COMMUNIST PARTY OF INDIA (MARXIST - LENINIST) - LIBERATION

COMMUNIST PARTY OF INDIA (MARXIST - LENINIST) - LIBERATION, TAMILNADU

Tuesday, April 3, 2018

ஏப்ரல் 14, புரட்சியாளர்  அம்பேத்கர்  பிறந்த  நாள்  பிரகடனம்

‘என்ன விலை கொடுத்தேனும் 
இந்து ராஜ்ஜியம் உருவாவதைத் தடுத்தாக  வேண்டும்’

டாக்டர் அம்பேத்கர்,
2025 ஆர்எஸ்எஸ்சின் நூற்றாண்டு.
அதற்குள் இந்து ராஜ்ஜியம் உருவாக்கிட, சங்பரிவார்  மூர்க்கமாகவும் முனைப்பாகவும் செயல்படுகிறது.
ஒரு வேளை இந்து ராஜ்ஜியம் இந்தியாவில் யதார்த்தமானால், அதுவே இந்திய நாட்டிற்கு நேருகிற பேரபாயமாக இருக்கும் என்று நீங்கள் சொன்னீர்கள்; இந்து ராஜ்யம் சுதந்திரம் சமத்துவம் சகோதரத்துவத்துக்கு பேராபத்து என்பதால், அது ஜனநாயகத்திற்கு பொருந்தாதது என்றும், என்ன விலை கொடுத்தேனும் இந்து ராஜ்ஜியம் உருவாவதைத் தடுத்தாக வேண்டும்  என்றும் நீங்கள் எச்சரித்தீர்கள்.
நீங்கள் சாதியை அழித்தொழிக்க வேண்டும் என்றீர்கள். அவர்கள், அந்த சங்பரிவார், சாதி ஆதிக்க சக்திகள், காதல் போர் எதிர்ப்பு என்ற பெயரால், அகமண முறையை பெண்  அடிமைத்தனத்தை ஆதிக்கக் கொலைகளை, நாட்டு மக்கள் மீது திணிக்கிறார்கள். தலித்துகள், பழங்குடியினர் மீதான வன்கொடுமைகளுக்கு எதிரான சட்ட அமலாக்கத்தை நீர்த்துப் போக வைக்க எல்லா முயற்சிகளும் எடுக்கிறார்கள். பாதிக்கப்பட்டவர்கள் மீது பழிசுமத்தி வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுகிறீர்களே என்று கிளர்ந்தெழுந்தவர்கள் கொல்லப்பட்டுள்ளார்கள்.
உங்கள் தோழர் பெரியார், சூத்திரன் என்றால் ஆத்திரம் கொண்டு அடி, மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு, பெண் அடிமைத்தனம் ஒழிய ஆண்மை தத்துவம் அழிய வேண்டும் என்றார். நீங்கள் சாதி ஒழிந்தால்தான், நவீன தேசம் உருவாகும் ஜனநாயகம் செயல்படும்  என்றீர்கள். சங்பரிவார் கூட்டத்தினர் தீண்டாமை, சுத்தக் கோட்பாடு என்று சொல்லி  தலித்துகளை, இசுலாமியர்களை, பெண்களை ஒடுக்குகிறார்கள்.
நீங்கள், முதலாளித்துவமும் பார்ப்பனியமும் இந்திய மக்களை அழுத்தும் இரட்டை நுகத்தடி என்றீர்கள். இன்றும் இந்தியாவில் தமிழ்நாட்டில், அம்பானி அதானி மூலதன ஆட்சியும் பார்ப்பனீய கருத்துக்களின் நடைமுறைகளின் ஆதிக்கமுமே கோலோச்சுகின்றன.
நீங்கள் வேலைநிறுத்த உரிமை விரும்பும், தொழிற்சங்கம் கொண்டிருக்கும் உரிமை குறைந்தபட்ச சம்பள உரிமை வேண்டும் என்றீர்கள்; அவை, கூடவே கூடாது என்று சொல்லும் கூட்டம்தான், சங்பரிவார் கூட்டம்.
நீங்கள், நிலம் தேசியமயமாக வேண்டும் கேந்திர தொழில்கள் அரசிடமிருக்க வேண்டும் என்று முன்வைத்த சமூக அக்கறையுடைய சிந்தனையாளர். சங் பரிவார் கூட்டமோ, விவசாய  நெருக்கடியை சாக்காக்கி, விவசாயத்தை கார்ப்பரேட்மயமாக்கப் பார்க்கிறார்கள்; கட்டற்ற தனியார்மயத்தை அந்நிய மூலதன வருகையை சாதிக்க உறுதி கொண்டுள்ளனர். சம்பிராதய சமத்துவம் போதவே போதாது, நாடாளுமன்ற ஜனநாயக அலங்கார மேல்பூச்சுக்கும் சமூகத்தின் ஜனநாயக விரோத அடிமண்ணுக்கும் முரண்பாடு உள்ளது என்றும் நீங்கள்  சொல்லித் தந்தீர்கள்.
நீங்களும் பெரியாரும் கண்ட கனவுகளை தோழர் லெனின் தலைமையில் சோவியத் யூனியனில் கம்யூனிஸ்ட்கள் நனவாக்கியிருந்தனர். பாஜக கூட்டம் பாஜக எடுபிடிகள், நாட்டில் உள்ள, தமிழ்நாட்டில் உள்ள உங்கள் சிலைகளை பெரியார் சிலைகளை லெனின் சிலைகளைக் கண்டு அஞ்சுகிறார்கள். சமத்துவத்தை ஏற்க மறுப்பவர்கள், மேல் கீழ் அமைப்பு தொடர வேண்டும் என விரும்புபவர்கள், உழைப்பை அவமதிப்பவர்கள், மசூதியை இடித்தவர்கள்தான் புரட்சியாளர் அம்பேத்கர், பெரியார், தோழர் லெனின் கருத்துக்கள் மற்றும் வழிமரபு கண்டு அஞ்சி நடுங்குகிறார்கள்.
சாதியை அழித்தொழிக்க, அனைத்து வித சுரண்டலையும் ஒடுக்குமுறையையும் வேரறுக்க, முதலாளித்துவமும் பார்ப்பனீயமும் சங்கமித்துள்ள பாசிசத்தை முறியடிக்க, மக்கள்  இந்தியாவைப் படைத்திட சிவப்பும் நீலமும் கருப்பும் கரம் கோர்ப்போம், ஒன்றுபட்டுப்  போராடி காவியை வீழ்த்துவோம் என பிரகடனம் செய்கிறோம்.
அம்பேத்கர், பெரியார், தோழர் லெனின்
உங்கள் பெயரால் உறுதியேற்கிறோம்.
பாசிசத்தின் ஆபத்துகள் பற்றி கற்பிப்போம்!
பாசிசத்தின் ஆபத்துகளுக்கு எதிராக அமைப்பாவோம்!
பாசிசத்தின் ஆபத்துகளுக்கு எதிராக கிளர்ச்சி செய்வோம்!
புரட்சிகர  இளைஞர்  கழகம்                           
இந்திய கம்யூனிஸ்ட்  கட்சி (மாலெ)

Search