COMMUNIST PARTY OF INDIA (MARXIST - LENINIST) - LIBERATION

COMMUNIST PARTY OF INDIA (MARXIST - LENINIST) - LIBERATION, TAMILNADU

Wednesday, October 18, 2017

கொசுக்களிடம் இருந்து கூட 
மக்களை பாதுகாக்க முடியாத அரசு

நீர்நிலைகளைத் தேடி வரும் வனவிலங்குகளால் தமிழக மக்களுக்கு ஆபத்து ஏற்பட்டது. வருவதைப் பார்த்ததால் ஓடி ஒளிந்துகொள்ளக் கூட வாய்ப்பு இருந்தது. ஓடித் தப்பித்துக் கொள்ள முடியாதவர்கள் இறந்துபட்டார்கள். அந்த விலங்குகளும் மனித வேட்டைக்காக ஊருக்குள் வரவில்லை. குடிநீர் தேடி வந்தன. இன்று வெறும் டெங்கு கொசுக்கள் தமிழக மக்களை வேட்டையாடுகின்றன. எங்கிருந்து எப்போது தாக்குகின்றன, தாக்கினவா இல்லையா என்று கூட தெரியாமல் மக்கள் உயிர் விடுகின்றனர்.

ஆறு மாதங்களுக்கு முன்பிருந்தே மர்மக் காய்ச்சல் பரவி வருவதாகத்தான் செய்திகள் வெளியிடப்பட்டன. அப்போது முதல் தடுப்பு நடவடிக்கைகள் எடுத்திருந்தால் கூட ஓரளவு உயிரிழப்புகளை தடுத்திருக்க முடியும். 2012ல் டெங்கு காய்ச்சல் மக்களை பலி வாங்கத் துவங்கியபோது, மர்மக் காய்ச்சல் என்று தான் சொல்லப்பட்டது. அம்மா வழியில் ஆட்சி நடத்துபவர்கள் அன்று ஜெயலலிதா சொன்னதை, இன்று ஆறு மாதங்களுக்கும் மேலாக சொல்லப் பார்த்தார்கள். பாதிக்கப்பட்ட மக்கள் சுருண்டுபோய் மடிவதை வேடிக்கைப் பார்த்தார்கள்.
பல உயிர்கள் பறிபோகும் வரை பிரச்சனையை மூடி மறைக்கப் பார்த்த கொலைகார அரசு, நாளொன்றுக்கு சராசரியாக 8 முதல் 10 உயிரிழப்புகள் என அதிகரித்த பிறகு செயலில் இறங்கியுள்ளது. இப்போதும் செயல்கள் போதுமானவையா என்ற கேள்வி இருக்கிறது. குட்கா அமைச்சர் விஜயபாஸ்கர் ஒரு படையுடன் மருத்துவமனைகளுக்குச் செல்கிறார். ஓரளவு தேறி வரும் நோயாளிகளைப் பார்க்கிறார். சிரிக்கிறார். தொலைக்காட்சிகள் முன் நிற்கிறார். ஏதோ சொல்கிறார். அதே மருத்துவமனையில் அன்று உயிரிழப்பு கூட ஏற்பட்டிருக்கலாம். அல்லது டெங்குவால் பாதிக்கப்பட்ட ஒருவர் உயிர் மீட்கப் போராடிக் கொண்டு இருந்திருக்கலாம். கண்ணால் காண்பதே மெய் என்று நம்ப வைக்க இன்று ஊடக பலம் அவர்களிடம் உள்ளது. அதையும் மீறி உண்மை வெளிவருகிறது. ஏனென்றால் உயிர்கள் போய்க் கொண்டே இருக்கின்றன.
ஆற்று நீர் ஆவியாகாமல் இருக்க, தெர்மாகோல் போர்த்திய அமைச்சர் செல்லூர் ராஜ÷, சாணி தெளித்தால் டெங்கு கொசு வராது என்றார். ஜெயலலிதா, தான் உயிருடன் இருந்த வரை இவர்களை எல்லாம் ஏன் பேச அனுமதிக்கவில்லை என்று இப்போது நமக்குப் புரிகிறது. அவர் சர்வாதிகாரி என்று நாம் கருதினோம். அது உண்மைதான். ஆனால், சர்வாதிகாரியின் கீழ் முட்டாள்களும் கோமாளிகளும்தானே இருக்க முடியும்.
கொசுக்கள் உருவாகும்படி தங்கள் சுற்றுப்புறங்களை அசுத்தமாக வைத்தார்கள் என்று அறிவிப்பாணை அனுப்பி சென்னையில் ரூ.11 லட்சம் வரை அபராதமும் வசூலித்துவிட்டார்கள். ஆனால், சென்னை மக்களை டெங்கு கொசுக்களின் தாக்குதலில் இருந்து ஆட்சியாளர்களால் இன்னும் காப்பாற்ற முடியவில்லை. டெங்கு இறப்புகள் தொடர்கின்றன.
சாமான்ய மக்களுக்கு அறிவுரைகளை வாரி வழங்கினார்கள். சுற்றுப்புறங்களை சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள், தண்ணீர் தேங்க விடாதீர்கள், குப்பைகளை சேர்க்காதீர்கள் என போதித்தார்கள். தமிழ்நாட்டின் மாண்புமிகு அமைச்சர் பெருமக்களே, குப்பை சேர்க்க வேண்டும் என்றோ, தண்ணீர் தேக்கி வைக்க வேண்டும் என்றோ, சுற்றுப்புறத்தை அசுத்தமாக்க வேண்டும் என்றோ சாமான்ய மக்கள் சபதம் எதுவும் எடுக்கவில்லை. இவற்றுக்குக் காரணம் நீங்கள். சுற்றுப்புறங்களை சுத்தமாக வைக்க, தண்ணீர் தேங்காமல் இருக்க, குப்பை சேராமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டியது நீங்கள். இந்தப் பணிகள் நடக்க மக்கள் செலுத்தும் வரிப் பணத்தில் இருந்து நிதி ஒதுக்குவதாகச் சொல்கிறீர்கள். பிறகு ஏன் குப்பை சேர்கிறது? ஏன் தண்ணீர் தேங்குகிறது? பதில் சொல்ல வேண்டியது நீங்கள்.
சென்னை மாநகரத்தை மட்டும் எடுத்துக் கொள்வோம். இங்கு நிரந்தர மற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்கள் 2,955 பேர் கொசு கட்டுப்படுத்தும் பணிகளில் முடுக்கிவிடப்பட்டுள்ளதாக அரசு சொல்கிறது. இவர்கள் ஒவ்வொரு வரும் வாரத்தில் 500 வீடுகளுக்குச் சென்று பார்த்து கொசு தடுப்பு நடவடிக்கைகளை மேற் கொள்ள வேண்டும். இது சாத்தியமா? இந்த நிரந்தரத் தொழிலாளர்களில் பலர் 40 வயதுக்கு மேற்பட்டவர்கள். ஒரு நாள் கடுமையாக இந்த வேலையைப் பார்த்தால் மறுநாள் விடுப்பு தேவைப்படும். இப்படி அவர்கள் ஒரு வாரத்தில் 500 வீடுகள் என்று பரிசோதனை மேற்கொண்டு சுத்தப் பணிகளில் ஈடுபட்டாலும் பிரச்சனை முழுமையாகத் தீராது. ஏனென்றால் ஒவ்வொரு வார்டிலும் 500க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. சென்னை மாநகர நிர்வாகம் 500 வீடுகளைத்தான் பார்க்கச் சொல்கிறது. மிச்சமுள்ள வீடுகளையும் பரிசோதனை செய்து சுத்தப்படுத்த வேண்டும் என்ற திட்டமிடலே, பார்வையே சென்னை மாநகராட்சி அதிகாரிகளிடமோ, சம்பந்தப்பட்ட அமைச்சரிடமோ இல்லை. ஆக, அரைகுறையான துப்புரவு பணிகள் பிரச்சனைகளுக்கு ஒரு போதும் தீர்வு தரப் போவதில்லை.
இந்தத் தொழிலாளர் எண்ணிக்கையும் 2015ல் கிட்டத்தட்ட 3,500 என இருந்து இன்று குறைக்கப்பட்டுவிட்டது. இந்தப் பணிகளுக் காக அமர்த்தப்படும் ஒப்பந்தத் தொழிலாளர்கள் இந்தப் பணிகள் மட்டுமல்லாது வேறு துப்புரவுப் பணிகளிலும் ஈடுபடுத்தப்படுகின்றனர். இவர்கள் மிக சொற்ப கூலி பெறுபவர்கள். இதற்கேற்பவே அவர்கள் வேலையும் இருக்கும். வசதி படைத்தவர்கள் தங்கள் வீடுகளில் குளிர்சாதன வசதி ஏற்படுத்திக் கொள்ளலாம். கொசு அண்டாமல் வேறு ஏற்பாடுகள் செய்து கொள்ளலாம். சென்னையில் சாக்கடையில் இருந்து ஒன்றரை கி.மீ தள்ளி வீடு என்று எந்த இடத்திலும் இருக்க முடியாது என்று கமல்ஹாசன்போல் வசதி படைத்தவர்கள் கூட வருத்தப்படத்தான் செய்கிறார்கள். சாமான்ய மக்கள் என்ன செய்ய முடியும்? சுற்றுப்புற அசுத்தம் வீட்டுக்குள் நிச்சயம் நீளும். பல்வேறு வழிகளிலும் சுகாதார சீர்கேடுகளை கொண்டு வரும். டெங்கு வரும்.
தண்ணீர் தேக்கி வைக்காமல் இருக்க வேண்டும் என்றுதான் மக்கள் விரும்புகிறார்கள். அது அவர்கள் கனவாகக் கூட இருக்கிறது.  தினமும் தண்ணீர் கிடைக்கும் என்றால் அவர்கள் ஏன் தண்ணீரை சேமித்து வைக்க சிறப்பு முயற்சிகள் எடுக்க வேண்டும்? ஒவ்வொரு வீட்டுக்கும் தினமும் தண்ணீர் என்று ஜெயலலிதா வாக்குறுதி தந்தார். அந்த வாக்குறுதி நிறைவேற்றப்பட்டால் மக்கள் தண்ணீரை சேமித்து வைக்க படாத பாடு பட மாட்டார்கள். அன்றன்று தரப்படும் தண்ணீரை பயன்படுத்துவார்கள். ஜெயலலிதா தந்த வாக்குறுதி பற்றி வாயே திறக்காத நமது அமைச்சர்கள் மக்களுக்கு தண்ணீர் என்ற மிகவும் சாதாரணமான அடிப்படை வசதியை கூட உறுதிப்படுத்த தவறுகிறார்கள்.
நகர்ப்புறங்களை அழகுப்படுத்துவது, விரிவுபடுத்துவது என்ற பெயரில் சாமான்ய மக்களை அவர்கள் வாழும் பகுதிகளில் இருந்து 20 கி.மீ தொலைவுக்கு அப்பால் குடியேற்றினார்கள். புதிய குடியிருப்புகள் என்றார்கள். ஆனால் எந்த அடிப்படை வசதியும் உருப்படியாக அங்கு செய்து தரப்படவில்லை. அந்த வீடுகளின் சுற்றுப்புறமே குப்பையும் சாக்கடையும்தான் என்றிருக்கிறது. அவர்களைப் பாதுகாக்க எந்த நடவடிக்கையும் எடுக்க ஆட்சியாளர்கள் தயார் இல்லை. அங்கு கொசு தாண்டவமாடாமல் மானும் மயிலுமா துள்ளியாடும்?
கொசுத் தடுப்பு பணியாளர்கள் எதிர் கொள்ளும் பிரச்சனைகள் போல், குப்பை அள்ளும் பணிகளில் ஈடுபடும் தொழிலாளர்களும் பணிச்சுமை முதல் பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொள்கிறார்கள். பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படுவதில்லை என்பது முதல் மிக மோசமான பணி நிலைமைகளே உள்ளன. இவர்களும் ஒப்பந்த முறையில் பணிக்கமர்த்தப்படுபவர்கள். மிகவும் கடுமையாக உழைக்கிறார்கள். ஆனால், இவர்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டியதும், இவர்கள் பணி நிலைமைகளை மேம்படுத்த வேண்டியதும் அரசின் கைகளில் உள்ளது. இதைச் செய்தால்தான் குப்பை பிரச்சனை தீரும். இதற்கு நமது அமைச்சர்கள் தயாராக இல்லை. எந்த சந்தில் நுழைந்தால் எவ்வளவு காசு பார்க்கலாம் என்ற திட்டமிடுதலும் தொலைநோக்கும்தான் அவர்களது சிறப்பாக இருக்கிறது. ஒப்பந்ததாரரை தேர்ந்தெடுப்பது முதல் ஒவ்வொரு கட்டத்திலும் காசுதான் பேசுகிறது. மக்கள் நலன் காற்றில் பறந்துவிடுகிறது.
சென்னை மாநகராட்சியில் காணப்படும் இந்த நிலைமைகள்தான் தமிழ்நாட்டின் எல்லா மாநகராட்சி நிர்வாகங்களிலும் காணப்படுகின் றன. உள்ளாட்சி நிர்வாகங்களும் இதே விதிகளில்தான் இயங்குகின்றன. பசுமை வீடுகள், வேறு வேறு வீட்டு வசதித் திட்டங்கள் என பல நூறு ஆயிரம் கோடி என நிதி ஒதுக்கப்படுகிறது. இந்தத் திட்டங்களில் கழிவுநீர் தேங்காமல் இருக்க என்ன செய்தார்கள்? குப்பை சேராமல் இருக்க என்ன நடவடிக்கை எடுக்கிறார்கள்? குடிநீருக்கு வழியுண்டா? எங்கே போகிறது எங்கள் பணம்?
சுற்றுப்புற சுத்தத்தை உறுதிப்படுத்தாமல் மக்களை நோய் தாக்க விடுகிற அரசு, நோய் வந்த பிறகு மருத்துவமனைகளுக்கு ஓடி வரும் மக்களையும் வஞ்சிக்கிறது. போதுமான மருந்துகள் உட்பட குறைந்தபட்ச வசதிகள் அரசு மருத்துவமனைகளில் உறுதி செய்யப்படாத தால் டெங்கு பாதிப்புக்கு உள்ளாகி வருபவர்களுக்கு முறையான சிகிச்சை அளிக்க முடியாமல் அங்கு வந்த பிறகு மக்கள் பலியாகிறார்கள்.
பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு என்ற பெயரில் சுகாதாரத் துறையில் ஒவ்வோர் ஆண்டும் பெரும் நிதி ஒதுக்கப்படுகிறது. கடந்த ஆறு ஆண்டுகளாக, டெங்கு கடுமையாக தாக்கத் துவங்கிய 2012ல் இருந்து, இந்த நிதி முழுவதும் அஇஅதிமுகவினர் கட்டுப்பாட்டில்தான் உள்ளது. என்ன நோய் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன? எந்த நோயை எப்படித் தடுத்தார்கள்? மருத்துவமனைகளில் மருந்து இல்லை, படுக்கை இல்லை என்ற பதில்தான் மக்களுக்கு மிஞ்சியிருக்கிறது. நிலையான மருத்துவமனைகள், நடமாடும் மருத்துவமனைகள் என்று கவர்ச்சிச் சொற்கள் சொல்கிறார்கள். டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கிறோம் என்றே தெளிவாகச் சொல்கிறார்கள். அவை வெற்றுச் சொற்களாகவே நிற்கின்றன. மக்கள் சாகும்போது, வார்த்தைகள் மட்டும் வாழ்கின்றன.
டெங்கு சாவுகளை ஒட்டி தமிழக மக்கள் மத்தியில் எழுந்த ஆழமான சீற்றத்தைக் கட்டுப்படுத்த, மத்தியில் இருந்து ஒரு குழு வந்தது. வந்தவர்கள், எல்லாம் சிறப்பு என்கிறார்கள். அதில் ஒருவர் 15,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளபோது 40 பேர் உயிரிழப்பு ஒரு பெரிய விசயமில்லை என்கிறார். ஒரு மருத்துவருக்கு உயிரிழப்பு பெரிய விசயமாகப் படவில்லை! பாஜக அரசிடம் என்ன அறிக்கை முன்வைக்கப் போகிறார்கள் என்று நாம் பொறுத்திருந்து பார்க்க வேண்டும். புயல், வறட்சி என மாநிலம் கடுமையாக பாதிக்கப்பட்டபோது மத்திய அரசு எப்படி கண்டுகொள்ளவில்லையோ அதேதான் இப்போதும் நடக்கும்.
ஆனால், துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் பிரதமரைச் சந்திக்கச் செல்கிறார். டெங்குவோ, தமிழ்நாட்டின் பிற மக்கள் பிரச்சனைகளோ அவரது நிகழ்ச்சி நிரலில் இருப்பதாகத் தெரியவில்லை. உட்கட்சிப் பிரச்சனைகளைத் தீர்க்க பாஜகவை அணுகும் அளவுக்கு தமிழ்நாட்டின் மானம் போகிறது என்பது ஒரு பக்கம் இருக்க, வேறு ஒரு கட்சியின் உட்கட்சி பிரச்சனைகள் பற்றி பேச, நாட்டின் பிரதமரும் தயாராக இருக்கிறார் என்பது இன்னும் கேவல மான நிலைமை.
டெங்கு ஒழிப்பு என்ற சாதாரணமான பிரச்சனைக்குக் கூட போராட வேண்டிய நிலைக்கு தமிழக மக்களைத் தள்ளிவிட்ட பழனிச்சாமி அரசாங்கத்தை ஒழிக்க மக்கள் போராட்டங்கள் வலுக்க வேண்டும்.

தமிழக அரசே, டெங்கு பரவுவதைக் கட்டுப்படுத்து!

டெங்குக் காய்ச்சல் பரவுவதைக் கட்டுப்படுத்த தமிழக அரசாங்கம் உடனடி நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என வலியுறுத்தி அக்டோபர் 12 அன்று இகக மாலெவும் புரட்சிர இளைஞர் கழகமும் கரம்பக்குடியில் ஆர்ப்பாட்டம் நடத் தின. தேங்கிக் கிடக்கும் குப்பைகள் அகற்றப்பட வேண்டும், சாக்கடைகள் சுத்தம் செய்யப்பட வேண்டும், புதிதாகக் கட்டப்பட்டு திறக்கப்படாமல் இருக்கும் அரசு மருத்துவமனை உடனடியாக திறக்கப்பட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும், வரத்து வாரிகள் தூர்வாரப்பட்டு வரத்து வாரி ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட வேண்டும், எந்த நேரத்திலும் இடிந்து விழும் நிலையில் இருக்கும் கரம்பக்குடி பேருந்து நிலையத்தை உடனடியாக செப்பனிட வேண்டும் ஆகிய கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் எழுப்பப்பட்டன.

Search