COMMUNIST PARTY OF INDIA (MARXIST - LENINIST) - LIBERATION

COMMUNIST PARTY OF INDIA (MARXIST - LENINIST) - LIBERATION, TAMILNADU

Saturday, June 16, 2018

சீற்றமுற்றுள்ள கச்சநத்தம் அடங்க மறுக்கும்

சிவகங்கை மாவட்டம் கச்சநத்தத்தில் மே 28 அன்று தலித்துகள் மேல் ஆதிக்க சாதியினர் நடத்திய கொடூரமான தாக்குதலில் நிகழ்விடத்திலேயே இரண்டு பேர் கொல்லப்பட்டனர்.
கொடுங்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் ஒருவர் இரண்டு நாட்கள் கழித்து மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
தி இந்து ஆங்கில நாளேட்டில் வால்டர் ஸ்காட் கச்சநத்தம் பற்றி எழுதி ஜ÷ன் 4 அன்று வெளியாகியுள்ள அறிக்கை, பகுதியின் தலித்துகள், தங்கள் பாசனத்துக்கான தண்ணீரை நிறுத்திவிட்டால், தங்கள் பயிர்களை அழித்துவிட்டால் என்ன செய்வது என்பதனால், நீண்ட நாட்களாக ஆதிக்க சாதியினரால் சாதியாதிக்க துன்புறுத்தல்கள் இருந்தாலும் அவர்களால் தாக்குதல்களுக்கு உள்ளாகிவிடக் கூடாது என்பதற்காக அமைதியாக இருந்ததாகவும், ராணுவத்தில் பணியாற்றும் தலித் ஒருவர், கோயில் விழாவுக்காக ஊர் திரும்பியபோது, ஆதிக்க சாதி இளைஞர்களை முறைத்துப் பார்த்ததாக சொல்லப்படும் பிரச்சனை, வெட்டு, தாக்குதல் படுகொலை என சென்றுவிட்டதாகவும் சொல்கிறது.
திருப்பாசேத்தி காவல்நிலையத்தில் புகார் தர சென்றபோது, கச்சநத்தம் தங்கள் அதிகார எல்லைக்குள் வரவில்லை என்று பழையனூர் காவல்நிலையத்தில் புகார் தரச் சொல்லி காவல் துறையினர் அனுப்பியிருக்கிறார்கள். பழையனூர் காவல்நிலையத்தினர், தாக்குதல் நடத்தியவர்களுக்கு ஆதரவாக இருந்திருக்கிறார்கள் என்ற அடிப்படையில் அவர்களில் இரண்டு பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்றும் அறிக்கை சொல்கிறது.
தலித்துகள் பொய்யாக புகார் தருகிறார்கள், எனவே, வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்தோம் என்று உச்சநீதிமன்றம் சொல்கிறது. திருப்பாச்சேத்தி காவல்நிலைய அதிகாரிகளே உடனடியாக நடவடிக்கை எடுத்திருந்தால், உடனடியாக, சட்டப்படியான கைதுகள் நடந்திருந்தால், கச்சநத்தம் தலித்துகள் உயிரை, உடமைகளை இழந்திருக்க மாட்டார்கள். இன்னும் சிலர் கொடுங்காயங்களுக்கு உள்ளாகியிருக்க மாட்டார்கள்.
இந்த விசயங்கள் பொதுவாக சொல்லப்படுகின்றன. ஆனால், பகுதியைச் சேர்ந்த தலித்துகள் பிரச்சனை இன்னும் தீவிரமானது என்று சொல்கிறார்கள். கச்சநத்தத்தில் 32 தலித் குடும்பங்கள் உள்ளன. அனைத்து குடும்பங்களிலும் குறைந்தபட்சம் 4 ஏக்கர் முதல் சொந்தமாக நிலம் உள்ளது. விவசாயம் செய்கிறார்கள். சொந்த வீடுகள் வைத்திருக்கிறார்கள். பிள்ளைகள் அனைவரும் படித்தவர்கள். துணை ஆட்சியர் பதவி முதல் பல்வேறு உயர்பதவிகளில், அரசுப் பணிகளில் இருக்கிறார்கள். அவர்கள் மத்தியில் மருத்துவர்கள் உண்டு. ஆதிக்க சாதியினர் யாரையும் சார்ந்து வாழ வேண்டும் என்ற அவசியம் கச்சநத்தம் தலித் மக்களுக்கு இல்லை. இந்த சுயசார்பு மிக இயல்பாக, அதற்கே உரிய சுய கவுரவத்தை, அறுதியிடலை தலித் மக்கள் மத்தியில் உருவாக்கியிருக்கிறது.
கச்சநத்தத்தில் உள்ள கருப்பண்ணசாமி கோயிலில் தலித் மக்கள் நடத்தும் திருவிழாவில் ஆதிக்க சாதியினருக்கு முதல் மரியாதை தரும் பழக்கத்தையும் தலித் மக்கள் தொடரத் தயாராக இல்லை.
இந்த கவுரவமும் அறுதியிடலும் ஆதிக்க சாதியினருக்கு உறுத்தலாகவே இருந்து வருகிறது. பக்கத்தில் ஆவாரங்காடு என்ற பகுதியில் வசிக்கும் 1200 குடும்பங்கள் கொண்ட ஆதிக்க சாதியினரின் இரண்டு குடும்பங்கள் கச்சநத்தம் பகுதியில் வசிப்பதாக சொல்லப்படுகிறது. உண்மையில் அந்த இரண்டு வீடுகளில் யாரும் குடியிருப்பதில்லை. கச்சநத்தத்துக்குள் காவல்துறையினர் வருவதே இல்லை என்பதால், ஆதிக்க சாதியினரின் சமூக விரோத செயல்களுக்கு, கஞ்சா விற்பது, மது அருந்துவது, சீட்டு ஆடுவது போன்ற செயல்களுக்கு அந்த இரண்டு வீடுகளை ஆதிக்க சாதியினர் பயன்படுத்தி வருகின்றனர். பொருளாதாரரீதியாக முன்னேறி, அறுதியிடும் தலித்துகளை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளஆதிக்க சாதியினர் அவ்வப்போது சிறுசிறு பிரச்சனைகளை உருவாக்குவது, தலித்துகளை அச்சத்திலேயே வைத்திருப்பது, அந்தப் பகுதியில் தொடரும் வாழ்க்கையாக தலித்துகளுக்கு  அமைந்துள்ளது. ஆதிக்க சாதியினரின் சமூக விரோத நடவடிக்கைகளுக்கும் தலித்துகள் அவ்வப்போது தங்கள் எதிர்ப்பை, ஆட்சேபணைகளை தெரிவித்து வருகிறார்கள்.
கச்சநத்தத்தைச் சேர்ந்த சண்முகநாதன் எம்பிஏ படித்தவர். அவரது பெற்றோர் இருவரும் மானாமதுரையில் வேலை பார்ப்பவர்கள். கச்சநத்தத்தில் உள்ள தனது 26 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்ய அவர் கச்சநத்தத்துக்கு வந்திருந்தார். ஆதிக்க சாதியினர் தாக்குதல் நடத்திய மே 28 அன்று இரவு தலித் மக்கள் அவரது வீட்டில்தான் இருந்தார்கள். சண்முகநாதன் மிகவும் கொடூரமாக தாக்கப்பட்டு நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். தலித் ஒருவர் எம்பிஏ படிக்கலாமா? படித்துவிட்டு புத்திசாலித்தனமாக விவசாயமும் பார்க்கலாமா? சாதியாதிக்க வெறியர்கள் கொன்றுவிட்டார்கள்.
கச்சநத்தத்துக்குள் அடிக்கடி வந்துபோகும், கச்சநத்த தலித் மக்களோடு நன்றாக பழகும், ஆதிக்க சாதியைச் சேர்ந்த வயதான பெண் கதவைத் தட்ட, அந்த இரவு வேளையில் பழக்கப்பட்ட குரல் வெளியில் கேட்கிறதே என்று கதவுகளைத் திறக்க, தலித்துகள் வெட்டப்பட்டிருக்கிறார்கள். கச்சநத்தத்தில் இருந்த ஒரு நாயைக் கூட வெட்டிப் போட்டிருக்கிறார்கள். தாக்குதல், சூறையாடல் முடித்துத் திரும்பும்போது, நன்கு வளர்ந்த ஆட்டுக் கிடாயை தூக்கித் தோளில் போட்டுக் கொண்டு சென்றிருக்கிறார்கள். தாக்குதல் நடந்த சில நாட்களுக்குப் பிறகு கச்சநத்தத்தின் மருத்துவ மாணவர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டதாக சொல்லப்படுகிறது.
மொத்த தாக்குதலும் தலித் மக்கள் தலை தூக்கி விடக் கூடாது, தங்கள் கட்டுப்பாட்டை மீறிவிடக் கூடாது என்பதற்காகவே திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ளதாகவும், இந்த உண்மையை பின்னுக்குத் தள்ளவே, கால் மேல் கால் போட்டு உட்கார்ந்ததால் தாக்குதல் என்று சொல்லப்படுவதாகவும், கச்சநத்தத்தில் தேநீர் கடை இல்லை, ஆவாரங்காட்டில் உள்ள தேநீர் கடைக்குப் போய் தலித்துகள் கால் மேல் கால் போட்டு உட்காருவது பற்றி யோசிக்கக் கூட முடியாது என்றும் சொல்லப்படுகிறது. இந்தத் தாக்குதல்களுடன், படுகொலைகளுடன் பிரச்சனை முடிந்துவிடாது என்றும் தலித்துகள் ஆதிக்க சாதியினருக்கு அடங்கி நடக்கவில்லை என்றால், இது தொடரும் என்றும் அங்குள்ள தலித்துகள் சொல்கின்றனர்.
மக்கள் பிரச்சனைகளை, அவர்கள் குண்டடிபட்டு, தற்கொலை செய்துகொண்டு, வெட்டப்பட்டு மடிவதை வேடிக்கை மட்டும் பார்ப்பது என்று உறுதி பூண்டு விட்ட ஓர் அரசு தமிழக அரசு. கறாரான நடவடிக்கை அடுத்து வரட்டும், காட்டமாக அறிக்கை தருவதும் அடுத்து வரட்டும், வெட்டப்பட்டு, உயிரிழப்புகளுக்கு ஆளாகி, உடமைகளை இழந்து, உடலுறுப்புகள் இழந்து நிற்கும் மக்களுக்கு ஆறுதல், உறுதி, பாதுகாப்பு என்று எதையும் தரத் தயாராக இல்லாத, குற்றமய அலட்சியத்தின் உச்சாணிக் கொம்பில் அமர்ந்திருக்கிற அரசு இது.
தலித் மக்கள் சுயசார்பாக அறுதியிட்டு நின்றார்கள் என்பதால்தான் நாயக்கன்கொட் டாய் சூறையாடப்பட்டது. கொடியன்குளத்தில் அறுதியிட்டு எழுந்த, ஆதிக்க சாதியினர் தயவின்றி வாழ்க்கை நடத்திய தலித்துகளுக்கு பாடம் புகட்டுவதாகச் சொல்லித்தான் தாக்குதல் நடத்தப்பட்டது. குடிநீருக்கு பயன்படும் கிணற்றில் கூட விஷம் ஊற்றினார்கள். கொடியன் குளமோ நாயக்கன்கொட்டாயோ, தலித்துகளின் அறுதியிடலுக்கான அணிவகுப்பை தடுத்து நிறுத்திவிடவில்லை. சாதியாதிக்கத்துக்கு சாவு மணி அடிக்கும் போராட்டத்தில் மேலும் அழுத்தத்துடன் விசையுடன் முன்னேறிச் செல்லும் உறுதியையே தந்தன. கச்சநத்தமும் அந்த வரிசையில் சேருகிறது. இப்போது கூட, கால் மேல் கால் போட்டு உட்கார்ந்ததுதான் பிரச்சனை என்று சொல்லி இன்னும் தீவிரமான பிரச்சனையை திசைதிருப்புகிறார்கள் என்றுதான் அங்கு சீற்றம். அடங்க மறுத்து அத்துமீறுபவர்கள் அவர்கள்.

Search