COMMUNIST PARTY OF INDIA (MARXIST - LENINIST) - LIBERATION

COMMUNIST PARTY OF INDIA (MARXIST - LENINIST) - LIBERATION, TAMILNADU

Thursday, January 18, 2018

வைரமுத்துவின் ஆண்டாள்:
தமிழ்நாட்டில் வெறுப்பரசியலுக்கு இடமில்லை

எஸ்.குமாரசாமி

‘தமிழை ஆண்டாள்’.என்ன அற்புதமான தலைப்பு. தமிழுக்கு அமுதென்று பேர். இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்.
தமிழை ஆண்டாள்.அவள் தமிழில் ஆண்டாள்.அவள் தமிழால் ஆண்டாள்.சூடிக்கொடுத்த சுடர் கொடியான அந்த ஆண்டாள், அந்த திருவில்லிபுத்தூர் கோதை நாச்சியார், திருப்பாவையில் 30 பாசுரங்களும் நாச்சியார் திருமொழியில் 143 பாசுரங்களும் எழுதினாள். அந்த மானுடப் பெண், குருதியும் இறைச்சியும் கொண்ட மானுடப் பெண் ஆண்டவனுக்குத் தமிழில் பூமாலையும் பாமாலையும் சூட்டி மகிழ்ந்தாள்.‘தமிழை ஆண்டாள்’ என்ற கண்ணதாசன் கவிதை பாட்டு வரி கொண்டு, ஆண்டாளை வைரமுத்து கொண்டாடி மகிழ்ந்துள்ளார்.
பக்தர்கள், ஆதியும் அந்தமும் இல்லாத முடிவிலியான கடவுளை புரிந்து கொள்ள வேண்டியதில்லை, நம்பிக்கை கொண்டால் போதும் என்கிறார்கள். ஆனால் பகுத்தறிவாளர்கள் ஏன் எதனால் எப்படி என்று கேள்வி மேல் கேள்வி கேட்டு புரிந்து கொள்ளப்பார்க்கிறார்கள். அவர்கள் எதையும் பகுத்து அறிய விரும்புகிறார்கள்.
பல்லுயிரிகள் நிரம்பி உள்ள இவ்வுலகில், பன்மைத்துவம் நிலவுகிற இந்நாட்டில், பல நூறு மலர்கள் மலரட்டும், பல நூறு கருத்துக்கள் முட்டி மோதட்டும் என்பதற்கு அரசியல் அமைப்புச் சட்டமே இடம் தருகிறது. வழிபாட்டுச் சுதந்திரம் உள்ளது. வழிபடாமல் இருக்கும் சுதந்திரமும் உள்ளது. எழுத்து சுதந்திரம், பேச்சு சுதந்திரம், கருத்து சுதந்திரம் உள்ளது. நேர்எதிரான மாற்றுக் கருத்துக்கள்பால் சகிப்புத் தன்மை வேண்டும். வெறுப்பு அரசியலுக்கு இடம் இல்லை.
நீ இல்லாத கடவுளைப் புகழ்கிறாய், அது என் காதுகளுக்கு வெற்று இரைச்சலாய் உள்ளது என்ற பகுத்தறிவாளரோ, உன் மதப் பெருமை பேசுவது உன் கட்சியின் புகழ் பாடுவது, எனக்கு உடன்பாடில்லை, அது என் காதில் காய்ச்சிய ஈயத்தை பாய்ச்சுவது போல் உள்ளது என்று மற்ற எவரும் புண்பட்டுப் போனால், அவர் புண்பட்டுப் போவதற்கு, பண்பட்ட சமூகமோ சட்டத்தின் ஆட்சியோ ஏதும் செய்ய முடியாது. சகிப்புத் தன்மை வேண்டும், வெறுப்பரசியல் கூடாது என்றுதான் பதில் சொல்ல முடியும்.
வைரமுத்து எழுதியதை முழுவதுமாகப் படிக்காத, புரிந்து கொள்ள முயற்சிக்காத ஒரு கூட்டம், சகிப்புத்  தன்மை இல்லாத வெறுப்பரசியல் கூட்டம், வைரமுத்து ஆண்டாளை தாசி என இழிவுபடுத்திவிட்டார் எனக் கூப்பாடு போடுகிறது.
சமயப் பற்றாளர்களும் இறை நம்பிக்கை உடையோரான சாமான்ய சராசரி மனிதர்களும் அரைகுறையாய் திரித்துப் பரப்பப்படுகிற விஷயங்களால், வைரமுத்து ஏன் ஆண்டாளை இழிவுபடுத்த வேண்டும் என வருத்தப்படவும் கோபப்படவும் கூட வாய்ப்புண்டு.
வைரமுத்து தமிழ்க் கவிஞர். பாட்டு எழுதுபவர். ஆண்டாளின் தமிழ் மீது மதிப்புள்ளவர். ஆண்டாளின் பக்தி மொழியும் தமிழாகவே இருந்துள்ளது. ஆண்டாள் என்ற மானுடப் பெண்ணை பகுத்து அறிய வைரமுத்து முயன்றுள்ளார். வைரமுத்து எழுதுகிறார்: ‘ஆண்டாளின் தமிழ், நூற்றாண்டுகளின் தாகத்திற்கு அமிர்தமாகிறது. ‘எண்ணம் திண்ணியதாயின் எண்ணியதெய்துவாய்’ என்ற நிபந்தனையற்ற நம்பிக்கையின் நிதர்சனமாக ஆண்டாளைப் புரிந்து கொள்ளலாம்’.
‘கடவுள் என்பது வழிபடு பொருள், அது எட்டமுடியாதது. எல்லார்க்கும் வாய்க்காதது. அந்த எட்ட முடியாத பொருளை எட்ட முடியும், கணவனாகவே கைத்தலம் பற்ற முடியும், இடையறாது நினைந்து, காதலுற்றுக் கனிவாவதொன்றே கடவுளை எட்டும் வழி என்று குறியீட்டு மொழியில் சொன்ன கோட்பாடுதான் ஆண்டாள் என்று எண்ணத் தோன்றுகிறது’.
இவற்றில் எங்கே வந்தது பிரச்சனை? ஆண்டாள் வாழ்க்கையின் அவளது மானுட வாழ்க்கையின் இறுதிப் பகுதியை தன் தமிழால் விவரிக்கிறார். ‘பல்லியம் முழங்க, மறையவர் கூடி வாழ்த்தொலி வழங்க, போகும் வழியெங்கும் பூச்சிதற, நாற்படையும் ஊர்ந்து வர, பேரங்கம் முழுக்க அழகுற்ற பெண்ணாய் சீரங்கம் வந்து சேருகிறாள். திருவரங்கக் கோவில் புகுந்து வளர் தந்தையை வணங்கி வழிபட்டு, காதல் நடை நடந்து, ஆதிசேடன் கடந்து, திருமால் திருவடி வருடி, அவனோடு கலந்தாள். அய்க்கியமுற்றாள்’. இதில் பக்தர்கள் புண்பட என்ன இருக்கிறது?
ஆண்டாள் வாழ்வில் நிகழ்ந்த சில மீறல்களை வைரமுத்து சுட்டிக் காட்டுகிறார். இவை வைணவ பக்தர்களே ஒப்புக்கொள்ளும் விஷயங்களே. ஆண்டாள் விடுதலைப் பாட்டு பாடிய ஒரு கலகக்காரி என்பது காணத்தக்கதாகும். ஆண்டவனுக்கான மாலையை, மகள் தானே சூடிக் கொள்ள பெரியாழ்வார் பெரும் கவலை கொண்டார். ஆண்டவன் அவர் கனவில் தோன்றி ‘அவள் சூடிக் கொடுத்த மாலையைச் சூடுவதே சுகம்’ என்றானாம். ஆண்டாளின் மீறல் ஆண்டவனாலேயே ஏற்கப்படுகிறது. ஆண்டவனுக்கு அது சுகமாக இருக்கிறது.
எட்டாம் நூற்றாண்டு ஆண்டாள், பேசாப் பொருளை பேசத் துணிய வேண்டும் என்று நினைத்தவள் அல்ல. அவள் இருபதாம், இருபத்தொன்றாம் நூற்றாண்டு பெண்ணியவாதியோ, மார்க்சியவாதியோ, பகுத்தறிவுவாதியோ அல்ல.அவள் இயற்கையோடும் இறையோடும் இயைந்து வாழ்ந்தவள். அவள் இயல்பானவள். அவள் நினைத்ததை தமிழில் பாடினாள். அது திருப்பாவை ஆனது. அது நாச்சியார் திருமொழி ஆனது.
அவள், அல்குல், தடமுலைகள், கொங்கை என தன் பாடல் வரிகளில் இயல்பாக எழுதினாள். கண்ணனின் வாய்ச் சுவை அறிய விழைந்தாள். மானுடனோடு உடல் சேரும் திருமணம் முடியாது என உறுதிபட மறுத்தாள். ஆணோடு திருமணம் முடியாது என எட்டாம் நூற்றாண்டிலேயே மறுத்தவளுக்கு, மறுப்பை ஏற்க வைக்க முடியாததால் ஆண்டவனோடுதான் திருமணம் என்று சொல்ல நேர்ந்தது என்றும் ஆண்டாள் வாழ சமூகம் அனுமதிக்கவில்லை என்றும் கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன.
திருமணமாகாத எட்டாம் நூற்றாண்டுப் பெண்ணின் இந்தக் கவிதை மொழியின் சொற்களுக்கு எப்படி வந்தது சுதந்திரம் என வைரமுத்து வியப்பதில் என்ன தவறு? இன்றைய  சனாதனவாதிகள், இந்துத்துவா, சாதிய சக்திகள் ஆண்டாள் இப்போது வாழ்ந்து இந்தக் கவிதை மொழியில் திருப்பாவை, நாச்சியார் திருமொழி எழுதினால், ஆபாசமாகப் பேசி கடவுளைப் பழித்து பக்தர்கள் மனதைப் புண்படுத்தியதாக ஆண்டாள் மீதே வழக்கு போடுவார்கள். ஆண்டாள் மன்னிப்பு கேட்டாலும் விட மாட்டேன் என்பார்கள்.
என் உடலும் உயிரும் ஆண்டவனுக்கே என்று சொல்லும்போது அவள் இயல்பாக இயற்கையில் அமைந்த உடல் இச்சைகள் உடல் உறுப்புக்கள் பற்றிப் பேசுகிறாள். இது எந்த விதத்தில் ஆண்டாளின் பெருமையைக் குறைத்தது? மார்கழி மாதம் முழுவதும் 11 ஆணாழ்வார்களும் காணாமல் போய் ஒரே பெண் ஆழ்வாரான ஆண்டாள் மட்டுமே நூறு நூறாண்டாய் நீடித்து நிற்கிறாள்.
ஆண்டாளின் மரபு மீறல் பற்றிப் பேசும் போது, ஆய்வாளர் சிலர், அன்றிருந்த சமூக அமைப்பில் ஏற்புடைத்தன்மை பெற்றிருந்த தால், அவள் உடலும் உயிரும் ஆண்டவனுக்கு என ஒப்படைக்கப்பட்டவளே எனப் பேசியதை, வைரமுத்து மேற்கோள் காட்டுகிறார். அதன் பிறகு மிகவும் கவனமாகவும் பொறுப்பாகவும் எழுதுகிறார்: ‘பக்தர்கள் இதை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். ஆனால் ஆணாதிக்க எதிர்ப்பாளர்களும் சமய சமூக மறுப்பாளர்களும் இதை எண்ணிப் பார்ப்பார்கள்’.
பாசிசம் சாண் தந்தால் முழம் கேட்கும். அது, முதலாளித்துவத்தைப் போல, தன்னைப் போலவே அனைத்தையும் கட்டமைக்கப் பார்க்கும். நிகழ்ச்சிநிரலை அது தீர்மானிக்கும்.ராகுல் காந்தியை கோயில் கோயிலாக ஓட வைக்கும். மம்தா பானர்ஜியை பார்ப்பனர் மாநாடு நடத்த வைக்கும். நல்ல இந்துவாகத் தோற்றம் தரச் சொல்லும்.
விஸ்வ இந்து பரிஷத் மற்றும் பாமகவின் கருத்துக்களை நாம் கூடுதல் கவனத்துடன் காண வேண்டும். இது 1962 அல்ல, 2018. இந்துக்களின் மத உணர்வுகளைக் கொச்சைப்படுத்துவது அதிகரித்து வருகிறது, இந்துக்களின் உணர்வுகளைக் காயப்படுத்துவதை திராவிட இயக்கச் சார்புடையவர்கள் கைவிட வேண்டும், இது 1962 அல்ல இந்துக்கள் பதிலடி தருவார்கள் என்று விஸ்வ இந்து பரிஷத் மாநில இளைஞர் அணிச் செயலாளர் சரவணா கார்த்திக் சொல்கிறார்.
அரசியலமைப்புச் சட்டம் கருத்துச் சுதந்திரம் வழங்கி உள்ளது என்பது சரிதான் என்றாலும், (சாதி) இந்து உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து அடக்கி வாசிக்க வேண்டும் என எச்சரிக்கிறார் ராமதாஸ்.
திமுக தலைவர்களில் ஒருவரான கனிமொழி, மாநிலங்களவை உறுப்பினர் என்ற வகையில் ஒரு குழுவின் பகுதியாக துணைக் குடியரசுத் தலைவரோடு திருப்பதி சென்றார். அங்கு சிறப்பு தரிசனத்துக்கு கூடுதல் பணம் தந்தவர்களுக்கு உடனடி தரிசனமும் அப்படித் தராதவர்களுக்கு 10 மணி நேரம், 20 மணி நேரம் தாமதமான தரிசனமும் கிடைத்ததை கண்டார். கடவுள் முன் அனைவரும் சமம் என்பது நடக்கவில்லையே என்று கேள்வி எழுப்பினார். கோவில் உண்டிக்கு ஆயுதம் தாங்கிய காவலர்கள் பாதுகாப்பு இருக்கும்போது, ஆண்டவன் கோவிலில் ஆண்டவன் உண்டியின் பாதுகாப்பு பற்றியே நம்பிக்கை இல்லாதபோது, தாம் எப்படி ஆண்டவனை நம்புவது என்று தன்னிடம் கேள்வி கேட்ட சகஉறுப்பினரிடம் தெரிவித்ததாகச் சொன்னார். இந்த அறிவுபூர்வமான, தர்க்கபூர்வமான கருத்துகள், பக்தர்களின் மனதை புண்படுத்திவிட்டதாக சங்பரிவார் கூட்டத்தினர் ஆந்திராவில் கனிமொழி மீது வழக்கு போட்டுள்ளனர்.
வேதா.டி.ஸ்ரீதரன் என்ற வில்லிபுத்தூர்க்காரர் 14.01.2018 தேதிய தமிழ் தி இந்துவில் ஆண்டாளை, குழந்தை மேதை, வாயாடி, அடாவடிப் பெண், பிடிவாதக்காரி, திருட்டுப் பிள்ளை, ஒப்பாரி வைப்பவள், ராட்சசி, தொண்டு கிழவி, பணிவானவள், அப்பாவி, மக்கு, திமிரானவள், கவி, ஆழ்வார் என பலவாறு அன்புடன் அழைக்கிறார். இப்படி எந்தெந்த கண்ணோட்டத்தில் பார்த்தாலும் அவரவர் மனநிலைக்கு ஏற்றவாறு வர்ணஜாலங்களைக் காட்டுவது ஆண்டாளின் இயல்பு என்கிறார். ஆண்டாள், வைரமுத்துவுக்கு, பகுத்தறிவாளர்களுக்கு, பக்தர்களுக்கு வேறு வேறு வர்ணஜாலம் காட்டியுள்ளார்.அதனை அவரவர் கண்ணோட்டப்படி வெளிப்படுத்துவதை வெறுப்பரசியல் தடுக்க முயற்சி செய்கிறது. இதனை நாம் அனுமதிக்கக் கூடாது.
பெரியார், கடவுள் மறுப்பு, மூடநம்பிக்கை எதிர்ப்பு எல்லாவற்றையும் மூட்டை கட்டிக் கடலில் எறி, இந்துத்துவாவுக்கு அடங்கி நட என, மத்தியில் தாங்களே ஆள்கிறோம் மாநில அரசு தமது எடுபிடி என்பதால், இந்துத்துவ சக்திகள் தமிழ்நாட்டில் சிறு கும்பலாக இருந்தாலும் கூப்பாடு போடுகிறார்கள். சசிகுமார் கொலையுண்டபோது, கோவையையும் திருப்பூரையும் முடக்கிப் போட்டார்கள்.பெருமாள் முருகனை எழுதாதே என்றார்கள். வைர முத்துவை, கனிமொழியை மிரட்டுகிறார்கள். கோவிந்த் பன்சாரே, நரேந்திர தபோல்கர், கல்புர்கி, கவுரி லங்கேஷ் ஆகியோரைக் கொன்ற கூட்டம், தமிழ்நாட்டில் வளர்ந்து விடாமல் கருத்துப் போர் புரிவதும் களம் காண்பதும், கருத்து சுதந்திரத்தின் மீது, ஜன நாயகத்தின் மீது நம்பிக்கை உள்ள அனைவரின் கடமையாகும்.

Search