COMMUNIST PARTY OF INDIA (MARXIST - LENINIST) - LIBERATION

COMMUNIST PARTY OF INDIA (MARXIST - LENINIST) - LIBERATION, TAMILNADU

Tuesday, May 29, 2018

சுதந்திர பாலஸ்தீனம் வேண்டும்

எஸ்.குமாரசாமி

மத்தியதரைக் கடலின் கரையில் உள்ள காசா திட்டு பாலஸ்தீன பூமியாகும். இங்கு 23 லட்சம் பேர் வாழ்கிறார்கள்.
ஒரு சதுர மைலில் 13000 பேர் வாழ்கிறார்கள். காசா, உலகின் பெரிய திறந்தவெளி சிறைச்சாலை. இஸ்ரேலும் எகிப்தும் காசாவை மூடும் சுவர்கள். காசாவின் 95% நீர் குடிக்க முடியாதது. நாளொன்றில் நான்கு மணிநேரம்தான் மின்சாரம் இருக்கும். அங்குள்ள 50% பேருக்கு வேலைவாய்ப்பில்லை. 50% குழந்தைகள் ரத்த சோகையால் பீடிக்கப்பட்டவர்கள். காசாவை நிரந்தர முற்றுகையில் வைத்துள்ள இஸ்ரேல் விதித்திருக்கும் பொருளாதாரத் தடைகளால், காசா இந்த பூமியின் நரகமாக மாறியுள்ளது. காசாவின் மருத்துவமனைகள், நோயுற்றோரை, காயமடைந்தோரை காப்பாற்ற, சிகிச்சை தர போதுமான மருந்து களோ, படுக்கை வசதிகளோ, மருத்துவர்களோ இல்லாதவை. இஸ்ரேலில் இருந்து விரட்டப்பட்ட 13 லட்சம் பேர் காசாவில் வாழ்கிறார்கள். 1948ல் இஸ்ரேல் நிறுவப்பட்டது முதல், பாலஸ்தீன மக்கள், அவர்கள் வாழ்ந்த பூமியில் இருந்து விரட்டப்பட்டு வருகின்றனர். இப்போது இஸ்ரேலுக்கு மேற்கு கரையில், ஜெருசலேமில், இஸ்ரேலுக்கு வெளியில் காசாவில், லெபனானில் பாலஸ்தீன மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.
மே 14, 1948 அன்று, இஸ்ரேல், ஜியானிச நிறவெறி, இனவெறி ஆட்சியாளர்களால், ஏகாதிபத்திய துணையுடன் நிறுவப்பட்டது. அன்று இஸ்ரேலின் மக்கள் தொகை 8,06,000. 1958ல் இஸ்ரேலின் மக்கள் தொகை 20 லட்சமானது. 1970ல் 40 லட்சம், 1982ல் 50 லட்சம் என உயர்ந்த இந்த மக்கள் தொகை இப்போது 84 லட்சம் ஆகியுள்ளது. 1948ல் இருந்து 70 ஆண்டுகளாக, பல நூற்றாண்டுகளாக வாழ்ந்து வந்த பாலஸ்தீன மண்ணில் இருந்து, அரபு இசுலாமியர்கள் வெளியேற்றப்படுவதும் அய்நா தீர்மானங்களை மீறி, அங்கெல்லாம், உலகெங்குமிருந்து வரும் யூதர்களின், ஆயுதம்தாங்கிய குடியிருப்புகளை இஸ்ரேல் நிறுவுவதும், தொடர்கின்றன.
யூதர்கள் பல நூற்றாண்டுகள் வேட்டையாடப்பட்டதும், 70 லட்சம் யூதர்களை வதை முகாம்களிலும் பிற விதங்களிலும் ஹிட்லர் கொன்று குவித்ததும் நிகழ்ந்த வரலாறுதான். ஆனால், இந்த உண்மைகள், அநீதியான முறையில் இஸ்ரேல் நிறுவப்பட்டதையும், பாலஸ்தீன மக்களை கொன்று குவிக்கும் ஹிட்லராக, 70 ஆண்டுகளாக இஸ்ரேல் இருந்து வரும் உண்மையையும் மறைத்துவிடாது. ஆன்மிகக் கூருணர்வுடன் மானுடத்திடம் ஆழ்ந்த அன்பு காட்டுவதுதான் யூத மத அறம் என நூறுநூறு ஆண்டுகளாக பெருமை பேசியவர்கள், அரசியல் யூதமயமான ஜியானிசத்தை நிறுவியபோது, அது இனவெறி, இனஒதுக்கல் நச்சுமரமாக ஓங்கி உயர்ந்து வளர்ந்துவிட்டது. இன்று உலகத்தின் எட்டாவது மிகப்பெரிய ஆயுத ஏற்றுமதியாளராக, உலகத்தின் 16ஆவது வலிமையான ராணுவமாக இருக்கிற இஸ்ரேல், தெளிந்த சிந்தனை யோடு, நிராயுதபாணிகளைக் கொல்ல சற்றும் தயங்குவதில்லை. உலகத்தின் கொலைகார, குற்றவாளி நாடுகளில் முதலிடத்தை அய்க்கிய அமெரிக்காவும் இரண்டாவது இடத்தை இஸ்ரேலும் பெற்றுள்ளன. முதல் இரண்டு கொடி யவர்கள் நெருக்கமும் அயல்விவகாரக் கொள்கை அய்க்கியமும் வியப்புக்குரியவை அல்ல.
1948, மே 15 அன்று, பாலஸ்தீன மக்கள், இஸ்ரேலில் இருந்து பல லட்சக்கணக்கில் வெளியேற்றப்பட்டார்கள். பாலஸ்தீனம் எங்கள் பூமி, எங்கள் பூமியில் இருந்து நாங்கள் எங்கும் செல்ல மாட்டோம், எங்கள் பூமியின் எசமானர்கள் நாங்களே என ஒவ்வோர் ஆண்டும், நகாப் என்ற பெயரால் மார்ச் 30 முதல் மே 15 வரை பாலஸ்தீன மக்கள் எதிர்ப்புப் போராட்டங் களை நடத்தி வருகிறார்கள். இந்த ஆண்டு, இந்த எதிர்ப்புக்கு ஒரு கூடுதல் முனைப்பும் தீவிரமும் சேர்ந்தது. இசுலாமியர்களுக்கு மெக்கா மெதி னாவை அடுத்து முக்கிய புனிதத் தலம் ஜெரு சலேம் ஆகும். அவர்கள் நம்பிக்கைப்படி அங்கிருந்தே நபிகள் நாயகம் சொர்க்கம் சென்றார். ஜெருசலேம் யூதர்களுக்கு மட்டுமே சொந்தம், ஜெருசலேம் மீது பாலஸ்தீன மக்களுக்கு, இசுலாமியர்களுக்கு எந்த பாத்தியதையும் கிடையாது என்று காட்ட, ட்ரம்ப் மகள் இவன்கா வருகையுடன், ஜெருசலேமில் அய்க்கிய அமெரிக்கா தனது இஸ்ரேல் தூதரகத்தை நிறுவியது.
பிளவுண்ட தொலைக்காட்சித் திரைகளில் ஒரு புறம் இவன்கா தரப்பு இஸ்ரேலிய தரப்பு சிரித்து கொண்டாடிய காட்சிகளை காண முடிந்தது. திரைகளின் மறுபக்கம் மே 14 துவங்கிய 24 மணி நேரத்தில் எதிர்ப்பு தெரிவித்த 35,000 பாலஸ்தீனர்களில், இஸ்ரேல் எல்லையில் பாதுகாப்பான இடங்களில் நிறுத்தியிருந்த நூறு ஸ்நைப்பர்கள் (தொலைதூர இடங்களை துல்லியமாகக் குறி வைத்து துப்பாக்கியால் சுடுபவர்கள்), 60 பேரை கொன்ற, 2777 பேரை படுகாயங்களுக்கு உள்ளாக்கிய காட்சியை காட்டின. இஸ்ரேல் தரப்பில் எந்த உயிரிழப்பும் காயப்படுதலும் கிடையாது. ஆனால், எல்லையில் நடந்த ‘மோதல்களில்’ 60 பேர் பலி என சில பெரிய சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டு, தங்களது ஊடக அறத்தை வெளிப்படுத்தின. கொல்லப்பட்டவர்களில் எட்டு மாத குழந்தை லைலாவும் உண்டு. அறுவை சிகிச்சையில் இரண்டு கால்களும் அகற்றப்பட்டு சக்கரத் தள்ளுவண்டியில் கவண் கல்லுடன் சென்ற ஹாசன் அபுசலாவும் கொல்லப்பட்டார். மார்ச் 30 முதல் மே 16 வரை, 12 குழந்தைகள் உட்பட 116 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 12,700 பேர் படுகாயங்களுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.
காசாவில் படுகொலை செய்வது இஸ்ரேலுக்கு புதிய விசயமல்ல. 2008ல், 1,400 பாலஸ்தீனர்களைக் கொன்று 5,300 பேரை காயப்படுத்தியது. அப்போது, இஸ்ரேல் தரப்பில், போர் வீரர் அல்லாதோர் 3 பேரும் போர் வீரர்கள் 10 பேரும் இறந்தனர். அந்த 10 பேரும் இஸ்ரேல் குண்டு வீச்சில்தான் இறந்தனர். 2012ல் 220 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர். இஸ்ரேல் தரப்பில் 2 பேர் பலியாயினர். 2014ல் 2,500 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர். இஸ்ரேல் தரப்பில் 66 போர் வீரர்கள் உட்பட 73 பேர் உயிரிழந்தனர். இஸ்ரேலுக்கு உயிர்ப் பலி எண்ணிக்கை ஒரு பொருட்டே அல்ல.
மே 14, 15 படுகொலையை ஜனநாயக சிந்தனை உடையவர்கள், அய்க்கிய அமெரிக்கா, வியட்நாமின் மைலாயில் நடத்திய படுகொலையுடன் ஒப்பிடுகின்றனர். அங்கே, எல்லா அநீதிகளையும் தாண்டி, இறுதியில் சின்னஞ்சிறு வியட்நாமே வென்றது. காசாவில் இஸ்ரேல் நிகழ்த்தி வருகிற இன வெறி, இன ஒதுக்கல் படுகொலைகளை, தென்னாப்பிரிக்க நிறவெறி, நிற ஒதுக்கல் அரசு ஷார்ப்வில்லியில் சொவெட்டோவில் நடத்திய படுகொலைகளோடு ஒப்பி டலாம். ஷார்ப்வில்லியில் தமது நடமாட்டத்தை கட்டுப்படுத்திய விதிகளுக்கு எதிராக கருப்பின மக்கள் 8,000 பேர், 1960ல் போராட்டத்தில் எழுந்தபோது, வெள்ளை நிற வெறி, இனவெறி காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்தி, 69 பேரை படுகொலை செய்தது. 300 பேரை படுகாயங்களுக்கு உள்ளாக்கியது. 16.06.1976ல், சொவெட்டோவில் மொழித் திணிப்புக்கு எதிராக 20,000 கருப்பின பள்ளி மாணவர்கள் எழுச்சியுடன் திரண்டபோது, அவர்கள் மீது நடந்த துப்பாக்கிச் சூட்டில் 176 பேர் கொல்லப்பட்டனர். 700 பேர் வரை உயிரிழந்திருக்கக் கூடும் என்று இன்று வரை பேசப்படுகிறது. ஷார்ப்வில்லி, சொவெட்டோ படுகொலைகளும் எழுச்சிகளும் இனவெறி, நிற ஒதுக்கல் தென்னாப்பிரிக்க அரசின் முடிவின் துவக்கத்தை எழுதின. 13.04.1919 அன்று இந்தியாவில் ஜாலியன்வாலாபாகில் கர்னல் ரெஜினால்ட் டயர் உத்தரவுப்படி நிராயுதபாணியாக இருந்த இந்திய மக்கள் மீது 1650 சுற்று துப்பாக்கிச் சூடு நடந்தது. பிரிட்டிஷ் தரப்பு 379 பேர் உயிரிழந்ததாகச் சொன்னபோது, இந்திய தேசிய காங்கிரஸ், 1000 பேர் வரை கொல்லப்பட்டனர் என்றது. பகத்சிங் இந்த மண்ணை தினமும் பார்த்துக் கொண்டே நாட்டையும் மக்களையும் நேசிக்க மக்கள் விடுதலைக்காகப் போராட தயாரானதாக சொல்லப்படுவதுண்டு. சூரியன் அஸ்தமிக்காத பிரிட்டிஷ் காலனிய சாம்ராஜ்ஜியத்தின் முடிவை ஜாலியன்வாலாபாகும் துரிதப்படுத்தியது.
இஸ்ரேலின் ராணுவ அமைச்சர் லிபர்மேன் காசா திட்டில் ஒருவர் கூட அப்பாவி இல்லை என்றார். (23 லட்சம் மக்களும் கொல்லத்தக்கவர்களே). இஸ்ரேல் பிரதமர் நெதன்யாஹ÷, எதிர்ப்பாளர்கள் பயங்கரவாதிகள், அதனால், அவர்களை சுட்டுக் கொல்கிற ராணுவ வீரர்கள் தங்கள் புனிதக் கடமைகளையே நிறைவேற்று கிறார்கள் என்றார். 2004ல் பேராசிரியர் அமோன் சோஃபர், அப்போதைய இஸ்ரேல் பிரதமர் ஏரியல் ஷரோனிடம் சொன்னார்: ‘காசா திட்டில் இருந்து பின்வாங்கி எல்லா பக்கமும் மூடிவிட்டு, சாவியை வீசி எறிந்துவிடு வோம். மூடுண்ட காசாவுக்குள் 25 லட்சம் மக்கள் வாழ்ந்தால், அதுவே ஒரு மிகப்பெரிய மானுடப் பேரிடராகும். இந்த மக்கள், பித்துப் பிடித்த அடிப்படைவாத இஸ்லாத்தின் உதவியுடன், இப்போது இருப்பதை விட கொடிய மிருகங்களாக மாறுவார்கள். அப்போது, நம் எல்லையின் மீதான அழுத்தம் சகிக்க முடியாததாகி விடும். நாம் உயிரோடு இருக்க வேண்டுமானால், நாம் கொல்ல வேண்டும், கொல்ல வேண்டும், கொல்ல வேண்டும். நாள் முழுவதும் கொல்ல வேண்டும். ஒவ்வொரு நாளும் கொல்ல வேண்டும்’. ‘எனக்கு ஒரே ஒரு கவலைதான் உள்ளது. நமது படையினர் இவ்வளவு கொலைகளைச் செய்துவிட்டு, தங்கள் வீடுகளுக்கும் குடும்பங்களுக்கும் திரும்பி, எப்படி சாதாரண மனிதர்களாக இருக்கப் போகிறார்கள்?’ நெதன்யாஹ÷, ‘ஹமாஸ் பயங்கரவாத இயக்கம், எல்லை வேலிகளைத் தகர்க்க மக்கள் திரளை தூண்டி விட்டு அனுப்புவதால், எங்கள் எல்லையை இறையாளுமையை பாதுகாக்க எதுவும் செய்வோம், சர்வதேச கருத்து எங்களுக்கு ஒரு பொருட்டே அல்ல’ என்றார்.
காசா படுகொலைகள் மட்டுமல்ல, தலை நிமிர்ந்து எழுந்து நின்று அச்சம் என்ற தடைச் சுவர் தாண்டி, பாலஸ்தீன மக்கள் போராடுவதும், உலக மக்களின் மனச்சாட்சியை தொடுகிறது. புறக்கணி (பாய்காட்), முதலீடு அகற்று (டைவஸ்ட்), தடை விதி (சேங்க்ஷன்) என்ற இயக்கம், இஸ்ரேலுக்கு எதிராக நடப்பது வரவேற்கத் தக்கதே. இந்த இயக்கத்தில் இந்தியாவும் இணைய வேண்டுமென வலியுறுத்தப்பட வேண்டும்.
 இசுலாத்தை, அய்க்கிய அமெரிக்காவும் இஸ்ரேலும் சாத்தான்மயமாக்கும்போது, உலகில் 220 கோடி இசுலாமியர்கள் இருக்கின்றனர் என்பதே கூட, ஏகாதிபத்தியவாதிகள் மற்றும் ஜியானிச சக்திகளுக்கு சவக்குழிகள் காத்திருக் கின்றன என்பதை உணர்த்தும்.
70 ஆண்டுகளாகப் போராடி வரும் பாலஸ்தீன மக்களுக்கு, காஷ்மீர மக்களுக்கு உலகின் தலைசிறந்த கம்யூனிஸ்டுகளில் ஒருவரான ரோசா லக்சம்பர்க், தாம் கொல்லப்படுவதற்கு முன்பு 14.01.1919 அன்று ‘பெர்லினில் ஒழுங்கு ஆள்கிறது’ என்ற கட்டுரையில் எழுதிய வரிகள் நம்பிக்கை தரும். உலகெங்கும் ஒடுக்குமுறைக்கு எதிராக எழுகிற மக்களது காஷ்மீரத்து, பாலஸ்தீன மக்களது போராட்டங்கள், ரோசாவின் வரிகளுக்கு உயிர்த்துடிப்பை தந்துகொண்டே இருக்கும்.
‘பெர்லினில் ஒழுங்கு ஆள்கிறது’. முட்டாள் அடிமைகளே! உங்கள் ஒழுங்கு மணல் மேல் கட்டப்பட்டுள்ளது. நாளை, தனது ஆயுதங்களை உரசிக் கொண்டு, புரட்சி மீண்டும் எழுச்சியுறும். நீங்கள் அஞ்சி நடுநடுங்க, அதன் போர்ப் பறைகள், நான் இருந்தேன், நான் இருக்கிறேன், நான் இருப்பேன் என முழங்கும்’.

Search