COMMUNIST PARTY OF INDIA (MARXIST - LENINIST) - LIBERATION

COMMUNIST PARTY OF INDIA (MARXIST - LENINIST) - LIBERATION, TAMILNADU

Wednesday, February 28, 2018

செங்கொடிகளை நிமிர்ந்து நிற்க வைத்து 
தமிழ்நாட்டு மக்கள் உயர்ந்து நிற்பதை உறுதி செய்வோம்!

2018, பிப்ரவரி 17 - 20 தேதிகளில் தூத்துக்குடியில் நடந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)ன் 22ஆவது மாநில மாநாட்டின் பொது அமர்வில் இகக (மா - லெ) மாநிலச் செயலாளர் தோழர் எஸ்.குமாரசாமி ஆற்றிய உரை


தோழர்களே,
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு நடத்தும் 22ஆவது மாநில மாநாடு வெற்றி பெற இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) சார்பாக வாழ்த்துகள் தெரிவித்துக் கொள்கிறேன்.
சம்பிரதாயபூர்வமான வாழ்த்துரையாக அல்லாமல், உங்களோடு ஓர் உரையாடல் நடத்த இகக (மாலெ) விரும்புகிறது.
2017 மே 1 அன்று, கோவையில் எமது அமைப்புகள் ‘எழுக செங்கொடிகள்’ பேரணி நடத்தினோம். 2018, பிப்ரவரி 17 - 20 தேதிகளில் தூத்துக்குடியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) ‘செங்கொடி உயரட்டும். தமிழகம் நிமிரட்டும்’ என மாநாடு நடத்துகிறது. செங்கொடிகள் உயர்ந்தால்தான் தமிழ்நாட்டு மக்கள் தலைநிமிர்ந்து நிற்க முடியும் என்று மாலெ கட்சியும் உறுதியாக நம்புகிறது.
கார்ப்பரேட், மதவெறி, சாதியாதிக்க, ஆணாதிக்க நஞ்சு நாடெங்கும் காற்றில் கலந்துள்ளது.
இந்திய நாடாளுமன்ற வரலாற்றில், 2014ல் பாஜக தனித்து அறுதிப் பெரும்பான்மை பெற்றதில் துவங்கி, இன்று நாட்டின் ஏகப்பெரும்பான்மை மாநிலங்களில் ஆட்சியைப் பிடிப்பது வரை சென்றுள்ளது.
ஒரு மதம், ஒரு கலாச்சாரம், ஒரு மொழி என்று பன்மைத்துவத்தை குழிதோண்டி புதைத்து விட விரும்பும் சங்பரிவார் கூட்டம், நாட்டின் அனைத்து நாடாளுமன்ற, அரசியலமைப்புச் சட்ட நிறுவனங்களையும் கைப்பற்றுகிறது. சிதைத்துச் சீரழிக்கிறது. அதிகாரங்களை ஒன்றுகுவித்து, கட்டுக்கடங்காத தனிநபர் கலாச்சாரத்தை, நாட்டின் மீது ஏவியுள்ளது. ஆட்டுக்குத் தேவையில்லாத தாடி போல், நாட்டுக்குத் தேவையில்லாத ஆளுநர்களை எதிர்க்கட்சிகளும் எடுபிடிகளும் ஆளும் மாநிலங்கள் மேல் திணிக்கிறது.
‘கருப்புப் பணத்தைக் கைப்பற்றி விநியோகிப்பது’, ‘ஆண்டுக்கு 2 கோடி வேலைகள்’, ‘விவசாயத்தைப் பாதுகாப்பது’, ‘நல்ல காலம் பிறக்கும்’ என்ற மோடியின் எல்லா வாக்குறுதிகளும் வெற்று வாய்வீச்சுகள் என மக்கள் உணர்கிறார்கள். முழக்கம், முழக்கம், முழக்கம். தானே ஆட்சியில் மூன்றரை ஆண்டுகள் முடித்த பிறகும் எதிர்க்கட்சிபோல் பேசுவதையும், நிரந்தரத் தேர்தல் பரப்புரையாளராக இருப்பதையும் மோடியால் மாற்றிக் கொள்ள முடியவில்லை. குறைகுடம் நிறையவே தளும்புகிறது.
மோடியால் மாற்றம் வரும் என நம்பி, பின் மோசம் போனதை புரிந்துகொண்டு, எதிர்ப்புக் குரல்கள் எழுப்புபவர்களை, சங்கடமான கேள்விகள் கேட்பவர்களை, ‘தேச விரோதிகள்’ என்கிறார்கள். ராணுவத்தினர், பொறுப்பாகவும் பொறுமையாகவும் ஆபத்து களை பொருட்படுத்தாமல் எல்லையை பாதுகாத்துக் கொண்டிருக்கும்போது, அது சரியா இது சரியா, இது வேண்டும் அது வேண்டும் என்றெல்லாம் நியாயம் கேட்கலாமா என்று மிரட்டுகிறார்கள்.
அதீத தேசியவாதக் கூக்குரலிட்டு, இசுலாமியர்களைப் பகைவர்களாகவும் இரண்டாம் தர குடிமக்களாகவும் நிறுத்துகிறார்கள். அய்க்கிய அமெரிக்கா உள்ளிட்ட ஏகாதிபத்திய நாடுகளுடன், கொடுங்கோன்மை இஸ்ரேலுடன் இணக்கம் காட்டுபவர்கள், நாட்டின் அயல்விவகாரக் கொள்கையை அடகு வைத்தவர்கள், தேசபக்த நாடகமாடுகிறார்கள்.‘பசுப் பாதுகாப்பு’, ‘காதல் போர் எதிர்ப்பு’ என்ற பெயர்களில் இசுலாமியர், தலித்துகள், பெண்களை வேட்டையாடுகிறார்கள். ஆனால், வங்கிகளில் இருந்து ரூ.11500 கோடி சூறையாடிய நீரவ் மோடி, நரேந்திர மோடியுடன் டாவோசில் புகைப்படம் எடுத்துக் கொள்கிறார். நாட்டை விட்டும் ஓடிவிட்டார்.
இன்று உச்சநீதிமன்றத்தில் இருந்து, நீதித் துறை சுதந்திரத்துக்கு ஜனநாயகத்துக்கு ஆபத்து என்ற அபாய அறிவிப்பு ஒலித்துள்ளது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு அடுத்து பணிமூப்பில் இரண்டாம் நிலையில் உள்ள செல்லமேஸ்வர், அடுத்த நிலையில் உள்ள அடுத்த தலைமை நீதிபதியாக வாய்ப்புள்ள ரஞ்சன் கோகாய், அடுத்த நிலைகளில் உள்ள மதன் பி.லோகுர், குரியன் ஜோசப் ஆகியோர், தலைமை நீதிபதி மத்திய அரசுக்கு ஏற்ப, வழக்குகளை தேர்ந்தெடுத்த நீதிபதிகளுக்கு அனுப்புவதாக பகிரங்கமாக இந்த நாட்டிடம் புகார் சொல்லி நீதி கேட்டுள்ளனர்.
அமித் ஷா ஆணைப்படி மோடி ஆண்ட குஜராத்தின் காவல்துறை உயரதிகாரிகள் போலி மோதலில் சொரபுதீனை கொன்றார்கள் என்ற வழக்கில் சாட்சிகள் சகட்டுமேனிக்கு பிறழ்சாட்சிகளாக மாறுகிறார்கள், குற்றம் சுமத்தப்பட்டவர்கள் விடுதலை செய்யப்படுகிறார்கள், இது ஏற்கத்தக்கதல்ல என்கிறார் மும்பை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி திப்சே. பார்த்த மாத்திரத்தில் ஆதாரம் இருப்பதாக (பிரைமா ஃபேசி) காரணம் சொல்லி உச்சநீதிமன்றம் பிணை மறுத்த வழக்குகளில், எப்படி கீழமை நீதிமன்றம் சாட்சியங்களே இல்லை என தள்ளுபடி (ஈண்ள்ஸ்ரீட்ஹழ்ஞ்ங்) செய்கிறது எனக் கேட்டுள்ளார். மறுபுறம், போராடிய மாருதி, பிரிக்கால் தொழிலாளர்களுக்கு ஆயுள் தண்டனை பெற்றுத் தரப்படுகிறது.
குற்றப்பின்னணி உள்ள இந்து சாமியார் யோகி ஆதித்யநாத் முதலமைச்சராகி தம் மீதும் தம் கூட்டாளிகள் மீதும் உள்ள வழக்குகளை தாமே ரத்து செய்துவிட்டார். அவரது இந்து யுவவாஹினியில் இருந்து அரசு ஆதரவு பெற்ற பல தனியார் ஆயுதப் படைக் குழுக்கள் வரை, பகிரங்கமாக இசுலாமியர்களை, தலித்துகளை, பெண்களை, கேள்வி கேட்பவர்களை வேட்டையாடுகிறது. வெறுப்பரசியலின் வன்முறை கர்நாடகத்தின் கவுரி லங்கேஷ் படுகொலை வரை நீண்டுள்ளது.
ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், சர்வசாதாரணமாக இந்திய ராணுவத்தை விட ஆர்எஸ்எஸ் மேலானது என்கிறார். ராணுவம் போருக்குத் தயாராக சில மாதங்கள் ஆகும் என்றால் தமது அமைப்புக்கு இரண்டு, மூன்று நாட்களே போதும் என்கிறார். பதவிக்கு வந்த நாளில் இருந்து மக்கள் மீது போர் தொடுத்துள்ளவர்களுக்கு நாள் கணக்கில் தயாரிப்பு கூட தேவையில்லை.
ஆர்எஸ்எஸ், சமூக விவாதப்போக்கை தீர்மானிக்கிறது. தனிநபர் சுதந்திரத்தின் எல்லை எது என குறித்துக் காட்டுகிறது. காந்தி கொலையாளிகள் எனவும் சுதந்திரப் போரில் பங்கேற்காதவர்கள் காட்டிக் கொடுக்கும் வேலையைக் கூடச் செய்தவர்கள் எனவும் புகார்களுக்கு ஆளாகி விளிம்பு நிலையில் இருந்தவர்கள் இன்று இந்தியாவெங்கும் தண்டனை பற்றிய அச்சமின்றி வெறியாட்டம் போடுகிறார்கள். இந்த மேலோங்கிய அரசியல் நிலை எந்தப் பின்னணியில் நடந்தது? தொலைத்த இடத்தில் தேடுவதுதான் சரியாக இருக்கும்.
அனைத்து முதலாளித்துவ நிறுவனங்களும் காங்கிரசும் அய்முகூ அரசின் இரண்டாம் பாகத்தின் இறுதிப் பகுதியில் மீள முடியாத ஆழமான நெருக்கடியில் சிக்கத் தவித்தனர். பிராந்திய கட்சிகள், சமூக நீதிக் கட்சிகள் உள்ளிட்ட அரசியல் கட்சிகள், ஒரே நேரத்தில் தேர்தலில் ஆகப்பெரிய சரிவை சந்தித்தனர். தயாராகி வந்த பாஜக, சங் பரிவார் துணையுடன் வெற்றிடத்தை கைப்பற்றிக் கொண்டு ஆட்சியைப் பிடித்தது. காலமெல்லாம் ஆளத் துடிக்கிறது.
1990கள் தொடங்கி, பொருளாதாரக் கொள்கைகள், உள்நாட்டு ஆளுகை மற்றும் அயல்விவகாரக் கொள்கைகளில் தேசிய பிராந்திய முதலாளித்துவ, குலக் கட்சிகளிடம்  ஒரு கருத்தொற்றுமை தோன்றியது. கொள்கை வேறுபாடு இல்லாதபோது, முனைப்புடனும் தீவிரத்துடனும் மூர்க்கத்துடனும் மக்கள் விரோத நிகழ்ச்சிநிரலை நிறைவேற்ற தயாராக இருந்த பாஜகவுக்கே ஆளும் வர்க்கக் கட்சிகள் முடிசூட்ட விரும்பின. ஊடகங்கள் மக்களிடமும் மோடியை திறமையாக கூவி விற்றன.
ஏற்பட்ட கொள்கை கருத்தொற்றுமையை மய்யங்கொண்டு முதன்மை நீரோட்ட பெரும்தொழில்குழும ஊடகங்கள், பொருளாதார வளர்ச்சி வேண்டுமென்றால், வாழும் இடங்களில் இருந்து மக்களும் விவசாயிகளும் கூட்டம் கூட்டமாக வெளியேற்றப்படுவது அவசியம், தேச நலனுக்கு கருப்புச் சட்டங்கள் அவசியம், முன்னேற்றத்தைத் தடுக்கும் மனித உரிமைகள் பற்றி பேசுவது கூடாது, திறன் வாய்ந்த பொருளாதாரத்துக்கு தனியார்மயமே தீர்வு என்று பொதுப் புத்தியை (காமன்சென்ஸ்) கட்டமைத்தனர். கொள்கை கருத்தொற்றுமை, கட்டமைக்கட்ட, நாளும் மறுஉற்பத்தியாகும், மறுஉறுதியாகும் பொதுப் புத்தி என்ற பேரழிவு ஆயுதங்களோடு, பொய், வதந்தி, திசைத் திருப்புவது, ‘நாம் எதிர் அவர்கள்’ என்ற சமன் பாட்டை கட்டியமைப்பது என்ற ஆயுதங்களும் கொண்டு, மோடி ஆட்சிக்கு வந்து ஆட்சியில் நீடிக்கிறார். மக்கள் மீது போர் தொடுக்கிறார்.
பாசிசம் இருக்கிறது என்று சொன்னால் காங்கிரசோடு முன்னணி என்ற தேவை வரும் என்ற கவலை எழுந்துள்ளது. பெயரில் எதுவும் இல்லை என ஷேக்ஸ்பியர் முதல் அனைவரும் சொல்கிறார்கள். கார்ப்பரேட் கொள்ளையோடு ஆர்எஸ்எஸ் நடவடிக்கைகள் சேரும்போது அது இந்திய வகைப்பட்ட பாசிசம் என்கிறது மாலெ கட்சி. இதற்கு என்ன பெயர் சொல்வது என்பது அவரவர் விருப்பம். இப்படிச் சொல்வதாலேயே காங்கிரசோடு முன்னணி அமைக்க வேண்டுமென மாலெ கட்சி சொல்லவில்லை.
தட்டையான, ஒற்றைப்பரிமாண, மெகாமதச்சார்பின்மை அணி, சங் பரிவார் ஆபத்தை சந்திக்கப் போதுமானதல்ல. இடதுசாரிகள், காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம் நீங்கலாக, நாட்டின் முக்கிய கட்சிகள் பலவும் பாஜகவுடன் வாய்ப்புக்கேற்ப உறவாடிய வரலாறு கொண்டவைதானே. நாளை உறவாடும் வாய்ப்பை மறுக்க முடியுமா? அந்த விதத்தில் அவர்களை மதச்சார்பின்மை/மதச்சார்பு என்று வரையறுத்து நிறுத்த முடியாது. காங்கிரசே கூட மென்மையான இந்துத்துவாவுக்கு தயங்காத கட்சிதானே?
உங்கள் நகலறிக்கையில் சில பகுதிகளை கவனப்படுத்த விரும்புகிறேன்.
‘கட்சியின் சொந்த பலத்தை உருவாக்கவும் வளர்த்தெடுக்கவும் கட்சி முன்னுரிமை அளித்திடும். இடதுசாரி ஒற்றுமையை விரிவுபடுத்திட, வலுப்படுத்திட கட்சி பாடுபடும்’.
‘திட்டவட்டமான திட்டத்தை முன்வைத்து கூட்டியக்கங்களையும் கூட்டுப் போராட்டங்களையும் நடத்திட அனைத்து இடதுசாரி ஜனநாயக சக்திகள் ஒன்றிணைக்கப்பட வேண்டும். அதன் வாயிலாகவே இடதுசாரி ஜனநாயக முன்னணி உருவாக இயலும்’.
‘இடதுசாரிகளின் கூட்டு மேடையின் அடிப்படையிலான கூட்டியக்கங்களின் பிரச்சாரங்களுக்கு கவனம் செலுத்துவதன் மூலம், தற்போது காணப்படும் குறைபாடுகளைக் களைந்து இடதுசாரி ஒற்றுமை பலப்படுத்தப்பட வேண்டும்’.
அனைத்து முக்கிய நடவடிக்கைகளிலும் காங்கிரஸ், பாஜக போலவே செயல்படுகிறது என்றபோதும், காங்கிரசையும் பாஜகவையும் சமதூரத்தில் வைத்து சமமாக அணுகக் கூடாது என்று நீங்கள் குறிப்பிட்டுள்ளதும், சரியே.
பன்மைத்துவத்தில் நம்பிக்கை உள்ள இடதுசாரிகளாகிய நாம், வேற்றுமையில் ஒற்றுமை கண்டாக வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம்.
2019 தேர்தல் வரும்போது, சாத்தியப்பட்ட அளவுக்கு மிகப்பெரிய பாஜக தோல்வியை உறுதி செய்ய, இடதுசாரிகள் நேரடியாகப் போட்டியிடக் கூடிய போட்டியிட வேண்டிய இடங்களுக்கு அப்பால், பாஜக, அதன் கூட்டாளிகள் அல்லாதோரை வெற்றி பெற வைக்க, நமது தேர்தல் போர்த்தந்திரம் அமைந்தாக வேண்டும். தேர்தலுக்குப் பிறகும் பாஜக ஆட்சி அமைக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இவை நிச்சயம் கவனத்துக்குரியவையே ஆகும். இவற்றை, பாஜக ஆபத்தை, அதன் தீவிரத்தை உணர்ந்துதான் சொல்கிறோம். பாஜகவை பலவீனப்படுத்த வேறு வேறு கட்சிகளுடன் அமைப்புகளுடன் வேறு வேறு மட்ட கூட்டு நடவடிக்கைகளுக்கு நெளிவுசுளிவுடன் தயாராக இருக்க வேண்டும் என்பது சரியே. அதே நேரம், நம்பகத்தன்மை இழந்த கட்சிகளுடன், மெகா மதச்சார்பின்மை அரசியல் கூட்டணி அமைப்பதும் உதவாது. புறநிலைரீதியாக, பாஜகவுக்கு எதிரான பிராந்திய கட்சிகளோடு உறவு என்று நிபந்தனை இல்லாமல் யோசிப்பது, திரிணாமுல் காங்கிரசை அங்கீகரிக்க வேண்டிய வேண்டாத சங்கடத்துக்கு இட்டுச் செல்லாதா?
திரிபுராவில், அமித் ஷாவும் மோடியும் இடது முன்னணியை வீழ்த்த வெறித்தனமாகச் செயல்படுகிறார்கள். தடைகள் தாண்டி, இடது முன்னணி வெற்றி பெற வாழ்த்துகிறோம். 2017 கடைசியில் குஜராத் காலிறுதியில் பாஜக தட்டுத்தடுமாறி தோல்வியைத் தவிர்த்தது.2018 துவக்க ராஜஸ்தான், ஆஜ்மீர், ஆல்வார் அரையிறுதியில் பாஜக படுதோல்வி அடைந்தது. 2019 இறுதிப் போட்டியிலும் தோற்கடிக்க, இன்றே இப்போதே ஆனதெல்லாம் செய்தாக வேண்டும்.
தமிழ்நாட்டில் சவுக்கடிக்கும் சாணிப்பாலுக்கும் முடிவு கட்டுவதில் நாமே தலைமை தாங்கினோம். ஆனால், பல களங்களிலும் முன்னின்ற நம்மை, ஒரு கட்டத்தில் கழகங்கள் தாண்டிச் சென்றுவிட்டனர். இன்று அதிமுக வலுவிழந்துள்ளது. திமுக எதிர்க்கட்சிப் பாத்திரம் வகிக்காமல் ஆர்கேநகர் இடைத்தேர்தலில் வைப்புத் தொகை இழந்துள்ளது.
தமிழ்நாட்டின் மொழி, பண்பாடு, நீர் ஆதாரம், வருவாய், அதிகாரங்கள் போன்ற உரிமைகள் மறுக்கப்படுகின்றன. தமிழ்நாட்டின் இயற்கை வளம் சூறையாடப்படுகிறது. மனித வளம் கொடூரமாக சுரண்டப்படுகிறது. பன்னாட்டு, இந்நாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் வசதி படைத்தவர்களுக்கும் அரசின் கருவூலம் திறந்துவிடப்படுகிறது. விவசாயம் அழிக்கப்படுகிறது. மாணவர், இளைஞர்களின் கல்வியும் வேலைவாய்ப்பும் எதிர்காலமும் இருளில் தள்ளப்படுகிறது. பெண்களுக்கு அச்ச மற்ற சுதந்திரமும், தலித்துகள் சிறுபான்மையினர் மற்றும் மாற்றுப் பாலினத்தவர், மாற்றுத் திறனாளிகள் உரிமைகளும் மறுக்கப்படுகின்றன. பொது சுகாதாரம் நாசமாக்கப்பட்டுவிட்டது. பொது விநியோகத்துக்கு உணவுப் பாதுகாப்புக்கு ஆபத்து வந்துள்ளது. எல்லா துறைகளிலும் தனியார்மயம் தலைவிரித்தாடுகிறது. நீதிமன்றங்கள் போராட்டங்களுக்கு விரோதமாக செயல்படுகின்றன. அம்பேத்கர் சொன் னதுபோல், ஜனநாயகம் அலங்கார மேல்பூச்சாக மட்டுமே இருப்பதும், அடிஆழம் நெடுக ஒடுக்குமுறை, சுரண்டல், ஜனநாயக மறுப்பு ஆகியவை நீக்கமற நிறைந்திருப்பதும் யதார்த்தமாக உள்ளது.
மக்கள் கோரிக்கைகள் மீது தமிழ்நாட்டு நலன்கள் அடிப்படையில் இடதுசாரி போராட்ட அரசியல் மேடை அமைக்க இது பொருத்தமான நேரம்.
ஜீயர்கள் சோடா புட்டி வீசுவோம் என்றும், இது 68 அல்ல, 2018, பெரியார், பகுத்தறிவு எல்லாம் வங்கக் கடலில் வீசியெறியப்படும் என்றும் இந்துத்துவாவும் சாதிய சக்திகளும், தமிழ்நாட்டில் பேசுகிறார்கள். தண்டிக்கப்பட்ட குற்றவாளியின் படம் சட்டமன்ற வளாகத்தில் மாட்டப்பட்டு, அரசியல் குற்ற கும்பல் சூறையாடலுக்கு சாட்சியம் சொல்கிறது. இந்த அதிருப்தியை வசப்படுத்த ஆன்மீக அரசியல் முதல் பாஜக வரை நப்பாசையுடன் முயற்சிக்கிறார்கள்.
இந்தப் பின்னணியில், ‘செங்கொடிகள் உயரட்டும், தமிழகம் நிமிரட்டும்’ என்ற உங்கள் முழக்கம் வாழ்த்துதலுக்கு உரியதாகும். நாம் சாத்தியமானவற்றை மட்டும் செய்தால் போதாதல்லவா? அவசியமானதையும் செய்தாக வேண்டுமல்லவா? செங்கொடிகளை நிமிர்ந்து நிற்க வைத்து தமிழ்நாட்டு மக்கள் உயர்ந்து நிற்பதை உறுதி செய்வோம்.
கடந்த காலம் காங்கிரசுடையது.கழங்களுடையது.
எதிர்காலம் ஒருபோதும் சங்பரிவாருடையது அல்ல.
எதிர்காலம் இடதுசாரிகளுடையதாக மாற 
போராட்டங்களில் ஒன்றுபடுவோம். 
போராட்டங்களால் ஒன்றுபடுவோம்.
இந்திய புரட்சி நீடுழி வாழ்க!
இன்குலாப் ஜிந்தாபாத்!

Search