COMMUNIST PARTY OF INDIA (MARXIST - LENINIST) - LIBERATION

COMMUNIST PARTY OF INDIA (MARXIST - LENINIST) - LIBERATION, TAMILNADU

Saturday, June 16, 2018

தூத்துக்குடியில் அடக்குமுறையும் அரச பயங்கரவாதமும் தொடர்கிறது

தமிழ்நாட்டில் அறிவிக்கப்படாத அவசரநிலை 
அமலாகிக் கொண்டிருக்கிறது

ஜி.ரமேஷ்

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் படுகொலை செய்யப்பட்டவர்கள் பதிமூன்று பேர் என்று எண்ணிக்கையை சுருக்கிவிட்டது மட்டுமின்றி, ஒட்டுமொத்த ஜனநாயக வெளியையும் சுருக்கப் பார்க்கிறார்கள் கார்ப்பரேட் முதலாளிகளும் அவர்களது அடிமை ஆட்சியாளர்களும் கட்சிகளும்.

தூத்துக்குடி மக்கள் போராட்டத்தில் சமூக விரோதிகள் புகுந்து வன்முறையில் ஈடுபட்டார்கள் என்று சொல்லிக் கொண்டிருந்த எடப்பாடி பழனிச்சாமி, யாரும் எதிர்பார்க்காத வகையில், திமுகதான் அத்தனைக்கும் காரணம் என்றார் சட்டமன்றத்தில். பழனிச்சாமி அரசு பதவி விலக வேண்டும் என்று அதுவரை சொல்லிக் கொண்டிருந்த மு.க.ஸ்டாலின், திமுகதான் அனைத் துக்கும் காரணம் என்று முதலமைச்சர் அறிவித்தவுடன், வீறு கொண்டு எழுவதற்குப் பதிலாக பழனிச்சாமி அரசு பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையையே மறந்துவிட்டார்.
ஸ்டெர்லைட் ஆலைக்கெதிரான மக்கள் போராட்டத்தை, முதலாளித்துவக் காவலர்கள் தங்களுடையதாக்க முயற்சிக்கிறார்கள். திடீரென வந்த ரஜினிகாந்த், யூனிபார்ம் போட்ட காவலர்களை முதலில் தாக்கினார்கள் அதுதான் எல்லாவற்றுக்கும் காரணம், சமூக விரோதிகள், விஷமிகள் வன்முறையில் ஈடுபட்டார்கள், போராட்டங்கள் தொடர்ந்தால் தொழில்கள் வராது, வேலைவாய்ப்புகள் கிடைக்காது... எதற்கெடுத்தாலும் போராட்டங்கள் என்றால் தமிழ்நாடு சுடுகாடு ஆகும்... என்று ஆவேசமாக காவிக் கூட்டம் எழுதித் தந்த வசனத்தைப் பேசிவிட்டுச் சென்றார். போராட்டக்காரர்கள் பற்றி அது வரை அவதூறு பேசாமல் இருந்த தமிழிசை பேசத் துவங்கினார். இன்று வரை, பேசிக் கொண்டிருக்கிறார். நக்சலைட்டுகள், மாவோயிஸ்டுகள், சமூக விரோதிகள் புகுந்து போராட்டத்தைத் தூண்டி, வன்முறையைத் தூண்டி, துப்பாக்கிச் சூட்டுக்கு வழிவகுப்பது வரை நடந்துவிட்டது என்று அனில் அகர்வால், மோடி, பழனிச்சாமி என அனைவரையும் பாதுகாக்கப் பார்க்கிறார். தோற்றுப் போகிறார். காவல்துறையினர் நடவடிக்கை எடுத்ததால்தான், அதாவது துப்பாக்கியால் சுட்டு 13 பேரை படுகொலை செய்ததால்தான், மே 22 அன்று ஆட்சியர் அலுவலகத்தில் இருந்தவர்கள் காப்பாற்றப்பட்டார்கள், இல்லையென்றால், அன்று சமூக விரோதிகளால் 500 பேருக்கும் மேல் கொல்லப்பட்டிருப்பார்கள் என்று சற்றும் கூசாமல் தமிழிசையால் பேச முடிகிறது. பாசிசம் அனைத்து விதங்களிலும் ஆழ்பட்டு படிந்திருந்தால் மட்டுமே இப்படி அபாண்டமாகப் பேசுவது சாத்தியம். என்ன ஆதாரத்தின் அடிப்படையில் இப்படி பேசுகிறீர்கள் என்று பாசிஸ்டுகளிடம் கேட்கவே முடியாது. அதற்குள்தான் புதிய தலைமுறை விவாதத்தில் சங் காலிகள் காலித்தனத்தில் இறங்கினார்கள். காலித்தனம் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாக இன்று வரை நமக்குத் தெரியவில்லை.
ஆனால், மணியரசன் மீது தாக்குதல், அமீர் மீது தாக்குதல், அவர் மீதே வழக்கு, புதியதலை முறை தொலைக்காட்சி மீது வழக்கு, வேல்முருகன் மீது தேசத் துரோக வழக்கு, மக்கள் அதிகாரம் அமைப்பினர் தேசப் பாதுகாப்புச் சட்டத்தில் கைது ஆகியவை அறிவிக்கப்படாத அவசர நிலை தமிழ்நாட்டில் இருப்பதை போதுமான அளவுக்கு தெளிவாக்குகின்றன.
தேர்தல் நெருங்க நெருங்க, சங் பரிவார் காலி கும்பல் ஆட்டம் தமிழ்நாட்டில் மேலும் அதிகரிக்கும் என நாம் எதிர்ப்பார்க்கலாம்.
துப்பாக்கிச் சூட்டில் குண்டடிபட்ட பலர் வழக்குகளுக்குப் பயந்து மருத்துவமனைக்குப் போய் சிகிச்சை எடுக்காமல் வீட்டிற்குள் முடங்கிக் கிடக்கிறார்கள். பலர் வெளியூர்களில் சிகிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். மே 22 அன்று காயம்பட்டதாகச் சொல்லிவிட்டால் போதும், உடனடியாக அவர்கள் மீது வழக்குகள் பாயும். கொல்லப்பட்ட 13 பேர் வீடுகளுக்கு காவல்துறையினர் இரவு நேரங்களில் அத்துமீறிச் சென்று அவர்கள் குடும்பத்தாரிடம், உடலை வாங்கிவிடுங்கள் இல்லையென்றால், உங்கள் மீது வழக்குப் போடுவோம், உங்களையும் சுட்டுவிடுவோம் என்று மிரட்டி சித்திரவதை செய்து கட்டாயப்படுத்தி எல்லாருடைய உடல்களையும் வாங்கி அடக்கம் செய்ய வைத்தனர். மனித உரிமை ஆணையத்திலோ, தமிழக அரசின் ஒன்றுக்கும் உதவாத ஒரு நபர் விசாரணை ஆணையத்திலோ கூட கொல்லப்பட்டவர்கள் சாலை விபத்தில் இறந்தார்கள் என்றுதான் சொல்ல வேண்டும் துப்பாக்கிச் சூட்டில் இறந்தார்கள் என்று சொல்லக் கூடாது என்று மிரட்டியுள்ளனர். குறிப்பாக, மே 23 அன்று துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட திரேஸ்புரம் ஜான்சி வீட்டாரிடம்.
துப்பாக்கிச் சூட்டுக்கு ஒப்புதல் தந்தது யார், ஆணையிட்டது யார் என தமிழக மக்கள் கேள்வி எழுப்பிக் கொண்டிருந்தபோது, துப் பாக்கிச் சூட்டில் நேரடியாக ஈடுபட்ட காவலர்கள் கைது செய்யப்பட வேண்டும், அவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும் என்று குரல்கள் எழுந்துகொண்டிருந்தபோது, பழனிச்சாமி அரசு சற்றும் தயங்காமல் போராட்டக்காரர்களை வேட்டையாடத் துவங்கியது. தூத்துக்குடியில் அந்த வேட்டை இன்னும் தொடர்கிறது. தமிழ்நாட்டில் யாரும் எதற்கும் இனி போராட்டம் என்று நினைத்துக் கூடப் பார்க்கக் கூடாது என்ற நோக்கத்துடன் பழனிச்சாமி அரசும் தமிழக காவல்துறையும் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன.
மருத்துவமனையில் இருந்து சிகிச்சை முடித்து வெளியே செல்லும் எவரும் தங்கள் சொந்த கிராமத்திற்கு, சொந்த வீட்டிற்குச் செல்ல முடியவில்லை. வழக்கு. கைது. சிறை.
குமரெட்டியாபுரத்தில் துவங்கி ஒவ்வொரு கிராமமாகச் சென்று போராட்டத்தை முன்னின்று நடத்தியவர்களை, குறிப்பாக இளைஞர்களைக் கைது செய்து கொண்டு போகிறது போலீஸ். தூத்துக்குடியில் அமைதி திரும்பிவிட்டது என அறிக்கை விட்டுக் கொண்டே ஒடுக்குமுறையைக் கட்டவிழ்த்துக் கொண்டிருக்கிறது ஊழல் பிடித்த அடிமைகளின் அரசு.
புரட்சிகர இளைஞர் முன்னணியைச் சேர்ந்த, கொல்லப்பட்டவர்களில் ஒருவரான, ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் முக்கிய பங்காற்றிய தமிழரசன் வீட்டிற்கு உண்மை அறியும் குழுவாக வந்திருந்த வழக்கறிஞர்கள் உள்ளிட்ட பத்து பேரை கைது செய்து முதலில் சிப்காட் காவல் நிலையத்திற்குக் கொண்டு சென்று, பின்னர் அங்கிருந்து ஓட்டப்பிடாரம் காவல் நிலையத்திற்குக் கொண்டு சென்று வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர். சிப்காட் காவல்நிலையம் தூத்துக்குடி நீதிமன்ற எல்லைக்குள் வருகிறது. அங்கு அவர்களை ரிமாண்ட் செய்யக் கொண்டு சென்றால், உடனடியாக ஜாமீன் தரப்படும் என்பதால், ஓட்டப்பிடாரம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து கோவில்பட்டி நீதிமன்றத்திற்குக் கொண்டு சென்று ரிமாண்ட் செய்கின்றனர். தூத்துக்குடியில் உள்ள ஏழு காவல் நிலையங்களில் இல்லாமல் ஓட்டப்பிடாரம், விளாத்தி குளம், கோவில்பட்டி என்று வெவ்வேறு காவல் நிலையங்களுக்குக் கொண்டு சென்று பொதுச் சொத்திற்குச் சேதம் விளைவித்தல், தேசிய பாதுகாப்புச் சட்டம் என பலவாறு வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன. போராட்டம் நடத்தினால் குண்டர் சட்டம் பாயும் என்று மே 22க்கு முன்னரே சொல்லியிருந்தார் முதலமைச்சர்! அந்த எச்சரிக்கையை போராட்டக்காரர்கள் அலட்சியம் செய்ததால் இன்று தேசப் பாதுகாப்புச் சட்டம் வரை பாய்கிறது.
ஏற்கனவே தூத்துக்குடி விடுமுறைக்கால மாவட்ட நீதிபதி சாருஹாசினி, பிணையில் வரமுடியாத  குற்றப்பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டவர்களைக் கூட, சொந்தப் பிணையில் விடுவித்தார். அப்படி விடுவித்த 65 பேருக்கும் பிணையை ரத்து செய்யக் கோரி இப்போது அரசு தரப்பில் காவல்துறை சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குத் தொடுத்துள்ளது. கார்ப்பரேட் முதலாளிகளுக்கு எதிராகப் போராடுபவர்கள் மீது அரசு இந்த அளவிற்கு வன்மத்தோடு செயல்படுகின்றது. துப்பாக்கிச் சூடு திட்டமிடப்பட்ட நடவடிக்கை என்பதால்தான், நீதி மன்றம் பிணையில் விடுவித்தாலும் அரசு நீதிமன்றத்தில் அதற்கெதிராக உடனடியாக மேல் முறையீடு செய்கிறது.
தூத்துக்குடியில் மட்டுமின்றி, தமிழ்நாடு முழுவதும் ஸ்டெர்லைட் போராட்டத்திற்கு ஆதரவாகச் செயல்பட்டவர்களை தேடிப் பிடித்து கைது செய்கிறது தமிழக காவல்துறை. தேடிப் போனவர்கள் வீட்டில் இல்லையென்றால், வீட்டில் உள்ளவர்கள் காவல்துறையினரால் மிரட்டப்படுகிறார்கள். ஆபாச வார்த்தைகளால் துன்புறுத்தப்படுகிறார்கள். தற்போது சிறை பிடிக்கப்படுபவர்கள் எவருக்கும் ஜாமீன் கிடைக்காத வகையில் வழக்குப் பதிவு செய்யப்படுகின்றது. அப்படியே ஜாமீன் கிடைத்தாலும் பொதுச் சொத்திற்குச் சேதம் விளைவித்ததாக குற்றம் சுமத்தப்பட்டவர்கள் 30,000 ரூபாய் வைப்புத் தொகை கட்டினால் மட்டுமே வெளியே வரமுடியும் என்கிற வகையில் தூத்துக்குடி அமர்வு நீதிமன்றம் உத்தரவு போடுகிறது. தூத்துக்குடி நீதிமன்றத்தையும் அரசு தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துவிட்டதாகவே தெரிகிறது. ஸ்டெர்லைட் போராட்டக்காரர்கள் மீதான துப்பாக்கிச் சூடு தொடர்பான வழக்கை அவசர வழக்காக எடுக்க உச்சநீதிமன்றம், மறுத்துவிட்டது. ஆனால், சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள், தூத்துக்குடிச் சம்பவம் இன்னொரு ஜாலியன் வாலாபாக் என்று கூறி கண்டனம் தெரிவித்துள்ளனர்.
திமுகவும் காங்கிரசும் ஸ்டெர்லைட்டின் முந்தைய கூட்டாளிகள்தான் என்றபோதிலும் இப்போது ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்ற மக்கள் கோரிக்கைகளை வேறு வழியின்றி பேசிக் கொண்டிருக்கும் வேளையில், ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக மூட சட்டமன்றத்தில் கொள்கைத் தீர்மானம் கொண்டு வந்தால் எதிர்ப்பே இல்லாமல் நிறைவேறும் வாய்ப்பிருக்கும்போது அதற்குத் தயாராக இல்லாத முதலமைச்சர், தூத்துக்குடியில் பொது மக்கள் யாரும் கைது செய்யப்படவில்லை, கலவரத்தில் கல் எறிந்தவர்கள், பெட்ரோல் குண்டு வீசியவர்களைத்தான் கைது செய்கிறது போலீஸ் என்று சட்டசபையில் அப்பட்டமாகப் பொய் சொல்கிறார். முதலமைச்சர் தூத்துக்குடியில் துப்பாக்கிச் சூடு என்று கூட சொல்வதில்லை. படுகொலை என்கிற வார்த்தையையே சட்டமன்ற அவைக் குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று பரிந்துரைக்கிறார்; சபாநாயகரும் நீக்குகிறார்.
பகல் பொழுதில் இயல்பாக இருப்பதாகத் தெரியும் தூத்துக்குடியும் அதன் சுற்றுவட்டாரக் கிராமங்களும் இரவில் காவல்துறையின் முழுக் கட்டுப்பாட்டிற்குள், கெடுபிடிக்குள் உள்ளன. முன்பு ஸ்டெர்லைட்டால்  மூச்சுத் திணறி தூக்கமிழந்து கொண்டிருந்தவர்கள், இப்போது ஸ்டெர்லைட் அடிமை ஆட்சியாளர்களின் ஒடுக்குமுறை நடவடிக்கைகளால், காவல்துறை கெடுபிடிகளால் உறக்கமின்றி தவித்துக் கொண்டிருக்கிறார்கள். காவல்துறை துன்புறுத்தலுக்கு, ஒடுக்குமுறைகளுக்கு கண்டனம் தெரிவித்துப் பேசுபவர்கள் மீது பொய் வழக்கு போடப்படுகிறது. சம்பந்தமே இல்லாமல் தேசியப் பாதுகாப்புச் சட்டம் பாய்கிறது.
ஸ்டெர்லைட்டின் தலைமை அதிகாரி ராம்நாத், இன்னும் ஒரு சில மாதங்களில் தூத்துக்குடியில் ஆலையைத் திறந்துவிடுவோம் என்கிறார். தமிழக அமைச்சர்கள் அதைக் கண்டிப்பதற்குப் பதிலாக, ஸ்டெர்லைட் ஆலை இல்லாததால், வேலையிழப்பு, தாமிரம் தட்டுப்பாடு என்று எசப்பாட்டு பாடுகிறார்கள். ஸ்டெர்லைட் ஆலையில் வேலை பார்த்த தொழிலாளர்களில் 90% பேர் நிரந்தரமற்ற தொழி லாளர்கள். நிரந்தரத் தொழிலாளர்களுக்குகூட இஎஸ்அய் போன்ற சட்டச் சலுகைகள் இல்லை. எந்த தொழிலாளர் நலச் சட்டங்களும் அங்கு அமல்படுத்தப்பட்டதில்லை. ஆலைக்குள் ஏற் பட்ட விபத்துக்களில் மரணமடைந்தவர்களும் ஊனமுற்றோரும் ஏராளம். இது பற்றி  அமைச்சர்கள் பேசுவதில்லை. தமிழக சட்டமன்றத்தில் உறுப்பினர் ஒருவர், பல இடங்களில் மின்மாற்றிகள் பழுதடைந்துவிட்டதால் மின் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது அதை உடனே சரி செய்ய வேண்டும் என்கிறார். அதற்கு பதில் அளிக்கும் தமிழ்நாடு மின்துறை அமைச்சர் தங்கமணி, மின்மாற்றிகள் பழுதடைந்துள்ளதால் மின் தடைதான் ஏற்படுகிறது, மின்சாரத் தட்டுப்பாடு இல்லை, ஆனால், தாமிரத் தட்டுப்பாடு காரணமாக புதிய மின்மாற்றிகளுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது, தாமிரக் கம்பிகள் தேவையில் 70% ஸ்டெர்லைட் ஆலை தந்து கொண்டிருந்தது, தற்போது அது மூடப்பட்டு விட்டதால் தாமிரத்திற்குத் தட்டுப்பாடு என்று, 13 பேரை படுகொலை செய்த குற்ற உணர்வில்லாமல், ஸ்டெர்லைட்டுக்கு ஆதரவாகப் பேசுகிறார். நச்சுக் காற்றால் நஞ்சான தண்ணீரால் வாழ்க்கையிழந்த மக்கள் சந்ததியைக் காக்கப் போராடியதைக் கொச்சைப்படுத்துகிறார். நச்சு ஆலை ஸ்டெர்லைட்க்கு எதிரான போராட் டம் பற்றியோ துப்பாக்கிச் சூடு பற்றியோ சட்டமன்றத்தில் யாரும் பேசினால் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளதால் அது பற்றி யாரும் இங்கு பேச வேண்டாம் என்று கூறும் முதல்வரும் சபாநாயகரும் ஸ்டெர்லைட் ஆலை மூடியிருப்பதால் தாமிர தட்டுப்பாடு என்று பேசும் அமைச்சரைத் தடுக்கத் தயாராக இல்லை. ஸ்டெர்லைட் தாமிரம் உற்பத்தி செய்ததா, நஞ்சை உமிழ்ந்ததா என்பதும் விசாரணைக்கு உட்பட்டதுதானே.
மோடியின் உத்தரவின் பேரில் தமிழ்நாட்டு மக்கள் மீது அறிவிக்கப்படாத நெருக்கடி நிலையை திணித்திருக்கிறது பழனிச்சாமி அரசு. பத்திரிகைகளும் தொலைக்காட்சி ஊடகங்களும் அவர்களுக்கு ஒத்தூதுகின்றன, அல்லது மிரட்டி ஒத்துழைக்க வைக்கப்படுகின்றன. சுற்றுப்புறச் சூழல் என பக்கம்பக்கமாகப் பேசும் பத்திரிகைகள் நஞ்சாலை ஸ்டெர்லைட்டை பற்றி பேசுவதில்லை. அதற்கெதிரான போராட்டத்தை, துப்பாக்கிச் சூட்டுப் படுகொலையை  கலவரம் எனச் சித்தரித்து மக்களைத் திசை திருப்பப் பார்க்கின்றன. எட்டு வழிச்சாலையை எவ்வளவு கஷ்டப்பட்டு கொண்டு வந்திருக்கிறோம் தெரியுமா என்கிறார் பழனிச்சாமி. யாருக்காக? யாருக்கு வேண்டும் எட்டு வழிச் சாலை என்று கேட்கிறார்கள் மக்கள். அடுத்தடுத்து மக்கள் போராட்டங்கள் வெடிக்கக் காத்திருக்கின்றன என்பதனால் அடக்குமுறையை கட்டவிழ்த்துக் கொண்டிருக்கின்றன மோடி அரசும் பழனிச்சாமி அரசும்.
சென்னை சேலம் 8 வழிச் சாலைக்கெதிராக, கூடங்குளம் அணுஉலைப் பூங்காவிற்கு எதிராக, அதானியின் விழிஞ்ஞம் துறைமுகத் திற்கு தமிழ்நாட்டு மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து பாறைகளை வெட்டிக் கொண்டு செல்வதற்கு எதிராக, மீனவர்கள் வாழ்வை அழிக்கும் கோவளம் துறைமுகத்திற்கு எதிராக என மக்கள் போராட்டத்தில் இறங்கிக் கொண்டிருக்கிறார்கள். இவற்றை ஒடுக்கவே அறிவிக்கப்படாத அவசரநிலை. இந்த அறிவிக்கப்படாத அவசர நிலைக்கு எதிராக வரும், இந்திரா காந்தியின் அவசர நிலை அறிவிப்பு நாட்களான, ஜ÷ன் 25 மற்றும் 26 தேதிகளில் எதிர்ப்பு நாள் கடைபிடிக்க இகக(மாலெ) முடிவு செய்துள்ளது. மக்கள் வாழ்வுரிமைகளை, ஜனநாயக உரிமைகளை பறிக்கும் அரசுகள் பதவியில் இருந்ததாகச் சரித்திரம் இல்லை. காட்டை அழித்து நாட்டை நாசமாக்கி மக்கள் சொத்தைச் சூறையாடி கோடிகோடியாய் கொள்ளையடித்துச் சொத்து சேர்த்துக் கொண்டிருக்கும் ஊழல் பேர்வழிகளான பழனிச்சாமி பன்னீர்செல்வம் வகையறாக்களும் அவர்களின் கூட்டாளிகளும் ஓடி ஒழியும் நாட்கள் நெருங்கிக் கொண்டிருக்கின்றன.
‘பூமிக்கு அடியில் இருந்து எடுக்கப்படும் எந்த வளங்களாக இருந்தாலும் அதில் என் வேதாந்தா மூலமாகவோ, பிற கம்பெனிகளில் எனக்கிருக்கும் பங்குகள் மூலமாகவோ என் கைகள் கண்டிப்பாக இருக்கும்..ஆம் அதில் நான் கண்டிப்பாக இருப்பேன்’ என்று சொன் னார் அனில் அகர்வால். இன்னொரு முறை ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்பட்டால் அப் போது நடக்கும் போராட்டத்தா(தி)ல் இழப்பு எங்களுக்கு இல்லை, எங்கள் எட்டயபுரத்தான் வரிகளே பதில் என்கிறார்கள் தூத்துக்குடி மக்கள். வீழ்வேன் என நினைத்தாயோ? 

Search