COMMUNIST PARTY OF INDIA (MARXIST - LENINIST) - LIBERATION

COMMUNIST PARTY OF INDIA (MARXIST - LENINIST) - LIBERATION, TAMILNADU

Tuesday, August 1, 2017

கக்கூஸ் ஆவணப் பட இயக்குநர் திவ்யபாரதிக்கு
கொலை மிரட்டல் விடுக்கப்படுவதை கண்டிக்கிறோம்

திவ்யபாரதி எடுத்த கக்கூஸ் ஆவணப் படம், மனிதக் கழிவை மனிதர் அகற்ற வேண்டிய அநீதிக்கு எதிராக, மானுட மனசாட்சியை தட்டியெழுப்பும் முயற்சிகளில் ஒன்றாக அமைந்தது. அதனால் அந்தப் படம் தமிழ்நாடெங்கும் கவனம் பெற்றது. திண்டுக்கல் அண்ணா பல்கலை கழக பொறியியல் கல்லூரியில் துப்புரவு தொழிலாளர்களை சட்டத்துக்குப் புறம்பாக நடத்தியது பற்றி ஓர் ஆவணப் படம் வெளியிட்டதாகவும், அடுத்து மாட்டிறைச்சி பற்றி ஓர் ஆவணப் படம் வெளியிட இருப்பதாகவும் ஜுலை 31 அன்று நடந்த மதுரை பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.  

அவரது கக்கூஸ் ஆவணப்பட தகவல்கள், தரவுகள் சரியில்லை என எவராவது கருதினால், அவர்கள் அவற்றை சுட்டிக்காட்டலாம். அந்தப் படம், தலித்துகளின் சுயமரியாதை மற்றும் கவுரவம் காக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் எடுக்கப்பட்டுள்ளதாகவே, படத்தை காண்பவர்களால் புரிந்துகொள்ளப்படுகிறது. அப்படியிருக்கையில் கக்கூஸ் ஆவணப் படம் தலித்துகளின் சில பிரிவினரை அல்லது தலித்துகளை சிறுமைப்படுத்துவதாகச் சொல்லி, திவ்யபாரதிக்கு கொலை மிரட்டல்கள் விடுவது எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ளத் தக்கதல்ல. அவை கண்டிக்கத் தக்கவை. தலித் இயக்கங்கள், இந்துத்துவாவுக்கு எதிராக குரல் கொடுக்கும் திவ்யபாரதி போன்றோரை அரவணைப்பதுதான் பொருத்தமானதாக இருக்கும். திவ்யபாரதியை அவர் பெண் என்பதால், அவருக்கு எதிராக ஆணாதிக்க வசைகள், மிரட்டல்கள் ஏவப்படுவதை தலித் இயக்கங்கள், இடதுசாரி ஜனநாயக இயக்கங்கள் வன்மையாக கண்டிக்க வேண்டும்.
திவ்யபாரதி தமது உயிருக்கு ஆபத்து என பகிரங்கமாக ஊடகங்கள் மூலம் புகார் சொல்லியுள்ளபோது, தமிழக அரசு, கண்டும் காணாமல் அலட்சியமாக இருந்து விடக் கூடாது. அவர் மீது வழக்குகள் போட்டு துன்புறுத்தும் முயற்சிகளுக்கு வசதியாக இடம் தரக் கூடாது.அவரது புகாரின் மீது துரித நடவடிக்கை எடுப்பதும், அவருக்கு பாதுகாப்பு வழங்குவதும் தமிழக அரசின் கடமையாகும்.

கதிராமங்கலம், நெடுவாசல் போராட்டங்களுக்கு ஆதரவாக போராளிகளை கைது செய்யும் தமிழக அரசுக்கு எதிராக திருபெரும்புதூர் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

போராட்டம் நடத்துபவர்கள் குண்டர் சட்டத்திலும் பிற பிரிவுகளிலும் கைது செய்யப்படுவதைக் கண்டித்தும் வளர்மதி, குபேரன், திருமுருகன் காந்தி ஆகியோர் விடுவிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியும் திவ்யபாரதி கைது செய்யப்பட்டதைக் கண்டித்தும் புரட்சிகர இளைஞர் கழகத் தோழர்கள் திருபெரும்புதூரில் ஜுலை 28 அன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
நெடுவாசலில் இருந்து ஹைட்ரோகார்பன் திட்ட மும் கதிராமங்கலத்தில் இருந்து ஓஎன்ஜிசியும் வெளியேற வேண்டும் என்றும் இந்த ஆர்ப்பாட்டத்தில் முழக் கங்கள் எழுப்பப்பட்டன. இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கான கலந்தாலோசனை கூட்டம் ஜுலை 23 அன்று திட்டமிடப்பட்டு அதற்காக அரங்கம்  முன்பதிவு செய்யப்பட்டது. ஜுலை 23 அன்று அந்த கூட்டத்தில் கலந்து கொள்ள திருபெரும்புதூர்  ஆலைகளின் தொழிலாளர்கள் அரங்கத்துக்கு வந்துவிட்டனர். அவர்கள் வந்த பிறகு, அரங்க உரிமையாளர், அந்த அரங்கத்தில் கூட்டம் நடத்த இடம் தரக் கூடாது என்று காவல்துறை தன்னை மிரட்டியதாகவும் நெடுவாசல், கதிராமங்கலம் பிரச்சனைகளில் கூட்டங்கள் நடத்த அனுமதியில்லை என்று சொன்னதாகவும் புரட்சிகர இளைஞர் கழக தோழர்களிடம் தெரிவித்தார். அரங்கத்தின் முன் கூடிவிட்ட தோழர்கள் அந்த இடத்திலேயே நின்று கலந்தாலோசித்து ஜுலை 28 அன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்தனர். அந்த முடிவு வெற்றிகரமாக அமல்படுத்தப்பட்டது. ஹுண்டாய், ஏசியன் பெயின்ட்ஸ், சி அண்டு எஃப், டென்னகோ, சான்மினா உள்ளிட்ட ஆலை தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.

பழனிச்சாமி அரசே பதவி விலகு!
இகக மாலெ ஒருவார கால மக்கள் சந்திப்பு இயக்கம்

பழனிச்சாமி அரசாங்கம் பதவி விலக வேண்டும் என்ற முழக்கத்துடன் இகக மாலெ ஜுலை 11 முதல் 18 வரை ஒருவார கால மக்கள் சந்திப்பு இயக்கம் நடத்தியது.
சென்னையில் மக்கள் வாழும் பகுதிகளில் நடந்த மக்கள் சந்திப்பு இயக்கத்தின் நிறைவாக ஜுலை 18 அன்று அரங்கக் கூட்டம் நடத்தப்பட்டது. கட்சியின் மாநிலச் செயலாளர் தோழர் எஸ்.குமாரசாமி கலந்துகொண்டார்.
கோவையில் ஆறு மய்யங்களில் வாகனப் பிரச்சாரமும் தெருமுனைக் கூட்டங்களும் நடத்தப்பட்டன.
புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் ஒன்றியத்தில் ஜுலை 12 அன்று தெருமுனைக் கூட்டம் நடத்தப்பட்டு விவசாயிகள் பிரச்சனைகளில், மக்களின் பிற பிரச்சனைகளில் பழனிச்சாமி அரசின் குற்றமய அலட்சியம் பற்றி விரிவாக விளக்கப்பட்டது. ஜுலை 17 அன்று கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் 7 மய்யங்களில் பழனிச்சாமி அரசாங்கம் பதவி விலக வேண்டும் என்ற முழக்கத்துடன் தெருமுனைக் கூட்டங்கள் நடத்தப்பட்டன.
திருவள்ளூர் மாவட்டத்தில் வாகனப் பிரச்சாரத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டது. எனவே நான்கு மய்யங்களில் மக்கள் வாழும் பகுதிகளில் வீடுவீடாக பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.
நெல்லையில் சுத்தமல்லி பகுதியில் மக்கள் மத்தியில் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டதுடன் ஜுலை 18 அன்று பொதுக் கூட்டம் நடத்தப்பட்டது.
விழுப்புரம் மாவட்டம் கச்சிராபாளையத்தில் ஜுலை 18 அன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. கரூரில் மூன்று மய்யங்களில் தெருமுனைக் கூட்டங்கள் நடத்தப்பட்டன.
நாமக்கல் மாவட்டத்தில் ஜுன் 16 அன்று நான்கு மய்யங்களில் மக்கள் வாழும் பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. ஜிஎஸ்டிக்கு எதிர்ப்பு தெரிவித்து விசைத்தறிக் கூடங்கள் மூடப்பட்டு வேலை வாய்ப்பு இழந்துள்ள நிலையிலும் விசைத்தறி தொழிலாளர்கள் இகக மாலெ நடத்திய பிரச்சாரத்திற்கு தங்களாலான நிதியும் வழங்கினர்.

குமரியிலும் சேலத்திலும் மக்கள் வாழும் பகுதிகளில் பழனிச்சாமி அரசாங்கம் பதவி விலக வேண்டும் என்ற முழக்கத்துடனான துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. குமரியில் சுவரொட்டி பிரச்சாரமும் நடத்தப்பட்டது.

Search