COMMUNIST PARTY OF INDIA (MARXIST - LENINIST) - LIBERATION

COMMUNIST PARTY OF INDIA (MARXIST - LENINIST) - LIBERATION, TAMILNADU

Saturday, June 30, 2018

சூயஸ் நிறுவனத்திடம் சிக்கியுள்ள கோவை மாநகராட்சியின் நீர்க் கட்டுப்பாடு
பன்னாட்டு நிறுவனங்களின் வேட்டைக் காடாக தமிழ்நாட்டை  மாற்றிவிட்டனர்

ஒடியன்

கோவையில் உள்ள சுடுகாடுகளின் கட்டுப்பாடு ஈஷாவிடம் இருக்கிறது.
சாலைகளின் கட்டுப்பாடு ஜிவிஆர் எல்டி&எல் என் டி நிறுவனங்களிடம் உள்ளது.

மருத்துவமனைகளின் கட்டுப்பாடு குறிப்பிட்ட கம்பெனிகளிடம் இருக்கிறது
குளங்களின் கட்டுப்பாடு சிறுதுளியிடம் இருந்தது.
கடைசியாக இப்போது மாநகராட்சியின் நீர்க்கட்டுப்பாடு, சூயஸ் கம்பெனியிடம் சிக்கியிருக்கிறது.
இப்படி நாலாப்புறமும் கட்டப்பட்டிருக்கிற பெருநகரம், ஒரு பம்பாய்  மிட்டாய்காரனின் கையில் இருக்கும் பொம்மை போல் அசையப்போகும் ஒரு கணம் நெருங்கிக் கொண்டிருக்கிறது.
இதில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசென்று ஒன்று இருப்பதாகவும், அது இயங்குவதாகவும் இன்னும் நம்புவது ஆச்சரியமளிக்கிறது. அது வெறும் மூட நம்பிக்கையே தவிர, வேறெதுவும் இல்லை.
சூயசை பொறுத்தவரை அது மிகப் பெரிய நிறுவனம். அதன் வலைப்பின்னல் பிரும்மாண்டமானது. அதன் வியாபாரம் குடிநீரோடு மட்டும் நிற்காது சாக்கடை நீரை மறுசுழற்சி செய்வது, அதை கம்பெனிகளுக்கு விற்பது, கம்பெனிகளுக்கு ட்ரீட்மென்ட் பிளாண்ட் அமைப்பது என இன்னும் இதனுடன் தொடர்புடைய வியாபாரங்களின் பட்டியல் கற்ப னைக்கு எட்டாத அளவுக்கு நீளமானதாக இருக்கிறது. மகேந்திரா கம்பெனி, இன்னும் சில கம்பெனிகளையும் சேர்த்துக் கொண்டு கார்மெண்ட் ஹொசைரி கம்பெனிகளுக்கு நீர் சப்ளை செய்யும். இது போன்ற வியாபாரம் ஒன்றை சோதனை முறையில் திருப்பூரில் செய்து வருகிறது.
கிட்டத்தட்ட அது சூயஸ் போன்ற ஒரு முயற்சிதான். ஆனால் சூயசின் முன் இவையெல்லாம் கத்துக்குட்டிதான்.
வங்கிகள் விவசாயிக்கு பயிர்க்கடன் வழங்குவது போல சூயஸ் கம்பெனி தொழில் நிறுவனங்களுக்கும் தனி நபர்களுக்கும் நீர்க் கடன்களை வாரி வழங்குகிறது.
உங்கள் வீட்டிலோ கம்பெனியிலோ பைப் லைன் மாட்டவோ, மீட்டர் மாட்டவோ, நீர் ட்ரீட்மென்ட் பிளாண்ட் அமைக்கவோ பணம் தேவைப்பட்டால் அதற்கான கடனையும் தருகிறார்கள். ஆனால் வேலையை அவர்கள்தான் செய்வார்கள். ஒரு முறை நீர்க்கடனை வாங்கிவிட்டால் அவ்வளவு சீக்கிரத்தில் நீங்கள் அந்தக் கம்பெனியின் பின்னலில் இருந்து வெளியே வந்துவிட முடியாது. அவ்வளவு நுட்பமான பின் தொடர்தல் யுக்திகள் சூயசில் இருக்கிறது. நீருக்கு செயற்கையான ஒரு டிமாண்டை ஏற்படுத்தி லிட்டரின் விலையை கூடுதலாக்கி விற்றுக் கொள்ள முடியும். தேவைப்பட்டால் பல்வேறு காரணங்களைக் காட்டி நீர் அளிப்பை நிறுத்தி வைக்கக்கூட முடியும். அப்போது சூயஸ் கம்பெனியின் டைரக்டர், மாநகரின் நீர் மேயராக இருப்பார். இது சிலருக்கு கற்பனையாகக் கூடத் தோன்றலாம்.
பொலிவியாவில் 2000த்தில் நடந்த கோச்சபாம்பா போராட்டம் நம் கண் முன் ரத்த சாட்சியாக இருக்கிறது. கோச்சபாம்பா, பொலிவியாவின் மிகப் பெரிய நகரங்களில் ஒன்று. நகரத்துக்கான நீர் விநியோகத்தையும் பங்கீட்டையும் சரியாக செய்ய முடியவில்லை, வரும் பிரச்சனைகளை சமாளிக்க முடியவில்லை என்று சொன்ன பொலிவிய அரசாங்கம் நீரளிக்கும் பணியை அமெரிக்க கம்பெனியான இண்டர்நேசனல் வாட்டர் லிமிடெட் (அய்டபுள்யுஎல்), இத்தாலியின் எடிசன் இண்டர்நேசனல், ஸ்பெயினின் அபென்கோ ஆகிய பன்னாட்டு கம்பெனிகளின் கூட்டு நிர்வாகத்துக்கு தாரை வார்த்துக் கொடுத்தது. கொஞ்ச காலம் நல்ல பிள்ளையாக இருந்த பன்னாட்டு கம்பெனிக ளின் கூட்டு நிர்வாகம், பின்பு தனது கொடூர முகத்தை காட்ட ஆரம்பித்தது. நீரின் விலை யையும் நீருக்கான வரியையும் நான்கு மடங்காகக் கூட்டி வசூலிக்க ஆரம்பித்து விட்டனர். நகரத்தின் மொத்த மக்களும் திண்டாடிப் போயினர். ஒரு நீர்ப்பஞ்சம் என்ற அளவுக்கு நிலைமை கட்டுக்கடங்காமல் போய்விட்டது. பல்வேறு வடிவங்களிலும் கிடைக்கும் நீரை காய்ச்சி குடிக்கவும் மழைநீரை சேமித்து மாதக் கணக்கில் வைத்திருந்து பயன்படுத்தவும் ஆரம்பித்தனர்.
ஆனால் இந்த கம்பெனிகள், எங்கள் வியாபாரப் பரப்புக்குள் எந்த வடிவத்திலிருக்கும் நீருக்கும் நாங்கள்தான் அத்தாரிட்டி என்றனர். எங்கள் கம்பெனியிடம் மக்கள் இதற்கான லைசன்சை பெற்றுக் கொண்டு நீரைப் பயன்படுத்தலாம், லைசன்ஸ் இல்லாமல் எடுக்கப்படும் ஒவ்வொரு சொட்டு நீருக்கும் அபராதம் கட்ட நேரிடும் என்று எச்சரித்தனர்.
வெகுண்டெழுந்த கோச்சபாம்பா நகர மக்கள், பொலிவிய அரசுக்கு எதிராகவும் கூட்டுக் கம்பெனிகளுக்கு எதிராகவும் இதை பின்னிருந்து இயக்கிய உலக வங்கிக்கு எதிராகவும் வீரம் செறிந்த யுத்தம் ஒன்றை நகரின் வீதிகளில் ஓய்வொழிச்சல் இன்றி பல்லாண்டு காலம் நடத்தினார்கள். இறுதியில் அரசு பணிந்து பொது விநியோகம் மக்கள் அதிகாரத்தின் கீழ் ஒப்படைக்கப்பட்டது.
இந்த இடத்தில் நின்றுகொள்வோம். திரும்பி கோவைக்கு வருவோம்.
2045ஆம் ஆண்டு குடிநீர் தேவையை மனதில் வைத்து செய்யப்பட்ட ஏற்பாடு என்று சூயசின் தூதுவர்களான கோவை மாநகராட்சி அதிகாரிகள் சொல்கிறார்கள். கோச்சபாம்பா அனுபவத்தை வைத்துப் பார்க்கும்போது இங்கே சிறுவாணி, பில்லூர் அணைகளின் கட்டுப்பாடுகள் தன்னியல்பாக சூயசின் கைகளுக்குள் போய்விடும் அபாயம் இருப்பதை புறம்தள்ள முடியவில்லை. ஒரு வகையில் இது அச்சமூட்டுகிறது.
அவர்கள் 2045அய் இலக்காக வைக்கும் போது நாம் 2050ல் இதன் கன்ட்ரோல் பேனல்கள் யாரிடத்தில் இருக்கும் என்பதை மனதில் வைத்து தொலை நோக்குள்ள பல கட்டங்கள் கொண்ட தலைமுறை கடந்த போராட்ட திட்டங்களோடு களம் காண வேண்டும். சொல்லாமல் கொள்ளாமல் விற்றுவிட்டார்கள் என்று சில நண்பர்கள் சொல்கிறார்கள். அப்படியெல்லாம் அவர்கள் செய்யவில்லை. வேறு மாதிரியாக ஒரு அனுமதியைக் கேட்டிருக்கிறார்கள்.
எப்போதும் கார்ப்பரேட்டுகளிடம் ஒரு தொழில் நேர்த்தியும் செய்நேர்த்தியும் இருக்கும். இந்த விசயத்திலும் கச்சிதமாக அதைச் செய்தார்கள்.
ஒரு கட்டத்தில் இந்த நீர்ப்பேச்சு, நகருக்குள் சம்பந்தமில்லாமல் பல்வேறு கட்டங்களில் அடிபட்டுக் கொண்டே இருக்குமாறு பார்த்துக் கொண்டார்கள். முதலாவதாக, குழாய்களில் இருக்கும் நுண்துளை உடைப்புகள் போன்றவற்றால் நீர் குறிப்பிட்ட பகுதிகளுக்கு சரியாக போய் சேர்வதில்லை என்று அடிக்கடி அறிவிக்க ஆரம்பித்தார்கள். இரண்டாவதாக சிறுவாணியில் தண்ணீர் குறைந்துவிட்டது, இன்னும் மூன்று மாதங்களுக்கு தண்ணீர் கிடையாது விரைவில் ஒப்பந்தம் முடிந்துவிடும், பிறகு நிரந்தரமாய் கிடையாது என்ற பீதியை சுற்றுக்கு விட்டார்கள். மூன்றாவதாக வடிகால் வாரியத்தின் சில அதிகாரிகள் இந்த திட்டம் குறித்து வானளாவப் புகழ ஆரம்பித்தார்கள். நான்காவதாக, பெயர் குறிப்பிடாத அதிகாரி தெரிவித்தார் என்ற செய்திகள் குறிப்பிட்ட கால இடைவெளியில் செய்திகளில் வருமாறு பார்த்துக் கொண்டார்கள்.
உதாரணத்துக்கு சென்ற வருடம் வந்த பத்திரிகை குறிப்புகளில் ஒன்று.
கோவை: சூயஸ் இன்ஃப்ரா என்ற பெயர் கொண்ட பிரான்ஸ் நாட்டு நிறுவனத்துக்கு, நீண்ட நாட்களாக எதிர்ப்பார்க்கப்படும் 24 ஷ் 7 நீர் விநியோகத் திட்டத்துக்கான பணி ஆணையை மாநகராட்சி ஒரு வழியாக தந்துவிட்டது.
பாரீஸ், ஷாங்காய், டில்லி போன்ற இடங்களில் இதுபோன்ற குடிநீர் விநியோகத் திட்டங்களை செயல்படுத்திய விரிவான அனுபவம் நிறுவனத்துக்கு உண்டு என்று அதிகாரிகள் தெரிவித்தனர். சமீபத்தில் கொல்கத்தாவிலும் இது போன்ற திட்டம் ஒன்றை நிறுவனம் துவங்கியிருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
‘இந்தத் துறையில் நிறுவனத்துக்கு பரந்த அனுபவம் உள்ளது. நாங்கள் விரைவில் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவோம். ஒப்பந்த காலம் அய்ந்தாண்டுகள். இதில் நான்காண்டுகள் உள் கட்டுமானத்தை கட்டுவதற்கும், ஓராண்டு ஆய்வு நடத்துவதற்கும் ஆகும்’ என்று பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரி ஒருவர் சொன்னார்.
சில இறுதி ஒப்பந்தங்களில் இன்னும் அவர்கள் கையொப்பமிட வேண்டியிருப்பதால், இந்த விசயத்தில் விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு வரும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
ரூ.556.57 கோடி மதிப்புள்ள இந்தத் திட்டத்தில் 60 வார்டுகளில் உள்ள 1,467 கி.மீ நீளத்துக்கு குழாய்கள் மாற்றியமைக்கப்படும். புதிதாக 29 தண்ணீர் தொட்டிகள் அமைக்கப்படும். இதனால் மாநகரில் உள்ள 10.5 லட்சம் பேர் பயனடைவார்கள். 2045ல் நகரத்தின் மக்கள் தொகை என்னவாக இருக்கும் என்பதை மனதில் கொண்டு திட்டம் முன்வைக்கப்பட்டது.
‘இப்போதைக்கு மாநகர எல்லைக்குள் மட்டும் நாங்கள் கவனம் செலுத்துகிறோம். பின்னாளில் கூடுதல் பகுதிகளுக்கும் திட்டம் விரிவுபடுத்தப்படும் என அதிகாரி தெரிவித்தார். கூடுதல் பகுதிகளுக்காக மாநகராட்சி நீராதார மேம்பாட்டு திட்டமும் தயாரித்துக் கொண்டிருக்கிறது. இந்தத் திட்டத்தில் பில்லூர் அணையில் இருந்து நகரத்துக்கான நீர் நுகர்வை அதிகரிக்க தனி குழாய்கள் போடப்படும்’.
‘பில்லூர் - 3 திட்டத்துக்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க துவங்கிவிட்டோம். மாநில அரசு ஒப்புதல் தந்தவுடன் கூடுதல் பகுதிகளுக்கும் 24 ஷ் 7 நீர் விநியோகத் திட்டம் செயல்படுத்தப்படும்’ என அதிகாரி தெரிவித்தார்.
‘பில்லூர் மற்றும் சிறுவாணியில் இருந்து இப்போது மாநகருக்கு தண்ணீர் வருகிறது. பில்லூரில் இருந்து நாளொன்றுக்கு 125 எம்எல்டியும் சிறுவாணியில் இருந்து 75 எம்எல்டியும் எடுக்கப்படுகிறது’.
24 ஷ் 7 நீர் விநியோகத் திட்டத்துக்கு போதுமான ஆதாரங்கள் மாநகரில் உள்ளதா என்று கேட்டபோது, ‘இந்தத் திட்டத்துக்கு மாநகரத்தில் எப்போதும் ஆதாரம் இருந்திருக்கிறது என மூத்த பொறியாளர்கள் சொல்கின்றனர். காலாவதியாகிவிட்ட விநியோகக் கட்டமைப்புதான் பிரச்சனை. பிரிட்டிஷ் காலத்து குழாய்கள் தினமும் சேதமாகி விடுகின்றன. அல்லது உடைந்து விடுகின்றன. இதனால் மாநகராட்சிக்கு பெரும் செலவு ஏற்படுகிறது. இப்போதுள்ள குழாய்கள் மிகவும் குறுகியவை. இந்தத் திட்டத்தில் 1,467 கி.மீக்கு குழாய்கள் போடப்படும்’ என்று அவர்கள் தெரிவித்தனர்.
அய்ந்தாவதாக, வெளிப்படையான அறிவிப்பு வந்தபின், எல்லாவற்றையும் மீறி எழும் போராட்டங்களை ஒடுக்க ஏதுவாக கோவையில் மாவோயிஸ்ட்கள் நடமாட்டம் என்று சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள்.
மீண்டும் பொலிவியாவுக்கு வருவோம்.
பொலிவிய மக்கள் போராட்டங்களால் வளர்ந்தவர்கள். திட்டமிட்ட போராட்ட முறைக்கு பழகியவர்கள். அனைத்துத் தரப்பு மக்களையும் இணைத்து ஒருங்கிணைந்த போராட்டங்களை முன்னெடுக்கும் பாரம்பரியமான முறை அவர்களிடத்தில் இருக்கிறது.
ஆனால் இங்கு அப்படியான முறை இல்லை. காலம் கடந்த பின்னும் பொது மக்களைத் தடுத்து காசு பறித்துக் கொண்டிருந்த உக்கடம் டோல்கேட்டை கைப்பற்றும் போராட்டங்கள் இஸ்லாமியர்களாலும் தலித் மக்களாலும் முன்னெடுக்கப்பட்டது.
அவர்களின்றி கோவையை மீட்டெடுப்பது சாத்தியமில்லாத ஒன்று. அனைவரும் நகர வேண்டிய புள்ளி அதுதான்.
ஒரு திட்டம் இன்னதென அரசின் நாளிதழ்களிலோ அரசாணையாகவோ வெளியாகாத நிலையில் ஓர் அந்நிய கம்பெனி தனது அதிகாரபூர்வமான வலைதளத்தில் உங்களுக்கான குடிநீரை நான்தான் நிர்வாகம் செய்யப் போகிறேன், அதற்கான பணிகளை விரைவில் தொடங்கப் போகிறேன் என்று அறிவிப்பது பேரதிர்ச்சியாக இருக்கிறது. சுதந்திர இந்தியாவில் இப்படியான அறிவிப்பு முதன்முதலாக இப்போதுதான் வருகிறதென நினைக்கிறேன். இந்த நீர்த் திட்டம் என்னவென்று கேட்கும் உரிமை, ஒவ்வொரு குடிமகனுக்கும் இருக்கிறது. இதைச் சொல்ல வேண்டிய கடமை கருத்துக் கேட்புக் கூட்டங்கள் நடத்தாத அரசுக்கு இன்னும் கூடுதலாக இருக்கிறது. ஆனால் அரசு என்ன செய்கிறதென்றால், என்னவென்று கேட்டால் பதில் சொல்வதற்கு மாறாக வழக்குப் போடுவேன் என்று மிரட்டுகிறது. நாம் தேர்ந்தெடுத்த அரசுதான் இங்கு இருக்கிறதா என்ற சந்தேகத்தை இது இன்னும் வலுப்படுத்துகிறது.
நடந்தால் நாலு வழிச்சாலை, எட்டு வைத்தால் எட்டுவழிச் சாலை, இடது புறம் மீத்தேன் ஆலை, வலது புறம் ஸ்டெர்லைட் ஆலை. இப்போது தமிழ்நாடு பன்னாட்டு நிறுவனங்களின் வேட்டைக் காடாக மாற்றப்பட்டுவிட்டது.
நாம் இணைந்திருக்க வேண்டிய களம் தெளிவாக இருக்கிறது. 
(குறிப்பு: கட்டுரையாளர் ஆங்கிலத்தில் தந்திருந்த பத்திரிகை செய்தி, வாசகர் வசதி கருதி மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது).

Search