COMMUNIST PARTY OF INDIA (MARXIST - LENINIST) - LIBERATION

COMMUNIST PARTY OF INDIA (MARXIST - LENINIST) - LIBERATION, TAMILNADU

Wednesday, February 28, 2018

தனியுடமையைப் பாதுகாக்கும் 
மோடி வித்தைகளைத் தகர்த்தெறிவோம்

பாம்பையும் கீரியையும் மோத விடப்போறேன், மோத விடப்போறேன் என்று சொல்லி வேடிக்கை காட்டுவார் மோடி மஸ்தான் என்னும் குறளி வித்தைக்காரர். கடைசி வரை பாம்பும் கீரியும் மோதவே செய்யாது.
ஆனால்,  ஒருத்தன் இரத்தம் கக்கிக்கிட்டே கீழே விழுவான். அவனை படுக்க வைத்துக்  கேள்வி கேட்டு பதில் சொல்லி, பயமுறுத்தி, தாயத்து விற்று, கொஞ்சம் கொஞ்சமாக, சுற்றி நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்கிறவங்க பையில் உள்ள காசையெல்லாம்  பிடுங்கிட்டு, எல்லாத்தையும் சுருட்டிக்கிட்டு இரத்தம் கக்கி விழுந்தவனையும் எழுப்பிக்கிட்டு ஓடிப்போய் விடுவார். அப்பதான் தெரியும் இரத்தம் கக்கிக் கீழே விழுந்தவனும் முதல்ல தாயத்து வாங்கினவனும் மோடி மஸ்தானின் கூட்டாளிங்கன்னு. அப்படியொரு பெரிய மோடி மஸ்தான் வேலையை இப்போது நாம் பார்த்துக் கொண்டு இருக்கிறோம்.வழக்கம்போல், பிப்ரவரி 24 அன்று காவிக்கும்பல்கள் ‘ஜோர் மோடி, ஜோர் மோடி’ என்று கத்திக் கொண்டு கலாச்சாரத்தைக் காக்க அநாகரீக ஆட்டம் போட்டுக் கொண்டிருந்த அதே நாளில், ‘சோர் மோடி, சோர் மோடி’ என்று மும்பையில் இருந்து வந்த சத்தம் இந்தியாவெங்கும் எதிரொலித்தது.
இந்தியாவின் இரண்டாவது பெரிய பொதுத் துறை வங்கி பஞ்சாப் நேஷனல் வங்கி. அந்த வங்கியின் மும்பை பிராடி ஹவுஸ் கிளையில் 11,400 கோடி ரூபாய் அளவிற்கு மோசடி நடந்துள்ளது என்றும் அந்த மோசடியில் ஈடுபட்டுள்ள கீதாஞ்சலி ஜெம்ஸ், கிலி இந்தியா, நட்சத்திரா பிராண்ட் லிட் நிறுவனங்களின் உரிமையாளர் நீரவ் மோடி என்கிற வைர வியாபாரியும் அவரது பங்குதாரரும் உறவினருமான மெகுல் சோக்சியும் என்றும் இப்போது அவர்கள் நாட்டை விட்டு ஓடி விட்டார்கள் என்றும் செய்தி வெளியானது. பஞ்சாப் நேஷனல் வங்கி மூலம் 11,400 கோடி ரூபாய் கடன் வாங்கிவிட்டு அதைக் கொடுக்காமல் ஏமாற்றிவிட்டு வெளிநாட்டில் ஹாயாகச் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள் நீரவ் மோடியும் அவர் மனைவியும் மெகுல் சோக்சியும்.
இந்த வைர வியாபாரி வெளிநாடுகளில் இருந்து வைரக் கற்களை, கடிகாரங்களை இறக்குமதி செய்வார். அதற்குத் தேவையான பணத்தை வெளிநாடுகளில் உள்ள வங்கிகள், நிதி நிறுவனங்கள் கொடுக்கும். அந்த வெளிநாட்டு வங்கிகளுக்கு நீரவ் மோடியோ அல்லது அவர் நிறுவனமோ கொடுக்க வேண்டிய பணத்திற்கு நான் பொறுப்பு என்று இந்தியாவில் உள்ள வங்கி குறிப்பாக பொதுத் துறை வங்கி, கடன் உறுதி கடிதம் (கங்ற்ற்ங்ழ் ர்ச் ன்ய்க்ங்ழ்ற்ஹந்ண்ய்ஞ் (கர்ம) கொடுத்துவிடும். பின்னர் அந்த பணத்தை நீரவ்விடம் இருந்து வாங்கிக் கொடுக்கும் அல்லது தான் கொடுத்துவிட்டு வாங்கிக் கொள்ளும். இவ்வாறு வங்கிகள், நிதி நிறுவனங்கள் மற்றும் தொழில் நிறுவனங்களுக்கிடையே தொடர்புப் பரிமாற்றம் செய்வதற்காகவே ‘உலகளாவிய வங்கிகள் நிதி தொலைத் தொடர்புச் சங்கம்  என்ற ஒரு அமைப்பு (ஏஜென்சி) உள்ளது. மிகவும் நம்பிக்கையான அமைப்பாம். இந்த அமைப்பு மூலம் கடன் உறுதிக் கடிதம் கொடுத்தால், அதை நம்பி தைரியமாக, எவ்வித உத்தரவாதமும் வாங்காமல் வெளிநாட்டு வங்கிகளும் இந்திய வங்கிகளின் வெளிநாட்டுக் கிளைகளும் பணம் தருவார்களாம். அப்படி இந்த அமைப்பு மூலம் பஞ்சாப் நேஷனல் வங்கியின் மும்பை பிராடி ஹவுஸ் கிளையில் இருந்து நீரவ் மோடிக்காக பல ஆயிரம் கோடி ரூபாய்களுக்கு ஏகப்பட்ட கடன் உறுதிக் கடிதங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. எந்தவொரு உத்தரவாதமோ, செக்யூரிட்டி ஆவணமோ கொடுக்காமல் பஞ்சாப் நேஷனல் வங்கியின் கடன் உறுதிக் கடிதத்தை வைத்தே பல ஆயிரம் கோடிகள் கடன் வாங்கிவிட்டார் நீரவ் மோடி. ஆனால், வாங்கிய பணத்தைக் கொடுக்கத் தயார் இல்லை. கடன் கொடுத்த வங்கிகளும் நிதி நிறுவனங்களும் பஞ்சாப் நேஷனல் வங்கியை நெருக்க, மும்பை பிராடி ஹவுஸ் பிஎன்பி வங்கிக் கிளையில் உள்ள ஊழி யர்கள் சிலர் வங்கித் தலைமைக்கே தெரியாமல் தங்கள் இஷ்டம் போல், நீரவ் மோடிக்கு ஆதரவாக அங்கீகாரமற்ற, பொய்யான கடன் உறுதிக் கடிதங்களை அள்ளிக் கொடுத்து மோசடி செய்துவிட்டார்கள் என்கிறார்கள். இந்த மோசடி 2011ல் இருந்தே பல ஆண்டுகளாக, வங்கியின் தலைமைக்குத் தெரியாமல், சில நபர்களால் மட்டுமே நடத்தப்பட்டுள்ளது என்று சொல்கிறது வங்கியின் தலைமை.
இந்தியப் பொதுத் துறை வங்கியொன்றில் நடந்த மிகப் பெரிய ஊழல் இது. இந்த ஊழலால் நாடே நாற்றமெடுக்க, நான்கு நாட்களுக்கு என்ன சொல்வது என்று முழித்துக் கொண்டிருந்த மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, வங்கியின் தணிக்கையாளர்கள், கண்காணிப்பு அதிகாரிகள் என்ன செய்து கொண் டிருந்தார்கள், உயரதிகாரிகள் முறையாகச் செயல்படவில்லை, கண்காணிப்பு இல்லை, பொதுத் துறை வங்கி என்பதால்தான் பொறுப்பில்லாமல் நடந்துள்ளார்கள், வங்கிகள் தனியாரிடம் இல்லாமல், பொதுத் துறையாக இருப்பதுதான் இதுபோன்ற ஊழல்களுக்கு காரணம், வங்கி களைத் தனியார்மயமாக்கிவிட்டால் இதெல்லாம் நடக்காது என்றார். வழக்கம்போல் சத்தமே காட்டாமல் இருந்த பிரதமர் மோடி, பத்து நாட்கள் கழித்து, தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தப்பிக்க முடியாது, தண் டிக்கப்படுவார்கள் என்று அறுபது இஞ்ச் நெஞ்சை அதிகம் விரிக்காமல் கொஞ்சம் அடக்கிப் பேசினார். பிரதமரும் நிதியமைச்சரும் வாய் திறக்கத் திண்டாடிக் கொண்டிருந்த நேரத்தில், நாட்டின் பாதுகாப்பு(!) அமைச்சர் நிர்மலா சீதாராமன், இந்த ஊழல் அய்க்கிய முற்போக்குக் கூட்டணி காலத்திலேயே ஆரம்பித்து விட்டது  பஞ்சாப் நேஷனல் வங்கியின் ஊழலுக்குக் காரணம் காங்கிரஸ் கட்சிதான் என்றார். ஃபயர் டைமென்ட் இண்டர்நேஷனல் பி.லிட் என்ற நிறுவனத்தை நீரவ் மோடி அத்வைத் ஹோல்டிங் நிறுவனத்திடம் வாங்கினார். அந்த அத்வைத் ஹோல்டிங் நிறுவனம் இருந்த இடத்தின் பங்குதாரர், காங்கிரஸ் தலைவர் அபிஷேக் மனு சிங்க்வியின் மனைவி, அனிதா சிங்கிற்குச் சொந்தமானது என்றும் 2013ல் நீரவ் மோடி அறிமுகப்படுத்திய நிகழ்ச்சி ஒன்றில் ராகுல் காந்தி கலந்து கொண்டார் என்றும் கூறி பழியை முந்தைய ஆட்சியின் மீது போட்டார்.
11,400 கோடி ரூபாயைச் சுருட்டிவிட்டு, சத்தமே இல்லாமல், நீரவ் மோடி தங்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுவிட்டது என்றவுடன் வெளிநாட்டிற்கு கடந்த ஜனவரி மாதமே குடும்பத்தோடு ஓடிவிட்டார். சுவிட்சர்லாந்தின் டாவோஸில் நடைபெற்ற உலக முதலாளிகள் மாநாட்டில் கலந்து கொண்டு பிரதமர் நரேந்திர மோடியோடு ஊழல் நீரவ் மோடியும் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
பல ஆண்டுகளாக நடைபெற்றுள்ள இந்தச் சுருட்டல், இப்போது வெளிவரக் காரணம் பங்குச் சந்தை. பல ஆயிரம் கோடிப் பணம் இல்லாத நிலையில், இது பற்றி பங்கு சந்தைக்கு தெரியப்படுத்த வேண்டியது கட்டாயமானது என்று சொல்கிறார்கள். அதன் காரணமாக, முதல் தகவல் அறிக்கை போடுவதற்கு முன்பு, பத்திரமாக வெளிநாட்டிற்கு அனுப்பிவிட்டு, அதன் பின்னர் மும்பை பங்குச் சந்தைக்கு எங்கள் வங்கியின் பிராடி ஹவுஸ் கிளையில் மோசடி நடந்துள்ளது என்று தகவல் கொடுத்துவிட்டு, இரண்டு நாடகங்களை அரங்கேற்றிக் கொண்டிருக்கிறார்கள். ஒன்று,  பாஜக அரசுக்கு, பிரதமர் மோடிக்கு, நிதியமைச்சர் அருண் ஜெட்லிக்கு எதுவும் தெரியாது. பஞ்சாப்  நேஷனல் வங்கியில் உள்ள சில அதிகாரி கள் மற்றும் ஊழியர்களே இதற்குக் காரணம். இது தேசிய மயமாக்கப்பட்ட வங்கி என்பதாலேயே, இதுபோல நீரவ் மோடிகள் வங்கியில் உள்ள சிலரை விலைக்கு வாங்கி தங்களுக்குச் சாதமாகப் பயன்படுத்தி, பணத்தைச் சுருட்டிக் கொள்கிறார்கள். தனியார் வங்கி என்றால் இது நடக்காது.
அதிகாரத்தில் உள்ளவர்களுக்குத் தெரியாமல் நடந்தது என்பதை நம்ப வைக்க, நீரவ் மோடி நிறுவனத்தின் முதன்மை நிதி அதிகாரி விபுல் அம்பானி உள்பட நீரவ் மோடி  நிறுவனங்களின் அதிகாரிகள் சிலரையும் பஞ்சாப் நேஷனல் வங்கியின் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் சிலரையும் கைது செய்துள்ளார்கள். நீரவ் மோடி மற்றும் மெகுல் சோக்சியின் கடவுச் சீட்டை முடக்கினார்கள். நீரவ் மோடி, மெகுல் சோக்சியின்  ரூ.5,716 கோடி அளவிற் கான சொத்துக்களை, கைக் கடிகாரங்களை கைப்பற்றியது மத்திய புலனாய்வுத் துறை. நீரவ் மோடி மோசடியைத் தொடர்ந்து ரோட்ட மேக் பேனா நிறுவனத்தின் உரிமையாளர் விக்ரம் கோத்தாரியும் இதேபோல் பஞ்சாப் நேஷனல் வங்கியில் கடன் வாங்கி விட்டு கட்டாமல் அபேஸ் செய்ததும் அம்பலமானது. முதலில் 800 கோடி ரூபாய் மோசடி என்றார் கள். ஆனால், இப்போது விக்ரம் கோத்தாரி சுருட்டியுள்ளது ரூ.3,695 கோடி என்கிறார்கள். வெளியில் தெரிய வருவதே இவ்வளவு என்றால், தெரியாமல் இன்னும் எவ்வளவோ? இந்த விக்ரம் கோத்தாரியும் அவருக்கு உடந்தை எனச் சிலரும் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
மத்திய புலனாய்வுத் துறையும் அமலாக்கத் துறையும் விசாரணையைத் தொடங்கியுள்ளார்களாம். விசாரணைக்கு வர வேண்டும் என்று நீரவ் மோடிக்கும் சோக்சிக்கும் சம்மன் அனுப்பியுள்ளார்களாம். அதற்காக, அவர்களுடைய முடக்கப்பட்ட கடவுச் சீட்டு தளர்த்தப்பட்டுள்ளதாம். பாஜக ஆட்சிக்கு வந்தவுடன் முதலில் ஓடிப்போன ஊழல் பேர் வழி லலித் மோடி இன்னும் நாட்டுக்குள் வரவில்லை.ஒன்பதாயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வங்கிப் பணத்தை கபளீகரம் செய்த சாராய வியாபாரி விஜய் மல்லய்யாவை பத்திரமாக லண்டனுக்கு அனுப்பிவிட்டார்கள். இன்று வரை அவரை அழைத்து வரவில்லை.இப்போது நீரவும் சோக்சியும் விசாரணைக்கு வருவார்கள் என்று நம்மை நம்பச் சொல்கிறார்கள். நீரவ் மோடி எவ்வித பதட்டமும் இல்லாமல் கோலாலம்பூர் செல்கிறார் அங்கே புதிய கடை ஒன்றைத் திறக்கிறார். அப்புறம் நியுசிலாந்து செல்கிறார். இப்படி நாடு நாடாகச் சென்று தன் வைர வியாபார சாம்ராஜ்ஜியத்தை விரிவாக்கிக் கொண்டிருக்கிறார். ‘நான் 11400 கோடி ரூபாய் கடன் வாங்கியுள்ளேன் என்று பொய் சொல்கிறீர்கள். நான் அவ்வளவு தொகை வாங்க வில்லை. நான் கடனை திருப்பிச் செலுத்துவது பற்றிய பேச்சுக்கே இடமில்லை. பேச்சு வார்த்தை நடத்துவோம்’ என்கிறார் நீரவ் மோடி. இதன் அர்த்தம் நான் வாங்கிய பணத்தை வாராக்கடன் என்று தள்ளுபடி செய்யுங்கள் என்பதுதான். மல்லய்யாவுக்கு தள்ளுபடி செய்ததுபோல் நீரவுக்கும் கோத்தாரிக்கும் தள்ளுபடி அறிவிப்பு விரைவில் வரும்.
விஜய் மல்லய்யாவுக்கே தள்ளுபடிகள் வந்தபோது, நரேந்திர மோடிக்கு மிகவும் நெருக்கமான அம்பானிகளின் உறவினர்களான நீரவ் மோடிக்கும் மெகுல் சோக்சிக்கும், மோடியின் நிழல் நண்பர் அதானியின் உறவினரான ரோட்டமேக் கோத்தாரிக்கும் வராமலா போகும். நீரவ் மோடியின் முதன்மை நிதி அதிகாரியான விபுல் அம்பானி, முகேஷ், அனில் அம்பானிகளின் சித்தப்பா மகன்.நீரவ் மோடியின் தம்பி நீஷல் மோடி. இவரின் மனைவி இஷட்டா சல்கோகர். இவர் அம்பானிகளின்  சகோதரி மகள். அதேபோல், விக்ரம் கோத்தாரியின் மகள் நர்மதாவின் கணவர் பிரணவ் அதானி. இவர் கவுதம் அதானியின் சகோதரர் மகனாம். பிரதமர் நரேந்திர மோடி ஆஸ்திரேலியாவுக்குப் போய் தன் நண்பர் அதானிக்காக ஒப்பந்தம் போட்டார். பாரத ஸ்டேட் வங்கி 1 லட்சம் கோடி ரூபாய் அதானிக்கு கடன் கொடுக்க வேண்டும் என்றுகூடச் சொன்னார்.
சாதாரண மக்கள், சாமானியர்கள், தங்கள் குழந்தைகள் படிப்பிற்காக, பிள்ளைகளின் திருமணத்திற்காக வங்கியில் போய் கடன் கேட்டால், சில ஆயிரம் ரூபாய்க்காக சொத்தை, அல்லது சொத்து உள்ளவர்களை, அரசு ஊழியர்களை ஜாமீனாகக் கேட்கிறார்கள். வெறும் 5,000 ரூபாய் கடனுக்காக வங்கியின் தலைமை அலுவலகம் வரை தாள்கள் சென்று திரும்புகின்றன. தலைமையின் ஒப்புதல் கிடைக்கும் வரை கைக்குப் பணம் வருவதில்லை.அன்றன்றைக்குரிய நடவடிக்கைகள் கணினியின் மூலம் கண் காணிக்கப்படுகின்றன. அப்படியிருக்க, தலைமைக்குத் தெரியாமலேயே, அதிகாரத்தில் உள்ள வர்களுக்குத் தெரியாமலேயே இந்த மோசடிகள் நடந்துள்ளது என்று சொல்வது ஏமாற்று.
படிப்புச் செலவுக்கு பொதுத் துறை வங்கி கொடுத்த கடனை வசூலிக்க அம்பானியின் ரிலையன்ஸ் அடியாட்கள் வீடுகளுக்கு வந்து மிரட்டுகிறார்கள்.மதுரையில் ஒரு மாணவன் தற்கொலை செய்துகொண்டான். ஆதார் எண் இல்லையென்றால் அரிசி கிடையாது என்கிற மோடியின் அரசு, ஆதாரம் எதுவும் கேட்காமலேயே பொது மக்கள் பணத்தை பொதுத் துறை வங்கியின் மூலம் அம்பானி, அதானி குடும்பங்களுக்கு மடைமாற்றி விட்டுவிட்டு, ஒட்டுமொத்த வங்கிகளையும் அந்தக் குடும்பத் தினர் கைகளிலேயே கொடுத்துவிட தனியார்மயம்தான் சிறந்தது என்று சாக்கு சொல்கிறது. அப்படியென்றால், விபுல் அம்பானி, விக்ரம் கோத்தாரியெல்லாம் கைது செய்யப்பட்டிருக்கிறார்களே என்று கேட்கலாம். அதுதான் மோடி வித்தை. குறளி வித்தைக்காரன் தன்னோடு உள்ளனவனேயே இரத்தம் கக்கச் செய்து, படுக்க வைத்து வேடிக்கை காட்டுவது போல்தான். சில நூறு ரூபாய்களுக்காக மோடி மஸ்தான் தன் ஆட்கள் இரத்தம் கக்கும் நாடகம் நடத்தும் போது, பல ஆயிரம், லட்சம் கோடி ஆதாயங்களுக்காக இந்த நரவேட்டை நரேந்திர மோடி தன் நண்பர்களில் சிலரைக் கைது செய்து நாடகமாட மாட்டாரா?
ஊழியர்கள் சரியில்லை என்பதுபோல் காட்ட பஞ்சாப் நேஷனல் வங்கியின் 18,000 ஊழியர்கள் இடமாற்றம் செய்யப்படுகிறார்கள். நீரவ் மோடியும் மெகுல் சோக்சியும் தன்னுடைய நிறுவன ஊழியர்களிடம், ‘எங்கள்  பணமெல்லாம் முடக்கப்பட்டுவிட்டது. நாங்கள் உங்களுக்குச் சம்பளம் தரமுடியாது. நீங்கள் வேறு வேலை தேடிக் கொள்ளுங்கள்’ என்று யோக்கியவான்கள் போல் காட்டிக் கொண்டு தாங்கள் தொழிலாளர்களுக்குக் கொடுக்க வேண்டிய பணத்தையும் ஆட்டையப் போடுகிறார்கள் பேராசை பிடித்த பெருமுதலாளிகள். முடக்கப்பட்ட கடவுச் சீட்டு மீண்டு வந்ததைப் போல சிலகாலம் கழித்து முடக்கப்பட்டதாகச் சொன்ன பணமெல்லாம் வேறு பெயரில் வெளியே தெரியாமல் இவர்கள் வீடு போய் சேரும்.
இதுதான் மோடியின் பணமில்லாப் பரிவர்த்தனை. வங்கிக் கடன் உறுதிக் கடிதத்தை மட்டும் வைத்துக் கொண்டு பல ஆயிரம் கோடி மக்கள் பணத்தை தன் பணமாக மாற்றும் கார்ப்பரேட் முதலாளிகள். கூடா நட்பு முதலாளித்துவம். அன்று பொதுத் துறை நிறுவனங்கள் உருவாக்கப்பட்டதும் வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டதும்கூட முதலாளிகள் நலன் சார்ந்தே என்றபோதிலும் அதில் பொது மக்களின் நலனும் இருந்தது. இன்று கூடா நட்பு முதலாளித்துவம் எல்லாவற்றையும் முதலாளிகளுக்கானதாக்குகிறது. பஞ்சாப் நேஷனல் வங்கியின் பணத்தை பிரதமர் மோடி, மோடி வித்தைகள் செய்து தன் கூட்டாளிகளுக்குத் தாரை வார்த்துக் கொண்டிருக்கிறார்.
பொதுத்துறைகளை, பொதுத் துறை நிறுவனங்களை திட்டமிட்டு ஊழல்மயமாக்கி, சீரழித்து மக்கள் மனதில் ‘கறை நல்லது’ என்பது போல் ‘தனியார்மயம் நல்லது’ என்று பதியச் செய்து, பல கோடி கோடி சொத்துக்களை, கட்டிடங்களைக் கொண்டுள்ள பொதுத் துறை நிறுவனங்களை தனியார் முதலாளிகள் கையில் கொடுப்பதற்கான திட்டங்களை மறைமுகமாக அமல்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். ஊழலுக்குக் காரணம் ஊழியர்கள், அதிகாரிகள் மட்டுமல்ல. ஊழலுக்குக் காரணம் பேராசை பிடித்த பெருமுதலாளிகள். தனியுடமை. தனியுடமை இருக்கும் வரை, கார்ப்பரேட்களின் கட்டுக்கடங்கா லாப வெறி பணத்தாசை இருக் கும்வரை, உற்பத்திச் சாதனங்களும் உற்பத்திக் கருவிகளும் அனைவருக்கும் பொதுவானதாக மாறாதவரை ஊழல் ஒருபோதும் ஒழியாது. தனியுடமையைப் பாதுகாக்கும் மோடி வித்தைகளைத் தகர்த்தெறிவோம்.

Search