COMMUNIST PARTY OF INDIA (MARXIST - LENINIST) - LIBERATION

COMMUNIST PARTY OF INDIA (MARXIST - LENINIST) - LIBERATION, TAMILNADU

Tuesday, April 3, 2018

டிலீட் பேஸ்புக் பிரச்சாரமும் 
முதலாளித்துவம் உருவாக்கும் 
பூதங்களும்

முதலாளித்துவம் உருவாக்கும் பூதங்களை முதலாளித்துவத்தாலேயே அடக்க முடியாமல் போகிறது என்று கம்யூனிஸ்ட் அறிக்கை சொல்கிறது.
இப்போது ஒரு பூதம் புறப்பட்டு ட்ரம்ப்பை, மோடியை குற்றவாளிக் கூண்டில் ஏற்றப் பார்க்கிறது. டிஜிட்டல் இந்தியா என்று ஓயாமல் பிதற்றித் திரிகிறார் நமது பிரதமர். அதில் முகேஷ் அம்பானி நலன் மட்டுமே உண்டு என்றாலும் கூடவே நரவேட்டை நரேந்திர மோடி போன்றவர்களை ஆட்சியில் அமரச் செய்வதில் பங்கு வகிக்கும் ஆற்றலும் டிஜிட்டல் உலகத்துக்கு உள்ளது எனச் சொல்லப்படுகிறது.
பாசிசம் அதிநவீன தொழில்நுட்பத்தை தனது நோக்கங்களுக்கு பயன்படுத்தும்போது என்ன மோசமான விளைவுகள் நேரும் என்று நாம் ஏற்கனவே பெங்களூருவின் இடம்பெயர்ந்த தொழிலாளர்கள் வெறும் வாட்சப் வதந்திகளால் திடீரென்று ஒரு நாள் வெளியேறிப் போனதில், போலி காணொளி காட்சிகளின் அடிப்படையில் முசாபர்நகர் இசுலாமியர்கள் வேட்டையாடப்பட்டதில் பார்த்திருக்கிறோம். இப்போது கிளம்பியுள்ள பூதம் நம்மை பாஜகவுக்கு வாக்களிக்கச் செய்யும் ஆற்றல் பெற்ற பூதம் என்று சொல்லப்படுகிறது.
கேம்பிரிட்ஜ் அனாலிடிகா என்ற பிரிட்டிஷ் நிறுவனம் காலனி பிடித்தலில் புதிய வகையா என்று கேள்வி எழுப்பப்படும் அளவுக்கு மோசடி செய்திருக்கிறது. டிஜிட்டல் மோசடி. பேஸ்புக் பயனர்கள் விவரங்களை மொத்த மொத்தமாக முறைகேடாக எடுத்து அவர்கள் பழக்க வழக்கங்கள், செயல்பாடுகள், கருத்தியல்கள், முன்னுரிமைகளை - இவை சைக்கோகிராபிக் டேட்டா, மனநிலை தரவுகள் என்று சொல்லப்படுகின்றன - தெரிந்து கொண்டு அவற்றுக்கு ஏற்றாற்போல் பிரச்சாரம் செய்து தேர்தல் வெற்றிகளை உறுதி செய்துள்ளது. டொனால்ட் ட்ரம்ப் தேர்தலில் வெற்றி பெற இணையதள பிரச்சாரத்தை இந்த நிறுவனம் வடிவமைத்தது என்று சொல்லப்படுகிறது. பிரெக்சிட் பொது வாக்கெடுப்பு நடந்தபோது பிரெக்சிட் ஆதரவு பிரச்சாரத்துக்காக, செலவு விதிகளை மீறி 625000 பவுண்டுகள் நிறுவனத்துக்கு தரப்பட்டுள்ளது.
கேம்பிரிட்ஜ் பல்கலை கழகத்தைச் சேர்ந்த கோகன் மற்றும் சேன்சலர் என்பவர்கள், கேம்பிரிட்ஜ் அனாலிடிகா நிறுவனத்துக்காக பணியாற்றியபோது, திஸ் இஸ் யுவர் டிஜிட்டல் லைஃப், இதுதான் உங்கள் டிஜிட்டல் வாழ்க்கை என்ற செயலியை உருவாக்குகிறார்கள். நம் ஊரில் ஜோசியம் சொல்வது போன்ற ஒன்று. இந்தச் செயலியை 2,70,000 பேர் பதிவிறக்கம் செய்கிறார்கள். அந்தப் பயனர்களின் விவரம் முழுவதும் நிறுவனத்துக்கு அவர்கள் ஒப்புதலுடன் கிடைக்கிறது. நிறுவனம் இவர்கள் விவரங்கள் மட்டுமின்றி இவர்களது நட்பு வட்டங்களில் உள்ளவர்கள் விவரங்களையும் அவர்களது அனுமதியின்றி எடுத்துக் கொள்கிறது. ஆங்கிலத்தில் ஹார்வெஸ்ட், அறுவடை என்று நாசுக்காகச் சொல்கிறார்கள். நேரடியாகச் சொல்வதென்றால் இது தகவல் திருட்டு. இப்படி 5 கோடி பேஸ்புக் பயனர் விவரங்களை நிறுவனம் தன்னிடம் இன்னும் வைத்துள்ளது. இந்த விவரங்களை ட்ரம்ப்பின் 2016 தேர்தல் பிரச்சாரத்துக்கு பயன்படுத்தியது, தேர்தல் போக்கை மாற்றியமைக்க, நிர்ணயிக்க, பாலியல் குற்றங்கள் உள்ளிட்ட பொய்ச் செய்திகளை உருவாக்குவது உள்ளிட்ட பல்வேறு உத்திகளை நிறுவனம் கையாண்டது என்பது இப்போது எழுந்துள்ள குற்றசாட்டு. நடந்தது அய்க்கிய அமெரிக்காவில், அய்ரோப்பாவில். இதற்கு ஏன் மோடியை இழுக்கிறீர்கள் என்று மோடி பக்தர்கள் கேட்பார்கள்.
கேம்பிரிட்ஜ் அனாலிடிகாவின் முன்னாள் ஊழியர் கிறிஸ்டோபர் வைலி, தங்களது நிறுவனம் இந்தியாவில் விரிவாக பணியாற்றியுள்ளது என்றும் இது கிட்டத்தட்ட நவீன காலனியாக்கம் என்றும் சொல்கிறார். கேம்பிரிட்ஜ் அனாலிடிகா நிறுவனத்தின் மூல நிறுவனமான ஸ்ட்ரேடஜிக் கம்யூனிகேசன்ஸ் லிமிடெட் (எஸ்சிஎல்) நிறுவனம் 2003ல் இருந்தே இந்தியாவின் சில தொகுதிகளில் சில தலைவர்களுக்காக தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டுள்ளதாக செய்திகள் வெளியாகின்றன. இப்போது 2019 தேர்தல் பிரச்சாரம் தொடர்பாக பாஜக, காங்கிரஸ் கட்சிகளை நிறுவனத்தின் பிரதிநிதிகள் அணுகியுள்ளனர். இந்தியாவில் தனது பணி அனுபவம் பற்றிய பட்டியலில் 2010 பீகார் தேர்தல்களை நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. உள்நாட்டு, வெளிநாட்டு வாடிக்கையாளர்களை பிடிக்க தனது இந்திய அனுபவத்தை நிறுவனம் முன்வைத்துள்ளது. இந்தியாவில் 600 மாவட்டங்களின் 7 லட்சம் கிராமங்களில் உள்ளவர்களின் விவரங்கள் தன்னிடம் உள்ளதாகவும் அந்த விவரங்கள் தொடர்ந்து இற்றைப்படுத்தப்படுவதாகவும் நிறுவனம் சொல்கிறது. இந்தியாவில் உள்ள பேஸ்புக் பயனர்களின் தகவல்களை பேஸ்புக் நிறுவனம் கேம்பிரிட்ஜ் அனாலிடிகா நிறுவனத்துக்கு அனுமதியின்றி தந்துள்ளதா எனக் கேட்டு தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் பேஸ்புக் நிறுவனத்துக்கு அறிவிப்பாணை அனுப்பியுள்ளது.
கேம்பிரிட்ஜ் அனாலிடிகா நிறுவனம் பேஸ்புக் பயனர் விவரங்களை முறைகேடாக பயன்படுத்திய செய்தி வெளியானதை ஒட்டி டிலீட் பேஸ்புக், பேஸ்புக்கை அழித்து விடுங்கள் என்று ஒரு பிரச்சாரம் சமீபத்தில் பேஸ்புக்கிலேயே மேற்கொள்ளப்பட்டது. இந்திய ஆட்சியாளர்களைப் பொறுத்தவரை, பேஸ்புக் மூலம்தான் இந்திய வாக்காளர் விவரங்களைப் பெற வேண்டும் என்ற அவசியம் இல்லை. பேஸ்புக்கை டிலீட் செய்துவிடலாம் என்று இந்திய வாக்காளர்கள் முடிவெடுத்தாலும் ஆதார் என்ற இன்னும் ஒரு பெரிய பூதத்திடம் இருந்து தப்பிப்பது கிட்டத்தட்ட சாத்தியமில்லை என்ற நிலையை பாசிசம் உருவாக்கிவிட்டது.
தனியார்மயம் வந்தால் எல்லாம் சரியாகிவிடும், நாட்டில் சுபிட்சம் தழைக்கும் என்று சொல்லிக் கொண்டிருப்பவர்கள் அந்த வாதம் அடுத்தடுத்து சந்தி சிரிப்பதைப் பார்க்கிறார்கள். டிஜிட்டல்மயம் தனிநபர் விவகாரங்கள் தொடர்பான சுதந்திரமும் பாதுகாப்பும் அந்தரங்கமும் தரும் என்று சொல்லி வந்தவர்கள் ஆதார் தகவல்கள் கசிவை அடுத்து பேஸ்புக் தகவல்கள் அவர்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்படுவதை, அவர்களது மனநிலை இப்படித்தான் இருக்கும் என்று வரையறுக்கப்படுவதைப் பார்க்கிறார்கள். ட்ரம்ப்பின் வெற்றியையோ, மோடியின் வெற்றியையோ கேம்பிரிட்ஜ் அனாலிடிகா போன்ற நிறுவனங்கள் மேற்கொள்ளும் வெறும் டிஜிட்டல் பிரச்சாரம் மட்டுமே தீர்மானித்துவிடாது. சூழல் அதை தீர்மானிக்கும். ஆனால் தேர்தல் வெற்றிகளுக்கு அப்பால், ஒரு குறிப்பிட்ட மனநிலையை, பரவலாக அல்லாமல், இந்த விவரங்கள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்ட குறிப்பிட்ட ஒரு சிறு பிரிவினர் மத்தியில் உருவாக்கும் சாத்தியப்பாடு இன்றைய சூழலில் மிகவும் ஆபத்தானது.
பேஸ்புக் செயல்பாடுகளில் இருந்து வாக்காளர்கள் மனநிலை தொடர்பான விவரங்களை அறிந்து அதன் மூலம் வாக்காளர்கள் வாக்களிக்கும் முறை மீது தாக்கம் செலுத்த தேர்தல் அரசியல் கட்சிகள் முயற்சி செய்யும் என்றால், பேஸ்புக்கை பயன்படுத்தி அவர்களது மக்கள் விரோத கொள்கைகளை நடவடிக்கைகளை தொடர்ந்து அம்பலப்படுத்துவதும் நடந்துகொண்டு இருக்கிறது. முதலாளித்துவத்தில் எழுகிற தொழில்நுட்பம் முதலாளித்துவத்துக்கு சேவை செய்வது நடந்தாலும் அது அதன் எதிரி கைகளிலும் ஆயுதமாகின்றது.

Search