COMMUNIST PARTY OF INDIA (MARXIST - LENINIST) - LIBERATION

COMMUNIST PARTY OF INDIA (MARXIST - LENINIST) - LIBERATION, TAMILNADU

Monday, April 30, 2018

பெட்ரோல் விலை அதிகரிப்பு

சாமான்ய மக்கள் மீது மோடி அரசாங்கம்
தொடுத்துள்ள ஒட்டுமொத்த போரின் ஒரு பகுதி

ஏப்ரல் 22 அன்று டில்லியில் பெட்ரோல் விலை ரூ.74.40. டீசல் விலை ரூ.65.65. சென் னையில் ரூ.77.34 மற்றும் ரூ.67.27. தமிழ்நாட்டில் அதிகபட்சமாக கடலூரில் பெட்ரோல் விலை ரூ.78.97.
பெட்ரோல், டீசல் விலை உயர்வு கழுத்தை நெறிக்கிறது எனக் கேட்டால் மத்திய அரசு அதை ஜிஎஸ்டி கீழ் கொண்டு வர விரும்புகிறது, மாநில அரசுகள் மத்தியில் கருத்தொற்றுமை வேண்டும் என்று சொல்வதை நிதியமைச்சர் வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.
இந்திரா காந்தியை விட தாம் திறமையான பிரதமர் என்று சொல்ல மோடி 18அய் விட 19 பெரியது என்கிறார். அதாவது அவர் பிரதமராக இருக்கும்போது 19 மாநிலங்களில் பாஜக ஆட்சி நடக்கிறது என்றும் ஆக வலிமையான பிரதமர் என்று கருதப்படுகிற இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது காங்கிரஸ் கட்சியின் ஆட்சி 18 மாநிலங்களில்தான் இருந்தது என்றும் சொல்கிறார். பாஜக ஆட்சியில் இருக்கும் மாநிலங்கள் மத்தியில் கருத்தொற்றுமை உருவாக்குவது, 56 இன்ச் பிரதமரான நரேந்திர மோடிக்கு முடியவில்லை என்றா ஒப்புக்கொள்கிறார்கள்? பாஜக ஆட்சி கொலைகார ஆட்சி மட்டுமல்ல. கொள்ளைக்கார ஆட்சியும்தான். பெரிய கொள்ளைகளுடன் மட்டும் ஆட்சிகள் நின்று விடுவதில்லை. ஆட்சிகள் பிக் பாக்கெட்டுகள் கூட. சாமான்ய இந்தியன் சட்டைப் பையில் இருக்கிற ஒரு ரூபாயை கூட விட்டுவைப்பதில்லை.
பெட்ரோல் விலை உயர்ந்தால் தொடர்ந்து எல்லா விலைகளும் கட்டணங்களும் உயரும், மக்களுக்கு மேலும் மேலும் சுமை ஏறும் என்று 2014 மே மாதம் முன்பு வரை பேசியவர்கள், 2014க்குப் பிறகு பெட்ரோல் மேலும் மேலும் உயர்வதற்கான நடவடிக்கைகளையே தீவிரப்படுத்தியுள்ளார்கள். 2014 அக்டோபரில் டீசல் விலை கட்டுப்பாடும் அகற்றப்பட்டது. 2017 ஜ÷ன் 16 முதல் தினமும் விலை மாற்றியமைக்கும் முறை அமலானது.
ஏப்ரல் 1 2014 அன்று பெட்ரோலுக்கு விதிக்கப்பட்டிருந்த கலால் வரி ரூ.9.48. டீசலுக்கு அது ரூ.3.56. நவம்பர் 2014 முதல் ஜனவரி 2016 வரை ஒன்பது முறை கலால் வரி உயர்த்தப்பட்டுள்ளது. இந்த 15 மாதங்களில்,  பெட்ரோல் மீதான வரி ரூ.11.77, டீசல் மீதான வரி ரூ.13.47 அதிகரிக்கப்பட்டு, பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியாக அரசுக்கு 2016 - 2017ல் ரூ.2,42,000 கோடி வந்தது. 2014 - 2015ல் இது ரூ.99,000 கோடியாக இருந்தது. அதாவது மக்கள் கையில் இருந்து 2016 - 2017ல் ரூ.1.43 லட்சம் கோடி கூடுதலாகப் பறிக்கப்பட்டுவிட்டது. இந்த நிதி ஆண்டில், உணவு, உரம், பெட்ரோலியம் மூன்றுக்குமாகச் சேர்த்து திருத்தப்பட்ட நிதி ஒதுக்கீடு ரூ.2.32,704.68 கோடி. பெட்ரோல், டீசல் கலால் வரி வருமானத்தை விடவும் குறைவாக மானியத்துக்கு செலவு செய்யப்பட்டுள்ளது. வரி பயங்கரவாதத்தை ஏவி மக்களிடம் இருந்து வலிக்கப் பிடுங்கி அதில் மானியம் அறிவித்து, நாங்கள் மானியம் தந்தோம் என வெட்கமின்றி அறிவிக்கிறார்கள்.
வரியும் விலையும் உயர்த்தப்பட்ட 2014 மே மாதம் முதல் சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை கணிசமாகக் குறைந்துள்ளது, அதன் பயன் நுகர்வோருக்குச் சென்று சேரவே இல்லை என்று நாட்டின் எல்லா மூலைகளில் இருந்தும் தொடர்ந்து எதிர்ப்புக் குரல்கள் வந்து கொண்டிருக்கும்போதும் தனது மக்கள் விரோத பெட்ரோல் விலை உயர்வு நடவடிக்கைகளை மோடி சற்றும் தளர்த்திக் கொள்ளவில்லை.
2018 மார்ச் நிலவரப்படி பெட்ரோலுக்கு விதிக்கப்பட்டுள்ள கலால் வரி ரூ.21. மாநிலத்துக்கு மாநிலம் மாறும் மதிப்பு கூட்டு வரி ரூ.15. (20% முதல் 25% வரி போடும் மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாடு வருகிறது). மொத்தம் ரூ.36. வரி மட்டுமே கிட்டத்தட்ட 50% வந்து விடுகிறது. டீலர் கமிஷன் 5%. நடப்பு நிதிநிலை அறிக்கையில் வரி குறைப்பு அறிவிக்கப்பட்டது; ஆனால், சாலை மற்றும் உள்கட்டுமான நலவரி என்று ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூ.8 வரி என புதிதாக ஒரு வரி சேர்க்கப்பட்டது. சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும் சாமானிய இந்தியனுக்கு பெட்ரோல் விலை குறையாது; வரியை குறை என்று குரல் எழுப்பப்பட்டு வரி குறைக்கப்பட்டாலும், புதிய வரி விதிக்கப்பட்டு பெட்ரோல் விலை குறையாது. இந்த புதிய வரி மட்டும் இந்த நிதியாண்டில் ரூ.1,13,000 கோடி கூடுதல் வரி வருவாயை அரசுக்கு கொண்டு வரும். வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால், சாமான்ய இந்திய மக்கள் பைகளில் இருந்து இந்த நிதியாண்டில் பெட்ரோல் பெயரால் ரூ.1,13,000 கோடி பறித்தெடுக்கப்படும். பெட்ரோல் அதிகம் இறக்குமதி செய்தால் நடப்புக் கணக்கு பற்றாக்குறை ஏற்படும், ரூபாய் மதிப்பு வீழும் என்றெல்லாம் பொருளாதாரம் சொல்லி நியாயப்படுத்துபவர்கள், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தரப்படும் கோடி கோடி ரூபாய் சலுகைகள், விலக்குகளில் இருந்து அதை சரிகட்டச் சொல்லட்டும். பெட்ரோலுக்கு மேலும்மேலும் கூடுதல் வரி விதித்து மக்களிடம் இருப்பதைப் பிடுங்குவதுதான் அரசாங்கங்களின் உண்மை நோக்கமே தவிர பொருளாதாரத்தை கட்டுக்குள் வைப்பதல்ல.
சமையல் எரிவாயு விலையை மாதம் ரூ.4 என உயர்த்தி, 2018 இறுதிக்குள் எரிவாயு மானியத்தையும் ஒழித்துக்கட்டி விடுவது என்று ஒரு திட்டத்தை ஜ÷லை 2017ல் மோடி அரசாங்கம் முன்வைத்தது. கடுமையான எதிர்ப்பு எழுந்த பின் அந்த நடவடிக்கை தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது. இன்றைய நிலைமைகளிலேயே, நேரடி மானியம் தருவது என்ற பெயரில் எரிவாயு உருளைக்கு மானியம் பெறுவதில் இருந்து லட்சக்கணக்கானவர்கள் வெளியேற்றப்பட்டுவிட்டனர். எரிவாயு உருளை விலையும் திடீரென்று உயர்த்தப்படுகிறது. மே 1 2014ல் சென்னையில் எரிவாயு விலை மானியத்துடன் ரூ.401. மார்ச் 1 2018 அன்று ரூ.482. மோடியின் ராஜ்ஜியத்தில் நான்காண்டுகளில் ரூ.81 உயர்வு. 2014 மே 1ல் ரூ.401 கொடுத்து அந்த எரிவாயு உருளையை வாங்கியிருக்க முடியும். ஆனால், இப்போது மானியம் உண்டு என்று பெயருக்கு இருந்தாலும் முதலில் சந்தை விலையை, இன்று ரூ.668, கொடுத்து வாங்கிவிட வேண்டும். பிறகு மானியம் வங்கிக்கு வர காத்திருக்க வேண்டும். சிலருக்கு வந்துவிடும். பலருக்கு வராமல் நின்று விடும். நேரடி மான்யத்தால் அரசுக்கு வருவாய் என்று சில பத்தாயிரம் கோடி ரூபாய் கணக்கு தனியாகக் காட்டப்படும். ஜிஎஸ்டி வந்த பிறகு சமையல் எரிவாயுவுக்கு வரி போடாத மாநிலங்களிலும் வரி விதிப்பு வந்துவிட்டது. ஏற்கனவே சில மாநிலங்களில் இருந்த மதிப்பு கூட்டு வரி 2% முதல் 4% வரை இருந்தது. இப்போது வரி போடாத மாநிலங்களுக்கும் சேர்த்து ஜிஎஸ்டி 5% எரிவாயு உருளை விலையில் சேர்ந்து கொள்கிறது. சேர்ந்து கொல்கிறது. இந்த 5% ஜிஎஸ்டி 12 உருளைகளுக்குத்தான். அதற்கு மேல் வாங்கும்போது அது 18% ஆகிவிடுகிறது. பொருளாதார அரங்கில் தான்தோன்றி நடவடிக்கைகள் எடுத்துவிட்டு, அவை உருவாக்கியுள்ள பாதகமான விளைவுகளுக்கு தீர்வு காண முடியாமல், பதில் சொல்ல முடியாமல் 56 இன்ச் தவித்துத் தள்ளாடிக் கொண்டிருக்கிறது.
தலித்துகள், இசுலாமியர்கள், பெண்கள் என்று தனித்தனிப் பிரிவினர் மீது மதவெறி, சாதி வெறி, ஆணாதிக்க வெறி தாக்குதல்கள் நடத்தி மட்டும் மோடி அரசாங்கம் சாமான்ய மக்களை படுகொலை செய்வதில்லை. விலை உயர்வு, வரி உயர்வு, புதிய வரி என்று திணித்தும் சாமான்ய மக்கள் மீது போர் தொடுத்து, அவர்களை கொஞ்சம் கொஞ்சமாக கொலை செய்கிறது. இது மோடி அரசாங்கம் இந்திய மக்கள் மீது தொடுத்துள்ள ஒட்டுமொத்த போரின் ஒரு பகுதி.
இந்தக் கட்டுரை வாசகர்களைப் போய்ச் சேரும்போது பெட்ரோல் விலை ரூ.80அய்த் தாண்டவும் வாய்ப்புள்ளது. இந்த விலை உயர்வு சங்கிலித் தொடராக அத்தியாவசியப் பொருட்களின் அடுத்தடுத்த விலை உயர்வுக்கு இட்டுச் செல்லும். பணமதிப்பகற்றத்தின் விளைவுகள், ஜிஎஸ்டியின் விளைவுகள் என எதையும் சமாளிக்க முடியாமல், ஏற்கனவே மிக மோசமாக சரிந்து விட்ட சாமான்ய மக்களின் வாழ்க்கைத் தரம் அடுத்தடுத்து மேலும் சரியும். சாமான்ய இந்திய மக்களின் வாழ்க்கைத் தரம் சரிவதைத் தடுக்க வேண்டுமானால், பாசிச பாஜக எந்த விதத்திலும் மீண்டும் எழ முடியாத அளவிலான சரிவை உறுதி செய்தாக வேண்டும்.

Search