COMMUNIST PARTY OF INDIA (MARXIST - LENINIST) - LIBERATION

COMMUNIST PARTY OF INDIA (MARXIST - LENINIST) - LIBERATION, TAMILNADU

Thursday, January 18, 2018

உடனடி முத்தலாக் மசோதாவில் பாஜக காட்டும் அவசரம்
இசுலாமியர்களை அச்சுறுத்தும் நோக்கம் கொண்டது

தலாக் என்று மூன்று முறை சொல்லி விவாகரத்து செய்யும் நடைமுறையை, குற்றமாக்கும் இசுலாமிய பெண்கள் (திருமண உரிமைகள் பாதுகாப்பு) மசோதா, 2017 மக்களவையில் நிறைவேற்றப்பட்டுவிட்டது.
மசோதாவுக்கு நாடெங்கும் எதிர்ப்பு எழுந்த நிலையில் மாநிலங்களவையில் அது நிறைவேற்றப்படவில்லை. உடனடி முத்தலாக்கை குற்றமாக்கும் சட்டத்தை அவசரச் சட்டமாகக் கொண்டு வர மத்திய பாஜக அரசு திட்டமிடுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
உடனடி முத்தலாக் சொல்வது தொடர்பாக சம்பந்தப்பட்ட பெண் அல்லாமல் மூன்றாவது நபர் புகார் அளிக்கலாம் என்று மசோதா சொல்லும்போது, பொய் புகார்களுக்கு வழிவகுத்து இசுலாமியர்களை வேட்டையாடும் உள்நோக்கம் கொண்டதாகவே இருக்கிறது. உடனடி முத்தலாக் சொல்லி விவாகரத்து செய்வதற்கு அந்த இசுலாமிய ஆணுக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை என்றால், அந்தக் கணவன் சிறை சென்று விடுவதே விவாகரத்துக்கு வழிவகுத்து சட்டத்தின் நோக்கத்துக்கு எதிரானதாக அமைந்துவிடுகிறது. இந்தச் சூழலில் குழந்தைகள் யாரிடம் இருப்பார்கள் என்பது பற்றி மசோதா பேசுவதும் சாரத்தில் விவாகரத்து என்பதாகவே அமைந்து சட்டத்தின் நோக்கத்துக்கு எதிரானதாக உள்ளது. உடனடி முத்தலாக் தொடர்பாக புகார் எழுப்பும் இசுலாமிய பெண், அந்தக் கணவன் தனது திருமண உறவு பொறுப்புகளை முறையாக நிறைவேற்ற வேண்டும் என்ற நோக்கம் கொண்டிருக்கும்போது, மசோதா அதற்கு நேரெதிரான விளைவுகளை உருவாக்குவதாக, அந்த இசுலாமியப் பெண்ணின் பாதுகாப்பை மேலும் கேள்விக்குள்ளாக்குவதாக, அச்சுறுத்துவதாகவே உள்ளது.
நாட்டு மக்கள் மிகவும் எளிமையான கேள்விகள் எழுப்புகிறார்கள். உடனடி முத்தலாக் செல்லாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுவிட்ட பிறகு, வேறு சட்டம் கொண்டு வரும் அவசியம் என்ன? இசுலாமிய பெண்கள் உரிமைகளைப் பாதுகாப்பதற்காகவே இந்தச் சட்டம் இயற்றப்படுவதாக மோடி அரசாங்கம் சொல்வது உண்மையானால், நாடாளுமன்றத்தில் சட்டமன்றங்களில் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு தரும் மசோதா ஏன் பல ஆண்டுகளாக நிறைவேற்றப்படாமல் இருக்கிறது? இசுலாமிய பெண்கள் உரிமையைப் பாதுகாப்பதற்காக சட்டம் என்று மோடி அரசாங்கம் சொல்லுமானால், முசாபர்நகரில் இந்துத்துவ வெறி பிடித்த காலிகளால் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்ட இசுலாமிய பெண்களுக்கு நீதி வழங்க ஏன் முயற்சி செய்யவில்லை? இசுலாமிய பெண்களின் பிணங்களை தோண்டி எடுத்து வன்புணர்வு செய்ய வேண்டும் என்று சங் பரிவார் தலைவர்கள் வெளிப்படையாக பேசும்போது, யோகி உள்ளிட்ட பாஜக தலைவர்கள் ஏன் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை? மத்திய அரசு ஏன் அவர்கள் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தை பிரயோகிக்கவில்லை?பெண்கள் உரிமைகளைப் பாதுகாப்பது நோக்கம் என்றால் எல்லா தனிச்சட்டங்களிலும் பெண்கள் உரிமைகளை முடக்கும் அம்சங்களில் திருத்தங்கள் கொண்டு வருவது பற்றி பேசாதது ஏன்? இசுலாத்துக்கு மாறிவிட்ட ஹடியாவுக்கு என்ன நீதி? பெண்கள் உரிமைகளுக்கு எதிராக தொடர்ந்து பேசி வரும் பாஜக சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், பாஜக, ஆர்எஸ்எஸ், சங்பரிவார் தலைவர்கள் ஆகியோரை கண்டித்து பிரதமர் மோடி இது வரை ஒரு வார்த்தை கூட பேசாதது ஏன்?
மோடி அரசாங்கம் முதலில் இந்தக் கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டும். பெண்கள் உரிமைகளுக்கு எதிராக, குறிப்பாக இசுலாமிய பெண்களை வேட்டையாடும் சங்பரிவார் காலிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். முத்தலாக் செல்லாது என்று உச்சநீதிமன்றம் சொன்னது இந்தப் பிரச்சனையில் தற்போதைய கட்டத்துக்குப் போதுமானது.

Search