COMMUNIST PARTY OF INDIA (MARXIST - LENINIST) - LIBERATION

COMMUNIST PARTY OF INDIA (MARXIST - LENINIST) - LIBERATION, TAMILNADU

Monday, May 14, 2018

மே 6, தமிழ்நாட்டின் கருப்பு நாள்! 
பழனிச்சாமி ஆட்சிக் காலம் தமிழ்நாட்டின் இருண்ட காலம்!

நீட் தேர்வு எழுதும் மகனுடன் சென்ற தந்தை பிணமாக வீடு வந்தார்.
‘அப்பா எங்கே’ என்ற அந்தக் கேள்வி தமிழ்நாட்டு மக்களை என்றும் விரட்டும். மே 6 தமிழ்நாட்டின் கருப்பு நாள்.
அனைத்தும் தழுவிய துரோகம் இழைப்பதால், உரிமைகள், வாழ்வாதாரம், கலாச்சாரம், நிதி, மொழி என அனைத்தையும் பறிப்பதால், தமிழக மக்களுக்கு நெஞ்சுக்குள் குமைந்து கொண்டிருந்த சீற்றம் ஏப்ரல் 12 அன்று மோடியே திரும்பிப் போ என்று ஒரே குரலில் வெடித்தது. அதற்கு தமிழகக் குழந்தைகள் மூலம் பழித் தீர்க்க வேண்டும் என்று திட்டமிட்டு நடத்தியும் காட்டிவிட்ட மோடியின் அரசிடம் தமிழக மக்கள் வேறு எந்த பிரச்சனையில்தான் நீதி, நியாயத்தை எதிர்ப்பார்க்க முடியும்?
நரேந்திர மோடிக்கு நரவேட்டை புதிதல்ல. இசுலாமியர் 2,000 பேரை இந்துத்துவ வெறி தலைக்கேறிய கூட்டம் கொன்றபோது அதற்கு ஒப்புதல் அளித்தவர் அவர். அதன் பிறகு பிரதமராகியிருக்கிறார். பிரதமர் ஆன பிறகு அந்த குஜராத் மாதிரியை நாடெங்கும் நிகழ்த்திக் காட்டுகிறது சங் பரிவார் கும்பல். தமிழ்நாட்டுக்கு நேரடியாக அந்த வெறியாட்டத்தைக் காட்டாமல் வேறு பல வழிகளை பாசிசம் கையாள்கிறது.
பாசிசம் விதவிதமாக கொலை செய்கிறது. ஆக்சிஜனுக்கு பணம் செலுத்தாமல் நூற்றுக்கணக்கில் குழந்தைகளைக் கொல்வார்கள். இசுலாமியச் சிறுமி என்பதால் கோவிலுக்குள் பாலியல் வன்முறை செய்து பின் கொலை செய்வார்கள். தமிழ்நாட்டில் நீட் என்ற பெயரில் உயிரை மாய்த்துக் கொள்ளச் செய்வார்கள். குழந்தைகளுக்கு எதிர்காலம் பற்றிய அச்சத்தை உருவாக்கி அவர்களைச் சிறிது சிறிதாகக் கொலை செய்வார்கள். பேயாட்சி செய்யும்போது சாத்திரங்கள் பிணங்கள் கேட்கின்றன.
சென்ற ஆண்டு நமது குழந்தை ஒன்றை கொலை செய்தது பற்றி எந்த குற்ற உணர்வும் இல்லாமல், இந்த ஆண்டு இரண்டு குழந்தைகள் வாழ்க்கையில் மிகப்பெரிய வடுவை உருவாக்கிவிட்டது. அவர்கள் மிகச்சிறு வயதிலேயே, தங்கள் தந்தைகளை இழந்துவிட்டார்கள். அவர்களின் எதிர்காலம், படிப்பு, கனவு, வாழ்க்கை எல்லாம் சிதைந்துவிட்டதாக அந்தக் குழந்தைகள் கருதும் நிலைக்கு மோடி, பழனிச்சாமி அரசாங்கங்கள் அவர்களைத் தள்ளிவிட்டன. தந்தைகளை இழந்துவிட்ட குழந்தைகளின், கஸ்தூரி மகாலிங்கத்தின், ஐஸ்வர்யாவின் தற்போதைய மனநிலையை, உங்களால் புரிந்து கொள்ள முடியுமா, மோடி அவர்களே? அந்தக் குழந்தைகளின் வாழ்நாள் இழப்பைத்தான் உங்களால் ஈடுகட்ட முடியுமா? உங்களைத் திரும்பிப் போகச் சொன்னதால், எங்கள் குழந்தைகளுக்கு இவ்வளவு பெரிய தண்டனையா? இனஅழிப்பு ஹிட்லர் போல் குரூர மனம் கொண்டுள்ள உங்கள் ஆட்சி இதற்குப் பதில் சொல்லியே ஆக வேண்டும்.
பெண் குழந்தைகளை பாதுகாக்க திட்டம் அறிவிக்கிறார்கள். தேர்வு எழுதும் மாணவர் களை உள்ளாடை வரை அகற்றி சோதனை செய்ய என்ன அவசியம்? தொலைதூரம் சென்று தேர்வு எழுத நேர்ந்ததால் ஏற்கனவே இருந்த களைப்புடன் சேரும் இந்த அவசியமற்ற கெடுபிடிகள், குழந்தைகளை மன உளைச்சலுக்கு ஆளாக்கும், ஆளாக்க வேண்டும் என மோடி அரசு திட்டமிட்டுதான் செய்துள்ளது. இந்திரா திரைப்படத்தில் ஒரு காட்சியில் வேட்புமனு தாக்கல் செய்யச் செல்லும் கதாநாயகியை ரவுடிகள் சிலர் மிகவும் நெருக்கமாக சூழ்ந்து கொண்டு கையைப் பிடிப்பது, சேலையை இழுப்பது, காலைத் தொடுவது என முயற்சி செய்வார்கள். அதன் பிறகு கதாநாயகி தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று சொல்லும்போது கதாநாயகன் நம்பிக்கை வார்த்தைகள் சொல்வார். இதைத்தான் அவர்கள் விரும்பினார்கள், நீ அதையே செய்கிறாய் என்பார். கதாநாயகியின் பதிலுடன் அந்தக் காட்சி நிறைவுறும்: ‘எனக்கு என்ன நடந்தது என்று உனக்குத் தெரியாது’. மோடி அவர்களே, நீங்கள் இப்படித்தான் எங்கள் பெண் குழந்தைகளை பாதுகாக்கப் போகிறீர்களா?
திருநெல்வேலி, சங்கரன்கோவில் பகுதியைச் சேர்ந்த மாணவன் தினேஷ், தனது தந்தையின் குடிப்பழக்கத்தால் பாதிக்கப்பட்டு தற்கொலை செய்துகொண்டான். அவனுக்கும் மருத்துவர் கனவு இருந்தது. நீட் தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருந்தான். டாஸ்மாக்கும் நீட் தேர்வும் சேர்ந்துகொண்டு, மத்திய, மாநில அரசுகளின் நடவடிக்கைகள் சேர்ந்துகொண்டு அவனைக் கொன்றுவிட்டன. பழனிச்சாமியும் பிற அமைச்சர்களும் இந்தக் கொடூரம் பற்றி பேசவேயில்லை.
நீட் வேண்டாம் என்று சொன்னவர்களை, தமிழ்நாட்டில் நீட் எழுத மய்யம் வேண்டும் என்று மோடி அரசு கேட்க வைத்துவிட்டதாகச் சொல்லப்படுகிறது. இல்லை. தமிழ்நாடு, நீட் வேண்டாம் என்றுதான் இப்போதும் சொல்லிக் கொண்டிருக்கிறது. இனியும் அப்படித்தான் சொல்லும்.
நீட் எழுதச் சென்ற மாணவர்களை நீட் தேர்வு ஆர்வலர், நீட் ஆஸ்பிரண்ட், என்று பத்திரிகைகள் குறிப்பிடுகின்றன. சாதியாதிக்கக் கொலைகளை கவுரவக் கொலை என்று குறிப்பிடுவது எந்த அளவுக்குக் தவறோ நீட் தேர்வு ஆர்வலர் என்று குறிப்பிடுவதும் அதே போல் தவறு. இங்கே நாங்கள் யாரும் நீட் எழுத ஆவலாக இல்லை. நீட் வேண்டாம், நீட் வேண்டாம், நீட் வேண்டவே வேண்டாம் என்பதுதான் எங்கள் முழக்கம். தமிழக குழந்தைகள் மருத்துவராக வேண்டும் என்றுதான் கனவு காண்கிறார்களே தவிர, அதில் பலர், மக்களுக்கு தரமான, இலவச மருத்துவம் தர வேண்டும் என்றுதான் கனவு காண்கிறார்களே தவிர, நீட் எழுத வேண்டும் என்று இங்கு யாரும் கனவு காணவில்லை.
தமிழ்நாட்டில் மட்டும்தான் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு, வேறு மாநிலங்களில் இல்லை என்று சொல்லி, தமிழக மாணவர்கள் திறமையை கேள்விக்குள்ளாக்குகிறார்கள். தமிழ்நாட்டு மருத்துவர்கள் திறமையை யாருக்கும் புதிதாக மெய்ப்பிக்க வேண்டியதில்லை. தமிழ்நாட்டில் மட்டும்தான் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு என்றால், தமிழ்நாட்டு மக்கள் இதற்கு பெருமைப்பட்டுக் கொள்கிறோம். மற்ற மாநில மக்கள் தமிழக மக்களுடன் இந்தப் போராட்டத்தில் சேர்ந்து கொள்ளட்டும். நீட்டுக்கு எதிராக, தமிழக மக்கள் தமிழ்நாட்டின் மருத்துவ கல்லூரிகளில் தங்கள் மாணவர்கள் பெற்றே தீர வேண்டிய உரிமைக்காக குரல் எழுப்பும்போது, கூடவே, சமூகநீதியை நிலை நாட்டவும், உயர்கல்வியும் மருத்துவமும் வணிகமயமாக்கப்படுவதற்கும் சாமான்ய வீட்டுப் பிள்ளைகளுக்கு மருத்துவப் படிப்பு இல்லை என்றாகிவிட்ட நிலைமைகளுக்கு எதிராகவும் குரல் எழுப்புகிறார்கள்.
மருத்துவ கல்வியையும் மருத்துவத்தையும் முழுவதுமாக தனியார் கொள்ளைக்குத் திறந்து விட எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு நீட் அவசியமாகிறது. நீட் தேர்வைப் பொறுத்தவரை, பணம் படைத்தவர்களாக இருப்பதே தகுதி. நீட் வசதியற்றவர்களைத்தான் தகுதி யற்றவர்களாக்கி விடுகிறது. மிகவும் ஆரம்பக் கட்டத்திலேயே வடிகட்டிவிடுகிறது. இந்த ஓராண்டில் நீட் பயிற்சி மய்யங்கள் செழித்து வளர்கின்றன. தனியார் பள்ளிகள் இதற்குத் தனியாக கொள்ளையடிக்கின்றன. பிள்ளையை எப்படியாவது மருத்துவராக்கிப் பார்த்துவிட வேண்டும் என்று உறுதியேற்ற பெற்றோர் கடனாளிகளாகின்றனர். இந்தத் தடைகளை எல்லாம் கடந்துவந்தால் பிணமாகிவிடுகின்றனர். இந்தக் கொடூரத்துக்கு எதிராகத்தான் தமிழக மக்கள் குரல் எழுப்புகிறார்கள்.
சென்ற ஆண்டு பல்வேறு குழப்பங்களுக்குப் பிறகு நீட் தேர்வு நடந்து முடிந்து, தேர்வு முடிவுகள் வெளியிடத் தாமதமானது. நீதிமன்றத் தலையீட்டுக்குப் பிறகுதான் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இந்த ஆண்டும் நீட் தேர்வு நடந்து முடிந்திருக்கலாம். இப்போதும், நீட் தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வலுவாக எழுப்ப முடியும். கேள்வித் தாள் பிழைகளை ஈடுகட்ட, தொலைதூர பயணத்தால் ஏற்பட்ட மனஉளைச்சலுக்கு ஈடு கட்ட கூடுதல் மதிப்பெண்கள் வேண்டும் எனக் கேட்பதை விட, நீட் வேண்டாம், நீட் வேண்டாம், நீட் வேண்டவே வேண்டாம் என்ற குரல் வலுப் பெறுவதே தமிழ்நாட்டின் உரிமைகளை, சாமான்ய மக்கள் மருத்துவத்தை, மாணவர்கள் எதிர்காலத்தைப் பாதுகாக்கும்.
ஜெயலலிதாவின் தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களுக்கு அழைத்து வரப்பட்டு, மணிக்கணக்கில் சுட்டெரிக்கும் வெயிலில் உட்கார வைக்கப்பட்டதால் உயிரிழந்தவர்களுக்கு நட்டஈடு என ஜெயலலிதா ரூ.3 லட்சம் அறிவித்தார். அது என்ன கணக்கோ? அதன் பிறகு, தங்கள் குற்றமய அலட்சியத்தால் மனித உயிர் பறிபோகும்போது, ரூ.3 லட்சம் என்று அஇஅதிமுகவினர் அறிவித்துவிடுகின்றனர். கிருஷ்ணசாமி உயிருக்கும் அதே விலை சொல்கிறார்கள். அதன் மூலம் அவரது மரணத்துக்கு தமிழக ஆட்சியே காரணம் என்பதை ஒப்புக்கொள்கிறார்கள். அந்த ரூ.3 லட்சம், கிருஷ்ணசாமியை திரும்பக் கொண்டு வருமா? மே 6 அன்று கஸ்தூரி மகாலிங்கம் பட்ட துன்பத்துக்கு மருந்தாகுமா?  நீட் வேண்டாம் என்று மத்திய அரசுக்கு சடங்குக்காக கடிதம் அனுப்புவதைக் கூட நிறுத்திவிட்ட, நீட் விலக்கு பெறுவோம் என்று ஒப்புக்குச் சொல்வதையும் நிறுத்திவிட்ட பழனிச்சாமி அரசின் குற்றமய அலட்சியத்தை வெளிமாநிலங்களுக்குச் செல்ல ரூ.1000 அறிவித்ததால் மக்கள் மன்னித்துவிட மாட்டார்கள்.
கஸ்தூரி மகாலிங்கத்தின் கல்விச் செலவு களை தமிழக அரசு ஏற்கும் என்று மோடி அடிமை முதலமைச்சர் சொல்வது ஏமாற்று. கல்விச் செலவுகளை என்று சொல்பவர், மருத்துவக் கல்விச் செலவுகள் என்று சொல்லவில்லை. கஸ்தூரி மகாலிங்கத்துக்கும் ஐஸ்வர்யாவுக்கும், அவர்கள் தேர்வு செய்கிற மருத்துவக் கல்லூரிகளில் இடம் தரப்பட வேண்டும். படிப்பு காலத்துக்கான மொத்த செலவையும் தமிழக அரசு ஏற்க வேண்டும். ஊதியம் பெறுபவரை இழந்துவிட்ட அந்தக் குடும்பங்களில் ஒருவருக்கு கவுரவமான, நிரந்தரமான அரசுப் பணி வழங்கப்பட வேண்டும்.
ஜெயலலிதாவை விட திறமையாக பழனிச்சாமி ஆட்சி செய்வதாகவும், அவரது ஆங்கிலம் மேம்பட்டு இருப்பதாகவும் தமிழக அமைச்சர் பேசுகிறார். பழனிச்சாமி ஆங்கிலம் பேசுவது இப்போது தமிழ்நாட்டுக்கு முக்கியமல்ல, அவர் சற்று நிமிர்ந்து நடப்பது முதல் தேவையாக இருக்கிறது. ஜெயலலிதா முன் குனிந்து பழக்கப்பட்டவர்களுக்கு நிமிர்ந்து நிற்பதே மறந்துவிட்டது. மோடி முன் குனிந்து கிடக்கிறார்கள். கர்நாடகத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றால் தமிழ்நாட்டுக்கு நல்லது என, பாஜக தலைவர் தமிழிசை பேசுவது போல் பேசுகிற பழனிச்சாமி, இன்னும் எத்தனை தமிழர்களை பிணமாக்கும் திட்டம் வைத்திருக்கிறார் என்று நமக்குத் தெரியவில்லை. பழனிச்சாமி ஆட்சிக் காலம் தமிழ்நாட்டின் இருண்ட காலம். அடிமைத்தன போதை தலைக்கேறிவிட்ட பழனிச்சாமி அரசுக்கு, 2017ல் தமிழ்நாடு சட்டமன்றம் நீட் தேர்வு விலக்குக்காக ஒருமனதாக நிறைவேற்றிய அவசரச் சட்டங்களுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் பெற வேண்டும் என்பதை வலுவாக நினைவுபடுத்த வேண்டியுள்ளது.
கேளாச் செவியர்க்குக் கேட்கும் அளவுக்கு நீட் தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும் என்ற குரல் வலுப்பதே, இனி நீட் படுகொலைகள் நடக்காமல் தடுக்கும். தமிழ்நாட்டின் மருத்துவக் கல்வி உரிமைகளை, சாமான்ய தமிழக மக்களின் மருத்துவ உரிமைகளை உறுதி செய்யும்.

Search