COMMUNIST PARTY OF INDIA (MARXIST - LENINIST) - LIBERATION

COMMUNIST PARTY OF INDIA (MARXIST - LENINIST) - LIBERATION, TAMILNADU

Tuesday, July 31, 2018

8 வழிச் சாலை எதிர்ப்பு பிரசுர வெளியீடும் 
8ஆவது பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றமும்

வே.சீதா

8 வழிச்சாலையை எதிர்த்து, தங்களின் நிலங்களை அரசிடமிருந்து பாதுகாக்க, தமிழக மக்கள் கொலைகார கொள்ளைக்கார அரசாங்கத்தை எதிர்த்து போராடிக் கொண்டிருக்கிறார்கள்
. மக்களின் கருத்து உரிமை, எழுத்து உரிமை, பேச்சு உரிமை பறிக்கப்படுகிறது. அரசுக்கு எதிரான போராட்டங்கள் நடத்த அனுமதி மறுப்பு, நோட்டீஸ் விநியோகிக்க, பிரசுரம் வெளியிட மறுப்பு என அறிவிக்கப் படாத அவசர நிலையும் ஜனநாயக உரிமைகளுக்கு இடமில்லாத சூழலும் நிலவுகிறது. இது போன்ற மக்கள் விரோத அரசின் செயல்களை எதிர்த்தும், 8 வழிச்சாலையில் ஒளிந்திருக்கும் உண்மையை மக்களுக்கு எடுத்து சொல்லும் விதமாகவும் சென்னை சேலம் 8 வழி பசுமை விரைவுச் சாலை அவசியமானதா? இல்லையா? என்ற ஒரு சிறு புத்தகம் வெளியிட ஏஅய்சிசிடியுவும் ஏஅய்கேஎம்மும் முடிவு செய்தன.
புத்தகம் வெளியிடுவதற்கான அனைத்து தயாரிப்பு வேலைகளையும், தோழர்கள் செய்தனர். ஆனால் தமிழகத்தில் 8 வழிச் சாலையை எதிர்த்து எவரும், எதுவும் செய்ய கூடாது என்ற அறிவிக்கப்படாத அவசர நிலை இருந்தது. மீறி போராடுபவர்கள் மீது கைது நடவடிக்கைகளும், காவல்துறையின் மனம் போன  போக்கிலான தாக்குதலும் அரங்கேறிக் கொண்டிருந்தது. அதனால் புத்தக வெளியீடு நிகழ்ச்சி சென்னையில் உள்ள ஊடகவியலாளர் மன்றத்தில் நடத்த முடிவெடுத்து, அதற்கான முன்பணத்தையும் தோழர்கள் பத்திரிகையாளர் மன்றத்தில் செலுத்தினார்கள்.
பின்னர் தோழர்கள் அழைக்கப்பட்டு முன்பணத்தை திரும்ப பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும், 8 வழிச்சாலை சம்பந்தமான எந்த செய்தியும், வெளியிடக் கூடாது என்று போலீசாரின் ரகசிய உத்தரவு இருப்பதாகவும் சொல்லப்பட்டது.
காவல்துறை உயர் அதிகாரிகளை சந்தித்து பிரசுரம் வெளியிடுவது பற்றி தெரிவித்தோம். அவர்களது பதில் உங்கள் செயல்களின் விளைவுகளுக்கு நீங்களே பொறுப்பு என்று சொல்வது போல் இருந்தது. அதனால்தான் அறிவிக்கப்படாத தடையை மீறி கருத்துரிமையை உயர்த்தி பிடிக்கும் விதம் பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடும் சென்ட்ரல் ரயில் நிலையம் முன் பிரசுரத்தை வெளியிட முடிவானது.
தோழர்களின் தயார்நிலை
அரசின் ஒடுக்குமுறையை எதிர்த்துப் போராட்டம் நடத்தவும் சிறைக்குச் செல்லவும் தோழர்கள் தயாராக வேண்டும் என்று, சிறைக்கு செல்வதைப் பழக்கமாக்கிக் கொள்ள வேண்டும் என்று பிரச்சாரம் செய்யப்பட்டது. திருவள்ளூர், சென்னை மற்றும் காஞ்சிபுரத்தில் உள்ள கட்சியின் மாவட்ட கமிட்டி தோழர்கள், ஏஅய்சிசிடியு, புரட்சிகர இளைஞர் கழக தோழர்கள், தொழிலாளர்கள் போராட்டத்தில் தவறாமல் கலந்துகொள்ள முடிவானது. தோழர்களும் தொழிலாளர்களும் அரசுக்கு எதிரான போராட்டங்களில் சிறைக்கு செல்ல ஆர்வத்துடன் தயாராயினர்.
யார் யார், எப்படி புறப்பட்டு வந்தனர்.
காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை தோழர்கள் பேருந்து, ரயில் வேறு வேறு வழியிலிருந்து வேறு வேறு ரயில், பேருந்துகளைப் பிடித்து 2 பேர், 5 பேர், 10 பேர் என வந்தனர். சென்னை சென்ட்ரல் எதிரில் போராட்டம் என்பதால் தோழர்கள் கூடுவதற்கு வசதியாக அமைந்தது. முதலில் வேறுவேறு இடங்களில் இருந்த தோழர்கள் பின்பு ஓர் இடத்தில் கூடினர்.
சிறை செல்வதற்கு பெண் தோழர்களும் மிகவும் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். 3 பெண்கள் சிறைக்கு செல்ல தயாராக வந்தனர். தோழர்கள் அனைவரும் சிறைக்குச் செல்ல தேவையான உடையும், பேஸ்ட், பிரஷ், சோப் போன்றவற்றை ஒரு பையில் போட்டு எடுத்து வந்தனர்.
சிறை பயம், கவலை ஏதுமின்றி அரசை எதிர்க்கத் துணிந்து போராட உற்சாகமாக தோழர்கள் 17.07.2018 அன்று போராட்டத்தில் கலந்துகொண்டனர்.
எப்படி நடந்தது போராட்டம்
8 வழிச்சாலை எதிர்ப்பு போராட்டம் என்று முன்பே தொலைக்காட்சிகளுக்கு தோழர்கள் தகவல் அளித்தனர். பின்னர் காவல்துறைக்கு தகவல் தெரிந்து ஏராளமான காவல்துறையினர் சென்ட்ரல் ரயில் நிலையம் முன்பு குவித்து வைக்கப்பட்டிருந்தனர். 8 வழிச் சாலையைப் பாதுகாக்கும் போலீஸ்  தோழர்களை கைது செய்யத் தயாராகக் காத்திருந்தது.
சென்ட்ரல் ரயில் நிலையம் உள்ளே இருந்த நமது தோழர்கள், ஆங்காங்கே இருந்த தோழர்கள், தொழிலாளர்கள், பெண்கள் ஒன்று கூடி ரயில் நிலையத்தின் உள்ளே இருந்து வெளியே பேரணியாக அரசாங்கத்துக்கு எதிரான முழக்கங்களை முழங்கிக் கொண்டு வந்தனர். பொதுமக்கள், மத்தியில் ஆதரவும் கிடைத்தது. அவர்களின் செல்போனில் படம் எடுத்தனர். போராட்டத்தை முழுமையாக ஆர்வத்துடன் கவனிக்கவும் செய்தனர்.
பேரணியாக வெளியே வந்த தோழர்களை காவல்துறை தடுத்து நிறுத்தியது. பின்னர் பத்திரிகையாளர் மத்தியில் தோழர் எஸ்கே சென்னை - சேலம் 8 வழி பசுமை சாலை, மக்களுக்கு அவசியமா? இல்லையா? என்ற பிரசுரத்தை வெளியிட, தோழர்கள் பழனிவேல் (ஏஅய்சிசிடியு), ஜானகிராமன் (அவிகிதொச), தோழர் சீதா (புரட்சிகர இளைஞர் கழகம்) பெற்றுக் கொண்டனர். அங்கு கூடியிருந்த பத்திரிகையாளர் மத்தியில் பேட்டி அளிக்கப்பட்டது.
அதன் பின்பு 33 தோழர்களைக் காவல்துறையினர் குண்டுக்கட்டாகத் தூக்கிச் சென்று கைது செய்து, யானை கவுனி சமுதாய கூடத்தில் அடைத்தனர். காலையிலிருந்தே எங்களை நீதிமன்றக் காவலில் வைப்பதிலேயே குறியாக இருந்து, நீதிமன்றக் காவலில் வைப்பதற்கான அனைத்து தயாரிப்புகளையும் செய்து முடித்த பிறகு, மாலை 8ஆவது குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி முன்பு நிறுத்தி நீதிமன்றக் காவலில் வைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
நீதிமன்றத்தில் நடந்து பற்றி நான் அறிந்தது
தோழர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட இருப்பதை அறிந்த ஜனநாயக வழக்கறிஞர் சங்கத்தின் வழக்கறிஞர்கள் தோழர்கள் பாரதி, புகழ்வேந்தன், கார்க்கிவேலன், அதியமான், சங்கர், விக்னேஷ் மற்றும் சில வழக்கறிஞர்கள் நீதிபதியின் முன்பு கருத்துரிமை தொடர்பான உச்சநீதிமன்ற தீர்ப்பைக் காண்பித்து தமிழக அரசின், காவல்துறையின் சட்டவிரோத நடவடிக்கையை எடுத்துச் சொல்லி 8 வழிச்சாலை பற்றியும், அதனால் அந்த பகுதி மக்களுக்கு ஏற்படக் கூடிய இன்னல்கள் பற்றியும் கார்ப்பரேட் வளர்ச்சிக்காகவே 8 வழிச்சாலை என் றும் எடுத்துரைத்தனர். அப்போது ஒரு கட்டத்தில் நமது வழக்கறிஞர் புகழ்வேந்தன், இந்த அரசு காட்டு தர்பார் நடத்துவதாக உரத்த குரலில் எடுத்துரைத்தார். அப்போது குறுக்கிட்ட குற்றவியல் நடுவர் அதிக சத்தம் எழுப்ப வேண்டாமெனவும், 8 வழிச்சாலை சரியா? தவறா? என்பது வழக்கல்ல. அனுமதி பெறாமல் புத்தகம் வெளியிட்டது சரியா? தவறா? என்பது தான் வழக்கு என்றார். பின்பு கைது செய்யப்பட்ட அனைவரையும் 31.07.2018 வரை ரிமாண்ட் செய்வதாக உத்தரவிட்டார். வழக்கறிஞர்கள் தரப்பில் நாங்கள் பொது மக்களுக்கு இடையூறு செய்யவில்லை, பொது சொத்துக்கு எந்த சேதமும் ஏற்படுத்தவில்லை, நாங்கள் எங்கள் ஜனநாயக கடமையைத்தான் செய்தோம் என வாதிட்டனர். அப்போது நீதிபதி காவல் ஆய்வாளரைப் பார்த்து இவர்கள் பொது சொத்தை சேதப்படுத்தினார்களா? பிறகு ஏன் அவர்களை நீதிமன்றக் காவலுக்கு அழைத்து வந்தீர்கள்? இவர்களால் யாருக்கு என்ன பாதிப்பு? என்னய்யா கவர்ன்மென்ட் என முணுமுணுத்ததுபோல் தெரிந்தது. ஆய்வாளர், நாங்கள் மறியலில் ஈடுபட்டதாகவும் இதற்கு முன்பும் இதுபோன்று ஈடுபட்டதாகவும் தெரிவித்தார். ஆனால் அதற்கான எந்த ஆதாரத்தையும் காவல் ஆய்வாளர் நீதிமன்றத்தில் காண்பிக்காததால் நீதித்துறை நடுவர், சிறிய யோசனைக்கு பிறகு எங்கள் அனைவரையும் வெளியே நிறுத்திவிட்டு வழக்கறிஞர்களிடம் அவர்கள் என்ன அமைப்பு என்றும் கேட்டு தெரிந்து கொண்டார். பின்பு எங்களை நிபந்தனை ஜாமீனில் விடுவிப்பதாக முதலில் தெரிவித்தார் என்று தெரிகிறது. அதற்கு வழக்கறிஞர் தோழர் பாரதி, எல்லோரும் வேண்டாம் வழக்கறிஞர் சுரேஷ் மட்டும் கையெழுத்து போடட்டும் என்றார். அதற்கு நீதித்துறை நடுவர், அனைவரையும் போராட்டத்தில் ஒருங்கிணைத்த ஏ1 குமாரசாமியும் கையெழுத்திட வேண்டும் என்று சொன்னதாகத் தெரிகிறது. பின்பு வெளியில் இருந்த அனைவரையும் உள்ளே அழைத்து எந்த நிபந்தனையும் இல்லாமல் அனைவரையும் சொந்த ஜாமீனில் விடுவிப்பதாகவும் யாரும் வெளியில் சென்று மீண்டும் போராட்டத்தில் ஈடுபடக் கூடாது என்றும் தெரிவித்தார். கடந்த முறை அனிதா மரணம் மற்றும் நீட் எதிர்ப்புப் போராட்டத்தின் போதும், உங்களை சொந்த ஜாமீனில் விடுவித்ததால் மீண்டும் நீங்கள் போராட்டம் நடத்துவதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். இதனால் எனக்குத்தான் பிரச்சனை என்றும், அடுத்த முறை நிச்சயம் பிணையில் விடமாட்டேன் என்றும் தெரிவித்து எங்களை அனுப்பி வைத்தார்.
குற்றவியல் நீதிமன்ற நடுவரும் ஜனநாயக உரிமைக்கான போராட்டத்தில் நியாயம் இருப்பதாக கருதியதாலேயே எந்த நிபந்தனையும் இன்றி பிணையில் விட முடிவெடுத்துள்ளார் எனத் தோன்றுகிறது.
ரிமாண்ட் ரிப்போர்ட்டின் கட்டுக்கதைகள்
இன்று 17.07.2018ம் தேதி பூக்கடை காவல் நிலைய சரகத்துக்குட்பட்ட சென்னை சென்ட்ரல் பேருந்து நிலையம் முன்பு சென்னை முதல் சேலம் வரையிலான எட்டு வழிச்சாலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மத்திய மாநில அரசுக்கெதிராக கண்டனங்கள் திட்டமிட்டு இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் பூக்கடை காவல் நிலைய ஆய்வாளர் ஆகிய நான் போலீஸ் பார்ட்டி சகிதம் சென்ட்ரல் பேருந்து நிலையம் முன்பு பாதுகாப்பு அலுவலில் இருந்தபோது காலை 11.30 மணிக்கு சிபிஅய்எம்எல் என்ற கட்சியை சேர்ந்தவர்கள் அக்கட்சியின் மாநிலச் செயலாளரான 1.திரு.குமாரசாமி மற்றும் 3 பெண்கள், 32 பேர் உள்ளிட்ட நபர்கள் சட்டவிரோதமாக கும்பல் கூடியவர்களை சென்னை மாநகரில் நகர காவல் ஆணையாளர் அவர்களின் முன் அனுமதியின்றி ஆர்ப்பாட்டங்கள் மறியல் ஊர்வலம் பொதுக் கூட்டங்கள் போன்றவை நடத்தக் கூடாது என்ற தடையுத்தரவு எண்.1000/எஸ்.பி.2/2018,  நாள் 05.07.2018படி அமலில் இருப்பதை ஆய்வாளர் சி 1 பூக்கடை காவல் நிலையம் ஆகிய நான் எடுத்துக் கூறி அவர்களை உடனே பொது இடத்தில் சட்டவிரோதமாக கும்பல் கூடி நின்று கொண்டு மத்திய மாநில அரசே சென்னை - சேலம் 8 வழி பசுமை விரைவு சாலை இப்போ நமக்கு அவசியமா? அவசியமா? என மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக முழக்கமிட்டு சென்னை -சேலம் 8 வழி பசுமை விரைவு சாலை அவசியமானதா இல்லையா என்ற தலைப்பு கொண்ட 16பக்கங்கள் உடைய சிறு புத்தகங்களை கையில் வைத்து கொண்டு பொது மக்களுக்கு சாலை மறியலில் ஈடுபட்டு  போக்குவரத்தை வழிமறித்து அரசு மற்றும் பொது ஜன சொத்துக்கு சேதம் விளைவிக்க எத்தனித்து பொதுஜன அமைதிக்கும் பங்கம் விளைவித்துக் கொண்டிருந்ததால், போக்குவரத்து ஸ்தம்பித்ததோடு பொது அமைதியும் பாதிக்கப்பட்டது. அதனால் அரசு பொது மருத்துவமனைக்குச் செல்ல வேண்டிய ஆம்புலன்ஸ் வாகனங்கள் நோயாளிகள் மற்றும் பார்வையாளர்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு மருத்துவம னைக்கு செல்ல முடியாமலும், மேலும் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்குச் செல்லும் பயணிகளும் பெரும் சிரமத்திற்கு ஆளாயினர். எனவே மேற்படி போராட்டத்தில் ஈடுபட்ட சிபிஅய்எம்எல் கட்சியை சேர்ந்தவர்களை கைது செய்வதற்கான காரணத்தை எடுத்துக் கூறி மதியம் 12.00 மணிக்கு கைது செய்து எதிரி 1.குமாரசாமி என்பவரிடமிருந்து சென்னை -சேலம் 8 வழி பசுமை விரைவு சாலை அவசிய மானதா இல்லையா என்ற தலைப்பு கொண்ட 16 பக்கங்கள் உடைய சிறு புத்தகங்கள் 3அய் மதியம் 12.15 மணிக்கு மகஜர் தயார் செய்து கைப்பற்றி கைது செய்யப்பட்ட எதிரிகளை சம்பவ இடத்திலிருந்து யானைகவுனி அண்ணா பிள்ளைத் தெரு, சமுதாய கூடத்திற்கு கொண்டு சென்று 13.00 மணிக்கு எதிரிகள் மீது சி 1 பூக்கடை காவல் நிலைய குற்ற எண். 561/2018 அய்பிசி 143, 188, 505 (1) (பி) ஆர்/டபுள்யு 7(1)எ சிஎல்ஏ ஆக்ட்ல் வழக்கு பதிவு செய்து, எதிரிகளை முறைப்படி திரேக சோதனை செய்து காவலில் வைக்கப்பட்டனர். எதிரிகள் கைது செய்யப்பட்டபோது மனதளவிலோ, உடலளவிலோ துன்புறுத்தப்படவில்லை. எதிரிகள் கைது பற்றிய தகவல் அவரது உறவினர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. எதிரிகள் கைது செய்யப்பட்ட போது உச்சநீதிமன்ற ஆணை கடைபிடிக்கப்பட்டது. எதிரிகளுக்கு அரசு செலவில் உணவு வழங்கப்பட்டது.
வழக்கின் முறையான புலன் விசாரணைக்கும் இந்த வழக்கினுடைய தடயத்தினை அழிப்பதை தடுக்க வேண்டும் என்பதற்காகவும் ஏதாவது ஒரு வகையில் சாட்சியத்தை கலைக்காமல் இருப்பதற்காகவும், மேலும் குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் ஏதேனும் ஒரு விதத்தில் பயமுறுத்துதல் மற்றும் தவறான தூண்டுதல் செய்யாமல் இருக்க எதிரிகளை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. மேலும் சாட்சியிடம் உறுதிமொழி அளித்து காவல் அதிகாரியிடம் அல்லது நீதிமன்றத்தில் சங்கதி களை மறைத்து வழக்கு நடத்தாமல் இருப்பதை தவிர்க்கும் பொருட்டு மேற்படி எதிரிகளை நீதிமன்றக் காவலில் வைப்பது அவசியமாகிறது என்பதால் எதிரிகளை நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்த அனுப்பப்படுகிறது என்பதை தங்களின் மேலான பார்வைக்கு பணிந்து சமர்ப்பிக்கப்படுகிறது.
இவ்வழக்கின் புலன் விசாரணை நிலுவையில் உள்ளதால் எதிரிகளை இன்று 17.07.2018ஆம் தேதி முதல் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்குமாறு கோரப்படுகிறது.
காவல் துறையின் கற்பனை வளம், கதை சொல்லும் திறமை ஆகியவை ரிமாண்ட் ரிப்போர்ட்டில் துவக்கம் முதல் இறுதி வரை வெளிப்பட்டன. ஜனநாயக நாட்டில் பிரசுரம் விநியோகிப்பதை மிகப்பெரிய குற்றம் என்பது போல் காட்டும் காவல்துறையின் முயற்சி, பிரிட்டிஷ் ஆட்சி எப்படி இருந்திருக்கும் என்று பார்க்காத எங்களைப் போன்றவர்களுக்கு அதை பார்த்ததுபோல் இருக்கிறது.

Search