COMMUNIST PARTY OF INDIA (MARXIST - LENINIST) - LIBERATION

COMMUNIST PARTY OF INDIA (MARXIST - LENINIST) - LIBERATION, TAMILNADU

Wednesday, October 18, 2017

வியட்நாமிலிருந்து ஆவிகள்

(இர்பான் ஹுசைன் எழுதி அக்டோபர் 15 அன்று டெக்கான் கிரானிக்கல் நாளேட்டில் வெளியான கட்டுரை. தமிழில் தேசிகன்)

முரண்பாடு ஏதுமற்ற விசயத்தின் மீது நடத்தப்பட்ட வியட்நாம் யுத்தத்தில்  எண்ணில் அடங்கா உயிர்கள் மாய்ந்து போன கொடூர சம்பவத்தை என் சமகால வாசகர்களால் நினைவு கூர முடியும்.

எனக்கு 20 வயது இருக்கும்போது வியட்காங் (தேசிய விடுதலைப் படை - மொழி பெயர்ப்பாளர்) தோற்கும் தருவாயில் உள்ளது என்ற அமெரிக்க கற்பனையை 1968ன் டெட் தாக்குதல் தவிடுபொடியாக்கியது. நிராயுத பாணியான வடக்கு மற்றும் தெற்கு வியட்நாம் அதுபோல் லாவோஸ் மற்றும் கம்போடியா சிவிலியன்கள் மீது ஈவிரக்கமின்றி அமெரிக்கா குண்டு வீச்சுத் தாக்குதல் நடத்தியது கண்டு எம்மில் பலரும் கடும் கோபம் கொண்டிருந்ததை என்னால் நினைவு கூர முடிகிறது. கென்லோச் மற்றும் லின் நோவிக் இணைந்து இயக்கிய 10 பகுதி கொண்ட யுத்தம் பற்றிய டாக்குமென்ட்ரி படம் வியட்நாம் மீதான முடிவில்லா அமெரிக்கத் தாக்குதலின் கோர படிமங்களைக் காட்டியபோது நான் மீண்டும் அந்த மோசமான காலகட்டத்தில் வாழ்ந்தேன். பழைய பதிவுகளை ஆய்வு செய்வது என்ற விதத்தில் இதை ஒரு சிறந்த சினிமா/கலைப் படைப்பாக கருத முடியும். வாஷிங்டன், ஹனாய், சய்கோன் என்று யுத்த களங்களில் நடக்கும் சம்பவங்களை 18 மணி நேரம் ஓடும் செய்தித் தரவுகள், நேர்காணல்கள் என்று காட்சிப்படுத்தியிருப்பது பார்வையாளர்களை ஒன்றிப்போகச் செய்கிறது.
உண்மையிலேயே நடந்த சம்பவங்கள், தனிநபர்களின் நேர்காணல்கள் என பலதரப்பட்ட அம்சங்களையும் பின்னிப் பிணைத்து எடுக்கப்பட்ட இந்த டாக்குமென்ட்ரி படத்தின் அடிநாதமாக இருபுறமும் உள்ள கொடூ ரங்களும் தியாகங்களும் இருக்கின்றன. குறிப்பாக, வடக்கு வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியின் வெல்ல முடியாத தீர்க்கம், லட்சக்கணக்கான ஆண்களும் பெண்களும் தாமாக முன் வந்து எடுத்துக் கொண்ட லட்சியத்திற்காக தங்களை ஆட்படுத்திக் கொண்டது ஆகியவை அதை புறந்தள்ள முடியாத சக்தியாக்கிவிட்டது.
இவர்களை சீருடை அணிந்த அமெரிக்கர்கள் எதிர்த்து நின்றனர். ஒரு சமயத்தில் 5 லட்சம் அய்க்கிய அமெரிக்க இராணுவ வீரர்கள் தெற்கு வியட்நாமில் குவிக்கப்பட்டனர். கிட்டத்தட்ட 60,000 பேர் கொல்லப்பட்டனர். ஜெர்மனி, கொரியா மீது போடப்பட்ட குண்டுகளின் கூட்டு எண்ணிக்கையை விட இந்தோ சீன பகுதியில் அய்க்கிய அமெரிக்காவால் போடப்பட்ட குண்டுகளின் எண்ணிக்கை அதிகம்.
வடக்கு வியட்நாமின் 15 வயது சிறுமி வனப்பகுதி வழியாக தெற்கு வியட்நாமுக்கு பொருட்களை கொண்டு செல்லும் யூனிட்டில் தாமாக முன்வந்து சேர்வது பற்றி விவரிப்பதை பத்திரிகையில் படிக்கும் போது ஏற்பட்ட அளவு தாக்கத்தை, இந்த புள்ளிவிவரங்கள் ஏற்படுத்தவில்லை. ஹோசிமின் பெயரால் அறியப்பட்ட இந்தப் பாதை மீது அய்க்கிய அமெரிக்க விமானங்கள் தொடர்ந்து குண்டு பொழிந்தன. நபாம் குண்டு கூட பயன்படுத்தப்பட்டது. அதனால் பெரும் உயிரிழப்பும் இருந்தது.
சாவுகள் அதிகரித்துக் கொண்டும், வெற்றி கிட்டுவதென்பது தொடர்ந்து நழுவிச் சென்றும் கொண்டிருக்கும்போது அடுத்தடுத்து வரும் அமெரிக்க ஜெனரல்கள் கூடுதல் துருப்புகளை கேட்பதென்பது டாக்குமென்ட்ரி முழுக்க இழையோடும் பொதுவான பல்லவியாக உள்ளது. (நான் முதல் 6 பாகங்களை பார்த்திருக்கிறேன்)
களத்திலிருக்கும் கமாண்டர்களுக்கு கூடுதல் துருப்புகளை கொடுக்கும்போது பகையாளியின் தோல்வியை உத்தரவாதப்படுத்த முடியும் என்று பெண்டகன், அதிபர் லின்டன் ஜான்சனுக்கு தொடர்ந்து உறுதியளித்து வந்தது.
அய்க்கிய அமெரிக்காவுக்குள் தினமும் காண்பிக்கப்படும் யுத்தம் பற்றிய செய்திகள் மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி குறிப்பிடத்தக்க யுத்த எதிர்ப்பு இயக்கத்துக்கு எண்ணெய் ஊற்றின. கென்ட் பல்கலைக் கழகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட நான்கு மாணவர்கள் தேசிய படை வீரர்களால் சுட்டுக் கொல்லப்பட்டபோது அய்க்கிய அமெரிக்கா முழுவதும் எதிர்ப்புப் போராட்டம் வெடித்தது. லண்டன், பாரீஸ் இன்னும் பிற தலைநகர்களிலும் பெரும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.
இறுதியாக 1973 பாரீஸ் அமைதிப் பேச்சு வார்த்தையைத் தொடர்ந்து, வியட்நாமில் இருந்து அமெரிக்கப்படை பின் வாங்கியது. சய்கோன் அமெரிக்க தூதரகத்திலிருந்து ஹெலிகாப்டர் பறக்கத் துவங்கியபோது தரை இறங்குவதற்காக வடிவமைக்கப்பட்ட கியரைப் பிடித்துக் கொண்டு மக்கள் நின்ற அந்தக் காட்சியை நிழலாக விட்டுச் சென்றது. பல லட்சக்கணக்கான உயிர்களை பலிகொடுத்த தேவையற்ற யுத்தம் முடிவுக்கு வந்தது.
இதிலிருந்து பாடங்கள் கற்றுக் கொண்டதாய் தெரியவில்லை என்பது கவலை தருகிறது. 16 ஆண்டுகால யுத்தத்திற்குப் பிறகு அமெரிக்கர்கள் இன்னும் ஆப்கானிஸ்தானில் மாட்டிக் கொண்டு கிடக்கிறார்கள். ஜெனரல்கள் இன்றும் இன்னும் கூடுதல் துருப்புகள் வந்தால் வெற்றி நிச்சயம் என்றும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.
சக்திகளை பலமடங்கு பெருக்கிக் கொள்ள வல்லமை வாய்ந்த கருத்தியல், தேசியவாதம் ஆகியவற்றை கணக்கில் கொள்ளாமல், அவர்கள் கவனம் சாவு எண்ணிக்கையிலும் கம்யூட்டர் திரையில் பவர் பாயிண்ட் போட்டுக் காட்டுவதிலுமே இருக்கிறது. அமெரிக்க அரசியல்வாதிகள் வாக்காளர்களுக்கு பதில் சொல்லக் கடமைப்பட்டுள்ளவர்கள் என்ற எதார்த்தம் இருக்கிறபடியால், முடிவே இல்லாமல் சவப்  பெட்டிகள் வருவது அவர்களுக்கு ஏற்புடைய தல்ல. இப்போது ஆப்கன் முரண்பாட்டில் குறைந்த அளவே அமெரிக்க மக்களுக்கு ஆர்வம் இருக்கிறதென்றால் அதற்குக் காரணம் வியட்நாம் யுத்தத்திற்குப் பிறகு அய்க்கிய அமெரிக்க துருப்புகளின் வர்க்கச் சேர்க்கையில் ஏற்பட்டுள்ள மாற்றமாகும். முந்தைய காலத்தில் இளைய, படித்த, மத்திய தர வகுப்பினரை கட்டாயமாக இராணுவத்தில் சேர்க்கும் முறை இருந்ததால் அவர்கள் போரிட பலவந்தப் படுத்தப்பட்டார்கள்.
இப்போது தாமாக முன்வந்து சேர்பவர்களே அமெரிக்க இராணுவத்தில் உள்ளனர். பெரும்பாலும் தரைப்படையினர் தொழிலாளர் வர்க்கத்திலிருந்து வருபவர்களே. அவர்களின் சமூக ஆகிருதி கீழ் மட்டத்தில் இருக்கும். அவர்கள் குறைந்த அளவு கழிவிறக்கத்தையும் கவனத்தையும் பெறுகிறார்கள். அதனால்தான் வியட்நாம் யுத்தத்தை விட மிகக் குறைந்த அளவு கவனம் பெற்றார்கள்.
ஆனால் வியட்நாம் யுத்த படிப்பினைகளை ஏன் ஆப்கன் யுத்தத்தில் அவர்கள் கையாளவில்லை என்பது மிகப் பெரிய கேள்வி. இரண்டு நாடுகளிலுமே குறைந்த பலம் கொண்ட ஆனால் அதிக அளவில் உற்சாகம் அளிக்கப்பட்ட எதிராளியைத்தான் சந்தித்தனர்.
வியட்நாம் படைக்கும், ஆப்கன் படைக்கும் தங்களை தலைமறைவாக வைத்துக் கொள்ளும் இடம் தங்கள் எல்லைப் பகுதிக்கு அருகிலேயே அமைந்திருக்கிறது. ஆப்கன் போர் உச்சத்தில் இருந்த போது ஓய்வு பெற்ற ரஷ்ய தளபதி ஒரு பேட்டியில் செம்படை செய்த அதே தவறுகளை இப்போது அமெரிக்கப்படை செய்து வருவதாக வியந்து சொன்னார். என்னிடமோ அல்லது என் சக அதிகாரிகளிடமோ எங்கள் அனுபவங்களை அவர்கள் ஏன் கேட்பதில்லை?
ஏனென்றால் அய்க்கிய அமெரிக்க தளபதிகளிடமுள்ள தலைக் கணம் வரலாற்றிலிருந்தும் மற்றவர்கள் பெற்ற அறிவிலிருந்தும் பாடம் பெறுவதைத் தடுக்கிறது. அவர்கள் தங்கள் ஆயுத பலம் கொண்டு எளிதில் வென்றுவிட முடியுமென்று நினைக்கிறார்கள். ஆனால் வியட்நாம் மற்றும் தலிபான் படைகள் சுட்டிக் காட்டுவதைப் போல் சமனற்ற யுத்தம் என்பது தீர்க்கம் மற்றும் தியாகம் செய்வதற்கான விருப்பம் ஆகியவற்றையே கூடுதலாகச் சார்ந்து இருக்கிறது. 

Search