COMMUNIST PARTY OF INDIA (MARXIST - LENINIST) - LIBERATION

COMMUNIST PARTY OF INDIA (MARXIST - LENINIST) - LIBERATION, TAMILNADU

Thursday, January 18, 2018

ஒக்கி புயலால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களின் 
துயர் தீர்க்க உடனடி நடவடிக்கை வேண்டும்

ஜி.ரமேஷ்

கன்னியாகுமரி மீனவர் குடும்பங்கள் சின்னாபின்னமாகி இருக்கின்றன.
தங்களுக்காக உழைப்பவனை, படகுகளை, வலைகளை, மீன்பிடி கருவிகளை இழந்து பரிதவிக்கின்றன. இவர்கள் ஊரை விட்டு வெளியேறினால், 193 கார்ப்பரேட் கப்பல்கள் இடையூறின்றி மீன் பிடிக்க முடியும், அதானியின் சரக்குப் பெட்டகத் துறைமுகத்திற்கு எதிர்ப்புகள் குறையும் என்பதால்தான் மோடி- எடப்பாடி அரசுகள் காணாமல் போன மீனவர்களைக் கண்டுபிடிக்காமல் இருக்கின்றன என்று சமூக ஆர்வலர்கள் சொல்கிறார்கள்.
ஆழ்கடலில் மீன் பிடிப்பவர்கள் ஆபத்துக் காலத்தில் மீன் வளத்துறைக்குத் தெரிவிக்க, டாட் (ஈண்ள்ற்ழ்ங்ள்ள் அப்ங்ழ்ற் பழ்ஹய்ள்ம்ண்ற்ற்ங்ழ்) என்ற கருவியை ரூ.500 வாங்கிக் கொண்டு மீன் வளத்துறை கொடுத்துள்ளது. அதில் உள்ள பொத்தானை அழுத்தினால், மீன் வளத்துறைக்கு செய்திபோய் உடனே வந்து காப்பாற்றும் என்று சொல்லப்பட்டது. ஆனால், இந்தப் புயலின் போது 125 விசைப் படகில் இருந்த மீனவர்கள் டாட் அழுத்தி தாங்கள் ஆபத்தில் இருப்பதாகத் தெரிவித்தும் எந்தப் பயனும் இல்லை.
சட்டமன்றத்தில் ஆளுநர் உரையில், ஒக்கி புயல் பாதிப்புக்கு உடனடி நடவடிக்கை எடுத்ததற்காக மத்திய அரசுக்கு நன்றி தெரிவிக்கப்படுகிறது. பிரதமரிடம் தமிழக முதல்வர் ஒக்கி புயல் பாதிப்பை சரிசெய்ய நீண்ட கால நிவாரணத்திற்காக ரூ.13,520 கோடியும் உடனடி நிவாரணத்திற்காக ரூ.747 கோடியும் கேட்டார். ஆனால், ஆளுநர் உரையில் ரூ.4,854 கோடி நீண்ட காலத்திற்கும் உடனடியாக ரூ.401 கோடி தமிழக அரசு மத்திய அரசிடம் கேட்டுள்ளது என வாசிக்கிறார். இந்தக் குளறுபடிக்கு முதலமைச்சர் பழனிச்சாமியிடம் முறையான பதில் இல்லை.
புயலுக்குப் பின், ஆழ்கடலில் 150 கடல் மைல்களுக்கு அப்பால் தத்தளித்துக் கொண்டிருந்தவர்களைக் காப்பாற்ற இந்திய கப்பற்படை அக்கறை காட்டவில்லை. 50 கடல் மைலுக்குள் சுற்றி வந்தது. ஆழ்கடலில் மீன் பிடித்தவர்கள், வாரக்கணக்கில் சோறு தண்ணீர் இல்லாமல் தத்தளித்து நீந்தி, தங்கள் படகுகளின் மிச்ச சொச்சங்களை பிடித்துக் கொண்டு கச்சத்தீவில் கரை ஒதுங்கி மயங்கிக் கிடந்த எங்களை தூக்கிக் கொண்டு வந்து, தாங்கள்தான் காப்பாற்றினோம் என்று சொல்லிக் கொண்டது இந்திய கப்பல் படை என்று சொல்கிறார்கள் தப்பி வந்த மீனவர்கள். மத்திய பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன், தமிழக மீனவர்கள் 453 பேர், கேரளாவைச் சேர்ந்த 362 பேர், லட்சத்தீவு மற்றும் மினிகாய் தீவுவைச் சேர்ந்தவர்கள் 30 பேர் என மொத்தம் 845 பேரை இந்திய கப்பற்படை, இந்திய கடலோரக் காவல்படை, விமானப்படை மீட்டதாகச் சொன்னார்.
கடலுக்குள் படகுகளுடன் குழுவாக காணாமல் போனவர்களை தேடிச் சென்று ஆழ்கடலுக்குள் தவித்துக் கொண்டிருப்பவர்களை மீனவர்களே மீட்டு வந்துள்ளார்கள். வள்ளவிளையில் மட்டும் 50க்கும் மேற்பட்டவர்கள் மீட்கப்பட்டுள்ளார்கள். காணாமல் போன மீனவர்கள் எண்ணிக்கை என்ன என்று தமிழக அரசால் சொல்ல முடியவில்லை. சட்டமன்றத்தில், கடைசி மீனவரை மீட்கும் வரை தேடும் பணி தொடரும் என்று ஆளுநர் சொல்கிறார். மத்திய பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன், மீனவர்களைத் தேடும் பணி முடிந்தது என்கிறார். உண்மையில், மத்திய அரசும், மாநில அரசும் காணாமல் போன மீனவர்களைத் தேடவில்லை. மீனவ மக்கள்தான் தங்கள் சொந்த முயற்சியில் தேடிக் கொண்டிருக்கிறார்கள். இப்படி மீட்கப்பட்டவர்கள் சொல்கிற தகவல்கள் மூலமும் கடலில் கண்டெடுக்கப்படும் அடையாள அட்டைகள் மற்றும் செல்போன்கள், பைகள் அதில் உள்ள விவரங்கள் மூலமும்தான் இறந்து போனவர்கள் யார் யார் என்று தெரிந்து கொள்ள முடிகிறது. இறந்தவர்கள், காணாமல் போனவர்கள் பட்டியலில் கன்னியாகுமரி மீனவர்கள் மட்டுமின்றி, நாகை, வேதாரண்யம் பகுதி மீனவர்களும் மீனவர் அல்லாதவர்களும் இருக்கிறார்கள்.
விவசாயிகளும் ரப்பர் தோட்டத் தொழிலாளர்களும் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளார்கள். பயிர்கள், தோட்டங்கள் அழிந்து போய்விட்டன. ரப்பர் தோட்டங்களில் உள்ள ரப்பர் மரங்கள் அடியோடு சாய்ந்து விட்டன. இதனால் ரப்பர் மரங்களைப் புதிதாக நட்டு ரப்பர் தோட்டங்களை உருவாக்க அரசு ரப்பர் தோட்ட நிர்வாகங்கள் முயற்சிக்காமல், அரசு ரப்பர் தோட்டங்களில் வேலை பார்த்த தொழிலாளர்களை அவர்கள் குடியிருப்புகளுக்கு தொடர்பே இல்லாத வேறு தோட்டங்களுக்கு மாற்றம் செய்கின்றன. இதன் மூலம், ஏற்கனவே குறைந்த கூலியில் வேலை பார்க்கும் தொழிலாளர்களை மேலும் சிரமப்படுத்துகிறது அரசு.
சக மீனவர் கண்முன்னே இறந்து கடலில் மூழ்கியவர்கள், உடல் கண்டுபிடிக்கப்படாதவர்கள், நாளது தேதி வரை திரும்பாதவர்கள் இவர்களை இறந்தவர்களாக அறிவித்து உடனடியாக இறப்புச் சான்றும் நிவாரணமும் வீட்டில் ஒருவருக்கு அரசு வேலையும் கொடுக்கப்பட வேண்டும். ஆழ்கடல் மீன்பிடிக்கச் செல்பவர்களுக்கு அவர்கள் கரையில் இருப்பவர்களைத் தொடர்பு கொள்ள சாட்டிலைட் கருவி வழங்கப்பட வேண்டும். மீனவர்களுக்கு என தனி மத்திய அமைச்சகம் உருவாக்கப்பட வேண்டும்.

Search