COMMUNIST PARTY OF INDIA (MARXIST - LENINIST) - LIBERATION

COMMUNIST PARTY OF INDIA (MARXIST - LENINIST) - LIBERATION, TAMILNADU

Wednesday, October 18, 2017

ஜெய் அமித் ஷாவின் தங்க ஸ்பரிசம்

(தி வயர் இணைய தள பத்திரிகையில் ரோஹிணி சிங் எழுதியுள்ள இந்தக் கட்டுரையை மாலெ தீப்பொறி வெளியிடுகிறது. இந்தக் கட்டுரையில் உள்ள விவரங்களை தி வயர் பத்திரிகை மறுஉறுதி செய்கிறது. இந்த கட்டுரையில் உள்ள விவரங்கள் தொடர்பாக ஜெய் ஷா தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. அவை அவதூறானவை எனவும் சொல்லப்பட்டுள்ளது. உண்மை எது என்று வாசகர்களே முடிவு செய்துகொள்ளலாம்).

பாரதிய ஜனதா கட்சி தலைவர் அமித் ஷாவின் மகன் ஜெய் அமித்பாய் ஷாவுக்குச் சொந்தமான ஒரு நிறுவனத்தின் வருமானம், நரேந்திர மோடி பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட, அவரது தந்தை கட்சி தலைவராக நியமிக்கப்பட்ட ஆண்டுக்குப் பின், கம்பெனி ரிஜிஸ்ட்ராரிடம் சமர்ப்பிக்கப்பட்ட விவரங்கள் படி, 16,000 மடங்கு அதிகரித்துள்ளது.

தொழில் நிறுவனங்களின் பதிவாளரிடம் சமர்ப்பிக்கப்பட்ட ஆண்டு கணக்கு விவரங்கள்படி மார்ச் 2013 மற்றும் 2014 நிறைவுறும் நிதியாண்டுகளில் ஷாவின் டெம்பிள் என்டர்பிரைசஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் செயல்பாடுகள் மிகவும் குறைவாகவே இருந்தன. இந்த நிதியாண்டுகளில் முறையே ரூ.6,230 மற்றும் ரூ.1,724 நட்டம் இருந்தது. 2014 - 2015ல் வெறும் ரூ.50,000 வருவாயில் ரூ.18,728 லாபம் காட்டப்பட்டுள்ளது. 2015 - 2016லேயே ரூ.80.5 கோடி வருவாய் காட்டப்பட்டுள்ளது.
மாநிலங்களவை உறுப்பினரும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் உயரதிகாரியுமான பரிமள் நத்வானியின் சம்மந்தியான ராஜேஷ் கண்ட்வாலா என்பவருக்குச் சொந்தமான ஒரு நிதி நிறுவனத்திடம் இருந்து எந்த அடமானமும் இல்லா மல் ரூ.15.78 கோடி கடனை டெம்பிள் என்டர்பிரைசஸ் நிறுவனம் பெற்ற அந்த ஆண்டில்தான் டெம்பிள் என்டர்பிரைசஸ் நிறுவனத்தின் வருவாயில் இந்த திகைப்பூட்டும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
2016 அக்டோபரில் ஜெய் ஷாவின் நிறுவ னம் தனது வர்த்தகத்தை முழுமையாக முடித்துக் கொண்டது. அந்த ஆண்டில் ரூ.1.4 கோடி நட் டம் ஏற்பட்டதாலும் அதற்கு முந்தைய ஆண்டு களில் ஏற்பட்ட நட்டத்தாலும் நிறுவனத்தின் நிகர மதிப்பு முழுமையாக கரைந்து போனதால் நிறுவனம் மூடப்படுவதாக நிறுவனத்தின் இயக்குநர் அறிக்கையில் சொல்லப்பட்டது.
வியாழனன்று (அக்டோபர் 5) தி வயர் இணைய பத்திரிகை ஜெய் ஷாவுக்கு ஒரு கேள்வித்தாள் அனுப்பியது. அதில் தொழில்நிறுவன பதிவாளரிடம் தரப்பட்ட விவரங்கள்படி, அவரது டெம்பிள் என்டர்பிரைசஸ் மற்றும் அவரது பிற வர்த்தக நிறுவனங்களின் சொத்துக்களில் ஏற்பட்டுள்ள ஏற்ற இறக்கங்கள் பற்றி கேள்வி எழுப்பியிருந்தது. ஜெய் ஷா, தான் பயணத்தில் இருப்பதால் அந்த கேள்விகளுக்கு உடனடியாக பதில் சொல்ல முடியாது என்று சொன்னார். ஆனால், வெள்ளியன்று ஷாவின் வழக்கறிஞர் மானிக் டோக்ரா, ஜெய் ஷா முறைகேட்டில் ஈடுபட்டார் என்று குற்றம் சாட் டியோ, அல்லது முறைகேட்டில் ஈடுபட்டார் என்று குறிக்கும்படியோ, ஏதாவது அவதூறோ குற்றம் சுமத்தியோ (எதுவும் எழுதப்பட்டால்) குற்றவியல் மற்றும் சிவில் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்ற எச்சரிக்கையுடன் பதில் அனுப்பியிருந்தார்.
தொழில்நிறுவன பதிவாளரிடம் உள்ள விவரங்கள்படி சொல்லப்படுகிற கடன், வருவாய் ஆகியவற்றை ஷாவின் வழக்கறிஞர் தனது பதிலில் மறுக்கவில்லை. உலகெங்கும் உள்ள ஜனநாயக நாடுகளில் அரசியல்வாதிகளின் உறவினர்கள் நடத்தும் வர்த்தகங்கள் பொதுமக்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்படுவது சாதாரணமான ஒன்றுதான்; அதுவும் அரசியல் சுழற்சியில் மேலே நகர்வது நடக்கும்போது அந்த சொத்துக்களில் திடீர் மாற்றங்கள் ஏற்படுகிறபோது இப்படி நடப்பது சாதாரணமான விசயம்தான். உதாரணமாக, அய்முகூ - 2 ஆட்சியின்போது, அந்த ஆட்சி காலத்தின் கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளுக்கு, காங்கிரஸ் கட்சி, கட்சி தலைவர் சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வாத்ரா, பகாசுர நில வர்த்தக நிறுவனமான டிஎல்எப்பிடம் இருந்து அடமானம் எதுவும் இல்லாமல் பெற்ற கடன்கள் உட்பட, கடன்கள் வாங்கியதன் அடிப்படையிலேயே அவரது நிலவர்த்தக தொழில்களை முன்னேற்றியது பற்றி எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு, பதில் சொல்ல நேர்ந்தது. வாத்ரா பிரச்சனையின் மீதான மிகவும் கூர்மையான தாக்குதல்கள் பாஜக தரப்பில் இருந்துதான் முன்வைக்கப்பட்டன.
ஷா சமர்ப்பித்த ஆவணங்களில் இருந்து - பொது மக்கள் பார்வையிட, பரிசீலனை செய்ய ஏதுவாக தொழில்நிறுவனங்கள் பதிவாளரிடம் கட்டாயமாக சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள் - எடுக்கப்பட்ட விவரங்கள் தொடர்பாக ஷாவின் வழக்கறிஞரிடம் இருந்து மறுப்பு எதுவும் வரவில்லை என்றாலும், ஷாவிடம் இருந்து பதில் வந்தால் அதை வெளியிடுவதில் தி வயர் மகிழ்ச்சியுறும்.
டெம்பிள் என்டர்பிரைசஸ் நிறுவன சொத்து மதிப்பில் நிகழ்ந்த ஏற்ற இறக்கங்கள்
ஜெய் ஷா மற்றும் ஜிதேந்திர ஷா ஆகி யோரை இயக்குநர்களாகக் கொண்டு, 2004ல் டெம்பிள் என்டர்பிரைசஸ் நிறுவனம் உருவாக் கப்பட்டது. பாஜக தலைவர் அமித் ஷாவின் மனைவி சோனல் ஷாவுக்கும் நிறுவனத்தில் பங்கு உள்ளது.
நிறுவனம் சமர்ப்பித்துள்ள ஆவணங்கள் படி, 2013 - 2014ல் டெம்பிள் என்டர்பிரைசஸ் நிறுவனத்துக்கு எந்த நிலையான சொத்தோ, சரக்கு பட்டியலோ, பங்குகளோ இல்லை. செலுத்திய வருமான வரியில் ரூ.5,796 தொகையை திரும்ப கூட பெற்றது. 2014 - 2015ல் ரூ.50,000 வருவாய் ஈட்டியது. ஆயினும் 2015 - 2016ல் அதன் வருவாய் ரூ.80.5 கோடிக்குத் தாவியது. இது 16 லட்சம் சத உயர்வு. ரூ.80.2 லட்சம் இருப்பும் உபரியும் இருந்தது. முந்தைய ஆண்டு இது ரூ.19 லட்சம் என இருந்தது. வர்த்தகரீதியாக செலுத்தப்பட்ட தொகை ரூ.2.65 கோடி. முந்தைய ஆண்டில் இது ரூ.5,618. நிறுவனத்தின் சொத்து மதிப்பு வெறும் ரூ.2 லட்சம். அதற்கு முன்பு நிறுவனத்துக்கு நிலையான சொத்துக்கள் எதுவும் இல்லை. குறுகிய கால கடன்கள், முன் பணம் என ரூ.4.14 கோடி வந்துள்ளது. முந்தைய ஆண்டு இது ரூ.10,000. சரக்குப் பட்டியலின் மதிப்பு ரூ.9 கோடி. முந்தைய ஆண்டு இது பூஜ்ஜியம்.
வருவாயில் காணப்பட்ட மிகப்பெரும் உயர்வு, உற்பத்தி பொருட்கள் விற்பனையில் இருந்து வந்தது என்று சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களில் விவரிக்கப்பட்டுள்ளது. இதில் அந்நிய நாடுகளில் இருந்து வந்த வருவாய் ரூ.51 கோடியும் அடங்கும். இது முந்தைய ஆண்டு வெறும் பூஜ்ஜியம்.
கேஅய்எப்எஸ் பினான்சியல் சர்வீசஸ் என்ற, பட்டியிலடப்பட்ட நிறுவனத்திடம் இருந்து அடமானம் எதுவும் இல்லாத கடனாக ரூ.15.78 கோடி பெறப்பட்டுள்ளதாக சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்கள் காட்டுகின்றன. கடன் கொடுத்த அதே நிதியாண்டில் கேஅய்எப்எஸ் பினான்சியல் சர்வீசஸ் நிறுவனத்தின் வருவாய் ரூ.7 கோடி. கேஅய்எப்எஸ் பினான்சியல் சர்வீசஸ் நிறுவனத்தின் ஆண்டறிக்கையில் அடமானம் எதுவும் பெற்றுக் கொள்ளாமல் ரூ.15.78 கோடி கடன் கொடுத்ததற்கான குறிப்பு எதுவும் இல்லை.
ஷாவின் நிறுவனத்துடன் தனது நிறுவனத்துக்கு உள்ள கொடுக்கல் வாங்கல் பற்றி வியாழனன்று தி வயர் அனுப்பிய கேள்விகளுக்கு பதில் சொல்ல கேஅய்எப்எஸ் பினான்சியல் சர்வீசஸ் நிறுவனத்தை நடத்தும் ராஜேஷ் கண்ட்வாலா முதலில் ஒப்புக்கொண்டார். ஆனால் அதன் பிறகு அலைபேசி அழைப்புகளுக்கோ, குறுஞ்செய்திகளுக்கோ பதில் அளிக்கவில்லை. வங்கி செயல்பாடுகளில் ஈடுபடாத நிதிநிறுவனமான கேஅய்எப்எஸ் பினான்சியல் சர்வீசஸ் நிறுவனத்துக்கு, கடந்த காலங்களில் இந்திய பங்கு வர்த்தக நிறுவனத்துடனும் பிரச்சனைகள் இருந்தன.
கண்ட்வாலாவின் மகளை பரிமள் நத்வானியின் மகன் திருமணம் செய்துகொண்டிருக்கிறார். அகமதாபாதில் இருந்து செயல்படுகிற நத்வானி, குஜராத்தின் ரிலையன்ஸ் நிறுவன செயல்பாடுகளை கவனித்துக் கொள்கிறார்; தொழிலும் அரசியலும் சந்திக்கும் புள்ளியில் பல ஆண்டுகளாக செயல்படுகிறார். மாநிலங்களவை உறுப்பினராக சுயேச்சையாக போட்டி யிட்டு வெற்றி பெற்றார். 2014ல் மாநிலங்களவை தேர்தலில், குஜராத் பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவுடன் வெற்றி பெற்றார்.
டெம்பிள் என்டர்பிரைசஸ் நிறுவனத்துக்கு கண்ட்வாலாவின் நிறுவனம் அடமானம் இல்லா கடன் கொடுத்ததற்கு, நத்வானியோ, ரிலையன்ஸ் நிறுவனமோ உதவி செய்யவில்லை என்று அமித் ஷாவுக்கு நெருக்கமான ஒருவர் இந்த நிருபரிடம் சொன்னார். தி வயர் கேட்ட கேள்விகளுக்கு எழுத்துபூர்வமாக பதிலளித்த ஷாவின் வழக்கறிஞர், கண்ட்வாலா, நீண்ட நாள் குடும்ப நண்பர் என்று சொல்கிறார்.
கேஅய்எப்எஸ் பினான்சியல் சர்வீசஸ் நிறுவனத்தின் ராஜேஷ் கண்ட்வாலா கடந்த பல ஆண்டுகளாக ஜெய் ஷா குடும்பத்தின் பங்கு வர்த்தகத்தை கவனித்துக் கொள்கிறார். இந்த நிதி நிறுவனம் ஜெய் ஷா மற்றும் ஜிதேந்திர ஷா ஆகியோரின் தொழில்களுக்கு கடந்த பல ஆண்டுகளாக கடன் வழங்கி வருகிறது. நான்கு ஆண்டுகளுக்கு முன் நத்வானியின் மகனுக்கும் ராஜேஷ் கண்ட்வாலாவின் மகளுக்கும் திருமணம் நடப்பதற்கு முன்பிருந்தே ராஜேஷ் கண்ட்வாலாவுடன் ஜெய் ஷாவுக்கு குடும்பரீதியான உறவுகள் இருந்தன.
கடன் பற்றிய கேள்விக்கு பதிலளித்த ஜெய் ஷாவின் வழக்கறிஞர், ‘ஜெய் ஷா, ஜிதேந்திரா ஷா மற்றும் அவரது கூட்டாளிகள் இந்த நிறுவனத்தில் (டெம்பிள் என்டர்பிரைசசில்) பங்கு மூலதனம் மற்றும் அடமானம் இல்லா கடன் ஆகியவற்றை முதலீடு செய்திருந்தனர். ஒரு புதிய வர்த்தகத்துக்கு/நிறுவனத்துக்கு செயல்படும் மூலதனம் தொடர்பான உதவிகள் கிடைக்காது என்பதால், இந்த நிறுவனத்தை நடத்த பதிவு செய்யப்பட்ட நிதி நிறுவனமான கேஅய்எப்எஸ் நிறுவனத்திடம் இருந்து வட்டியுடனான டெபாசிட்டுகள் (இன்டர் கார்ப்பரேட் டெபாசிட்) பெறப்பட்டன. வட்டியில் இருந்தே முறையாக வருமான வரியும் கட்டப்பட்டது. வட்டியும் முதலும் முழுவதுமாக திருப்பப்பட்டுவிட்டது’ என்கிறார்.
கேஅய்எப்எஸ் நிறுவனம் ஜெய் ஷாவுக்கு கடன் கொடுத்த அதே ஆண்டில், 2015ல், கண்ட்வாலாவும் ஷாவும் சத்வா ட்ரேட் லிங்க் என்ற கூட்டு நிறுவனத்தை நிறுவுகிறார்கள். அது பிறகு மூடப்படுகிறது. சத்வா ட்ரேட் லிங்க் உள்ளிட்ட, கண்ட்வாலாவுடனான கொடுக்கல் வாங்கல் பற்றி தி வயர் ஜெய் ஷாவிடம் கேட்டது. ஷாவுக்கு பதிலளித்த அவரது வழக்கறிஞர், இந்த பார்ட்னர்ஷிப் நிறுவனத்தை ஜெய் ஷாவும் கண்ட்வாலாவும் ஷாவும் உருவாக்கியிருந்தாலும், சந்தை நிலைமைகள் பாதகமாக இருந்ததால், எந்த வர்த்தகமும் நடத்தப்படவில்லை, நிறுவனம் மூடப்பட்டுவிட்டது, பதிவாளர் பதிவேடுகளில் இருந்தும் அகற்றப்பட்டுவிட்டது என்கிறார். (அழுத்தம் சேர்க்கப்பட்டுள்ளது).
பாதகமான சந்தை நிலைமைகள் என்று வழக்கறிஞர் எதைச் சொல்கிறார் என்று தெளிவாக இல்லை; ஏனென்றால், அந்த கூட்டு நிறுவனம் உருவாக்கப்பட்ட அதே ஆண்டில்தான் கண்ட்வாலாவின் நிறுவனம் ஷாவின் நிறுவனத்துக்கு ரூ.15.78 கோடி கடன் தந்துள்ளது. ஷா நிறுவனமும் ரூ.80.5 கோடி வருவாயை எட்டியுள்ளது.
கேஅய்எப்எஸ் பினான்சியல் சர்வீசஸ் நிறுவனம் கடன் தந்த ஆண்டு முன்வைத்த  ஆண்டறிக்கையில் ஜெய் ஷா நிறுவனத்துக்கு கடன் தந்தது பற்றி குறிப்பேதும் ஏன் இல்லை என்ற குறிப்பான கேள்விக்கு கண்ட்வாலாவிடம் இருந்து பதில் இல்லை.
கிடுகிடு வளர்ச்சிக்குப் பிறகு, சரிவு
ஷா சமர்ப்பித்துள்ள ஆவணங்கள்படி, டெம்பிள் என்டர்பிரைசஸ் மொத்த விற்பனையில் ஈடுபடுகிற நிறுவனம். அதன் 95% வருவாய் விவசாய உற்பத்திப் பொருட்களை விற்பதன் மூலம் வருகிறது. ஷாவின் வழக்கறிஞர் தந்துள்ள பதிலுரையில் டெம்பிள் என்டர் பிரைஸ் விவசாய உற்பத்தி பொருட்கள் ஏற்றுமதி இறக்குமதி வர்த்தகம் செய்கிறது என சொல்லப்பட்டுள்ளது. ஷாவின் கூட்டாளியான ஜிதேந்திர ஜெயந்திலால் ஷாவின் வர்த்தக புத்தி கூர்மையும் ஜெய் ஷாவின் கல்வியும் நிறுவனம் செவ்வனே செயல்பட காரணமாக இருந்ததாக அந்த பதிலுரையில் பெருமிதமாக குறிப்பிடப்பட்டுள்ளது. ‘நிறுவனத்தின் உடைமையும் நிர்வாகமும் முதன்மையாக ஜெய் ஷா மற்றும் ஜிதேந்திர ஷா (பழைய குடும் நண்பர்) மற்றும் அவரது கூட்டாளிகளிடம் இருந்தது. ஜெய் ஷா புகழ் பெற்ற நீர்மா பல்கலை கழகத்தில் பி.டெக் பட்டம் பெற்றவர். ஜிதேந்திர ஷா கடந்த பல ஆண்டுகளாக பண்டங்கள் வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகிறார். அவர் நடத்துகிற நிறுவனங்கள் ரூ.100 கோடிக்கும் மேல் ஆண்டு வருவாய் ஈட்டுகின்றன’ என அவர் சொல்கிறார்.
பண்டங்கள் வர்த்தகத்தில் ரூ.80 கோடி வருவாய் ஒரு அசாதாரணமான பெரிய தொகை அல்ல என்றும் ஷாவின் வழக்கறிஞர் சொல்கிறார்.
ஆனால், ஒரு நிறுவனத்தின் வருவாய் ஒரே ஆண்டில் (2015 - 2016 நிதியாண்டில்) வெறும் ரூ.50,000ல் இருந்து ரூ.80 கோடிக்கும் மேல் தாவியுள்ளபோது, சென்ற ஆண்டு அதன் வர்த்தக நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டுவிட்டதுதான் அசாதாரணமானதாக இருக்கிறது. இதற்கு ஷாவின் வழக்கறிஞர் அளித்துள்ள விளக்கம்: ‘டெம்பிள் என்டர்பிரைசசின் வர்த்தகம் துரதிர்ஷ்டவசமாக நட்டமானதால் 2016 அக்டோபரில் நிறுவனம் மூடப்பட்டது’.
பங்கு வர்த்தகத்திலிருந்து மின்உற்பத்திக்கு
2015 ஜுலையில் குசும் பின்சர்வ் என்ற பார்ட்னர்ஷிப் நிறுவனம் துவக்கப்பட்டது. அதில் ஜெய் ஷாவுக்கு 60% பங்குகள் உள்ளன. துவக்கத்தில் அது, குசும் பின்சர்வ் பிரைவேட் லிமிடெட் என்ற பிரைவேட் லிமிடெட் கம்பெனியாக இருந்தது. பிறகு லிமிடெட் லயபிளிடி கம்பெனியாக மாற்றப்பட்டது. அந்த பிரைவேட் லிமிடெட் கம்பெனியும் 2014 - 2015 நிதியாண்டில் கேஅய்எப்எஸ் நிறுவனத்திடம் இருந்து ரூ.2.6 கோடி டெபாசிட் பெற்றுள்ளது. இந்த நிறுவனம் கடைசியாக சமர்ப்பித்துள்ள ஆவணங்கள்படி பார்ட்னர்ஷிப் நிறுவனம் ரூ.24 கோடி வருமானம் ஈட்டியுள்ளது.
இந்த ஆவணங்களில் அடமானம் இல்லா கடன் ரூ.4.9 கோடி பெறப்பட்டுள்ளதாகவும் சொல்லப்பட்டுள்ளது. ஆனால் யாரிடம் இருந்து பெறப்பட்டது என்று சொல்லப்படவில்லை. குசும் பின்சர்வின் முதன்மையான வர்த்தகம், பங்கு வர்த்தகம், இறக்குமதி, ஏற்றுமதி நடவடிக்கைகள், விநியோகம் மற்றும் சந்தை அறிவுரை சேவைகள் என்று ஷாவின் வழக்கறிஞர் சொல்கிறார். கேஅய்எப்எஸ் நிறுவனம் இந்த நிறுவனத்துக்கு தொடர்ந்து கடன் வழங்கி வருகிறது என்றும் அவர் சொல்கிறார். இந்த நிறுவனம் கடந்த பல ஆண்டுகளாக, கேஅய்எப்எஸ் நிறுவனத்திடம் இருந்து டெபாசிட்டுகள், கடன்கள் பெற்று வருகிறது. ரூ.4.9 கோடி என்ற தொகை அந்த வகையில் நிலுவையில் உள்ள தொகை என்கிறார். இந்தத் தொகை செயல்படு மூலதனமாக தொடர்ந்து பயன்படுத்தப்பட்டு வந்தது. வட்டியில் இருந்தே அதற்கான வருமான வரி பிடித்தம் செய்யப்படுகிறது. வட்டியும் முதலும் முழுவதுமாக திருப்பிச் செலுத்தப்பட்டுவிட்டது என்று அவரது பதிலுரை சொல்கிறது.
நிறுவனத்தின் முதன்மையான வர்த்தகம் பங்கு வர்த்தகம் என இருக்கும்போது, முற்றிலும் தொடர்பில்லாத ஒரு வர்த்தகத்தில் அந்த நிறுவனம் ஈடுபடுவது அது சமர்ப்பித்துள்ள ஆவணங்களில் இருந்து தெரிய வருகிறது: மத்தியபிரதேசத்தின் ரட்லம் பகுதியில் 2.1 மெகாவாட் திறன் கொண்ட காற்றாலை மின் உற்பத்தி நிறுவனத்தை அது தொடங்குகிறது.
ஒரு கூட்டுறவு வங்கி மற்றும் ஒரு பொதுத் துறை நிறுவனத்தில் இருந்து கடன்
கலுப்பூர் கூட்டுறவு வங்கியில் இருந்தும் ரூ.25 கோடி அளவுக்கு ஷாவின் நிறுவனம் கடன் வாங்கியிருப்பதும் அந்த ஆவணங்களில் தெரிய வருகிறது. வங்கியின் இயக்குநர் குழுவில் நீர்மா குழுமம் மற்றும் நீர்மா பல்கலை கழகத்தைச் சேர்ந்தவர்களும் உள்ளனர். நீர்மாவின் அம்புபாய் மகன்பாய் படேல் வங்கியின் கவுரவ தலைவர்.
பாஜக தலைவர் அமித் ஷாவின் ரூ.5 கோடி மதிப்புள்ள சொத்து அங்கு அடமானம் வைக்கப்பட்டுள்ளது. அமித் ஷாவுக்கு நெருங்கிய யஷ்பால் சுடசாமா, குசும் பின்சர்வ் பிரை வேட் லிமிடெட் நிறுவனத்துக்கு 2014ல் மாற்றியெழுதிய இன்னுமொரு சொத்தும் அங்கு அடமானத்தில் உள்ளது. 2002 சதுர அடி கொண்ட அந்த சொத்தின் மதிப்பு என்ன என்று அமித் ஷா சொல்லவில்லை. அதன் சந்தை மதிப்பு ரூ.1.2 கோடி. அகமதாபாத் மாவட்ட கூட்டுறவு வங்கியின் முன்னாள் இயக்குநரான சுடசாமா, சொராபுதீன் மற்றும் அவரது மனைவி கவுசர் பீ போலி மோதல் படுகொலை வழக்கில், மத்திய புலனாய்வு துறையிடம் இருந்து உண்மையை மறைக்க வேண்டும் என்று சாட்சிகளை ஏற்றுக்கொள்ள வைக்க, நிர்ப்பந்தப்படுத்த, மிரட்ட, செல்வாக்கு செலுத்த, (அமித் ஷா சார்பாக) முயற்சி செய்ததற்காக, 2010ல் மத்திய புலனாய்வு துறையின் குற்றச்சாட்டுக்கு உள்ளானவர். சிபிஅய் சிறப்பு நீதி மன்றம், 2014 டிசம்பரில் அமித் ஷாவை விடுவித்ததைப் போல, 2015ல் வழக்கில் இருந்து சுடசாமாவை விடுவித்தது.
ரூ.7 கோடிக்கும் குறைவாக மதிப்புடைய குசும் பின்சர்வ் நிறுவனம் கூட்டுறவு வங்கியில் இருந்து எப்படி ரூ.25 கோடி வரை கடன் பெற்றது, வேறு சொத்துக்கள் அடகு வைக்கப்பட்டனவா என்ற கேள்விகளுக்கு பதிலளித்துள்ள ஷாவின் வழக்கறிஞர், வங்கி அந்த நிறுவனத்துக்கு கடன் தரவில்லை என்றும் ரூ.25 கோடி மதிப்புள்ள கடன் பத்திரத்தின் வடிவத்தில் செயல்பாட்டு மூலதன உதவி வழங்கியது என்கிறார். ‘இந்த உதவி அவ்வப்போது பெறப் படுகிறது என்றும் அவரது பதிலுரை சொல்கிறது. வழக்கமான வங்கி நிபந்தனைகள் அடிப் படையில் இந்தக் கடன்கள் பெறப்பட்டன, கடன் பத்திரத்தின் அடிப்படையில் வாங்கப்பட்ட பொருட்கள் அடமானத்தில் இருப்பது, 10% பணம் ஒப்படைப்பு, ஜெய் ஷாவின் தந்தையின் சொத்தும், முறையாக பதிவு செய்யப்பட்ட பத்திரம் மூலம் 2014 ஏப்ரல் 5 அன்று வாங்கப்பட்ட குசும் பின்சர்வின் இன்னொரு சொத்தும் அடமானம் வைக்கப்பட்டது போன்ற விவரங்கள் 2014 ஏப்ரல் முதல் 2015 மார்ச் வரையிலான நிதியறிக்கையில் முன்வைக்கப்பட்டுள்ளன’ என்று பதிலுரை சொல்கிறது.
‘கடன் பத்திரம் காலாவதியாகும் முன்பு வங்கிக்கு பணம் திருப்பச் செலுத்தப்படுவதால் வங்கிக்கு நிதி அல்லாத, ஆபத்தும் இல்லாத உதவி தருவதாகிறது’ என பதிலுரை சொல்கிறது.
கூட்டுறவு வங்கி தவிர, ஜெய் ஷா பார்ட்னர்ஷிப் நிறுவனத்துக்கு மார்ச் 2016ல் பொதுத் துறை நிறுவனமான இந்தியன் ரெனியுபள் எனர்ஜி டெவலப்மென்ட் ஏஜென்சி ரூ.10.35 கோடி கடன் தந்துள்ளது. இந்த நிறுவனத்தின் இணையதளப் பக்கத்தில் இது ஒரு மினி ரத்னா நிறுவனம் என்று சொல்லப்படுகிறது. இது புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் செயல்படுகிறது. கடன் தரப்பட்டபோது பியுஷ் கோயல் அமைச்சராக இருந்தார்.
‘2.1 மெகாவாட் திறன் கொண்ட மின் நிலையம் அமைக்க இந்தியன் ரெனியுபள் எனர்ஜி டெவலப்மென்ட் ஏஜென்சியிடம் இருந்து பெறப்பட்ட கடன் (ஏறத்தாழ ரூ.1.4 கோடி) அப்போதிருந்த சந்தை நிலவரங்கள் அடிப்படையிலானது; சாதாரணமாக தொழில்களுக்கு தரப்படும் விதத்தில் முறையாக பெறப்பட்டது. 30.06.2017 நிலவரப்படி, ரூ.8.52 கோடி கடன் பாக்கி நிலுவையில் உள்ளது. வட்டியும் அசலும் முறையாக செலுத்தப்படுகின்றன’ என்று ஷாவின் வழக்கறிஞர் சொல்கிறார்.
ஷாவின் வழக்கறிஞர் சொல்வதுபோல், முதன்மையான வர்த்தகம், பங்கு வர்த்தகம், இறக்குமதி, ஏற்றுமதி நடவடிக்கைகள், விநியோகம் மற்றும் சந்தை அறிவுரை சேவைகள் வழங் கும் ஒரு பார்ட்னர்ஷிப் நிறுவனம், உள்கட்டுமான துறையிலோ, மின்சக்தி துறையிலோ எந்த அனுபவமும் இல்லாத ஒரு நிறுவனம், 2.1 மெகா வாட் திறன் கொண்ட மின் நிலையம் அமைக்க எப்படி முடிவு செய்தது, எப்படி கடனும் பெற்றது என்பது தெளிவாக இல்லை. தி வயர், இந்தியன் ரெனியுபள் எனர்ஜி டெவலப்மென்ட் ஏஜென்சியிடம் கடன் தரும் கொள்கைகள் பற்றி கேட்டுள்ளது. பதில் கிடைத்தவுடன் அந்த பதிலையும் தி வயர் வெளியிடும்.
ஷாவின் வழக்கறிஞரிடம் இருந்து ஒரு மிரட்டல்
ஜெய் ஷாவுக்காக பதில் அளித்த அவரது வழக்கறிஞர் ஜெய் ஷாவின் வர்த்தகங்கள் தொடர்பாக கட்டுரை எதுவும் வெளியிடப்பட்டால் கடுமையான சட்டரீதியான விளைவுகள் இருக்கும் என்று குறிப்பிடுகிறார்:
‘மேலே சொல்லப்பட்டுள்ள பதில்கள் மற்றும் விளக்கங்களில், விவரங்கள் முற்றிலும் தெளிவாக தரப்பட்டுள்ளன. இது தொடர்பாக எந்த கட்டுரையும் வெளியிட வேண்டாம் என நீங்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள். அப்படி வெளியிடுவது எனது கட்சிக்காரரின் தனிப்பட்ட அந்தரங்க உரிமைகளை மீறுவதாகும். மட்டும் இன்றி அவதூறு செய்வதுமாகும்’.
‘ஜெய் ஷா, சட்டப்படியான வர்த்தகத்தில் ஈடுபடும் ஒரு தனிப்பட்ட குடிமகன். அவரது வர்த்தக கொடுக்கல் வாங்கல்கள் நேர்மையா னவை, சட்டபூர்வமானவை, சரியானவை. அவரை ஒரு பொய்யான, உற்பத்தி செய்யப்படு கிற சர்ச்சையில் சிக்க வைக்கும் நோக்கம் உங்கள் கேள்வித்தாளில் தெரிகிறது. அவர் முறைகேட்டில் ஈடுபட்டார் என்று குற்றம் சாட் டியோ, அல்லது முறைகேட்டில் ஈடுபட்டார் என்று குறிக்கும்படியோ, ஏதாவது அவதூறோ குற்றம் சுமத்தியோ (எதுவும் எழுதப்பட்டால்) குற்றவியல் மற்றும் சிவில் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும். அது தனிப்பட்ட அந்தரங்க உரிமையை மீறுவதுமாகும். அப்படி எதுவும் வெளியிடப்பட்டால் உங்கள் மீது அவதூறு வழக்கு தொடுக்கவும் சிவில் சட்டங்கள்படியான குற்றம் புரிந்த வழக்கு தொடுக்கவும் அவருக்கு உரிமை இருக்கிறது’.
‘மட்டுமின்றி, நீங்களோ, வேறு எவரோ, அச்சு, மின்னணு ஊடகங்களில், அவரது தனிப் பட்ட அந்தரங்க அடிப்படை உரிமையை மீறும் விதத்திலோ, அவருக்கு அவப்பெயர் உருவாக்கும் விதத்திலோ அவதூறு அல்லது பொய் குற்றச்சாட்டுகளை எழுப்பினால், அதுபோன்ற அவதூறு அறிக்கையை எழுதும் ஒளிபரப்பும்  நபர், நிறுவனம் உள்ளிட்ட நபர் மீது, நிறுவனம் மீது வழக்கு தொடுக்கும் உரிமை ஜெய் ஷா வுக்கு இருக்கிறது’.

ரோஹிணி சிங் சமீப காலம் வரை எகானாமிக் டைம்ஸ் பத்திரிகையில் புலனாய்வு பத்திரிகையாளராக பணியாற்றினார். 2011ல், ராபர்ட் வாத்ராவுக்கும் டிஎல்எப் நிறுவனத்துக்கும் இடையிலான வர்த்தக உறவுகள் பற்றி அவர்தான் எழுதினார்.

நன்றி:  https://thewire.in/185512/amit-shah-narendra-modi-jay-shah-bjp/

Search