COMMUNIST PARTY OF INDIA (MARXIST - LENINIST) - LIBERATION

COMMUNIST PARTY OF INDIA (MARXIST - LENINIST) - LIBERATION, TAMILNADU

Monday, May 14, 2018

மே 25, நக்சல்பாரி வழிமரபைப் போற்றுவோம்!

வெள்ளையரின் கிழக்கிந்திய கம்பெனி இந்தியாவை ஆண்டபோதே 1857ல் முதல் சுதந்திரப் போர் வெடித்தது
. நாட்டு விடுதலைப் போராட்டத்தோடு சேர்ந்தே தெபாகா புன்னபுரா வயலார் விவசாய எழுச்சிகள் நடந்தன. நிஜாம் ஆட்சிக் காலத்தில் துவங்கிய தெலுங்கானா புரட்சி, நேரு படேல் தலைமை தாங்கிய இந்திய அரசின் இராணுவத்தால் நசுக்கப்பட்டது. தெலுங்கானா புரட்சியை, இந்தியா எங்கும் எடுத்துச் செல்வதும், விவசாயிகள், தொழிலாளர்கள் போராட்டங்களோடு இணைப்பதும், சுதந்திரப் போராட்டத்துடன் இணைப்பதும் நடக்கவில்லை.
நள்ளிரவில் கிடைத்த சுதந்திரத்தால் மக்கள் வாழ்க்கையில் விடியல் வரவில்லை. வெள்ளை எசமானர்கள் இடத்தில் பழுப்பு எசமானர்கள் வந்தனர். ரஷ்ய சீன புரட்சிகள் வென்றபோது, இந்தோனேஷிய மலேசிய புரட் சிகள் முறியடிக்கப்பட்டன. ரஷ்ய சீன புரட்சிகளின் தொடர்ச்சியாய் வியட்நாம் கிழக்கு அய்ரோப்பிய, கொரிய, கியுபா புரட்சிகள் வென்றன. இந்தியாவில் மகத்தான தெலுங்கானா விவசாயப் புரட்சியின் மறுபதிப்பு 1967ல் நக்சல்பாரியில் எழுதப்பட்டது.
விவசாயப் போராட்டங்களின் தொடர்ச்சியாய், கம்யூனிஸ்ட் பாரம்பரியத்தின் நீட்சியாய், பாட்டாளி வர்க்க அரசியல் சுதந்திரத்தை நிறுவ வேண்டும், அவசியமானதைச் செய்ய  வேண்டும், அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும் என கம்யூனிஸ்ட் இயக்கத்தில் போராடி வந்த, தெபாகாவின் தெலுங்கானாவின் சீனிவாசராவின் பகத்சிங்கின் வாரிசுகள், நக்சல்பாரியில் 1967ல் கலகக் கொடியை உயர்த்தினார்கள். மே 25 அன்று, ஆளும் வர்க்கங்கள் அஞ்சி நடுநடுங்க, வசந்தத்தின் இடி முழக்கமாய் நக்சல்பாரியில் உழவர் புரட்சி வெடித்தது.
மே 25 போராட்டமும் நக்சல்பாரி விவசாய எழுச்சியும், கம்யூனிஸ்ட் தோழர்களின் புரட்சி கர கட்சி நோக்கிய நகர்தல், நிலமற்றவர்களையும் வறிய விவசாயிகளையும், நாட்டின் அரசியல் வாழ்க்கையின் முன் வரிசைக்குக் கொண்டு வந்தது, விவசாயப் புரட்சியை உடனடி நிகழ்ச்சிநிரலில் தனக்குரிய இடத்தைப் பெற்றுக் கொள்ள வைத்தது, திரிபுவாத சந்தர்ப்பவாத அரசியலின் துண்டு துகள்களிலிருந்து கம்யூனிஸ்ட் புரட்சியாளர்கள் மற்றும் இந்தியப் பாட்டாளி வர்க்கத்தின் சிந்தனையை மக்கள் விடுதலை, தேச விடுதலை என்ற மாபெரும் கனவு நோக்கி உயர்த்தியது ஆகியவற்றைச் சாதித்தன. புரட்சிகர இயக்கம், சர்வதேச பாட்டாளி வர்க்கத்தோடும் ஒடுக்கப்பட்ட மக்களோடும் கை கோர்த்தது. ஆயிரமாயிரம் இளைஞர்கள், உழைக்கும் மக்களோடு ஒன்று கலத்தல், எளிமையான வாழ்க்கை, கடுமையான உழைப்பு, தியாகம், புரட்சிகர லட்சியத்திற்கு அர்ப்பணிப்பு என முன்வந்தனர். ஆள்வோர் பழைய முறையில் ஆள முடியவில்லை. ஆளப்படுவோர் பழைய முறையில் ஆளப்படுவதை ஏற்க மறுத்தனர். ஒரு கட்டத்தில், நக்சல்பாரியில் துவங்கிய ஆயுதப் போராட்டம் முடிந்து விட்டது. ஆனால் நக்சல்பாரி துவக்கி வைத்த மக்கள் ஜனநாயகப் புரட்சி, சோசலிசம் நோக்கிய பயணம் தொடர்கிறது.
தமிழக விவசாய காட்சி
தமிழ்நாட்டு விவசாயம் விவசாயிகள் பற்றி சிந்திக்கும்போது, நமக்கு இந்தியா பற்றி மார்க்ஸ் பத்தொன்பதாம் நூற்றாண்டில் எழுதியது நினைவுக்கு வருகிறது. ‘இந்தியாவில் வெள்ளையர் வருகைக்கு முந்தைய கடந்த காலம் பேரழிவுகளை ஏற்படுத்தினாலும், அவை எல்லாம், சமூகத்தின் மேற்பரப்பையே பாதித்தன. ஆனால், இங்கிலாந்தின் காலனி ஆதிக்கம், முழு அமைப்பையும் சின்னாபின்ன மாக்கிவிட்டது. இதுவரையில், புத்தாக்கத்தின் அறிகுறி ஏதும் தோன்றவில்லை. இவ்வாறு புதிய உலகை பெறாது, பழைய உலகை இழந்து நிற்கும் நிலை, இந்திய மக்களது இன்றைய துயரத்துக்கு ஓர் அலாதியான சோர்வைக் கூட்டுகிறது. காலனி ஆட்சி, பண்டைய மரபுகளில் இருந்தும் கடந்த கால வரலாறு முழுவதிலும் இருந்தும் துண்டித்து விடுகிறது’. எல்லாம் இழந்துள்ள விவசாய சமூகம், தமிழ்நாட்டில் புதிதாக தனக்கென எதையும் பெற்றுக் கொள்ளவில்லை.
விவசாயம் கட்டுப்படியாவதில்லை. பஞ்சாபில் விளையும் தானியத்தில் 90% அரசால் கொள்முதல் செய்யப்படுகிறது. தமிழ்நாட்டில் விளையும் 80 லட்சம் டன் நெல்லில் 20 லட்சம் டன்தான், அதாவது 25%தான் அரசால் கொள்முதல் செய்யப்படுகிறது. வியாபாரியிடம் இருந்து விவசாயிகளுக்கு கட்டுப்படியாகும் விலை ஒரு போதும் கிடைப்பதில்லை.
தீக்கதிர் செய்திக் கட்டுரை ஒன்றில், கோவில், மட நிலங்கள், குத்தகைதாரர்கள் தொடர்பாக அமைச்சர் தந்த விவரம் சொல்லப்பட்டுள்ளது. இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர், 2017 - 2018 துறை மானிய கோரிக்கையில் பேசும்போது, தமது துறையின் கீழ், திருக்கோயில்கள், மடங்கள், அறக்கட்டளைகள் போன்றவை 38,635 உள்ளன என்றும் இவற்றின் சொத்துகளாக நஞ்சை, புஞ்சை நிலம் 4 லட்சத்து 78 ஆயிரம் ஏக்கர் உள்ளது என்றும் 1,37,000 பேர் குத்தகை சாகுபடியாளர்கள் என்றும் சொல்லியுள்ளார். 55,000 பேர் அடி மனை குத்தகைதாரர்கள் என்றும் 35,000 பேர் கட்டிடங்களில் வசிப்பவர்கள் என்றும் 14,000 பேர் வியாபாரம் செய்பவர்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார். (இந்தத் தகவல்கள், விவரங்கள் சரிபார்க்கப்பட வேண்டும்). ஆனால், இந்த கோவில்கள், மடங்கள், அறக்கட்டளை நிலங்களில் பயிர் வைத்து, விவசாயம் செய்பவர்கள் சிலர் மத்தியில் தாவா எழுந்து இரண்டு வழக்குகள், உயர்நீதிமன்றம் சென்றபோது, சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை, சம்பந்தப்பட்ட திருக்கோயில்களோ, இந்து சமய அறநிலையத் துறையோ வழக்காடாதபோது, தானாக புதிதாக வழக்காடி, அனைவருக்கும் குத்தகை, பகடி மற்றும் வாடகையை உயர்த்த வேண்டும் எனவும் பாக்கிகளை ஒரே தவணையில் வசூலிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. பாதகமான விளைவுகள் கொண்ட ஆபத்தான தலையீடு! உழுபவனுக்கு நிலம், குத்தகை ஒப்பந்தங்களை பதிவு செய்வது ஆகியவையே கவனிக்க வேண்டிய விசயங்கள் ஆகும்.
பயிர்க்காப்பீட்டுத் தொகை வழங்குவதில் முறைகேடுகள், ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களின் முறைகேடுகள், உள்ளாட்சி அமைப்புகளின் ஜனநாயகம், அதிகாரம் பறிப்பு, குடிநீர் கூட இல்லை என்ற எல்லா வழிகளிலும் விவசாயிகள் பாதிக்கப்படுகிறார்கள்.
சுதந்திர இந்தியாவில் மிகவும் குறுகிய அடிப்படையிலான நிலப்பிரபு பாதை முதலாளித்துவ வளர்ச்சி மாதிரியே பின்பற்றப்பட்டது. விளைவாக, முதலாளித்துவ வளர்ச்சியின்மை மற்றும் தாறுமாறான, சமச்சீரற்ற முதலாளித்துவ வளர்ச்சியால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. ஒரு பக்கம் மார்க்சால் அடிமை முறைக்கு ஒப்பானது என சுட்டிக்காட்டப்பட்ட சாதியம், ஆழ வேர்கொண்டுள்ள ஆணாதிக்கம், சமீப காலங்களில் மிகவும் வேகமாகப் பரவும் மதவாத நஞ்சு, அலங்கார மேல்பூச்சு ஜனநாயக நிறுவனங்கள் தாண்டி அடியாழம் வரை ஜனநாயகம், மனித உரிமைகள் மறுப்பு ஆகியவை நிலவுகின்றன. மறுபக்கம், நவதாராளவாதக் காலங்களில் நடைபெறும், பறித்தெடுத்தல் மூலமான மூலதனத் திரட்சிக்கு தமிழ்நாடு மோசமான உதாரணமாக மாறியுள்ளது. வீடு மனை வணிகம், அனல் மின்நிலையங்கள், ஓஎன்ஜிசி, மீத்தேன், ஹைட்ரோகார்பன் போன்ற முதலாளித்துவ ஊடுருவல் ஓயாமல் தொடர்கிறது. தங்க நாற்கர மற்றும் ஆறு வழிச்சாலைகள், கனிமவளக் கொள்ளை ஆகியவை, விவசாய, வன நிலங்களை விட்டுவைக்க மாட்டோம் என கொக்கரிக்கின்றன.
தமிழகத்தின் ஓராண்டுக்கான நெல் தேவை 1.25 கோடி டன். விளைநிலம் சுருங்கி, நீர்ப்பாசனம் பிரச்சனையாகி, 80 லட்சம் டன்தான் விளைகிறது. 25 ஆண்டுகளுக்கு முன்பு 75 லட்சம் ஹெக்டேர் நெல் சாகுபடி என்ற நிலை மாறி, இன்று 40 லட்சம் ஹெக்டேர் நெல் சாகுபடியே உள்ளது. டெல்டாவில் சம்பா, தாளடி, குறுவை முப்போக சாகுபடி செய்து உபரியை மற்ற மாநிலங்களுக்கு அனுப்பிய நிலை மாறி, ஒரு போகம் விளைவதே பெரும் பாடாகிவிட்டது. கர்நாடகத்தில் இருந்தும் ஆந்திராவில் இருந்தும் அரிசி வாங்குகிறோம்.
வர்க்க, சாதி முரண்கள் போக, காவிரி நின்று நிலத்தடி நீர் கீழே போய், கிராமப்புற பசுமை, வளமை, கலாச்சாரம், பாரம்பரியம் எல்லாமே விடைபெற்றுச் சென்றுவிட்டன. கலை இலக்கியத் துறைகளுக்குச் சென்றவர்கள் துயரப்பட்டு நினைவேக்கம் கொள்கிறார்கள். இழந்தவர்கள் புதிதாகப் பெற ஏதுமில்லாதபோது, ஒரு புறம், நம்பிக்கை வறட்சியும் மறுபுறம் சொல்லொணாச் சீற்றமும் எழுகின்றன. உச்சநீதிமன்றமும் மத்திய அரசும் தமிழ்நாட்டை வஞ்சிக்கும்போது, எடுபிடி ஓபிஎஸ் - இபிஎஸ் ஆட்சி, தனது கொள்ளையைத் தொடர மத்திய அரசிடம் சரணடைந்துவிட்டது.
கிராமப்புறத் தொழிலாளர்கள்
விவசாய வேலைகள் வெகுவாகக் குறைந்துவிட்டன. டெல்டா மாவட்டங்களில் எந்திரமயமாக்கல், வேலைகளை பெருமளவுக்குப் பறித்து விட்டது. விவசாயம் சார்ந்த வேலைகள் குறைந் ததற்கு ஏற்ப, விவசாயம் சாராத வேலைகள் அதிகரிக்கவில்லை. நகரங்கள் செல்லுதல், பிற மாநிலங்களுக்குச் செல்லுதல், பிழைப்பு தேடி வேறு நாடுகளுக்குக் செல்லுதல் நடக்கிறது. ஆனபோதும், கிராமப்புற வறுமை பிடித்தாட்டுகிறது. விவசாய வேலைகள், பெண்மயமாதலுடன் கூடவே, கிராமப்புறங்களில் ஏழை எளிய பெண்கள் கடன்களால் துன்புறுவது தீவிரமடைந்துள்ளது. முதியோர், மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்ட நலிந்தோர் ஓய்வூதிய ஊழலும் பறித்தெடுத்தலும் கிராமப்புற வறுமையின் கொடூரத்தைப் புலப்படுத்துகின்றன.  பாட்டாளிமயமாதலைக் காட்டிலும் ஒட்டாண்டிமயமாதலே நடக்கிறது.
மகாத்மா காந்தி வேலை உறுதித் திட்டத்தில் வீட்டில் இரண்டு பேருக்கு தரப்பட வேண்டும், ஆண்டுக்கு 300 நாட்கள் வேலை வேண்டும் என்ற நியாயமான கோரிக்கைகள் எழுந்துவரும் சூழலில்தான், இந்தத் திட்ட அமலாக்கம் மிகப் பெரிய ஊழல் மற்றும் கொள்ளையின் ஊற்றுக் கண்ணாக இருக்கிறது. பதிவு செய்தவர்களுக்கு வேலையில்லை. கூலி பாக்கிகள் குவிகின்றன. குடியிருப்பு, குடிநீர், கல்வி, மருத்துவம், சமூக கவுரவம், வேலை, நலப்பயன்கள், கூலி, நிலம் என எல்லாமே கிராமப்புற வறியவர்களுக்கு பெரும் சவால்களாக மாறியுள்ளன.
மார்க்ஸ் 200ல், நவீன காலத் தொழிலாளி பற்றி மார்க்ஸ் சொன்னதை நாம் கிராமப்புறத் தொழிலாளர் விசயத்தில் பொருத்திக் காண வேண்டியுள்ளது. ‘தொழில் முன்னேற்றத்துடன் கூடவே உயர்ந்து செல்வதற்குப் பதிலாக, நவீன காலத்திய தொழிலாளி, தனது வர்க்கம் நிலவுவதற்கு அவசியமான நிலைமைகளுக்கும் கீழே, மேலும் மேலும் தாழ்ந்து செல்கிறான். அவன் ஒட்டாண்டியாகி, ஏதுமில்லாதவன் ஆகிறான். மக்கள் தொகையையும் செல்வத்தைக் காட்டி லும் இல்லாமை அதிவேகமாய் அதிகரிக்கிறது’. வேலை கிடைக்காதோரின் சேமப்பட்டாளம், பிரம்மாண்டமாய் இருப்பது, மூலதனத் திரட்சிக்கு நெம்புகோலாகவும் முன்நிபந்தனையாகவும் இருப்பதை தமிழ்நாட்டில், இந்தியாவில், முதலாளிகள் உணர்ந்தே உள்ளனர்.
முதலாளித்துவம், உழைப்பு மறுஉற்பத்தி ஆவதற்கு, அவசிய உழைப்புக்கு, பொருத்தமான கூலியை தருவதில்லை. அதாவது, தொழிலாளி பிழைத்திருக்க, முதலாளித்துவ உற்பத்திக்கு சந்ததியினரை அனுப்ப, போதுமான கூலி தருவதில்லை. முதலாளித்துவ அரசுகள், பல விதங்களில் முதலாளித்துவத்திற்கு மானியம் தந்து முட்டுக் கொடுக்கின்றன. அந்த வகையில்தான் விலையில்லா, கட்டணமில்லா, விலைக் குறைவு, கட்டணக் குறைவு பொருட்களும் சேவைகளும் வழங்கப்படுகின்றன. (இப்போது இவற்றுக்கும் ஆபத்து வந்துள்ளது).
கிராமப்புற குடும்பத்தில் உள்ள ஒரு தொழிலாளியின் வேலையில் அல்லது விவசாய வேலையில் வரும் வருமானத்தில் எது முதன்மையானது என கிராமப்புற குடும்பங்களில் காண வேண்டியுள்ளது. பெரும்பாலான தொழிலாளர் குடும்பங்களில் விவசாய வேலைகளில் இருந்து வரும் வருமானம், முதலாளித்துவமும் நகரமும் விவசாயத்தில் இருந்து கிராமத்தில் இருந்து வசூலிக்கிற கப்பமாக உள்ளது.
கிராமத்தில் இருந்து நகரம் வந்த தொழிலாளர்கள், பிற பிரிவினர், விவசாய நெருக்கடி, குறைகூலி, அரைகுறை வேலைகள், வேலை இன்மை ஆபத்து, ஆட்கொல்லி, பேரழிவு முதலாளித்துவ வளர்ச்சிப் பாதை பற்றி மேலும் மேலும் கூடுதலாக உணரத் துவங்கியுள்ளனர்.
சமூக அறிவியலாளர் பி.எஸ்.கிருஷ்ணன் தலைமையிலான குழுவின் 2011 அறிக்கைப்படி, கோவில், மட நிலங்கள், பஞ்சமி, பூதான் நிலங்கள், அரசுக் கட்டுப்பாட்டில் உள்ள நிலங்கள் என நிலமில்லாதோருக்கு தர தமிழ்நாட்டில் போதுமான நிலம் உள்ளது என்பதைச் சுட்டிக் காட்டி, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை கழக மேனாள் துணைவேந்தர் டாக்டர் வசந்தி தேவி, தமிழ்நாட்டில் நிலக் கோரிக்கை உயிரோட்டமான கோரிக்கையே என, வாதாடுகிறார். அவரது வாதம் ஏற்கத்தக்கதுதான்.
2018ல் நக்சல்பாரி வழிமரபை
எப்படிப் போற்றுவது?
2017, 1917 ரஷ்யப் புரட்சியின் நூறாண்டு. 2017, 1967 நக்சல்பாரியின், வெண்மணியின் 50ஆவது ஆண்டு. 2018ல் நக்சல்பாரி வழிமரபை எப்படிப் போற்றுவது? தீவிரமடைந்துள்ள விவசாய நெருக்கடியில் இடதுசாரி பதில்வினையை உரத்து முழங்க, அனைத்திந்திய விவசாய கிராமப்புற தொழிலாளர் சங்கமும் அகில இந்திய விவசாய மகாசபாவும் மே 23ல் கும்பகோணத்தில் கருத்தரங்கம் நடத்தவுள்ளன.
உழுது பிழைக்க, விவசாயம் தழைக்க, கிராமம் நிலைக்க, நீர்ப்பாசன வசதி உள்ளிட்ட வசதிகளுடன் நிலம் வேண்டும், கவுரவம் வேண் டும், வேலை வேண்டும். கூலி வேண்டும், நூறு நாட்கள் வேலைத் திட்ட ஊழல் ஒழிய வேண்டும், உள்ளாட்சித் தேர்தல் உடனே வேண்டும், காவிரி வேண்டும், கடனில் இருந்து விடுதலை வேண்டும், டெல்டா, விவசாயம், விவசாயிகள், கிராமப்புறத் தொழிலாளர்கள் காக்கப்பட வேண்டும், குத்தகைகள் பதிவாக வேண்டும், சட்டபூர்வ குடிமனை உரிமைகள் வேண்டும், விவசாயிகள் கிராமப்புற தொழிலாளர்கள் விவசாய விரோத திட்டங்கள் வேண்டாம், கார்ப்பரேட், மதவெறி மோடி ஆட்சி வேண்டாம், சூறையாடும் எடுபிடி பழனிச்சாமி அரசு பதவி விலக வேண்டும் என மே 23ல் முழங்குவோம்.
விவசாய நெருக்கடியால், வேலையின்மையால், தமிழகத்துக்கு இழைக்கப்பட்ட அநீதிகளால், சீற்றமுற்ற தமிழ்நாட்டு மக்கள் விடாமல் நடத்துகிற போராட்டங்கள், நெடு வாசலில் ஒரு தற்காலிக வெற்றியை தந்துள்ளது. மோடியை ஓட வைத்துள்ளது. இந்த வெற்றிகளை தக்க வைத்துக்கொள்ள, உறுதிப்படுத்த, விரிவுபடுத்த விவசாய நெருக்கடியில், இடது திசையில் இருந்து தலையிடுவதும் இயக்கம் காண்பதும் அவசர, அவசியமாகியுள்ளது.

Search