COMMUNIST PARTY OF INDIA (MARXIST - LENINIST) - LIBERATION

COMMUNIST PARTY OF INDIA (MARXIST - LENINIST) - LIBERATION, TAMILNADU

Wednesday, March 14, 2018

திவாலானது ஏர்செல் மட்டுமல்ல கார்ப்பரேட் ஆதரவு நடைமுறைகளும்தான்

தொலைதொடர்பு சேவை என்ற ‘சுதந்திரச் சந்தைக் கடலுக்குள்’ ரிலையன்ஸ் ஜியோ வந்த பிறகு பெரிய மீன், சிறிய மீன்களை விழுங்குகிறது.
ஏர்செல் தனது செயல்பாடுகளை நிறுத்திவிட்டது. அனில் அம்பானியின் தொலைதொடர்பு நிறுவனம் அடிவாங்கிவிட்டது. வோடாபோன்- அய்டியாவும் அந்த வழியிலேயே பின் தொடரும் என்று சொல்லப்படுகிறது.
ரூ.11,500 கோடி வங்கிப் பணத்தை கொள்ளையடித்து விட்டு நரேந்திர மோடி ஆதரவுடன் நாட்டை விட்டு ஓடிப் போன நீரவ் மோடி, என் மீது அவசரப்பட்டு நடவடிக்கை எடுத்துவிட்டீர்கள், இப்போது எனது தொழிலாளர்களுக்கு நீங்கள்தான் ஊதியம் தர வேண்டும் என்று இந்திய அரசை மிரட்டுகிறார். இன்று திவாலாகியுள்ள ஏர்செல் நிறுவனம் 6,000 தொழிலாளர்களுக்கு ஊதியம் தர நிதியில்லை என்கிறது.
ரூ.15,500 கோடி கடனில் உள்ள ஏர்செல் நிறுவனம் தன்னை திவாலாகிவிட்ட நிறுவனமாக அறிவிக்க வேண்டும் என்று விண்ணப்பித்துள்ளது. அறிவிக்காவிட்டால் மட்டும் என்ன நடந்து விடும்? வாங்கிய கடனை நிறுவனம் திருப்பித் தரப் போவதில்லை. தொழிலாளர்களுக்கு ஊதியம் தரப்போவதில்லை. நிறுவனத்தின் உரிமையாளரும் அவரது குடும்பமும் கைக்கடிகாரம் வரை கழற்றி வைத்துவிட்டு தெருவுக்கு வரவில்லை. அவர்களது வாழ்க்கை வசதியாகவே தொடர்கிறது. ஆனால், தொழிலாளர்கள் தெருவுக்கு வந்துவிடுவார்கள்.
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, பேங்க் ஆஃப் பரோடா, கனரா பேங்க், பஞ்சாப் நேஷனல் பேங்க் ஆகிய பொதுத்துறை வங்கிகள் ஏர்செல் நிறுவனத்துக்கு கடன் கொடுத்துள்ளன. இந்த அளவுக்கு கடன் ஏன் தந்தார்கள்? பெற்றோர்களை கொன்றவன், தான் அனாதை என்பதால் தன்னை விடுவித்துவிடும்படி நீதிபதியிடம் முறையிட்டதுபோல் கார்ப்பரேட் நிறுவனங்கள் மக்கள் பணத்தை கொள்ளை அடித்து விட்டு நெருக்கடியைச் சந்திக்கும்போது தன் மீது நடவடிக்கை வரும் என்றால் மற்றவர்களுக்கு பாதிப்பு என்கிறார்கள்.
நோக்கியா, பாக்ஸ்கான் எல்லாம் இப்படித்தான் போயின. தொழிலாளர்கள் இப்படித்தான் தெருவுக்கு வந்தார்கள். என்ன ஆனார்கள், என்ன செய்கிறார்கள், எப்படி சமாளிக்கிறார்கள் என்றே தெரியவில்லை. நட்டம் என்று காரணம் காட்டி நிறுவனத்தை மூடிவிட்டு போனவர்கள் அரசாங்கங்கள் தரும் பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புக்கு சலுகைகளை விலக்குகளை அனுபவித்துவிட்டுத்தான் போகிறார்கள். தொழிலாளர்கள், உடல் வலிமை மொத்தத்தையும் தொலைத்து பிறகு வாழ்க்கையையும் தொலைத்துவிடுகிறார்கள்.
முதலாளித்துவத்தின் சந்தை அடித்தளம் மிகவும் குறுகியது. மிகப்பெரும் மக்கள் தொகை அந்த சந்தைக்கு வெளியே இருக்கிறது. அந்த சந்தை முழுவதற்கும் தேவையானதை தருவதற்கு பதிலாக லாபம் தருவது மட்டும் சந்தைக்கு வருவதால், இருக்கும் பொருளை வாங்குபவர்கள் எண்ணிக்கை குறையும்போது, நெருக்கடி மேலும் தீவிரமடைகிறது. அலைபேசியை விட அவசியமான தேவைகள் இன்னும் நிறைவேற்றப்படவில்லை என்பது மெய்ப்பிக்கப்படுகிறது.
அலைக்கற்றை ஒதுக்கீடு பெற்ற ஏர்செல் நிறுவனம், மலேசியாவின் மேக்சிஸ் நிறுவனத்தால் வாங்கப்பட்டது, அதற்கு ஏர்செல் நிறுவன உரிமையாளர் நிர்ப்பந்திக்கப்பட்டது என தயாநிதி மாறன் மீதும் கலாநிதி மாறன் மீதும் தொடுக்கப்பட்ட வழக்கில் அவர்கள் இரண்டு பேரும் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுவிட்டார்கள். குற்றச்சாட்டுகள் கூட முன்வைக்கப்படவில்லை. இதை எதிர்த்து மத்திய புலனாய்வு துறை மேல்முறையீடு எதுவும் செய்யவில்லை. ஏன்?
துவக்கத்தில் ஏர்செல் நிறுவனத்தில் 7 பில்லியன் டாலர் அதாவது ரூ.45,500 கோடி முதலீடு செய்யப்பட்டது. ஏர்செல் நிறுவனத்தின் 73% பங்குகளை குளோபல் கம்யூனிகேசன் சர்வீசஸ் ஹோல்டிங்ஸ் லிமிடெட் வைத்துள்ளது. இந்த நிறுவனத்தின் 100% பங்குகளை மலேசிய மேக்சிஸ் நிறுவனம் வைத்துள்ளது. மேக்சிஸ் நிறுவனத்தின் சொத்து மதிப்பு ரூ.41,500 கோடி. ஏர்செல் - மேக்சிஸ் வழக்கு நடந்தபோது, மேக்சிஸ் உரிமையாளர் டி.அனந்தகிருஷ்ணன் ஆஜராக வேண்டும் என்ற உச்சநீதிமன்ற உத்தரவை அவர் அமல்படுத்தவில்லை. மலேசியாவில் அனந்தகிருஷ்ணன் மூன்றாவது பெரிய பணக்காரர். மிகப்பெரிய தொழில் சாம்ராஜ்யத்தின் அதிபதி. ஆக ஏர்செல் நிறுவனம் தனக்கு இருப்பதாகச் சொல்லும் கடன் ரூ.15,500 கோடிக்கும் கூடுதலாக, நிறுவனத்தின் பங்குதாரரிடம் பணம் உள்ளது. நட்டம், கடன் என, ஆனால் அதற்கு அரசாங்கம் மக்கள் பணத்தில் இருந்து தந்து காப்பாற்ற வேண்டும். லாபம் கொட்டினால் அது உரிமையாளர் கருவூலத்துக்கு நேராகப் போகிறது.
சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ள போர்ப்ஸ் பணக்காரர் பட்டியலில் 40.1 பில்லியன் டாலர், ரூ.2,60,622 கோடி நிகர சொத்து மதிப்புடன் முகேஷ் அம்பானி உலகின் 19ஆவது பணக்காரராக, இந்தியாவின் முதல் பணக்காரராக இருக்கிறார். 2017ல் உலக அளவில் 33ஆவது இடத்தில் இருந்தார். அவரது நிகர சொத்து மதிப்பு 72.84% அதிகரித்துள்ளது. அவரது சகோதரர் அனில் அம்பானியின் நிறுவனம் பாக்கி வைத்துள்ள வங்கிக் கடன் ரூ.1.25 லட்சம் கோடி. வங்கிகள் நிதியின்றி தத்தளிக்கும் போது, அந்த குடும்பத்திடம் பணம் கொட்டிக் கிடக்கிறது. ரிலையன்ஸ் கம்யூனிகேசன்ஸ் என்ற அனில் அம்பானியின் தொலைதொடர்பு நிறுவனம் நட்டமானதால் அவரது சொத்து மதிப்பு குறைந்துவிட்டபோதும் அவரும் 2.7 பில்லியன் டாலர், ரூ.17,550 கோடி மதிப்பிலான நிகர சொத்துகளுடன் உலகப் பணக்காரர்கள் பட்டியலில் உள்ளார்.
கவுதம் அதானி 9.7 பில்லியன் டாலர் நிகர சொத்துடன் இந்தியாவின் 9ஆவது பெரிய பணக்காரர் ஆகியிருக்கிறார். 2016ல் இந்திய வங்கிகளுக்கு அவர் தர வேண்டிய கடன் ரூ.96,031 கோடி. மோடியின் நெருங்கிய நண்பர் அவர். கருப்புப் பணத்தை மீட்கப் போவதாக வீரம் பேசிய மோடி தனது நண்பரிடம் இருந்து, அவரது நிகர சொத்து மதிப்பு பல மடங்கு அதிகரித்திருப்பது தெரிந்தும் வங்கிக்குத் தர வேண்டிய பாக்கியை வாங்காமல் இருக்கிறார்.
டிசம்பர் 2016ல் தொலைதொடர்பு துறையில் உள்ள தனியார் நிறுவனங்கள் ரூ.4.85 லட்சம் கோடி கடன் பாக்கி வைத்திருந்தன. அவற்றில் ஒரு நிறுவனம் இப்போது திவாலாகிவிட்டது. வோடாபோன் நிறுவனம் ரூ.65,250 கோடி கடன் பாக்கி வைத்துள்ளது. தவிர அலைக்கற்றை பாக்கியாக அரசுக்கு ரூ.3 லட்சம் கோடி வைத்திருக்கின்றன. இப்போது மத்திய அரசு தனக்கு வரவேண்டிய அலைக்கற்றை பாக்கி தவணையை 30% குறைவாகச் செலுத்தலாம் அதாவது ரூ.1,600 கோடி செலுத்த வேண்டிய இடத்தில் ரூ.1,000 கோடி செலுத்தலாம் என்று இந்த நிறுவனங்களுக்கு மேலும் சலுகை வழங்கியுள்ளது. ஒரு நிறுவனத்துக்கு ஆண்டுக்கு ரூ.600 கோடியை விட்டுத் தருகிறது. அலைக்கற்றை கட்டணத்தை 10 ஆண்டுகளில் தர வேண்டும் என்ற நிபந்தனையை 16 ஆண்டுகள் என்று நீட்டிவிட்டது. இந்தச் சலுகைகள் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்துக்கும் உண்டு.
சாமான்ய மக்கள் சிறுகசிறுகச் சேமித்ததை கார்ப்பரேட் நிறுவனங்களுக்குத் தந்துவிட்டு, கடன் பெற்ற நிறுவனத்திடம் கடனைத் திரும்பி வாங்குவதற்குப் பதிலாக மேலும் மேலும் கடன்கள், மேலும் மேலும் சலுகைகள் என்று கார்ப்பரேட் ஆதரவு அரசாங்கம் தந்தாலும் முதலாளித்துவம் தான் சந்திக்கும் நெருக்கடியில் இருந்து மீள எடுக்கும் முயற்சிகள் அதை மேலும் ஆழமான நெருக்கடிக்குத் தள்ளும் என்ற விதியில் இருந்து தப்ப முடியாது. இன்று திவாலாகியிருப்பது ஏர்செல் மட்டுமல்ல.நவதாராளவாத நடைமுறைகளும்தான்.

Search