COMMUNIST PARTY OF INDIA (MARXIST - LENINIST) - LIBERATION

COMMUNIST PARTY OF INDIA (MARXIST - LENINIST) - LIBERATION, TAMILNADU

Wednesday, October 18, 2017

முதலாளித்துவமும் சோசலிசமும்

எஸ்.குமாரசாமி

(சோவியத் புரட்சியின் நூறாவது ஆண்டை அனுசரிக்கும் விதம் மாலெ தீப்பொறியின் நவம்பர் முதல் இதழிலிருந்து தொடர்ந்து கட்டுரைகள் வெளியாகி வருகின்றன. 21ஆம் நூற்றாண்டு சோசலிச பொருளாதாரமும் அரசியலும் எதிர்கொள்ளும் சவால்கள், நிறைவேற்ற வேண்டிய கடமைகள் பற்றி, இந்த இதழிலும் அடுத்த ஓரிரு இதழ்களிலும் வெளிவரும் கட்டுரைகளுடன் இந்தத் தொடர் நிறைவு பெறும்).

முதலாளித்துவம் என்றால் சந்தைக்கான உற்பத்தி, லாபத்திற்கான உற்பத்தி, சோசலிசம் என்றால் மக்கள் தேவைக்கான உற்பத்தி, முதலாளித்துவத்துவம் என்றால் உற்பத்தியில் அராஜகம், மிகை உற்பத்தி, வேலையின்மை, ஓட்டாண்டிமயமாதல், சமச்சீரற்ற வளர்ச்சி,
சோசலிசம் என்றால் திட்டமிட்ட பொருளாதாரம், முதலாளித்துவம் என்றால் செல்வ, வருமான ஏற்றத்தாழ்வுகளை மறு உற்பத்தி செய்தல், மானுட உற்பத்தி ஆற்றலை யதார்த்தமாக்காமல் முடக்குதல், சோசலிசம் என்றால் உற்பத்தி ஆற்றல் கட்டவிழ்த்துவிடப்பட்டு முன் உதாரணம் இல்லாத வளமை, அனைவர்க்குமான வளமை, முதலாளித்துவம் என்றால் போர் இயற்கையை அடிமைப்படுத்தி ஆபத்தை விலை கொடுத்து வாங்குதல், சோசலிசம் என்றால் அமைதி, இணக்கம், இயற்கையோடு இயைந்த வாழ்வு - இவை, மார்க்சிய அடிப்படைகள்.
பாரிஸ் கம்யூனும் 20ஆம் நூற்றாண்டு சோசலிசமும்
71 நாட்களுக்கு நிலவிய, இதோ பார் இதுதான் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் என மார்க்சால் அடையாளப்படுத்தப்பட்ட பாரிஸ் கம்யூனையும், 75 ஆண்டுகள் நிலவிய சோவியத் மாதிரியையும் அதன் சரிவையும், 2021ல் நூற்றாண்டைக் காண உள்ள சீனக் கம்யூனிஸ்ட் கட்சி, கட்டி எழுப்பி, இன்று நிலவுகிற சீன பண்புக் கூறுகளுடனான சந்தை சோசலிசத்தையும், உலகம், கண்டுள்ளது.
சோவியத் சீன அனுபவங்கள், நாம் முதலில் சுட்டிக்காட்டிய சோசலிசத்திற்கான மார்க்சிய அடிப்படைகளுக்கு எடுத்துக்காட்டாகத் திகழ்வதில் வெற்றி பெற முடியவில்லை. பாரீஸ் கம்யூனை, பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம், அரசியலை ஆணையில் வைப்பது என்பவற்றுக்கான ஆதாரமான படிப்பினைகளுக்காகப் படிப்பதுதான் பொருத்தமாக இருக்கும். அன்று இங்கிலாந்துக்கு ஈடான முதலாளித்துவ வளர்ச்சி பிரான்சில் இல்லை. அதனால் பாரீஸ் கம்யூன் அனுபவத்தை சோசலிச பொருளாதாரம் பற்றி படிக்க அவ்வளவு தூரம் பயன்படுத்த முடியாது.
மார்க்சும் ஏங்கெல்சும் வளர்ச்சி அடைந்த முதலாளித்துவ நாடுகளில் சோசலிசம் கட்டப்படும் என எதிர்ப்பார்த்தனர். மார்க்ஸ் ஏங்கெல்ஸ் மறைவுக்குப் பிறகுதான், உலகம், ஏகபோகம் மற்றும் நிதி மூலதன ஏகாதிபத்திய சகாப்தத்திற்குள் நுழைந்தது. ஏகாதிபத்தியத்தின் பலவீனமான கண்ணியில் உடைப்பை ஏற்படுத்தி புரட்சி,  பின்தங்கிய முதலாளித்துவ நாட்டில் புரட்சி எனத் தோழர் லெனின் தலைமையிலான புரட்சியாளர்கள், வரலாறு வழங்கிய வாய்ப்பை இறுகப் பற்றினார்கள். ரஷ்யப் புரட்சியின், விவசாய உள்ளடக்கக் கூறுகளின் முக்கியத்துவம் போதுமான கவனம் பெறவில்லை.
இகக(மாலெ) பொதுச் செயலாளர் தோழர் திபங்கர் சமகால சோசலிசம் பற்றி எழுதிய ஒரு விஷயத்தைக் காண்போம்: ‘1917 நவம்பர் புரட்சிக்குப் பிறகு வெற்றி பெற்ற எல்லா புரட்சிகளுமே பின்தங்கிய நாடுகளில்தான் நடந்துள்ளன. நிலப்பிரபுத்துவ மற்றும் முதலாளித்துவத்திற்கு முந்தைய மிச்சசொச்சங்களில் இருந்து விடுதலை செய்யும் பொறுப்பை சோசலிசமும், இறுதியில் தான் மறுதலிக்கப்படுவதற்கான விஞ்ஞான தொழில்நுட்ப அடித்தளங்களைத் தொடர்ந்து போடும் பணியை முதலாளித்துவமும் மேற்கொண்டுள்ளன. இன்றைய உலகில், உற்பத்தி சக்திகளின் விரிவான வளர்ச்சிக்காக சோசலிசத்தின் பதாகை உயர்ந்துள்ளது. முதலாளித்துவ நாடுகளின் எல்லைகளுக்குள்ளேயே உற்பத்தி சக்திகளின் ஆழமான தீவிரமான வளர்ச்சி, முதலாளித்துவ உலகின் முரண்பாடுகளை தீவிரப்படுத்தி, முதலாளித்துவ ஓடு/கூடு உடையும் ஒரு புள்ளி வரை இந்த முரண்பாட்டை முன் தள்ளி, முதலாளித்துவத்தை அதன் உள்ளார்ந்த வலுவான தளங்களில், சோசலிசம் நெருக்கி அழுத்தம் தருவதற்கு அது இட்டுச் செல்லும்’.
சமகால உலகமயம்
ரஷ்யப் புரட்சி 1917லும் சீனப்புரட்சி 1949லும் வெற்றி பெற்றன. முதலாளித்துவம் ஏகாதிபத்தியமாக மாறி, ஏகாதிபத்திய உலகமயம் சில சிறப்புக் கூறுகளைப் பெற்றுள்ளதும் நடந்துள்ளன. சமகால உலகமயத்தின் சிறப்புக் கூறுகள் பற்றி, தோழர் திபங்கர் சுட்டிக்காட்டும் விஷயங்களைக் காண்போம்.
பண்டங்களின் சேவைகளின் உற்பத்தி மற்றும் பரிமாற்றத்தைக் காட்டிலும், நிஜ பொருளாதாரத்தைக் காட்டிலும், பங்குகள், நாணயங்கள் போன்றவற்றின் பரிமாற்ற பத்திரங்கள், ஊக வணிகப் பொருளாதாரம் ஆகியவை பலப்பல மடங்கு அதிகரித்துள்ளது.
இன்றைய உலகம், ஊக வணிக நிதியின் பித்துப்பிடித்த புதிரான உலகம். பெண்டுலம் ஒரு திசையிலிருந்து மறுமுனை வரை சென்று வருவது போல் இங்கு நிதிச் சந்தைகள் செயல்பாடு அமைவதில்லை. மாறாக எங்கும் எப்போதும் பாய்ந்து தாக்கித் தகர்க்கும் பந்து (ரெக்கிங் பால்) போல் நிதிச் சந்தைகளின் செயல்பாடு அமைந்துள்ளது.
ஏகாதிபத்திய உலகமயத்தின், சுதந்திர வர்த்தகம் உள்ளீடற்ற வெற்றுப் பேச்சாகும். வளர்ந்த நாடுகள் பாதுகாப்பு வாதம் மூலம் தம் நாட்டு விவசாயம் தொழில் சேவைத் துறைகளைக் காப்பாற்றிக் கொள்ள தடுப்புச் சுவர்கள் எழுப்பிக் கொண்டு, சுதந்திர வர்த்தகத்தின் பெயரால் மற்ற நாடுகள் தடுப்புச் சுவர்கள் எழுப்பக் கூடாது என்கின்றன. மூலதனத்தின் தடையற்ற பாய்ச்சல் மற்றும் நலன்கள் காக்க, சர்வதேச நிதியம், உலக வங்கி, உலக வர்த்தக நிறுவனம் என்ற சர்வதேச நிறுவனங்களை ஏற்படுத்தி உள்ளன.
ஒருபுறம், காலனி ஆதிக்க எதிர்ப்பு தேச விடுதலைப் போராட்டங்களின் ஒரு முழுச் சுற்று (சில விதிவிலக்குகள் நீங்கலாக) முடிந்துவிட்டது; மறுபுறம் தேச அரசுகளின் இறையாளுமை பெரும் அளவுக்கு அழிக்கப்பட்டுள்ளது.
சோவியத் சோசலிச முகாமின் சரிவிற்குப் பிறகு, உலக முதலாளித்துவம் ‘நலம் புரி அரசு’ முகமூடிகளைக் கழற்றி வீசி எறிந்து, வேட்டையாடும் முதலாளித்துவமாகி நிற்கிறது. உலகெங்கும் புராதன மூலதனத் திரட்சி நடைபெறுகிறது. அதே நேரம் முதலாளித்துவ உற்பத்தி, அதன் வீச்செல்லையிலும் ஆழத்திலும் புதிய உச்சங்களை எட்டியுள்ளது.
நடைமுறைச் சவால்கள்
இந்த உலகமயக் காலங்களில்தான், புரட்சிகள், சோசலிசப் பொருளாதாரம் கட்டுதல் நடைபெற வேண்டும். காஸ்ட்ரோ வழிநடத்திய கியூபா, சோசலிச முகாமின் வீழ்ச்சிக்குப் பிறகு சோவியத் ஒத்துழைப்பு உதவி எதுவும் இல்லாமல், கொலைகார கொடூர ஏகாதிபத்திய முற்றுகையைச் சந்தித்தது. மனிதவளம் தவிர மற்ற வளங்களுக்குப் பிரபலமாக இல்லாத கியூபா, சோசலிசத்தைக் கட்டி எழுப்பும் சவாலில் திணறத் துவங்கி விட்டது. முதலாளித்துவ மீட்சிக்கான முயற்சிகள் அங்கு உக்கிரமாக நடைபெறுகின்றன.
தோழர் சாவெஸ் வழி நடத்திய ஏகாதிபத்திய எதிர்ப்பு மக்கள் சார்பு சமூகத்தைக் கட்டி  எழுப்பும் முயற்சி, தோழர் சாவேஸ் கட்டி எழுப்ப விரும்பிய 21ஆம் நூற்றாண்டு சோசலிசம், இப்போது வெனிசூலாவில், பெரும் பின்னடைவை எதிர்கொள்கிறது. வெனிசுலா, உள்நாட்டிலும் மற்ற நாடுகளிலும் மக்கள் சார்பு நடவடிக்கைகளை எடுக்க, 21ஆம் நூற்றாண்டு சோசலிசம் பற்றிய பேச்சுக்கள் கிளம்பும் நிலைமைகள் உருவாக, வெனிசூலாவின் எண்ணெய் எரிசக்தி வளம் ஒரு முக்கியக் காரணமாக இருந்தது. ஏகாதிபத்திய முகாமும் அதன் இளநிலைக் கூட்டாளிகளான சவுதி அரேபியா போன்ற நாடுகளும் எண்ணெய் உற்பத்தி மற்றும் விலைகள் மீது செலுத்திய கட்டுப்பாடு, வெனிசூலாவின் பொருளாதாரத்தைப் பேரிடியாய்த் தாக்கியது. விளைவு, வெற்றி மேல் வெற்றி பெற்ற, உலகத்து உழைக்கும் மக்களின் நேசத்தை நன்மதிப்பைப் பெற்ற, சாவெசுக்குப் பிறகு வந்த, மதுரோ ஆட்சி ஆட்டம் காண்கிறது. மக்கள் விரோத ஏகாதிபத்திய ஆதரவு சக்திகள் அதிகாரத்தைக் கைப்பற்றத் தயாராகி வருகிறார்கள்.
சீனம் சொல்லும் செய்தி
சீன கம்யூனிஸ்ட் கட்சியின் காங்கிரஸ் 18.10.2017 அன்று துவங்க உள்ளது. ஜி ஜின்பிங்கின் 2013 கூற்றே, அந்த காங்கிரசை வழிநடத்த எல்லா வாய்ப்புகளும் உள்ளன: ‘சீன தேசம் புத்துயிர்ப்புடன் எழும் என்ற சீனக் கனவைச் சாதிக்க, சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் நூறாம் ஆண்டான 2021ன்போது, அனைத்து விதங்களிலும் ஓரளவுக்கு (மாடரேட்) வளமையான சமூகத்தைக் கட்டி எழுப்புவது, சீன மக்கள் குடியரசு நிறுவப்பட்டதன் நூறாம் ஆண்டான 2049ல் சீனாவை, வளம் கொழிக்கும், வலிமையான, ஜனநாயகபூர்வமான, கலாச்சாரரீதியில் முன்னேறிய, இணக்கம் காணும், ஒரு நவீன சோசலிச நாடாக்குவது என்ற குறிக்கோள்களைக் கொண்டுள்ளோம்’.
சமூக ஏற்றத் தாழ்வுகளைக் குறைக்கிற, மக்களை வெறும் பயனாளிகள் என்ற நிலை யிலிருந்து உண்மையான ஆட்சியாளர்கள் என்ற நிலைக்கு உயர்த்துகிற, ஒரு புரட்சிகர சமூக மாற்றத்திற்கான சாரமான விடுதலைப் பார்வை, தெளிவாகப் புலப்படும் வகையில், சீனத்திடம் இல்லை. அது மட்டுமின்றி, சர்வதேசப் பொருளாதாரத்துடனான சீனத்தின் ஒருங்கிணைவு ஒரு துரிதமான தொடர் நிகழ்வுப்போக்காக உள்ளது. ஆனபோதும், சமீபத்திய உலகமயப் பொருளாதார நெருக்கடியின் பாதக விளைவுகளை, ஏகாதிபத்திய உலகிலிருந்து மாறுபட்ட விதத்தில் திறன்வாய்ந்த முறையில் சீனம் சந்தித்தது என்பதும் உலகம் அறிந்து வியந்த விஷயமாகும். பொது, அரசு செலவினங்களை பிரும்மாண்டமாக அதிகரித்ததும், மக்களின் வாங்கும் சக்தி உயர நடவடிக்கைகள் எடுத்ததும் கவனிக்கப்பட வேண்டியவையே.  இது, இன்றைய உலகமய பொருளாதாரத்திலும், அரசியலை ஆணையில் வைத்து, சோசலிச பொருளாதாரத்தை, புரட்சிகர சமூக மாற்றத்திற்கான சாரமான விடுதலைப் பார்வையுடன் கட்டி எழுப்ப முடியும் என்ற நம்பிக்கை தருகிறது.
புதிய படிப்புகள் தேவை 
மார்க்சின் மூலதன நூலுக்குச் சற்றும் குறையாத ஆய்வு நூல் ஒன்று தேவை
75 ஆண்டுகால சோவியத் அனுபவமும் 70 ஆண்டுகால சீன அனுபவமும், பொது உடைமை, கூட்டு உடைமை, கூட்டுறவு உடைமை, சிறுவீத உடைமை என்ற பல்வேறு உடைமை வடிவங்கள் சோசலிச உலகில் இருக்கும் எனப் புலப்படுத்துகின்றன. நகர கிராம முரண்பாடு மறைய, மூளை உழைப்பு,  உடல் உழைப்பு வேறுபாடு களைய, கூடுதல் காலம் தேவை என உணர்த்துகின்றன. வெவ்வேறு உடைமை முறை நிலவும் நிறுவனங்களுக்கு இடையிலான பரிமாற்றத்தில், நிச்சயம் பண்டப் பரிமாற்றம் இருக்கவே செய்யும் என்பதும் புரிகிறது. ‘உழைப்புக்கேற்பவே பெறுவார்கள்’ என்ற முதலாளித்துவ விதி நிலவும்போது, முதலாளித்துவத்தின் கருப்பை அடையாளங்கள் உடைய சோசலிசம், முதலாளித்துவம் நோக்கி நகர வாய்ப்புக்கள் நிறையவே உண்டு எனப் புரிகிறது. ‘உழைப்புக்கேற்ப தருவது’ என்பதிலிருந்து, ஒவ்வொருவரும் ஆற்றலுக்கு ஏற்ப சமூகத்திற்கு தருவார்கள், தேவைக்கு ஏற்ப தாமாக பெறுவார்கள் என்ற கம்யூனிசத்திற்குச் செல்லும் வாய்ப்பும் உண்டு.
அப்படியானால், முதலாளித்துவம், தான் நீடிக்க திட்டமிட்ட பொருளாதாரத்தின் சில அம்சங்களைப் பயன்படுத்தியது போல நாமும் பணம், பண்டம், சந்தை ஆகிவற்றை, உடனடியாக ஒழித்துக்கட்ட கனவு காணாமல், சோசலிசத்தைக் கட்டி எழுப்பப் பயன்படுத்தத் தயாராக வேண்டும்.
மார்க்ஸ், 19ம் நூற்றாண்டின் முதல் 75 ஆண்டுகள் வரையிலான முதலாளித்துவம் பற்றியே, கன கச்சிதமான அருவமயமாக்கப் பட்ட முதலாளித்துவம் பற்றியே, தமது ஆய்வுகளில் முதன்மை கவனம் செலுத்தினார். அவற்றிலிருந்து ரஷ்ய நிலைமைகள் வேறுபட்டிருந்தன. லெனின், ஏகாதிபத்திய கட்டத்தில் முதலாளித்துவம் அழுகிக்கொண்டிருக்கிறது எனவும், ஏகபோக நிதிமூலதன ஏகாதிபத்தியத்தின் வீழ்ச்சி ஜெர்மனி உள்ளிட்ட வளர்ந்த நாடுகளில் சாத்தியம் என்றும்தான் துவக்கத்தில் கருதினார். ஆனால் வரலாறோ  வேறுவிதமாக அமைந்தது. ஏகாதிபத்திய சகாப்த முதலாளித்து வம், நிறையவே தாங்கும் திறன் கொண்டுள்ளது. தனது அடிப்படை நெருக்கடிகள் தீராத முரண்பாடுகள் தாண்டியும், தன்னை புதுப்பித்துக்கொள்கிறது. 1917லிருந்து இது வரையி லான காலகட்டத்தில் முதலாளித்துவ பொருளாதாரத்தின் தாங்கும் திறன் புதுப்பித்தல் கூறுகள், சோசலிச பொருளாதாரத்தின் சாதக பாதக அம்சங்கள், பால் சுவீசி போன்ற கட்சி சாரா மார்க்சியர்கள் ஏகபோகத்தின் குறிப்பான கூறுகள் பற்றி முன்வைத்த விஷயங்கள் போன்றவை பற்றியெல்லாம், மார்க்சின் தாஸ் கேபிடலுக்கு இணையான ஒரு நூல் இன்று தேவைப்படுகிறது. 
சோசலிச பொருளாதாரம் 
சோசலிசத்தின் அரசியலிலிருந்து சோசலிச பொருளாதாரம் கட்டுவதை, தனித்து பிரித்து பார்க்க முடியாது, பார்க்க கூடாது. சோசலிச ஜனநாயகம், சோசலிச சமூகத்தை கட்டி எழுப்ப அவசியமானது. சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்ற முழக்கங்களை முன்னிறுத்தி, பாட்டாளிகள் விவசாயிகள் துணை யோடு, நிலப்பிரபுத்துவத்தை வென்ற முதலாளித்துவம், அரசியல்ரீதியாக சம்பிரதாய சமத்து வம் மட்டுமே வழங்கியது. ஆனால் பொருளாதார சமூக சமத்துவமின்மைகள், அதன் துவக்க காலத்திலிருந்தே வாட்டி வதைத்தன.  இது பற்றி ரூசோ முன்வைத்த கருத்துக்களின் தொடர்ச்சியாகவே, 21ம் நூற்றாண்டு, ‘சீற்றத்தின் காலமாக’ மாறியுள்ளதாக  பங்கஜ் மிஸ்ரா  எழுதியுள்ளார். 
ஏகாதிபத்தியம் தனக்கு மலிவான மூலப் பொருட்களும் உழைப்பு சக்தியும் சந்தைகளும் தேவை என்பதற்காக, முதலாளித்துவத்திற்கு முந்தைய மற்றும் நிலப்பிரபுத்துவ மிச்ச சொச்சங்கள் நீடிக்குமாறு விட்டு வைத்துள்ளது. அந்த சக்திகளோடு சமரசமும் செய்து கொள்கிறது. இந்த முயற்சிகள் போர் ஆபத்தையும் இயற்கை பேரழிவுகளையும் முன் கொண்டு வந்து நிறுத்துகின்றன. ரோசா லக்சம்பர்க், சோசலிசம் அல்லது காட்டுமிராண்டித்தனம் என எழுதினார். மார்க்சிய அறிஞர் இஸ்ட்டுவான் மெசாரோஸ் சோசலிசம் அல்லது பேரழிவு என்கிறார். ஆகவே, சோசலிச பொருளாதாரம், கெட்ட போரிடும் உலகினை வேரோடு சாய்க்கும் அரசியலால் மட்டுமே நிலை நிறுத்தப்படும்; இயற்கையோடு மோதி அதனை வென்றிடும் மனித குலம் என்ற கருத்தாக்கத்திற்கு பதிலாக, இயற்கையின் பிரிக்க முடியாத பகுதியாக  இயற்கையோடு இயைந்து வாழும் மனித குலம் என்ற கருத்தாக்கத்தை கொண்ட சோசலிச அரசியலால் மட்டுமே, நிலை நிறுத்தப்படும்
இந்தியாவில் 
1917 ரஷ்யா, 1949 சீனா நிலைமைகளில் இருந்து இந்திய நிலைமைகள் பெருமளவுக்கு மாறியுள்ளன. ஒரு பக்கம் அனைத்தும் தழுவிய சமசீரற்ற தன்மை நிலவுகிறது. மறுபக்கம் பொருளாதாரத்தின் சிகரங்களில் ஏகபோகங்கள் உள்ளன. சமுகமாயமாக்ப்பட்ட உற்பத்திக்கும், தனி உடைமை/தனியார் அபகரித்தலுக்கும் இடையிலான முரண்பாடு பளிச்சென தெரிகிறது. ஆகவே இந்தியாவில் பொது உடைமை என்ற கூறு வருங்கால சோசலிச பொருளாதாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் தீர்மானகரமான செல்வாக்குள்ளதாகவும் இருக்கும்.
இந்தத் தொடரின் முதல் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளது போல், இந்தியாவின் புரட்சியாளர்கள், எல்லா நிலப்பிரபுத்துவ மிச்ச சொச்சங்களையும் துடைத்தெறிவது, ஏகாதிபத்திய ஆதிக்கத்தை ஒழித்துக்கட்டுவது, திறன் வாய்ந்த வரிவிதிப்பு, தேசியமயமாக்கம் மற்றும் இதர வழிகள் மூலம் பெருமூலதனத்தை கட்டுப்படுத்துவது மற்றும் வரம்புக்குட்படுத்துவது, மொத்த ஆட்சி முறை கருவியை, பொறியமைவை ஜனநாயகபடுத்துவது என்ற ஜனநாயகப் புரட்சியின் இலட்சியங்களை நிறைவேற்றுவதன் ஊடே, சோசலிசம் நோக்கியும் துணிச்சலாக அடியெடுத்து வைப்பார்கள். 

Search