன்னேற்றங்களை சாதிக்க முடிந்தது. கட்சிப் பத்திரிகை வேலைகளை முறைப்படுத்துவதிலும் அவரது பாத்திரம் முக்கியமானது.
தமிழ்நாட்டு வேலைகளுக்கு பொறுப்பு என்பதில் இருந்து விடுவிக்கப்பட்ட பிறகும், எங்கு சந்தித்தாலும், முதலில் தமிழ்நாட்டு தோழர்கள் பற்றி, பிறகு தமிழ்நாட்டு வேலைகள் பற்றி அக்கறையுடனும் ஆர்வத்துடனும் கேட்டு தெரிந்து கொள்வார். ரஷ்யப் புரட்சி, தெலுங்கானா போராட்டம் ஆகியவை பற்றி தீப்பொறியில் தொடர்கள் வெளியான பிறகு சீனப் புரட்சி பற்றி அவர் எழுத வேண்டும் என்று அவரிடம் கேட்டபோது, அவரது பல்வேறு கடுமையான பணிகளுக்கு இடையிலும் ஒப்புக்கொண்டார். அவர் எழுத, அவரது மகள் தோழர் மதுரிமா அதை தட்டச்சு செய்து அனுப்ப, குறித்த நேரத்தில், தமிழில் மாற்றுவதற்கான கால அவகாசத்துடன், கட்டுரை மின்னஞ்சல் பெட்டியில் இருக்கும்.
2017 மே 25, நக்சல்பாரியின் அய்ம்பதாவது ஆண்டு தினத்தை ஒட்டி, பேரணியும் மத்திய கமிட்டி கூட்டமும் நடந்தபோது, அங்கு வந்த நக்சல்பாரியின் மூத்த தோழர்கள் பற்றி தோழர் பக்ஷி சொல்லச் சொல்ல எழுதி தீப்பொறியில் வெளியான கட்டுரை தமிழ்நாட்டின் மூத்த மற்றும் இளைய தோழர்கள் மத்தியில் நல்ல தாக்கம் உருவாக்கியது. அடுத்த முறை அவரைச் சந்தித்தபோது, அந்தக் கட்டுரை உருவாக்கிய தாக்கம் பற்றி பேசிக் கொண்டிருந்தபோது, ஆவணப்படுத்தப்படாத பல போராட்டங்களை தீப்பொறியில் தொடர்ந்து பிரசுரிக்க வேண்டும் என்றும் தானும் அதற்குத் தேவையான உதவிகள் செய்வதாகவும் உறுதி அளித்தார். அவரது நிறைவேற்றப்படாத பல  கனவுகளில் இதுவும் ஒன்று.
பயணங்களில் அவரது வாழ்நாட்களின் பெரும்பகுதி கழிந்தது. நாட்டின் வடகிழக்கு முதல் தெற்கு வரை அதிக தூரம் பயணம் செய்தவர் தோழர் பக்ஷியாகத்தான் இருப்பார்.
தலைப்பு, தோழர் பக்ஷியின் படம், அவரது மகள் தோழர் மதுரிமா அவரைப் பற்றி எழுதிய நினைவுக் குறிப்பு ஆகிய அனைத்துடனும் எனது குறிப்பை இரண்டு பக்கங்களுக்குள் எழுதி முடிக்க வேண்டும் என்று திட்டமிட்டேன். நினைவடுக்குகளுக்குள் இருந்து பல விசயங்கள் எட்டிஎட்டிப் பார்க்கின்றன. இந்த நினைவுக் குறிப்பை முழுவதுமாக எழுதி முடிப்பது சாத்தியமில்லை என்று தெரிகிறது. அதனால் இப்போதைக்கு இங்கு முடிக்கிறேன்.
தலைப்பை தோழர் மதுரிமா குறிப்பில் இருந்து எடுத்துக்கொண்டேன். ஆகப்பொருத்தமான தலைப்பு. தோழர் பக்ஷி மக்களை நேசித்தார். சமூக மாற்றத்தை லட்சியமாகக் கொண்டார். அதற்காக அயராது உழைத்தார். உங்கள் பாதையில் நாங்கள் தொடர்வோம்; நீங்கள் கண்ட கனவுகளை நிறைவேற்ற பாடுபடுவோம் தோழர் பக்ஷி.

மஞ்சுளா 

Search