COMMUNIST PARTY OF INDIA (MARXIST - LENINIST) - LIBERATION

COMMUNIST PARTY OF INDIA (MARXIST - LENINIST) - LIBERATION, TAMILNADU

Wednesday, March 14, 2018

பொய்யையே கூசிப்போகச் செய்யும் பொய்கள்

மோடி சொல்வதுபோல் மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு நிதி தந்ததா?
ஜெயலலிதாவின் பிறந்த நாளன்று பெண்களுக்கு ஸ்கூட்டர் வழங்கும் திட்டத்தை துவக்கி வைத்த பிரதமர் நரேந்திர மோடி, தமிழ்நாடு இயங்குவதே மத்திய அரசு தரும் நிதியில்தான் என்று ஒரு கருத்து உருவாக்க முயற்சி செய்தார்.
மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது, 13ஆவது நிதி ஆணையத்தின் கீழ் தமிழ்நாடு வெறும் ரூ.80,000 கோடிதான் பெற்றது, இன்று பாஜக ஆட்சியில் இருக்கும்போது 14ஆவது நிதி ஆணையத்தின் கீழ் தமிழ்நாடு ரூ.1,80,000 கோடி பெறுகிறது என்று மோடி சொன்னார். கிராமப்புற வீட்டு வசதித் திட்டம் நிறைவேற்ற மத்திய அரசு இரண்டு ஆண்டுகளில் ரூ.900 கோடி, நகர்ப்புற வீட்டு வசதித் திட்டத்துக்கு ரூ.6,000 கோடி கொடுத்துள்ளது என்றும், மத்திய அரசின் விலையில்லா சமையல் எரிவாயு திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டின் 9.5. லட்சம் பெண்கள் பயன் பெற்றுள்ளனர் என்றும், மத்தியில் பாஜக ஆட்சி அமைத்த பிறகு தமிழ்நாட்டில் ரூ.24,000 கோடி மதிப்புள்ள திட்டங்கள் அமல்படுத்தப்படுகின்றன என்றும் மெட்ரோ ரயில் திட்டத்துக்கு ரூ.3,700 கோடி, பயிர்க் காப்பீட்டு திட்டத்தில் ரூ.2,600 கோடி, 750 மீன்பிடி படகுகளை ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு ஏற்றவாறு மாற்ற ரூ.100 கோடி தந்துள்ளதாகவும், தமிழ்நாட்டுக்கு முத்ரா கடன் ரூ.4,16,000 கோடி, அதில் 70% கடன் பெற்றுள்ளவர்கள் பெண்கள் என்றும் விவரங்களை அடுக்கினார். டாவோசில் நடந்த முதலாளிகள் மாநாட்டில் 600 கோடி வாக்காளர்கள் தேர்ந்தெடுத்த அரசாங்கம் இந்தியாவில் உள்ளது என்று பேசியவர் மோடி. விவரங்களில் தவறுகள், குளறுபடிகள் ஆகியவற்றுக்கு அப்பால் அவரது உரைகள் பொய்களால் மாயைகளால் வெற்று வார்த்தைகளால் நிரப்பப்படுகின்றன.
மோடி சொன்னவையெல்லாம் சரியான விவரங்கள் என்று எடுத்துக் கொண்டாலும் அதனால் தமிழ்நாட்டுக்கு பெரிய ஆதாயங்கள் இல்லை. 2010 முதல் 2015 காலத்துக்கான 13ஆவது நிதி ஆணையம் தமிழ்நாட்டுக்கு ஒதுக்கியது ரூ.83,437 கோடி. அதற்கு முன்பு (2005 - 2010) 12ஆவது கமிசன் ரூ.36,688.13 கோடி ஒதுக்கியது. இந்த ஒதுக்கீடும் 100%க்கும் மேல்தான்.
14ஆவது நிதி ஆணையம் 1 ஏப்ரல் 2015 முதல் 31 மார்ச் 2020 காலத்துக்கானது. மாநிலங்களுக்கான பங்கு 13ஆவது நிதி ஆணையத்தின் 32% என்பதில் இருந்து 42% என அதிகரிக்கப்பட்டது. இதனால் 2014 - 2015ல் இருந்ததை விட 2015 - 2016ல் 45% கூடுதல் நிதி மாநிலங்களுக்கு கிடைக்கும் என நிதியமைச்சகம் தகவல் வெளியிட்டது. இந்த கூடுதல் பங்கு ஒதுக்கீடு பற்றி சத்தமாகப் பேசிய மோடி அரசு, 14ஆவது நிதி ஆணைய அறிக்கை எட்டு திட்டங்களை மத்திய அரசின் நிதி உதவியில் இருந்து துண்டிக்கும் என்ற பரிந்துரை பற்றி பெரிய சத்தம் காட்டவில்லை.
14ஆவது நிதி ஆணையம் தந்துள்ள 10% வரை உயர்த்தப்பட்ட ஒதுக்கீடு நாட்டில் உள்ள எல்லா மாநிலங்களுக்கும் சேர்த்து தந்துள்ள உயர்வு. அது தமிழ்நாட்டுக்கு மட்டுமானதல்ல. தமிழ்நாட்டுக்கு மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு பற்றி மோடி சொன்னது எந்த அளவுக்கு உண்மை என்பதை ஜெயலலிதாவின் அறிக்கை, மற்றும் மனு ஆகியவை விளக்கும்.
2015 - 2016 மத்திய நிதிநிலை அறிக்கை பற்றி கருத்து வெளியிட்டபோது, 14ஆவது நிதி ஆணையம் மாநிலங்களுக்கான நிதி ஒதுக்கீடு அதிகரித்துள்ளது என்று சொன்னாலும் மாநில அரசின் பல்வேறு திட்டங்களுக்கான மத்திய அரசின் உதவி முந்தைய ஆண்டு இருந்த ரூ.3.38 லட்சம் கோடி என்பதில் இருந்து ரூ.2.04 லட்சம் கோடியாக குறைந்துவிட்டது என்றும் முந்தைய இரண்டு ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது இது மிகப்பெரிய அளவிலான குறைப்பு என்றும் ஜெயலலிதா சொன்னார்.
14.06.2016 அன்று மோடியை சந்தித்து மனு அளித்த ஜெயலலிதா, அந்த மனுவில் 14ஆவது நிதி ஆணையம் தமிழ்நாட்டுக்கு பாதகமாக இருப்பதாகச் சொல்கிறார். அந்த மனு பல்வேறு விதங்களிலும் மாநிலத்துக்கு வரவேண்டிய நிதி வரவில்லை என்பதை விளக்கிச் சொல்கிறது.
14ஆவது நிதி ஆணைய பரிந்துரைகளில் மத்திய வரிகளில் தமிழ்நாட்டுக்கான பங்கு 4.969% என்பதில் இருந்து 4.023% என குறைக்கப்பட்டதால் தமிழ்நாட்டின் பங்கு இந்த நிதி ஆணைய ஒதுக்கீட்டில் 19.14% குறைந்துவிட்டது என்கிறார் ஜெயலலிதா. மட்டுமின்றி 13ஆவது நிதி ஆணையத்தின் காலத்தில் தமிழ்நாட்டுக்கு மாநில சிறப்பு ஒதுக்கீடாக ரூ.4,669 கோடி வந்தது என்றும் 14ஆவது நிதி ஆணையம் அதுபோன்ற ஒதுக்கீடு எதுவும் செய்யவில்லை என்றும், இந்த இரண்டு வகையிலும் தமிழ்நாட்டுக்கான மத்திய நிதி ரூ.6,000 கோடி குறைக்கப்பட்டுவிட்டது என்றும் ஜெயலலிதா சொல்கிறார்.
உயர்த்தப்பட்ட ஒதுக்கீட்டால் பயனற்று போகும் விதம் பல்வேறு திட்டங்களுக்கு நிதி வெட்டப்பட்டது என்றும் ஜெயலலிதா அந்த மனுவில் பட்டியலிடுகிறார். கடந்த இரண்டு மத்திய நிதிநிலை அறிக்கைகளில், அதாவது மோடி அரசு முன்வைத்த முதல் இரண்டு நிதி நிலை அறிக்கைகளில், புதிய நலவரிகள், கூடுதல் வரிகள் (செஸ் மற்றும் சர்சார்ஜ்) போடப்பட்டதால் மத்திய வரியில் தமிழகத்துக்கான பங்கு குறைகிறது என்றும் செஸ், சர்சார்ஜ் விதிக்கப்பட்டது, பின்னோக்கிய அணுகுமுறை என்றும் சொன்னார். பின்தங்கிய பகுதிகளுக்கான நிதியுதவி, மலைப்பகுதிகள் வளர்ச்சித் திட்டத்துக்கான நிதியுதவி, மேற்கு தொடர்ச்சி மலை வளர்ச்சித் திட்டம் ஆகிய திட்டங்கள் மத்திய அரசு நிதிஉதவியில் இருந்து துண்டிக்கப்பட்டுள்ளதுடன், 13 முக்கிய திட்டங்களின் மாநில பங்கு 40% வரை அதிகரித்துள்ளது என்றும் மத்திய அரசின் முன்னுரிமை திட்டங்களுக்கு மாநில அரசு மீது நிதிச் சுமை ஏற்படுத்துவது நியாயமற்ற எதிர்ப்பார்ப்பு, அது மாநில அரசின் முன்னுரிமைத் திட்டங்களை அமல்படுத்துவதில் இடையூறு என்றும், 14ஆவது நிதி ஆணையத்தால் தமிழ்நாடு மிகப்பெரிய நிதி இழப்பைச் சந்திதுள்ளது என்றும் அதை ஈடு செய்ய நிதியுதவி கேட்டபோது ரூ.552 கோடி மட்டுமே தரப்பட்டது, இது எந்த வகையிலும் இழப்பை ஈடு செய்யாது என்றும் ஜெயலலிதா சொல்கிறார். எனவே, 14ஆவது நிதி ஆணைய காலம் முழுவதும் ஒவ்வோர் ஆண்டும் ரூ.2,000 கோடி சிறப்பு நிதியாக மத்திய அரசு தர வேண்டும் என்றும் கோரிக்கை எழுப்புகிறார். அப்படி எதுவும் தந்ததாக மோடி தனது உரையில் சொல்லவில்லை.
2015 மார்ச் 1 அன்று முடிகிற 13ஆவது நிதி ஆணையம் தமிழ்நாட்டுக்கு ரூ.11,366.90 கோடி நிதியுதவி பரிந்துரை செய்திருந்ததாகவும் மாநில சிறப்பு தேவை நிதிக்காக பரிந்துரைக்கப்பட்ட ரூ.2,829.57 கோடியில், ரூ.1,805.82 கோடி மட்டுமே தரப்பட்டது என்றும், மீதத் தொகை பயன்படுத்தப்பட்டதற்கான சான்றிதழ்கள் தந்த பிறகும் அந்தத் தொகை தரப்படவில்லை என்றும் அது தரப்பட வேண்டும் என்றும் அந்தத் தொகையும், நிதி ஆணைய காலம் முடிந்திருந்தாலும் தரப்பட வேண்டும் என்றும் அந்த மனுவில் கோருகிறார்.
கிராமப்புற வீட்டுவசதித் திட்டத்தில் அய்முகூ ஆட்சியில் இருந்தத் திட்டப்படி 1,00,053 வீடுகளுக்கு நிதி ஒதுக்கீடு இருந்தது என்றும் 2015 - 2016ல் (மோடி ஆட்சிக்கு வந்த பிறகு) அது 45,000 என குறைக்கப்பட்டுள்ளது என்றும் 2 லட்சமாக அது உயர்த்தப்பட வேண்டும் என்று சொல்கிறார். தூய்மை இந்தியா திட்டத்தில் கூட 2015 - 2016ல் தமிழ்நாட்டுக்கு தரவேண்டிய ரூ.298.19 கோடியில் ரூ.78.94 கோடி மட்டுமே தரப்பட்டுள்ளது என்றும் 2016 - 2017 கழிப்பிடங்கள் கட்டும் திட்டத்துக்கான ரூ.593.19 கோடியில் 2016 ஏப்ரலில் ரூ.210.42 கோடி மட்டும் தரப்பட்டது என்றும் சொல்கிறார். இரண்டுமாகச் சேர்த்து மத்திய அரசு மாநில அரசுக்கு தர வேண்டிய பாக்கி ரூ.602.02 கோடி.
இவை தவிர, வேறு வேறு வகைகளில் மாநிலத்துக்கு மத்திய அரசு தர வேண்டிய நிதி வந்து சேரவில்லை என்பது அந்த மனுவின் சாரம் என்று சொல்லலாம். சென்னை பெருமழைக்கு மாநிலம் கேட்ட நிதியைத் தராதது, மத்திய விற்பனை வரி குறைப்பால் மாநிலத்துக்கு ஏற்பட்ட இழப்பை ஈடு செய்யாதது, தேசிய குடிநீர் திட்டத்துக்கு நிதி பாக்கி தராதது, அனைவருக்கும் கல்வி திட்ட பாக்கி, பட்டியல் சாதி, பழங்குடி மாணவர்கள் உதவித் தொகை பாக்கி என மோடிக்கு ஜெயலலிதா ஒரு பட்டியல் தந்துள்ளார்.
14.06.2016 தேதியிட்ட ஜெயலலிதாவின் இந்தக் கடிதத்துக்கு மத்திய அரசு குறிப்பாக பதில் சொன்னாலே, அல்லது, பழனிச்சாமி அரசு குறிப்பாக பதில் வேண்டும் என்று கேட்டாலே, மோடி அரசு தமிழ்நாட்டுக்குச் செய்துவருகிற துரோகம் அப்பட்டமாக வெளிப்பட்டுவிடும். ஜெயலலிதா பிறந்த நாள் கூட்டத்தில் தமிழ்நாட்டுக்கு நிதி அள்ளித் தந்ததாக மோடி சொன்னது உண்மையில்லை என்று அம்பலம் ஏறும்.
ஒக்கி புயல் பாதிப்பு நீங்காமல் மீனவர்கள் இன்னும் கூட தவிக்கும்போது, அதற்கு தர வேண்டிய நிவாரணம், செய்ய வேண்டிய மீட்புப் பணி என பெருமளவில் தேங்கிக் கிடக்கும்போது மீன்பிடி படகுக்கு ரூ.100 கோடி என்று பசப்புகிறார். சென்னை புயலால் வீடிழந்தவர்களுக்கு இன்னும் வீடுகள் இல்லாதபோது வீட்டு வசதித் திட்டத்துக்கு நிதி தந்தோம் என்கிறார்.
ஜெயலலிதா மத்திய அரசின் திட்டங்களை எல்லாம் தமிழக அரசின் திட்டங்கள் போல் கணக்குக் காட்டிக் கொண்டிருந்ததைப் போல் மோடி மாநில அரசின் திட்டங்களுக்கு எல்லாம் மத்திய அரசுதான் நிதி தருவதுபோல், அதனால்தான் தமிழ்நாடு இயங்குவதுபோல் பேசுகிறார். கிட்டத்தட்ட ஜெயலலிதா தந்த மனுவில் எழுப்பப்பட்டுள்ள கோரிக்கைகளில் எதற்கும் தீர்வுக் காணாமல், அவற்றுக்கு நேர் எதிரான விவரங்களை முன்வைத்து, மத்திய அரசிடம் இருந்து தமிழ்நாட்டுக்கு இனி எதுவும் வராது, தமிழ்நாட்டு மக்களுக்கு மத்திய அரசு செய்யும் வஞ்சகம் இனியும் தொடரும் என தெளிவுபடுத்தியுள்ளார். மோடி தமிழக மக்கள் மீது தூவிவிட்டுச் சென்றுள்ள பொய்களை மறுக்காமல் கேட்டுக் கொண்டிருந்த பழனிச்சாமி அரசாங்கம் நிச்சயம் தமிழக மக்கள் உரிமைகளை கேட்டுப் பெறப் போவதில்லை. இதிலும் பாசிசத்தை வேரறுப்பதுதான் தீர்வு.

Search