COMMUNIST PARTY OF INDIA (MARXIST - LENINIST) - LIBERATION

COMMUNIST PARTY OF INDIA (MARXIST - LENINIST) - LIBERATION, TAMILNADU

Wednesday, March 14, 2018

காவிக் கும்பல்கள் 
லெனினை பெரியாரை அம்பேத்கரை எதிரிகளாகக் கருதுவது பொருத்தமானதுதானே! 

எஸ்.குமாரசாமி

திரிபுரா தேர்தல் முடிவுகள் தந்த துணிச்சல்
காக்கிச் சட்டைகள் அரசு வன்முறையுடன் தொடர்புபடுத்திக் காணப்படுபவையாகும்.
காமராஜ் என்ற காக்கிச் சட்டை மாவீரர், உஷா என்ற பெண்ணை, அவர் கணவர் ஹெல்மெட் அணியவில்லை என்பதால், இருசக்கர வாகனத்தில் பின் தொடர்ந்து சென்று மூன்று முறை எட்டி உதைத்து கொன்ற வன்முறை தமிழக மக்களுக்குத் தெரியும். காஷ்மீர் மக்களின் வாழ்வோடு இரண்டறக் கலந்தது அரசு சீருடை வன்முறை. அரசு படையினரான காவல் துறையினர், துணை இராணுவத்தினர், இராணுவத்தினர் மோதல் படுகொலையில் ஈடுபடாத மாநிலமே இந்தியாவில் இருக்க முடியாது. காக்கிச் சீருடை அரசு வன்முறை தாண்டி, அரசின் ஒப்புதல் கிடைக்கும் அல்லது அரசு தண்டிக்காது என்ற பாதுகாப்புடன் ஏவப்படும் காவிப் படைக் கும்பல் வன்முறை, இந்திய வகை பாசிசத்தை அடையாளப்படுத்துகிறது. காவிக் கும்பல் வன்முறையாளர்கள்தான் திரிபுராவில் தோழர் லெனின் சிலையை புல்டோசர் கொண்டு தகர்த்துள்ளனர். அவர்கள் திரிபுரா வெற்றியை, வலதுசாரிகள் இடதுசாரிகள் மீது போர் தொடுத்து அடைந்த வெற்றியாகக் கருதுகின்றனர்.
1978லிருந்து 1993, திரும்பவும் 1998லிருந்து 2017 வரை இருந்த இடது முன்னணி, திரிபுராவில் சங் பரிவார் அணியிடம் தோற்றது. சங் பரிவார், உழைப்பை மதிக்காது, மிதிக்கும். சமத்துவத்தை வெறுக்கும். மேல் கீழ் அமைப்பு நீடிக்க வேண்டும் என விரும்பும். அதனால்தான் ஆதிக்க எதிர்ப்பின் அடையாளமான லெனின் சிலையை அவர்கள் தகர்த்துள்ளனர்.
குஜராத்தில் தட்டு தடுமாறி வென்றவர்களுக்கு, ராஜஸ்தான் ஆஜ்மெர், ஆல்வார் தொகுதிகளில் 2018 துவக்கத்தில் படுதோல்வி அடைந்தவர்களுக்கு, நீரவ் மோடி பகல் கொள்ளையால் பதில் சொல்ல முடியாமல் திணறியவர்களுக்கு தாம் சரிந்து விட்டோம் என்றில்லாவிட்டாலும் தடுமாறுகிறோம் எனத் தெரிந்தது. அதனால்தான் 25 நாடாளுமன்ற உறுப்பினர்களை மட்டுமே அனுப்புகின்ற வடகிழக்கில் மூன்று மாநிலங்களில் குறிப்பாக திரிபுராவில் அடைந்த வெற்றி போதை அவர்கள் தலைக்கு ஏறியது. காங்கிரஸ், சமூக நீதிக் கட்சிகள், பிராந்தியக் கட்சிகள் மட்டுமின்றி இடதுசாரி கட்சிகளையும் வென்று விட்டோம், நாம் தோற்கடிக்க முடியாதவர்கள் என்ற மமதையுடன் லெனின் சிலையைத் தகர்த்துள்ளனர்.
ஆட்சியில் இல்லாதபோதே தகர்த்த கூட்டம் ஆட்சி வந்தபின் ஆட்டம் போடாதா?
ஏக் தக்கா ஜோர் சே. இன்னும் ஓர் இடி இடி. ஒரு தள்ளு தள்ளு. வேகமாக இடி, பிடித்துத் தள்ளு. 06.12.1992ல் பட்டப்பகலில் நாடறிய சட்டத்தை மீறி அத்வானி, உமாபாரதி போன்ற தலைவர்கள் ஏக் தக்கா ஜோர் சே எனக் குரல் கொடுத்து, பாப்ரி மசூதியை இடித்தார்கள். அகமதாபாத் காவல் நிலையத்துக்கு வெளியே இருந்த வாலி தக்சான்ட் மசார் என்ற மசூதியை 01.03.2002 அன்று இடித்தார்கள். அடுத்தடுத்த 6 நாட்களில் 272 மசூதிகளை இடித்தார்கள். அதிகாரத்தில் இல்லாமல் மசூதி இடித்தோம், வாஜ்பாய் ஆட்சி வந்தது. குஜராத் தில் மாநில முதல்வராய் இருந்து இசுலாமிய படுகொலை நடத்தினோம், 2014ல் நாடாளு மன்றப் பெரும்பான்மை கிடைத்தது. பாரதீய என்பதற்கேற்ப நாடெங்கும் வென்றுவிட்டோம், இசுலாமியர்களுக்கு எதிராக, கிறிஸ்தவர்களுக்கு எதிராக பாய்ந்த திரிசூலத்தின் மூன்றாம் முனை வலதுசாரி எதிர்ப்பாளர்கள் மீது, குறிப்பாக போராடும் இடதுசாரிகள் மீது பாயும் என்ற செய்தி சொல்லவே திரிபுராவில் லெனின் சிலை தகர்க்கப்பட்டது, பாரத் மாதா கீ ஜெய், என முழங்கிக் கொண்டேதான் லெனின் சிலையைத் தகர்த்துள்ளனர். ஜெய் ஸ்ரீராம் என முழங்கிக் கொண்டு மசூதியை இடித்தார்கள். இந்துத்துவா வெறியர்களின், போலி தேசபக்தர்களின் குறி, லெனின் அம்பேத்கர் பெரியார் என்றிருப்பதில் வியப்பேதும் இல்லை.
சொற்கொல்லர் வாதம் என்ன?
உலகெங்கும் கம்யூனிசம் தோற்றுவிட்டது, இந்தியாவிலும் அதன் கதை முடிந்த கதைதான், வன்முறை வெறுப்பு இடதுசாரி அரசியல், வளர்ச்சி அரசியலிடம் தோற்றுவிட்டது, காவி சூரியன் உதித்துவிட்டான், சிவப்பு சூரியன் மேற்கே மறைந்துவிட்டான், கிளர்ச்சி அரசியல் காலம் முடிந்துவிட்டது, இனி எல்லாம் வளர்ச்சி, வளர்ச்சி, வளர்ச்சி மட்டும்தான். இதுவே திரிபுரா வெற்றிக்கு மோடி அளித்த விளக்கம். பின்தங்கிய மாவட்டங்கள் (பேக்வார்ட்) என்று எதிர்மறையாகச் சொல்லாமல், இனி முன்னேற விரும்பும் (அஸ்பிரேஷனல்) மாவட்டங்கள் என்று நேர்மறையாக அழையுங்கள் என்கிறார். பேச்சு, பேச்சு. வாய்ப்பந்தல். இதுதான் சொற்கொல்லரின் சாதனை!
என்ன தந்திரம் வென்றது?
காங்கிரஸ் முக்த் பாரத், காங்கிரசிலிருந்து விடுதலை அடைந்த இந்தியா என்ற பாஜக, காங்கிரஸ் வழியில், முன்னாள் காங்கிரஸ்காரர்களால் நடத்தப்படுகிறது. அஸ்ஸôமில் காங்கிரஸ் அமைச்சரவையில் இருந்த ஹிமந்த பிஸ்வ சர்மாதான் பாஜக தலைமையிலான வடகிழக்கு வளர்ச்சி கூட்டணியின் அமைப்பாளர். இவர் மணிப்பூரில், காங்கிரஸ் ஆகப் பெரிய கட்சியாக வென்ற பிறகும், ஆளுநர் துணை கொண்டு, முன்னாள் காங்கிரஸ்காரர் பிரேன் சிங்கை முதல்வராக்கியவர். அருணாச்சல பிரதேச காங்கிரஸ் முதல்வர் காண்டுவை, கூண்டோடு பாஜகவுக்கு அழைத்து வந்து பாஜக முதல்வர் ஆக்கியவர். மேகாலயாவில் பாஜக 60ல் 2 இடங்கள் வென்றதை நாகாலாந்தில் 60ல் 12 இடங்கள் வென்றதை இமாலய வெற்றியாகக் காட்டி, மேகாலாயாவில் வெறும் 2 இடம் வென்ற பாஜக மூலம் சட்டமன்ற உறுப்பினரே இல்லாத கான்ராட் சங்மாவை முதல்வராக்கியவர். சட்டமன்ற உறுப்பினர் இல்லாத யோகி ஆதித்யநாத் உத்தரபிரதேச முதலமைச்சரான பாணி, மேகாலாயாவில் பின்பற்றப்பட்டது. இதுவும் காங்கிரஸ் பாணிதான். திரிபுராவில், ஹிமந்த பிஸ்வ சர்மா, காங்கிரஸ்காரர்களையும், காங்கிரஸ் தந்திரத்தையும், காங்கிரஸ் வாக்குகளையும் கொண்டுதான் பாஜக வெற்றிக்கு வழி செய்தார். பழங்குடியினருக்கு தனி மாநிலம் என்ற கோரிக்கை பழங்குடியினர் வாழ்பகுதிகளில் மட்டுமே பேசப்பட்டது.  வங்க மொழி பேசும் பெரும்பான்மை மக்கள் வாழ் பகுதிகளில், பழங்குடியினர்க்கு தனி மாநிலம் கோரிக்கை பேசப்படவில்லை. பழங்குடியி னரைப் பகடைக்காயாக்கும் காங்கிரஸ் தந்திரத்தை பாஜக கையில் எடுத்தது.
திரிபுரா உள்ளிட்ட மத்திய கிழக்கு மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்ட மாநிலங்களாகும். மத்திய அரசு இவர்களுக்கு குறைவாகவே நிதி வழங்கும்.மோடி ஆட்சிக்கு வந்த பிறகு எல்லா விதங்களிலும் திரிபுரா வஞ்சிக்கப்பட்டது. திரிபுரா பொருளாதாரம் பெரிதும் பாதிக்கப்படுவதை உறுதி செய்தது. இப்போது மத்தியிலும் மாநிலத்திலும் ஒரே கட்சி ஆட்சி இருந்தால்தான் வளர்ச்சி வரும், வேலை வாய்ப்பு வரும் எனப் பகிரங்கமாக மோடி - அமித் ஷா மூலம் மிரட்டியது. இடது முன்னணி நீண்ட காலம் ஆட்சியில் இருந்ததால் ஏற்பட்ட சலிப்பு, கட்சியினரிடம் தோன்றிய, மக்களின் எசமானர்களாக மாறிய அதிகாரத்துவப் போக்கு ஆகியவையும் சேர்ந்து பாஜக வெற்றியை உறுதி செய்தன.
காங்கிரசோடு சேர்ந்திருந்தால் 
பாஜகவை தோற்கடித்திருக்க முடியாதா?
இது சொத்தை வாதம். மேற்கு வங்கத்தில் காங்கிரசோடு சேர்ந்து இகக(மா) நின்றதன் விளைவு, இகக(மா) வாக்குகளும் இடங்களும் கங்கிரசுக்குச் செல்வதில்தான் முடிந்தன. சட்டமன்றத்தில் இகக(மா)வைவிட காங்கிரசுக்கு கூடுதல் இடங்கள் கிடைத்தன. கட்சி மத்திய கமிட்டி, அரசியல் தலைமைக்குழுவுக்கு கட்டுப்படாத மேற்குவங்க மாநிலக் குழு என்ற அவப்பெயர் வந்ததுதான் மிச்சம். இப்போது திரிணாமூல் தந்திரமாக மாநிலங்களவை தேர்தலில் காங்கிரசின்  அபிஷேக் சிங்வியை ஆதரிக்கிறது. திரிபுராவில், பாஜக கூட்டணியின் வாக்குகள் 50% தாண்டிச் சென்றது. காங்கிரஸ் வாக்குகள் 2% சேர்ந்தாலும், இகக(மா) வென்றிருக்காது. தேர்தல் வெறும் எண் கணிதம் இல்லை என்பதால், வேதியியல் வேலை செய்து இகக(மா)வின் 42%மும் குறைந்திருக்கக் கூடும். ஆகவே, தேர்தல், எண்ணிக்கை விளையாட்டு என்பவை அல்ல இடதுசாரி அரசியல் என, உணரப்பட வேண்டும்.
பெரியார் சிலைக்கு எப்படி வந்தார்கள்?
பெரியாரின் தமிழ்நாட்டில் பாஜக வரவே முடியாது என்று பேசிக் கொண்டிருப்பது வீண் வேலை. வைகோ, ராமதாஸ், விஜய்காந்த் போன்றோர் பெரியார் களமாடிய தமிழ்நாட்டில்தான் பாஜகவுடன் கரம் கோர்த்தனர். திமுகவும் பாஜக கூட்டணியில் இடம் பெற்றிருந்த காலம் இருந்தது. இப்போது, தமிழ்நாட்டில் பாஜக பினாமி ஆட்சிதான் நடக்கிறது என்பதை நாம் மறந்துவிடலாமா? ஜெயலலிதா உடல் நலக் குறைவுக்குப் பிறகே, தமிழ்நாட்டை மறைமுகமாக பாஜகதான் ஆள்கிறது.
தேஜமு கூட்டணியில் சிவசேனா முரண்டு பிடிக்கிறது. தெலுங்கு தேசம் வெளியேறுகிறது. அகாலி தளத்துக்கும் ஆர்வம் இல்லை. அஇஅதிமுகவை தேஜமுவில் சேர்த்துக் கொண்டு தமிழ்நாட்டில் தேஜமு ஆட்சி என அறிவிக்குமாறு மோடியும் அமித் ஷாவும் கட்டளையிட்டால், பழனிச்சாமி பன்னீர்செல்வம் ஆளுக்கொரு ரிமோட் வைத்துக் கொண்டு புதிய ஆட்சியின் திறப்பு விழாவை ஒரே நேரத்தில் நடத்தாமலா போய் விடுவார்கள்?
நாடாளு மன்ற ஜனநாயக வரையறையை சங் பரிவாரால் சிதைத்துவிட முடியாது, இந்தியா போன்ற பரந்த பன்மைத்தன்மை கொண்ட நாட்டில், ஒற்றைத்தன்மை திணிப்பு எடுபடாது என நிம்மதி அடைபவர்கள், கிட்டப்பார்வையுடன் தற்கொலைப் பாதையைத் தேர்வு செய்ததாக வரலாற்றால் தண்டிக்கப்படுவார்கள். சங் பரி வாருக்கு நாடெங்கும் கூட்டாளிகள் கிடைக்கின்றனர். தமிழ்நாட்டில், ஆன்மிக அரசியல் எனப் புறப்பட்டவர்கள் சங் பரிவாருக்கு எடுபடக் கூடும். சாதி வெறியரான பெரியார் சிலை தமிழ்நாட்டில் அகற்றப்படும் என்று பேசி எதிர் விளைவுகளை உண்டாக்கிய எச்.ராஜா, தேசியமும் தெய்வீகமும் தமிழ்நாட்டில் முத்துராமலிங்க தேவர் விரும்பியபடி தழைத்தோங்கும் எனப் பேசியதை, நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
லெனின் பெரியார் அம்பேத்கர் மரபு உயர்த்திப் பிடிக்கப்பட வேண்டும்
பாசிசம், இந்திய சமூகத்தில் வேரூன்றியுள்ள அநீதி மற்றும் வன்முறையிலிருந்து வலு பெறுகிறது;  அவற்றை மறு உறுதி செய்து விரிவுபடுத்துகிறது. தமிழ்நாட்டில், கடந்த சில வருடங்களாகவே சமூக பொருளாதார அரசியல் நெருக்கடி நீடிக்கிறது. 2016ல் ஜெயலலிதா வசதியாக வெற்றி பெறவில்லை. மேற்கு மாவட்டங்களால் தப்பித்தார். ஆனால் ஊழல் வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பு அவர் தலைமேல் கத்தியாகத் தொங்கிக் கொண்டிருந்தது. அவர் செத்துதான் தண்டனையில் இருந்து தப்பித்தார். பலவீனமான அஇஅதிமுவை தோற்கடிக்கும் பலம் 2016ல் திமுகவிடம் இல்லை. கருணாநிதிக்கும் உடல் நலம் சரியில்லை.ஜெயலலிதா மரணத்திற்குப் பிறகு கூட  திமுக நம்பகமான, மக்களுக்காக கேள்வி கேட்கும், குரல் கொடுக்கும் கட்சியாகச் செயல்படாததால்தான், ஆர்கே நகர் இடைத்தேர்தலில் மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்டு வைப்புத் தொகை இழந்தது. கடந்த பல வருடங்களில் முக்கியக் கட்சிகள் பங்கேற்பு இல்லாமலே பிரும்மாண்டமான போராட்டங்கள் தமிழ்நாட்டில் நடந்து வருகின்றன. கழகங்கள் சரி இல்லை, துவக்க கால திராவிட இயக்க முற்போக்கு விழுமியங்களைத் தொலைத்துவிட்டன, மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு என்ற பெரியார் வழிகாட்டுதலைப் புறக்கணித்து சுயமரியாதையை பதவிக்காக அடகு வைத்துவிட்டு பகுத்தறிவுக்கு விடை கொடுத்துவிட்டார்கள் என மக்கள் நினைக்கிறார்கள்.
மக்கள் எதிர்ப்பை இடது திசையிலிருந்து கட்டமைத்து ஒன்றுபட்டுப் போராடுவது, ஜனநாயக சக்திகளைக் கூட்டாளிகளாக்கிக் கொள்ள வேண்டியது, இடதுசாரிகளின் கடமை. நாம் லெனின் பெரியார் அம்பேத்கர் பற்றிய நினைவேக்கத்தில் (நாஸ்டால்ஜியா) மூழ்குவதாலோ, உணர்ச்சிக் கொந்தளிப்படைவதாலோ பாசிசத்தை முறியடிக்க முடியாது. லெனின், பெரியார், அம்பேத்கர் கொள்கைகளை சுதந்திரமாகப் பரப்புகிறோமா? அவர்களது லட்சியங்களை துணிச்சலோடும் படைப்பாற்றலோடும் மக் கள் மத்தியில் எடுத்துச் செல்கிறோமா? அவற்றுக்கு அரசியல் தளத்தில், கருத்தியல் தளத்தில், அமைப்பு தளத்தில் நியாயம் வழங்குகிறோமா? இளைஞர்களோடு நமக்கு எவ்வளவு தூரம் தொடர்பு உள்ளது?
உழைக்கும் மக்கள் சுரண்டப்படுவது, ஒடுக்கப்படுவது ஆகியவற்றை எதிர்ப்பதில், சாதி அழித்தொழிப்பில், சுயமரியாதையில், பகுத்தறிவில் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் இளைய சமூகம் ஆர்வமும் அக்கறையும் காட்டுகிறார்கள்.
நாம் தேர்தலிலும் பாஜகவுக்கு  ஆகப் பெரிய தோல்வி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். ஆனால் தேர்தல்கள் மூலம் மட்டும், வீணாய்ப் போன சந்தர்ப்பவாத நம்பகத்தன் மையற்ற மெகா அரசியல் கூட்டணிகள் மூலம் மட்டும், பாசிசத்தை வீழ்த்த முடியாது. பாசிசத்தை மக்கள் போராட்டங்களால்தான் வீழ்த்த முடியும். வேலைவாய்ப்பின்மையும் வருமானமின்மையும் நிறைந்த குழப்பமான நெருக்கடியான காலத்தில், நாங்கள் காப்பாற்றுவோம் என பாசிஸ்ட்கள் வெற்றிடத்தை நிரப்பி உள்ளனர். மக்களுக்கு உரிமைகளை நல்வாழ்க்கையை உறுதி செய்யும், வளமான பன்மைத்துவ சமத்துவ இந்தியாவை கொண்டு வரும் போராட்டங்களால், நாம் அந்த வெற்றிடத்தைக் கைப்பற்ற வேண்டும்.
சுரண்டல் ஆதிக்கம் ஒடுக்குமுறை எதிர்ப்பு போராட்டங்கள் நடப்பதும், அந்த போராட்டங்களில் பங்கேற்கும் போராளிகள் உருவாகிக் கொண்டே இருப்பதும் வரலாற்று விதி. இந்தப் போராட்டங்களோடு, இந்தப் போராளிகளோடு, அவர்கள் பாதையில் ஒளி பாய்ச்சுபவர்களாக, லெனின் அம்பேத்கர் பெரியார் எப்போதும் இருப்பார்கள்.
மக்கள் இந்தியா, லெனின் அம்பேத்கர் பெரியார் புகழ் பாடிக் கொண்டே இருக்கும்.

Search