COMMUNIST PARTY OF INDIA (MARXIST - LENINIST) - LIBERATION

COMMUNIST PARTY OF INDIA (MARXIST - LENINIST) - LIBERATION, TAMILNADU

Wednesday, March 14, 2018

நாளும் செத்துக் கொண்டிருக்கும் சிரியாவின் மக்களுக்கு  
நேசக் கரம் நீட்டுவோம்!

எஸ்.குமாரசாமி

கொடிது கொடிது ஏகாதிபத்தியம் கொடிது கொடிது கொடிது போர் கொடிது
ஏகாதிபத்தியம் என்றாலே மண் ஆசை, பொன் ஆசை, எண்ணெய் எரிவாயு, எரிசக்தி  மீது ஆசை.
பிராந்திய அரசியலில் புவி அரசியலில் செல்வாக்கு செலுத்த ஆசை. சூறையாட ஆசை. பல நாடுகளுக்கும் இந்த ஆசை வரும்போது, போர் தவிர்க்க முடியாததாகிவிடுகிறது. சிரியாவின் மீது, இரக்கமற்ற பேரிருளாய், போர் படர்ந்துள்ளது.
சிரியாவில், ஒரு நிழல் யுத்தம் நடக்கிறது. சிரியாவில், ஒரு குத்தகைப் போர் நடப்பதாக, தாமஸ் ஃப்ரீட்மன் எழுதுகிறார். சிரிய அரசு படைகள், சிரிய அரசு எதிர்ப்புப் படைகளுக்கு இடையிலான உள்நாட்டுப் போர் என்ற எல்லைகள், தாண்டப்பட்டு விட்டன.
ஒரு பக்கம், அய்க்கிய அமெரிக்கா, இஸ்ரேல், சவுதி அரேபியா, கத்தார், அய்க்கிய அமீரகம் ஆகியோர், சிரியாவின் பஷார் அல் அசாத்தின் அரசுக்கெதிராக உள்ளனர். துருக்கியும், சிரியா அரசாங்கத்தை எதிர்க்கிறது. மறுபக்கம் சிரியா அரசாங்கத்துக்கு ஆதரவாக ரஷ்யாவும் ஈரானும் உள்ளன. கூட்டாளிகளுக்கிடையில் குத்து வெட்டுக்கும் பஞ்சம் இல்லை.
சிரியா அரசாங்க எதிர்ப்பு, காலப் போக்கில், அய்எஸ்அய்எஸ் மற்றும் அல் கொய்தாவின் அல்நுஸ்ராவிடம் சென்றது. அய்எஸ்அய்எஸ், இராக் மற்றும் சிரியாவில், இறை ஆட்சியை, 21ஆம் நூற்றாண்டு காலிஃபேட்டை நிறுவ முயன்றது. அய்எஸ்அய்எஸ்அய் எதிர்த்து, குர்து மக்களின் ஒய்ஜிபி படையினர் போரிட்டனர். ஒய்ஜிபிக்கு அய்க்கிய அமெரிக்கா ஆதரவு தந்தது. துருக்கி, ஒய்ஜிபியை ஒழித்துக்கட்ட, சிரியாவில் களம் இறங்கி உள்ளது. இந்த போருக்கும், சுதந்திரம் ஜனநாயகம், ஆகியவற்றிற்கும் எந்த சம்பந்தமும்  இல்லை.
சிரிய மக்கள் நலன்கள் பற்றி சிறிதும் கவலைப்படாமல், போரில் ஈடுபட்டுள்ள தரப்பினர், தத்தமக்கு ஆதாயமாகப் போர் முடிய வேண்டும் என்றுதான் விரும்புகிறார்கள். அவரவர்களுக்கு ஆதாயம் என்றால் மட்டுமே, நிரந்தர நீடித்த போர் நிறுத்தம் பற்றி யோசிப்பார்கள் போல் தெரிகிறது.
துன்பப்பட்டு மடிந்து மடிந்து மடிந்து 
ஒரு தஞ்சமும் இல்லாத சிரிய மக்கள்
சிரியா மக்களின் சரி பாதிக்கும் மேல் நாட்டை விட்டு வெளியேறி உள்ளனர். உள்நாட்டிலேயே வாழும் இடம் இழந்துள்ளனர். எகிப்து, இராக், லெபனான், ஜோர்டான் என மத்தியக் கிழக்கில் மட்டும் 20 லட்சம் சிரிய அகதிகள் உள்ளனர். துருக்கியில் 30 லட்சம் பேரும் வடக்கு ஆப்பிரிக்காவில் 30,000 பேரும் அகதிகளாய் உள்ளனர். அய்ரோப்பாவில் 10 லட்சம் பேர் அகதிகளாய் உள்ளனர். போரில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 4 லட்சத்தை நெருங்குகிறது.
இப்போது, போர், கவுதாவில் மய்யம் கொண்டுள்ளது. சிரியா தலைநகர் டமாஸ்கசில் இருந்து 10 கி.மீ தூரம் உள்ள, கவுதா பிராந் தியத்தில், 4 லட்சம் பேர் வரை உள்ளனர். அவர்களில் 50% பேர் 19 வயதுக்குட்பட்டோர். 104 சதுர கி.மீ உள்ள இந்த பிராந்தியத்தில் இருந்து எதிர்ப்பாளர்களை விரட்டிவிட்டால், போர் தனக்குச் சாதகமாக முடியும் என, சிரியா அரசு கருதுகிறது. ரஷ்யாவின் விளாடிமிர் புதினும், கவுதா போரில் வென்று, சுதந்திரமான இறையாளுமை கொண்ட சிரியா வரும், நீங்கள் விரைவில் தாயகம் திரும்பலாம் என, டிசம்பர் 2017ல் ரஷ்ய விமானிகளை சிரியாவில் சந்தித்தபோது சொன்னார். கவுதாவை விட்டு விடக் கூடாது என, சிரியா அரசு எதிர்ப்பாளர்கள் உள்ளனர்.
இந்த உக்கிரமான போரில், அது மூன்றாவது உலகப் போர் ஆகாமலே, இஸ்ரேல், ரஷ்யா, ஈரான், துருக்கி ஆகிய நாடுகள், தம் விமானங்களை இழந்துள்ளன. ரஷ்ய விமானத் தாக்குதல்களில் சில நாட்களில் பல நூறு பேர்  மடிந்துள்ளனர். குடிநீர் இல்லை, உணவு இல்லை, மருந்து இல்லை, சுகாதாரம் இல்லை, உதவுங்கள் உதவுங்கள் என ட்விட்டரில் முகநூலில் கதறுகின்றனர். குவைத்தும் ஸ்வீடனும் பிப்ரவரி 25, 2018 அன்று அய்நா பாதுகாப்பு கவுன்சிலில் முன்வைத்து நிறைவேற்றப்பட்ட போர் நிறுத்த தீர்மானம், ரஷ்யா நாளும் 5 மணி நேர அமைதி எனத் தந்த வாக்குறுதி ஆகியவை அமலாகவில்லை என, கவுதா மக்கள் சொல்கிறார்கள். கல்லறைகளும் தாக்கப்படுவதால், மடிந்தவர்களைப் புதைக்கவும் முடியவில்லை என்கிறார்கள் கவுதா மக்கள்.
எப்படி துவங்கியது இந்த சண்டை?
அலாவி துணைப்பிரிவு ஷியா பிரிவைச் சேர்ந்த ஹஃபீஸ் அல் அசாத், சிரியாவை 29 ஆண்டுகள் ஆண்டார். 2000லிருந்து அவர் மகன் பஷார் அல் அசாத் ஆண்டு வருகிறார். தாராள மனம் கொண்ட சர்வாதிகாரம், மேலை நாகரிகம் நோக்கிய ஆட்சி என்றும் கூட அசாத் ஆட்சி அழைக்கப்பட்டது. அரபு வசந்தம் துவங்கிய பின், சிரியாவில் மக்களும், வேலை இன்மை, எதேச்சதிகாரம், வளர்ச்சியின்மைக்கு எதிராகக் கிளர்ந்து எழுந்தனர். சிரியாவில் தெற்கு பகுதியில் உள்ள டேராவில் துவங்கிய மக்கள் திரள் ஆர்ப்பாட்டம், நாடெங்கும் பரவியது.
ஆட்சி மாற்றங்களைத் திணிக்கும் ஏகாதிபத்தியக் கழுகுக்கு மூக்கு வியர்க்காமல் இருக்குமா? ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்தவர்கள், இராக்கை ஆக்கரமித்து சதாம் உசேனைக் கொன்றவர்கள், லிபியாவின் கடாஃபியைக் கொன்று, வந்தோம்,  கண்டோம், கொன்றோம் என்றவர்கள், சிரியா மக்களுக்கும் சிரியா அரசாங்கத்திற்கும் இடையிலான விவகாரத்தில், பலவந்தமாக நுழைந்தனர். அய்க்கிய அமெரிக்கா, இஸ்ரேலோடு சேர்ந்து கொண்டு, அவர்களது வளைகுடா கூட்டாளிகளும் சேர்ந்து கொண்டு, சிரியாவை ‘ஜனநாயகப்படுத்த’ புறப்பட்டனர்.
நுழைந்தது அய்எஸ்அய்எஸ் - அல்கொய்தா
இராக்கை அய்க்கிய அமெரிக்கா ஆக்கிரமித்தவுடன், இசுலாத்துக்குள் இருக்கிற சன்னி - ஷியா வேறுபாட்டை ஏகாதிபத்தியம் கையாளத் துவங்கியது. தோண்டிய கிணற்றிலிருந்து புறப்பட்ட பூதம், தோண்டியவர்களை விழுங்க முற்பட்டது. பெரும்பான்மை சன்னி மக்கள் மீது ஷியாக்களின் அதிகாரம் திணிக்கப்பட்டதாகக் கருதி உருவான சீற்றமும் ஏகாதிபத்தியம் இசுலாத்தை சாத்தான்மயமாக்கியதன் பதில்வினையாக எழுந்த வஹாபிசமும் அய்எஸ் அய்எஸ் உருவாவதற்கு இட்டுச் சென்றது. அய்எஸ்அய்எஸ், ஈராக் மற்றும் சிரியாவில், அவர்களது மூர்க்கமான மோசமான பாணியில் ஓர் இறை சாம்ராஜ்யத்தை, காலிஃபேட்டை உருவாக்க முயன்றனர். அல் கொய்தாவின் சிரியா வடிவமான அல் நுஸ்ராவும் களம் இறங்கியது. இவர்கள் சிரியா அரசுக்கு எதிர்ப்பாளர்களாக இருந்தனர்.
கூட்டாளிகள் மாறினர் எதிரிகள் மாறினர் எதிரியின் எதிரி நண்பர் ஆனார்
அய்எஸ்அய்எஸ், காட்டுமிராண்டித்தனத்தில், தான், ஏகாதிபத்தியங்களுக்குச் சளைத்ததில்லை என, தான் நிகழ்த்திய கொடூரங்களால் நிரூபித்தது. யெஜ÷டிக்கள், பெண்கள், ஷியாக்கள் தாக்கப்பட்டனர். மேற்கு நாட்டவர் தலை வெட்டப்பட்டு கொல்லப்பட்டனர். வெவ்வேறு நாடுகளில் நூற்றுக்கணக்கில் ஷியாக்கள் கொல்லப்பட்டனர். பாகிஸ்தான், ஆப்கனிஸ்தான், இராக் கிலிருந்து, ஷியா போராளிகள், அய்எஸ்அய்எஸ் எதிர்ப்பில் இறங்கினர். தனது பிராந்திய நலன் களிலிருந்து பெரும்பான்மை ஷியா பிரிவைக் கொண்டிருந்த ஈரானும் போரில் இறங்கியது. குர்து மக்கள் ஒய்ஜிபி படையுடன், அய்எஸ்அய்எஸ்அய் எதிர்த்தனர். குர்துகளை அய்க்கிய அமெரிக்கா ஆதரித்தது. துருக்கி, சிரிய அரசுக்கெதிராக, இசுலாமிய  தீவிரவாதக் குழுக்களுக்கு ஆயுதங்களும் நிதியும் தந்தது.
ஒரு கட்டத்தில், தீவிர சிரியா அரசு எதிர்ப்புக் குழுவான அல் நுஸ்ராவை, அய்க்கிய அமெரிக்கா கருப்புப் பட்டியலில் வைத்தது. 2014ல் சவுதி அரேபியாவும் துருக்கியும் அல் நுஸ்ராவைத் தடை செய்தன. ஆனால் நிதி, ஆயுதம் வழங்குதல் தடையின்றித் தொடர்ந்தது.
சிரியாவுக்கும் இஸ்ரேலுக்கும் கோலன் குன்றுகளில் எல்லை உள்ளது. சிரியாவில் சன்னி பிரிவு அரபுகள், யூதவெறி ஜியானிசத்தை எதிர்ப்பவர்கள். ஆனால் அவர்கள் சிரியா அரசை எதிர்க்கப் புறப்பட்ட பிறகு, போரில் காயமடைந்தால், இஸ்ரேல் விருந்தினர்களாக, இஸ்ரேலுக்குள் கவனித்துக் கொள்ளப்படுகிறார்கள். ஏற்கனவே இந்த பிராந்தியத்தில் சவுதி அரேபியா போன்ற அய்க்கிய அமெரிக்க கூட்டாளிகளுடன் இஸ்ரேலுக்கு இரகசியக் கூட்டு உள்ளது, பாலஸ்தீன விடுதலை லட்சி யத்திற்கும் அரபு நாடுகளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை, அவர்களது இஸ்ரேலிய எதிர்ப்பு வெறும் பாசாங்கே என்பவை தெளிவாகிவிட்டன. அய்எஸ்அய்எஸ்சை எதிர்த்துப் போரிட்ட குர்து ஒய்ஜிபி படைக்கு எதிராக, இப்போது துருக்கி நேரடியாக சிரியா மீது படையெடுத்துள்ளது. 20.01.2018 அன்று அஃப்ரின் நகரை ஒய்ஜிபி படையினரிடமிருந்து மீட்பதாக துருக்கி படையினர் 6,000 பேரும் அவர்கள் ஆதரவுடன் சுதந்திர சிரியா படையினர் 10,000 பேரும் சிரியாவுக்குள் நுழைந்துள்ளனர். இங்கே, நேட்டோ நாடுகளின் அய்க்கிய அமெரிக்காவின்  சிறப்புப் படையினர் 3,000 பேர் ஒய்ஜிபி படைக்கு ஆதரவாக உள்ளனர். பிப்ரவரி 2018ன் மூன்றாம் வாரம் வரை துருக்கி இராணுவத்தினர் 21 பேர் சிரியா போரில் சிரியாவில் மடிந்துள்ளனர்.
வலுவான, கூடுதல் மக்கள் தொகை கொண்ட அரபு நாடுகள் சிதற வேண்டும் என இஸ்ரேல் விரும்புகிறது; அதற்கேற்ப செயல்படுகிறது. அதன் தற்போதைய முக்கியக் குறியாக ஈரான் உள்ளது. ஆனால் ஈரானைக் கடித்தால் விழுங்க முடியாத அளவுக்கு ஈரான் பெரியது என்பதும், ஈரானை அழிக்க, ரஷ்யாவோ சீனாவோ சம்மதிக்காது என்பதும் இஸ்ரேலுக்கு நன்றாகவே தெரியும். சிரியா வான்வெளியில் பறந்த ஆளில்லா ஈரானிய விமானத்தை இஸ்ரேல் வீழ்த்தியது. ஈரானும் ஹிஸ்புல்லாவும் தம் பங்கிற்கு, இஸ்ரேலிய விமானம் ஒன்றை சிரியாவில் சுட்டு வீழ்த்தி உள்ளனர். 1980களில் எஃப் 16 விமானம் பயன்படுத்தத் துவங்கிய பிறகு, அத்தகைய விமானத்தை இஸ்ரேல் முதல்முறையாக இழந்துள்ளது.
போரில் ரஷ்யாவின் தலையீடு
புரட்சியை ஏற்றுமதி செய்யும் ஆப்கானிஸ்தான் தலையீடு, சோவியத் சோசலிச ஒன்றியத்தின் சரிவுக்கான ஒரு காரணமாக இருந்தது. ரஷ்யப் பொருளாதாரம் ரத்தம் சிந்தி காயம் அடைந்தது. இரண்டாம் உலகப் போருக்குப் பின், ரஷ்யா மிகப் பெரிய உயிரிழப்புக்களைச் சந்தித்தது. உடல் உறுப்புக்களை இழந்தவர்களின் எண்ணிக்கையும் கணிசமானது. வியத்நாம் -ஆப்கனிஸ்தான் - இராக் போர்களுக்கு பிறகு, ரஷ்யா, அய்ரோப்பிய நாடுகள், அய்க்கிய அமெரிக்கா போன்ற நாடுகள், போர் வீரர்களின் பிணங்கள், பைகளில் (பாடி பேக்ஸ்) திரும்புவதை விரும்பவில்லை. குறைந்த எண்ணிக்கையில் தமது நேரடி போர் வீரர்களைக் கொண்டும், போரை சில நாடுகளுக்கும் குழுக்களுக்கும் கூலிப் போர் வீரர்களுக்கும் ஒப்படைத்து விட்டும் (அவுட் சோர்ஸ்) அதிக ஆதாயம் தேட முயற்சிக்கின்றனர்.
மத்திய கிழக்கில் மேலை நாடுகளுடன் போட்டியிட்டு அரசியல் செல்வாக்கை நிறுவ, உக்ரைனின் செபஸ்டிபோல், சிரியாவின் டாரஸ் துறைமுகங்களைப் பாதுகாக்க, அரசியல், இராணுவ விருப்பங்கள் கொண்டுள்ள ரஷ்யாவுக்கு, சிரியாவின் எரிசக்தி மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நோக்கமாக உள்ளது. அதிபர் புடினின் பல திட்டங்களுக்கான நிதி ஆதாரத்தை கேஸ்புரோம் என்ற ரஷ்ய ஏகபோகமே வழங்குகிறது. கலகக்காரர்கள் சிரியாவில் வென்றால், சிரியா நெடுக, எரி வாயு குழாய்களை கத்தார் போட வாய்ப்புண்டு, தனக்கு வாய்ப்பு இருக்காது என கேஸ்புரோம் கருதுகிறது. சிரியாவின் எண்ணெய் எரிவாயு வயல்களை அய்எஸ்அய்எஸ் போன்றவர்கள் பிடியிலிருந்து மீட்க, புடினுக்கு மிகவும் நெருக்கமான யூஜினி பிர்கோசினின் எவர்போலிஸ் நிறுவனம், வாக்னர் என்ற இராணுவ ஒப்பந்த நிறுவனத்தை, இந்தப் போரில் இறக்கி உள்ளது. அவர்களே விமானத் தாக்குதல்கள் நடத்துகிறார்கள். யூஜினி பிரிகோசின் 12 ஆண்டுகள் ரஷ்ய சிறையில் இருந்தவர். அய்க்கிய அமெரிக்க அதிபர் தேர்தலில் தலையிட்டதாக, அய்க்கிய அமெரிக்க சிறப்பு வழக்கறிஞர் ராபர்ட் மியூலர் குற்றம் சுமத்தி உள்ள 13 பேரில் பிரிகோசினும் ஒருவர்.
இதுவரை ரஷ்யா இந்தப் போரில் ரூ.7,000 கோடி வரை செலவழித்துள்ளது. கிழக்கு சிரியாவில் பிப்ரவரி 2018 வரை 200 ரஷ்ய இராணுவ ஒப்பந்ததாரர்கள் போரில் மடிந்துள்ளனர். அய்க்கிய அமெரிக்க ராணுவ தளபதி ஜோசப் வோடெல், சிரியாவில் தீயை மூட்டிய ரஷ்யா தீயை அணைப்பதாக நாடகமாடுகிறது என்கிறார். அவர் எல்லாவற்றையும் துவக்கி வைத்தது அய்க்கிய அமெரிக்காதான் என்பதை வசதியாக மறந்து விட்டார். இப்போதும் பிப்ரவரி 7 அன்று அய்க்கிய அமெரிக்க விமானங்களும் அப்பாச்சி ஹெலிக்காப்டர்களும் சிரியா அரசு படைகள் மீதும் ரஷிய இராணுவ ஒப்பந்ததாரர்கள் மீதும் தாக்குதல் தொடுத்துள்ளன. அய்க்கிய அமெரிக்காவின் அயல் விவகாரத் துறை அமைச்சர் ரெக்ஸ் டில்லர்சன், சிரியாவில் இருந்து பயங்கரவாதிகள் வெளியேற்றப்பட்டாலும், சிரியாவில் அய்க்கிய அமெரிக்கா இருப்பது தொடர்ந்தாக வேண்டும் என்று சொல்லியுள்ளார்.
இஸ்ரேல் எதிர் சிரியா - ஹிஸ்புல்லா -ஈரான் மோதலில், ரஷ்யா, தனது விமான எதிர்ப்பு பீரங்கிகள் இஸ்ரேல் விமானங்களை வீழ்த்தும் என்கிறது. ஆழக் காலை நுழைக்கும் துருக்கியின் அதிபர் எர்டோகன், ஒட்டோமன் அடி இடியாய் இறங்கும் என மிரட்டுகிறார். ஏற்கனவே ரஷ்ய போர் விமானம் ஒன்றை துருக்கியின் இரண்டு எஃப் 16 விமானங்கள் 2015 நவம்பரில் ஏவுகணை மூலம் தாக்கி அழித்தன. வெடித்த கொந்தளிப்பு எப்படியோ அடங்கியது. ரஷ்யாவுக்கும் துருக்கிக்கும் இடையில் அய்க்கியமும் உள்ளது. போராட்டமும் உள்ளது.
சிரியாவில் அமைதி திரும்ப வேண்டும்
நதிக்கரைகளில் மனிதர்கள் நிரந்தரமாகக் குடியேறுவதில், நாகரிக உலகம், நாகரிகங்கள், தொடங்குகின்றன. கங்கை, சிந்து, டைபர், நைல் போன்ற நதி நாகரிகங்களுக்கு சற்றும் குறையாத அளவுக்கு உயர்ந்த நிலையில் இருந்தது மெசபடோமிய நாகரிகம். மெசபடோமியா என்ற கிரேக்க வேர்ச் சொல்லுககு ‘இரண்டு நதிகளுக்கிடையிலான பகுதி’ என்று பொருள். யூப்ரைடிஸ், டைக்ரிஸ் நதிகளுக்கிடையில் இருந்தவற்றோடு இன்றைய குவைத் இராக் சிரியா துருக்கி பகுதிகளையும் கொண்டதாகும். குனிபார்ம் எழுத்து வடிவம் இங்கேதான் அறிமுகமானது. இராக் போரில், மெசபடோமிய கலாச்சாரத்தின் வரலாற்றின் சுவடுகளை எல்லாம் ஏகாதிபத்திய நாடுகள் அழித்தன. ஆப்கானிஸ்தானில் புத்தர் சிலைகளைத் தகர்த்த தலிபான்களை அநாகரிகக் காட்டுமிராண்டிகள் என்று அழைத்த மேலைநாடுகள்தான், இராக்கில் சிரியாவில் கலாச்சார ஒழிப்பில் ஆர்வம் காட்டினர். இப்போது, இஸ்லாமிக் ஸ்டேட் ஆப் இராக் சிரியா தகர்ந்துவிட்டது. மெசபடோமியாவின் மக்கள், மத்திய கிழக்கிலிருந்து வடக்கு ஆப்பிரிக்காவிலிருந்து மத்தியத்தரைக் கடல் வழியாகவும், பால்கன் பகுதி வழியாகவும் அய்ரோப்பா செல்கிறார்கள். சிறுவன் அய்லான் குர்தியின் தாயும் சகோதரனும் கடலில் மூழ்கிச் சாக, சிறுவன் அய்லான் குர்தியின் உடல் கரை ஒதுங்கி மண்ணில் புதையுண்ட அவனது முகம் சில நாட்கள் மானுட மனசாட்சியைச் சங்கடப்படுத்தியது. அகதிகளுக்கு ஜல சமாதி, கண்டெய்னர் சமாதி, தப்பினால், கட்ட மைக்கப்பட்ட வலதுசாரி எதிர்ப்பு காத்தி ருக்கிறது. பல அய்ரோப்பிய அரசுகள், தாராளவாத முகமூடிகளைக் கழற்றி வீசிவிட்டனர். இசுலாமியர் மீது வெறுப்பு, குடியேறுபவர்கள் மீது வெறுப்பு, அய்ரோப்பிய அரசியல் நிகழ்ச்சிநிரலில் நுழைந்துவிட்டது.
சிரியாவில் ரஷ்ய, அய்க்கிய அமெரிக்க ஏகாதிபத்திய தலையீடுகளை எதிர்க்கும் அதே நேரம், சிரியாவில், அய்க்கிய நாடுகள் சபையின் கண்காணிப்பின் கீழ், உள்நாட்டுப் போருக்கு ஓர் அரசியல் தீர்வு தேவை என இகக (மாலெ) மார்ச் 23 - 28, 2018, மான்சா, பஞ்சாப் பத்தாவது அகில இந்திய மாநாட்டின் சர்வதேச சூழல் பற்றிய நகல் ஆவணம் முன்வைக்கிறது.
‘கவுதாவைக் காப்பது’ என்ற தலைப்பில் 12.03.2018 நாளிட்ட ஆங்கில இந்து தலையங்கம் கவனம் கோருகிறது. ஒரு மாதத்தில் 1000 பேர் மடிந்துள்ளனர். அய்நா ‘அபோகலிப்ஸ்’ ஆபத்து என்கிறது. 2016ன் இறுதிப் பகுதியில் கிழக்கு அலிப்போவை சிரியா அரசு கைப்பற்றியது. ரஷ்ய, சிரிய தாக்குதல்கள் மத்தியில், துருக்கி மத்தியஸ்தம் செய்ய, கலகக்காரர்கள் அலிப்போவை விட்டு வெளியேறினர். முந்தைய அல்கொய்தா படையான ஹையத் தாஹிர் அல் அஷாமுடன் தொடர்புடைய ஜெய்ஷ் அல் இஸ்லாம் கலகக்காரர்கள், கவுதாவிலிருந்து வெளியேறி, வடகிழக்கு சிரியாவில் கலகக்காரர்களிடம் உள்ள இப்லிப் நகர் செல்லத் தயார் என, அய்நா குழுவிடம் சொல்லி உள்ளதாகத் தெரிகிறது. ரஷ்யாவும் சிரிய அரசும் உடனடியாக இந்த ஏற்பாட்டுக்கு உடன்பட்டால், 4 லட்சம் பேர் பிழைக்க, தப்பிக்க, சற்று மேலாக வாழ வாய்ப்பு உருவாகும்.
உடனடி மற்றும் நீடித்த அமைதி கொண்டு வர, அனைத்து தரப்பினரையும், சர்வதேச சமூகம் வலியுறுத்த, உலக மக்கள் குரல் கொடுத்தாக வேண்டும்.
சமகாலப் போர்களும் 
இசுலாமிய உலகின் சங்கடங்களும்
அய்க்கிய அமெரிக்கா, இரட்டை கோபுரத் தாக்குதலுக்குப் பின் தொடுத்த பயங்கரவாத எதிர்ப்புப் போரை, அநீதியான முறையில் இசுலாமிய எதிர்ப்புப் போராக்கியது. இசுலாமி யர் அனைவரும் பயங்கரவாதிகள் இல்லாவிட் டாலும், பயங்கரவாதிகள் அனைவரும் இசுலா மியர்கள் என்று பொதுப் புத்தியில் வலுவாக கருத்துத் திணிப்பு செய்யப்பட்டது. வன்மை யான இசுலாமிய எதிர்ப்புக்கு மென்மையான இசுலாமிய எதிர்ப்பும் வன்மையான இந்துத்து வாவுக்கு மென்மையான இந்துத்துவாவும் தீனி போட்டு ஊட்டி வளர்த்தன. இசுலாம் சாத் தான்மயமாக்கப்பட்டதால், இசுலாமியர்களும் தமக்குள் சுருங்குவதும், தமது மூல வேர்கள், அசல் கருத்துகள், அசல் மூல மார்க்கம் நோக்கி திரும்பியாக வேண்டும் என்ற முற்றுகை நிலை யும் உருவானது. இந்திய பாசிஸ்டுகள் உள்ளிட் டோர், ‘நாம் எதிர் அவர்கள்’ என்ற நிலையை, சகிப்புத்தன்மையின்மையை, பன்மைத்துவத் துக்கு எதிராக ஒற்றைத்தன்மையை, வெறுப்பர சியலைப் பரப்பும்போது, தொடர் தாக்குதல்க ளால், இசுலாமிய உலகில் நிலவிய பாதுகாப் பின்மை மற்றும் வளர்ச்சியின்மையால் இசுலா மிய உலகிலும் உள்ளுக்குள் வெடிப்பது (ஐம்ல்ப்ர்க்ங்) நடக்கிறது. மதம் நிச்சயம் ஒரு வலிமையான அடையாளம். துன்புறுத்தப்படுபவர்களுக்கு அது ஓர் அடையாளம்தான். ஆனால், இசுலா மிய அடையாளம் தாண்டி, மலேசிய, இலங் கைய, இந்தோனேசிய, ஸ்லாவிய, மங்கோலிய, சீன, கலப்பு, செசன்ய, போஸ்னிய, துருக்கிய, பாரசீக, அரபு, இந்திய, பாகிஸ்தானிய, வங்க தேச என்ற தேசிய மற்றும் இன அடையாளங் களும், சன்னி, ஷியா, போரா என்ற உட்பிரிவு அடையாளங்களும், ஏழைகள் பணக்காரர்கள் என்ற வர்க்க அடையாளங்களும் மற்ற மற்ற அடையாளங்களும் இருக்கவே செய்கின்றன. இசு லாமியர்கள், தங்களைத் தாண்டிய ஜனநாயக முற்போக்கு சக்திகளுடன் நேச உறவு காட்டு வதும் இசுலாமியர்கள் வெறுப்பரசியலை, ஒற்றைத்தன்மையை திணிப்பவர்கள் அல்ல என்பதை தமக்கு வெளியே உள்ளவர்களுக்கு உணர்த்த வேண்டும் என்ற கருத்தும் விருப்ப மும், இசுலாத்துக்குள் ஓர் உரையாடலைத் துவக்கியுள்ளது.

Search