COMMUNIST PARTY OF INDIA (MARXIST - LENINIST) - LIBERATION

COMMUNIST PARTY OF INDIA (MARXIST - LENINIST) - LIBERATION, TAMILNADU

Tuesday, May 29, 2018

மோடி அரசாங்கத்தின் அய்ந்தாவது ஆண்டு 
பேரிடரின் கடைசி ஆண்டாக இருக்கட்டும்

திபங்கர்

மோடி அரசாங்கம் நான்கு ஆண்டுகளை நிறைவு செய்துவிட்டது.
மோடி ஆட்சியின் இந்த நான்கு ஆண்டுகளை மதிப்பிடுவதில் உதவிட, இதற்கு முன்பு இதற்கு இணையான ஓர் ஆட்சி இருந்திருக்கிறதா? நரேந்திர மோடியை பொறுத்தவரை, நேருதான் நிரந் தரமான ஒப்பீட்டு அம்சமாக இருக்கிறார். தன்னை நேருவுக்கு பக்கத்தில் நிறுத்திவைத்துக் கொள்வது மோடிக்கு விருப்பமுடையதாக இருக்கிறது; நேருவுக்கு பதில் சர்தார் படேல் பிரதமராக இருந்திருந்தால் ஆளுகை எப்படி இருந்திருக்கும் என்பதை அவர் நமக்குக் காட்டுவதாக நம்புகிறார். உண்மையில், மோடி வெளிநாட்டு வாழ் இந்தியர் மத்தியில் பேசும்போது, முடிவேயில்லாமல் வெட்கித் தலை குனிய நேர்ந்த இந்தியர்களுக்கு, 2014க்குப் பிறகுதான், பெருமைபட ஏதோ இருக்கிறது என்று, மீண்டும் மீண்டும் சொல்கிறார். நீண்ட காலத்துக்குப் பிறகு நடந்திருக்கும் நல்ல விசயம் அவரது அரசாங்கம்தான் என்று காட்ட, தனது ஒவ்வொரு உரையிலும் உண்மைகளை, விவரங்களை திரித்துச் சொல்லி, வரலாற்றை கண்டுபிடிப்பு செய்கிறார். 800 ஆண்டுகளுக்குப் பிறகு ‘மதிப்புமிகு இந்துவின்’ கைகளில் அதிகாரம் திரும்பியிருப்பதுதான் மோடி ஆட்சி என்று சங் வட்டங்கள் கொண்டாடுகின்றன. புனைக் கதைகளில் நாட்டமுடையோருக்கு, மோடி ராமனின் மறுஅவதாரம்; அகலிகையை ராமன் மீட்டதுபோல் மோடி இந்தியாவை மீட்கிறார்!
நான்கு ஆண்டுகளுக்கு முன்பு வாக்குறுதிகள் பல தந்து மோடி ஆட்சியில் அமர்ந்தபோது, அவரது கருவான ஆதரவாளர்கள் மத்தியில் ஒரு தனித்துவமான பேரார்வ மனோநிலை காணப்பட்டது; பரந்த வாக்காளர்கள் மத்தியில் பெருமளவில் நல்லெண்ணம் காணப்பட் டது. இப்போது அந்த நம்பிக்கை மறைந்து போய், துரோகமும் ஏமாற்றமுமே மிஞ்சுகிறது. பொருளாதாரம் தேங்கிக் கிடக்கிறது; கூடாநட்பு முதலாளித்துவத்தில் ஆழமாக மூழ்கிக் கிடக்கிறது. சாமானிய இந்தியனுக்கு நவீன இந்தியாவின் முக்கியமான அடையாளங்களாக இருக்கிற வங்கித் துறையும் ரயில்வே துறையும் இயக்கத் திறன், பொது மக்கள் வைத்துள்ள நம்பிக்கை என்ற பொருளில் மிகவும் தாழ்ந்த நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டன. சர்வதேச எண்ணெய் விலையில் மிகப்பெரிய அளவில் சரிவு இருந்ததால் நாட்டுக்கு அதிர்ஷ்டத்தை கொண்டு வந்த பிரதமர் என்று நரேந்திர மோடி தன்னைத் தானே முன்னிறுத்திக் கொண்டார்; ஆனால், அந்த விலை குறைவின் ஆதாயம் சாமான்ய நுகர்வோருக்கு சென்று சேரவேயில்லை. இன்று பெட்ரோல், டீசல் விலை விண்ணை முட்டுகிறது. சர்வதேச நாணயச் சந்தையில் ரூபாயின் மதிப்பு சரிந்து விடும் நிலையில் இருக்கிறது.
பொருளாதார நிர்வாகத்தைப் பொறுத்தவரை, மோடி அரசாங்கம் மூன்று ‘தீர்மானகரமான’ நடவடிக்கைகள் மேற்கொண்டது: பண மதிப்பகற்றம், ஜிஎஸ்டி, கிட்டத்தட்ட எல்லா சேவைகளையும் ஆதாருடன் இணைப்பது. இந்த மூன்று நடவடிக்கைகளும், நாடாளுமன்ற ஜனநாயகத்தில் இருக்கிற வழக்கமான கலந்தாலோசிக்கும் இயக்கப்போக்குகள், நிறுவப்பட்ட மரபுகள் ஆகியவற்றை சற்றும் மதிக்காமல், பிரதமர் அறிவிப்பு மூலமோ அல்லது வஞ்சகமாகவோ புகுத்தப்பட்டன; இந்த மூன்று நடவடிக்கைகளும் மிகப்பெரும் சீர்குலைவுகளாகவே, சேதங்கள் விளைவிப்பதாகவே இருக்கின்றன. ஆண்டுக்கு 2 கோடி வேலை வாய்ப்புகள் என்ற வாக்குறுதி மிகப் பெரிய தேர்தல் வெற்றியை மோடிக்குத் தந்தது. ஆனால், ‘வேலை வாய்ப்பு உருவாக்கும்  பொறுப்பு’ இப்போது அரசாங்கத்திடம் இருந்து, கார்ப்பரேட் துறையிடம் இருந்து, வேலை தேடுபவர்களுக்கே மாற்றப்பட்டுவிட்டது! பகோடா விற்கலாம், அல்லது திரிபுராவின் புதிய முதலமைச்சர் சொல்லியிருப்பதுபோல், பெட்டிக் கடை வைக்கலாம், மாடு மேய்க்கலாம் என்று வேலை தேடுபவர்களுக்கு தேவையற்ற அறிவுரை வழங்குவது என்பதாக, முத்ரா திட்டத்தில் ஒரே ஒரு முறை வெறும் ரூ.50,000 கடன் தந்துவிட்டு, கடன் வாங்கியவர்களுக்கு ‘வேலை வாய்ப்பு உருவாக்கியதாக’ பொய் சொல்வது என்பதாக அரசாங்கத்தின் பாத்திரம் சுருங்கிவிட்டது. நாடெங்கும் நிறைந்திருக்கும் மோடியின் விளம்பர தட்டிகளுக்கு, கடந்த நான்கு ஆண்டுகளில் ரூ.4,343 கோடி செலவு என அரசாங்க விளம்பர செலவு அதிகரித்துக் கொண்டே செல்வது, கீழ்நோக்கிச் சென்றுகொண்டிருக்கும் பொருளாதாரத்துடன், தலைகீழாகப் பொருந்திப் போகிறது!
அரசாங்கத்தின் மீது மக்கள் மேலும் மேலும் சீற்றம் கொள்கிறார்கள், அதிருப்தி அடைகிறார்கள் என்றால், அது மோசமடைந்து வரும் பொருளாதார நிலைமைகளால் மட்டும் அல்ல. மத்தியில் மோடி ஆட்சி அமைத்த பிறகு, அடுத்தடுத்த மாநிலத் தேர்தல்களில் பாஜக தொடர்ந்து வெற்றி பெறுவது, மொத்த சங் பரிவார் கூட்டத்துக்கும் துணிச்சல் தந்துள்ளது. பெருகிவிட்ட அதன் காலிக் கும்பல்கள், படுகொலை கும்பல்கள் வெறிகொண்டு ஆடுகின்றன. அரசாங்கம் அவற்றின் வெறியாட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கிறது; அவற்றுக்கு தண்டனை பற்றிய அச்சத்தைப் போக்குகிறது. நிர்வகிப்பது, பொறுப்புகளை நிறைவேற்றுவது என்பவற்றுக்கு பதிலாக, ஆளுகை என்பதே, பல்வேறு பிரிவு மக்கள் மீது, உள்நாட்டுப் போர்ச் சூழல் போன்ற ஒன்றாகிவிட்டது. பல்கலை கழகங்களில் கல்விச் சூழல் திட்டமிட்டு நஞ்சாக்கப்படுகிறது; அரசாங்கம் மாணவர்களுக்கு எதிரான நடைமுறைகளை பின்பற்றுகிறது. பெண்களும் சிறுமிகளும் கொடூரமான பாலியல் வன்முறைக்கும் படுகொலைக்கும் உள்ளாக்கப்படுகிறார்கள்; ஆளும் கட்சி பாலியல் வன்முறை குற்றவாளிகளைப் பாதுகாக்கிறது. காஷ்மீர மக்கள் போர்க் கைதிகள் போல் நடத்தப்படுகிறார்கள்; மொத்த அசாமும், குடியுரிமையை நிர்ணயிப்பதில் மதத்தை அடிப்படையாக்க முனையும் குடியுரிமை சட்டத்தின் போக்கிரித்தனமான திருத்தத்துக்கு எதிராக போராடுகிறது; உத்தரபிரதேசத்தில் தலித் போராளிகள் சுட்டுக்கொல்லப்படுகிறார்கள்; தேசப் பாதுகாப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்கப்படுகிறார்கள்; சட்டம், நீதி என்ற வரையறையை மீறி ‘மோதல் படுகொலை ராஜ்ஜியம்’ நடத்த காவல்துறை ஊக்குவிக்கப்படுகிறது.
சுருக்கமாகச் சொல்வதானால், ஆட்சியைப் பிடிப்பதில், நாட்டின் எல்லா நிறுவனங்களையும், பதவிகளையும் கைப்பற்றுவதில், எல்லா தளங்களிலும் ஆர்எஸ்எஸ் கருத்தியலை, கொள்கையை திணிப்பதில் பாஜக காட்டுகிற மூர்க்கம், நமது குடியரசின் கூட்டாட்சி கட்ட மைப்புக்கு, அரசியல்சாசன அடிப்படைக்கு, அனைத்து பிரிவு மக்களின் வாழ்க்கைக்கு வெளிப்படையான அச்சுறுத்தலாகும். இந்தியாவில், கடந்த காலங்களில், ஜனநாயகம் பல்வேறு சவால்களை எதிர்கொண்டுள்ளது; 1970களில் நெருக்கடி நிலையை சந்தித்துள்ளது; இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்டபோது, சீக்கியர் படுகொலை செய்யப்பட்டனர்; 1992ல் உச்சநீதிமன்றத்தை, அரசியல்சாசனத்தை வெளிப்படையாக மீறி, பாப்ரி மசூதி இடிக்கப்பட்டது; 2002ல் குஜராத் மனிதப் படுகொலை நடத்தப்பட்டது; இந்த முக்கியமான கட்டங்களை நாடு அவ்வளவு எளிதில் மறந்துவிடாது. இந்த ஆட்சியின் பிரச்சாரகர்களும் கருத்தியலாளர்களும் ஒவ்வொரு குற்றத்தையும் ஒவ்வொரு நெருக்கடியையும் நியாயப்படுத்த, ‘அவர்கள் என்ன செய்தார்கள்’ என்று கேட்பது மிகவும் சக்திவாய்ந்த வாதமாக இருக்கலாம்; ஆனால், ஒட்டுமொத்த சித்திரத்தையும் பார்த்தால், நான்காண்டு கால மோடி ராஜ்ஜியம் கொண்டு வந்துள்ள ஒட்டுமொத்த பேரழிவுக்கு இணையான ஒன்று உண்மையில் கடந்த காலத்தில் எதுவும் இல்லை.
இன்று நாம் எதிர்கொள்கிற ஆபத்து பற்றி முன்னெச்சரிக்கை எதுவும் இல்லாமல் போனது என்று நாம் சொல்வது தவறாக இருக்கும். நம் தலையில் விடிந்திருப்பது என்ன என மதிப்பிட நாம் அம்பேத்கரை தாண்டிச் செல்ல வேண்டியதில்லை. ‘மதத்தில் பக்தி என்பது ஆன்மா முக்தி பெறுவது நோக்கிய பாதையாக இருக்கலாம். ஆனால் அரசியலில், பக்தியோ, தனிமனித வழிபாடோ, இழிவுபடுத்துதலுக்கும் அதைத் தொடர்ந்து சர்வாதிகாரத்துக்குமான நிச்சயமான பாதையாகும்’. தனிமனித வழிபாடும் தனிமனித ஆளுமைப் பற்றும் நமது அரசியலில் விவரமான எந்த ஒரு விவாதத்தையும் தடுத்துவிடும் அச்சுறுத்தலாக மாறியுள்ள இன்றைய நிலைமைகளில், அம்பேத்கரின் வார்த்தைகள் மிகவும் அச்சுறுத்துகிற உண்மையாக ஒலிக்கின்றன. இந்தியாவில் ஜனநாயகத்தைப் பின்னுக்குத் தள்ளும் அச்சுறுத்தலாக இருக்கிற கொடுங்கோன்மையின் அரசியல் உள்ளடக்கத்தைப் பார்த்தால், அம்பேத்கர் தான் அறுதியிட்டுச் சொன்னதில் மிகவும் தெளிவாக இருக்கிறார்: ‘இந்து ராஜ்ஜியம் யதார்த்தமானால், அது, சந்தேகத்துக்கிடமின்றி, இந்த நாட்டுக்கு நேர்கிற பேரிடராக இருக்கும்’. என்ன விலை கொடுத்தேனும் இந்தப் பேரிடரைத் தடுக்க இந்தியர்களுக்கு அம்பேத்கர் அழைப்பு விடுத்தார்.
இந்திய மக்கள் இந்தப் பேரிடரை உணர்ந்து கொண்டு, தங்கள் அனைத்து ஆற்றலையும் கொண்டு அதை எதிர்க்க முயற்சி செய்வது நம்பிக்கை தருகிறது. விவசாயிகள், தொழிலாளர்கள், தலித்துகள், பழங்குடியினர், மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள், சாமான்ய மக்கள் நடத்துகிற போராட்டங்களை நாடெங் கும் நாம் பார்க்கிறோம். இந்தப் போராட்டங்கள், எண்ணிக்கையை திரட்டும் என்பதோடு,  மிக முக்கியமாக, வலுவான, ஆழமான ஜனநாயகத்துக்கான விருப்பத்தையும் லட்சியத்தையும் உருவாக்கும் ஒரு சக்திவாய்ந்த வெகு மக்கள் எழுச்சியின் உள்ளாற்றலையும் கொண்டுள்ளன. மோடி அரசாங்கத்தின் அய்ந்தாவது ஆண்டு, இந்திய ஜனநாயகத்தின் எதிர்காலத்துக்கு ஒரு தீர்மானகரமான கட்டமாக இருக்கும். போர்க்களங்கள் தெளிவாக வரையறுக்கப்பட்டுவிட்டன; ஜனநாயகத்தில் பாத்தியதை கொண்ட அனைவரும் கொடுங்கோன்மையை வெற்றி கொள்ள, எழுபது ஆண்டுகளுக்கு முன் அம்பேத்கர் எச்சரித்த பேரிடர் வருவதைத் தடுக்க கரம் சேர்த்தாக வேண்டும்.

Search