COMMUNIST PARTY OF INDIA (MARXIST - LENINIST) - LIBERATION

COMMUNIST PARTY OF INDIA (MARXIST - LENINIST) - LIBERATION, TAMILNADU

Tuesday, November 14, 2017

இகக மாலெ தோழர்கள் மீது தாக்குதல் முயற்சி நடத்திய
கந்துவட்டி ரவுடிகள் மீது நடவடிக்கை எடு!

நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் விசைத்தறி தொழிலாளர்கள் நிறைந்த பகுதி. இந்த தொழிலாளர்கள் பாக்கி என்னும் கொத்தடிமை முறையில் முதலாளிகளிடம் வேலை செய்து வருகிறார்கள்.
அரசு இந்த கொத்தடிமை முறையை ஒழிப்பதற்கு பதிலாக தொழிலாளர்கள் ஏன் பாக்கி வாங்குகிறார்கள் என்று தொழிலாளர்கள் மீதே குற்றம் சுமத்தி வருகிறது.
பள்ளிப்பாளையத்தில் புற்றீசல் போல் பெருகிவரும் கந்துவட்டி தொழில் நடத்துபவர்கள் ரூ.100க்கு 20 வட்டி என நிர்ணயம் செய்து வட்டி வசூலிக்கிறார்கள். இவர்கள் அரசிடம் எவ்விதமான அனுமதியும் பெறுவதில்லை. கந்துவட்டி கும்பல்கள் அதிமுக, திமுக அரசியல் சாயம் பூசிக் கொள்கின்றன. இவர்கள் ரவுடி கும்பலை உருவாக்குகிறார்கள். காவல்துறையினரை கைக்குள் போட்டுக் கொள்கிறார்கள். வட்டிக்கு பணம் வாங்கியவர்கள் பணம் கட்ட தவறினால், அவர்களை மிரட்ட ரவுடிகள், முதலாளித்துவ கட்சிகளைச் சேர்ந்தவர்கள், காவல்துறையினர் பயன்படுத்தப்படுகிறார்கள்.
பள்ளிப்பாளையம் ஆவத்திபாளையத்தில் குடியிருக்கும் முனியப்பராஜ் என்பவர் அக்ரகாரம் பகுதியில் கடும் வட்டி வசூலிக்கும் விஜயன் (எ) விஜயகுமாரிடம் 2016ல் ரூ.100க்கு மாதம் ரூ.5 வட்டி என்று ரூ.5000 பெற்றார். இவர் வாங்கிய பணத்தை முழுவதும் கட்டி முடித்து விட்டார். இவர் இன்னும் இரண்டு பேருக்கு ஜாமீன் போட்டு ரூ.40,000 வாங்கித் தந்தார். அவர்கள் இரண்டு பேரும் ஊரை விட்டு ஓடிவிட்டனர். முனியப்பராஜ் ஜாமீன் போட்டதால் இவரை வட்டி தொழில் நடத்தும் விஜயன் அடித்து, உதைத்து வெற்றுத் தாளில் கையொப்பம் பெற்றுக் கொண்டு, வெளியில் சொன்னால் கொலை செய்துவிடுவதாக மிரட்டி வட்டி வசூல் வேலை செய்ய அவரை நிர்ப்பந்தித்தார்.
விஜயகுமாருக்கு வட்டி வசூல் செய்து கொடுக்கும் வேலை செய்ததால் தனது குடும்பத்திற்கு வருமானம் ஈட்ட முடியாமல் போனபோது, முனியப்பராஜ் 03.10.2017 அன்று நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் விஜயன் மீது புகார் மனு கொடுத்தார். இந்த மனு மீது உடனடி நடவடிக்கை எடுக்காததால் கந்து வட்டி கும்பல் அவரை மிரட்டியது. முனியப்பராஜ் இககமாலெ தோழர்களை நாடினார்.
விஜயன் கொடுமையிலிருந்து எங்களையும் காப்பாற்றுங்கள் என கேட்டு முனியப்பராஜ் பின்னால் இன்னும் 6 பேர் வந்தனர். கந்துவட்டி கொடுமையால் பாதிக்கப்பட்டவர்கள் இகக மாலெயை அணுகியது பற்றி தகவல் அறிந்த விஜயன், ரவுடிகள் மூலம் அந்த 6 பேரையும் முனியப்பராஜ் பின்னால் போக கூடாது என மிரட்டினார்.
முனியப்பராஜ், இககமாலெ தோழர்கள் உதவியுடன் காவல் நிலையத்தில் விஜயன் மீது புகார் செய்தார். தகவல் அறிந்த விஜயன் அவரிடம் வட்டிக்குக் கடன் வாங்கியவர்களை அழைத்து மது விருந்து கறி விருந்து நடத்தினார். போதை ஏறிய நிலையில் அவர்கள் மத்தியில் இருந்த தலித் பிரிவைச் சேர்ந்த ஒருவரைத் தாக்கி மண்டையில் கடுமையான காயங்களுடன் மருத்துவமனையில் சேர்த்து, இந்தத் தாக்குதலை முனியப்பராஜ÷ம் செல்வம் என்பவரும்தான் நடத்தினார்கள் என பொய் புகார் கொடுக்க வைத்தார்.
தொடர்ந்து விஜயகுமார், முனியப்பராஜ் குடும்பத்தை மிரட்டிக் கொண்டேயிருந்தார். இந்த நிலையில் 28.10.2017 அன்று முனியப்பராஜ் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் தந்த மனு மீதான விசாரணைக்கு அவர் காவல்நிலையம் வர வேண்டும் என சொல்லப்பட்டது. இந்த தகவல் அறிந்த விஜயன், சூரி என்கிற சூரியராஜ் என்ற ரவுடி மூலம் முனியப்பராஜின் சகோதரர் மணிமுருகனை கடத்திவிட்டார். இககமாலெ தோழர்கள், காவல் நிலையத்தில் தொலைபேசி மூலம் புகார் செய்ததன் அடிப்படையில் அவர் மீட்கப்பட்டார்.
அன்றே மதியம் 2.30 மணிக்கு முனியப்பராஜ் மீது தாக்குதல் முயற்சி எடுக்கப்பட்டது. இககமாலெ நகரச் செயலாளர் உடனடியாக செயல்பட்டதன் அடிப்படையில் அவர் காப்பாற்றப்பட்டார். மீண்டும் முனியப்பராஜின் இன்னொரு சகோதரர் கார்த்திக் (இவர் கொங்கு நாடு வேட்டுவ நலச் சங்கத்தின் மாவட்ட கொள்கை பரப்புச் செயலாளர்) மீது சூரி என்கிற ரவுடி  10 பேர் கொண்ட கும்பலுடன் கொலை வெறித் தாக்குதல் நடத்தினார். கொலை வெறித் தாக்குதலுக்காளான கார்த்திக் காவல் நிலையத்தில் புகார் செய்து விட்டு  மருத்துவமனையில் சேர்ந்தார்.
கந்துவட்டி தொழில் நடத்தும் விஜயன் மீதும், அவருக்காக செயல்படும் ரவுடி கும்பல் மீதும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி 30.10.2017 அன்று அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம் நடத்த இககமாலெ தோழர்கள் ஏற்பாடு செய்தனர்.
கந்துவட்டி தொழில் நடத்தும் விஜயன், இந்த ஆலோசனை கூட்டம் நடப்பதைத் தடுக்க, இககமாலெ நகரச் செயலாளர் தோழர் பி.மாரியப்பன், மாவட்டச் செயலாளர் தோழர் ஏ.கோவிந்தராஜ், ஏஅய்சிசிடியு மாவட்டச் செயலாளர் தோழர் எஸ்.சுப்ரமணி ஆகியோர் மீது தாக்குதல் நடத்த ரவுடி கும்பலை ஏவினார். ரவுடி கும்பல் இககமாலெ தோழர்களை தாக்க முயற்சித்தபோது, உடனடியாக காவல் துறைக்கு தகவல் தரப்பட்டது. கால் மணி நேரம் ஆகியும் காவல்துறை வரவில்லை. இகக மாலெ தோழர்கள் உடனடியாக சாலை மறி லில் ஈடுபட்டதால் கொலைவெறி தாக்குதலில் இருந்து தப்ப முடிந்தது.
இந்தத் தாக்குதல் முயற்சி பற்றி 30.10.2017 அன்று பள்ளிப்பாளையம் காவல்துறையில் விஜயன், சூரி, சீனிவாசன், சபரி (எ) சபரிநாதன் (இவர் ஆர்எஸ்எஸ்) ஆகியோர் மீது புகார் தரப்பட்டும் நடவடிக்கை இல்லை.
31.10.2017 அன்று பள்ளிப்பாளையத்தில் உள்ள இகக அலுவலகத்தில் அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் இகக, இககமா, இககமாலெ, திராவிட விடுதலை கழகம், தமிழ் தேசியக் கட்சி, கொங்கு நாடு வேட்டுவ கவுண்டர் நலச் சங்கம் ஆகிய அமைப்புகள் கலந்து கொண்டன. இந்தக் கூட்டம், இககமாலெ தோழர்கள் மீது கந்துவட்டி ரவுடி கும்பல் தாக்குதல் நடத்த முயற்சித்ததை கண்டித்தது.
காவல்துறை உயரதிகாரிகளுக்கு மனு தருவதெனவும் பள்ளிபாளையத்தில் உள்ள வட்டிக் கடைகளை ஆய்வு செய்து அனுமதி இல்லாத கடைகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் கந்துவட்டி தொழிலில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் 10.11.2017 அன்று அரசியல் கட்சி தலைவர்களை தாக்கிய கந்து வட்டி கும்பல் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஆர்ப்பாட்டம் நடத்தவும் இந்தக் கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கந்துவட்டியால் இசக்கிமுத்து குடும்பத்துக்கு நேர்ந்தது கொடூரமான முடிவு. கந்து வட்டியால் இது போன்ற முடிவுக்கு பல குடும்பங்கள் தள்ளுப்படுகின்றன. கந்துவட்டி வாங்கும் குற்றத்துடன் அந்தத் தொழிலை நடத்த தொடர்குற்றங்களில் ஈடுபடுபவர்களாக கந்து வட்டி தொழில் நடத்துபவர்கள் இருக்கிறார்கள். நாமக்கல் மாவட்ட விசைத்தறி தொழிலாளர்கள், தங்கள் சாதாரணமாக வாழ்க்கையை நடத்த கடன் வாங்கி கடனை திருப்ப முடியாமல் சிறுநீரகம் விற்பது, கருமுட்டை விற்பது போன்ற கொடூரமான நிலைகள் தொடருகின்றன. உயிர்ப்பலி, அதையொட்டிய எதிர்ப்பு, அதன்பின் சட்டம் அல்லது விதிமுறைகள் என்றே சாமான்ய மக்களுக்கு காலம் நகர்கிறது. இனியொரு விதி செய்வோம் என்று இதில் சொல்ல எதுவும் இல்லை. செய்த விதிகள் செயலற்று கிடக்கின்றன. காவல்துறை, அரசியல்வாதிகள் துணையுடன் கந்துவட்டி தொழில் செழிக்கிறது. இசக்கிமுத்து குடும்பத்தின் கொடூரமான முடிவு, பிரச்சனையின் தீவிரத்தை முன்கொண்டு வந்துள்ளது. பழனிச்சாமி அரசு மோடி அரசுக்கு பாதம் தாங்குவதை நிறுத்தி விட்டு தமிழக மக்கள் வெவ்வேறு பிரச்சனைகளில் உயிரிழந்து கொண்டிருப்பதை தடுத்து நிறுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

Search