COMMUNIST PARTY OF INDIA (MARXIST - LENINIST) - LIBERATION

COMMUNIST PARTY OF INDIA (MARXIST - LENINIST) - LIBERATION, TAMILNADU

Tuesday, April 3, 2018

தமிழக மக்களுக்கு அனைத்தும்தழுவிய வஞ்சகம் இழைக்கும் மோடி அரசு மண்டியிட்டு கிடக்கும் பழனிச்சாமி அரசு

அரசியல் சாசன ஆட்சி முறைக்கு எதிராக, உச்சநீதிமன்றத் தீர்ப்பை அமலாக்காமல், காவிரி மேலாளுமை வாரியம் மற்றும் கண்காணிப்பு குழு அமைக்க மத்திய அரசு மறுத்துள்ளது.
தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரப் பிரச்சனைக்கு தீர்வு காண்பதை மேலும் தள்ளிப்போட, பிரச்சனையில் மேலும் அரசியல் ஆதாயம் தேட, தீர்ப்பு பற்றி விளக்கம் கேட்டு உச்ச நீதிமன்றத்தை மத்திய மோடி அரசு அணுகியுள்ளது. காவிரி மேலாளுமை வாரியம் அமைக்கப்பட்டால், தேர்தலைச் சந்திக்கவிருக்கும் கர்நாடகாவில், தீர்ப்பை இனிப்பு கொடுத்து வரவேற்ற கர்நாடகாவில் பதட்டம் ஏற்படும் என்று காரணம் சொல்கிறது. தேர்தலுக்காக எந்த ‘பதட்டத்தையும்’ உருவாக்க பாஜக தயாராக இருப்பதாக உச்சநீதிமன்றத்தில் பாஜக சொல்லியுள்ளது என்று நாம் இதை வாசிக்கலாம். மட்டுமின்றி, காவிரி நீர் உரிமை கோரும் போராட்டத்தில் தமிழக மக்களை மீண்டும் துவங்கிய இடத்திலேயே நிறுத்துவது என்ற வஞ்சகமும் இதில் உள்ளது.
உச்சநீதிமன்றத் தீர்ப்பை அமல்படுத்தாமல் நீதிமன்ற அவமதிப்பு செய்துள்ளதாக தமிழக அரசு மத்திய அரசு மீது குற்றம் சுமத்தியுள்ளது. இதற்காக உச்சநீதிமன்றத்தில் வழக்கும் தொடுத்துள்ளது. உச்சநீதிமன்றமும் வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாகச் சொல்லியுள்ளது. மீண்டும் வழக்கு, விசாரணை, தள்ளிப் போடுவது, மத்திய அரசும் தமிழக அரசும் மாற்றி மாற்றி மனு போடுவது, கர்நாடக அரசும் சட்டரீதியாக ஏதாவது செய்வது, கர்நாடகத்தில் அவ்வப்போது கலகங்களை உருவாக்குவது என்று எல்லாம் மீண்டும் ஒரு சுற்று வரும் ஏற்பாட்டையே பழனிச்சாமி அரசும் செய்துள்ளது. தீர்ப்பு அமலாக்கத்தில் மோடி அரசின் துரோகத்தை தொடர்ந்து அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி முதலமைச்சர் பழனிச்சாமி வெளியிட்டுள்ள ஆறு பக்க அறிக்கையில் எந்த புண்ணாக்கும் இல்லை. ஆறுவார காலம் பொறுமை காத்தது ஏன் என்று தனது அரசாங்கத்தின் கையாலாகாதனத்துக்கு காரணம் வேறு சொல்கிறார். நீரோ மன்னன் பிடில் வாசித்தது போல்தான் பழனிச்சாமி அறிக்கை வெளியிட்டதும் உள்ளது. மத்திய அரசுக்கு உரிய நேரத்தில் நிர்ப்பந்தம் தராமல், உண்ணாவிரதம், தற்கொலை பேச்சு என தமிழக மக்கள் உரிமைகளை தமிழக அரசு கொச்சைப்படுத்துகிறது. விவசாயத்துக்கு நீர் இல்லாததால் ஏற்படும் நெருக்கடியையும் கார்ப்பரேட் ஊடுருவல் தாக்குதலையும் தமிழக டெல்டா மாவட்ட மக்கள் ஒரே சமயத்தில் சந்திக்கிறார்கள்.
காவிரி மேலாளுமை வாரியம் அமைக்கப்படக் கூடாது என்று சொல்லும் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவின் காங்கிரசுடன் கூட்டாக சேர்ந்துகொண்டு காவிரியில் தமிழக மக்கள் உரிமையை காக்கப் புறப்படுவோரை தமிழக மக்கள் நம்ப மாட்டார்கள்.பாஜக வுக்கும் காங்கிரசுக்கும் கர்நாடக தேர்தலில் ஆதாயம் பெறுவதே முக்கியம்.
ஜெயலலிதாவால் அடிக்கல் நாட்டப்பட்டு கருணாநிதியால் திறந்து வைக்கப்பட்ட ப.சிதம்பரத்தின் ஆசியுடன் இயங்குகிற வேதாந்தாவின் ஸ்டெர்லைட் தாமிர உற்பத்தி ஆலை, தூத்துக்குடி மக்களின் சாதாரண வாழ்க்கையையும் நாசமாக்கிவிட்டது. காற்றில் நீரில் நஞ்சு, புற்றுநோய் உள்ளிட்ட அடையாளம் காண முடியாத நோய்கள் என கருவில் இருக்கும் சிசு முதல் மக்கள் உருக்குலைந்து போயிருக்கிறார்கள். அம்மா வழியில் ஆட்சி நடத்துபவர்கள், ஒரு கட்டத்தில் ஜெயலலிதா ஆட்சியில் மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையை மூட மறுக்கிறார்கள். மக்கள் உருக்குலைந்து போய் இருக்கும்போது விரிவாக்கத்துக்கு துணை நிற்கிறார்கள். நரேந்திர மோடிக்கு நெருக்கமான அனில் அகர்வால் லாபம் சம்பாதிக்க மட்டுமே ஸ்டெர்லைட் உதவுகிறதே தவிர, நிறுவனம் சொல்வதுபோல், நாட்டின் தாமிர தேவையை பூர்த்தி செய்யும் உன்னத நோக்கத்துக்காக அல்ல. தாமிரம் உனக்கு, லாபம் உனக்கு, கேன்சர் எங்களுக்கா என்ற கேள்வி தாங்கிய பதாகையை, 50 நாட்களாக நடக்கும் போராட்டத்தில் ஒரு குழந்தை பிடித்துக் கொண்டு நிற்கிறது. தனது மத்திய அரசு எடுபிடி சேவையில் எதற்கும் அசராமல் முதலமைச்சர் பழனிச்சாமி தொடர்கிறார்.
2014ல் நரேந்திர மோடி வெற்றி பெற்ற பிறகு, இந்துத்துவாவின் பிரிக்க முடியாக அங்கமான சாதிய கட்டமைப்பு, வெறியாட்டம் போடுகிறது. இந்தப் பின்னணியில் தலித்துகள், பழங்குடியினர் மீதான வன்கொடுமைகளைத் தடுக்கும் தண்டிக்கும் சட்டத்தை கறாராக அமல்படுத்த வேண்டிய தேவை இருக்கும் போது, உச்சநீதிமன்றம் இந்தச் சட்டத்தை நீர்த்துப் போகச் செய்துள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் மீது பழிசுமத்தி வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுகிறீர்களே என்று கிளர்ந்தெழுந்தவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். சமூகரீதியாக மிகவும் பிற்போக்கான இந்தத் தீர்ப்பு ரத்து செய்யப்பட வேண்டும்; சட்டம் கறாராக அமலாக்கப்பட மத்திய மாநில அரசுகள் பொருளுள்ள நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.
இந்த ஒட்டுமொத்த கொந்தளிப்பான பின்னணியில், டெல்டா பகுதி மக்களை, தமிழக விவசாயத்தை விவசாயிகளை பாதுகாக்க, காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின் அடிப்படையிலான உச்சநீதிமன்றத் தீர்ப்புப்படி காவிரி மேலாளுமை வாரியமும் கண்காணிப்பு குழுவும் உடனடியாக அமைக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியும் ஸ்டெர்லைட் ஆலை உடனடியாக மூடப்பட வேண்டும் என வலியுறுத்தியும் தலித்துகள், பழங்குடியினர் மீதான வன்கொடுமைகளைத் தடுக்கும் தண்டிக்கும் சட்டம் கறாராக அமல்படுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தியும் ஏப்ரல் 5 அன்று தமிழ்நாடு முழுவதும் பொது வேலைநிறுத்தம் நடத்த இககமாலெ அழைப்பு விடுத்துள்ளது.
எந்தப் போராட்டத்தில் கவனம் குவிப்பது என்று தமிழக மக்கள் தேர்வு செய்து கொள்ள வேண்டும் என்று மோடி அரசும் பழனிச்சாமி அரசும் தமிழக மக்கள் மீது பல்முனை தாக்குதல் தொடுத்துள்ளன. எல்லா பிரச்சனைகளையும் எதிர்கொள்வோம் என தமிழக மக்களும் உறுதியேற்றுள்ளார்கள். ஒருபுறம் காவிரி நீர் உரிமை கோரும் போராட்டம், தமிழக விவசாயிகள் வாழ்வாதாரம் காக்கும் போராட்டம், அனுமதி மறுக்கப்படும் மெரினாவில் திடீரென கூடி ஆர்ப்பாட்டம் நடத்துவது, வள்ளுவர் கோட்டத்தில் திடீர் போராட்டம், மறுபுறம் ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்புப் போராட்டம், இன்னும் ஒருபுறம் நியூட்ரினோ எதிர்ப்பு, காவிரி உரிமை கோரியும் சுங்கக் கட்டண உயர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும் சுங்கச் சாவடிகள் உடைத்து நொறுக்கப்படுவது என தமிழ்நாடெங்கும் போராட்டத் தீ பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. தமிழக மக்களின் உரிமைகளுக்கான இந்த போராட்டக் குரல்களை உதா சீனப்படுத்தும் மோடி, பழனிச்சாமி அரசுகளுக்கு தமிழக மக்கள் சரியான பாடம் சொல்லிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

Search