COMMUNIST PARTY OF INDIA (MARXIST - LENINIST) - LIBERATION

COMMUNIST PARTY OF INDIA (MARXIST - LENINIST) - LIBERATION, TAMILNADU

Monday, January 1, 2018

குஜராத் தேர்தல் முடிவுகள் 2017

பாஜக வெற்றி பெற்றிருந்தாலும் அதன் வலுவான இடங்களில் அது சரிவை சந்திருக்கிறது

2017 குஜராத் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் பாஜகவின் வெற்றியை விட, 2012 குஜராத் சட்டமன்ற தேர்தல் மட்டுமின்றி, 2014 மக்களவைத் தேர்தலையும் விட பாஜகவின் செல்வாக்கில் குறிப்பிடத்தக்க சரிவு ஏற்பட்டிருப்பதை குறிப்பாக காட்டுவதாக அமைந்துள்ளது.

பாஜகவிடமும் அதன் தலைமைக் குழுவான மோடி, அமித் ஷாவிடமும் அதிகரித்து வரும் விரக்தியை தேர்தல் பிரச்சாரத்தில் பார்க்க முடிந்தது. நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத் தொடர் தள்ளி வைக்கப்பட்டது.
நாட்டின் பல்வேறு பிரச்சனைகளை ஒதுக்கித் தள்ளிவிட்டு மொத்த மத்திய அமைச்சரவையும் குஜராத்தில் முகாமிட்டிருந்தது. 2014ல் குஜராத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலிலும், மற்ற மாநிலத் தேர்தல்களிலும் முக்கிய கருப்பொருளாக இருந்த குஜராத் மாதிரி வளர்ச்சி என்பது பற்றி மோடி அமைதி காத்துவிட்டார். பதிலாக கடல் விமானத்தில் பறப்பது என்ற நாடக முயற்சி செய்து பின்பு கடைசியாக வெளிப்படையான, வக்கிரமான வகுப்புவாதப் பிளவு பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
பாஜகவுக்கு சவால் விடுத்த மூன்று இளம் தலைவர்களான ஹர்திக், அல்பேஷ், ஜிக்னேஷ் ஆகியோரின் பெயர்களின் முதல் எழுத்துக்களைக் கொண்டு ஹஜ் என முஸ்லீம்களைக் குறிக்கிற வண்ணம் பெயரிட்டு, பாஜகவின் வாய்வீச்சுக்காரர்களோடு பிரதமரும் தானே முன்னின்று பிரச்சாரத்தை வழிநடத்தினார். காங்கிரசும் அதன் தலைவர்களும் ஒவுரங்கசீப் மற்றும் கில்ஜியோடு ஒப்பீடு செய்யப்பட்டார்கள். ராம  ஜென்மபூமி விவகாரம் முழுவதுமாக பயன்படுத்திக் கொள்ளப்பட்டது. இறுதியாக மிகவும் விரக்தியாக காணப்பட்ட பிரதமர், தனக்கு முன்னால் ஆட்சியில் இருந்தவர்கள் பாகிஸ்தானோடு சேர்ந்து சதி செய்து அகமது படேல் என்ற இஸ்லாமியரை குஜராத் முதல்வராக ஆக்க முயற்சிக்கிறார்கள் என்ற கட்டுக்கதையை சொல்ல நேர்ந்தது. பிறகு காங்கிரஸ் தலைவர் மணிசங்கர் அய்யரின் வாய் தவறிய பேச்சைப் பயன்படுத்தி தன்னைப் பாதிக்கப்பட்டவராக காட்டிக் கொண்டு, தானே பிரச்சார இயக்கத்தின் மய்யமாகவும் மோடி இருந்து  கொண்டார்.
குஜராத் தேர்தலில் வாக்குப் பதிவு எந்திரங்கள் சரியாக வேலை செய்யாததும், கூடவே கிட்டத்தட்ட 16 இடங்களில் வாக்கு வித்தியாசம் 200ல் இருந்து 2000 வாக்குகளுக்குள் இருந்ததும் வாக்குப் பதிவு எந்திரங்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளனவே என்ற கேள்வியை எழுப்பியது. தேர்தல்கள் சுதந்திரமாகவும் நியாயமாகவும் நடைபெறுவதை மட்டுமின்றி, அப்படித்தான் நடைபெற்றது என்று உணரும்படி செய்வதும் தேர்தல் ஆணையத்தின் வேலை என்பதை அது உணர வேண்டும். சந்தேகங்கள் எல்லாவற்றுக்கும் பதில் சொல்ல வேண்டிய பொறுப்பு தேர்தல் ஆணையத்துக்கு உண்டு.
பாஜக தடைகளைத் தாண்டி, எல்லா தந்திரங்களையும் கையாண்டாலும், எல்லா வகையிலும் அதன் ஆகிருதி குறைந்திருக்கிறது. குஜராத்தில் எதிர்க்கட்சி புத்துயிர்ப்பு பெற்றிருக்கிறது. பாஜகவின் அய்ந்து அமைச்சர்களும் காங்கிரசிலிருந்து பாஜகவில் இணைந்தவர்களும் மட்டுமின்றி மோடியின் சொந்த ஊரான பட்நகர் தொகுதியிலேயே பாஜக தோற்கடிக்கப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
99 இடங்களோடு பாஜகவின் எண்ணிக்கை இரட்டை இலக்கமாக குறைக்கப்பட்டுள்ளது. அறுதிப் பெரும்பான்மையை விட சற்றுக் கூடுதல், ஆனால் 2012ல் பெற்ற 115 இடங்களிலிருந்து மிகவும் குறைந்த இடங்கள் என பாஜக பெற்றிருக்கிறது. கடந்த தேர்தலில் பெற்ற 115 இடங்களைவிட ஒன்று அல்லது இரண்டு இடங்கள் குறைவாகப் பெற்றாலும் அது கேள்விகளை எழுப்பும் என்று தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு முன்பே முதலமைச்சராக இருந்த ரூபானி சொன்னார்.
2014 நாடாளுமன்றத் தேர்தலோடு பாஜகவின் செயல்பாட்டை ஒப்பிட்டால் பாஜகவின் செல்வாக்கு வெகுவாக அரித்துப் போயிருப்பது தெரியும். உத்தரபிரதேசத்தில் நடந்ததுபோல, 2014 மக்களவைத் தேர்தல் போல பாஜகவின் செயல்பாடு இருந்திருக்குமென்றால் மொத்தமுள்ள 182 தொகுதிகளில் அது 162 இடங்களை பிடித்திருக்க வேண்டும். 150 இடங்கள் பிடித்து எதிர்க்கட்சியை துடைத்தெறிவோம் என்ற அமித் ஷாவின் முழக்கம், வெற்று வாய்வீச்சாகப் போய்விட்டது.
குஜராத் வாக்காளர்கள் மத்தியில், அதிலும் குறிப்பாக கிராமப்புற வாக்காளர் மத்தியில் விவசாய நெருக்கடியும் வேலையில்லாத் திண்டாட்டமும் முக்கியப் பிரச்சனைகளாக பிரதிபலித்திருக்கின்றன என்பது தெளிவாகிறது. இந்த பிரச்சனைகளும், கரிசனங்களும் குஜராத் மாதிரி என்பதை பொய்யாக்கி, உணர்ச்சியெழுப்பும் பிரித்தாளும் வெறுப்புப் பேச்சைத் தாண்டி நின்று, காங்கிரசும் அதன் தோழமை கட்சிகளும் 80 இடங்கள் பெறுவதில் போய் முடிந்தது.
மக்களின் வாழ்வாதாரம், பொருளாதாரம் ஆகிய பிரச்சனைகளில் காங்கிரசுக்கு உற்சாகமூட்டும் ஆதரவு இருந்த போதிலும், அது வெளிப்படையாக கோவில் பிரச்சனையில் தலையிடுவது என்ற கொள்கையை தேர்ந்தெடுத்ததோடு வகுப்புவாத வன்முறைப் பிரச்சனையில் அமைதி காத்தது. ஆனால் ஹர்திக் படேலும், ஜிக்னேஷ் மேவானியும் மோடி மற்றும் பாஜகவின் வகுப்புவாத பிளவு அரசியலை அம்பலப்படுத்துவதில் இருந்து தவறாததால் கணிசமான ஆதரவும் பெற்றனர்.
ஹிமாச்சல பிரதேச தேர்தல் முடிவுகள் கிட்டத்தட்ட எதிர்பார்த்தபடிதான் அமைந்துள்ளது. காங்கிரஸ் அரசாங்கத்தின் ஊழல் தோற்றம், பாஜக வசதியாக வெற்றியடைய உதவியுள்ளது. இங்கேயும்  முதல்வர் பதவிக்கான பாஜக வேட்பாளர் தோல்வியுற்றிருக்கிறார்.
குஜராத்தின் வட்கமில் ஜிக்னேஷ் மேவானி பெற்ற வெற்றியும் ஹிமாச்சல பிரதேசத்தில் இகக (மா) பெற்ற வெற்றியும் மக்கள் இயக்கங்களின் குரல் இரண்டு சட்டமன்றங்களிலும் ஒலிக்க உதவும் என்ற நம்பிக்கையை எற்படுத்தியிருக்கிறது.
2019 மக்களவைத் தேர்தல்களில் காங்கிரஸ் இல்லாத, எதிரணி இல்லாத அரசியல் வெளி என்ற பாஜகவின் வாய்வீச்சை பொய்யாக்கி, தோற்கடிக்கப்படவே முடியாதவர்கள் என்ற பாஜகவின் தோற்றத்தை மோசமாக அசைத்து எதிர்கட்சிகள் புத்துயிர்ப்பு பெற குஜராத் தேர்தல் உண்மையிலேயே வழி செய்திருக்கிறது. இது பிளவு அரசியலுக்கு ஒரு எல்லை உண்டு என்பதையும், அது அரித்துப் போகக் கூடும் என்பதையும் உறுதிபடுத்தி பாசிச எதிர்ப்பு மக்கள் இயக்கங்களின் நம்பிக்கையை உயர்த்தியிருக்கிறது. மோடியின் வளர்ச்சி என்ற மாயை பலத்த அடி வாங்கியதோடு சாமான்ய மக்களின் வாழ்வாதாரம், நலன் தேர்தல்களில் வலுவாக பிரதிபலித்திருக்கிறது. 

Search