COMMUNIST PARTY OF INDIA (MARXIST - LENINIST) - LIBERATION

COMMUNIST PARTY OF INDIA (MARXIST - LENINIST) - LIBERATION, TAMILNADU

Tuesday, April 3, 2018

பாசிசத்தை இறுதி வெற்றி கொள்ள 
ஜனநாயகம் மற்றும் சோசலிசத்திற்காக 
சக்திவாய்ந்த ஒன்றுபட்ட இயக்கத்தை கட்டியெழுப்புவோம்

இகக(மாலெ) 10ஆவது காங்கிரசின் பொது மாநாட்டில் பொதுச் செயலாளர் தோழர் திபங்கர் ஆற்றிய  துவக்க உரை

இந்தியாவின் பல்வேறு இடதுசாரி கட்சிகளின் தோழர்களே,
சர்வதேச இடது மற்றும் முற்போக்கு இயக்கங்களைச் சேர்ந்த மதிப்புக்குரிய விருந்தினர்களே, இகக(மாலெ) 10ஆவது மாநாட்டில் கலந்து கொண்டிருக்கும் பிரதிநிதிகள், விருந்தினர்கள், பார்வையாளர்கள் மற்றும் தொண்டர்களே,
உங்களை இந்தத் துவக்க மாநாட்டுக்கு வரவேற்று, புரட்சிகர வாழ்த்துக்களை சொல்வதில் பெருமகிழ்ச்சியடைகிறேன். இந்த காங் கிரசுக்கு சற்று முன்பாக பெருமைமிகு ரஷ்யப் புரட்சியின் நூற்றாண்டை நாம் அனைவரும் கொண்டாடினோம். 2017 புகழ்மிக்க நக்சல்பாரி விவசாய எழுச்சியின் 50ஆவது ஆண்டை குறிப்பதுமாகும். சர்வதேச மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் புகழ்மிக்க வரலாற்று மரபுகளுக்கு 10ஆவது காங்கிரசின் இந்த மேடையிலிருந்து வணக்கம் செலுத்தி, எல்லா வகையான சுரண்டல் மற்றும் அநீதியை ஒழித்து முழுமையான மனிதகுல விடுதலையை அடைவதற்கான உயர்ந்த லட்சியத்திற்காக நாம் நம்மை மறுஅர்ப்பணிப்பு செய்து கொள்வோம்.
மிகவும் நெருக்கடியான தருணத்தில் நாம் கூடியிருக்கிறோம் என்பதை நாம் அனைவரும் அறிவோம். தொடரும் உலகப் பொருளாதார நெருக்கடி, ஆகப்பெரும் சமத்துவமின்மை, உழைக்கும் மக்களின் வாழ்வுரிமை மற்றும் அடிப்படை உரிமைகள் மீதான ஓயாத தாக்குதல்கள் ஆகியவற்றால் இந்தத் தருணம் குறிக்கப்படுகிறது. இந்தப் பொருளாதார, நெருக்கடியின் கூடவே புதுப்பிக்கப்பட்ட பாசிச போக்குகளின் எழுச்சி, போர் மற்றும் இனவெறி வன்முறை சக்திகள், இசுலாத்தை சாத்தான்மயமாக்கும் பரவிவரும் அச்சமூட்டல்கள், அரசு கண்காணிப்பு ஆகியவையும் இணைந்து கொள்கின்றன. பெரும் தொழில் குழும நலனும் அரசு நலனும் இரண்டறக் கலந்து எங்கும் பரவி முழுமையடைந்திருக்கிற, அதாவது ஒருவர் அரசையே தனியார்மயமாக்கி விடலாம் என்று பேசுகிற அளவுக்கு போயிருக்கிற, மிகவும் அருவருக்கத்தக்க, இனவெறி பிடித்த டொனால்ட் டிரம்ப் போன்ற ஒருவரை அமெரிக்க ஜனாதிபதியாக கொண்டு வந்திருக்கிற ஒரு சர்வதேச அரசியல் சூழலை நாம் சந்தித்துக் கொண்டிருக்கிறோம்.
ஆனால், உலக முதலாளித்துவத்தின் இதயப் பகுதியான அய்க்கிய அமெரிக்கா, அய்ரோப்பா உட்பட உலகமெங்கும் புதுப்பிக்கப்பட்ட முதலாளித்துவ எதிர்ப்பு, இனவெறி எதிர்ப்பு வெகுமக்கள் எழுச்சியையும் காண முடிகிறது. இந்த தீவிர வெகுமக்கள் எதிர்ப்பியக்கம் மாறுபட்ட இடதுசாரி திருப்பத்திற்கான ஆற்றலை மறுஉறுதி செய்கிறது. டொனால்ட் டிரம்பை ஆட்சிக்கு தேர்ந்தெடுத்த அதே அதிபர் தேர்தல், மய்ய நீரோட்ட அமெரிக்க அரசியல் என்ற பின்புலத்தில் அய்க்கிய அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர்களிலேயே சோசலிஸ்டாக இருக்கிற பெர்னி சாண்டர்சை ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக கிட்டத்தட்ட கொண்டு வந்தது.
பிரிட்டனில், பிரெக்சிட்டுக்கு அக்கம்பக்கமாகவே ஜெர்மி கோர்பைன் தலைமையிலான தொழிலாளர் கட்சியின் கொள்கைகளும் நிலைபாடுகளும் தீர்மானகரமான இடதுசாரி திருப்பத்தைக் குறிப்பதையும் நாம் பார்க்கிறோம். நேபாளத்தில், புதிய குடியரசு அரசமைப்புச் சட்டத்தின் கீழ் நடைபெற்ற முதல் தேர்தலில் கம்யூனிஸ்ட்டுகள் முதன்மை அரசியல் சக்தியாக எழுந்து வந்ததை நாம் சமீபத்தில் பார்த்தோம். இகக(மாலெ)யின் 10ஆவது காங்கிரஸ், உலகின் பல்வேறு பாகங்களில் நடைபெற்றுவரும் இடது, முற்போக்கு சக்திகளின் ஒவ்வொரு முன்னேற்றத்தையும் ஆதரிக்கிறது, வரவேற்கிறது.
தோழர்களே, இந்தியாவில் சந்தேகத்திற்கு இடமின்றி பாசிசம் வளர்ந்து வருவதை எதிர்கொள்ள வேண்டிய நிலையில் நம் 10ஆவது காங்கிரசை நடத்திக் கொண்டிருக்கிறோம். 2014 நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான தேஜமு அடைந்த வெற்றியும் அதைத் தொடர்ந்து இதுவரை இல்லாத அளவு இந்திய மாநிலங்களில் பாஜக தலைமையிலான அரசாங்கங்கள் எழுந்து வந்ததும் ஆர்எஸ்எஸ்சுக்கு தைரியத்தைக் கொடுத்திருக்கிறது. பாஜகவை வழிநடத்தும் கருவான அமைப்பான ஆர்எஸ்எஸ்சும் அதன் பல்வேறு வலைப்பின்னல் அமைப்புகளும் இதுவரை இல்லாத மூர்க்கத்துடனும் வேகத்துடனும் பாசிச நிகழ்ச்சிநிரலை கட்டவிழ்த்து விடுகின்றன. பாஜக இன்று நவதாராளவாத பாசிச தாக்குதலை எல்லா முனையிலும் பரப்பி வருகிற அதே வேளை, ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிநிரலை முன்னெடுத்துச் செல்லும் வகையில், அரசு, அரசு அல்லாத நிறுவனங்கள் ஒட்டு மொத்தத்தையும் கைப்பற்றி சீர்குலைத்து சமூகத்தை வகுப்புவாத அடிப்படையில் திறம்பட பிளவு படுத்தும் வேலையையும் செய்து வருகிறது. நாடாளுமன்ற நடவடிக்கைகளை திறமையாக கையாண்டு, நிறுவனங்கள் மற்றும் அரசியலமைப்புச் சட்ட நிறுவனங்களின் அதிகாரத்தை மட்டுப்படுத்தி அதன் மூலம் நாடாளுமன்றத்தை கிட்டத்தட்ட சட்ட விரோதமாக கைப்பற்றுவது என்ற அளவுக்கு அது திறன்பெற்றிருக்கிறது.
பாஜக, அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று அடுத்த முறையும் ஆட்சியைக் கைப்பற்ற வேண்டும் என்பதற்காக இருக்கிறது என்பது மட்டுமல்ல, அது 2025ல் ஆர்எஸ்எஸ்சின் நூற்றாண்டை நோக்கி நடைபோடும் போது இந்தியாவை ஆர்எஸ்எஸ்சின் இந்து மேன்மை போற்றும் வரைபடத்திற்கு ஏற்றாற்போல் இந்தியாவை மறுவடிவமைப்பு செய்யும் வேலையிலும் ஈடுபட்டு வருகிறது. தினமும் நடைபெறும் வெறுப்பு, பொய், அரச ஒடுக்குமுறை, தனியார்மயமாக்கப்பட்ட வன்முறை ஆகியவற்றிற்குக் கீழ் கடந்த காலங்களின் அச்சுறுத்தும் அம்சங்களையும் பிற்போக்கு போக்குகளையும் எடுத்தாள முற்படும் இந்திய பாசிசத்தின் மறுக்க முடியாத அம்சங்கள் உள்ளன. அது நம் மனதில் ஒரு சமூகத்திற்கு  எதிரான சகிப்பின்மையையும், முன்முடிவுகளையும் திணித்து நம் சமூகத்தில் மிகவும் பிற் போக்கான சாதிய, வகுப்புவாத, ஆணாதிக்க சக்திகளை கட்டவிழ்த்துவிட்டு அவற்றை வலுவடையச் செய்கின்றன. சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவத்தின் பகைவர்கள் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை திருப்பிப் போட்டு, நாட்டை இந்தி - இந்து - இந்துஸ்தான் சட்டகத்துக்குள் பொருத்தி மறுவடிவமைப்பு செய்ய விரும்புகிறார்கள். இந்திய சுதந்திரப் போராட்டத்துக்கு துரோகமிழைத்து பிரிட்டிஷ் காலனியவாதிகளிடம் கூடிக் குலாவியவர்கள் இப்போது பகத்சிங்குக்குப் பதிலாக சவார்கரை, அம்பேத்கருக்குப் பதிலாக கோல்வால்கரை, காந்திக்கு பதிலாக கோட்சேயை முன்நிறுத்தி வரலாற்றை மாற்றி எழுதவும் கைப்பற்றவும் விரும்புகிறார்கள்.
இந்தத் திட்டம் முறியடிக்கப்பட வேண்டும். பேரழிவு தடுக்கப்பட்டாக வேண்டும். இந்த நேரத்தின் அழுத்திக் கொண்டிருக்கும் சவால் மற்றும் உடனடிக் கடமைகளுக்காக இகக(மாலெ)யின் இந்த 10ஆவது மாநாடு தன்னை அர்ப்பணித்துக் கொள்கிறது.
இடதுசாரிகளாகிய நாம் சில முக்கிய தேர்தல் போராட்டங்களில் தோல்வி கண்டிருக்கிறோம் என்பதை நாம் அறிவோம். ஆனால் இந்தத் தேர்தல் பின்னடைவுகள் பாசிசத்துக்கும் ஜனநாயகத்துக்கும் இடையில் நடந்து வரும் போராட்டத்தை தீர்மானிக்கப் போவதில்லை. தங்கள் சுதந்திரத்திற்காகவும் உரிமைகளுக்காகவும் மெச்சத்தக்க வகையில் தீர்மானகரமாக போராடிய மக்களின் வீரம் மற்றும் திடத்திலிருந்து கம்யூனிஸ்டுகள் எப்போதுமே வலிமை பெறுகிறார்கள். இன்று இந்தியா தொழிலாளர்கள், விவசாயிகள், தலித்துகள், ஆதிவாசிகள், மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் பெண்களின் சக்திவாய்ந்த உணர்வுபூர்வ மக்கள் போராட்ட அலையை மீண்டும் சந்தித்து வருகிறது. இந்த வளர்ந்துவரும் எதிர்ப்பு, பாசிச தாக்குதலுக்கு எதிராக இடதுசாரிகள் அணிதிரட்டிக் கொள்ள வழிவகுக்கும். பல்வேறு பிரிவு இடதுசாரிகளுக்கிடையிலான வளர்ந்து வரும் ஒற்றுமையும் ஒவ்வொரு எதிர்ப்பியக்கத்தோடு உள்ள ஒத்துழைப்பும் பாசிச சக்திகளின் வேட்டையாடும் பயணத்தை தடுத்து நிறுத்த வழிவகுக்கும். வகுப்புவாத வெறுப்பு கொண்டு மக்களைப் பிரிக்கும் வெறித்தனத்தை, வாழ்வாதாரம், கவுரவம், ஜனநாயகத்துக்கான மக்கள் போராட்டங்களின் ஒற்றுமை வீழ்த்திவிடும். நிலவிய அரசியல் வெற்றிடத்தை பாஜகவும் ஆர்எஸ்எஸ்சும் தங்களது அனைத்து இத்தியாதிகளையும் பயன்படுத்தி பரந்துவிரிந்து கொள்ளப் பயன்படுத்திக் கொண்டன. 2004லிருந்து 2014 வரை இரண்டு அடுத்தடுத்த அய்முகூ ஆட்சிகளுக்கு தலைமை வகித்த காங்கிரஸ் மக்கள் மத்தியில் மோசமாக செல்வாக்கிழந்ததன் விளைவு, பாஜகவுக்கு தாம்பாளத்தில் வைத்து ஆட்சிக் கைமாற்றிக் கொடுக்கப்பட்டது. சமீபத்திய திரிபுரா சட்டமன்றத் தேர்தலின் போது அம் மாநில அனைத்து காங்கிரஸ் அமைப்புகளும் ஒட்டுமொத்தமாக பாஜக பக்கம் இடம்பெயர்ந்து  சென்றது, மூர்க்கத்தனமான பாஜக வோடு போட்டியிட காங்கிரஸ் கட்சிக்குள் உள்ள பலவீனத்தை வெளிப்படுத்தியது. பல பிராந்தியக் கட்சிகளும் மண்டலுக்குப் பிந்தைய சமூகநீதி அணியைச் சேர்ந்த கட்சிக ளும் அவ்வவ்போது பாஜகவுடன் கரம் கோர்த்து அக்கட்சி அதன் சொந்தக் காலில் தனிப்பெரும்பான்மை பெறவும், கூட்டணிகளோடு சேர்ந்து வசதியாக அறுதிப் பெரும் பான்மை பெறவும் உதவின. 2015 பீகார் சட்டமன்றத் தேர்தல்களில் மக்கள் பாஜகவை தெள்ளத்தெளிவாக புறக்கணித்த பின்பும் பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் செய்த துரோகத்தின் விளைவாக பின் கதவு வழியாக பாஜக ஆட்சியைக் கைப்பற்றியிருக்கிறது. சமீபத்திய உத்தரபிரதேச இடைத்தேர்தலில் சமாஜ்வாதிக் கட்சிக்கும் பகுஜன் சமாஜ் கட்சிக்கும் இடையில் ஏற்பட்டுள்ள ஒற்றுமை, ஜிதன்ராம் மான்ஜியும் சந்திரபாபு நாயுடுவும் தேஜமுவிலிருந்து வெளியேறி இருப்பது ஆகியவை பாஜகவுக்கு எதிரான சக்திகளின் தேர்தல் மறுஅணிசேர்க்கையை பிரகாசமாக்கியிருக்கின்றன. ஆனாலும் அதுபோன்ற அணி சேர்க்கை என்பது பாஜகவை தற்காலிகமாக முறியடிக்க மட்டுமே பயன்படும்.
தீர்மானகரமாக பாசிசத்தை முறியடிக்க வேண்டுமானால் அதற்கு நாட்டின் அரசியல் நிகழ்ச்சிநிரலையும் சூழலையும் மாற்ற வேண்டும். அப்படிப்பட்ட ஒரு அரசியல் திருப்பத்திற்கு இடதுசாரிகளின் உணர்வுபூர்வ புத்தெழுச்சிதான் திறவுகோலாகும். பாஜக ஜனநாயகத்தை அழிக்க நிற்குமென்றால், நாம் நாட்டின் சாமான்ய மக்களுக்கு போராடி ஜனநாயகத்தை மீட்டுக் கொடுக்க வேண்டும். பாஜக வரலாற்றை தவறாக சித்தரிக்கவும் தனதாக்கிக் கொள்ளவும் முயற்சி செய்யுமென்றால், நாம் சுதந்திரப் போராட்டத்தின் புகழ்மிக்க மரபு, சமூக நீதிக்கான மற்றும் பெண்களின் உரிமைக்கான நீடித்த போராட்டம் ஆகியவற்றை உயர்த்திப் பிடித்து அவர்களின் மோசடியை முறியடிக்க வேண்டும்.
இந்தியாவையும் இந்திய தேசியவாதத்தையும் சங் படை குறுகிய இந்தி - இந்து - இந்துஸ்தான் என்ற அடித்தளத்தில் மறுவரையறை செய்ய  முயலும்போது நாம், ஏகாதிபத்திய எதிர்ப்பு ஒற்றுமை, இந்திய மக்களின் அறுதியிடல், ‘மக்களே முதல்’ தேசப்பற்று என்ற பதாகையை உயர்த்திப் பிடிப்பதன் மூலம் அதை முறியடிக்க வேண்டும்.
பஞ்சாப் தோழர்கள் இந்த காங்கிரசை, சாஹித் இ அஜாம் பகத்சிங், அவரின் தோழர்கள் ராஜகுரு, சுகதேவ் ஆகியோர் தியாகம் எய்திய அந்த வாரத்தில் நடத்தியதில், நாங்கள் பெருமை கொள்கிறோம். இந்திய சுதந்திரப் போராட்டத்தில் இடது பாரம்பரியத்தின் துவக்க கால உந்து சக்தியாக இருந்த அந்த பகத்சிங் வழிமரபுதான் மீண்டும் இப்போது இந்திய மக்களின் சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்தை வென்றெடுக்க வழிகாட்டுகிறது. கட்சி காங்கிரஸ் நடைபெறும் இந்த அரங்கு தோழர் ஸ்வப்பன் முகர்ஜி, தோழர் கணேசன் ஆகியோரின் நினைவுகளுக்கும், மேடை, தோழர்கள் சிறிலதா சுவாமிநாதன் மற்றும் ஜிதா கவுர் ஆகியோரின் நினைவுகளுக்கும் அர்ப்பணிக்கப்படுகிறது. நாம் மறைந்த அந்த தோழர்களின் நினைவுகளுக்கு வணக்கம் செலுத்தி, பகத்சிங் கனவு கண்ட இந்தியாவை கட்டமைக்கும் திட்டத்துக்கு நாம் நம்மை மறு அர்ப்பணிப்பு செய்து கொள்வோம். இந்தியா மற்றும் சர்வதேச விருந்தினர்களுக்கு மீண்டும் நாம் வாழ்த்துக்களை தெரிவிக்கிறோம். இடதுசாரிகள் மற்றும் போராடும் சக்திகளுக்குள் உயர்ந்த ஒற்றுமையை கட்டமைக்கவும், பாசிசத்தை இறுதி வெற்றி கொள்ள, ஜனநாயகம் மற்றும் சோசலிசத்திற்காக சக்திவாய்ந்த ஒன்றுபட்ட இயக்கத்தை நடத்தவுமான எங்கள் உறுதியை உங்கள் வருகை பலப்படுத்தியுள்ளது. 

Search