COMMUNIST PARTY OF INDIA (MARXIST - LENINIST) - LIBERATION

COMMUNIST PARTY OF INDIA (MARXIST - LENINIST) - LIBERATION, TAMILNADU

Saturday, June 16, 2018

தமிழ்நாட்டை இழவு வீடாக்கிவிட்ட மோடி, பழனிச்சாமி அரசுகள்

மோடி பழனிச்சாமி அரசுகள் தமிழகத்தை இழவு வீடாக்கிவிட்டன. ஜுன் 5  அன்று வெளியா கும் என்று சொல்லப்பட்ட நீட் தேர்வு முடிவு ஜுன் 4 அன்று வெளியானது.
1125 மதிப்பெண் பெற்ற பிரதீபா, ஜுன் 4 அன்று  கொல்லப்பட்டார்.  நீட் தேர்வில் வெற்றி பெறாததால், மருத்துவர் கனவு குலைந்து போய், உயிர்வாழ்வதில் பொருள் இல்லை என முடிவு செய்துவிட்டார். இரண்டு நாட்கள் கழித்து சுபஸ்ரீயும் அதே முடிவெடுக்க, அவரையும் நீட் தகுதித் தேர்வு கொலை செய்தது.
ஏன் தற்கொலை செய்துகொள்ள வேண்டும், வேறு படிப்பே இல்லையா, தாய் தகப்பன் அறிவுரை சொல்லவில்லையா என்றெல்லாம் நாக்கில் நரம்பின்றி, நெஞ்சில் ஈரமின்றி கேள்விகள் கேட்கிறது பாசிசம். அனிதாவின் தந்தை சுமை தூக்கும் தொழிலாளி. அவருக்கு அதற்குத்தான் நேரம் இருந்தது. அனிதாவும் தந்தை நிலை அறிந்து அவருக்கு சுமை ஏற்றக் கூடாது என்று, தானே சமாளித்தார். பிரதீபாவின் தந்தை கட்டுமானத் தொழிலாளி. வேலை பார்த்தால்தான் மகளைப் படிக்க வைக்க முடியும். வேலையை மட்டும்தான் பார்க்க முடியும். வேறு படிப்பில்லையா என்று கேட்க நீ யார்? தன்னால் மருத்துவம் படிக்க முடியும் என்று என் குழந்தை நம்பி அதற்கு எல்லா முயற்சிகளும் எடுத்தது. நீட்டை குறுக்கே கிடத்தி அந்தக் குழந்தையின் பாதையை அடைத்து விட்டு கேள்விகள் கேட்கும் துணிச்சல் வந்து விட்டது பாசிச வெறியர்களுக்கு.
அகில இந்திய அளவில் 12ஆவது இடமும் மாநிலத்தில் முதலிடமும் பெற்ற கீர்த்தனாவின் தாயும் தந்தையும் மருத்துவர்கள். கீர்த்தனா ரூ.1 லட்சத்துக்கும் மேல் கட்டணம் செலுத்தி, பயிற்சி மய்யத்தில் சேர்ந்து ஓராண்டு காலமாக நீட் தேர்வுக்குப் பயிற்சி பெற்றார். அனிதாவுக்கு, பிரதீபாவுக்கு அது சாத்தியமில்லை. கட்டுமானத் தொழிலாளி, சுமைதூக்கும் தொழிலாளி பிள்ளைகள் உங்களுக்கேற்ற படிப்பு படித்துக் கொள்ளுங்கள், அல்லது சாவு இருக்கவே இருக்கிறது, பணம்படைத்தோர் பிள்ளைகள் மருத்துவம் படிக்கட்டும் என்று இரக்கமற்று சொல்கிறது கல்வி தனியார்மயம். பிரதீபாவை கீர்த்தனாவுடன் போட்டிபோடச் சொல்கிறது. என்ன கொடூரம்? எங்கள் குழந்தைகளை ஏன் போட்டி போட வைக்கிறீர்கள்? கீர்த்தனாவுக்கும் கூட, அந்த அழுத்தம் இல்லாமல், ஓராண்டு வீணடிக்காமல், மருத்துவம் படிக்கும் உரிமை தொடர வேண்டும் என்றுதான் தமிழ்நாட்டு மக்கள் சொல்கிறோம்.
மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்துள்ள மத்திய சுகாதார அமைச்சகம், நாட்டில் உள்ள அரசு மருத்துவ கல்லூரிகளில் 30,455 இடங்களும், தனியார் மருத்துவ கல்லூரிகளில் 36,165 இடங்களும் இருப்பதாகச் சொல்கிறது. மொத்த இடங்கள் 63,210 என இந்திய மருத்துவ கழகம் சொல்கிறது. பல் மருத்துவம் படிக்க, அரசுக் கல்லூரிகளில் 2,930 இடங்கள், தனியார் கல்லூரிகளில் 24,130 இடங்கள் உள்ளன.
தனியார் கல்லூரிகளின் கட்டணக் கொள்ளையைத் தடுத்து விட்டோம், சமூக நீதியை காப்பாற்றி விட்டோம் என்று பாசிசம் கூச்சல் போடுகிறது. 13 லட்சம் பேர் எழுதி, 7 லட்சம் பேர் தேர்வு பெற்றுள்ளார்கள். அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் இருக்கிற மொத்த இடங்கள் இவ்வளவுதான். 30,456ஆவது மாணவர் முதல் தனியார் மருத்துவ கல்லூரியில்தான் இடம் தேட வேண்டும். இவர்களில் பணம் கூடுதலாக தரும் வசதி இருப்பவர்கள் மருத்துவம் படிக்க முடியும். சமூக நீதிக்கு என்ன விலை என்று இந்தத் தனியார் கல்லூரிகளில் கேட்பார்கள். பொய்யை, அநியாயமான வாதங்களை சத்தமாக முன்வைப்பதால் அவற்றுக்கு அங்கீகாரம் கிடைக்காது. வாழ்க்கைக்கு வெற்று வார்த்தைகள் போதாது. எங்கள் குழந்தைகள் மருத்துவம் படிக்க என்ன வழி? அதைச் சொல்ல முடியுமா உங்களால்?
தேர்வு முடிவுகள் வெளியான மறுநாள் ஆங்கில இந்து நாளேட்டில், முதல் நான்கு முழு பக்கங்களில் நீட் பயிற்சி மய்யங்களின் விளம்பரங்கள். எல்லாம் எங்கள் அனிதாவின், பிரதீபாவின், சுபஸ்ரீயின் உயிர் குடித்த பணம். அடுத்த ஆண்டு இதுபோன்ற விளம்பரமும் வரக்கூடாது. அனிதாக்களும் கொல்லப்படக் கூடாது. நீட் வேண்டாம். நீட் வேண்டாம். நீட் வேண்டவே வேண்டாம்.

Search