COMMUNIST PARTY OF INDIA (MARXIST - LENINIST) - LIBERATION

COMMUNIST PARTY OF INDIA (MARXIST - LENINIST) - LIBERATION, TAMILNADU

Wednesday, February 28, 2018

காவிரி மேலாளுமை வாரியம் அமைக்கப்பட வேண்டும்!
காவிரியில் தமிழ்நாட்டின் உரிமை மீட்டெடுக்கப்பட வேண்டும்!

காவிரி நதிநீர் பங்கீட்டில் பிப்ரவரி 16, 2018 அன்று தரப்பட்டுள்ள தீர்ப்பு, அது 15 ஆண்டுகளுக்கு நடைமுறையில் இருக்கும், அது வரை அதற்கெதிரான மேல்முறையீடு செய்ய முடியாது என்று சொல்கிறது.
பாதிக்கப்பட்டவர்கள் மேல்முறையீடு செய்ய முடியாது என்று சொல்வது நிச்சயம் நீதியல்ல. மிகப்பெரிய உரிமை பறிப்பு, வாழ்வாதாரப் பறிப்பு, அடுத்த 15 ஆண்டுகளுக்கு தொடரும் ஒரு நிலையை ஒரு மிகப்பெரும் மக்கள்திரள் மீது திணிப்பது நிச்சயம் நீதியல்ல. 50 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொண்டுள்ள தமிழ்நாட்டின் ஆளும் கட்சி விரல் சூப்பிக் கொண்டிருக்காமல் இந்த உரிமை பறிப்புக்கு எதிராக உடனடியாக செயல்பட வேண்டும். எதிர்க்கட்சி, அனைத்து கட்சிக் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்தவுடன், அதனால் ஆளும் கட்சி அனைத்து கட்சி கூட்டம் நடத்துவது என்ற சமாளிப்பு களுக்கு அப்பால், தமிழ்நாட்டில் பல பத்தாண்டுகளாக நடந்து கொண்டிருக்கும் காவிரி அரசியலுக்கு அப்பால், தமிழ்நாட்டு விவசாய சமூகத்தின் நலன் இப்போதாவது முன்னிறுத்தப்பட வேண்டும்.
இந்துத்துவா வெறியாட்டம் போடும் இன்றைய சூழலிலும் ஜனநாயகக் குரல்கள் வலுவாக விடாப்பிடியாக ஒலித்ததால் ஹடியா என்ற சாதாரண பெண்ணுக்கு அரைகுறை நீதியாவது கிடைத்தது. நான் எனது கணவனுடன் வாழ விரும்புகிறேன் என்று இன்று சொல்ல முடிகிறது. அதிகாரத்தில் இல்லாதவர்கள், அதிகாரத்தை எதிர்ப்பவர்கள், எதிர்ப்புப் போராட்டங்கள் மூலம் மட்டும் நீதியை நிலைநாட்ட பங்காற்ற முடியும் என்றால், ஒரு மாநிலம், அதன் ஆளும் கட்சி, ஒரு தீர்ப்பை மேல்முறை யீட்டுக்கு உட்படுத்துவது சாத்தியமற்றது அல்ல. அரசியல் விருப்பமும் தயார் நிலையுமே அதற்குத் தேவை.
தமிழ்நாட்டுக்கு பாதகமாக, கர்நாடகத்துக்குச் சாதகமாக காவிரி தொடர்பான தீர்ப்புகள் இது வரை அமைந்துள்ளன. 50 ஆண்டுகளுக்கும் மேல் மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரசோ, இன்னும் பல ஆண்டுகள் மத்தியில் ஆட்சியில் இருக்க முனையும் பாஜகவோ, தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்கும் வாய்ப்பை தமிழக மக்கள் தரப் போவதில்லை என்பதை புரிந்துகொண்டிருக்கிறார்கள். (காங்கிரஸ் கடந்த காலத்தில் புரிந்துகொண்டது). கர்நாடகம், இரண்டு கட்சிகளுமே ஆட்சி அமைக்க ஏற்கனவே இடம் தருகிறது. மீண்டும் தரும் வாய்ப்புகளும் உள்ளன. மத்திய அரசு தமிழ்நாட்டுக்குச் சாதகமாக எப்போதும் நடந்துகொள்ளப் போவதில்லை. மாநில உரிமைக்காக தொடர்ச்சியாக குரல் எழுப்பி வந்த ஒரு மாநிலம்,   இன்று அடுத்தடுத்து பறிபோகும் உரிமைகளையும் அவற்றில் ஒன்றான காவிரி நீர் உரிமையையும் போராடியே மீட்க முடியும்.
465 பக்க தீர்ப்பு, சர்வதேச நதிநீர் பங்கீடு ஒப்பந்தங்கள், முறைகள் பற்றியெல்லாம் பேசி, காவிரி எந்த மாநிலத்துக்கும் சொந்தம் இல்லை என்று சொல்லி, கடைசியில் கர்நாடகம் நீர் ‘தர’ வேண்டும் என்கிறது. காவிரி நடுவர் மன்றம் சொன்னதுபோல் காவிரி மேலாளுமை வாரியம் அமைக்கப்பட்டால், அது, கர்நாடகத்துக்கும் தண்ணீர் ‘தரப்’படுவதை பார்த்துக் கொள்ளப் போகிறது. தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா போல் கர்நாடகமும் தண்ணீர் பெறும் மாநிலமாக இருக்கும்.
காவிரி நதிநீர் பங்கீடு பற்றிய வரலாற்றை 1799ல் இருந்து அலசி ஆய்ந்திருக்கிற தீர்ப்பு, பல்வேறு முயற்சிகள், வழக்குகளுக்குப் பிறகு அமைக்கப்பட்ட காவிரி நடுவர் மன்றம், 1991ல் இடைக்காலத் தீர்ப்பில் 205 டிஎம்சி நீர் தமிழகத்துக்கு, அதன் பிறகு 05.02.2007ல் இறுதித் தீர்ப்பில் 192 டிஎம்சி நீர் தமிழ்நாட்டுக்கு என்று சொன்ன விசயங்கள், ஏன் அமல்படுத்தப்படவில்லை என கர்நாடக அரசை கேட்கவில்லை. முந்தைய விசாரணை அமர்வுகளில் தமிழ்நாடு அரசு நீர் பாதுகாப்புக்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கவில்லை என்று தமிழக அரசை கண்டித்த நீதிபதிகள், காவிரி மேலாளுமை வாரியம், காவிரி நீர் ஒழுங்காற்று ஆணையம் ஆகியவற்றை, நடுவர் மன்றத்தின் முடிவு 2013 பிப்ரவரியில் அரசிதழில் வெளியான பிறகும் ஏன் அமைக்கவில்லை என மத்திய அரசுக்கு கேள்வி முன்வைக்கவில்லை. அந்த ஆணையை அமல்படுத்த கண்காணிப்புக் குழு அமைக்கப்பட வேண்டும் என்று மே 2013ல் சொல்லப்பட்டதும் ஏன் கிடப்பில் இருக்கிறது என்றும் உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பவில்லை. 1924 நதிநீர் ஒப்பந்தம் 50 ஆண்டுகள் அமலில் இருந்து 1974ல் புதுப்பிக்கப்படாதபோது தமிழகத்தின் தண்ணீர் பங்கு குறைந்துகொண்டே வந்தது பற்றியும், அதனால் விவசாயம் தொடர்ந்து பாதிப்புகளை சந்தித்தது பற்றியும், நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டது, பயிர் கருகியதால் அதிர்ச்சி மரணம் அடைந்தது, தமிழக விவசாயிகள் டில்லிக்குச் சென்று ஏதேதோ போராட்டங்கள் நடத்திப் பார்த்தும் மத்திய அரசு எந்தப் பதிலும் சொல்லாதது ஆகியவை பற்றி, 15 ஆண்டு காலம் தொடரவிருப்பதாகச் சொல் லப்படும் தீர்ப்பு கவனத்தில் கொள்ளவில்லை.
தமிழ்நாட்டில் 20 டிஎம்சி நிலத்தடி நீர் இருப்பதாகவும் அதில் 10 டிஎம்சி நீரை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அந்த நீரை கர்நாடகத்துக்கு ஒதுக்குவதாகவும் தீர்ப்பு சொல்கிறது. ஓஎன்ஜிசி, இறால் பண்ணைகள், ஹைட்ரோகார்பன், மீத்தேன் என வெவ்வேறு திட்டங்கள் காவிரி டெல்டா மாவட்டங்களின் குடிநீர் ஆதாரத்தை அழித்துவிட்டன. நிலத்தடி நீர் கொண்டு விவசாயம் என்ற வாய்ப்புக்கு இந்த விவசாய விரோதத் திட்டங்கள் ஏற்கனவே கதவுகளை மூடிவிட்டன. இந்தத் திட்டங்கள் வேண்டாம் என்று வலியுறுத்தி தமிழ்நாட்டின் விவசாயிகள் தொடர்ந்து போராடிக் கொண் டிருப்பது கண்ணுக்கு தெரியாத தூரத்திலா உச்சநீதிமன்றம் இருக்கிறது? அல்லது நிலமே போய்விடும் என்றால் பின் நீர் எதற்கு என்று கேட்கிறார்களா?
177.25 டிஎம்சி நீர் தமிழ்நாட்டுக்கு என்றும் ஜ÷லை முதல் மாதாமாதம் தமிழ்நாட்டுக்கு நீர் திறந்துவிடப்பட வேண்டும் என்றும் தீர்ப்பு அமலாக்க திட்டப் பொறியமைவு (ஸ்கீம்) ஆறு வாரங்களுக்குள் அமைக்கப்பட வேண்டும் என்றும் இதற்கான கால அளவை இதற்கு மேல் நீட்டிக்க முடியாது என்றும் தற்போதைய தீர்ப்பு சொல்கிறது. 1991 காவிரி நடுவர் மன்ற இடைக்கால தீர்ப்பு வந்தபோது கூட ஸ்கீம் அமைக்க 1998ல் அரசாணை வெளியிடப்பட்டு காவிரி நீர் ஆணையம் அமைக்கப்பட்டது. 2007 தீர்ப்பு, நீர் இருப்பை கண்காணிக்க காவிரி மேலாளுமை வாரியத்தையும் தீர்ப்பு அமலாக்கத்தை கண்காணிக்க காவிரி நீர் ஒழுங்காற்று ஆணையத்தையும் அமைக்கச் சொன்னது. அவை அமைக்கப்படவேயில்லை.
மொத்தத்தில், பல பத்தாண்டுகளாக இருந்ததுபோல், 15 ஆண்டுகள் இருக்கும் ஒரு தீர்ப்பு வந்துள்ள இன்றைய நிலையிலும் கர்நாடகம் தரும் நிலையிலும் தமிழ்நாடு பெறும் நிலையிலும் உள்ளன. காவிரி மேலாளுமை வாரியம் அமைக்கக் கூடாது என்று கர்நாடக அரசும் பேசத் துவங்கிவிட்டது.
2018 தீர்ப்பை அமல்படுத்தும் இடத்தில், எல்லா விசயங்களிலும் தொடர்ந்து தமிழக மக்களின் எதிர்ப்பை மட்டுமே சந்தித்து வருகிற பாஜக இன்று இருக்கிறது. மத்தியில் ஆட்சியில் தமிழக ஆட்சியாளர்கள் இடம்பெற்றிருந்தபோதே, வலுவான ஆட்சியாளர் என்று கருதப்பட்டவர்கள் இருந்தபோதே, காவிரி பிரச்சனையில் கிடைக்காத தீர்வு, இப்போது கிடைத்தாக வேண்டும்.
இருசக்கர வாகனத் திட்டத்தை துவக்கி வைக்க தமிழ்நாட்டுக்கு வந்த மோடிக்கு, தமிழ்நாட்டின் தற்போதைய பற்றியெரியும் பிரச்சனையான காவிரி பற்றி வான் எட்டும் வரை வார்த்தைகளை தொடுத்து ஏதாவது பேசி தமிழ்நாட்டு மக்களை கவர ஒரு வாய்ப்பு இருந்தது. அந்த வாய்ப்பை நன்கு பயன்படுத்தி, காவிரி பற்றி ஒரு வார்த்தை கூட பேசாததன் மூலம், இந்தப் பிரச்சனையில் மத்திய அரசின் நிலைப்பாடு என்ன என்பதை தமிழ்நாட்டு மக்களுக்கு மிகவும் தெளிவாக வெளிப்படுத்திவிட்டார். பிரச்சனையைத் தீர்க்க மோடி அரசு தயாராக இல்லை. அடுத்து தேர்தல் நடக்கவுள்ள கர்நாடகத்துக்கே முன்னுரிமை.
அனைத்து கட்சி கூட்டத்தின், பிரதமரைச் சந்தித்து பிரச்சனை பற்றி பேசுவது என்ற குறைந்தபட்ச தீர்மானம் கூட நிறைவேற்றப்படவில்லை என்பது பற்றி பழனிச்சாமியோ, பன்னீர்செல்வமோ கவலைப்பட்டதாகவும் தெரியவில்லை. உச்சநீதிமன்றம் சொல்லியுள்ள ஆறு வாரங்களுக்குள் பிரதமர் மோடியைச் சந்தித்துவிடுவார்களா?
தமிழ்நாட்டு மக்களைப் பொறுத்தவரை அனைத்துக் கட்சி கூட்டத்தில் முன்வைக்கப்பட்டுள்ள தீர்மானங்கள் நடைமுறைக்கு வருவது முதல் கட்ட, உடனடி, அவசர நடவடிக்கை என்ற அளவிலானதே. இறுதியானது அல்ல. பழனிச்சாமி அரசு இந்த உடனடி நடவடிக்கைகளை எடுக்கும் அதே நேரம், அணைகள், ஏரிகள், கண்மாய்கள், குளங்கள், குட்டைகள் தூர் வாரப்படுவதை, ஆழப்படுத்தப்படுவதை, நீர்த்தேக்கப் பகுதிகள் சூறையாடப்படுவது தடுக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.
இது வரை இல்லாத அளவு விவசாய நெருக்கடி முற்றியுள்ள இன்றைய சூழலில் பழனிச்சாமி அரசு இந்தப் பிரச்சனையில் காட்டும் மெத்தனமும் குற்றமய அலட்சியமும் தமிழக விவசாயிகள் நலன்களை மேலும் பின்னுக்குத் தள்ளிவிடும். ஜ÷ன் - செப்டம்பரில் மட்டும் தமிழ்நாட்டு விவசாயத்துக்கு 130 டிஎம்சி நீர் தேவை என்று சொல்லப்படுகிறது. திருவாரூரில் ஓஎன்ஜிசி குழாய் உடைந்து எண்ணெய் வயலில் கசிந்து ஒரு ஏக்கர் நிலத்தில் விளைந்திருந்த பயிர்கள் நாசமாகிவிட்டன. இதற்கு அந்த விவசாயிக்கு நட்டஈடு தர ஓஎன்ஜிசி ஒப்புக்கொண்டுள்ளதாம். இது வெறும் ஒரு ஏக்கர் நிலப்பரப்பில் ஏற்பட்டது, விவசாயிக்கு நட்டஈடும் தரப்பட்டுவிடும் என்றாலும், அந்த ஒரு ஏக்கர் நிலத்தில் இருந்த பயிர் உறுதி செய்யக் கூடிய உணவுப் பாதுகாப்பை எப்படி ஈடுகட்டுவது? வானம் பொய்த்து காவிரியும் பொய்த்துப் போனால் எத்தனை எத்தனை விவசாயிகளுக்கு நட்டஈடு தருவார்கள்? அந்த விவசாயிகள் தரும் உணவுக்கு என்ன பாதுகாப்பு தருவார்கள்?
காவிரி நீர் உரிமைக்காக தமிழக மக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். நாடாளுமன்றத்திலும் சட்டமன்றத்திலும் இருக்கும் ஆளும்கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு காவிரி நீரில் தமிழ்நாட்டின் உரிமையைப் போராடிப் பெறுவதில் பெரும் கடமை இருக்கிறது. தமிழக மக்களின் வாழ்வா சாவா பிரச்சனையான இந்தப் பிரச்சனையில், ஏற்கனவே மக்கள் அறிந்து வைத்துள்ள அவர்களது உண்மை முகம் மேலும் அம்பலப்படுமா, அல்லது ஓரளவாவது முகத்தைக் காப்பாற்றிக் கொள்ள முயற்சிகள் எதுவும் செய்வார்களா என்று பார்க்க வேண்டும்.
பழனிச்சாமி அரசே, நேரம் மிகக் குறுகி விட்டது. காவிரி நீரில் தமிழக உரிமையைப் பெற, உச்சநீதிமன்றம் சொல்லியுள்ளபடி ஆறு வாரங்களுக்குள் காவிரி மேலாளுமை வாரியம் அமைக்க, தமிழ்நாடு சுடுகாடாக மாறுவதை தடுக்க உடனடியாக ஆனதெல்லாம் செய்தாக வேண்டும். உச்சநீதிமன்றத்தை அணுகுவதற்கு பழனிச்சாமி அரசாங்கம் என்ன தயாரிப்புகள் மேற்கொண்டு வருகிறது என்று மக்களுக்கு உடனுக்குடன் தெரிவிக்க வேண்டும்.

Search