COMMUNIST PARTY OF INDIA (MARXIST - LENINIST) - LIBERATION

COMMUNIST PARTY OF INDIA (MARXIST - LENINIST) - LIBERATION, TAMILNADU

Monday, April 30, 2018

ஒன்றுபட்ட, அறுதியிடல்மிக்க, செயலூக்கமான இடதுசாரிக்காக
மதச்சார்பற்ற, ஜனநாயக, பன்மைத்துவம் கொண்ட இந்தியாவுக்காக

அய்தராபாதில் நடந்த இககமா 22ஆவது அகில இந்திய மாநாட்டின் துவக்க அமர்வில் இககமாலெ பொதுச் செயலாளர் தோழர் திபங்கர் ஆற்றிய உரை

இககமா 22ஆவது அகில இந்திய மாநாட்டின் பிரதிநிதிகளே, தோழர்களே, நண்பர்களே!

உங்கள் அனைவருக்கும் எனது புரட்சிகர வணக்கங்களை தெரிவித்துக் கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். இககமா 22ஆவது அகில இந்திய மாநாட்டின் துவக்க அமர்வில் கலந்துகொள்ள எங்களுக்கு அழைப்பு தந்ததற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். பஞ்சாபின் மான்சாவில் சமீபத்தில் நிறைவுற்ற எங்களது பத்தாவது அகில இந்திய மாநாட்டில் எங்கள் அழைப்பை ஏற்று கலந்துகொள்ள தோழர் சலீமை அனுப்பியதற்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். தெலுங்கானா எழுச்சி நாட்களில் இருந்து, நக்சல்பாரி - ஸ்ரீகாகுளம் கால கட்டம் ஊடாக தற்போதைய கட்டம் வரையில் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் புகழ்மிக்க, நீண்ட வரலாறு கொண்ட இடம் என்பது மட்டுமின்றி, நாட்டில் தற்போதைய சுற்று மாணவர் எழுச்சியை தூண்டிய ரோஹித் வேமுலா தியாகம் செய்த இடம் என்ற விதத்திலும் எனக்கு உத்வேகம் அளிக்கும் அய்தராபாதில், இன்று உங்கள் மத்தியில் இருப்பதில் நான் உண்மையில் மகிழ்ச்சியடைகிறேன். இககமாவின் இந்த அய்தராபாத் அகில இந்திய மாநாடு வெற்றி பெற வேண்டும் என்று இககமாலெ சார்பாக வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் அகில இந்திய மாநாட்டைத் தொடர்ந்து கேரளாவில் இககவின் அகில இந்திய மாநாடும் நடக்கவுள்ளது என்பதை நான் அறிவேன். இந்தத் தருணத்தில் நமது இகக தோழர்களுக்கும் அவர்களது அகில இந்திய மாநாடு வெற்றி பெற வாழ்த்துகள் தெரிவித்துக் கொள்கிறேன்.
இன்று நாம் எதிர்கொள்கிற சவால்மிக்க சூழல் பற்றி நாம் அனைவரும் நன்கறிவோம். 1947க்குப் பிந்தைய நமது வரலாற்றில், இதற்கு முன் எப்போதும், ஒரு நவீன அரசியல்சாசன குடியரசாக நாம் இருப்பதன் ஒவ்வோர் அம்சத்தின் மீதும் இது போன்ற நீடித்த தாக்குதல், ஏககாலத்தில் நடப்பதை நாம் பார்த்ததில்லை. எங்களது கட்சியின் பத்தாவது அகில இந்திய மாநாடு சமீபத்தில் நிறைவுற்றது; இந்தியாவில் பாசிசம் எழுந்துள்ளதன் சந்தேகத்துக்கிடமற்ற கட்டம் என்று தற்போதைய கட்டத்தை அது அடையாளப்படுத்தியது. நம்மால் எந்த அளவுக்கு முடியுமோ அந்த அளவுக்கு உடனடியாகவும் தீர்மானகரமாகவும் அதை தடுத்து நிறுத்தி முறியடிக்க ஓர் உறுதிமிக்க மக்கள் எதிர்ப்பை கட்டவிழ்த்து விட வேண்டும் என்று எங்களது மாநாடு அழைப்பு விடுத்தது.
பாசிசத்தை முறியடிப்பது என்று நாம் பேசும்போது, இந்த அல்லது அந்த மாநிலத்திலோ அல்லது மத்திய அரசாங்கத்துக்கோ அடுத்து நடக்கவுள்ள தேர்தலில் தேர்தல்ரீதியாக பாசிச சக்திகளை வீழ்த்துவது பற்றி நாம் பேசவில்லை என்பது நமக்கு நன்கு தெரியும். அவர்களை மீண்டும் கீழே தள்ளுவது பற்றி நாம் பேசுகிறோம்; காவிப் படையை மய்யத்தில் இருந்து ஓரஞ்சாரத்துக்கு மீண்டும் விரட்டியடிப்பது பற்றி நாம் பேசுகிறோம். இதை இடதுசாரிகளின் சக்திவாய்ந்த புத்தெழுச்சியின் மூலம் மட்டுமே சாதிக்க முடியும். ஒரு சக்திவாய்ந்த பாசிச எதிர்ப்பு தாக்குதலுக்கு தலைமை தாங்கும் ஒரு வலுவான அறுதியிடல்மிக்க இடதுசாரி இப்போதைய தேவையாக உள்ளது; நாட்டில் நிலவுகிற அரசியல் சமநிலையில் ஓர் இடதுசாரி நகர்வை நிகழ்த்த, நாட்டில் உள்ள ஒட்டுமொத்த இடதுசாரி சக்திகள் மத்தியில் வளர்ந்துகொண்டே இருக்கிற ஒற்றுமையை, ஒத்துழைப்பை உருவாக்க, தன்னால் ஆன அனைத்தையும் செய்ய இககமாலெ கடப்பாடு கொண்டிருக்கிறது என்று நான் உங்களுக்கு உறுதி கூறுகிறேன்.
மூர்க்கமான, நாடாளுமன்றம் தவிர்த்த அணி திரட்டல் மற்றும் நமது நாட்டில், முதன்மையாக தலித் எதிர்ப்பு, இசுலாமியர் எதிர்ப்பு அச்சைச் சுற்றிச் சுழலும் பிற்போக்கு சமூக வெறி ஆகியவற்றின் மீதுதான் பாசிசம் பிழைக்கிறது. பாசிசத்தை எதிர்க்க, முறியடிக்க, இடது சாரிகள், நாடாளுமன்றம் தவிர்த்த போராட்டங்கள் மீதுதான் கவனம் குவிக்க வேண்டும். வீதிகளில் நாம் அனைவரும் பங்கேற்கும் பொதுவான போராட்டங்கள், கூட்டு பேரணிகள் மூலம் இடதுசாரி ஒற்றுமை மீண்டும் வலிமை பெறத் துவங்கியுள்ளது என்பதில் நாம் மகிழ்ச்சியடைகிறோம். மேற்கு வங்கத்திலும் திரிபுராவிலும் ஏற்பட்ட தேர்தல்ரீதியான இழப்புகளுக்காக இடது அணிகள் மத்தியில், இடது சிந்தனை உடையோர் மத்தியில் பெரிய சோர்வு ஏற்படவில்லை என்பதை நான் பார்க்கும் அதேநேரம், மகாராஷ்டிராவிலும் ராஜஸ்தானிலும், பஞ்சாப், பீகார், டில்லியிலும் நடந்த விவசாயிகளின் பேரணிகளும் ஆர்ப்பாட்டங்களும், அய்தராபாத் முதல் ஜேஎன்யு வரை, ஜேஎன்யு முதல் ஜாதவ்பூர் வரை பல்கலை கழகங்களில் நடந்த மாணவர் போராட்டங்களும், 2016ல் நடந்த தொழிற்சங்கங்களின் பொது வேலை நிறுத்தங்களும் 2017 நவம்பரில் டில்லியில் நடந்த மாபெரும் பேரணியும் பெரும் பாராட்டுதல்களை, போற்றுதல்களை பெற்றன என்பதையும் பார்த்தேன்.
பாசிசத்தை எதிர்கொண்டு முறியடிக்க ஜன நாயக சக்திகளின் பரந்த ஒற்றுமை அவசியம் என்பதை நாம் அறிவோம். நீண்ட நாட்களாக, அய்க்கிய முன்னணி பற்றிய விவாதப் போக்கு, இந்த அல்லது அந்த கட்சியுடன் தேர்தலில் தொகுதிப் பங்கீடு உடன்பாடுகள், இந்த அல்லது அந்த அரசாங்கத்தை நடத்த குறைந்தபட்ச பொதுத் திட்டங்கள் என அழைக்கப்படுபவை ஆகியவற்றைச் சுற்றியே அமைகிறது. ஆனால், இன்று நமக்கு மிகவும் உடனடியாக, போராட்டங்களின், முன்முயற்சிகளின் ஒரு துடிப்பான அய்க்கிய முன்னணி, இயக்கங்களின் கூட்டணி அவசியம். இன்று இடதுசாரிகளின் மிகப்பெரிய கூட்டாளியாக தலித் இயக்கம் இருக்கிறது. ரோஹித் வேமுலா நிறுவனரீதியாக படுகொலை செய்யப்பட்டதற்கு எதிரான போராட்டங்கள் முதல் உனா தாக்குதல்களுக்கு எதிரான போராட்டங்கள் வரை, உத்தரபிரதேச அரசாங்கம் பீம் படையின் மீது கட்டவிழ்த்துவிட்ட தாக்குதல்களுக்கு எதிரான போராட்டங்கள் முதல் மகாராஷ்டிராவின் பீமா - கோரேகானில் தலித்துகள் மீது நடந்த தாக்குதல்களுக்கு எதிரான போராட்டங்கள் மற்றும் எஸ்சி எஸ்டி வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் நீர்த்துப் போகச் செய்யப்படுவதற்கு எதிராக மிகச் சமீபத்தில் ஏப்ரல் 2 அன்று நடந்த முழுஅடைப்பு வரை, மனுநீதி நிகழ்ச்சிநிரலுக்கு எதிராக, சங் பரிவாரின் தாக்குதல்களுக்கு எதிராக தலித்துகள் சக்திவாய்ந்த போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். நாடு முழுவதும் ஒரு சக்திவாய்ந்த பாசிச எதிர்ப்புப் போராட்டத்தை கட்டியமைப்பதற்கான திறவுகோல், தலித் - இடதுசாரி ஒருமைப்பாட்டின் வலிமையான பிணைப்பில் உள்ளது.
உண்மையில் மக்களின் அடுத்தடுத்த போராட்ட அலைகள் அரசியல் சூழலை சூடேற்றிக் கொண்டிருக்கின்றன. கவுரி லங்கேஷ் மற்றும் கோவிந்த பன்சாரே முதல் ஜ÷னைத் மற்றும் அசிஃபா வரை முடிவே இல்லாத வெறுப்புக் குற்றங்களை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். தண்டனை பற்றிய அச்சம் எதுவும் இன்றி, விஜய் மல்லய்யா, நீரவ் மோடி போன்ற மோசடிப் பேர்வழிகள் நமது வங்கிகளை கொள்ளையடித்துச் செல்லும்போது, 2016 நவம்பரின் பண மதிப்பகற்றம் முதல், ஏடிஎம்களில் தற்போது நிலவும் ரொக்கப் பற்றாக்குறை வரை, இந்த நாடு போதும் போதும் எனும் அளவுக்கு துன்பங்களை அனுபவித்துவிட்டது. இன்று போராட்டக் களங்கள் தீர்மானிக்கப்பட்டுவிட்டன. வெறுப்புக் குற்றங்களுக்கு ஆளான ஒவ்வொருக்கும் இன்று மக்கள் நீதி கேட்கிறார்கள். கருப்புப் பணத்தை மீட்பது, ஆண்டுக்கு இரண்டு கோடி வேலை வாய்ப்புகள் உருவாக்குவது, தூய்மை இந்தியா, மகள்களை பாதுகாப்பது என்ற எல்லா வெற்று வீச்சுகளுக்கும் பொறுப்பேற்க வேண் டும் என்று மக்கள் வலியுறுத்துகிறார்கள்.
இந்த எல்லா போராட்டங்களில் இருந்தும் வலிமையும் உத்வேகமும் பெற்று நமது அனைத்து சக்தியையும் திரட்டிக் கொண்டு வெற்றி நோக்கி முன்னேறுவது நமது கடமை. இதுதான் முன்னோக்கிச் செல்கிற பாதை. நமது இரண்டு கட்சிகளும், பிற இடதுசாரி சக்திகளும் இந்தத் திசையில் நெருக்கமாக பணியாற்ற முடியும் என்று நான் நம்புகிறேன்.
ஒன்றுபட்ட, அறுதியிடல்மிக்க, செயலூக்கமான இடதுசாரி சக்திக்காக!
மதச்சார்பற்ற, ஜனநாயக,
பன்மைத்துவம் கொண்ட இந்தியாவுக்காக!
புரட்சி ஓங்குக!
திபங்கர்
பொதுச் செயலாளர், 
இகக (மாலெ) (விடுதலை)

Search