COMMUNIST PARTY OF INDIA (MARXIST - LENINIST) - LIBERATION

COMMUNIST PARTY OF INDIA (MARXIST - LENINIST) - LIBERATION, TAMILNADU

Wednesday, August 16, 2017

கோரக்பூர் குழந்தைகள் மருத்துவமனையில் குழந்தைகள் உயிரிழப்பு
யோகி ஆதித்யநாத் பதவி விலக வேண்டும்

ஆகஸ்ட் 14, நாடு தழுவிய எதிர்ப்பு நாள்

புதுதில்லி, ஆகஸ்ட் 12
கோரக்பூரில் உள்ள அரசு மருத்துவமனையில் 63 குழந்தைகள் உயிரிழந்திருப்பது நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. நாடு விடுதலை பெற்று 70 ஆண்டுகள் நிறைவுறும்போது, அரசு மருத்துவமனைகள், வறியவர் வீட்டு குழந்தைகளின் மரணக் கூடங்களாக இருப்பது அவமானம்.
இந்த உயிரிழப்புகள் அரசாங்கத்தின் அலட்சியத்தால் நடந்த படுகொலைகள்; மருத்துவமனைக்கு ஆக்சிஜன் எப்போதும் இருப்பதை உறுதி செய்ய ஆக்சிஜன் தரும் நிறுவனத்துக்கு பணம் செலுத்தத் தவறியதால்தான் இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டன. கோரக்பூர் நாடாளுமன்றத் தொகுதியில் அய்ந்து முறை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த யோகி ஆதித்யநாத்தான் இப்போது உத்தரபிரதேச முதலமைச்சர்; குழந்தைகளின் உயிரிழப்புக்கு அவரே முழுக்க முழுக்க பொறுப்பு. கோரக்பூர் மருத்துவ மனையின் ஊழியர்களுக்கு ஊதியம் மற்றும் மருத்துவ உபகரணங்களுக்கான நிதியை மத்திய அரசும் முறையாக தரவில்லை.
மூளைவீக்க நோயால் பாதிக்கப்பட்டு கோரக்பூர் அரசு மருத்துவமனையில் கொல்லப்பட்ட குழந்தைகள் பற்றி அக்கறை ஏதுமின்றி, மதராசாக்களில் உள்ள குழந்தைகளை வந்தே மாதரம் சொல்ல நிர்ப்பந்திப்பதில் யோகி ஆதித்யநாத் மும்முரம் காட்டுகிறார். சுகாதாரமும் குழந்தைகள் உயிர்களும் பாஜக அரசாங்கங்களுக்கு முக்கியம் இல்லை, மாறாக, அவர்களது முன்னுரிமை அவர்களது மதவெறி கொள்கைகளே என்பதை இது அம்பலப்படுத்துகிறது.
யோகி ஆதித்யநாத் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தியும் குழந்தைகள் உயிரிழப்புக்கு நீதி கோரியும் இகக மாலெ ஆகஸ்ட் 14 அன்று நாடு தழுவிய எதிர்ப்பு நாள் அனுசரிக்கிறது.
பிரபாத் குமார்

இகக மாலெ மத்திய கமிட்டிக்காக

Search