COMMUNIST PARTY OF INDIA (MARXIST - LENINIST) - LIBERATION

COMMUNIST PARTY OF INDIA (MARXIST - LENINIST) - LIBERATION, TAMILNADU

Tuesday, April 3, 2018

வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை நீர்த்துப் போகச் செய்யும் 
உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்கள் நீக்கப்பட வேண்டும்

குஜராத்தில், தலித் இளைஞர் ஒருவர், சொந்தமாக குதிரை வைத்திருந்ததால், அந்த குதிரை மீது சவாரி செய்ததால், அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
இது இப்படித்தான் நடந்ததா, வேறு காரணம் உள்ளதா எனப் பார்க்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட காவல்துறையினர் காலம் தாழ்த்தினாலும், வேறு ஒரு காரணம் எதையும் நாட்கள் கடந்த பின்னும் அவர்களால் சொல்ல முடியவில்லை. நாட்டில் தலித்துகள் மீதான வன்கொடுமை புகார்களில் குறைவான தண்டனை விகிததத்தில் குஜராத் முதல் இடத்தில் இருக்கிறது.
தலித்துகள் மீதான தாக்குதல்களில் உத்தரபிரதேசம் முதல் இடத்தில் இருக்கிறது. இங்கும் வன்கொடுமைச் சட்டத்தில் ஒரு புகாரை பதிவு செய்வது சாதாரண விசயமல்ல.
தமிழ்நாட்டில், விழுப்புரத்தில் சமீபத்தில் தலித் சிறுவன் கொல்லப்பட்டு, தாயும் மகளும் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்ட கொடூரமான நிகழ்வில், சுற்றியுள்ள மக்கள் சொல்லும் நிலப் பிரச்சனை, தொடர் மிரட்டல் உள்ளிட்ட காரணங்களுக்கு அப்பால், தொடர் குற்றங்களில் ஈடுபடும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நாடு முழுவதும் தலித்துகள் மீதான வன்கொடுமைச் சம்பவங்கள் அதிகரித்துக் கொண் டிருப்பதாகத்தான் தேசிய குற்றப் பதிவு அமைப்பும் சொல்கிறது. ஒவ்வொரு 15 நிமிடத்துக்கும் ஒரு தலித் மீது வன்கொடுமை நிகழ்த்தப்படுகிறது. ஒவ்வொரு நாளும் ஆறு தலித் பெண்கள் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். கடந்த பத்தாண்டுகளில் தலித்துகள் மீது நடக்கும் வன்கொடுமைச் சம்பவங்கள் 66% அதிகரித்துள்ளன. கொடுக்கப்படும் புகார்களில் 15% முதல் 16% வரை புகார்கள்தான் முடிக்கப் படுகின்றன. அவற்றிலும் 75% புகார்களில் குற்றம் சுமத்தப்பட்டவர்கள் விடுவிக்கப்படுவது அல்லது புகார்கள் திரும்பப்பெறப்படுவது என  நடந்துவிடுகிறது. 77% புகார்களில் குற்றச்சாட்டு குறிப்பாணை வழங்கப்பட்டு, 15.4% புகார்களில் தான் தண்டனை வழங்கப்படுகிறது. என்ன கொடூரமான சமூகம் இது! நாகரிகம், நுனி நாக்கு ஆங்கிலம், அறிவியல் வளர்ச்சி, இன்டர்நெட், டிஜிட்டல்மயம்..... எல்லாம் நாசமாகிப் போகட்டும்!
இந்த விவரங்கள் பதிவு செய்யப்பட்ட புகார்கள் அடிப்படையிலானவை. நடக்கும் எல்லா வன்கொடுமை நிகழ்வுகளிலும் புகார்கள் தரப்படுவதில்லை. புகார் தந்தால் அடுத்த தாக்குதலுக்கு ஆளாக நேரும் என்ற அச்சத்தில்தான் தலித் மக்கள் இருக்கிறார்கள். 44 பேர் தீயில் உயிருடன் கொளுத்தப்பட்ட வழக்கில் கூட குற்றம் செய்தவனை விடுவித்த மகராசன்களை பார்த்தவர்கள் அவர்கள். தீவிரமான எதிர்ப்புகள், போராட்டங்கள் என கடந்த பிறகு அறுதியிடுவோம் என்று எழும்போது, பாசிச சக்திகளும் வலுப்பெற்றிருக்கும்போது, அவர்கள் மீதான தாக்குதல்கள் அதிகரிக்கின்றன. இந்தச் சூழலில் சாதி அடிப்படையில் தலித்துகள் மீது நடத்தப்படும் வன்கொடுமைகளை தடுக்கும் சட்டத்தை உச்சநீதிமன்றமே நீர்த்துப் போகச் செய்திருப்பது நாடெங்கும் உள்ள ஜனநாயக சக்திகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.
உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஏ.கே.கோயல் மற்றும் யு.யு.லலித், டாக்டர் சுபாஷ் காசிநாத் மஹாஜன் என்பவர் தொடுத்த மேல்முறையீட்டில், மார்ச் 20, 2018 அன்று வழங்கிய தீர்ப்பில் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் பாதிக்கப்படும் தலித்துகளுக்கு ஆதரவாக இருக்கிற மிக ஆதாரமான பிரிவுகளை திருத்தி வழிகாட்டுதல் வெளியிட்டுவிட்டனர். இந்த வழிகாட்டுதல், வன்கொடுமை தடுப்புச் சட்டம் 1989 பழிவாங்கும் நோக்கத்தில் தவறாக பயன்படுத்தப் படுகிறது என்ற நீதிபதிகளின் முடிவின் அடிப்படையில் சொல்லப்பட்டுள்ளன. எனவே, இந்தச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவருக்கு பிணை தரக்கூடாது என்ற பிரிவை இந்த வழிகாட்டுதல் நீக்குகிறது. மேலும், அரசு ஊழியர் ஒருவர் மீது இந்தச் சட்டத்தில் புகார் அளிக்கப்பட்டால், மேலதிகாரி ஒப்புதலுடன்தான் அவர் கைது செய்யப்பட வேண்டும், அரசு ஊ யர் அல்லாதவர் மீது புகார் அளிக்கப்பட்டால், காவல்துறை மூத்த கண்காணிப்பாளர் ஒப்புதலுடன்தான் அவர் கைது செய்யப்பட வேண்டும், இந்தக் கைதும் விசாரணை அடிப்படையில் அவசியம் என்று கருதப்பட்டால்தான் நடக்க வேண்டும், கைது செய்யப்பட்டவர் மேலும் காவலில் வைக்கப்பட வேண்டும் என்றால் மாவட்ட நீதிபதி, கைதுக்கான காரணங்களை பரிசீலனை செய்து அவர் அனுமதியின் பேரில்தான் அது நடக்க வேண்டும், அப்பாவி ஒருவர் மீது பொய் புகார் தரப்படுவதைத் தவிர்க்க, காவல்துறை துணை கண் காணிப்பாளர் துவக்ககட்ட விசாரணை நடத்தி புகார், சட்டத்தின் கீழ் எழுப்பப்படுவது சரியா, அல்லது அது பொய் புகாரா என அறிய வேண்டும் என்று சொல்லி சட்டம் தலித் மக்களுக்கு தந்து வந்த பாதுகாப்புகளை நீக்கிவிட்டது.
1955ல் வெறும் தீண்டாமை (குற்றங்கள்) சட்டமாக வந்து, 1976ல் சிவில் உரிமைகள் பாதுகாப்புச் சட்டமாக பெயர் மாற்றம் அடைந்து, 1989ல் பட்டியல் சாதி மற்றும் பழங்குடியினர் (வன்கொடுமை தடுப்பு) சட்டமாக மேம்படுத்தப்பட்டு, அதிலும் குறைபாடுகள் இருந்ததால் 2015ல் மேலும் திருத்தங்கள் செய்யப்பட்டு.... இந்த ஒவ்வொரு கட்டத்திலும் தலித் மக்களின் கடுமையான போராட்டங்களைக் கண்ட ஒரு சட்டத்தின் குறைந்தபட்ச பாதுகாப்புகளை இந்த வழிகாட்டுதல்கள் மிகச் சில வரிகளில் நீக்கிவிட்டன.
வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில்  புகார் பதிவு செய்வதற்கே கூட பெரும்போராட்டம் நடத்த வேண்டியுள்ள சூழலில் உள்ளூர் காவல்துறையின் அதிகாரத்துக்குள் பாதிக்கப்பட்ட தலித்துகளை இந்த வழிகாட்டுதல்கள் தள்ளிவிடுகின்றன. காவல்துறையின் உயரதிகாரிகள் சாதியாதிக்க அணுகுமுறைக்கு பெயர் எடுத்தவர்கள்.பாதிக்கப்படும் தலித்துகளுக்கு காவல் நிலையங்களில் புகார் பதிவு செய்வதில், முதல் கட்ட விசாரணை நடத்தப்படுவதில் நியாயம் வழங்கப்படும் என்று சொல்லவே முடியாது. முதல் கட்டத்திலேயே எல்லாம் முடிந்துவிடும். சட்டப் பாதுகாப்பு இருக்கும்போதே நியாயம் கிடைக்காதபோது, அதை நீக்கிவிட்ட பிறகு பாதிக்கப்படுகிற, தாக்குதல்களுக்கு உள்ளாகிற தலித்துகளுக்கு அநீதி மட்டுமே செய்யப்படும்.
இந்தச் சட்டத்தின் பெயரால் சாதியம் நிலைநிறுத்தப்படுகிறது என்று வேறு நீதிபதிகள் கருத்துச் சொல்லியுள்ளார்கள். நீதிபதிகளில், உச்சநீதிமன்ற நீதிபதிகளில் போதுமான அளவு தலித்துகள் பிரதிநிதித்துவம் இருந்தால் இது போன்ற வழக்குகளில் ஓரளவாவது நியாயம் கிடைக்கக் கூடும். தலித்துகளை நடுத்தெருவில் கட்டி வைத்து அடிக்கும் கொடுமை நடக்கும் இந்தியாவில்தான் இந்த நீதிபதிகள் இருக்கிறார்கள் என்று நாம் நம்ப வேண்டும். இப்படி ஒரு தீர்ப்பைச் சொல்ல 89 பக்க காரணகாரியங்கள் வேறு சொல்கிறார்கள். அவர்களைப் பொறுத்தவரை, பாதிக்கப்படும் தலித்துகள் பொய் சொல்கிறார்கள். அவர்களைப் பொறுத்தவரை தலித்துகள், பழங்குடியினர் மீது வன்கொடுமை நடப்பதில்லை. அவர்களைப் பொறுத்தவரை வன்கொடுமை தடுப்புச் சட்டம் சாதியத்தை பாதுகாக்கிறது!
வன்கொடுமை தடுப்புச் சட்டம் அரசியல் சாசனத்திற்கு உகந்ததுதான் என்று உச்சநீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் அமைப்புச் சட்ட அமர்வம் வழங்கிய தீர்ப்பை கணக்கில் கொண்ட பிறகும், இந்த வழக்கில் நீதிபதிகள் லலித் மற்றும் கோயல் வழங்கியுள்ள தீர்ப்பு சரியல்ல.
நாடெங்கும் இந்த வழிகாட்டுதல்களுக்கு எதிர்ப்பு எழுந்த பின்னணியில் தேஜமு அமைச்சரான ராம் விலாஸ் பாஸ்வான் தலைமையில் ஒரு குழு சட்ட அமைச்சரை சந்தித்து இந்த வழிகாட்டுதல்களுக்கு எதிராக மறுபரிசீலனை மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது. இந்த வழிகாட்டுதல்களுக்கு எழுந்துள்ள எதிர்ப்பின் வலுவால் சட்ட அமைச்சகமும் அதற்கு ஒப்புக்கொண்டுள்ளது. ஏப்ரல் 3 அன்று இந்த மனு தாக்கல் செய்யப்படலாம் என்று சொல்லப்படுகிறது. வழக்கமாக அதிகம் பேசும் மோடி மக்கள் நலன் பந்தாடப்படும் இது போன்ற பிரச்சனைகளில் வழக்கம் போல் ஏதும் பேசாமல் அமைதி காக்கிறார்.
ஏப்ரல் 2 அன்று நாடெங்கும் உள்ள தலித் அமைப்புகள் இந்த வழிகாட்டுதல்களுக்கு எதிராக நாடு தழுவிய முழுஅடைப்புக்கு அழைப்பு விடுத்து, அதை வெற்றிகரமாக நடத்தியும் காட்டியுள்ளனர். இககமாலெ இந்த முழுஅடைப்பு போராட்டத்தில் கலந்துகொண்டு, வன்கொடுமை சட்டத்தை நீர்த்துப் போகச் செய்யும் முயற்சிகளை தடுத்தாக வேண்டும் என்று கோரியது.
உத்தரபிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் முதலமைச்சரான பிறகு குற்றங்களை கட்டுப்படுத்துவது என்ற பெயரில் உத்தரபிரதேச காவல்துறை மோதல் படுகொலைகளில் இறங்கியுள்ளது. இதுவரை 1100க்கும் மேற்பட்ட மோதல் நடவடிக்கைகளில் 49 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 370 பேர் படுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். 3000க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் ஏன் தலித்துகள், இசுலாமியர்கள், பிற்படுத்தப்பட்ட பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் என்று கேள்வி எழுந்துள்ளது.
ஏப்ரல் 2 அன்று தலித் அமைப்புகள் நடத்திய பாரத் பந்த் எதிர்ப்புப் போராட்டத்தை ஒட்டி மத்தியபிரதேசம், உத்தரபிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில், தலித்துகள் கொல்லப்பட்டுள்ளனர். வன்கொடுமையே வாழ்க்கை என்று நீங்கள் இருக்க வேண்டும், எதிர்த்து எழக்கூடாது, நியாயம் கேட்கக் கூடாது என்று நாட்டில் உள்ள தலித்துகளுக்கு பாசிச மோடி அரசு செய்தி சொல்லப் பார்க்கிறது. இதை அனுமதிக்கக் கூடாது.
தண்டனை பற்றிய அச்சமின்றி கொலைகள் செய்ய அதிகாரம் கேட்கிறது. அதிகாரம் இல் லாத இடத்தில் கொலைகள் செய்ய ஏதுவாக சட்டத்தை மாற்றப் பார்க்கிறது. மோடி அரசு, உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்களுக்கு எதிராக மறுசீராய்வு மனு தாக்கல் செய்தாக வேண்டும், தலித் மக்கள் விரோத வழிகாட்டுதல்களை செயலிழக்கச் செய்ய வேண்டும் என்ற நிலையை நாட்டின் போராடும் ஜனநாயக சக்திகள் உருவாக்க வேண்டும்.

Search