COMMUNIST PARTY OF INDIA (MARXIST - LENINIST) - LIBERATION

COMMUNIST PARTY OF INDIA (MARXIST - LENINIST) - LIBERATION, TAMILNADU

Wednesday, August 30, 2017

நீட் திணிப்பு

மோடி, பழனிச்சாமி அரசுகள்
தமிழக மக்களை வஞ்சித்துவிட்டன

பலவீனமான அரசு, மக்கள் போராட்டங்களை முன்செலுத்த உகந்தது என்பதை மக்கள் சார்பு அரசியலுக்காக நிற்பவர்கள் வலியுறுத்துவதுபோல், மக்கள் விரோத சக்திகளும் அந்த நிலையை பயன்படுத்திக் கொள்ளப் பார்க்கின்றன. மக்கள் விரோத சக்திகள் ஆளும் நிலையிலும் இருக்கும்போது மக்கள் விரோத நடவடிக்கைகளை வேகவேகமாக திணிக்கின்றன
. தமிழகத்தில் பலவீனமான அரசு இருப்பதை பயன்படுத்திக் கொண்டு சங் பரிவார் - பாஜக அரசு மாநில உரிமைகளைப் பறிக்கும் நடவடிக்கைகளை அடுத்தடுத்து முன்தள்ளுகிறது.
இந்த வரிசையில் நீட், மருத்துவ படிப்புக்கு அகில இந்திய நுழைவு தேர்வு திணிக்கப்பட்டுவிட்டது. சென்ற ஆண்டு விலக்கு அளிக்கப்பட்டதால் இந்த ஆண்டும் எப்படியாவது விலக்கு கிடைத்துவிடும் என நம்பி +2 தேர்வு எழுத கடுமையான முயற்சிகள் எடுத்த மாணவர்கள் பலர் ஏமாற்றப்பட்டுவிட்டார்கள். செப்டம்பர் 4க்குள் மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு முடிக்கப்பட வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மோடி, பழனிச்சாமி அரசாங்கங்கள் நீட்டை திணித்து தமிழக மக்களை வஞ்சித்துவிட்டன.
2016லேயே நீட் தொடர்பான பெரிய குழப்பத்தில் இருந்த மாணவர்கள், 2016 தேர்தலில் தப்பிப் பிழைத்த ஜெயலலிதா அரசு, மக்கள் ஆதரவு நடவடிக்கை ஏதாவது எடுத்தாக வேண்டும் என்ற கட்டாயத்தில் இருந்ததால், தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிக்கப்பட்டு, +2 மதிப்பெண் அடிப்படையிலேயே மருத்துவ படிப்பில் சேர்ந்தார்கள். கடைசி நேரம் வரை இழுபறியாக இருந்து, இறுதியில் விலக்கு அறிவிக்கப்பட்டது. (இதுவும் பாஜக தயவில்தான் நடந்தது என்று நாம் சொல்ல முடியும்). 2017ல் பாஜகவுக்கு காவடி தூக்குவதை வெட்கமில்லாமல் வெளிப்படையாகச் செய்யும் அரசாங்கம் இருக்கும்போதும், சென்ற ஆண்டு நடந்ததுபோல் அதிசயம் ஏதும் நிகழும் என்று தமிழக மாணவர்கள் நம்பினார்கள். நீட் விலக்குக்கு, தமிழ்நாடு மருத்துவம் மற்றும் பல்மருத்துவ முதுகலை படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை மசோதா, 2017 மற்றும் தமிழ்நாடு எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை மசோதா, 2017 ஆகியவை ஜனவரி 31 அன்று சட்டமன்றத்தில் முன்வைக்கப்பட்டு ஏகமனதாக நிறைவேற்றப்பட்டு ஆளுநர் ஒப்புதல் பெறப்பட்டு குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கும் அனுப்பப்பட்டுவிட்டன. (சில மாதங்களுக்குப் பிறகு தமிழ்நாடு வந்திருந்த, விவரமானவர் என அறியப்படுகிற மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் இப்படி மசோதாக்கள் இருக்கும் விசயமே தனக்குத் தெரியாது என்று பத்திரிகையாளர்களிடம் சொன்னார்).
மருத்துவர் கனவு கொண்டிருந்த தமிழக மாணவர்களுக்கும் அவர்களது பெற்றோரும் அப்போது நம்பத் துவங்கினார்கள். அதற்கேற்ப +2 தேர்வு தயாரிப்புகளில் இறங்கினார்கள்.
மசோதாக்களுக்கு ஒப்புதல் கேட்டு, முதலமைச்சர், சுகாதாரத் துறை அமைச்சர், அஇஅதிமுக அணி தலைமைகள், மற்ற அரசியல் கட்சிகளின், ஜனநாயக சக்திகளின் குரல்கள் ஏதோ அதிசயம் நிகழப் போகிறது, 2017லும் நீட்டில் இருந்து விலக்கு கிடைக்கப் போகிறது என்று எதிர்ப்பார்த்தார்கள். நமது ஆட்சியாளர்கள் பற்றி நன்கறிந்தவர்கள் என்பதால் கூடவே நீட்டை சந்திக்க தயாரிப்பும் செய்தார்கள்.
திடீரென நீட் எழுதியாக வேண்டும் என்ற நிலை வந்தது. எழுதச் சென்ற இடத்தில், அவமானப்படுத்தப்பட்டு, எழுதி திரும்பினார்கள்.
பொது நுழைவுத் தேர்வு கேள்விகள் பொதுவாக இல்லை என்பதால், முடிவு அறிவிப்பை நீதிமன்றம் தள்ளிப் போட்டது. தள்ளிப் போட்ட சமயத்தில் மாநிலப் பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு நீட் மதிப்பெண்கள் அடிப்படையிலான சேர்க்கையில் 85% இட ஒதுக்கீடு என்று வருமான வரி சோதனைக்கு உட்பட்ட விஜயபாஸ்கர் அறிவித்தார். அதாவது நீட் அடிப்படையில், பாஜகவின் கட்டளைப்படி மாணவர் சேர்க்கை என்று தமிழக அரசு அன்றே முடிவு செய்துவிட்டது. பிறகு அஇஅதிமுக அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் பலர், அவர்கள் பதவிச் சண்டைக்கு ஊறுகாய் போல் நீட்டில் இருந்து விலக்கு பெறுவோம் என்று நடுவில் நடுவில் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.
85% இட ஒதுக்கீட்டுக்கு நீதிமன்றம் தடை விதித்த பிறகு, ÷லை 17 அன்று நடக்கவிருந்த கலந்தாய்வு ரத்து செய்யப்பட்டது.
அதற்குப் பிறகு, நீட் வேண்டும் என்று காவி பாஜக தலைமையில் ஒரு கூட்டம் கத்திக் கொண்டிருக்க, விலக்குக்கு அனைத்து முயற்சிகளும் எடுப்பதாக ஆளும் கட்சி உறுதி தந்தது. மாணவர்கள் வாழ்க்கையில், அவர்களது பெற்றோருக்கு பெருங்குழப்பம்.
+2 தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்றதால் மருத்துவ படிப்பில் நிச்சயம் இடம் கிடைக்கும் என்றும் நீட் தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்றதால் மருத்துவ படிப்பில் நிச்சயம் இடம் கிடைக்கும் என்றும் நம்பியிருந்த மாணவர்களும் அவர்கள் பெற்றோர்களும் இந்த கோமாளிகள் கூத்தால் பெரிதும் மனஉளைச்சலுக்கு ஆளாகியிருந்தனர்.
திடீரென தமிழ்நாட்டுக்கு வந்த நிர்மலா சீதாராமன் ஓராண்டுக்கு விலக்கு கேட்டால் கிடைக்கும் என்று கொளுத்திப் போட்டுவிட்டு போனார். பழனிச்சாமி உடனே அவசரச் சட்டம் போட்டார். மூன்று மத்திய அமைச்சகங் கள் ஒப்புதலும் தந்தன. இன்னும் கொஞ்சம் நம்பிக்கை..... பழனிச்சாமி தமிழ்நாட்டின் உரிமையை காப்பாற்றிவிடப் போகிறார்.....
நீட் ஆதரவாளர்கள் உடனே உச்சநீதிமன்றம் செல்ல, மத்திய அரசு தமிழக மக்களை தலைக்குப்புற குழியில் தள்ளியது. ஒரு மாநிலத்துக்கு மட்டும் விலக்கு தர முடியாது என்றது. நீட் ஆதரவாளர்கள் நீட்தான் இறுதி என்ற உத்தரவை பெற்றுவிட்டார்கள்.
அவசரச் சட்டம் போடட்டும் நீதிமன்றத்தில் பார்த்துக் கொள்ளலாம் என்று நிர்மலா சீதாராமனும் மற்றவர்களும் பேசி வைத்து செய்தார்களா என நமக்கு கேள்வி எழக் கூடாதா?
விலக்கு கிடைக்கும் என்று நிர்மலா சீதாராமன் சொன்ன நேரம் ஆளும் கட்சியின் அணிகள் இணைப்பில் இழுபறியும் இணையலாம் என்ற அறிகுறிகளும் ஒருங்கே இருந்த நேரம். இணைப்புக்குப் பிறகு நீட் அமலாகிறது. அணிகள் இணையாமல் இருந்திருந்தால் விலக்கு கிடைத்திருக்குமா? அணிகள் இணைந்ததால், நமக்கு கிடைத்த அடிமைகள் மிகவும் மானங் கெட்டவர்கள் என்ற துணிவு மத்திய அரசுக்கு வந்து உச்சநீதிமன்றத்தில் வேறு விதமாக நடந்து கொண்டதா?
2017 துவக்கம் முதல் தமிழக மாணவர்களும் அவர்களது பெற்றோர்களும் இரக்கமற்ற மத்திய மாநில அரசுகளால் உண்மையில் சித்ரவதை செய்யப்பட்டுள்ளார்கள். மனஉளைச்சல், தேர்வுகளுக்கு தயாரிப்பு, அதற்கு அலைச்சல், செலவு என இந்த எட்டுமாத காலம் துன்பம் நிறைந்ததாய் அவர்களுக்கு கழிந்துள்ளது.
நீட் வேண்டவே வேண்டாம் என்று ஒரே குரல் எழுப்ப வேண்டிய தமிழக மாணவர்களையும் பெற்றோர்களையும் பிளவுபடுத்துவதிலும் நீட் மேட்டுக்குடி ஆட்சியாளர்கள் வெற்றி பெற்றுவிட்டார்கள். ஒருபுறம் நீட் வேண்டாம் என மாணவர்கள் போராட மறுபுறம் நீட் வேண்டும் என்று வேறொரு பிரிவு மாணவர் கள் கோரும் நிலையை உருவாக்கிவிட்டார்கள். +2 மதிப்பெண்ணில், நீட் மதிப்பெண்ணில் போட்டி என்ற அளவில் இருந்ததை பிளவாக மாற்றிவிட்டார்கள்.
மறுபக்கம் மாநில அரசின் பாடத் திட்டம் தரம் குறைந்தது என்ற மேட்டுக்குடி வஞ்சக வாதத்துக்கு வலு சேர்க்கப்பட்டுள்ளது. மாநில பாடத் திட்டம் மேம்படுத்தப்பட வேண்டும் என்று சொல்லத் துவங்கிவிட்டார்கள். பாடத் திட்டத்தில் தரக் குறைவு என்பதுடனேயே அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மீதான மேட்டுக்குடி விமர்சனம் சேர்ந்து வருகிறது. மத்திய பாடத் திட்டம் மட்டுமின்றி தனியார் பள்ளிகள் நோக்கி மாணவர்களை பெற்றோர்களை விரட்டும் அயோக்கியத்தனமும் இதில் உள்ளது.
இவை எல்லாவற்றுக்கும் மேலாக மாநில உரிமைப் பறிப்பை மோடி அரசு வெற்றிகரமாக நடத்தி முடித்திருக்கிறது. எடுபிடி பழனிச் சாமி அரசும் அதற்கு வாகாக இடம் உருவாக்கித் தந்திருக்கிறது. தமிழ்நாட்டின் மருத்துவ கல்லூரிகள் தமிழக மக்களின் வரிப்பணத்தில் உருவானவை. இந்த மருத்துவ கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை எப்படி நடத்துவது என்பதை இந்த மாநிலத்தின் தேவைகளை நன்குணர்ந்த மாநில ஆட்சியாளர்கள்தான் தீர்மானிக்க முடியும். இங்கு மாநில உரிமையும் மாநில மக்களின் மருத்துவம் பற்றியது. அரசு மருத்துவமனைகளில் நாளொன்றில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட புறநோயாளிகளுக்கும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உள்நோயாளிகளுக்கும் சிகிச்சை தரப்படுகிறது. சிகிச்சை பெறுபவர்கள் ஆங்கிலமோ இந்தியோ தெரிந்தவர்கள் அல்ல. இன்று இவர்களுக்கு அரசு மருத்துவமனைகளில் 1600 மருத்துவர்கள்தான் இருக்கிறார்கள். இன்னும் மருத்துவர்கள் வேண்டும். தமிழ் பேசும் மருத்துவர்கள் வேண்டும். நீட் எழுதி மருத்துவம் படிக்கும் மாணவர்கள் பலர் தமிழ்வழிக் கல்வி பயின்றவர்களாக, மருத்துவம் படித்த பிறகு அரசு மருத்துவமனைகளில் மருத்துவ சேவை செய்ய தயாராக இருப்பவர்களாக, இருக்கும் வாய்ப்புகள் குறைவு. மாநில மக்களுக்கான மருத்துவம் எந்த நிலையில் இருக்க வேண்டும் என்பதை தீர்மானிக்கும் உரிமை இனி மாநில மக்களின் கைகளில் இல்லை. மாபெரும் துரோகம்.
2017 ஜனவரி முதல் நீட் தொடர்பாக மத்திய, மாநில அரசுகள், நீதிமன்றங்கள் என நடக்கிற போக்குவரத்துகள், மோடி அரசு இறுதி முடிவு எடுத்துவிட்டு அதற்கேற்ப எழுதிய திரைக் கதைப்படியே, அவ்வப்போது எழுந்த சிற்சில நிலைமைகளைச் சமாளிக்கும் மாற்றங்களுடன், நிகழ்ந்ததாகவே தெரிகிறது. அரசு தலைமை வழக்கறிஞர் இறுதி கட்டத்தில், ஆகஸ்ட் முடிகிற நேரத்தில், உச்சநீதிமன்றத்தில் திடீரென ஆட்சேபம் தெரிவித்தது அதற்கு போதுமான சாட்சியமாக உள்ளது. இந்த திரைக்கதைக்கு பழனிச்சாமி அரசின் ஒத்துழைப்பு போதுமான அளவு இருந்திருப்பதும், இனிமேல் எதுவும் செய்ய முடியாது என்று தம்பித்துரை ஆணித்தரமாக சொல்வதில் தெரிகிறது.
ஊழல் குற்றவாளி ஒருவர் சிறைக்குச் சென்றார் என்பதால் தமிழ்நாடு பற்றி எரிந்தது. பாலியல் குற்றவாளி ஒருவருக்கு தண்டனை என்பதால் இரண்டு மாநிலங்கள் பற்றியெரிகின்றன. ஒரு மாநிலத்தின் சாமான்ய மக்களின் நிகழ்கால, எதிர்கால மருத்துவம் சிதைக்கப்படும் எனும்போது எல்லாம் அமைதியாக இருக்கிறது. எங்களிடம் கோடிக்கணக்கில் உறுப்பினர்கள் இருக்கிறார்கள் என்று சொல்லும் கட்சிகள் ஆர்ப்பாட்டம் என்று தடவிக் கொடுக்கின்றன. மருத்துவத்தில், மருத்துவ கல்வியில் நுழைந்துவிட்ட கார்ப்பரேட்மயம் அவர்கள் தலைகளை மணலில் புதைத்திருக்கிறது.
மாநில உரிமைகளுக்கான போராட்டத்தில் களம் கண்ட மாநிலத்தில் மாநில உரிமையை விட்டுத் தரும் ஆட்சியாளர்கள் வந்துவிட்டார்கள். இது மாநில உரிமையை விட்டுக்கொடுப்பது என்பதோடு நிற்காமல் பாஜகவுக்கு தளம் ஏற்படுத்தித் தருவதாகவும் அமையும்.

கிராமப்புற, தமிழ்வழிக் கல்வி, அரசுப் பள்ளி, மாநிலப் பாடத் திட்ட மாணவர்கள் பலருக்கு மருத்துவப் படிப்புக்கான கதவுகள் அடைக்கப்பட்டுவிட்டன. அவர்கள் மத்திய பாடத் திட்டத்துக்கு மாற வேண்டும் அல்லது நீட் எழுத பெரும்பொருட்செலவில் பிரத்தியேக பயிற்சி எடுக்க வேண்டும். சில தனியார் பள்ளிகள் நீட் எழுத சிறப்பு வகுப்புகள் என்று விளம்பரம் செய்யத் துவங்கிவிட்டன. காசிருந்தால் கல்வி, மருத்துவம் என்ற நிலைமைகளை மேலும் உறுதிப்படுத்தியிருக்கிற நீட் திணிப்பு அஇஅதிமுக அமைச்சர்கள் கொள்ளையடித்த சொத்தை பாதுகாக்க, மிகவும் ஆதாரமான விசயங்களில் தமிழக உரிமைகளை பலி தரும் நிகழ்வுப்போக்கையும் துவக்கி வைத்திருக்கிறது. தமிழக மக்கள் நலன் காக்க, மாநில உரிமைகள் பறிக்கப்படும் இந்தப் போக்கை முளையிலேயே கிள்ளியெறிய வேண்டும். இனி நீட் இல்லை என உறுதி செய்ய வேண்டிய போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும்.

Search