COMMUNIST PARTY OF INDIA (MARXIST - LENINIST) - LIBERATION

COMMUNIST PARTY OF INDIA (MARXIST - LENINIST) - LIBERATION, TAMILNADU

Friday, December 1, 2017

தமிழக விவசாயத்தை அழிக்கிற நீராதாரத்தை அழிக்கிற
மணல் குவாரிகள் வேண்டாம்! 

ஜெயலலிதா இறந்து ஓராண்டு கழித்து ஒரு வழியாக ஆர்கே நகர் இடைத்தேர்தல் நடக்கவுள்ளது.
எதற்காக முந்தைய இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டது, அந்தச் சூழல் சரி செய்யப்பட்டுவிட்டதா, ரூ.89 கோடி பணம் பட்டுவாடா விவரங்கள், நான்கு அமைச்சர்கள் பெயர்கள் இருந்த பட்டியல் என்னாயிற்று போன்ற அடிப்படையான ஜனநாயக கேள்விகள் எவற்றுக்கும் எந்த பதிலும் கிடைக்காமல், எந்தத் தீர்வும் எட்டப்படாமல் மீண்டும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுவிட்டது. அந்த இடைத்தேர்தல் ரத்து செய்யப்படுவதற்குக் காரணமானவர்களில் ஒரு பிரிவினருக்கு இன்று இரட்டை இலை சின்னம் கிடைத்துள்ளது. அஇஅதிமுக அமைச்சர்களும் சட்டமன்ற உறுப்பினர்களும் மோடி மீது வெளிப்படையாக வைத்த நம்பிக்கை வீண் போகவில்லை. ஆனால் தேர்தல் ஆணையம் என்ற ஒன்றுதான் இயங்கித்தான் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதாக நமக்குச் சொல்லப்படுகிறது.
இரட்டை இலை கிடைப்பதில் வெற்றி பெற்றுவிட்டதால் இடைத்தேர்தலிலேயே வெற்றி பெற்றுவிட்டதாக மகிழ்ச்சியில் திளைத்திருக்கிறார்கள் முதலமைச்சரும் துணைமுதலமைச்சரும். முதலமைச்சர் தொகுதி என்ற முன்னுரிமை இருந்தும் ஜெயலலிதா உயிருடன் இருந்தபோதே, கோடையில் குடிநீர் தேடியும் மழை வந்தபோது வீட்டுக்குள் புகுந்த கழிவுநீர் அகற்றவும் தொகுதி மக்கள் பட்ட துன்பங்கள் தொடர்ந்தன. சமீபத்திய மழையில் தொகுதிக்குச் சென்ற முதலமைச்சர் மக்கள் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் திரும்பினார். அந்த மக்களுக்கு இரட்டை இலையால், அது இருந்தபோதும், முடக்கப்பட்டபோதும் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. மீண்டுள்ள இரட்டை இலை புதிதாக எதையும் கொண்டு வரும் எனவும் அவர்களுக்கு நம்பிக்கை இல்லை. அதிகபட்சம், தேர்தல் பிரச்சார காலத்தில் அவர்கள் பெயரால் கொள்ளையடிக்கப்பட்ட கோடிகளில் இருந்து ஏதோ சொற்பம் கிடைக்கலாம்.
இரட்டை இலையில் வெறும் நரம்புகள் மட்டும் தெரிய, இலைகளின் நடுவில் தாமரை முளைத்திருக்க, ஓர் இலையின் ஒரு மூலையில் மோடி ஆர்வமாகப் பார்த்திருக்க, இபிஎஸ்சும் ஓபிஎஸ்சும் இரட்டை இலையைத் தூக்கிக் கொண்டாடுவதாக கார்ட்டூனிஸ்ட் பாலா கேலிச்சித்திரம் வரைந்திருக்கிறார். மோடி எழுதித் தந்தபடி விவகாரங்கள் அடுத்தடுத்து மிகவும் கச்சிதமாக நகர்கின்றன என்பது அப்பட்டமாகத் தெரிகிறது. தமிழ்நாட்டில் எப்படியாவது காலையோ கையையோ வைத்துவிட பாஜக முயற்சிகள் எடுக்கும்போது இபிஎஸ்ûஸ ஓபிஎஸ்ûஸ விட இரட்டை இலை பாஜகவுக்குத்தான், இடைத்தேர்தலில் போட்டியிட்டால் கூட, இன்று மிகவும் அவசியம். அஇஅதிமுக ஆட்சியாளர்களின் அனைத்தும் தழுவிய சீர்கெட்ட நடவடிக்கைகளால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள தமிழக மக்கள் பேய் வருமா பிசாசு வருமா அல்லது அவற்றையும் விழுங்கி விடும் பூதம் வருமா என்றுதான் எதிர்பார்க்க வேண்டியுள்ளது.
இரட்டை இலை, எம்ஜிஆர் நூற்றாண்டு கொண்டாட்ட சத்தங்களால் மக்கள் பிரச்சனை களை பின்னுக்குத் தள்ளிவிட முடியவில்லை. டெங்கு, மர்மக் காய்ச்சல், கந்துவட்டி எல்லாம் பேயாட்டம் ஆடுகின்றன. இபிஎஸ்சும் ஓபிஎஸ்சும் எந்தப் பிரச்சனைக்கும் எந்த நடவடிக்கையும் எடுக்கப் போவதில்லை என்று உறுதி காக்கிறார்கள். அறிவிக்கப்பட்ட திட்டங்கள் என்னவாயின, அவற்றுக்கு ஒதுக்கப்பட்ட நிதி எங்கு போனது என்று எழும் கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட திட்டங்களை புதிதாக அறிவித்து புதிதாக நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது என்கிறார்கள். அதற்கு ஜெயலலிதா ஆன்மாவை துணைக்கு அழைத்தும் கொள்கிறார்கள். போயஸ் தோட்டம் வரை நடந்த வருமான வரித்துறை சோதனைகள், தங்கள் வீடுகளுக்கு நீளாமல் நின்றதே இன்று அவர்களுக்கு போதுமானது.
இப்போது தலை தப்பினாலும், பேராசை மட்டுப்படவில்லை. கொள்ளையடிக்கும் பழக்கத்தை அவ்வளவு எளிதாக துறந்துவிட முடியவில்லை. பழனிச்சாமி அரசாங்கம் 70 மணல் குவாரிகள் திறக்க முடிவு செய்திருக்கிறது.
இந்த குவாரிகள் தஞ்சை, நாகை, தூத்துக்குடி மாவட்டங்களில் அமைக்கப்படும் என்று சொல்லப்படுகிறது. காவிரி பாசன பகுதி விவசாயிகள் ஏற்கனவே கடுமையான நெருக்கடியில் இருக்கிறார்கள். விவசாய விரோத அரசுகளின் கொள்கைகளால் வாழ்வாதாரம் இழக்கி ôர்கள். தற்கொலையை தேர்ந்தெடுக்கிறார்கள். நெடுவாசல், கதிராமங்கலம் பிரச்சனைகளுக்கு இன்னும் மத்திய அரசு பதில் சொல்லாமல் இருக்கும்போது நன்னிலத்தில் துவங்குகிற புதிய ஓஎன்ஜிசி வேலைகளுக்கு எதிராக விவசாயிகள் குரல் எழுப்பியுள்ளனர். வீணாகக் கடலில் கலக்கும் நீரை சேகரிக்க தடுப்பணைகள் கட்டி நீராதாரத்தை மேம்படுத்தி விவசாயத்தைப் பாதுகாக்க வழிவகை செய்ய வேண்டும் என தமிழக விவசாயிகள் போராட்டங்கள் நடத்தும்போது, மிஞ்சியிருக்கிற நீராதாரத்தை மேலும் சீர்குலைக்கும் நடவடிக்கையை பழனிச்சாமி அரசு எடுக்கிறது.
கரைவேட்டிக்காரர்களின் ஆதரவுடனும் ஆசியுடனும் சட்டத்துக்கு உட்பட்டும் சட்ட விரோதமாகவும், கொசஸ்தலை முதல் தாமிரபரணி வரை ஆற்று மணல் கொள்ளையடிக்கப் பட்டு தமிழ்நாட்டின் விவசாயமும் குடிநீராதாரமும் அழிக்கப்பட்டுவிட்ட பிறகு, இன்னும் என்ன மீதம் இருக்கிறது? நெடுவாசல், கதிராமங்கலம் என்று மோடி அரசாங்கத்துக்கு எதிராக தமிழக விவசாயிகள் போராடுவதை சற்று தள்ளிவைத்துவிட்டு பதில் மணல் குவாரிகள் வேண்டாம் என்று வலியுறுத்தி தமிழக அரசு மீது அவர்களது எதிர்ப்பு குவியக் கூடும். மணல் குவாரிகளால் நிலத்தடி நீர்மட்டம் கடுமையாக பாதிக்கப்படுவதால், மணல் அள்ளப்படுவது நிறுத்தப்பட வேண்டும் என ஏற்கனவே விவசாயிகள் சொல்லும்போது, புதிய குவாரிகள் பற்றிய அறிவிப்பு அவர்கள் வேதனைகளை கேலி செய்வதாக இருக்கிறது.
மறுபுறம், வெங்காயம், தக்காளி, சர்க்கரை, பால், அரிசி, பருப்பு, எண்ணெய், பெட்ரோல் என அத்தியாவசிய பொருட்கள் விலைகள் உயர்ந்து சாமான்ய மக்கள் உணவுப் பழக்கத்தையே கீழே தள்ளிவிட்டபோது, இந்த அத்தியாவசியப் பொருட்கள் விலைகளை குறைக்க நடவடிக்கைகள் எடுப்பதை விட்டுவிட்டு, மணல் விலையைக் குறைக்க அவசரமாக நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள். இந்த நடவடிக்கையால் அனைவருக்கும் மணல் கிடைக்கும் என்கிறது பழனிச்சாமி அரசாங்கம். அனைவருக்கும் உணவு கிடைப்பதைக் கூட உறுதி செய்யாத அரசு யாருக்கு மணல் கிடைப்பதை உறுதி செய்யப் போகிறது? யாருக்கு இப்போது குறைந்த விலையில் மணல் தேவைப்படுகிறது? யார் அந்த மணலை எடுப்பார்கள்? நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் விவசாயி மணல் அள்ளும் வேலையையா பிரதானமாகப் பார்ப்பார்? அல்லது ரேசன் பொருட்கள் கூட வாங்க முடியாத சாமான்ய தமிழன் மணல் வாங்கப் போகிறாரா?
புதிய மணல் குவாரிகளுக்கு யார் உரிமம் பெறுவார் என்று நமக்குத் தெரியும். மாட்டு வண்டியில் மணல் அள்ள உரிமம் பெற்றுவிட்டு லாரியில் மணல் அள்ளும் மணல் மாஃபியாக்களுக்கும் கட்டுமான பெருநிறுவனங்களுக்கும் புதிய மணல் குவாரிகள் புதிய கொள்ளை களத்தை திறந்துவிடுமே தவிர வேறு யாருக்கும் எந்தப் பயனும் இருக்காது என்பதை இன்றைய நிலைமைகளில் ஏற்கனவே தமிழ்நாட்டு மக்கள் பார்த்துவிட்டார்கள். ஜெயலலிதாவின் நல்லாசியுடன் நீண்டகாலமாக பொதுப் பணித்துறையின் அமைச்சராக இருந்த ஓபிஎஸ்சுக்கும் மணல் வியாபாரம் செய்யும் சேகர் ரெட்டிக்கும் இருக்கும் நெருக்கம் எப்படிப்பட்ட நெருக்கம் என்பதை ரூ.34 கோடி புதிய 2000 ரூபாய் தாள்கள் 2016 இறுதியிலேயே காட்டிவிட்டன. இப் போது 2015 மழைக்குப் பிறகு மணல் மீண்டும் படிந்திருப்பதாகச் சொல்லும், அந்த மணலை கொள்ளை கொண்டுவிட வேண்டும் என்று துடிக் கும் தமிழ்நாட்டின் மணல் மாஃபியாக்களின் தேவையைத்தான் முதலமைச்சர் பழனிச்சாமி பிரதிபலித்துக் கொண்டிருக்கிறார். சாராய ஆலை முதலாளிகள், வியாபாரிகள் நலன் காக்க காவல்துறை உதவியுடன் டாஸ்மாக் நடத்துகிற அரசாங்கம், அதில் பெற்ற ‘அனுபவத்தில்’ இருந்து மணல் மாஃபியாக்கள் நலன் காக்க மணல் குவாரிகள் நடத்த முடிவெடுத்திருக்கிறது. மணல் கொள்ளையைத் தடுக்க முயற்சி செய்த சில நேர்மையான அதிகாரிகள் பலர் ‘விபத்தில் சிக்கி’ உயிரிழந்த சம்பவங்கள் தமிழகத்தில் ஏராளம். எந்தப் பக்கத்தில் இருந்து பார்த்தாலும், சிலர் கொள்ளையடிக்க பலர் உயிரிழப்புக்கு ஆளாவது என்பது பழனிச்சாமி அரசாங்கத்தின் புதிய கொள்கையாக, திட்டமாக, நடைமுறையாக இருக்கிறது.
நெசவாளர்களின் எலும்புக் கூடுகளால் கங்கைச் சமவெளி வெண்ணிறமானது என்று சுதந்திரத்துக்கு முந்தைய இந்தியாவை மார்க்ஸ் விவரித்தார். தமிழக மக்களின் எலும்புக் கூடுகளால் தமிழ்நாட்டையே வெண்ணிறமாக்கும் முயற்சியில்தான் இபிஎஸ்சும் ஓபிஎஸ்சும் அவர்களது சக அமைச்சர்களும், மோடியின் பேராதரவுடன் இறங்கியிருக்கிறார்கள்.
இருக்கிற மணல் குவாரிகளை மூடவும் புதிதாக மணல் குவாரிகள் திறப்பதற்கு தடை விதித்தும் மதுரை உயர்நீதிமன்றக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. பழனிச்சாமி அரசு என்ன செய்கிறது என்று பார்க்க வேண்டும்.
தீக்குளித்தால்தான் வஞ்சக ஆட்சியாளர்களின் கவனத்தை ஈர்க்க முடியும், தற்கொலை செய்துகொண்டால்தான், பிரச்சனை பேசப்படும் என்ற நிலையை உருவாக்கியிருப்பதை, பாஜக வழிகாட்டுதலில் நடக்கும் அஇஅதிமுக ஆட்சியின் சாதனை என்று சொல்லிக் கொள்ளலாம். தொழிலாளி முதல் திரைப்படத் தயாரிப்பாளர்கள் வரை கந்துவட்டி வேட்டையாடுகிறது. வேலை வாங்கித் தருவதாக பணம் வாங்கி ஏமாற்றிய அஇஅதிமுக பிரமுகரிடம் நியாயம் கேட்கப்போய் தீக்குளித்து திமுக பிரமுகர் உயிரிழந்தார். ஆசிரியர் வசுவுகளைத் தாங்க முடியாமல் குழந்தைகள் தற்கொலை செய்து கொள்கின்றன. டாஸ்மாக் சாராய போதையில், வாய்ச்சண்டை கைகலப்பாக மாறி, நண்பர்கள், உறவினர்கள் ஒருவரை ஒருவர் கொலை செய்வது உச்சத்தில் இருந்தபோது, உணர்ச்சிக் கொலைகள் நடப்பதற்கு அரசு என்ன செய்ய முடியும் என்று ஜெயலலிதா கேட்டார். இங்கு குறிப்பிடப்பட்ட உயிரிழப்புகள், அதிமுக அரசின் குற்றமய அலட்சியத்தால் செய்தியாகாமல் போகிற உயிரிழப்புகள் அனைத்துக்கும் நேரடியாக அரசுதான், அரசு நிர்வாகம்தான், ஆட்சியாளர்கள்தான் பொறுப்பு என்று மக்கள் மிகத் தெளிவாகச் சொல்லத் துவங்கிவிட்டனர்.
இப்போது இயங்குகிற மணல் குவாரிகளில் மணல் எடுப்பதால் என்ன சுற்றுச்சூழல் மற்றும் வாழ்வாதாரப் பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளன, எவ்வளவு மணல் எடுக்கப்படுகிறது, யார் எடுக்கிறார்கள், அரசு நிர்ணயித்த விலைக்குத்தான் விற்கப்படுகிறதா, அரசு நிர்ணயித்த அளவில்தான் அரசு நிர்ணயித்த இடங்களில் மட்டும்தான் மணல் எடுக்கப்படுகிறதா என பல கேள்விகள் பதிலுக்கு காத்திருக்கின்றன. நெருக்கடிகள் முற்றியுள்ள கட்டத்தில் எதைச் செய்தால் பாதிப்பு இன்னும் கூடுமோ அதைச் செய்ய தமிழக அரசு தயாராகிறது. செயற்கை மணல் உற்பத்தி, மணல் இறக்குமதி ஆகியவற்றுக்கு வாய்ப்பு இருக்கும் போது, மக்கள் வாழ்வைச் சிதைக்கும் நடவடிக்கைக்கு தயாராகிற பழனிச்சாமி அரசுக்கு எச்சரிக்கை விடுக்க தமிழக மக்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. பழனிச்சாமி அரசுக்கு ஆர்கே நகரில் மக்கள் எச்சரிக்கை விடுப்பார்கள்.

Search