COMMUNIST PARTY OF INDIA (MARXIST - LENINIST) - LIBERATION

COMMUNIST PARTY OF INDIA (MARXIST - LENINIST) - LIBERATION, TAMILNADU

Saturday, June 30, 2018

அஞ்ச மாட்டோம் அஞ்ச மாட்டோம் அடக்கு முறைக்கு அஞ்ச மாட்டோம்

போராட்டக்காரர்களில் சிலரை விரல் போன போக்கில் சுட்டுத் தள்ளினால், அடுத்தடுத்து எதிர்ப்பே இருக்காது என்று எதிர்ப்பார்த்திருப்பார்கள்.
மோடியே திரும்பிப் போ என்று சொன்ன தமிழக மக்களை பொருத்தமாக பழிவாங்கிவிட்டோம் என்று உள்ளூர சிரித்திருப்பார்கள்.
இந்த வெற்றிப் பெருமிதம் குறைவாழ்வுடன்தான் முடியும் என தமிழக மக்கள் அழுத்தமாகக் காட்டியிருக்கிறார்கள். அஞ்ச மாட்டோம் அஞ்ச மாட்டோம் அடக்குமுறைக்கு அஞ்ச மாட்டோம், குண்டாந்தடிக்கு அஞ்ச மாட்டோம், சிறை செல்ல அஞ்ச மாட்டோம் என்ற முழக்கத்தை தமிழ்நாடெங்கும் உரத்து ஒலிக்கச் செய்கிறார்கள். மோடியும் பழனிச்சாமியும் ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்துக் கொண்டு ஒப்பாரி வைக்க இடம் பார்க்க வேண்டும்.
அடுத்தடுத்து போராட்டங்கள். அடிக்கிறார்கள். அடியை வாங்கிக் கொண்டு தங்கள் உரிமைகளை விட்டுத் தரப்போவது இல்லை என்று உறுதியாக எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள் தமிழக சாமான்ய மக்கள். உண்மையில் முன்னேறிச் செல்கிறார்கள். ஆட்சிக் காலம் முடிகிற நேரத்தில் நிதி ஒதுக்கீடு இல்லாத எய்ம்ஸ் அறிவிப்புக்கு எல்லாம் மயங்குவதாய் இல்லை. சமூக விரோதிகள் ஊடுருவிவிட்டார்கள் என்று திரும்பத்திரும்பச் சொன்னாலும் நானும் சமூக விரோதிதான் என்று தமிழகமே சொல்கிறது. ஒடுக்குமுறை நடவடிக்கைகள் முற்போக்கு சக்திகளின் வேலைப் பளுவைச் சற்று குறைக்கின்றன. பாசிச சக்திகள் எந்த அளவுக்கு ஆபத்து என்று எடுத்துச் சொல்ல வேண்டிய நேரத்தில், மக்கள் மத்தியில் அவர்களே போதுமான அளவுக்கு அம்பலப்பட்டுக் கொள்கிறார்கள். மோடி தமிழ்நாட்டுக்கு மீண்டும் வருகிறாராம். பார்ப்போம்.
மன்னராட்சி கொடுங்கோன்மையை எடுத்துச் சொல்ல இம் என்றால் சிறைவாசம், ஏனென்றால் வனவாசம் என்று பாரதி சொன்னான். ஓர் எதுகை மோனைக்காகக் கூட அவன் அப்படி சொல்லியிருக்கக் கூடும். அங்கேயும் உரிமை கேட்டு வந்த மக்களை மன்னனின் படை சுட்டுக் கொன்றது. இங்கே, மக்கள் தேர்ந்தெடுத்த ஓர் ஆட்சியில் எட்டு என்றால் தேசத்துரோகச் சட்டம், தூத்துக்குடி என்றால் தேசப் பாதுகாப்புச் சட்டம், எதிர்ப்பு என்றால் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் பாய்கிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி நடக்கும்போது, தமிழகராதியில் அந்தச் சொற்களுக்கு தடை விதிக்கப்பட்டுவிட்டது.
ஒரு சுவரொட்டி அச்சிட முடியவில்லை. தூத்துக்குடிக்கும் எட்டுக்கும் தொடர்பில்லாத, வேறு ஓர் இடத்தில் நடந்த சாதிவெறி தாக்குதலுக்கு நியாயம் கேட்டு ஆர்ப்பாட்டம் நடத்த துண்டறிக்கை அச்சடித்துத் தர அச்சகங்கள் அஞ்சுகின்றன. மறுக்கின்றன. அறிவிக்கப்படாத அவசர நிலைக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கேட்டால், தூத்துக்குடி பற்றி, எட்டு வழிச்சாலை பற்றியும் பேச மாட்டோம் என்று எழுதி வாங்கிக் கொண்டு அனுமதி தருகிறார்கள். தெருமுனைக் கூட்டங்களில் கூட இந்தச் சொற்களுக்கு தடை விதிக்கப்பட்டுவிட்டது.
இந்தத் தாக்குதல்கள், ஒடுக்குமுறை நடவடிக்கைகள், ஜனநாயக உரிமை வெட்டு ஆகியவை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றம் அமர்வில் இருக்கும்போதே நடக்கின்றன. அதற்கு முன்னும் பின்னும் மிகச் சில நாட்கள் இடைவெளியில் நடக்கின்றன. சட்டமன்றத்தில் கேள்வி எழுமே பதில் சொல்ல நேருமே என்ற எந்த தயக்கமும் பழனிச்சாமி அரசாங்கத்துக்கு இல்லை. அடிமைகள், எடுபிடிகள், மிதியடிகள் அதிகாரம் இழந்தவர்கள். தமிழ்நாட்டின் கெடுகாலம், அதிகாரம் இழந்த அடிமைகள், என்றும் அடிமையாக தொடர்வேன் என உறுதியளித்தன் பேரில் ஆட்சியாளர்கள்.
விளைவு, ஆளுநருக்கு கருப்பு கொடி காட்டினால் ஏழு ஆண்டுகள் சிறை என்று ஆளுநரே அறிவிக்கிறார். வட மாநிலங்களில், குறிப்பாக, மேற்கு வங்கத்தில் கொடும்பாவி கொளுத்தும் போராட்டம் நடத்துவதில் பெரிய அளவுக்கு கெடுபிடி இருப்பதில்லை. தமிழ்நாட்டில் நீண்ட நாட்களாகவே கொடும்பாவி கொளுத்தினால் கைது, நீதிமன்றக் காவல் என்ற நிலை உள்ளது. வேறுவேறு விதமான போராட்ட வடிவங்கள் இருப்பதால் ஒரு பெரிய விசயமாக அது இருக்கவில்லை. இன்று கருப்புக் கொடி காட்டாதே என்று ஆளுநர் மிரட்டும் அளவுக்கு நிலைமை தலைகீழாக மாறிவிட்டது.
துவக்கத்தில் தாங்களாக நேரடியாகப் பேசத் தயங்கியவர்கள், வசனங்களுக்கு வாய் அசைக்கும் ஒருவரை அமர்த்தி சூழல் எப்படி என பரிசோதித்துப் பார்த்தனர். அடுத்தடுத்து பேசத் துவங்கிவிட்டனர். பொன்.ராதாகிருஷ்ணன் தினமும் ஒரு முறையாவது தொலைக்காட்சியில் தோன்றி தமிழகம் சமூகவிரோதிகளின், தீவிரவாதிகளின் புகலிடமாகிவிட்டது என்று சொல்லிவிடுகிறார். அவர் பேசப் பேச கைது நடவடிக்கைகள் அக்கம்பக்கமாக நடந்து கொண்டே இருக்கின்றன. உண்மையில் மக்கள் மீது இன்னும் ஒரு பெரும் தாக்குதல் தொடுக்க பழனிச்சாமி அரசு தயாராகிவருவது போல் தெரிகிறது. என்றோ நடந்த போராட்டத்துக்காகப் போடப்பட்ட வழக்கில் தூத்துக்குடிக்குச் சென்ற வேல்முருகன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார். சேலம் மக்களுடன் போராட்டத்தில் நின்ற வளர்மதி கைது செய்யப்பட்டு, பிணையில் விடப்பட்டு, காவல்துறை ஒடுக்குமுறைக்கு எதிராக ஒரு கூட்டத்தில் பேசினார் என்று சொல்லப்பட்டு மீண்டும் கைது செய்யப்படுகிறார். பியுஷ் மனுஷ் கைது செய்யப்படுகிறார். தூத்துக்குடி மக்களுக்காக நீதிமன்றத்திலும் போராடும் வழக்கறிஞர் வாஞ்சிநாதன் சென்னையில் கைது செய்யப்படுகிறார். திருவண்ணாமலை மாவட்டத்தில் எட்டு வழிச் சாலையால் பாதிப்புக்கு உள்ளாக்கப்படவுள்ள விவசாயிகளைச் சந்திக்க ஒரு கிராமத்துக்குள் நுழைந்த உடனேயே இகக மாலெ மத்தியக் குழு உறுப்பினர் தோழர் பாலசுந்தரம், மாநிலக் குழு உறுப்பினர் தோழர் வெங்கடேசன் ஆகியோர் இன்னும் நான்கு பேருடன் சேர்த்து கைது செய்யப்படுகின்றனர். கிராமத்துக்குள் வந்ததே குற்றம், விவசாயிகளைச் சந்திக்க முயற்சி செய்ததே குற்றம் என்று சொன்ன காவல்துறை வழக்கு பதிவு செய்த பின்னரே அவர்களை விடுவித்துள்ளது. தமிழ்நாட்டில் நிலவுகிற அறிவிக்கப்படாத அவசர நிலையைக் கண்டித்து ஜ÷ன் 25 அன்று நெல்லையில் ஆர்ப்பாட்டம் நடத்த ஜ÷ன் 18 அன்றே அனுமதி கேட்டு கடிதம் கொடுத்துள்ள நிலையில், ஜ÷ன் 25 வரை ஏதும் சொல்லாத காவல்துறை ஜ÷ன் 25 அன்று மக்கள் கூடிவிட்ட பிறகு, ஆர்ப்பாட்ட இடத்துக்கு வந்து காலை 10 மணிக்கு அனுமதி மறுக்கப்படுவதாகச் சொல்கிறது. நியாயம் கேட்ட இககமாலெ மத்தியக் குழு உறுப்பினர் தோழர் பாலசுந்தரம், மாநிலக் குழு உறுப்பினர்கள் தோழர்கள் சங்கரபாண்டியன், ரமேஷ் உள்ளிட் டவர்களை கைது செய்கிறது. வழக்கறிஞரான தோழர் ரமேஷிடம் வழக்கறிஞர் என்றால் நீ நீதிமன்றத்துக்குத்தானே செல்ல வேண்டும், இங்கு ஏன் வந்தாய் என்று ஒருமையில் பேசி கையைப் பிடித்து இழுத்திருக்கிறது. அடுத்த இரண்டு நாட்களில் இககமாவின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தோழர் டில்லிபாபுவை செங்கம் காவல்துறை கைது செய்கிறது. கைது செய்வதற்கு முன் தாக்குதல் நடத்துகிறது. அவரை நீ அக்யூஸ்ட்தானே என்கிறது. இயக்குநர் கவுதமனை வீட்டுக்குள் புகுந்து கைது செய்கிறார்கள். இழுத்துச் செல்கிறார்கள். புதிய தலைமுறை தொலைக்காட்சி மீது வழக்குக்கு அடுத்து திருவண்ணாமலையில் நில அளவீடு செய்யப்படுவதை படம்பிடித்த சன் தொலைக்காட்சி செய்தியாளர் காவல்துறையினரால் தாக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். வெறுமனே கைது செய்வது என்பதுடன் அவமானப்படுத்துவது, அச்சுறுத்துவது என்பதும் காவல்துறையினரின் அணுகுமுறையாக இந்தச் சுற்று நடவடிக்கைகளில் மாறியுள்ளது. போலீஸ் ராஜ்ஜியத்தை கட்டவிழ்த்துவிட்டு எல்லா விதமான எதிர்ப்புகளையும் கட்டுக்குள் கொண்டு வந்துவிட, பாசிச சக்திகளின் கட்டளைக்கேற்ப அடிமை, எடுபிடி, மிதியடி அரசு முயற்சி செய்கிறது.
தங்கச்சிமடத்தில் கழிப்பறை கட்டப் போன இடத்தில் என்றோ, யாரோ புதைத்து வைத்த ஆயுதக் குவியல் இருப்பது பாசிச கூப்பாடுகளுக்கு வசதியாகப் போய்விட்டது. இந்த முறை பொன்.ராதாகிருஷ்ணனுடன் எச்.ராஜாவும் சேர்ந்துகொள்கிறார். வெறும் வாயையே மென்று கொண்டிருந்தவர்களுக்கு எலும்பு கிடைத்துவிட்டது. பாசிச வெறி தலைக்கேறியுள்ள கூட்டம், வேட்டை ஆரம்பமாகட்டும் என்கிறது. கிறித்துவர்கள், தீவிரவாதிகள், தமிழ்த் தேசியவாதிகள்தான் தமிழ்நாட்டில் நடக்கும் போராட்டங்களுக்குக் காரணம் எனச் சொல்லவும் துவங்கிவிட்டனர்.
தமிழ்நாட்டுக்கு இந்தத் திட்டம் வேண்டாம் என்று மக்கள் விரோதத் திட்டங்களுக்கு எதிராகப் போராடுபவர்கள் தனித்தமிழ்நாடு கேட்கின்றனர் என்று முத்திரைக் குத்தி தனிமைப்படுத்தப் பார்க்கின்றனர். தமிழ்நாட்டில் நடக்கும் போராட்டங்கள் தமிழக உரிமைகளை, சிதைக்கப்படும் வாழ்வாதாரத்தை மீட்கும் நோக்கம் கொண்டவையாகத்தான் இருக்கின்றனவே தவிர, மக்கள் ஈடுபடும் போராட்டங்கள் எவற்றிலும் இது வரை தனித்தமிழ்நாடு வேண்டும் என்ற குரல் ஒலிக்கவில்லை. பொய் சொல்லி மீண்டும் பொய் சொல்லி மீண்டும் மீண்டும் பொய்பொய்யாய்ச் சொல்லி பிறகு அதுதான் உண்மை என்று சொல்லி மக்களை பிளவுபடுத்துவது அவர்களுக்கு புதிய உத்தி அல்ல. ஜெர்மனியின் இனவெறி ஒடுக்குமுறை வரலாற்றில் இருந்து பாடமும் உத்வேகமும் பெற்றவர்கள் அவர்கள்.
மோடி - பழனிச்சாமி அரசின் ஒடுக்குமுறை நடவடிக்கைகள் தீவிரமடைந்து வரும்போது, பிரதான எதிர்க்கட்சியின் எதிர் நடவடிக்கைகள் போல் தோன்றுபவை மக்கள் மத்தியில் கேள்விகளை எழுப்புகின்றன. தமிழ்நாடு சட்டமன்றத்தில் திமுகவின் உதயசூரியன், எட்டு வழிச்சாலையை தமது கட்சி எதிர்க்கவில்லை என்கிறார். தமிழ்நாடு கொந்தளித்துக் கொண்டிருக்கும்போது, துரைமுருகன், ஆளும் கட்சியையும் எதிர்க்கட்சியையும் சேர்ந்த அனைவரும் நடிகர்களே என்று பேசி எதிர்ப்பின் தீவிரம் தணிய வழி செய்கிறார். ஆளுநரது நடவடிக்கைகள் கண்டனத்துக்கு உரியவை. எதிர்க்கப் பட வேண்டியவை. அவற்றுக்கான எதிர்ப்பின் அளவு, வீச்சு, முக்கியத்துவம் ஆகியவற்றைக் காணும்போது, முதன்மையான எதிர்க்கட்சியான திமுக எட்டு வழிச்சாலை பிரச்சனையில் போதுமானதைச் செய்யவில்லை என்ற கருத்து வலுவாக முன்வரத்தானே செய்கிறது.
தூத்துக்குடியில் தீவிரவாதிகளும் சமூக விரோதிகளும் போராட்டங்களை தூண்டி வன்முறையில் ஈடுபட்டார்கள் என்று சொன்னவர்களால் இப்போதும் அதே கதையை சொல்ல முடியவில்லை. எட்டுவழிச்சாலை போராட்டங்களை ஒட்டி சமூக விரோதிகளை கைது செய்திருப்பதாக இது வரை பழனிச்சாமி அரசால் சொல்ல முடியவில்லை. போராட்டக்காரர்கள், எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் கைது செய்யப்படுகிறார்கள். எதிர்ப்பு தெரிவித்தால் கைது செய்யப்படுவீர்கள் என்று சொல்லப்பட்டே கைது செய்யப்படுகிறார்கள். தமிழகத்தில் நடக்கும் போராட்டங்களுக்கு சமூக விரோதிகள், தீவிரவாதிகள் காரணம் என்று பாசிச பக்தர்கள் சொல்வது பொய் என்பதை இப்போது நடக்கும் ஒடுக்குமுறை நடவடிக்கைகளே மெய்ப்பித்துவிடுகின்றன. கார்ப்பரேட் நலன்களுக்காக மக்கள் போராட்டங்கள் ஒடுக்கப்படுகின்றன என்பதையும் கூடவே மெய்ப்பிக்கின்றன.

Search