COMMUNIST PARTY OF INDIA (MARXIST - LENINIST) - LIBERATION

COMMUNIST PARTY OF INDIA (MARXIST - LENINIST) - LIBERATION, TAMILNADU

Monday, October 31, 2016

2017 ஜனவரி முதல் மாலெ தீப்பொறி தனி இதழ் ரூ.10 ஆண்டு சந்தா ரூ.150 என மாற்றப்படுகிறது.
நவம்பர் 1 - 15, 2016 இதழ் முதல் 12 மாதங்கள் வரும் 24 இதழ்களிலும், ரஷ்யப் புரட்சியின் நினைவு போற்றும் செய்திகள், கட்டுரைகள், படங்கள் தீப்பொறியில் இடம் பெறும். அந்த வகையில் ரஷ்யப் புரட்சியின் நூறாம் ஆண்டு துவக்கத்தை அனுசரிக்கும்.
ரஷ்யப் புரட்சியின் வெளிச்சத்தில் இந்தியப் புரட்சிக்குத் தயாராவோம்!
எஸ்.குமாரசாமி
உலகம், நவம்பர் 7, 2016 அன்று ரஷ்யப் புரட்சியின் நூறாவது ஆண்டுக்குள் நுழையும்.
நவம்பர் 6 நள்ளிரவு, நவம்பர் 7 அதிகாலை, 1917ஆம் ஆண்டு, ஒரு சம்பவம் நடந்தது. கிறிஸ்டோபர் ஹில் தமதுலெனினும் ரஷ்யப் புரட்சியும்புத்தகத்தில் குறிப்பிடுகிறார்.
ரஷ்யத் தலைநகரான பெட்ரோகிராடின் மய்யத்தில் இருந்து புரட்சியின் தலைமையகத்திற்குப் புறநகர் பகுதியில் இருந்து, தோழர் லெனின் 11.45 மணி அளவில் புறப்பட்டு ஒரு டிராமில் ஏறுகிறார். டிராமில் பணி புரிந்த பெண் நடத்துநருடன் பேச்சு கொடுக்கிறார். அந்த உழைக்கும் வர்க்கப் பெண் பரபரப்பாகப் பதில் சொல்கிறார்: “ஒரு புரட்சி நடக்கவுள்ளது என்று கூட உங்களுக்குத் தெரியவில்லை என்றால், நீங்கள் என்ன மாதிரி தொழிலாளி? நாங்கள் எங்கள் எசமானர்களை உதைத்து விரட்டப் போகிறோம்.”
அந்தப் பெண் நடத்துநர் சொன்ன செய்தியின் உள்ளடக்கத்தை வேறு விதமாக, அன்றைய தற்காலிக அரசாங்கத்தின் பிரதமரான கெரன்ஸ்கியின் இராணுவ உதவியாளர் இராணுவ படைகளின் தலைமை தளபதிக்கு, ஒரு தந்தியாக அனுப்பினார்: “தனது அணிதிரட்டல்களை முடித்துவிட்டு இராணுவ நடவடிக்கைகளை இன்னமும் துவங்காத ஓர் எதிரியின் தலைநகரில் இருக்கிற உணர்வே இருக்கிறது.”
ஆம், அன்றுதான், பெட்ரோகிராட் நகர சோவியத்தின் இராணுவ புரட்சிகர கமிட்டி மிகச் சுலபமாக தலைநகரைக் கைப்பற்றி, நிலவி வந்த இரட்டை அதிகாரத்துக்கு முடிவு கட்டியது. (ரஷ்யாவில் மார்ச் 1917ல் நடந்த புரட்சியில் மேலே அதிகாரம் முதலாளித்துவ தாராளவாத சக்திகளிடமும் கீழே உழைக்கும் மக்களிடமும் இருந்தது. தாம் செய்யாத ஒரு புரட்சியில் வந்த அரசாங்கத்தில் முதலாளித்துவ தாராளவாத சக்திகள் அங்கம் வகித்தனர்). ஜாரின் குளிர்கால அரண்மனை மீது, புரட்சியாளர்கள் கைவசம் இருந்த நெவா நதியில் நின்று கொண்டிருந்த போர்க் கப்பல் அரோரா மூன்று குண்டுகளை வீசியது. ராய்டர்ஸ் என்ற சர்வ தேச பத்திரிகை நிறுவன செய்தியாளர், நவம்பர் 7 மாலை 7.45க்கு, இது வரை இரண்டு பேர்தான் இறந்துள்ளனர் எனத் தந்தி அனுப்பினார். (மார்ச் 1917 புரட்சியில் 1,400 பேர் வரை உயிரிழந்தனர். உடல் உறுப்புக்களை இழந்தனர்).
ரயில் நிலையங்கள், தபால் தந்தி அலுவலகங்கள், மத்திய வங்கி போன்றவை புரட்சியாளர்கள் கட்டுப்பாட்டில் வந்துவிடுகின்றன. ப்ரி பார்லிமென்ட் கலைக்கப்படுகிறது. குளிர்கால அரண்மனையும் புரட்சியாளர் கைவசம் வந்து விட்டது. நவம்பர் 7 இரவு 10.45க்கு ஸ்மோல்னியில் அனைத்து ரஷ்ய சோவியத்துகளின் இரண்டாவது காங்கிரஸ் துவங்குகிறது. அந்த காங்கிரஸ் துவங்கியவுடன் பிரகடனம் ஒன்று செய்யப்பட்டது: “மிகப் பெரும்பான்மையான தொழிலாளர்கள் போர்வீரர்கள் மற்றும் விவசாயிகள் ஆதரவுடன், பெட்ரோகிராடில் நடைபெற்ற தொழிலாளர்கள் மற்றும் போர்வீரர்களின் வெற்றிகரமான ஆயுதப் பேரெழுச்சியின் ஆதரவுடன், காங்கிரஸ் அதிகாரத்தைத் தன் கைகளில் எடுத்துக் கொள்கிறது”.
“1905 புரட்சிக்குப் பிறகு ரஷ்யாவை 1,30,000 நிலப்பிரபுக்கள் ஆண்டனர்; ஆன போதும், பணக்காரர்களுக்கு எதிராக வறியவர் நலனில், 2,40,000 உறுப்பினர்கள் கொண்ட போல்ஷ்விக் கட்சி நிர்வகிக்க முடியாது என்கிறார்கள்; எங்களுக்கு மக்கள் திரளின் முழுமையான அர்ப்பணிப்பான ஆதரவு இருப்பதால், 2 கோடி பேர் இல்லாவிட்டால் 1 கோடி பேர் கொண்ட ஓர் அரசு பொறியமைவை உடனடியாகச் செயல்படுத்த முடியும். எங்களால் மட்டுமே இத்தகைய பொறியமைவை உருவாக்க முடியும்”. புரட்சிக்கு முன், நீங்கள் எல்லாம் ஆட்சி செய்ய முடியுமா என்ற கிண்டல்களுக்கு தோழர் லெனின் சொன்ன அந்த பதில், புரட்சி வென்ற பிறகு, யதார்த்தமாகிவிட்டது.
நவம்பர் 8 அன்றுரஷ்யப் புரட்சி போரை நிறுத்தி  சமாதானம் காண விழைகிறது. பேச்சு வார்த்தைகளைத் துவக்குவோம்என லெனின் அறைகூவல் விடுக்கிறார். நிலப்பிரபுக்கள், ஜார் குடும்பத்தினர், மடாலயங்கள் கைகளில் இருந்த நிலங்கள் அனைத்தும், விவசாயிகளின் சுதந்திரமான உபயோகத்துக்காக அரசால் கையகப்படுத்தப்பட்டது என்ற பிரகடனம் வெளியிடப்பட்டது. 40 கோடி ஏக்கர் நிலம் நஷ்ட ஈடின்றிப் பறிமுதல் செய்யப்பட்டு, உழுபவர்களுக்கே நிலம் சொந்தம் என்ற முழக்கத்துக்கு உயிர் தரப்பட்டது. வருடா வருடம் 50 கோடி தங்க ரூபிள் குத்தகை கட்டிய அடிமை நுகத்தடியில் இருந்து விவசாயிகள் விடுதலை பெற்றனர்.
வர்க்க, பால், தேசியஇன, மத அடிப்படை யிலான அனைத்து சமத்துவமின்மைகளும் நீக்கப்பட்டன. வங்கிகள், ரயில்வே, அந்நிய வர்த்தகம், கேந்திர தொழில்கள் தேசியமயமாக்கப்பட்டன.
16.11.1917 அன்று ரஷ்யாவில் இருக்கும் அனைத்து தேசிய இனங்களுக்கும் பிரிந்து போகும் உரிமையுடன் கூடிய சுய நிர்ணய உரிமை உண்டு என்று பிரகடனம் செய்யப்பட்டது. டிசம்பர் 1922ல் சோசலிச குடியரசுகளின் சோவியத் ஒன்றியம் (யுஎஸ்எஸ்ஆர்) உருவானது.
இடுப்பொடிக்கும் அடுப்படிப் பணிகள், முதுகை வளைக்கும் துணி துவைக்கும் பணிகள், ஆளை முடக்கும் குழந்தைகள் பராமரிப்பு உள்ளிட்ட மற்றவர்களை கவனித்துக் கொள்ளும் (கேர் கிவிங்) பணிகளில் இருந்து பெண்களை சோவியத் அரசே விடுதலை செய்தது. குழந்தைகள் அரசின் பொறுப்பாயின. பொது சமையலகமும் பொது சலவையகமும் உருவாக்கப்பட் டன. மூச்சு முட்டும் முடமாக்கும் வீட்டுப் பணியில் இருந்து பெண்கள் பொது வெளியில் நடமாட வந்தனர். முதியோர் பராமரிப்பு  அரசின் பொறுப்பானது. கல்வியும் மருத்துவமும் அரசு தந்தது. வேலையில்லாதோர் இல்லை. விலை உயர்வும் இல்லை. பிரம்மாண்டமான அளவில் கோடிக்கணக்கான மக்களின் கல்வி, கலாச்சார மட்டம், வாழ்க்கை தரம் மேம்பட்டது.
ரஷ்யாவின் கம்யூனிஸ்ட்கள் மக்கள் நலனே கட்சியின் நலன் என்ற கோட்பாட்டை நடைமுறையில் பின்பற்றினர். 1920 வாக்கில் ஏகாதிபத்தியங்கள் புரட்சிகர ரஷ்யாவை ஒழித்துக்கட்ட முற்றுகையிட்டபோது, போர்முனையில் இருந்த 8,40,000 பேரில், பெண்கள் உட்பட 2,80,000 கம்யூனிஸ்ட்கள் நின்றனர். அது, ஏகாதிபத்திய படைகள், கம்யூனிஸ்டுகளை தேடித் தேடி அழித்த காலம்.
இந்த சோவியத் சோசலிச குடியரசுகளின் ஒன்றியம்தான், உலக வரலாற்றில் நீடித்த அடிப்படையில் மக்களுக்காக மக்களே மக்களால் நடத்தும் நலம்புரி நல் ஆட்சியை வழங்கியது.
1940களின் துவக்கத்தில் உலகம் பாசிசத்தின், நாசிசத்தின் கைகளில்  சிக்கும் பேராபத்து இருந்தது. இந்த சோவியத் சோசலிச குடியரசுகளின் ஒன்றிய மக்கள்தான் ஒவ்வோர் அங்குலமும் ஹிட்லரின் படைகளுடன் சண்டையிட்டு, லட்சலட்சமாய் உயிர்தந்து உலகைக் காப்பதில் பெரும் பங்காற்றினர். ரஷ்யப் புரட்சி, ரஷ்ய மக்களுக்கு மட்டுமின்றி, அடிமைப்பட்டுக் கிடந்த தேசங்களுக்கும் உலகெங்கும் உள்ள சுரண்டப்படும் மக்களுக்கும் நம்பிக்கை நட்சத்திரமாய் இருந்தது.
இன்றைய இந்தியப் புரட்சிக்கு அன்றைய
ரஷ்யப் புரட்சி எப்படி வெளிச்சம் தரும்?
நீடித்த நாடாளுமன்ற ஜனநாயக முறையே இல்லாத ஒரு நாட்டில், பிரதானமாக தலைமறைவாகவே இருந்த ஒரு கட்சியால், புரட்சியையே தொழிலாகக் கொண்டவர்கள் வழிநடத்திய ஒரு கட்சியால், நூறு ஆண்டுகளுக்கு முன், மேற்கொள்ளப்பட்ட ரஷ்யப் புரட்சி, இன்றைய இந்திய நிலைமைகளில் எப்படி பொருந்தும்?
இன்றைய உலகில், பொருள் உற்பத்தியைக் காட்டிலும் ஊக வணிகமே ஆதிக்கம் செலுத்துகிறது. பன்னாட்டு நிறுவனங்கள் தேசப் பொரு ளாதாரங்கள் மீது செல்வாக்கு செலுத்துகின்றன. ஊக வணிக நிதி மூலதன பித்துப்பிடித்த ஆட்டத்திற்கு உள்ளாகியுள்ள இன்றைய உலகில், சில பன்னாட்டு நிறுவனங்கள், தேசங்களின் பொருளாதாரங்களைக் காட்டிலும் பலமாக உள்ளன. கிட்டத்தட்ட சில இடங்கள் நீங்கலாக, தேச விடுதலைப் போராட்ட சுற்று முடிந்துவிட்டது. தேசங்களின் இறையாளுமையும் சுதந்திரமும் அரிக்கப்பட்டுள்ளன. சோவி யத் ஒன்றியம் இல்லை. சோசலிச முகாம் இல்லை. ஏகாதிபத்திய சங்கிலி, முதல் உலகப் போர் நேரத்தில் ரஷ்யாவில் பலவீனமாக இருந்தது. ஆனால், இன்றைய இந்தியாவில் சர்வதேச நிதி மூலதனத்தின் ஆட்சிக்கு, அவர்களது உலகமய தாராளமய தனியார்மய கொள்கைகள் அமலாக்கத்திற்கு, ஏகாதிபத்தியம் தலைமை தாங்கும் போருக்கு, இந்திய அரசும், அரசு நிறுவனங்களும், அகில இந்திய மற்றும் பிராந்திய கட்சிகளும்  கருத்தொற்றுமையுடன் ஆதரவு தருகிறார்களே?
ஏகாதிபத்திய சங்கிலியின் கண்ணி பலமாக உள்ள இந்தியாவில் புரட்சி எப்படி சாத்தியம்? ரஷ்யப் புரட்சியில் இராணுவம் புரட்சிக்காரர்கள் பக்கம் சேர்ந்தது. இந்தியாவில் அது சாத்தியமா? ரஷ்யாவில் புரட்சியின் எதிரியான முதலாளித்துவ வர்க்கம், அரசியல்ரீதியாக அனுபவம் இல்லாமலும், மோசமாக அமைப்பாக்கப்பட்டும் பலவீனமாக இருந்தது. அரசாங்க ஒப்பந்தங்களைப் பெரிதும் சார்ந்து, பொருளாதாரரீதியாக பலவீனமாக இருந்தது. அரசியல்ரீதியாய் சுயசார்பு இல்லாமல் முன்முயற்சி இல்லாமல் இருந்தது. அரசியல் இணைப்புக்களில் நரித்தந்திரங்களில், அதற்கு பிரெஞ்சு முதலாளித்துவத்தின் அனுபவம் கிடையாது. பலவிதமான சமரசங்களை ஏற்படுத்திக் கொள்ளும் பிரிட்டிஷ் முதலாளித்துவத்தின் திறமை கிடையாது. இப்படியாக, ரஷ்யப் புரட்சி வெற்றி பெற்றதில், ரஷ்ய முதலாளித்துவ பலவீனங்களும் கூட காரணமாக அமைந்தது பற்றி, போல்ஷ்விக் கட்சி வரலாற்றில் படம் பிடித்துக் காட்டப்பட்டுள்ளது.
ஆனால் இந்திய முதலாளித்துவமோ, 70 ஆண்டுகள் தாங்கும் திறன் கொண்டுள்ளதே? தெலுங்கானாவை, நக்சல்பாரியைக் கடந்து வந்துவிட்டதே? நிலச் சீர்திருத்தம், பசுமைப் புரட்சி, வளர்ச்சி முழக்கங்களை வெற்றிகரமாய் சந்தையில் விற்கிறதே? மக்களை மதரீதியாகப் பிளவுபடுத்துகிறதே? பாகிஸ்தானுக்கு எதிரான போர்வெறியை உசுப்பிவிட்டு, இதுவே தேச பக்திஇதை ஒத்துக் கொள்ளாவிட்டால் தேச விரோதி என மிரட்டுகிறதே? உலகம் முழுவதும் உழைப்புப் பிரிவினை இருக்கிறது என்றால், இந்தியாவில் உழைப்பாளர்களிடமே பிரிவினை இருக்கிறது என டாக்டர் அம்பேத்கர் சொன்ன நிலை இன்னமும் மாறவில்லையே? கதவுகளை அடைத்துக் கொண்டு, அக மணமுறையைப் பின்பற்றும் சாதி, உலகமய காலத்தில் மேலும் பலப்பட்டு, சாதிய ஏணியில் மேலே உள்ளவர்களை பக்தியுடனும் கீழே இருப்பவர்களை இழிவாகவும் பார்ப்பது 2016 வரை தொடர்கிறதே? இத்தகைய இந்தியாவில் ரஷ்யாவில் நடந்ததுபோல் ஒரு புரட்சி சாத்தியமா?
கேள்விகள். கேள்விகள். கேள்விகள். இந்தக் கேள்விகளுக்குப் பதில்கள் காணும் முன்இந்திய நிலைமைகள் பற்றிய ஒரு மார்க்சிய சித்திரத்தையும் தோழர் லெனினின் சில மேற்கோள்களையும் பார்ப்போம்.
இந்திய நிலைமைகள் பற்றிய
ஒரு மார்க்சிய சித்திரம்
இந்தியா ஒரு மேலோங்கிய விவசாய சமூகம்; அது ஒரு பின்தங்கிய முதலாளித்துவ சமூகம். இந்த சமூகம், விடாப்பிடியான நிலப்பிரபுத்துவ மிச்சசொச்சங்களாலும் அப்பட்டமான காலனிய தொடர்ச்சிகளாலும், முடக்கப்படுகிறது; அத்தகைய முடக்குபவற்றையே மறு உறுதி செய்கிறது. உலக மூலதனம் மற்றும் ஏகாதிபத்தியத்தின் பேராசைமிக்க ஆதிக்கத்தால் துன்புறுகிறது.
இந்திய அரசை, ஏகாதிபத்திய சார்பு பெருமுதலாளித்துவம், நிலப்பிரபுக்கள் மற்றும் குலாக்குகளுடன் கூட்டமைத்து ஆள்கிறது.
வெவ்வேறு சமூக அடையாளங்கள் மற்றும் பிராந்திய பிரிவினைகளுக்கு இடையிலான நுட்பமான சமநிலையைப் பயன்படுத்திக் கொண்டும், அரசுப் பொறியமைவில் வெவ்வேறு பிரிவுகள், மேலோங்கிய ஊடகப் பிரிவினரின் வெவ்வேறு பிரிவுகள் மீது அனைத்தும் தழுவிய கட்டுப்பாட்டை அனுபவித்துக் கொண்டும், பெருமுதலாளித்துவம், ஏகாதிபத்தியம் மற்றும் நிலப்பிரபுத்துவ குலாக் செல்வாக்கு பிரிவினரின் அச்சு, மொத்த நாடாளுமன்ற ஜனநாயகம் மீதும், திறன் வாய்ந்த கட்டுப்பாட்டைச் செலுத்துகிறது.
பெருமுதலாளித்துவத்திற்கும் இந்திய ஆளும் வர்க்கக் கட்சிகளுக்கும், அகில இந்திய மற்றும் மாநில மட்டங்களில் வளர்ந்து வரும் கூட்டு, நிறுவனமயப்படுத்தப்பட்ட ஊழலுக்கும் பிரும்மாண்டமான அளவிலான மெகா ஊழலுக்கும், முன் எப்போதும் இல்லாத வகையில், முதலாளித்துவ ஜனநாயகத்தை, பெரும் தொழில்குழுமங்கள் சீர்குலைப்பதற்கும் இட்டுச் சென்றுள்ளது.
காலனிய அரசு நிறுவனங்கள், குறுகிய சாதியாதிக்கம், வேரூன்றிய ஆணாதிக்கம், வன்மையான அரசு, கடுமையான சட்டப் பிரிவுகள் எல்லாம் ஜனநாயகத்தின் குரல்வளையை நசுக்குகின்றன. மூர்க்கமான பெரும்பான்மை மதவாதம், அய்க்கிய அமெரிக்கா தலைமையில் நடைபெறும் இசுலாத்தை சாத்தான்மயமாக்குவது, இசுலாமியர்களுக்கு எதிரான வெறுப்பு மற்றும் துன்புறுத்தல் அரசியலின் ஒரு பகுதியாக இன்று மாறி நிற்கிறது. இது இந்தியாவில் ஜனநாயகத்தின் இருத்தலுக்கும் கலாச்சார பன்மைத்துவத்துக்கும் அச்சுறுத்தலாகும்.
ஏகாதிபத்தியம் பெருமூலதனம் மற்றும் நிலப்பிரபுத்துவ மிச்சசொச்சங்களின் கூட்டு, இந்திய மக்களை பிணச் சுமையாய் அழுத்துகிறது.
இந்த நவீன கால தீமைகள் கொண்டு, இந்திய மக்களின் வளரும் ஜனநாயக ஒற்றுமையை, விழிப்புணர்ச்சியை பலவீனப்படுத்த, சீர்குலைக்க ஆளும் வர்க்கங்களும் அவர்களது  கட்சிகளும் முயற்சி செய்கின்றன.
தோழர் லெனின் மேற்கோள்கள்
நேரடியான, பகிரங்கமான, உண்மையான, பெரும்திரள் கொண்ட, புரட்சிகரமான போராட்டம் நடத்துவதற்கான நிலைமைகள் இல்லாதபோதும், புரட்சிகரமான செயல்முறைகளுக்கான அவசியத்தை உணர முடியாத மக்கள் மத்தியில், ஒரு புரட்சிகரமற்ற சூழலில், புரட்சிகரமல்லாத அமைப்புக்களில், ஏன் பிற்போக்கு அமைப்புக்களிலும் கூட (பிரச்சாரம் கிளர்ச்சி மற்றும் அமைப்பாகுதல் மூலம்) புரட்சியின் நலன்களை முன்நிறுத்துவதுதான், புரட்சியாளர்களாய் இருப்பதுதான் மிக மிகக் கடினமானது. மிகமிக மதிப்பிற்குரியது”.
என்ன செய்ய வேண்டும் நூலில், நமது திட்டவகைப்பட்ட செயல்தந்திரங்கள் என்பவை, தாக்குதலுக்கு உடனடி அழைப்பு விடுப்பதை நிராகரிப்பது, எதிரியின் கோட்டை மீதான ஒரு முறையான முற்றுகையைக் கோருவது அல்லது வேறு வார்த்தைகளில் சொன்னால், நமது எல்லா முயற்சிகளும் நிரந்தரப் படைவீரர்களைத் திரட்டுவது அமைப்பாக்குவது மற்றும் அணிதிரட்டுவதை நோக்கித் திசைவழிப்படுத்துபவையாக அமைய வேண்டும் என்கிறார். புரட்சிக்குத் தயாரிப்பது பற்றிப் பேசுகிறார்.
பல்வேறு நாடுகளில் முதலாளித்துவ வளர்ச்சி சமச்சீரற்ற விதத்தில் முன்செல்கிறது. பண்ட உற்பத்தி முறையின் கீழ், அது வேறு விதமாக அமைய முடியாது. இதிலிருந்து, எல்லா நாடுகளிலும், ஒரே நேரம் சோசலிசம் வெற்றி பெற முடியாது என்ற தவிர்க்க முடியாத முடிவு காணக் கிடைக்கும்”.
எல்லா தேசங்களும் சோசலிசத்தைச் சென்றடையும் என்பது தவிர்க்க முடியாது: ஆனால் அவை ஒரே வழியில் சோசலிசத்தை அடையாது”.
கம்யூனிசத்தை முதலாளித்துவம் விட்டுச் சென்றுள்ளவற்றில் இருந்து அல்லாமல் வேறு எதனைக் கொண்டு கட்டிஎழுப்ப முடியும்? நூறு ஆயிரம் வருட அடிமைத்தனம், பண்ணையடிமை முறை, முதலாளித்துவம், சந்தையில் ஓரிடத்திற்காக, தன் உழைப்பின் விளைபொருளுக்கு கூடுதல் விலைக்காக, ஒவ்வொருவரும் தன் பக்கத்தில் உள்ளவருடன் நடத்தும் போரால் ஊழல்படுத்தப்பட்டுள்ள மானுட மூலப் பொருட்கள் கொண்டுதான் கட்டி எழுப்ப முடியும்.”
ரஷ்ய - இந்திய புரட்சிகள்
சிந்தனையில், நடைமுறையில் தொடர்ச்சியும் மாற்றமும்
             இந்தியாவின் புரட்சியாளர்கள், எல்லா நிலப்பிரபுத்துவ மிச்சசொச்சங்களையும் துடைத்தெறிவது, ஏகாதிபத்திய ஆதிக்கத்தை ஒழித்துக் கட்டுவது, திறன்வாய்ந்த வரிவிதிப்பு, தேசியமயமாக்கம் மற்றும் இதர வழிகள் மூலம் பெரு மூலதனத்தைக் கட்டுப்படுத்துவது வரம்புக்குட்படுத்துவது, மொத்த ஆட்சி முறை கருவியை, பொறியமைவை ஜனநாயகப்படுத்துவது என்ற ஜனநாயகப் புரட்சியின் லட்சியங்களை நிறைவேற்றுவதன் ஊடே சோசலிசம் நோக்கியும் துணிச்சலாக அடி எடுத்து வைப்பார்கள்.
             ரஷ்யப் புரட்சிக்கும் இந்தியப் புரட்சிக்கும் பொதுவானவை எவை? சிறுபான்மை பெரும்பான்மையை ஆள்வதும், சமூகமயமாக்கப்பட்ட உற்பத்தி தனிச் சொத்தின் அபகரிப்புக்கு உள்ளாவதும் பொதுவானவைதானே! எல்லா சமூக அடையாளங்கள் தாண்டி, கூலி உழைப்பை மூலதனம் சுரண்டுவதும், மூலதனம் அதிக லாபம் ஈட்ட குறை கூலி நிலைமைகளை தக்க வைப்பதும் அதனால், ஏற்றத்தாழ்வுகள் பெருகுவதும் பொதுவானவைதானே!
சமாதானத்திற்கான பொதுவான ஜனநாயக இயக்கம், நில ஆதீனங்களுக்கு எதிரான விவசாய இயக்கம், ஒடுக்கப்பட்ட தேசிய இனங்கள் தேசவிடுதலை மற்றும் சமத்துவத்திற்கான இயக்கம், முதலாளித்துவ சர்வாதிகாரத்தை வீழ்த்தி பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை நிறுவும் இயக்கம் ஆகிய அனைத்தும் ரஷ்யப் புரட்சியில் துணிச்சலுடனும் படைப்பாற்றலுடனும் இணைக்கப்பட்டன. நிலம், ரொட்டி, சமாதானம் என ரஷ்யப் புரட்சி எழுப்பிய முழக்கங்கள் பொதுவானவைதானே. ரொட்டி என்பதை வாழ்வுரிமைகள் என நீட்டுவிக்க முடியும்தானே!
இந்தியாவில் மிகவும் குறிப்பாக, மதச்சார்பின்மைக்கான போராட்டமும், சாதியை அழித்தொழிக்கும் போராட்டமும், சுற்றுச் சூழல் காக்கும் போராட்டமும், பெண்களின் அச்சமற்ற சுதந்திரம் மற்றும் சமத்துவத்திற்கான போராட்டமும் புரட்சியின் பிரிக்க முடியாத பகுதிகளாகும். உழைப்பவர்களுக்கு இடையிலான, சாதிரீதியிலான போராட்டத்தின் மூலம் மதரீதியிலான போராட்டத்தின் மூலம் மத வெறியை மாய்க்கவோ சாதியை அழித்தொழிக்கவோ முடியாதல்லவா? உழைப்பவர்களை ஒன்றுபடுத்த வர்க்கப் போராட்டம் அவசியம்.
இந்தியாவின் புரட்சியாளர்கள், எதிரியின் வலிமை பற்றி மிகை மதிப்பீடு செய்யும், மக்கள் வலிமையைக் குறை மதிப்பீடு செய்யும் தவறுக்கு எதிராக, ரஷ்யப் புரட்சி வெளிப்படுத்திய விழிப்புடன் இருக்க வேண்டும்.
             இந்தியாவின் புரட்சியாளர்கள், முதலாளித்துவக் கட்சிகளுக்கு வால்பிடித்தல், நாடாளுமன்ற முடக்குவாதம் என்ற வலதுசாரிப் போக்குகளுக்கு எதிராகவும், மக்களைக் காட்டிலும் ஆயுதங்களைச் சார்ந்திருக்கும், கடினமான நீண்டகால அரசியல் அமைப்பு பணிகளை புறக்கணிக்கும் அராஜகவாதத்திற்கு எதிராகவும், ரஷ்யப் புரட்சி வெளிப்படுத்திய விழிப்புடன் இருக்க வேண்டும்.
             இந்திய இராணுவத்தினருக்கும் வர்க்கப் பின்னணி உண்டு. சமூகத்தில் பிரம்மாண்டமான இயக்கங்கள், கடைசல்கள் நடக்கும் போது, இராணுவத்தினர் அதில் இருந்து ஒதுங்கி விலகி நிற்க முடியாது. இராணுவத்தினருக்கு தீபாவளி வாழ்த்து அனுப்பச் சொல்லும் மோடியிடம், ஏன் இராணுவத்தினருக்கு ஒரே பதவிக்கு ஒரே ஓய்வூதியம் வழங்கவில்லைஏன் இராணுவத்தினருக்கு சிவிலியன்களுக்கு தரப்படும் டிசப்ளிட்டி ஓய்வூதியம் தரப்படுவதில்லை, ஏன் முப்படைத் தளபதிகள் கேட்டுக் கொண்ட பிறகும் 7ஆவது ஊதிய ஆணைய நடவடிக்கைகளில் இராணுவத்தினருக்கு இடம் தரவில்லை என்ற கேள்விகளை எழுப்ப வேண்டும். இராணுவத்தினரும், தவறான கொள்கைகளால், சாவு வியாபாரிகளின் ஆயுதப் போட்டியால் தாம் பலியாவதையும் உடலுறுப்புக்களை இழப்பதையும் விரும்ப மாட்டார்கள். போரில்லாத சமூகம், கவுரவமான வேலைகள் என்பவை, அவர்களுக்கும் ஏற்புடையவையே.
ரஷ்யப் புரட்சியில் தலைமறைவு கட்சியை தொழில்முறை புரட்சியாளர்கள் இயக்கினர். இந்தியாவில் வெகுமக்கள் போல்ஷ்விக் கட்சி கட்டப்பட வேண்டியுள்ளது. பல லட்சக்கணக்கில் பகுதி நேர ஊழியர்கள், கணிசமான எண்ணிக்கையிலான, புரட்சியை தொழிலாகக் கொண்டவர்களோடு தோளோடு தோள் நிற்க வைக்க நாம் தயாரிப்புக்களைச் செய்ய வேண்டும். நாளும் பொழுதும், மூலதனத்தைக் கொழுக்க வைத்து தம் மீதான, தம் சந்ததியினர் மீதான அடிமைச் சங்கிலிகளை பலப்படுத்தும் கூலி உழைப்பாளர்கள் மத்தியில் இருந்து, முதலாளித்துவத்தை வீழ்த்த நேரம் ஒதுக்கும் திரள்திரளான போராளிகளை நம்மால் நிச்சயம் தயார் செய்ய முடியும். தயார் செய்தாக வேண்டும்.
உலகில், நீடித்த நாடாளுமன்ற ஜனநாயக முறை நிலவும் நாட்டில் இன்னமும் புரட்சி வெற்றி பெறவில்லை என்ற தகவல் சரிதான். ஆனால் இது அந்த அளவிலேயே, எப்படி ஒரு கருத்தியல் அரசியல் முடிவாக முடியும்?
வார்டு மட்டம் வரை வேரூன்றியுள்ள முதலாளித்துவ அரசியலை வேரறுப்பதும் பாட்டாளி வர்க்க அரசியலை வேரூன்ற வைப்பதும் எளிமையான நடவடிக்கைகள் அல்ல. நாம் புரட்சியை மாலை நேர விருந்தாக, மென்மையானதாக, எளிமையானதாகக் கருதவில்லை. ஒரு வர்க்கம் மற்றொரு வர்க்கத்தைத் தூக்கியெறியும் பலாத்கார நடவடிக்கையாகவே காண்கிறோம்.
நடக்காதவற்றை, நடக்க வைக்க வேண்டும். உலகத்தை, நிலைமைகளை வியாக்கியானம் செய்வதோடு நின்றுவிடாமல் மாற்றியமைப்பதுதானே நம் கடமை. 20 நூற்றாண்டுகளாக, கிறிஸ்துவுக்குப் பின், சிறுபான்மையினர் பெரும்பான்மையினரை ஆள்வதைத்தான் உலகம் கண்டது. ஆனால் 1871ல் பாரிஸ் கம்யூன் போராளிகள், 1905, 1917 ரஷ்யப் புரட்சிகள், பெரும்பான்மை சிறுபான்மையை ஆளும் முயற்சியில்  ஈடுபட்டு வெற்றி பெறவில்லையா? பாரிஸ் கம்யூன் சில நாட்களிலும் ரஷ்யப் புரட்சி சில பத்தாண்டுகளிலும் வீழந்தது உண்மையே. ஆனால், உழைக்கும் பெரும்பான்மையினர், ஒரு நாள் இல்லை ஒரு நாள் நாம் வெல்வோம் என்ற போர்க்குணமிக்க உலகப் பார்வையுடன் வரலாற்றை நகர்த்தாமல் விடுவார்களா?

இவற்றைச் சாதிக்க, முதலாளித்துவ பொருளாதார நிபுணர்கள் அடிக்கடி சொல்வது போல், நாம், நம் அடிப்படைகளைப் பலப்படுத்திக் கொள்ள வேண்டும்.  

Search