COMMUNIST PARTY OF INDIA (MARXIST - LENINIST) - LIBERATION

COMMUNIST PARTY OF INDIA (MARXIST - LENINIST) - LIBERATION, TAMILNADU

Monday, May 14, 2018

பொய் பேசும் இசுலாமிய வெறுப்பு வளர்க்கும் 
நடிப்பு தேசியம் பரப்பும் மோடி

எஸ்.குமாரசாமி

மோடி கூசாமல் பொய் பேசுகிறார். கையும் களவுமாகப் பிடிபடும் மதவெறிக் குற்றவாளிகளுக்கு தண்டனை இல்லாத ஆட்சி நடத்தும் மோடிக்கு, பொய் பேசுவது இயல்பானது.
இதிகாசப் புராணக் கதைகளை வரலாறாக நம்பச் சொன்னவர்தானே மோடி. புராண காலங்களில் நம் நாட்டில் பிளாஸ்டிக் சர்ஜரி நடந்தது, ஸ்டெம் செல் தெரபி செய்யப்பட்டது என்றவர் அல்லவா மோடி? பிள்ளையார் முகத்தையும் கவுரவர் பிறப்பையும் வைத்து புராண கால அறிவியல் பற்றிக் கதை சொன்னவர் மோடி. ‘உங்களை அபத்தங்களை நம்ப வைப்பவர்கள், உங்களை வன்கொடுமைச் செயல்களில் ஈடுபட வைப்பார்கள்’ என பிரெஞ்சு சிந்தனையாளர் வால்டேர் சொன்னது நினைவுக்கு வந்து நம்மை அச்சுறுத்துகிறது.
1948 போரில் இந்திய இராணுவத்துக்குத் தலைமை தாங்கிய பாகிஸ்தானை வென்ற  கர்நாடகத்தின் புதல்வர் ஜெனரல் திம்மப்பா  பிரதமர் நேருவால், இராணுவ அமைச்சர் கிருஷ்ண மேனனால் அவமதிக்கப்பட்டார்; அதனால் அவர் ராஜினாமா செய்தார். இது மோடி கர்நாடகத் தேர்தலில் சொன்ன ஒரு பொய். 1) 1948 இந்தோ - பாக் போர் நேரத்தில் இந்திய இராணுவத்திற்கு ஜெனரல் திம்மப்பா தலைமை தாங்கவில்லை. தலைமை தாங்கியது தளபதி ராய் புச்சர். 2) அப்போதைய இராணுவ அமைச்சர் கிருஷ்ண மேனன் அல்ல; இராணுவ அமைச்சர் சீக்கியரான சர்தார் பல்தேவ்சிங். 3) நேரு அரசாங்கம் ஜெனரல் திம்மப்பாவை  1953ல் மிகவும் கவுரவமாக கொரியா அனுப்பி சமாதானப் பணிகளில் ஈடுபடுத்தியது. 1954ல் அவருக்கு பத்ம பூஷன் பட்டம் வழங்கியது. அவரிலும் மூத்தவர்களான லெப்டினன்ட் ஜெனரல் சந்த் சிங், குல்வந்த் சிங் ஆகியோரைத் தாண்டி ஜெனரல் திம்மப்பாவை தலைமை தளபதியாக்கியது. அவர் ராஜினாமா செய்ய முன்வந்தும், நேரு கேட்டுக் கொண்டதால், மே 1961 வரை பதவியில் இருந்தார்.
இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையில் நடந்த 1962 போரில் தளபதியாகப் பணியாற்றிய கர்நாடக தளபதி கரியப்பாவை நேரு அரசாங்கம் அவமதித்து. இது ஒரே உரையில் மோடி சொன்ன இரண்டாவது பொய். சீனப் போருக்கு 9 வருடங்கள் முன்பே கரியப்பா ஓய்வு பெற்றுவிட்டார். கரியப்பாவுக்கு அடுத்து நான்காவதாக வரிசையில் வந்த தளபதிதான் சீனப் போர் நேரத்தில் பொறுப்பில் இருந்தார். நேரு அரசு அவர் பணிக்காலம் முடிந்த பிறகு அவரை ஆஸ்திரேலிய தூதராக நியமித்தது. ராஜீவ் காந்தி அரசு அவருக்கு ஃபீல்ட் மார்ஷல் பதவி தந்து கவுரவித்தது.
எப்படி ஆதாரபூர்வமாக சிக்கும் வாய்ப்பு இருந்தும் மோடி பொய் சொல்கிறார்? அவர் பாசிஸ்ட் என்பதால்தான். அவருக்கு உண்மை ஒரு பொருட்டல்ல. அந்த நேர ஆதாயத்தை அவர் அடைந்துவிட்டார். வெள்ளையா இருப்பவன் பொய் சொல்ல மாட்டான் என நம்பும் பொது புத்தி, பிரதமர் பொய் சொல்வார் என நினைத்துக் கூட பார்க்காது என மோடி நம்புகிறார்.
காங்கிரஸ் தலைவர்கள், சிறையிலிருந்த பகத்சிங் போன்ற நாட்டு விடுதலைப் போராட்டக்காரர்களைச் சிறைக்குப் போய்ச் சந்திக்கவில்லை என்றார் மோடி. பகத்சிங்கை நேரு சிறையில் சந்தித்தது பற்றிய ஆதாரங்கள் வெளி வந்துவிட்டன. மோடிக்கும் நாகரிக அரசியலுக்கும் இடையில் பெரும் தூரம் இருப்பதால், இன்று வரை மோடி இந்த தவறுகளை ஒப்புக்கொண்டு வருத்தம் தெரிவிக்கவில்லை. தாய் நாடு, இராணுவம், தேசப்பற்று எல்லாமே கார்ப்பரேட் காவி அரசியலுக்காகத்தானே!
குஜராத் தேர்தலில் பாகிஸ்தான், முஸ்லிம் ஆபத்து, பாகிஸ்தானியர்கள் காங்கிரசார் சந்திப்பு என்று பீதியை கிளப்பியவர், கர்நாடகத்தில், இசுலாமிய திப்பு சுல்தான் இந்துக்களை கொன்ற கொடூர சர்வாதிகாரி, காங்கிரஸ் திப்புசுல்தான் பெருமை பேசும் இசுலாமிய அடி வருடி என, மதவெறி நஞ்சைப் பரப்பினார்.
தன்னம்பிக்கையும் துணிச்சலும் இல்லாத காவிக் கூட்டம், பொய் பேசும். மதவெறி பரப்பும். போலி தேசிய நாடகமாடும்.

Search