COMMUNIST PARTY OF INDIA (MARXIST - LENINIST) - LIBERATION

COMMUNIST PARTY OF INDIA (MARXIST - LENINIST) - LIBERATION, TAMILNADU

Saturday, June 16, 2018

மகுடங்கள் மண்ணில் உருளட்டும்! சிம்மாசனங்கள் தரையில் சரியட்டும்!

நரேந்திர மோடி ஆட்சி எல்லா முனைகளிலும் தோற்றுப் போய்விட்டது.
அதனால் அடுத்தடுத்த தேர்தல்களிலும் தோற்கிறது. முட்டுக் கொடுக்க கட்டுக் கதை தயாராயுள்ளது. மோடி குஜராத் முதல்வராய் இருந்தபோது, அவரைக் கொல்ல தீவிரவாதிகள் வந்ததாக அமித் ஷா தலைமையில் புனை கதைகள் ஜோடிக்கப்பட்டன. ஆள்வோர் உத்தரவுப்படி எதுவும் செய்யும் உயர்காவல் அதிகாரிகள் துணை கொண்டுதான் சொராபுதின், கவுசர் பீ, இஷ்ரத் ஜெஹான், பிரஜாபதி ஆகியோர் கொல்லப்பட்டனர். இப்போது, பீமா கொரேகானில் தலித்துகள் மீது நடந்த தாக்குதல் தொடர்பான ஜனவரி 2018, முதல் தகவல் அறிக்கைப்படி, ஜ÷ன் மாதத்தில் எழுத்தாளரும் தலித் செயல்பாட்டாளருமான சுதிப் தவாலே, நாக்பூரின் முக்கிய வழக்கறிஞர் சுரேந்திர கேட்லிங், ஆராய்ச்சியாளர் மகேஷ் ராவத், நாக்பூர் பல்கலைக் கழக ஆங்கில இலக்கியத் துறை தலைவர் ஷோமா சென், அரசியல் சிறைவாசிகள் உரிமைகளுக்காகப் போராடும் ரோனா வில்சன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
செல்வாக்கு சரிந்து வருகிற பின்னணியில், மோடியைப் பொது இடத்தில் கொலை செய்ய சதி என்ற ஒரு கதை மீண்டும் தயாராகிவிட்டது. கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் மடிக்கணினியில், ராஜீவ் காந்தியைக் கொன்றது போலவே மோடியைக் கொல்ல இருந்த சதித் திட்டம் பதிவாகி இருந்ததாகச் சொல்லி, அய்ந்து பேர் மீதும் சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் பாய்ந்தது. முழு பாசிஸ்டுகளின் தலைமைக் குழாமைச் சேர்ந்த அருண் ஜேட்லி, இந்த அய்ந்து பேரையும் நகர்ப்புற நக்சல்கள், அரை மாவோயிஸ்ட்கள் என அழைத்துள்ளார்.
மோடியைக் கொல்ல நகர்ப்புற நக்சல்கள், அரை மாவோயிஸ்ட்கள் தயாராகி உள்ளதாக மோடி பக்தர்கள் நாடெங்கும் பேசுவார்கள். இந்தியாவை, வளர்ச்சியை நோக்கி செலுத்தும் மோடியைக் கொல்லச் சதி என்று அனுதாபம் தேடுவது, நக்சல் மாவோயிஸ்ட் பூச்சாண்டி காட்டுவதுதான், சங் பரிவாரின் மிகச் சமீபத்திய ஆயுதம்.
விவசாய நெருக்கடிக்குத் தீர்வு, விவசாயத்தை விட்டு வெளியேறுவது என்று சொன்ன மோடி கூட்டம், பகோடா விற்றுப் பிழை, பீடா கடை வை, மாடு வளர்த்து பால் விற்றுப் பிழை என்றெல்லாம் சொல்லி, கடைசியாக, ரூ.50,000 கடன் தருகிறோம், வேலை தேடுவதை நிறுத்து, வேலைகள் கொடு என்று சொல்லும் சங் பரிவார் மக்களைக் கண்டு அஞ்சுகிறது. கும்பல் படுகொலைகள் செய்கிறது. குறி வைத்து கொலை செய்கிறது. இந்துத்துவா வெறியூட்டுகிறது. நக்சல், மாவோயிஸ்ட் முத்திரை குத்தி போராட்டக்காரர்களை ஒடுக்கத் திட்டமிட்டுள்ளது. 4 வருடங்களில் 19 நாட்கள் மட்டுமே நாடாளுமன்றம் சென்ற மோடி, ஜனநாயகம் காக்க, வேட்டைக்குப் புறப்பட்டுவிட்டார்!
தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட மக்கள் செல்வாக்கே இல்லாத ஒரு கூட்டம், சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகளின் பிளவுண்ட தீர்ப்பால் தப்பியுள்ள ஓர் ஆட்சி, மிகவும் மூர்க்கமாக கார்ப்பரேட் வளர்ச்சி, கட்டற்ற ஒடுக்குமுறை என்ற இரட்டைக் குழல் துப்பாக்கி கொண்டு தமிழ்நாட்டு மக்கள் மீது அறிவிக்கப்படாத அவசர நிலை போர் தொடுத்துள்ளது. மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு என்ற பெரியாரின் அழைப்பு தங்களுக்கானதல்ல என நம்பும் ஆட்சி, மாநில உரிமைகளை மத்திய அரசிடம் அடகு வைத்து, வளங்களைச் சூறையாடுகிறது. சொந்த நாட்டு மக்கள் மீது போர் தொடுத்துள்ளது.
மத்திய அரசும் மாநில அரசும் சேர்ந்துதான் தூத்துக்குடி போராட்டக்காரர்களைக் குறிவைத்துக் கொன்றார்கள் என்று தமிழ்நாட்டில் நம்பப்படுகிறது. மக்கள் ஆயிரம் ஆயிரமாய்த் திரளும் போதும் ஜாலியன் வாலாபாக் போல் சுட்டுக் கொல்வோம் என தமிழ்நாட்டு மக்களுக்கு செய்தி சொல்லப்பட்டுள்ளது. செத்து மடியாமல் இருக்க, அடங்கிப் போக வேண்டுமாம்!
வேல்முருகன் மீது தேச துரோக வழக்கு, புரட்சிகர இளைஞர் முன்னணி, மக்கள் அதிகாரம் அமைப்புகளின் முன்னணிகள் மீது தேசப் பாதுகாப்பு சட்டம் உள்ளிட்ட சட்டங்களின் கீழ் பல வழக்குகள், சேலம் தர்மபுரியில் எட்டு வழிச்சாலைக்கு நிலத்தைக் கொடுத்து ஓடிவிடு என வீடுவீடாய் மிரட்டல். மக்கள் மத்தியில் உள்ள போராட்டக்காரர்களை நீண்ட காலம் சிறையில் வைப்போம் என அச்சுறுத்தல், துண்டுப் பிரசுரம் விநியோகித்ததற்காக அய்யாக்கண்ணு கைது, மணியரசன் மீது தாக்குதல், நீதி விசாரணை நடக்கிறது என்ற பெயரில் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு பற்றி பேச வாய்ப்பூட்டு, கருத்துச் சுதந்திரத்தைப் பறிக்க, அமீர், புதிய தலைமுறை மீது வழக்கு, எட்டு வழிச்சாலை வந்தே தீரும் எனச் சட்டமன்றத்தில் முதல்வர் ஆணவப் பேச்சு என அறிவிக்கப்படாத அவசர நிலை ஆட்டம் போடுகிறது. எல்ஜிபி ரோலான் செயின், பிரிக்கால் ஆலைகளில் பழனிச்சாமியும் வேலுமணியும் நேரடியாக முதலாளிகளுக்கு உதவுவதாக அதிகாரிகள் சொல்கிறார்கள்.
மத்திய மற்றும் கிழக்கு இந்தியாவில் நகர்ப்புற நக்சல், மாவோயிஸ்ட் முத்திரை குத்தி வேட்டை. தமிழ்நாட்டில், சமூக விரோதி முத்திரையுடன் வேட்டை துவங்கிவிட்டது. வளர்ச்சி பலி பீடத்தில் மனிதர்கள் கொல்லப்பட்டு ரத்த பூசை நடந்துள்ளது. வளர்ச்சியை எதிர்த்தால் தமிழ்நாடு சுடுகாடாகி விடுமாம். சேலம் பிரச்சனைக்கு, பிற மாவட்ட பிரச்சனைகளுக்கு சென்னையில் முற்றுகை போராட்டம் நடத்தினால் தூக்கி உள்ளே போடு, இரும்புக் கரம் கொண்டு அடக்கு என்று தமிழிசை சொல்கிறார். எதிர்ப்பாளர்கள் அனைவரையும் உள்ளே தள்ளவேண்டும் என்கிறார் பொன் ராதாகிருஷ்ணன். மோடியை  திரும்பப் போகச் சொன்னதற்கு, மத்திய மாநில அரசுகள் தமிழ்நாட்டு மக்களை திரும்பத் திரும்பத் தண்டிக்கிறார்கள். உச்சநீதிமன்றம் வரை சென்றும் பிணை மறுக்கப்பட்ட எஸ்.வி.சேகர் காவல்துறையினர் பாதுகாப்புடன் பகிரங்கமாக நடமாடுவது பற்றி சமூக ஊடகங்களில் வெளியாகும்போது, நாங்கள் நினைத்தால் வெளியே, நினைத்தால் உள்ளே என்ற செய்திதான் சொல்லப்படுகிறது.
ஹிட்லருக்கு, முசோலினிக்கு, இந்திரா காந்திக்கு தயாராய் இருந்த வரலாற்றின் குப்பைத் தொட்டி, மோடிக்கும் பழனிச்சாமிக் கும் காத்திருக்கிறது.
மக்கள் அடக்குமுறைக்கு அடிபணிய மாட்டார்கள். வாழ்க்கையைப் பறித்தால், ஜனநாயகத்தைப் பறித்தால் அடங்கிப் போக மாட்டார்கள்.
வழக்கு மேல் வழக்கு வரும், சிறைக் கதவுகள் திறக்கும், துப்பாக்கி குண்டுகள் பாயும் என்றாலும் மக்கள் போராட்டங்கள் நிச்சயம். மத்திய, மாநில, மக்கள் விரோத, தேச விரோத ஆட்சியாளர்களின் மகுடங்கள் மண்ணில் உருள்வதும் சிம்மாசனங்கள் தரையில் சரிவதும் நிச்சயம்.

Search