COMMUNIST PARTY OF INDIA (MARXIST - LENINIST) - LIBERATION

COMMUNIST PARTY OF INDIA (MARXIST - LENINIST) - LIBERATION, TAMILNADU

Tuesday, May 29, 2018

அரசுப் பள்ளிகளை மூடாதே! 
தனியார் பள்ளிகளை அரசுடைமையாக்கு!

890 துவக்கப் பள்ளிகளை மூடப் போவதாக கல்வி அமைச்சர் அறிவித்தார்.
அடுத்த சில நாட்களில், 1300 டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்ற உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு தொடுத்த வழக்கில் 810 கடைகளை திறக்கலாம் என்று உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியது. டாஸ்மாக் கடைகளைத் திறக்க நீதிமன்றம் சென்ற தமிழக அரசு, பள்ளிகளை மூடாமல் இருக்க முயற்சி செய்யாமல் மூடிவிட முடிவெடுக்கிறது. டாஸ்மாக் கடைகளில் எப்போதும் கூட்டம் அலைமோதுகிறது. 890 பள்ளிகளில் 10க்கும் குறைவான மாணவர்கள் இருப்பதால் அந்தப் பள்ளிகள் மூடப்படுகின்றன என்று தமிழக அரசு காரணம் சொல்கிறது. அந்த 10க்கும் குறைவான மாணவர்கள் என்ன செய்வார்கள்? படிப்பை நிறுத்திவிடுவார்களா? அல்லது தனியார் பள்ளிகளில் சேர்ந்து கொள்வார்களா? தனியார் பள்ளியில் சேர வசதியில்லை என்றால், தாய் தந்தை பார்க்கும் பணிகளைச் செய்யத் துவங்கிவிடுவார்களா? அந்தப் பள்ளிகளில் பணி செய்யும் ஆசிரியர்கள் என்ன ஆவார்கள்? தமிழ்நாட்டு மக்கள் இன்னும் என்ன கொடுமைகளை பார்க்க வேண்டும்? நமக்கும் விதி மீது நம்பிக்கை வந்துவிடுமோ?
நீட் என்று சொல்லி சாமான்ய மக்கள் வீட்டுப் பிள்ளைகள் மருத்துவம் படிப்பதற்கு முடிவு கட்டியவர்கள், வேறு உயர்கல்வி செல்வதையும் தடுக்க, துவக்கக் கல்வி பயிலும் வாய்ப்புக்கே சமாதி கட்டுகிறார்கள். தமிழ்நாட்டின் எதிர்காலத்தை சூன்யம், குழப்பம், நிச்சயமின்மை சூழச் செய்யும் நடவடிக்கை இது. கல்வி உரிமைச் சட்டப்படி குடியிருப்பில் இருந்து 1 கி.மீ தொலைவில் துவக்கப் பள்ளி இருக்க வேண்டும். சட்டத்தை ஆட்சியாளர்கள் என்றுதான் மதித்தார்கள்?
மாநிலத்தில் 92,234 குடியிருப்புகளும் 57,583 பள்ளிகளும் உள்ளன என்று புவியியல் தகவல் வரைபட முறைமை மூலம் அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்த மொத்த குடியிருப்புகளில் 89,950 குடியிருப்புகளுக்கு துவக்கப் பள்ளிகள் உள்ளன. அப்படியானால் இன்றைய நிலைமைகளில் 2,284 குடியிருப்புகளில் உள்ள குழந்தைகளுக்கு கல்வி உரிமைச் சட்டப்படியான துவக்கப் பள்ளி வசதி கிடையாது. எவ்வளவு பெரிய துரோகம், குற்றமய அலட்சியம் இது? 91,040 குடியிருப்புகளுக்கு நடுநிலைப் பள்ளிகள் உள்ளன. 1,194 குடியிருப்புகளில் உள்ள குழந்தைகளுக்கு நடுநிலை பள்ளி வசதி கிடையாது. இந்த விவரம் கையில் இருந்தும் தமிழ்நாட்டில் கடந்த ஆறு ஆண்டுகளில் 227 துவக்கப் பள்ளிகளும் 116 நடுநிலைப் பள்ளிகளும் மட்டுமே புதிதாக துவக்கப்பட்டுள்ளன. ஆனால், தகுதியுள்ள அனைத்து குடியிருப்புகளிலும் கிட்டத்தட்ட 100% துவக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் உள்ளன என தமிழக அரசு சொல்லும் என்றால் அது அப்பட்டமான பொய்தான்.
2011 - 2012  முதல் 2016 - 2017 வரை பள்ளிக் கல்வித் துறைக்கு ரூ.1,10,323 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித் துறை கொள்கை குறிப்பு சொல்கிறது. 2017 - 2018ல் ரூ.26,932.31 கோடி ஒதுக்கப்பட்டதையும் சேர்த்துக் கொண்டால் கிட்டத்தட்ட ரூ.1,40,000 கோடி! இந்த அளவுக்கு மக்கள் வரிப் பணத்தை ஒதுக்கி ஏழு ஆண்டுகள் முடிந்து எட்டாவது ஆண்டு துவங்கும்போது 890 பள்ளிகளை மூடுவதாக அறிவிக்கிறார்கள். இந்தப் பணத்தை எதற்காக செலவிட்டார்கள்? மாணவர் சேர்க்கையில் தொடக்கப் பள்ளிகளில் 99.85% எட்டப்பட்டுள்ளதாக 2017 - 2018 கொள்கை குறிப்பு சொல்லுமானால், 890 பள்ளி களை ஏன் மூட வேண்டும்? அனைத்து பள்ளி களிலும் தேவையான உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பு சொல்கிறது. 2011 - 2012  முதல் 2016 - 2017 வரை புதிய பள்ளிக் கட்டிடங்கள், கூடுதல் வகுப்பறைகள், குடிநீர் வசதி, கழிப்பறைகள் ஆகியவற்றுக்கு ரூ.4,166 கோடி ஒதுக்கீடு செய் யப்பட்டுள்ளது. 2011 முதல் 2016 வரை புதிய பள்ளிக் கட்டிடங்கள், கூடுதல் வகுப்பறைகள், குடிநீர் வசதி, கழிப்பறைகள் கட்ட ரூ.1002.11 கோடி செலவிடப்பட்டுள்ளது. அது உண்மை என்றால், மாணவர்களை பள்ளிகளுக்கு ஏன் வரவழைக்க முடியவில்லை? (மீதம் ரூ.3,164 கோடி எங்கே?) 
35,414 துவக்கப் பள்ளிகளில் 29.10 லட்சம் மாணவர்கள் படிக்கிறார்கள். 9,708 நடுநிலைப் பள்ளிகளில் 17.42 லட்சம் மாணவர்கள் படிக்கிறார்கள். துவக்கக் கல்விப் பணியில் 2.23 லட்சம் ஆசிரியர்கள் இருக்கிறார்கள். இது அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் பற்றிய விவரம். மறுபுறம் 4,268 மெட்ரிகுலேசன் பள்ளிகளில் 39,18,221 மாணவர்கள் படிக்கின்றனர். கடந்த ஆறு ஆண்டுகளில் வெறும் 227 புதிய துவக்கப் பள்ளிகள் திறந்துள்ள தமிழக அரசு, 2016 - 2017ல் மட்டும் 94 புதிய மெட்ரிகுலேசன் பள்ளிகள் துவங்கவும் 100 மெட்ரிகுலேசன் பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தவும் அனுமதி வழங்கியுள்ளது. மெட்ரிகுலேசன் பள்ளிகளின் எண்ணிக்கையும் அங்கு படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கையும் ஆண்டுக்காண்டு அதிகரித்து வருகிறதென அஇஅதிமுக அடிமை ஆட்சியாளர்கள் பெருமையாகச் சொல்லிக் கொள்கிறார்கள்.
தமிழக அரசு தரும் விவரங்கள்படி 45,122 அரசுப் பள்ளிகளில் 46.52 லட்சம் மாணவர்களும் வெறும் 4,268 மெட்ரிகுலேசன் பள்ளிகளில் 39,18,221 மாணவர்களும் படிக்கின்றனர். 25 மாணவர்களுக்கு ஓர் ஆசிரியர் என்ற விதி தனியார் பள்ளிகளில் அமலாவதில்லை என்பது அரசு தரும் விவரங்களில் இருந்து தெரிந்து கொள்ள முடிகிறது. அரசுப் பள்ளிகளில் மாணவர்களுக்கு சிறப்பு கவனம் தருவதற்கான எல்லா வாய்ப்புகளும் இருப்பதையும் தெரிந்து கொள்ள முடிகிறது. இந்த அடிப்படையான விசயங்களில் கல்வி உரிமைச் சட்டத்தை அமல்படுத்தாமல், கல்வி உரிமைச் சட்டப்படி தனியார் பள்ளிகளில் சேர்க்கப்படும் வறிய பிரிவு மாணவர்களுக்கான கட்டணம் என்ற வகையில் 2013 - 2014 முதல் 2015 - 2016 வரை தனியார் பள்ளிகளுக்கு தமிழக அரசு ரூ.221.99 கோடி தந்துள்ளது! ஆக, இதற்காகத்தான் இப்போது 890 அரசு துவக்கப் பள்ளிகள் மூடப்படுகின்றன. தனியார் பள்ளிகளை கரை வேட்டிக்காரர்களும் அவர்களுக்கு வேண்டியவர்களும்தான் பெரும்பாலும் நடத்துகிறார்கள். பள்ளிக் கல்வித் துறையில் ஒதுக்கப்படும் நிதியை கணக்கு காட்டிவிட்டு சுருட்டுவது ஒருபுறம், தனியார் பள்ளிகளை ஊக்குவிப்பது மறுபுறம் என தமிழக குழந்தைகளின் கல்வி உரிமைக்கு இரட்டை துரோகம் இழைக்கப்படுகிறது.
தமிழக மக்கள் மீது பல்வேறு திசைகளில் இருந்தும் மத்திய, மாநில ஆட்சியாளர்கள் தொடர் தாக்குதல்கள் தொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். தனியார் பள்ளிகள் வெறும் 4200தான். சாராயக் கடை நடத்த அனைத்தும் தழுவிய முயற்சிகள் எடுக்கும் தமிழக அரசு இந்த தனியார் பள்ளிகளையும் தானே நடத்தி இங்குள்ள 40 லட்சம் மாணவர்களையும் அரசுப் பள்ளி மாணவர்களாக்கி மென்னியைப் பிடிக்காத கல்விச் சூழலை உருவாக்க வேண்டும். தமிழக மக்களின் தீவிரமான போராட்டங்கள் இன்றி இது சாத்தியமில்லை.

Search