COMMUNIST PARTY OF INDIA (MARXIST - LENINIST) - LIBERATION

COMMUNIST PARTY OF INDIA (MARXIST - LENINIST) - LIBERATION, TAMILNADU

Monday, April 16, 2018

ஸ்டெர்லைட் 2ஆலைக்கு எதிரான போராட்டக் களத்தில்...

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடி மாவட்டத்தில் குமரெட்டியாபுரம், பண்டாரம்பட்டி, மீளவிட்டான், சில்வர்புரம், மடத்தூர் உள்ளிட்ட ஒன்பது ஊர்களில் மக்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.
ஏப்ரல் 8 அன்று இகக(மாலெ) நெல்லை மாவட்டச் செயலாளர் தோழர் டி.சங்கரபாண்டியன், மாநிலக்குழு உறுப்பினர் தோழர் ஜி.ரமேஷ், புரட்சிகர இளைஞர் கழக மாநிலக்குழு உறுப்பினர் தோழர் எம்.சுந்தர்ராஜ், புரட்சிகர இளைஞர் கழகத்தின் நெல்லை தோழர்கள் பேச்சிராஜா, மாரிமுத்து, தூத்துக்குடி ஏஅய்சிசிடியு கண்டெய்னர் ஓட்டுநர் சங்கத்தின் தலைவர் தோழர் சகாயம், ஏஅய்சிசிடியு தூத்துக்குடி மாவட்டப் பொறுப்பாளர் தோழர் சிவராமன், இகக(மாலெ) தோழர்கள் முருகன், போஸ், மயில்வாகனம் உள்ளிட்டோர் குமரெட்டியாபுரம், பண்டாரம்பட்டி, மீளவிட்டான் உள்ளிட்ட ஊர்களுக்குச் சென்று போராடும் மக்களைச் சந்தித்துப் பேசி ஒருமைப்பாடு தெரிவித்தார்கள். அந்தப் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பெண்களின் கருத்துகள் சில தொகுத்துப் தரப்பட்டுள்ளன.                                               (தொகுப்பு: ஜி.ரமேஷ்)

முருகேஷ்வரி, மாடத்தி, வடிவு, முத்து, உஷா (குமரெட்டியாபுரம்):
ஸ்டெர்லைட்டுக்கு எதிராக 56 நாட்களாகப் போராடிக் கொண்டிருக்கிறோம். நிலத்தடி நீர் கெட்டுப் போய்விட்டது. அதைத்தான் குடிக்கிறோம். அதில்தான் சமையல் செய்கிறோம். அதனால் குழந்தைகள் சோர்ந்து போய்விட்டன. எல்லாருக்கும் கை வலி, கால் வலி. எங்களுக்கு பார்வை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எல்லா குழந்தைகளும் மாத்திரைதான் சாப்பிடுகின்றன. குழந்தைகள் இல்லாமல் பலர் இருக்கிறார்கள். 15 பேருக்கு மேற்பட்ட பெண்களுக்கு கர்ப்பப் பை எடுக்கப்பட்டுவிட்டது. குழந்தைகள் மூளை வளர்ச்சி குறைவாகப் பிறந்துள்ளன. எங்களால் சாதாரணமாக மூச்சுவிட முடியாது. மூச்சு முட்டும். இந்த ஊரில் விவசாயம் பார்க்கிறவர்களை மிரட்டி அவர்கள் நிலத்தை வாங்கி அரசாங்கம் ஸ்டெர்லைட்காரனிடம் கொடுத்துவிட்டது. வேலை கொடுத்ததாகச் சொல்வதும் பொய். இப்போது வேலை கொடுக்கப் போவதாகச் சொல்வதும் பொய். ஊரை விட்டு ஆலைக்காரர்கள் எங்களைப் போகச் சொல்கிறார்கள். நீ லண்டனில் இருந்து இங்கு வந்து எங்களை விரட்டுகிறாயா நீ வெளியே போ என்று சொல்லிதான் நாங்கள் போராடுகிறோம். கலெக்டர் இதுவரை எங்களை வந்து பார்க்கவில்லை. தாசில்தார் ஆபிஸிற்கு மனு கொடுக்கச் சென்றால் இருக்கமாட்டார். கலெக்டரும் இருக்கமாட்டார். கலெக்டர் மக்களுக்கா இருக்கார்? ஸ்டெர்லைட்காரனுக்காக இருக்கார். மந்திரி, எம்எல்ஏ யாரும் எங்களை வந்து பார்க்கவில்லை.
நாங்க கிடைப்பதை சாப்பிட்டுவிட்டு வெயிலிலும் மழையிலும் கிடந்து போராடிக் கொண்டிருக்கிறோம். வேலை கேட்கிறார்கள், ஆளுக்கு அய்ந்து லட்ச ரூபாய் கேட்கிறார்கள், வீடு கேட்கிறார்கள், கோழி கேட்கிறார்கள் அதெல்லாம் தராததால்தான் போராட்டம் நடத்துகிறார்கள் என்று எங்களைப் பற்றி வதந்தி பரப்புகிறார்கள். நாங்கள் உழைச்சு சாப்பிடுறவங்க. நாங்க யார் கிட்டயும் கை நீட்டி காசு வாங்கியது கிடையாது.
நாங்கள் எங்களுக்காக மட்டும் போராடவில்லை. ஒட்டுமொத்த தமிழக மக்களுக்காகவும் போராடுகிறோம். எங்கள் மீது வழக்குகள் போட்டுள்ளதாகச் சொல்கிறார்கள். வெளியூரில் இருந்து எங்களுக்காக வந்து பார்ப்பவர்களை இங்கு தங்கக் கூடாது என்கிறார்கள் போலீஸ். நாங்கள் அதற்கெல்லாம் பயப்படப் போவதில்லை. ஸ்டெர்லைட்டை மூடாமல் நாங்கள் ஓயப்போவதில்லை. இப்போ ஆலை மூடிப் போட்டிருங்காங்க. ஆலை ஓடும்போது நீங்க இங்க வந்தீங்கன்னா உங்களால இங்க இருந்து பேசவே முடியாது அவ்வளவு புகை இருக்கும். மூச்சு முட்டும். தொண்டை கரகரங்கும்.
எங்களுக்கு இங்கு நல்ல தண்ணீர் கிடையாது. பக்கத்து ஊரில் போய்தான் எடுக்க வேண்டும். முனிசிபாலிடிலிருந்து லாரியில் கொண்டு வருவார்கள். ஆளுக்கு இரண்டு குடம் எடுத்து ஒப்பேத்திக்குவோம். இந்த போராட்டம் தொடங்கிய பிறகு தண்ணீரும் ஒழுங்கா வரவில்லை. மின்சாரத்தையும் கட் பண்ணிட்டாங்க. இங்குள்ள நிலத்தடி நீர் கெட்டுப் போய்விட்டது என்பதை இல்லாமப் பண்ண அரசாங்க அதிகாரிங்க வந்து நாங்க தூங்கப் போற நேரமா பார்த்து வேற தண்ணீயை வைத்து இங்க இருந்து தண்ணீ எடுத்ததா கொண்டுபோய் கொடுக்கப் பார்த்தாங்க. நாங்க அதிகாரிங்க இங்க இருக்கிற வரை தூங்காம காவல் காத்தோம். எங்க கிட்ட உங்க ஊர் தண்ணீரை சுத்திகரிச்சு தர்றோம் என்றார்கள். எதற்கும் நாங்க விடல. தண்ணீர் கெட்டுப் போய்விட்டது என்கிற ஆதாரத்தை அழிக்கப் பார்க்கிறாங்க. தண்ணீர் ஆதாரத்தை அழிக்கலாம் எங்க குழந்தைகளுக்கு நாங்கதான் ஆதாரம். எங்களை அழிச்சுடுவாங்களா? என்ன ஆனாலும் நாங்க ஸ்டெர்லைட்டை மூடாமல் ஓயமாட்டோம்.
சுடர், (பண்டாரம்பட்டி, தலித் குடியிருப்பு):
நாங்க ஏப்ரல் 1ம் தேதி போராட்டத்தை ஆரம்பித்தோம். ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து 5 கி.மீ தூரத்தில் எங்க ஊரு உள்ளது. ராத்திரி 12 மணிக்கு மேலே ஆலையில் இருந்து புகையைத் திறந்துவிடுவார்கள். அது ஆரஞ்சு கலர்ல இருக்கும். கெட்டுப்போன முட்டையை அவிச்சா என்ன வாடை வரும், அதுபோல ஒரு வாடை வரும். மூச்சு முட்டும். மூக்கைப் பொத்திக்கிட்டுதான் இருக்கனும். வெயில் காலத்தில் வெளியே படுத்திருப்போம். புகை வந்தா அம்புட்டுதான். ஒன்றரை மணி நேரம் 2 மணி நேரம் புகை திறந்து விடுவாங்க. அவ்வளவு நேரம் மூக்கைப் பிடித்துக் கொண்டே இருக்க முடியுமா? உயிர் போற மாதிரி அப்படியொரு வாடை. இதனால் 13 பேருக்கு கர்ப்பப் பை எடுக்கப்பட்டுள்ளது.  குழந்தைகளுக்கு இதயத்தில் ஓட்டை விழுந்துள்ளது. குழந்தைகள் இறந்து பிறக்கின்றன அல்லது மூளை வளர்ச்சி இல்லாமல் பிறக்கின்றன. சில அரசியல்வாதிகள் வந்தார்கள். அவர்கள் கேன்சர் வந்துள்ளது என்று சொன்னால்  இந்த ஸ்டெர்லைட்னாலதான் கேன்சர் வருதா, அதுக்கு டாக்குமெண்ட் இருக்கா என்று கேட்கிறார்கள். அவர்கள் கேட்பதுபோல் டாக்குமெண்ட் எல்லாம் எங்களால் கொடுக்க முடியாது. ஆனால், ஒரு பதில் சொல்கிறோம். அப்படிக் கேட்பவர்கள் யாராக இருந்தாலும் எடப்பாடியோ பழனிச்சாமியோ யாராக இருந்தாலும் ஒரு மாதம் எங்கள் கிராமத்தில் வந்து தங்கச் சொல்லுங்க. அவர்களுக்கு எங்க செலவுல வீடு கொடுத்து எல்லாம் கொடுக்கிறோம். இங்க வந்து தங்குவாங்களா? இங்க தங்கினாங்கன்னா இந்த போராட்டத்த நாங்க எதுக்கு எடுத்திருக்கி றோம் என்று தெரியும். எங்கேயோ இருந்து கொண்டு ஏன் போராடுறாங்க ஏன் போராடுறாங்க என்று கேட்கிறாங்க. எங்களுக்கு சுத்தமான தண்ணீர் சுகாதாரமான காற்று வேண்டும். நிலம் வேண்டும் அதற்காகத்தான் போராடுகிறோம். அவங்கட்ட இருக்க சொத்தை கொடுங்கன்னு நாங்க கேட்கல. நாங்க உழைச்சு சாப்பிடுறவங்க. எங்க வீட்டுல மாடு இருக்கு. இங்க மாடுகளுக்கு ஊசி போட்டாக்கூட கரு பிடிக்க மாட்டேங்குது. மாடுகள் கூட மலட்டுத்தன்மையா ஆயிட்டு. ஒரு முடிவு கிடைக்கும் வரை இங்கேயே இருந்து போராடுவோம்.
ஆர்த்தி: எங்க ஊர் தண்ணீர் தன்மை மாறிவிட்டது. விவசாயம் சுத்தமாக இல்லாமப் போய்டுச்சு. நிறைய பேருக்கு கர்ப்பப் பை எடுத்திருக்கிறார்கள். எங்கள் பிரச்சினைக்காக நாங்க தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறோம். இப்படி போராடிட்டு மட்டும்தான் இருப்பார்கள் என்று அவர்கள் நினைத்துவிடக் கூடாது. ஸ்டுடன்ஸ் நினைத்தால் முடியாதது ஒன்றும் கிடையாது. மக்கள் நினைத்தால் முடியாதது ஒன்றும் கிடையாது. இப்படியே உட்கார்ந்துவிட்டு எழுந்து போய்விடுவோம் என்று நினைக்கிறார்கள். நாங்கள் எல்லா ஊரும் ஒரு நாள் சேரத்தான் போறோம். அது மாதிரி கிருஷ்ணசாமி அய்யா வந்து உங்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்பாடு செய்து தாரோம் என்று சொல்லியுள்ளார்கள். நாங்கள் வேலை வாய்ப்புக்காகப் போராடவில்லை. ஊரே சுடுகாடாக மாறிட்டுச்சு. நாங்க வேலை கேட்கவில்லை. சம்பந்தமே இல்லாம வந்து பேசிட்டுப் போயிருக்காங்க. அதேமாதிரி உங்கள அடிச்சா என்ன செய்வீங்க என்று கேட்டுருக்காங்க. அது அடிக்கிறப்போ பார்த்துக் கொள்ளலாம். நாங்க கண்டிப்பா ஜெயிக்கத்தான் போறோம்.

Search