COMMUNIST PARTY OF INDIA (MARXIST - LENINIST) - LIBERATION

COMMUNIST PARTY OF INDIA (MARXIST - LENINIST) - LIBERATION, TAMILNADU

Monday, April 18, 2016

மாலெ தீப்பொறி தொகுதி 14 இதழ் 18 2016 ஏப்ரல் 16 – 30

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2016
பெருந்தொழில்குழும, மதவெறி, சாதியாதிக்க சக்திகளை முறியடிப்போம்! 
மக்கள் நல்வாழ்க்கைக்காகவும் ஜனநாயக தமிழகம் அமைப்பதற்காகவும் போராடுவோம்!
வெப்ப அலையும் அடுத்து வரக்கூடிய வறட்சியும் குடிநீர்ப் பஞ்சமும் வெளிப்படையாகத் தெரிகின்றன. கடந்த சில தேர்தல்களில், ஆளும் கட்சி எதிர்ப்பே எதிர்க்கட்சிகளுக்கு ஆதரவாக மாறிய ஒரு காட்சி, அதனால் உருவான ஓர் அலை போன்ற விசயங்களை, இந்தத் தேர்தலில் இது வரை வெளிப்படையாக காண முடியவில்லை.
ஆனால் ஏறத்தாழ 50 ஆண்டுகளாக நடந்து வரும் கழக ஆட்சிகள் மீது வெறுப்பு, அலுப்பு, சலிப்பு எல்லாமே மக்களுக்கு இருக்கிறது. அஇஅதிமுக, திமுக மீதான மக்கள் சீற்றம், அதிருப்தி, மாற்றுக்கான ஒரு தேவையாக, தேடலாக மாறியுள்ளது எனச் சொல்ல முடியும்.
அதனால்தான் இந்தத் தேர்தலில், பல முனைப் போட்டி, பல முதலமைச்சர் வேட்பாளர்கள். ஜெயலலிதா, கருணாநிதி வேண்டாம், என்னையே முதலமைச்சராக்குங்கள் என விஜயகாந்த் கேட்பதுபோல், அன்புமணியும் சீமானும் கூட கேட்கிறார்கள். கழகங்கள் ஆண்டது போதும் மக்கள் மாண்டது போதும் என்பது நிச்சயம் 2016 தேர்தலின் ஒரு முக்கியச் செய்திதான். இந்தச் செய்தியின் முக்கியத்துவத்தை, தேர்தல் முடிவுகள், அவை எப்படி அமைந்தாலும் மாற்றி விடாது.
அஇஅதிமுக, திமுக தோற்கடிக்கப்பட வேண்டும்
தற்சமயம் மத்தியிலோ மாநிலத்திலோ திமுக அதிகாரத்தில் இல்லை என்பது உண்மைதான். அஇஅதிமுகவை மென்மையாக வும் திமுகவை வன்மையாகவும் எதிர்ப்பது போல் ஒரு தோற்றம் வந்தால் கூடத் தவறுதான். அதே நேரம், அஇஅதிமுக மீதான அதிருப்தியை திமுக என்ற மக்கள் விரோத கட்சி அறுவடை செய்து விடக் கூடாது என்பதால், அதன் மீதும் போதுமான அளவு கடுமையான விமர்சனங்களை வைத்தாக வேண்டும்.
ஜெயலலிதா தமது சாரமற்ற, விறுவிறுப்பில்லாத பிரச்சாரத்தைத் துவக்கிவிட்டார். உண்மை பற்றி கொஞ்சமும் கவலைப்படாமல், சிறிதும் கூச்சமில்லாமல், தாம் தவ வாழ்க்கை வாழ்வதாகவும், தமிழக மக்கள் வாழ்க்கையில் வசந்தம் வீசுவதாகவும் சொல்கிறார். ஒருவேளை ஜெயலலிதா, ஜக்கி வாசுதேவ், லட்சம் தலைவாங்கி பதஞ்சலி பிராடக்ட்ஸ் பாபா ராம்தேவ், வாழும் கலை கார்ப்பரேட் குரு ரவிசங்கர் போன்ற கார்ப்பரேட் சாமியார்களின் நவீன தவ வாழ்க்கையைக் குறிப்பிடுகிறாரா?
அய்தராபாத் திராட்சைத் தோட்டங்கள், சிறுதாவூர் பங்களா, கொடநாடு எஸ்டேட், சொல்லப்படுகிற பல ஆயிரம் கோடி சொத்துக்கள் மத்தியில் இருந்து கொண்டு, இன்னும் அய்ந்து ஆண்டுகள் தமிழ்நாட்டு மக்களை வாட்டி வதைக்க, தமக்கு வரமும், மக்களுக்கு சாபமும் கிடைக்க தவம் இருக்கிறாரா? அல்லது சொத்து குவிப்பு வழக்கில் உச்சநீதிமன்ற வழக்கில் தீர்ப்பு தண்டனையில் முடிந்து மூன்றாம் முறை சிறைவாசம் வேண்டாம் என்ற தமது வேண்டுதல் மற்றும் கவலையை தவமாகக் கருதுகிறாரா?
கூட்டங்களுக்கு வரவழைக்கப்பட்ட மக்கள், ஏழை எளியவர்கள், கட்சிக்காரர்கள், இரத்தத்தின் இரத்தங்கள் சுட்டெரிக்கும் வெயிலில் வாடி வதங்கிக் கொண்டிருந்தபோது, 10 ஏர்கன்டிஷனர்கள் ஏர்கூலர்கள் சகிதம் இளைப்பாறிக் கொண்டே, தமிழ்நாட்டு மக்களின் வாழ்க்கையில் தம் ஆட்சிக்காலத்தில் வசந்தம் வீசுவதாகச் சொல்ல, ஜெயலலிதாவுக்கு எவ்வளவு துணிச்சல்? கும்பகோணம் மகாமகக் குளக் குளியலுக்காக மக்களைச் சாகடித்த ஜெயலலிதாவின் குற்றமய ஆணவம் அலட்சியம், விருத்தாச்சலம் கூட்டத்தில் இரண்டு உயிர்களைப் பலி வாங்கிவிட்டது.
தமிழக மக்களுக்கு நல்வாழ்க்கையும் ஜனநாயகமும் மறுக்கப்பட்டுள்ளது. மூடு டாஸ்மாக்கை மூடு எனப் பாடினால் இபிகோ 124 ஏ பிரிவு படி தேசத் துரோகம் என்று சொல்கிறது ஜெயலலிதா அரசாங்கம். தேசபக்த வேடத்துடன், தேச விரோதிகளாய் தேச மக்கள் விரோதிகளாய்ச் செயல்படுவதில் மோடியும் ஜெயலலிதாவும் போட்டி போட்டுக் கொள்கின்றனர்.
ரூ.9,000 கோடி வங்கிக் கடன் வாங்கி விழுங்கி ஏப்பம் விட்டுவிட்டு இங்கிலாந்திற்கு தப்பி ஓட விஜய் மல்லய்யாவை மோடி அனுமதித்தார் என்றால், ஜெயலலிதா ஆட்சியில் விவசாயி பாலனை தவணை கட்டுவதில் தாமதம் என தனியார் நிதி நிறுவன வசூல் குண்டர்கள், காவல்துறையினரும் சேர்ந்து தாக்க, நடு வீதியில் சித்திரவதை செய்து அழைத்துச் செல்கிறார்கள்.
மகாராஷ்டிரா மாநிலம் விதர்பா உள்ளிட்ட பகுதிகள் வறட்சியில் வாடும்போது அய்பிஎல் கிரிக்கெட் போட்டிக்கு தண்ணீர் செலவழிக்கக் கூடாது என மும்பை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வட இந்தியா மேற்கு இந்தியா கிழக்கு இந்தியா தெலுங்கானா, ராயலசீமா ஆகிய பகுதிகள் உஷ்ண அலை மற்றும் வறட்சியின் கோரப் பிடிக்குள் சிக்கியுள்ளன. மோடி, வேலை உறுதித் திட்டத்திற்கு வெறும் ரூ.38,000 கோடி ஒதுக்குகிறார். இதில் பல ஆயிரம் கோடி சென்ற ஆண்டு கொடுக்காத சம்பளம் தருவதற்குப் போகும். ஆனால் பெருமுதலாளிகளிடம் பெரும் பணக்காரர்களிடம் இருந்து அரசுக்கு வர வேண்டிய வருவாய், அவர்கள் வங்கிகளுக்குத் திருப்பிச் செலுத்த வேண்டிய கடன் என்று மட்டும் மோடியும் ஜெட்லியும் ரூ.12.5 லட்சம் கோடி விட்டுக் கொடுத்துள்ளார்கள். இதே பாதையில்தான் அஇஅதிமுக பயணம் செய்கிறது.
முதலாளிகளை, கிராமப்புற மேட்டுக் குடியினரை, மதவெறியர்களை, சாதி ஆதிகக் சக்திகளை மனம் குளிரவைக்க, ஜெயலலிதா தமிழ்நாட்டு மக்களுக்கு துன்பமும் துயரமும் மட்டுமே தந்துள்ளார். படிப்படியாக மது விலக்கு என்று சொல்லும் ஜெயலலிதாவும் அஇஅதிமுகவும் ஒரேயடியாக தமிழ்நாட்டில் அரசியல் களத்திலிருந்து அப்புறப்படுத்தப்பட வேண்டும். கிடைத்திருக்கும் இந்த நல்ல வாய்ப்பை மே 2016ல் தமிழக மக்கள் கைப்பற்றிக் கொள்ள வேண்டும்.
2016 தேர்தலில், கருணாநிதி காங்கிரசோடு சேர்ந்து வருகிறார். கூடா நட்புக் கூட்டணி, கூடா நட்பு முதலாளித்துவ எடுபிடிகள், 2ஜி ஊழல் கூட்டம், குடும்ப ஆட்சி கூட்டம் திரும்பவும் வாய்ப்பு கேட்கிறது. முதலாளிகள் ஆதரவு, மக்கள் விரோத கொள்கைகளை அமல்படுத்தி கோடிகோடிகளாய் கல்லா கட்டப் போவது நீயா நானா என்பது மட்டுமே அஇஅதிமுக, திமுக இடையிலான சண்டை என்பதால், திமுகவும் தோற்கடிக்கப்பட்டாக வேண்டும்.
50 ஆண்டுகளில் கழக ஆட்சிகள்
அஇஅதிமுக திமுக ஆட்சிகளை நாம் விமர்சனம் செய்யும் போது, அது, நாம் திராவிட இயக்கத்தின் முற்போக்கு விழுமியங்களை, பாத்திரத்தை மறுப்பதாக ஆகாது. சாதி ஆதிக்க எதிர்ப்பு, மூட நம்பிக்கை எதிர்ப்பு, சாமான்ய மக்களை பொது வாழ்க்கையில் அரசியலில் ஒரு கட்டம் வரை இழுத்து வந்து ஈடுபடுத்தியது, பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீடு, இந்தி திணிப்பு எதிர்ப்பு போன்ற திராவிட இயக்க துவக்க கால வெற்றிகள் மறக்கவோ மறுக்கவோ முடியாதவை. ஆனால் ஒன்று அதன் எதிர்மறையாக மாறுகிறது என்ற விதிக்கேற்ப, இன்றைய திராவிட பெயர் தாங்கிய அஇஅதிமுக திமுக கட்சிகள், பிற்போக்கு விழுமியங்களின் கோட்டைகளாக மாறியுள்ளன.
சாதி ஆதிக்க எதிர்ப்பும் சாதி சமத்துவமும்
 திருநாள்கொண்டசேரி தலித் முதியவர் இறந்தபோது, சடலத்தை எடுத்துச் செல்ல பொதுப் பாதை மறுப்பதில், சாதி ஆதிக்கம், நீதிமன்றத்தையும் அரசாங்கத்தையும் மீறிச் செயல்பட்டதை, 2016 துவக்கம் காட்டியது.
 2016 மார்ச்சில் பட்டப்பகலில் உடுமலைப்பேட்டையில் தலித் இளைஞர் சங்கர், அவர் ஆதிக்க சாதிகயைச் சேர்ந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டார் என்பதற்காகக் கொலை செய்யப்பட்டார். வெட்டியவர்கள், பதறாமல் நிதானமாக அந்த இடத்திலிருந்து நகர்கிறார்கள்.
 பரமக்குடி, தாமிரபரணி என அஇஅதிமுக திமுக ஆட்சிகளில் தலித்துகள் படுகொலை செய்யப்படுவதும், நீதி விசாரணை செய்பவர்கள் பாதிக்கப்பட்ட தலித்துகளையே குற்றம் சொல் வதும் தமிழ்நாட்டில் வாடிக்கையாகிவிட்டது.
இங்கு 13.04.2016 தேதிய தீக்கதிரில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் டி.ரவிக்குமார் தந்துள்ள அடிப்படையான விவரங்கள் கவனிக்கத்தக்கவை. 2005 - 2006ல் தமிழ்நாட்டில் 8 லட்சத்து 84,000 தலித்துகள் தங்கள் கைவசம் 5 லட்சத்து மூவாயிரம் ஹெக்டேர் நிலம் வைத்திருந்தனர். 2010 - 2011ல் நிலமிருக்கும் தலித்துக்கள் எண்ணிக்கை 8 லட்சத்து 73,000 ஆனது. அவர்கள் கையிருப்பில் இருந்த நிலமும் 4 லட்சத்து 92 ஆயிரம் ஹெக்டேர் ஆனது. நிலம் இருக்கும் தலித்துகள் எண்ணிக்கை 11,000 குறைந்தது. அவர்கள் கைவசம் இருந்த நிலமும் 11,000 ஹெக்டேர் குறைந்தது. 2016 நிலைமை இன்னமும் மோசமாகி இருக்கவே எல்லா வாய்ப்பும் உள்ளது.
திராவிட இயக்கப் பின்னணி இல்லாத கட்சிகள் ஆளும் ஆந்திர, கர்நாடக, மகாராஷ்டிரா நிலைமைகள் மேலாக உள்ளன. ஆந்திராவில் 2010 - 2011ல், 14 லட்சத்து 57 ஆயிரம் தலித்துகள் நிலம் வைத்திருந்தனர். அவர்கள் கைவசம் 11 லட்சம் ஹெக்டேர் நிலம் இருந்தது. தமிழ்நாட்டில் இருப்பதை விட இரண்டு மடங்குக்கும் கூடுதலாய் உள்ளது. கர்நாடகாவில் 9 லட்சத்து 14 ஆயிரம் தலித்துகளிடம் 10 லட்சத்து 74 ஆயிரம் ஹெக்டேர் நிலம் உள்ளது. மகாராஷ்ட்ராவில் 10 லட்சத்து 30 ஆயிரம் தலித்துகளிடம் 13 லட்சத்து 9 ஆயிரம் ஹெக்டேர் நிலமிருக்கிறது. ரவிக்குமார் சரியான மய்யமான ஒரு விஷயத்தை தொட்டுள்ளார். தமிழ்நாட்டில் தலித் வாழ்க்கை மேம் படவில்லை என்பதை மேலே குறிப்பிட்டுள்ள விவரங்கள் காட்டும்.
தமிழ்நாட்டில், அதிமுக திமுக அரசியல், எண்ணிக்கை பெரும்பான்மை ஆதிக்க சாதிகளின் ஆதிக்கத்தை கேள்விக்குள்ளாக்கவில்லை. அதன் முன்பு மண்டியிட்டு சரணடைந்தது. சந்தர்ப்பங்கள் வசமாக அமைந்தபோது, சாதியாதிக்க சக்திகள் சாதி உணர்வுகளை விசிறி வளர்த்தன. அதனால்தான், தமிழகத்தின் மேற்கே, தெற்கே, வடக்கே, டெல்டாவில் என எங்கும் சாதி ஆதிக்கம் கொடி கட்டிப் பறக்கிறது.
சிறுபான்மையினர் நிலை
சங்பரிவார் - இந்துத்துவா சக்திகள் தமிழகத்தில் காலூன்ற விரிவடைய அஇஅதிமுக திமுகதான் வாய்ப்பு தந்தனர். உறவாடினர். கரம் கோர்த்தனர். 10 ஆண்டிற்கும் மேல் சிறையில் உள்ள இசுலாமியக் கைதிகள் மட்டும் தமிழ்நாட்டில் சிறையிலிருந்து வெளியே வர முடியவில்லை. கோவையில், நெல்லையில், எங்கெல்லாம் அவர்கள் உரிமை கோரினாலும், அங்கெல்லாம் அவர்கள் மீது பயங்கரவாத தீவிரவாத தேச விரோத முத்திரை பாய்கிறது. ஏகாதிபத்தியம் தொடுத்த உலகளாவிய, இந்தியா தழுவிய இசுலாமிய எதிர்ப்பு போர், தமிழ்நாடு வரை நீண்டுள்ளது. இன்னமும் அவர்கள் கல்வியிலும் வேலை வாய்ப்பிலும் பின்தங்கியே உள்ளனர். இப்போதும் இந்துத்துவா கும்பல்கள் கிறிஸ்தவர்கள் வழிபாட்டு உரிமையை, மதமாற்றம் என்ற கூப்பாடு போட்டு தடுத்து வருகின்றன. தேவாலயங்கள் கட்ட, வழிபட, விரும்புபவர்கள் மதம் மாற, மதம் மாற்ற வாய்ப்பு மறுக்கப்படுகிறது.
விவசாயம்
தமிழக விவசாயம் சின்னாபின்னமாக்கப்பட்டு உள்ளது. மீத்தேன், கெயில், அனல்மின் நிலையங்கள், இதர முதலாளித்துவ கார்ப்பரேட் வளர்ச்சிப் பாதை திட்டங்கள், வளரும் ரியல் எஸ்டேட் தொழில், இயற்கைவளக் கொள்ளை ஆகியன விவசாயத்தை, குறிப்பாக சிறுவீத விவசாயத்தைக் கிட்டத்தட்ட அழித்துவிட்டன. ஏழை நடுத்தர விவசாயிகள் விவசா யத்திலிருந்து, நிலத்திலிருந்து வெளியேறுகிறார்கள். பெருகும் கிராமப்புற வறுமை, மூலதனத் திரட்சிக்கு நெம்புகோலான சேமப்பட்டாளத்தை உருவாக்கி, உபரி மக்கள் தொகையை நகரங்களில் கொண்டு வந்து குப்பை கூளங்கள் போல் கொட்டுகிறது.
வாழ்வாதார, ஜனநாயக உரிமைகள் மறுப்பு
கல்வி, மருத்துவம் போன்ற மக்கள்சார் நடவடிக்கைகளிலிருந்து வெளியேறிய அஇஅதி முக, திமுக அரசுகள், சாராயத் தொழிலைக் கொழுக்க வைத்து சாராய வியாபாரத்தை பெருக்கினர். காவல்துறையின் அதிகாரத்தை வானளாவியதாக வளர்த்து, மக்களின் போராட்ட உரிமைகளை வெட்டிச் சுருக்கினர். முதலாளிகளின் லாபம் பெருக, தொழிலாளர்களின் கூலி குறைந்தது. கருணாநிதியும் ஜெயலலிதாவும், தமிழ்நாட்டின் மனிதவளத்தை (மலிவான உழைப்பை) இயற்கை மற்றும் இதர வளங்களை மூலதன சந்நிதானங்களில் காணிக்கையாக்கும் நவீன பூசாரிகளாயினர். கார்ப்பரேட் பார்ப்பனியம் தழைத்தோங்கியது.
இயற்கை வளச் சூறையாடலும் கட்டுக்கடங்கா ஊழலும்
கிரானைட்டிலிருந்து தாது மணல் வரை எல்லா வளங்களும் சூறையாடப்படுகின்றன. காவல்துறை - நீதிபதிகள் - அரசு அதிகாரிகள் - ஊழல் அரசியல்வாதிகள் - அஇஅதிமுக திமுக ஆட்சிகள் கூட்டு, தமிழ்நாட்டின் நீர், நில, இயற்கை வளங்களை இன்னும் சில ஆண்டுகளில் மொத்தமாய்ச் சூறையாடி விடும். கற்பனை செய்ய முடியாத அளவு ஊழல், நூறு கோடி ஆயிரம் கோடி தாண்டி பல்லாயிரம் கோடி சில லட்சம் கோடி என ஒவ்வோர் அய்ந்தாண்டும் ஓங்கி உயர்ந்துள்ளது. அதனால்தான், தமிழ்நாட்டு மக்களுக்கு, தமிழ்நாட்டிற்கு, தீமை மட்டுமே குறைவின்றி செய்யும், அஇஅதிமுக, திமுக தோற்கடிக்கப்பட வேண்டும்.
அஇஅதிமுக, திமுக நம்பிக்கையுடன் உள்ளனவா?
ஜெயலலிதா பேச்சில் வேகமோ உணர்ச்சியோ இல்லை. வழக்கம்போல் எழுதி வைத்ததைப் பக்கம் பக்கமாய்ப் படிக்கிறார். கருணாநிதியை திரு.கருணாநிதி என அழைக்க ஆரம்பித்துள்ளார் என்பது மட்டுமே, அவர் பிரச்சாரத்தில் பளிச் எனத் தெரிகிற வித்தியாசம்.
234 இடங்களிலும் இரட்டை இலை என்பது தன்னம்பிக்கையைக் காட்டுவதாக நாம் கருதக் கூடாது. அவருக்கு பெரும்பான்மை கிடைக்காதோ என்ற அச்சம் உள்ளது. அதனால்தான் தமாகாவை இரட்டை இலையில் போட்டியிடச் சொன்னார். இசுலாமிய சமூகத்திற்கென 3 இடங்கள், தனியாக, நாடார், கவுண்டர், முக்குலத்தோர், தலித் அடையாள அமைப்புக்கள் என ஜெயலலிதாவால் முன் நிறுத்தப்பட்டுள்ளவர்களுக்கு, ஆளுக்கு ஓர் இடம் ஒதுக்கி உள்ளார். குறைந்த இடங்கள் வென்று, கூட்டணி கட்சிகளை மதித்து நாடும் நிலை, ஏற்படக் கூடாது என்பதில் அம்மையார் தெளிவாக இருக்கிறார். 227 வேட்பாளர்களில், 226 பேர் கடைசி நேரம் வரை மாற வாய்ப்புள்ளது என அன்புமணி கேலி செய்ததில் பொருள் இல்லாமல் இல்லை.
திமுகவை, குறிப்பாக கருணாநிதியை நினைத்தால்தான் பரிதாபமாக உள்ளது. குடும்ப நெருக்கடி, உள்கட்சி நெருக்கடி தவிர்க்க, தள்ளாத வயதில் குரலும் விரலும் நடுங்கும் போதே கருணாநிதி முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்தப்படுகிறார். அணைக்கட்டு, சீர்காழி, ஆலங்குடி, உடுமலைப் பேட்டை என எங்கும் வேட்பாளர் தேர்வில் உட்கட்சிப் பூசல், அடிதடி வரை சென்றுள்ளது. கருணாநிதியின் கட்டுப்பாடு கலகலத்துப் போயுள்ளது. உள்கட்சி அதிருப்தியைச் சமாளிக்க, துதிபாடி மன்றம் ஒன்றை எப்போதும் வைத்திருக்க, ஜனநாயக விரோதமான சட்டமன்ற மேலவையை, கருணாநிதி மீண்டும் கொண்டுவர முயற்சிக்கிறார். 2006 தேர்தல் அறிக்கை ஹீரோ என்றார் செட்டிநாட்டு சீமான் சிதம்பரம். 2016 தேர்தல் அறிக்கை சூப்பர் ஹீரோ என்கிறார் ஸ்டாலின். மக்கள், படம் பார்க்காவிட்டால் படம் ஓடாது என, உதயநிதி மூலம் ஸ்டாலினுக்கு தெரியாமலா போய்விடும்?
அஇஅதிமுக வேட்பாளர்கள் கட்சித் தலைமை பற்றியும் மக்களைப் பற்றியும் பயந்து போய் இருக்கிறார்கள். திமுககாரர்கள் இந்த முறை அதிகாரம், பதவி எப்படியாவது வர வேண்டும், இல்லாவிட்டால் எப்போதும் இல்லை எனப் பயப்படுகிறார்கள்.
திமுகவில் சந்திரகுமார் வகையறாக்களை இழுத்து சூரியகுமார்களாக்கி அவர்கள் பெயரில் மக்கள் என்ற சொல்லையும் சேர்த்து, தேர்தலில் போட்டியிட, அவர்களுக்கு மூன்று இடங்கள் ஒதுக்கியதால், திமுகவில் வெறுப்பும் விரோதமுமே மிஞ்சியது.
இரண்டு கட்சிகளுமே நெருக்கடியில் உள்ளன.
அலுப்புத் தட்டாமல் தமாஷ் செய்ய பாஜக
கைநோகத் தட்டியும் அஇஅதிமுக, திமுக கூட்டணி கதவுகள் திறக்காததால் விரக்திய டைந்த வேல்முருகன், சேதுராமன், கதிரவன், எஸ்டிபிஅய் போன்றோர் ஒரு புறம் என்றால், மறுபுறம் முதலமைச்சராகி முதல் கையெழுத்துப் போட பேனா வாங்கி வைத்துள்ள அன்புமணி ராமதாஸ், தமிழ்க் கடவுள் முருகனின் பேரப்பிள்ளை சீமான் ஆகியோரும், இந்த நாடகத்தில் வந்து போகிற கதாபாத்திரங்களே.
ஆனால் நாடகத்தின் நகைச்சுவைப் பாத்திரம் பாஜகவிற்கே பொருத்தமாக அமைந்துள்ளது.
பாஜக, உடையார் சமூகக் கட்சிக்கு 45 இடங்கள், யாதவ சமூகக் கட்சிக்கு 24 இடங்கள் என, தாராளமாக இடங்களை வாரி வழங்கி உள்ளது. பாஜகவின் இந்த தாராளம் பற்றி கிண்டல் செய்து தமிழ் நாளேடு ஒன்று வெளியிட்டுள்ள பின்வரும் செய்தி, பாஜக தமிழ்நாட்டில் எந்த அளவுக்கு தனிமைப்பட்டுள்ளது என்பதைக் காட்டும்.
பாஜக கூட்டணியிலிருந்து புதிய நீதிக் கட்சி விலகியது ஏன் (ஒரு கற்பனை) 10 தொகுதிகள் கேட்டார் ஏ.சி.சண்முகம், 20 தொகுதிகளுக்கு குறைவாக நாங்கள் யாருக்கும் கொடுப்பதில்லை என்றார் தமிழிசை.
மறுத்துப் பேசியும் தமிழிசை கேட்கவே இல்லை. எனவே ஹெச்.ராஜாவைச் சந்தித்து முறையிட்டார் சண்முகம். தமிழிசைக்கு அனுபவம் இல்லை. அதனால் உங்களுக்கு வெறும் 20 தொகுதிகள் கொடுத்துவிட்டார். இது தப்பு. இந்தா 30 தொகுதிகளை பிடியுங்கள் என்றார் ராஜா.
உங்கள் முடிவை ஏற்க முடியாது, நான் டெல்லி சென்று அமித் ஷாவிடம் பேசுகிறேன் என்றார் சண்முகம். விஷயம் தெரியாத ஆளாயிருக்கீங்களே! நானாவது தமிழ்நாட்டில் மட்டும் தான் தொகுதி தருவேன். அமித் ஷாவிடம் போனால் கேரளத்தில் உள்ள 10 தொகுதிகளையும் சேர்த்து உங்கள் தலையில் கட்டிவிடுவார் என்றார் ராஜா. இதனால் பயந்து போன சண்முகம் கூட்டணியை விட்டே விலகிவிட்டார். அவரது அடுத்த மூவ் கட்சியைக் கலைத்துவிட்டு அரசியலில் இருந்தே விலகுவதுதான் என்கிறார்கள்.
மாற்றத்துக்கான, தமிழ்நாட்டு மக்களின் விருப்பத்துக்கும் தேவைக்கும் 
நியாயம் வழங்கப்பட்டுள்ளதா?
வைகோவை மக்கள் நலக் கூட்டணியில் சேர்த்ததால், இகக(மாலெ), அந்த அணியில் இடம் பெற சம்மதிக்கவில்லை. இப்போது அந்த அணியின் முதல்வர் வேட்பாளராக விஜய்காந்த் அறிவிக்கப்பட்டுள்ளார். அவர் கருப்பு எம்ஜியாராம். அவர் நிறம் மட்டும் கறுப்பு, அவர் உள்ளம் வெள்ளை என்று ஒரு தலைவர் பேசுகிறார். வெயில் காலம் அல்லவா!
எம்ஜிஆர், கேப்பிட்டலிசம் சோசலிசம் கம்யூனிசத்தை சேர்த்து கலக்கினால் அண்ணாயிசம் வரும் என்றார். கருப்பு எம்ஜிஆர் ஒரு தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் சமூக நீதி, இட ஒதுக்கீடு, ஈழம், சேது சமுத்திரம், காவிரி, முல்லைப் பெரியார், லோக் ஆயுக்தா, மதுவிலக்கு, தொழிலாளர் உரிமைப் பாதுகாப்பு, குறைந்தபட்ச சம்பளம், விளை நிலங்களை, விவசாயத்தைக் காப்பது பற்றியெல்லாம் எதுவும் குறிப்பிடப்படவில்லை.
கிட்டத்தட்ட எல்லாத் துறைகளிலும் தனியார் துறையோடு இணைந்து (பப்ளிக் பிரைவேட் பார்னர்ஷிப்) வேலை வாய்ப்பு உருவாக்கப்படும். தனியார் துணையுடன் கப்பல் போக்குவரத்து முன்னேற்றப்படும். மணல் தயாரிக்கப்பட்டு குறைந்த விலையில் வழங்கப்படும். ஆண்டுக்கு 5,000 விவசாயிகள் என 5 ஆண்டுகளில் 25,000 விவசாயிகள் வளர்ந்த மேலை நாடுகளுக்கு அனுப்பப்பட்டு, அங்குள்ள விவசாய நுட்பங்கள் கற்றறிய ஏற்பாடு செய்யப்படும். அரசு நிறுவனங்கள் அனைத்தும் பங்குச் சந்தையில் பதிவு செய்யப்பட்டு, அவற்றின் பங்குகள் தொழிலாளர்க ளுக்கு வழங்கப்படும். ஆறுகள் இணைக்கப்படும். சுங்கச் சாவடிகளின் கட்டணம் பாதியாகக் குறைக்கப்படும். பொங்கலுக்கு ஒரு வாரம் விடுமுறை, அப்போது பள்ளி கல்வி நிறுவனங்கள் அரசு நிறுவனங்கள் இயங்காது. இவை விஜய்காந்த் தேர்தல் அறிக்கையில் உள்ளவை.
விஜய்காந்த் என்ற ஞானப்பழம் நழுவி மக்கள் நலக்கூட்டணி என்ற பாலில் விழுந்தது என்று தோழர் முத்தரசன் குறிப்பிட்டது, தேமுதிக தேர்தல் அறிக்கையில் வெளிப்பட்ட ஞானத்தைப் பார்த்த பிரமிப்புதான் என்று புரிந்து கொள்ள முடிகிறது.
விஜய்காந்த் மற்றும் கூட்டணியின் பெருமைகள்
தோழர் முத்தரசன், ‘தேமுதிக தலைவர் விஜய்காந்த் பொதுக் கூட்டங்களில் பேசுவதை நான் கவனித்து வருகிறேன். அவர் எங்களைப் போன்ற தலைவர்களைப் போல் பேசுவதில்லை. அவர் ஈரடி திருக்குறள் போல் அழகா கவும் மிகவும் தெளிவாகவும் பேசுகிறார்.’ என்றார். வெளிச்சம் தொலைக்காட்சி துவக்க விழாவில் திருமாவளவன், விஜய் என்றால் வெற்றி, விஜய்காந்த் வெற்றியை ஈர்ப்பவர் என்றார்.
கூட்டணியைப் பற்றிப் பேசும்போது ஒரு தலைவர் ஆறுமுகத்துக்கு ஏறுமுகம் என்றார். வேண்டா வெறுப்பாய் பேசிவந்த மற்றொரு தலைவர் திடீரென அறுசுவை விருந்து என்றார். ஒரு தலைவர் பஞ்ச பாண்டவர்கள் என்று ஏற்கனவே சொல்லிவிட்டோம், ஆறாவது ஆள் வந்து விட்டாரே என்ன செய்வது என்ற பிரச்சனையை சுலபமாகத் தீர்த்துவிட்டார். ஜி.கே.வாசன் கர்ணன் என்றும், கர்ணன் நவீன குருúக்ஷத்திரத்தில் பஞ்ச பாண்டவர்கள் பக்கம் வந்துவிட்டதால், வெற்றி நிச்சயம் என்றார்.
இவ்வளவு முத்தான மணியான சத்தான கருத்துக்கள் கொண்ட மேல் பூச்சு, எந்த உள்ளடக்கம் மீது அலங்காரமாக செய்யப்படுகிறது என்பதை வாசகர்கள் தீர்மானிக்க ஜி.கே.வாசன், விஜய்காந்த் பேச்சுக்கள் பற்றிய சில செய்திகளை கவனப்படுத்துகிறோம்.
ஜி.கே.வாசன் சொல்கிறார்: ‘மக்கள் நலக் கூட்டணியில் உள்ள ஆறு கட்சிகளிடையே எதிர்மறைக் கருத்துக்கள், கொள்கைகள் இருந்தாலும், அனைவரும் மக்கள் நலனுக்காக ஒன்றிணைந்திருக்கிறோம்.’
12.04.2016 தேதிய தீக்கதிர்
விஜய்காந்த் கும்மிடிப்பூண்டி உரை: ‘கருத்து கந்தசாமி என்பது போல் அலுவலகத்தில் உட்கார்ந்து கொண்டு நமது கூட்டணிக்கு கொள்கை இல்லை என்று பேசுகிறார்கள். கடந்த 50 ஆண்டுகளில் ஆண்ட கட்சிகளுக்கு என்ன கொள்கை இருந்தது என அவர்கள் கேட்டார்களா?’
12.4.2016 தேதிய தினமணி செய்தி தலைப்பு
ஆட்சி மாற்றமே எங்கள் கட்சியின் குறைந்தபட்ச செயல்திட்டம்
‘போகுமிடமெல்லாம் பத்திரிகைகளும் ஊடகங்களும் எங்கள் ஆறு கட்சி கூட்டணியின் குறைந்தபட்ச செயல் திட்டம் என்ன என்பது குறித்து கேள்வி எழுப்புகிறார்கள். தமிழகத்தை 50 ஆண்டுகள் மாறி மாறி ஆட்சி செய்து கொள்ளையடித்த திமுக அதிமுகவுக்கு மாற்றே இந்தக் கூட்டணி’ - விஜயகாந்த்
ஆறு கட்சிக் கூட்டணிக்கு குறைந்தபட்ச செயல்திட்டம் எதுவும் கிடையாது. ஆகவே அது ஒரு கொள்கை மாற்றல்ல. அது வெறும் ஆள் மாற்றே. வாசன் அஇஅதிமுகவின் அணியில் சேர தவமாய்த் தவமிருந்து, தென்னந் தோப்பு சின்னம் கிடையாது, இரட்டை இலைதான் என்று உறுதியாக சொல்லப்பட்ட பிறகுதான், ஆறு கட்சி கூட்டணியில் இணைந்த கொள்கை வீரராவார். அதனால்தான், இகக, இகக(மா), விசிக ஆகியவற்றைக் காட்டிலும் ஓரிடம் கூடுதலாய்ப் பெற்றார்! விஜய்காந்தும் வாசனும் மாற்றை கொச்சைப்படுத்தியுள்ளனர். மலினப்படுத்தியுள்ளனர். வைகோவோ சாதாரண முதலாளித்துவ நாகரிக அரசியலுக்குக் கூட பொருத்தமாக நடந்துகொள்ளவில்லை. தேமுதிகவை உடைக்க சதி செய்கிறார்கள் என்பது பற்றி பேசும்போது, தேமுதிகவை உடைப்பவர்கள் பாலியல் தொழில் செய்பவர்கள், நாதஸ்வரம் வாசிப்பவர்கள் என்றெல்லாம் பேசினார். ஆதிக்க சாதி உணர்வு மட்டுமல்லாமல் அப்பட்டமான ஆணாதிக்கமும் கலப்படமில்லாமல் வெளிப்பட்டது.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கத்தைச் சேர்ந்த தோழர் நந்தலாலா, 5 முறை முதல்வராய் இருந்த இந்தியாவின் மூத்த அரசியல்வாதிகளில் ஒருவரைப் பற்றி, இப்படி பொதுவில் ஊடக வெளிச்சத்தில் பேசமுடியும் என்றால், அரசியல மைப்புச் சட்டத்தை விட சாதியச் சட்டம் எவ்வளவு வலிமையானது என தெரிகிறது எனவும், வைகோ கருணாநிதியிடம் மன்னிப்பு கேட்டால் போதாது, சம்பந்தப்பட்ட மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் எழுதியுள்ளார்.
வைகோ, வாசன், விஜய்காந்த் பரிவாரம் போன்றோர், மாற்றின் கவுரவத்தை மதிப்பை சிதைப்பதன் மூலம், அஇஅதிமுக திமுக தப்பிக்க நீடிக்க உதவுகிறார்கள். தேர்தலுக்கு மிஞ்சியுள்ள நாட்களிலாவது, இடதுசாரி தோழர்களும் நண்பர் திருமாவளவனும், தமது அரசியல் கவுரவத்தை கவனமாக பாதுகாக்க முயற்சிக்க வேண்டும்.
இகக(மாலெ) 2016 சட்டமன்றத் தேர்தலில், சாமான்ய மக்களின் போராட்டக் குரலை சட்டமன்றத்தில் ஒலித்திடச் செய்வதற்காக, மாதவரம், அம்பத்தூர், திருப்பெரும்புதூர், உளுந்தூர்பேட்டை, கந்தர்வகோட்டை, வேடசந்தூர், குமாரபாளையம், மேட்டுபாளையம், கவுண்டம்பாளையம், குளச்சல் ஆகிய 10 தொகுதிகளில் போட்டியிடுகிறது. கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பு போராட்டத்திற்கு ஆதரவு என்பதன் தொடர்ச்சியாக ராதாபுரத்தில் போட்டியிடும் களப்போராளி சுப.உதயகுமாரன் அவர்களை ஆதரிக்கிறது. இந்தியாவில், சமீபத்தில் 6 இடதுசாரி கட்சிகள் உருவாக்கிய ஒற்றுமையில் இடம் பெற்றுள்ள, சோசலிஸ்ட் யூனிட்டி சென்டர் ஆஃப் இந்தியா (கம்யூனிஸ்ட்) கட்சியை, ஆர்கே நகர் மற்றும் மதுரை வடக்கு தொகுதிகளில் ஆதரிக்கிறது. இதுபோக, இருக்கிற தொகுதிகளில், தனது விமர்சனங்கள் தாண்டி, இடதுசாரி ஜனநாயக அரசியலின் எதிர்கால நலன் கருதி, இகக, இகக (மா) மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை ஆதரிப்பதாக முடிவு செய்துள்ளது. 

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்)
மாநில அலுவலகம்
1/10, 11ஆவது தெரு, கருணாநிதி நகர், அயனாவரம், சென்னை - 23. 2674 3384

பெறுநர்
தமிழ்நாடு மாநிலச் செயலாளர்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி/இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)
தோழரே,
சமீப காலங்களில் நமது கட்சிகளுக்கிடையில், இடதுசாரி ஒற்றுமை என்ற நிலைபாட்டில் இருந்து கூடுதலாக ஊடாடுதலும் கூட்டு நடவடிக்கைகளும் நடப்பது மகிழ்ச்சிக்குரியது.
பீகார் சட்டமன்றத் தேர்தல்களில் சேர்ந்து நின்ற நாம், அசாம் சட்டமன்றத் தேர்தல்களில் கூட்டாகப் போட்டியிடுகிற நாம், தமிழகத்திலும் இணைந்து போட்டியிடும் நிலை ஏற்பட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும். துரதிர்ஷ்டவசமாக அது சாத்தியமில்லாமல் போய்விட்டது.
எங்கள் கட்சியின் மாநிலக் குழு கூட்டம் கோவையில மார்ச் 14 - 15 தேதிகளில் கூடியது. கூட்டத்தில் கட்சியின் அகில இந்தியப் பொதுச் செயலாளர் தோழர் திபங்கர் கலந்துகொண்டார்.
எமது கட்சி தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்களில் மாதவரம், அம்பத்தூர், திருபெரும்புதூர், உளுந்தூர்பேட்டை, கந்தர்வகோட்டை, வேடசந்தூர், குமாரபாளையம், குளச்சல், மேட்டுப்பாளையம் மற்றும் கவுண்டம்பாளையம் தொகுதிகளில் போட்டியிட முடிவு செய்துள்ளோம். கரூர், மதுரை மாவட்டங்களில் தலா ஒரு தொகுதி போட்டியிடுவது பற்றி பரிசீலித்து வருகிறோம்.
நாங்கள் போட்டியிடும் தொகுதிகளில், இடதுசாரி ஒற்றுமை கருதி, இகக, இககமா கட்சிகள் போட்டியிடும் என்ற நிலை வராமல் பார்த்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம். தாங்கள் அவ்வாறு செய்தால், அது, நாங்கள் போட்டியிடாத மற்ற தொகுதிகளில் இடதுசாரி வேட்பாளர்களை ஆதரிப்பது என முடிவெடுக்க, எங்களுக்கு உதவியாக இருக்கும்.
எங்கள் ஆலோசனையைப் பரிசீலித்து விரைந்து பதில் தருமாறு கேட்டுக் கொள்கிறோம்.
தோழமையுடன்
எஸ்.குமாரசாமி
மாநிலச் செயலாளர்
ஏப்ரல் 22 அழைப்பு
மாணவர் - இளைஞர் எழுச்சிக்கு வலுவூட்டுவோம்!
மக்கள் எதிர்ப்பு என்ற அரணை கட்டியெழுப்புவோம்!!
ஜனநாயகத்தைக் காப்போம் இந்தியாவைக் காப்போம்!!!
கட்சி நிறுவப்பட்ட 47ஆவது ஆண்டு தினத்தை நாம் இந்த ஏப்ரல் 22ல் அனுசரிக்கவுள்ளோம். இந்தியாவின் புதிய தலைமுறை கம்யூனிஸ்ட் புரட்சியாளர்களின் அணிதிரளும் மய்யமாக இககமாலெ உருவாவதை அறிவித்த, வரலாற்றுச் சிறப்புமிக்க நக்சல்பாரி எழுச்சியின் 50ஆவது ஆண்டு மே 25 அன்று துவங்குகிறது. நாம் நமது புகழ்மிக்க கடந்த காலத்தை நினைவு கூருகிறபோது, நிகழ்கால போராட்டக் களத்தில் நமது கால்கள் ஊன்றி நின்று கொண்டிருக்கின்றன; நமது கதவுகளைத் தட்டுகிற சவால்கள் மீதும் மகத்தான உள்ளாற்றல்கள் மீதும் நமது லட்சியப் பார்வை கவனம் குவித்திருக்கிறது.
இந்தியாவில், மத்தியில் முதல் பெரும்பான்மை பாஜக அரசாங்கத்தின் தலைமைப் பொறுப்பில் மோடி இருக்கும்போது, கார்ப்பரேட்டை வழிபடுகிற மதவெறி பாசிச நிகழ்ச்சிநிரலை, முழுவதுமாக திட்டமிட்ட விதத்தில் கட்டவிழ்த்துவிடுவதில் சங்பரிவார் மும்முரமாக செயல்படுவது மிகத் தெளிவாகத் தெரிகிறது. நாட்டின் இயற்கை வளங்கள், மனித வளங்கள் முதல் அரசின் நிறுவனக் கட்டமைப்பு வரை, வரலாறு, கலாச்சாரம், அறிவு ஆகிய தளங்கள் முதல் மக்களின் சுதந்திரங்கள், உரிமைகள் மற்றும் குடியரசின் மதச்சார்பற்ற, ஜனநாயக அடிப்படையின் அரசியல் சாசன தளங்கள் வரை, எதிர்ப்புக் குரல்களை நசுக்க, அவற்றை குற்றவாளிகளாக்க, பல்வேறு நிறுவனங்களிலும் முக்கிய பதவிகளில் அது விரும்புகிற நபர்களை அமர்த்த, அதன் குண்டர்களை தண்டனை பற்றி அச்சமின்றி பாதுகாக்க, சங்பரிவார், அரசு அதிகாரத்தை ஆனவரை பயன்படுத்திக் கொண்டு, எல்லா அரங்கங்களிலும் ஒருமுகப்பட்ட தாக்குதலைக் கட்டவிழ்த்துவிட்டுள்ளது.
சங் படையின் தாக்குதலை எதிர்கொள்கிற அதே நேரம், இந்தச் சித்திரத்தின் பிரகாசமான பக்கத்தின் மீது - மக்கள் கார்ப்பரேட் மதவெறி தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்; கார்ப்பரேட் மதவெறியை வெற்றிகரமாக அம்பலப்படுத்துகிறார்கள்; அதற்கு சவால் விடுக்கிறார்கள்; சில சமயங்களில் அதை பின்னோக்கியும் தள்ளுகிறார்கள். இந்த ஒற்றுமையின், உறுதிப்பாட்டின், துணிச்சலின் மறுஉறுதியூட்டும் அறிகுறிகள் மீது - நாம் கவனம் செலுத்த வேண்டும். விவசாய அமைப்புகளின், பல எதிர்க்கட்சிகளின் விடாப்பிடியான எதிர்ப்பால் 2015ல் அரசாங்கம் நிலப்பறி அவசரச் சட்டத்தை திரும்பப் பெற நேர்ந்தது. இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கை யில், தொழிலாளர்களின் வைப்பு நிதியில் இருந்து அவர்கள் எடுக்கும் பணத்துக்கு வரி விதிக்க அரசாங்கம் முற்பட்டு, பின்னர் அதை திரும்பப் பெற நேர்ந்தது. கோவிந்த் பன்சாரே, எம்எம் கல்புர்கி, முகமது அக்லக் ஆகியோர் படுகொலை செய்யப்பட்டதற்கு எதிராக பிரபல எழுத்தாளர்கள், வரலாற்று அறிஞர்கள், விஞ்ஞானிகள், கலாச்சார ஆளுமைகள் சென்ற ஆண்டில் நடத்தத் துவங்கிய போராட்டங்கள், இப்போது சக்திவாய்ந்த மாணவர் - இளைஞர் போராட்டங்களில், அவற்றை முழுமையாக்கும் பகுதியை காண்கின்றன.
இந்த மாணவர் எழுச்சி, அல்லது இந்தியாவில் வளர்ந்து வருகிற இளைஞர் வசந்தம், கார்ப்பரேட் மதவெறி சக்திகளின் பாசிச தாக்குதலை எதிர்கொண்டு தடுத்து நிறுத்தும் மகத்தான உள்ளாற்றல் கொண்டது. அது நீடித்தத் தன்மை கொண்ட ஓர் எழுச்சி. அதன் சில காட்சிகளை கடந்த சில ஆண்டுகளாகவே பார்க்க முடிந்தது. டில்லியில் ஓர் இளம்பெண் கொடூரமாக பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டபோது அது வெடித்ததை நாம் பார்த்தோம்; அது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது; ஆணாதிக்கத் தளைகளில் இருந்து இந்தியப் பெண்களுக்கு விடுதலை வேண்டும் என்று அது அழைப்பு விடுத்தது. கனவுகள் பல கொண்டிருந்த ஆய்வு மாணவர் ரோஹித் வேமுலாவின் துயரமான முடிவை ஒட்டி அது வெடித்தது; சமூக பாகுபாடு என்ற இழிவு தொடர்வதற்கு எதிராக, இந்தியாவின் கல்வி நிறுவனங்களில் வளர்ந்து வருகிற ஆபத்தான காவிக் கட்டுப்பாட்டுக்கு எதிராக நாடு முழுவதும் அது எதிர்ப்பலைகளை உருவாக்கியது. மீண்டும் டில்லியில், ஜேஎன்யுவில் நடந்த காவல்துறை ஒடுக்குமுறையை, வேட்டையை தொடர்ந்து அது வெடித்தது; இன்றைய இந்தியாவில், ‘சுதந்திரம்’, ஜனநாயகம் ஆகியவற்றுக்கான பெருங்குரலாக அது வளர்ந்தெழுந்தது.
ஆட்சி மாறியதாலேயே அமைதியாகி விட, அடங்கிவிட மறுக்கிற, விழிப்புணர்வு பெற்றுவிட்ட இளைஞர்களின் அறுதியிடலை இன்று நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். 2014ன் துவக்கத்தில் ஊழல் எதிர்ப்புத் தளத்தில், டில்லியில் அர்விந்த் கேஜ்ரிவாலும் ஆம் ஆத்மி கட்சியும் எழுந்த பிறகு, அந்த எழுச்சி அதன் புதிய அரசியல் பயண இலக்கை எட்டிவிட்டது என்று பலரும் கருதினார்கள். மே 2014ல், மாற்றம் தேடும் இந்திய இளைஞர்களின் தாகத் துக்கு மோடி தீர்மானகரமாக பதிலாக எழுந்துள்ளார் என்று இன்னும் பலர் சொன்னார்கள். ஆனால், மோடி வந்த பிறகு எழுந்துள்ள புதுப்பிக்கப்பட்ட மாணவர் அறுதியிடல், அந்தத் தாகம் தணியவில்லை என்று சொல்வதுடன், இந்திய இளைஞர்கள் மத்தியில் மாற்றத்துக்கான தாகம் வளர்ந்து வருவதை, அதிகாரத்தில் இருப்பவர்களின் கட்டளைகளை, சதிகளை எதிர்கொள்ளும் துணிச்சலும் வலிமையும் ஆற்றலும் அவர்களுக்கு இருப்பதை தெளிவாகக் காட்டுகிறது. அது, பகத்சிங்கின், அம்பேத்கரின் வழிமரபை சுவீகரித்துக் கொண்டுள்ள தாகம். இந்த மரபின் மீது, இந்தத் தாகத்தின் மீது, சங்பரிவார், மரணபயம் கொண்டிருப்பதை, டில்லியில், அலகாபாதில், குவாலியரில், முசாபர்பூரில், செயல்வீரர்கள் மீது, கல்வியாளர்கள் மீது, ஆர்எஸ்எஸ் - பாஜக - எபிவிபி குண்டர்கள் நடத்திய வெறித்தனமான தாக்குதல்கள், தெளிவாகக் காட்டுகின்றன.
பகத்சிங் மீது, அம்பேத்கர் மீது, அவர்கள் இருவர் வழிமரபுகள் இதுவரை இல்லாத அளவு செயல்பாட்டுக்கு வரும் சாத்தியப்பாட்டின் மீது, அவர்கள் ஏன் அச்சம் கொள்கிறார்கள் என்பதைப் பார்ப்பது கடினமானதல்ல. நாட்டு விடுதலைப் போராட்டத்தின் மகத்தான வரலாற்றில் தனக்கு வேர் ஏதும் இல்லை என்பதை பாஜக நன்கு உணர்ந்திருக்கிறது. நாட்டு விடுதலை போராட்டக் காலத்தில் அதன் கருத்தியல் குடும்பத்தின் நன்கறியப்பட்ட நபர் சாவர்க்கர். பிரிட்டிஷ் ஆட்சி யாளர்களிடம் கருணை மனு கொடுத்ததற்கும், இந்து ராஜ்ஜியத்தை முன்னிறுத்தியதற் கும் அவர் நன்கறியப்பட்டவர். ஆர்எஸ்எஸ்ஸின் நிறுவனத் தலைவர்கள், முசோலினி, ஹிட்லர் போன்றவர்களிடம் இருந்துதான் உத்வேகம் பெற்றனர். நாட்டுப் பிரிவினையால் ஏற்பட்ட ரத்த வெள்ளத்தில் காலனி ஆட்சியாளர்கள் நாட்டை விட்டு வெளியேறியபோது, காந்தியை படுகொலை செய்ததுதான் ஆர்எஸ்எஸ் - இந்து மகாசபையின் பங்களிப்பு. இன்று, அத்வானியும் மோடியும் கையகப்படுத்தப் பார்க்கும் காங்கிரஸ் தலைவர் சர்தார் படேல்தான், அன்று அந்த அமைப்புக்குத் தடை விதித்தார். இந்த இழிவரலாற்றுக்கு நேரெதிராக, அடிப்படை மாற்றம் விரும்பும் இந்தியாவின் இளைஞர்கள், பகத்சிங்கின் தியாகத்தில் இருந்து, அவனது லட்சியத்தில் இருந்து உத்வேகம் பெறுகிறார்கள். ஏகாதிபத்தியத்துக்கு எதிரான அவனது சமரசமற்ற போராட்ட வழிமரபில் இருந்து, எல்லா விதமான அடிமைத்தனங்களில் இருந்தும் மக்கள் விடுதலை பெற வேண்டும் என்ற லட்சியத்துக்கு முழுமையான கடப்பாடு என்ற அவனது வழிமரபில் இருந்து உத்வேகம் பெறுகிறார்கள்.
பகத்சிங் போல, அம்பேத்கரும் ஆர்எஸ் எஸ்ஸ÷க்கு எதிரானவர். ஆர்எஸ்எஸ்ஸின் இந்து ராஜ்ஜியம் தொடர்பான பார்வையின் மனுதர்ம அடிப்படை மீதே அவர் அடி கொடுக்கிறார். சாதிய முறையை உயிர்த்தெழச் செய்ய வேண்டும் என்ற ஆர்எஸ்எஸ் கனவுக்கு, சாதியை ஒழிக்க வேண்டும் என்ற தனது அறைகூவல் மூலம், இந்திய குடியரசின் அடிப்படையாக சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றை அரசியல்சாசனரீதியாக அறிவிப்பதன் மூலம், சவால் விடுக்கிறார். சமீப சில ஆண்டுகளில், சிறுபான்மையினரை அமைதிப்படுத்துவது என்று மதச்சார்பின்மையை பழிக்கும், சாதியப் பிளவுகளை கடந்து செல்ல இந்து பெரும் பான்மைவாதத்தை முன்வைக்கும் அதே நேரம், பாஜக தனது சாதிய மய்யக் கருவை மறைக்க கடுமையான முயற்சிகள் மேற்கொள்கிறது; தலித் ஆதரவு, பிற பிற்படுத்தப் பட்ட சாதியினர் ஆதரவு பிம்பத்தை முன்னிறுத்தப் பார்க்கிறது; இந்தியாவின் முதல் பிற்படுத்தப்பட்ட சாதியைச் சேர்ந்த பிரதமர் மோடி என்று சந்தைப்படுத்துகிறது. மிகவும் கவனமாக கட்டியெழுப்பப்பட்ட இந்த முகத்திரையை கிழித்தெறிவது மட்டுமின்றி, நீதிக்கான அனைத்துவிதமான போராட்டங்களையும் இணைக்கும் ஒருமைப்பாட்டு பாலங்களை கட்டியெழுப்பவும் அம்பேத்கர் உத்வேகம் அளிக்கிறார். அதனால்தான், அம்பேத்கர் பெரியார் படிப்பு வட்டத்தை கலைக்க வேண்டும் என்று சென்னை அய்அய்டி நிர்வாகத்தை சங் படை நிர்ப்பந்தித்தது. நாடு முழுவதும் எதிர்ப்பு எழுந்த பிறகுதான் அந்தத் தடை நீக்கப்பட்டது; அய்தராபாத் மத்திய பல்கலை கழகத்தில் ரோஹித் வேமுலாவும் அவரது தோழர்களும் முசாபர்நகரில் நடந்த மதவெறிப் படுகொலையை கேள்விக்குள்ளாக்கியபோது, அவர்கள் சாதிய, தேசவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள் என்று குற்றம் சுமத்தியது.
நடந்துகொண்டிருக்கும் மாணவர் - இளைஞர் போராட்டங்கள், சங் - பாஜக அரசாங்கத்தின் அரசியல் சதிகளை, கருத்தியல் கட்டளைகளை, பாசிச தாக்குதலை, பல்கலை கழக வளாகங்களில் மட்டுமின்றி, சமூகத்தின், அரசின் பரந்த போர்களத்திலும் எதிர்கொள்ள வேண்டும்; பல்வேறு அரங்கங்களில் போராடு கிற மக்களுடன் ஒன்றிணைய வேண்டும். நாட்டு விடுதலைப் போராட்டத்தில் இதுதான் பகத்சிங்கின் லட்சியமாக இருந்தது; 1960களி லும் 1970களிலும் புரட்சிகர மாணவர்களுக்கு சாரு மஜ÷ம்தார் விடுத்த அறைகூவல் இதுதான். இதுதான், அந்த கால கட்டத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க மாணவர் எழுச்சியை கிராமப்புற வறியவர்களின் எழுச்சியுடன் ஒன்றிணைத்தது; இதுதான், ‘கற்பி, அமைப்பாக்கு, கிளர்ச்சி செய்’ என்று அம்பேத்கர் சொன்ன செய்தியின் உணர்வு. வீசிக் கொண்டிருக்கிற ‘இளைஞர் வசந்தத்தில்’, நக்சல்பாரி ‘வசந்தத்து இடிமுழக்கத்தின்’ புரட்சிகர உணர்வை உட்செலுத்தி, பாசிச அச்சுறுத்தலை முறியடித்து, முழுமையான சுதந்திரமும் ஆழமான ஜனநாயகமும் கொண்ட புதிய இந்தியாவை நோக்கி அணி வகுக்கும் லட்சியத்தை நாம் முன்னெடுத்துச் செல்வோம்.
2016 சட்டமன்றத் தேர்தல்களில்
இகக மாலெ போட்டியிடுகிற தொகுதிகள்
வருகிற சட்டமன்றத் தேர்தல்களில் அசாமில் இககமாலெ, இககமா, இகக, ஆர்எஸ்பி, பார்வர்டு பிளாக், ஆர்சிபிஅய் ஆகிய ஆறு இடதுசாரி கட்சிகளின் கூட்டணி போட்டியிடுகிறது. கூட்டணியில் எட்டு இடங்களில் இகக மாலெ போட்டியிடுகிறது. கர்பி ஆங்லாங்கில் சுயாட்சி மாநில இயக்கத்தின் சார்பாக போட்டியிடும் நான்கு வேட்பாளர்களுக்கு இகக மாலெ தனது ஆதரவைத் தெரிவித்துள்ளது.
மேற்கு வங்கத்தில் புரட்சிகர மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் இகக மாலெ கூட்டணி அமைத்து, இகக மாலெ 35 தொகுதிகளிலும் புரட்சிகர மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மூன்று தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. எஸ்யுசிஅய்(சி)யுடனும் தொகுதி உடன்பாடுகள் கண்டுள்ளது. சில தொகுதிகளில் இரண்டு கட்சிகளும் நட்புரீதியாக போட்டியிடுவதும் உள்ளது. இந்த மூன்று கட்சிகள் போட்டியிடாத தொகுதிகளில் பாஜக, காங்கிரஸ், திரிணாமூல் கட்சிகளை மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்று இகக மாலெ அழைப்பு விடுத்துள்ளது.
தமிழ்நாட்டில் 10 தொகுதிகளிலும் புதுச்சேரியில் மூன்று தொகுதிகளிலும் கேரளாவில் ஒரு தொகுதியிலும் இகக மாலெ போட்டியிடுகிறது. ஏப்ரல் 14 அம்பேத்கர் பிறந்த தினத்தன்று இந்த 10 தொகுதிகளிலும் வேட்பாளர் அறிமுகக் கூட்டங்கள் நடத்தப்பட்டன.
தமிழ்நாட்டில் எஸ்யுசிஅய்(சி)யை ஆதரிப்பதெனவும் எஸ்யுசிஅய்(சி) போட்டியிடாத தொகுதிகளில் இடதுசாரி கட்சி வேட்பாளர்களையும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேட்பாளர்களையும் ஆதரிப்பதெனவும் ராதாபுரம் தொகுதியில் பச்சைத் தமிழகம் கட்சியின் வேட்பாளர் திரு.சுப.உதயகுமாரை ஆதரிப்பதெனவும் கட்சி முடிவு செய்துள்ளது. (தேர்தல் செய்திகள் தொகுப்பு: தேசிகன்)
மாதவரம் தொகுதியில் தோழர் எஸ்.ஜானகிராமன்
சென்னை பெருநகரத்தை ஒட்டியுள்ள பொதுத் தொகுதியான மாதவரத்தில் இகக (மாலெ) தலித் வேட்பாளரை நிறுத்தியுள்ளது. மொத்தமுள்ள 2.80 லட்சம் வாக்காளர்களில் 1.20 லட்சம் பேர் தலித்துகளாக இருந்தும் தொகுதி மறுசீரமைப்பில் 2011ல் உருவாக்கப்பட்ட இந்தத் தொகுதி பொதுத் தொகுதியாகவே உள்ளது. இகக மாலெ மாநிலக் குழு உறுப்பினரும், அகில இந்திய விவசாய, கிராமப்புறத் தொழிலாளர் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளருமான தோழர் எஸ்.ஜானகிராமன் மாதவரம் தொகுதியில் போட்டியிடுகிறார்.
மணல் கொள்ளை, கடத்தல், பிற சமூக விரோத செயல்பாடுகள் மலிந்துகிடக்கிற இந்தத் தொகுதியில், திருவள்ளூர் மாவட்ட இகக மாலெ செயலாளரான தோழர் எஸ்.ஜானகிராமன் தொகுதி மக்கள் மத்தியில் மக்கள் பிரச்சனைகள் மீது சமரசமற்ற போராட்டம் நடத்துபவர் என்ற அடையாளமும் மரியாதையும் பெற்றவர். அவர்களுடைய அன்றாடப் பிரச்சனைகளில் உடனடியாக தலையிட்டு தீர்வு காணும் வரை உறுதியாகப் போராடுவதால் தொகுதியின் வறிய மக்கள் நம்பிக்கைக்குப் பாத்திரமானவர்.
நூறு நாள் வேலைச் சட்டப்படியான வேலை, கூலி கோருவது, திட்ட முறைகேடுகளுக்கு எதிராக, கிராம சபைக் கூட்டங்களில் மக்களைத் திரட்டி ஊழலுக்கு எதிராக, சாதி ஆதிக்கத்திற்கு எதிராக, பல்வேறு மக்கள் பிரச்சனைகளில் அரசின் குற்றமய அலட்சியத்திற்கு எதிராக குரல் கொடுப்பது என கட்சியின் அடையாளத்தை நிறுவுவதில் அன்றாடப் பணியாற்றுபவர். ஆந்திராவைச் சேர்ந்த புலம் பெயர்ந்த வெங்காய கூடை முடைவோரின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதில் முக்கிய பங்காற்றி வருபவர். தோழர் ஜானகிராமன் எடுத்த தொடர்முயற்சிகளால், அவர்கள் தமிழ்நாட்டின் ரேசன் அட்டை பெற்றுள்ளனர்.
தொகுதியின் தற்போதைய அதிமுக எம்எல்ஏ மூர்த்தி, பால்வளத்துறை அமைச்சராக இருந்து ஆவின் ஊழலில் சிக்கி மந்திரி பதவியை இழந்தவர். அவரது மாவட்டச் செயலாளர் பொறுப்பும் பறிக்கப்பட்டது. கட்சிக்குள்ளேயே தண்டிக்கப்பட்டவர். தொகுதி மக்களின் நல்வாழ்வுக்காக எந்த நடவடிக்கையும் அவரது பதவி காலத்தில் மேற்கொள்ளவில்லை.
இந்தத் தொகுதி வேகமாக நகர்மயமாகி வரும் புறநகர் பகுதியாகும். இன்னும் 30 - 35% விவசாயப் பகுதியாக இருக்கிறது. சென்னையின் குடிநீர் ஆதாரமான புழல், சோழவரம் ஏரிகள் இங்கு உள்ளன. கடலுக்கு அருகில் உள்ளதால் ஒரு பகுதி விவசாயம் செய்ய முடியாமல் கடல்நீர் உள்புகுந்துள்ளது. இப்பகுதியின் நீர் ஆதாரமான கொசஸ்தலை ஆறு மணல் கொள்ளையால் பெரும் பாதிப்புக்குள்ளாகி உள்ளது. ஏற்கனவே இகக (மாலெ) முயற்சியால் ஒரு தடுப்பணை கட்டப்பட்டுள்ளது. இன்னொரு தடுப்பணை கட்ட கோரிக்கையும் உள்ளது. இந்தத் தொகுதியில் சிறிதும் பெரிதுமாக தொழிற்சாலைகளும் உள்ளன. கட்டுமானத் தொழிலாளர்கள் கணிசமாக உள்ள தொகுதி இது. ஏஅய்சிசிடியுவின் தமிழ்நாடு ஜனநாயக கட்டுமானத் தொழிலாளர் சங்கம் இங்குதான் முதலில் துவங்கப்பட்டது. இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட நெல் அரவை ஆலைகள் உள்ளன. ஆயிரக்கணக்கானோர் இதில் வேலை செய்கின்றனர். பிற மாநிலத் தொழிலாளர்களும் இந்தத் தொகுதியில் பெரும்எண்ணிக்கையில் கட்டுமானம், செங்கல் சூளை போன்ற தொழில்களில் கடுமையான சுரண்டல் நிலைமைகளில் வேலை செய்கின்றனர்.
நூறு நாள் வேலைத் திட்டத்தில் வேலை, கூலி, கூலி உயர்வுக்கான பல போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. கட்டுமானத் தொழிலாளர் நலவாரிய நலப்பயன்கள் பெற்றுத் தருவதில் இயக்கம் நடத்தப்பட்டுள்ளது. சோழவரம் ஒன்றியம் எடப்பாளையம் கட்டுமானப் பணியில் ஏற்பட்ட விபத்தில் 12 பேர் உயிரிழந்த சம்பவத்தில் தலையிட்டுப் போராட்டம் நடத்தியதன் விளைவாக காவல்துறை கைது நடவடிக்கை எடுக்க நிர்ப்பந்திக்கப்பட்டது. அரிசி ஆலை விபத்தில் பீகார் மாநில சுமை தூக்கும் தொழிலாளி இறந்த போது தலையிட்டு ரூ.3.5 லட்சம் நிவாரணம் பெற கட்சி வெற்றிகரமான முயற்சி மேற்கொண்டது.
செங்குன்றத்தில் சாலையோர வியாபாரிகளுக்கு நீதிமன்ற ஆணை பெற்று அவர்கள் வாழ்வாதாரத்தை கட்சி உத்தரவாதப்படுத்தியுள்ளது. நிலமற்ற வறியவர்களுக்கு சுமார் 300 ஏக்கர் நிலம் கையகப்படுத்தி பட்டா பெற்றுக் கொடுத்துள்ளதோடு கடந்த 4 வருடங்களில் மட்டும் 400 - 500 குடிமனைப் பட்டாக்கள் பெற்றுத் தந்துள்ளது. பள்ளி, கல்லூரி கட்டணக் கொள்ளை, பெண் மாணவர்கள் மீதான பாலியல் சீண்டலுக்கு எதிரான மாணவர்கள் போராட்டங்கள், டாஸ்மாக் சாராயக் கடை எதிர்ப்பில் இளைஞர்களை திரட்டி போராட்டங்கள் நடத்தி வருகிறது. தொகுதிக்குள் நெற்குன்றம் ஊராட்சி மன்றத் தலைவராக வெற்றி பெற்று வறியவர் சார்பு நலத்திட்டங்களை செயல்படுத்துவதில் முன்மாதிரி படைத்து போராடும் எதிர்கட்சி பாத்திரம் ஆற்றிவருகிறது.
1000 படுக்கைகள் கொண்ட அரசு மருத்துவமனை, தொகுதியில் ஓர் அரசுக் கல்லூரி ஆகிய கோரிக்கைகள் மக்கள் மத்தியில் உள்ளன. கும்மிடிப்பூண்டியிலிருந்து அம்பத்தூர் வரையிலான ரயில் தடம், பலதரப்பு மக்களுக்கும் முக்கியமான கோரிக்கையாக முன்வந்துள்ளது.
ஏப்ரல் 14 அம்பேத்கர் பிறந்த தினத்தன்று நடத்தப்பட்ட வேட்பாளர் அறிமுகக் கூட்டத்துக்கு திருவள்ளூர் மாவட்டக்குழு உறுப்பினர் தோழர் ராமன் தலைமை வகித்தார். மாநிலக்குழு உறுப்பினர் தோழர் ஜவகர் வேட்பாளர் தோழர் ஜானகிராமனை அறிமுகப்படுத்திப் பேசினார்.
உளுந்தூர்பேட்டை தொகுதியில் தோழர் எம்.வெங்கடேசன்
கட்சியின் மாநிலக் குழு உறுப்பினரும், அவிகிதொச மாநிலத் துணைப் பொதுச் செயலாளருமான தோழர் எம்.வெங்கடேசன், உளுந்தூர்பேட்டையில் போட்டியிடுகிறார்.
பி.ஏ பட்டதாரியான இவர், இககவோடு அரசியல்ரீதியாக முரண்பட்டு இகக(மாலெ)யுடன் இணைந்தார். கிராமப்புற வறியவர் நலனுக்காக, தனியார் கல்விக் கட்டணக் கொள்ளைக்கு எதிராக, செம்மரக் கடத்தல் என சொல்லி ஆந்திர அரசு சுட்டுக் கொன்ற பழங்குடி மக்கள் குடும்ப நலன் காக்க, தொகுதி மக்களின் அடிப்படை உரிமைகளுக்காக தொடர்ந்து போராடி வருபவர்.
உளுந்தூர்பேட்டை சட்டமன்றத் தொகுதி தாலுகா முழுவதையும் உள்ளடக்கி முன்னர் தனித்தொகுதியாக இருந்தது. இப்போது பொதுத் தொகுதியாகியிருக்கிறது. பொதுத் தொகுதியில் மாலெ கட்சி தலித் வேட்பாளரை நிறுத்துகிறது.
தொகுதி விவசாயம், விவசாய சமூகம் நிறைந்த பகுதியாகும். நெல், கரும்பு, முக்கிய விளைபொருளாகும். செங்கல் சூளைகள், கல்குவாரிகள் உண்டு. அதில் ஆயிரக்கணக்கான கொத்தடிமைகளும் உண்டு. தொகுதியில் பெரியசெவலை கூட்டுறவு சர்க்கரை ஆலை மற்றும் ஆசனூர் சிட்கோ தொழிற்பேட்டை தவிர வேறு தொழிற்சாலைகள் இல்லை.
தேசிய கிராமப்புற வேலை உத்தரவாதச் சட்டம் பெரும் ஊழலுக்கான திட்டமாக இருக்கிறது. தொகுதி வறிய மக்களின் வீட்டுமனைப் பட்டா கோரிக்கை ஆளும் கட்சிகளால் கண்டுகொள்ளப் படாமலேயே உள்ளது. தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கம், கெயில் குழாய் பதிப்பு என விவசாய நிலங்கள் அபகரிக்கப்படுகின்றன. சாதிய ஒடுக்குமுறை நிலவுகிறது.
அரசு கலை, அறிவியல் கல்லூரியும், தொழில்நுட்பக் கல்லூரியும் வேண்டும் என்பது தொகுதி மக்களின் கோரிக்கை. 100 நாள் வேலைத் திட்டம் மிகமிக அவசியமான தொகுதி இது. தேசிய நெடுஞ்சாலை நிலப்பறிப்புக்கு கவுரவமான இழப்பீடு வேண்டும் என்கிறார்கள்.
தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்திலுள்ள ஊழல், முறைகேடுகளை வெளியில் கொண்டு வந்தோம். 100 நாள் வேலைத் திட்டத்தில் சட்டக் கூலி பெற ஏராளமான போராட்டங்கள் நடத்தப்பட்டன. நிலமற்ற வறிய மக்களுக்கு வீட்டுமனைப் பட்டா கேட்டு பல கட்டப் போராட்டம் நடத்தினோம். நெடுஞ்சாலைத் துறை நில அபகரிப்பு, கெயில் குழாய் பதிக்கும் திட்டத்திற்கு எதிரான போராட்டங்களில் முன்னணிப் பாத்திரம் வகித்தோம். டாஸ்மாக் சாராய ஆலை எதிர்ப்புப் போராட்டங்களிலும் மக்களின் ஜனநாயக உரிமைகளுக்கான போராட்டங்களில் முன்னணிப் பாத்திரம் வகித்தோம். எரிச்சலுற்ற ஆதிக்க சக்திகளால், பெண் தோழர்கள் கூட பல நாட்கள் சிறையிலடைக்கப்பட்டனர்.
ஏப்ரல் 14 அம்பேத்கர் பிறந்த தினத்தன்று நடத்தப்பட்ட வேட்பாளர் அறிமுகக் கூட்டம் உளுந்தூர்பேட்டையில் நடைபெற்றது. இகக(மாலெ) மத்திய கமிட்டி உறுப்பினர் தோழர் பாலசுந்தரம், வேட்பாளர் தோழர் வெங்கடேசனை அறிமுகப்படுத்தி சிறப்புரையாற்றினார். மேடையில் தேர்தல் நிதியாக ரூ.13,000 வழங்கப்பட்டது. தோழர் வெங்கடேசன் வாக்குக் கேட்டு உரையாற்றினார்.
குமாரபாளையம் தொகுதியில் தோழர் எ.கோவிந்தராஜ்
இகக(மாலெ) கட்சியின் மாநிலக் குழு உறுப் பினரும் ஏஅய்சிசிடியுவின் மாநிலச் செயலாளரும், ஜனநாயக விசைத்தறித் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளருமான தோழர் எ.கோவிந்தராஜ் குமாரபாளையம் தொகுதியில் போட்டியிடுகிறார்.
விசைத்தறித் தொழிலாளர்களின் கூலி உயர்வு, போனஸ் போராட்டங்களில் முன்னின்று களம் கண்டவர். 1995ல் விசைத்தறி முதலாளிகளால் கடத்தப்பட்டு கொலை வெறித் தாக்கு தலுக்கு உள்ளானார். 2003ல் விசைத்தறி முதலாளிகளின் சதியால் 6 பொய் வழக்குகள் போடப்பட்டு குண்டர் சட்டத்தில் 7 மாதங்கள் சிறையில் இருந்தவர். விசைத்தறித் தொழிலாளர் களுக்கு வீட்டுமனைப் பட்டா, விசைத்தறி நிறுவனங்களை தொழிற்சாலை சட்டப் பிரிவு 85(1)ன் கீழ் தொழிற்சாலையாக அறிவிப்பது ஆகிய கோரிக் கைகள் மீது பல்வேறு பிரச்சார இயக்கங்களை, போராட்டங்களை தலைமை தாங்கி நடத்திக் கொண்டிருப்பவர். பகுதியில் உள்ள கைத்தறி நெசவாளர்களுக்கு கூலி உயர்வு பெற்றுத் தந்த போராட்டங்களை நடத்தியவர்.
தொகுதியின் பெருவாரியான வாக்காளர் கள் ஜவுளித் தொழிலை சார்ந்திருக்கும் விசைத்தறி, கைத்தறி மற்றும் ஜவுளி மில் தொழிலாளர்களே. கட்டுமானப் பணிகளில் கணிசமான எண்ணிக்கையில் தொழிலாளர்களும், காவிரி பாசனப் பகுதிகளில் விவசாயிகளும், விவசாயத் தொழிலாளர்களும் உள்ளனர். வெப்படையைச் சுற்றி 60க்கும் மேற்பட்ட பஞ்சாலைகள் உள்ளன. பள்ளிப்பாளையம் சேஷசாயி காகித ஆலையும் படைவீட்டிலுள்ள சிமெண்ட் ஆலையும் குறைந்த வேலை வாய்ப்பையும் பெருத்த சுற்றுச் சூழல் சீர்கேட்டையும் உருவாக்கி வருகின்றன.
இந்தப் பகுதியின் தொழில், கல்வி, வணிகம் ஆகியவற்றில் ஈடுபட்டுள்ள ஆதிக்க சாதியினரே உள்ளாட்சி முதல் சட்டமன்றம் நாடாளுமன்றம் வரை உறுப்பினர்களாக தொடர்ந்து இருந்து வருகின்றனர். இந்தத் தொகுதி சட்டமன்ற உறுப்பினரான திரு.தங்கமணி ஜவுளித் தொழில் முதலாளிகளின் பிரதிநிதியாக, தொழில்துறை அமைச்சராகவும் இருக்கிறார். அவருக்கு அதிமுக மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கியிருக்கிறது. தொகுதியில் எந்தப் பிரச்சனையையும் அவர் தீர்க்கவில்லை என கடுமையான அதிருப்தி நிலவுகிறது. தொகுதியில் உள்ள சாயப்பட்டறை, அடப்புத்தறி முதலாளிகளும் அரசு மீது அதிருப்தியில் உள்ளனர். தேர்தல் வாக்குறுதிப்படி 3 சென்ட் வீட்டுமனைப் பட்டா கேட்டு ஆயிரக்கணக்கான மக்களைத் திரட்டி இகக(மாலெ) - ஏஅய்சிசிடியு சார்பில், அமைச்சரிடம் கொடுத்த மனுக்களுக்கு இது வரை பதில் ஏதும் இல்லை. தொழிற்சாலை சட்டம் 1947 பிரிவு 85(1)ன் கீழ் விசைத்தறிக் கூடங்களை தொழிற்சாலைகளாக அறிவிக்க நடத்திய இயக்கங்களுக்கு அரசு செவிசாய்க்கவில்லை.
ஏப்ரல் 14 அம்பேத்கர் பிறந்த தினத்தன்று நடத்தப்பட்ட வேட்பாளர் அறிமுகக் கூட்டத்துக்கு மாவட்டக்குழு உறுப்பினர் தோழர் பொன்.கதிரவன் தலைமை வகித்தார். முன்னதாக கூட்டம் நடைபெறும் இடத்தில் வைக்கப்பட்டிருந்த டாக்டர் அம்பேத்கரின் உருவப்படத்திற்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டது. கிளைச் செயலாளர்கள் முன்னிலை வகித்தனர். மாநிலக்குழு உறுப்பினர் தோழர் சந்திரமோகன் வேட்பாளரை அறிமுகப்படுத்தினார். மாநிலக்குழு உறுப்பினர்கள் தோழர்கள் வேல்முருகன், மலர்விழி, கே.கோவிந்தராஜ், ஏஅய்சிசிடியு மாவட்டச் செயலாளர் தோழர் சுப்பிரமணி, மாவட்ட துணைத் தலைவர் தோழர் கே.ஆர்.குமாரசாமி உரையாற்றினர்.
குளச்சல் தொகுதியில் தோழர் எஸ்.எம்.அந்தோணிமுத்து
இகக(மாலெ) குளச்சல் தொகுதி வேட்பாளரான தோழர் அந்தோணிமுத்துக்கு வயது 51. இவர் 1989ல் இககமாவில் இணைந்து அரசியல் வாழ்வை துவக்கினார். 1996 - 2001 காலகட்டத்தில் ரீத்தாபுரம் பேரூராட்சி தலைவராக செயல்பட்டார். 2004ல் இகக(மா)விலிருந்து விலகிய அவர் 2007ல் இகக(மாலெ) அரசியலை இணங்கண்டு அதில் தன்னை இணைத்துக் கொண்டார். எம்.ஏ. பட்டதாரி.
விலைவாசி உயர்வு, ஏழை மக்களுக்கு குடி மனைப் பட்டா, தொழிலாளர் நல வாரிய நடவடிக்கைகளை மேம்படுத்த என பல போராட்டங்கள் நடத்தி சிறை சென்றவர். ஆளும் வர்க்கம் எரிச்சலுற்று பல பொய் வழக்குகளையும் இவர் மீது போட்டது.
ஆராச்சார் நிலம், வீட்டுமனை கோரிக்கை, கட்டுமான நலவாரிய செயல்பாடு என எல்லாவற்றிலும் பெண்கள் போராட்டங்களில் அணிதிரள்கிறார்கள். அமைப்புசாரா, மீன்பிடித் தொழிலாளர் களை அமைப்பாக்கி அவர்கள் கோரிக்கைகளுக்காக கட்சி போராடி வருகிறது. கல்விக் கட்டணக் கொள்ளைக்கு எதிராக, ஜனநாயக உரிமைகளுக்காக நடத்தப்பட்ட போராட்டங்கள் மாணவர்கள், இளைஞர்கள் மத்தியில் ஈர்ப்பை ஏற்படுத்தி உள்ளன.
ஏப்ரல் 14 அம்பேத்கர் பிறந்த தினத்தன்று நடத்தப்பட்ட வேட்பாளர் அறிமுகக் கூட்டத்திற்கு அகில இந்திய மாணவர் கழக மாவட்ட அமைப்பாளர் தோழர் சகாயம் ஜீனிஸ் தலைமை வகித்தார். புஇக மாவட்ட அமைப்பாளர் தோழர் சீனிவாசன், இகக(மாலெ) மாவட்டக் குழு உறுப்பினர்கள் தோழர்கள் மேரிஸ்டெல்லா, சுசீலா உரையாற்றினர். மாநிலக்குழு உறுப்பினர் தோழர் சங்கரபாண்டியன் வேட்பாளர் தோழர் அந்தோணிமுத்துவை அறிமுகப்படுத்தினார். தோழர் அந்தோணிமுத்து மக்களிடம் வாக்குக் கேட்டு உரையாற்றினார்.
அம்பத்தூர் தொகுதியில் தோழர் கே.பழனிவேல்
தோழர் கே.பழனிவேல் இகக மாலெ மாநிலக் குழு உறுப்பினர். ஏஅய்சிசிடியு மாநிலச் செயலாளர். சென்னை மாநகர ஏஅய்சிசிடியு மாவட்டத் தலைவர். டிஅய் டைமண்ட் செயின் தொழிலாளர் சங்கத்தில் பல ஆண்டுகள் பொதுச் செயலாளராகப் பணியாற்றி தொழிலாளர் நலன் காக்க களம் பல கண்டவர். டைமண்ட் செயின் தொழிலாளி.
அம்பத்தூரில் பிஆர்எஃப்எல் கம்பெனி பெண் தையல் தொழிலாளர்களின் குறைந்தபட்ச சம்பளம், கவுரவத்திற்கான போராட்டத்தை தலைமை ஏற்று நடத்தியவர். கோவை சாந்தி கியர்ஸ், திருபெரும்புதூர் ஏசியன் பெயின்ட்ஸ் தொழிலாளர்கள் ஏஅய்சிசிடியுவுடன் இணைந்தபோது அவர்களை போராட்டங்களில், பேச்சுவார்த்தைகளில் வழிநடத்தியவர். மாருதி தொழிலாளர்களுக்கு ஆதரவாக அம்பத்தூர், திருவொற்றியூர், திருபெரும்புதூர் பகுதிகளில் ஒருமைப்பாட்டு இயக்கத்துக்கு தலைமை தாங்கி நடத்தியதோடு அரியானா மாநிலம் மனேசர் சென்று போராட்ட நிதி அளித்து ஒருமைப்பாடு தெரிவித்தவர். அம்பத்தூர் பகுதி மக்களின் நல்வாழ்க்கை, முன்னேற்றம் என்ற கோரிக்கைகளுடன் டாஸ்மாக் சாராயக் கடைகளை மூட வலியுறுத்தி காலவரையற்ற பட்டினிப் போராட்டம் மேற்கொண்டவர். தொழிற்சங்கங்களின் அகில இந்திய பொது வேலைநிறுத்தங்கள் வெற்றியடைய முன்னின்று வழிநடத்தியவர். மழை, வெள்ளத்தால் சென்னை மக்கள் மிகுந்த பாதிப்புக்குள்ளான போது, ஜெயலலிதா அரசின் குற்றமய அலட்சியத்திற்கு எதிராக போராடியதுடன் உழைக்கும் மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் சேகரித்து, நாடிச் சென்று கொடுத்தவர்.
1990ன் இறுதியில் 60,000 பெண்கள் உட்பட 2 லட்சம் பேருடன் இயங்கிய 2,000 சிறிய ஆலைகள் கொண்ட அம்பத்தூர் தொழிற்பேட்டை இப்போது சுருங்கிப் போய்விட்டது. குறைவான தொழிலாளர் எண்ணிக்கை, குறைந்தபட்ச சம்பளம் கூட இல்லாத நிலையோடு சில ஆலைகள் காலம் தள்ளுகின்றன. அம்பத்தூர் தொழிற்பேட்டை 20 மாடி, 30 மாடி அய்டி நிறுவனங்களாக மாறிவிட்டது. எச்சிஎல், டிசிஎஸ் போன்ற நிறுவனங்களில் கீ போர்டு அடிமைகளே வேலை செய்கின்றனர். சங்கம், கூட்டுபேர உரிமை இல்லாமல் போய்விட்டது. 1960 - 1990கள் வரை அம்பத்தூரை நம்பி தென்மாவட்ட இளைஞர்கள் வந்த நகரமாக இன்று அது இல்லை. பெரிய ஹோட்டல்கள், கார்ப்பரேட் மருத்துவமனைகள், ஏடிஎம் மய்யங்கள் தனியார் கல்வி நிறுவனங்கள் என அதன் முகம் மாறிவிட்டது.
ஆனால் அடிப்படை வசதிகளான குடிநீர், சாக்கடை, சாலை வசதிகள் இல்லாமல் மாநகர நிர்வாகம் சிதைந்து சுற்றுச் சூழல் கெட்டுப் போய் கிடக்கிறது. காசுள்ளவர்களுக்கு கல்வி, மருத்துவம் என்ற நிலைதான் உள்ளது. உழைக்கும் மக்கள் வீட்டுப் பிள்ளைகளுக்கு அரசு உதவி பெறும் ராமசாமி மேல்நிலைப் பள்ளி தவிர வேறு பள்ளியோ, கல்லூரியோ கிடையாது. ஒருபுறம் 12 மணி நேரம் வேலை செய்யும் கீபோர்டு அடிமைகளும் இன்னொருபுறம் பாரம்பரிய ஆலைகளில் வேலை செய்த தொழிலாளர்கள் செக்யூரிட்டி வாட்ச் மேன்களாக உள்ள நிலைதான் உள்ளது.
புதிதாக வந்துள்ள கணினி உள்ளிட்ட எல்லா நிறுவனங்க ளிலும் தொழிலாளர் சட்டங்கள் அமலாக வேண்டும், கணிசமான எண்ணிக்கையில் தொழிலாளர் குடியிருப்புக்கள் கட்டப்பட்டு சுலப தவணைகளில் தொழிலாளர்களுக்கு கொடுக்கப்பட வேண்டும், சங்கம் அமைக்கும் உரிமை, தொழிற்சங்க அங்கீகாரச் சட்டம் வேண்டும், அரசு கல்லூரி, மருத்துவமனை வேண்டும். பயிற்சியாளர் நலன் காக்கும் சட்டத்துக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் பெற வேண்டும், டாஸ்மாக் கடைகள் மூடப்பட வேண்டும், டன்லப் மைதானம் இளைஞர்களுக்கான விளையாட்டு மைதானமாக ஆக்கப்பட வேண்டும், ஆக்கிரமிப்பு கூடாது, தொகுதியில் சாலை வசதி, சுரங்கப் பாதை, பாதாள சாக்கடைத் திட்டங்கள் முறையாக அமல்படுத்தப்பட வேண்டும், வானகரம் குப்பைக் கிடங்கு அகற்றப்பட வேண்டும் ஆகிய கோரிக்கைகள் மக்கள் மத்தியில் உள்ளன.
ஏப்ரல் 14 அம்பேத்கர் பிறந்த தினத்தன்று நடத்தப்பட்ட வேட்பாளர் அறிமுகக் கூட்டத்திற்கு கட்சியின் மாநகரக் குழு உறுப்பினர் தோழர் ஆர்.மோகன் தலைமை தாங்கினார். கட்சி மாநில கமிட்டி உறுப்பினர் தோழர் எ.எஸ்.குமார் வேட்பாளரை அறிமுகப்படுத்தி உரையாற்றினார். மாநிலக் குழு உறுப்பினர்கள் தோழர்கள் எஸ்.சேகர், ஆர்.வித்யாசாகர், தேன்மொழி எஸ்யுசிஅய் (சி) சென்னை மாவட்ட அமைப்பு கமிட்டி உறுப்பினர் தோழர் வி.சிவக்குமார், ஏஅய்சிசிடியு மாநிலச் செயலாளர் தோழர் ஜி.முனுசாமி, ஜனநாயக வழக்கறிஞர் சங்க தோழர் எம்.சங்கர் ஆகியோர் வேட்பாளருக்கு ஆதரவு கேட்டும் வாழ்த்தியும் பேசினார்கள். இறுதியாக வேட்பாளர் தோழர் கே.பழனிவேல் உரையாற்றினார். டிஅய்டிசி சங்க உறுப்பினர்கள் (சிலர் குடும்பத்துடன்) ஜிம்கானா, அகர்வால், காஞ்சி காமகோடி மருத்துவமனை, ஆன்லோட் கியர்ஸ் இன்னோவேட்டர்ஸ், சாய்மீரா, ஸ்டான்டர்ட் கெமிக்கல்ஸ், விஏபி இன்டக்சன், ஜே என்ஜினியரிங் ஒர்க்ஸ், டி.கே.இன்ஜினியரிங் ஒர்க்ஸ், மியாமி மெட்டல் ஒர்க்ஸ், இன்டோடேக் டிரான்ஸ்பார்மர்ஸ் உள்ளிட்ட பல ஆலைகளின் தொழிலாளர்கள், குடியிருப்புகளிலிருந்து கட்சி கிளைகள், உழைப்போர் உரிமை இயக்க, கட்டுமான சங்க உறுப்பினர்கள் பங்கேற்றனர். தேர்தல் நிதியாக ரூ.37,500 மேடையில் வழங்கப்பட்டது.
திருபெரும்புதூர் தொகுதியில் தோழர் வி.ராஜேஷ்
30 வயதுடைய இவர் திருபெரும்புதூரில் உள்ள ஏசியன் பெயிண்ட்ஸ் தொழிலாளி. சமூகப்பணி பாடப்பிரிவில் முதுகலை பயின்று வருபவர். இரண்டரை வருடங்களாக தொழிற்சங்கத் தலைவர். ஏஅய்சிசிடியுவின் காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளர். புரட்சிகர இளைஞர் கழகத்தின் மாவட்ட சிறப்புத் தலைவர். திருபெரும்புதூரில் 167 தொழிலாளர்களை ஜிஎஸ்ஹச் நிறுவனம் தற்காலிக பணி நீக்கம் செய்தபோது அதற்கெதிராக கூட்டம் நடத்தியதற்காக, தொழிலாளர் உதவி ஆணையர் திரு.தர்மசீலன் கொடுத்த புகார் அடிப்படையில், இவரை முதலாம் குற்றவா ளியாக காவல்துறை வழக்கு பதிவு செய்திருக்கிறது.
தமிழ்நாட்டில் மூலதனம் பெருமளவில் குவிந்துள்ள தொகுதி. கூலியுழைப்புச் சுரண்டல் பெருமளவில் நடக்கும் தொகுதி. பிஎம்டபுள்யு, மிட்சுபிசி, ஃபோர்டு, நிஸôன், சார்மினா, ஹ÷ண்டாய், ஏசியன் பெயின்ட்ஸ் போன்ற ஆட்டோமொபைல் மற்றும் எலக்ட்ரானிக் தொழிற்சாலைகள் நிறைந்த பகுதியாகவும் திருபெரும்புதூர், இருங்காட்டுக் கோட்டை, ஒரகடம் பகுதியில் 2 லட்சம் அமெரிக்க டாலர் முதலீடு நடந்திருப்பதாக சொல்லப் படுகிறது. அஇஅதிமுக ஆட்சி மூலதன விசுவாசியாக தொழிலாளி வர்க்க இயக்கத்தை ஒடுக்க ஆனதெல்லாம் செய்கிறது. நோக்கியாவும் பாக்ஸ்கானும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர் களை விரட்டிவிட்டு ஆலைகளை மூடிவிட்டுச் சென்றுவிட்டனர்.
பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் பயிற்சியாளர்கள் என்ற பெயரிலேயே ஆண்டுக்கணக்கில் நிரந்தரம் இன்றி பணி புரிகின்றனர். தொழிலாளர்களின் பெரும்பான்மை சங்கத்துக்கு கூட்டுப் பேர உரிமை மறுக்கப்பட்டு முதலாளிகள் சொல்லும் சங்கங்களோடு பேச்சுவார்த்தை என்ற நிலை உள்ளது. தொழிலாளர்கள், தொழிற்சங்க முன்னோடிகள் பழிவாங்கப்படுகின்றனர். தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும் வெளிமாநிலங்களில் இருந் தும் வேலைக்கு வருபவர்கள் கடும் துன்பத்தை சந்திக்கின்றனர்.
ஏசியன் பெயின்ட்ஸ் தொழிலாளர் உரிமைகளைப் பாதுகாக்க 3 மாதங்கள் வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தப்பட்டது. கட்சி முன்வைத்த தொழிற்சங்க அங்கீகாரச் சட்டம் கோரிக்கை அனைத்து மய்ய சங்கங்களின் கோரிக்கையாக மாறியது. பயிற்சியாளர் நலன் காக்கும் மசோதா 47/2008 சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதும் நமது முயற்சியில் ஒரு மைல் கல். குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கான போராட்டம் தொடர்கிறது. புரட்சிகர இளைஞர் கழகம் அமைப்புசாரா தொழிலாளர்களை ஈர்க்கும் மய்யமாக உருவாகியுள்ளது. தொகுதியிலுள்ள புலம் பெயர்ந்த தொழிலாளர் நலன் காக்கவும் குறிப்பிடத்தக்க முயற்சிகள் நடந்திருக்கின்றன. இங்குள்ள கட்சி அலுவலகம் தொழிலாளர்களை அணிதிரட்டும் மய்யமாக மாறியுள்ளது.
ஏப்ரல் 14 அம்பேத்கர் பிறந்த தினத்தன்று திருபெரும்புதூரில் நடத்தப்பட்ட வேட்பாளர் அறிமுகக் கூட்டத்திற்கு இகக(மாலெ) மாநிலக்குழு உறுப்பினர் தோழர் ராஜகுரு தலைமை வகித்தார். மாநிலக்குழு உறுப்பினர் தோழர் இரணியப்பன் வேட்பாளரை அறிமுகம் செய்து உரையாற்றினார். புஇக தேசியச் செயலாளர் தோழர் பாரதி சிறைப்புரையாற்றினார். புஇக மாநிலத் தலைவர் தோழர் தனவேல், நிப்பான் ஆலைத் தொழிலாளர் சங்கத்தின் காசி, டைமண்ட் என்ஜினியரிங் சங்கத்தின் குமார் ஆகியோரும் உரையாற்றினர். வேட்பாளரின் சொந்த கிராமமான பிள்ளைப்பாக்கத்தில் இருந்து 25 பெண்கள், ஹ÷ண்டாய், ஏசியன் பெயின்ட்ஸ், சிஅண்ட்எப், டைமண்ட் என்ஜினியரிங், டென்னகோ, எம்எஸ்அய், வேன்டெக், பிரைட் ஆட்டோ, சிஎம்ஆர், நிப்பான் எக்ஸ்பிரஸ், பத்மா மெட்டல்ஸ், நிசான், அனில் ஆட்டோமோடிவ் ஆகிய ஆலைகளின் தொழிலாளர்கள் 200 பேர் கலந்துகொண்டார்கள். தேர்தல் நிதியாக ரூ.28,000 வழங்கினார்கள்.
கவுண்டம்பாளையம் தொகுதியில் தோழர் எம்.எஸ்.வேல்முருகன்
பிஏ பிஎட் பட்டதாரியான தோழர் வேல்முருகன் அக்குபஞ்சர் மருத்துவமும் படித்துள் ளார். 27 ஆண்டுகள் இகக(மா)வில் உறுப்பினராக இருந்தவர். 1999 முதல் 2009 வரை முழு நேர ஊழியராக, இகக(மா) கோவை மாவட்டக் கமிட்டி உறுப்பினராக, சிஅய்டியு மாவட்ட சுமைப் பணியாளர் சங்க மாவட்டத் தலைவராக, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியில் மாநிலக்குழு உறுப்பினராக, இகக(மா) கட்சி கல்விக் குழுவில் ஆசிரியராக, 2006 முதல் 2011 வரை கோவை மாநகராட்சி மாமன்ற உறுப் பினராக இருந்தவர். மாநகராட்சி வரிவிதிப்பு மற்றும் நிதிக்குழு உறுப்பினராக இருந்துள்ளார்.
மக்களுக்கான பல போராட்டங்களில் சிறை சென்றவர். 10க்கும் மேற்பட்ட பொய் வழக்குகளை சந்தித்து விடுதலை பெற்றவர். 2009ல் இகக(மா)விலிருந்து அரசியல் வேறுபாடு காரணமாக விலகி கடந்த ஓராண்டு காலமாக இகக(மாலெ)வில் இணைந்து பணியாற்றி வருகிறார்.
இந்தத் தொகுதியில் கோவையின் முக்கிய தொழில் நிறுவனங்களான பிரிக்கால், எல்எம் டபுள்யூ, கேஎஸ்பி பம்ப், டெக்ஸ்மோ போன்ற நிறுவனங்களும் சில பஞ்சாலைகளும் ஏராளமான சிறு குறு என்ஜினியரிங் தொழிற்சாலைகளும் உள்ளன. அமைப்பாக்கப்பட்ட தொழிலாளர்களும் கணிசமான அமைப்புசாரா தொழிலாளர்களும் உள்ள தொகுதி. ஒரு பிரிவு மாநகராட்சி தூய்மைப் பணித் தொழிலாளர்களும் தொகுதிக்குள் வருகின்றனர்.
கடுமையான மின்வெட்டினால் இப்பகுதி தொழில்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன. மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள இந்தத் தொகுதியில் விவசாயமும் பிரதான தொழிலாக உள்ளது. கூடலூர், தடாகம், இடிகரை, பூச்சியூர் கிராமங்களில் வன விலங்குகள் புகுந்து பயிர்களை நாசப்படுத்துவதும், விவசாயிகள் உயிரிழப்பு ஏற்படுவதும் கூட நடக்கிறது. விவசாயிகள் மற்றும் விவசாயத்தைப் பாதுகாப்பது முக்கிய பிரச்சனையாக உள்ளது.
இகக மாலெ தொடர்ச்சியாக தொகுதி மக்கள் பிரச்சனைகளில் தலையிட்டு வருகிறது. கடும் மின்வெட்டுக்கு எதிராக சிறு, குறு தொழில்களை பாதுகாக்க வலியுறுத்தி மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அமைப்பாக்கப்பட்ட, அமைப்புசாராத் தொழிலாளர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிலாளர்கள் மத்தியில் பல இயக்கங்கள் நடத்தப்பட்டுள்ளன. வாயிற் கூட்டங்கள், குடியிருப்புப் பகுதியில் பிரச்சாரம், கையெழுத்து இயக்கம் என இயக்கங்கள் நடத்தப்பட்டுள்ளன. இப்பகுதியிலுள்ள டாஸ்மாக் கடைகளை அப்புறப்படுத்த பலகட்டப் போராட்டம் நடத்தப்பட்டது. மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களின் பணிப் பாதுகாப்பு, கூலி உயர்வுக்கான போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. கல்விக் கட்டணக் கொள்ளைக்கு எதிராக மாணவர்களை, குடும்பத்தினரை திரட்டி வெற்றிகரமான போராட்டம் நடத்தப்பட்டது
தொகுதியில் அரசு பொறியியல் கல்லூரி வேண்டும், கவுண்டம்பாளையத்திலிருந்து நரசிம்மநாயக்கன்பாளையம் வரை உள்ள 4 வழிச் சாலையை மேட்டுப்பாளையம் வரை நீட்டிக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். கிட்டத்தட்ட 60 சதம் கவுண்டர் பிரிவைக் கொண்ட இந்தத் தொகுதி வளர்ந்து வரும் வர்க்கப் போராட்டத் தளமாகவும் உள்ளது. 
மேட்டுப்பாளையம் தொகுதியில் தோழர் பி.நடராஜன்
இகக(மாலெ) வேட்பாளரான தோழர் பி.நடராஜன் பிரிக்கால் ஆலைத் தொழிலாளி. கோவை மாவட்ட பிரிக்கால் தொழிலாளர் ஒற்றுமை சங்கத்தின் தலைவர். மக்கள் போராட்டங்களில் முன்னணியில் நிற்பவர். இகக(மாலெ) மாவட்டக்குழு உறுப்பினர். கூடலூர் பேரூராட்சி பகுதி கமிட்டிச் செயலாளராகவும் உள்ளார். 2007 முதல் இகக(மாலெ) மற்றும் ஏஅய்சிசிடியுவோடு இணைந்து எல்லாப் போராட்டங் களிலும் பங்கெடுத்து வருபவர்.
தொகுதியின் பெரும்பான்மை வாக்காளர்கள் ஒக்கலிக கவுடா சமூகத்தை சேர்ந்தவர்கள். இந்தச் சமூகத்தைச் சேர்ந்தவர்கள்தான் தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறார்கள்.
15% இசுலாமியர்கள் உள்ளனர். இந்தத் தொகுதியில்தான் பிரிக்கால் பிளான்ட் 3 உள்ளது. இங்குள்ள சால்ஜர் எலக்ட்ரிக் கம்பெனியின் 3 யூனிட்டுகளில் ஆயிரக்கணக்கான ஆண்களும் பெண்களும் வேலை செய்கின்றனர். இது தவிர சில ஏற்றுமதி ஜவுளித் தொழில்களும், அய்டிசி பேப்பர் மில்லும் உள்ளது. இந்த அய்டிசி பேப்பர் மில்லால் சுற்றுச் சூழலுக்கு கடும் பாதிப்பு இருந்தாலும் விவசாயிகள் போராட்டம் எழாமல் அவர்களுக்கு ஒப்பந்தங்கள் கொடுப்பது, பெருந்தொழில் குழும சமூக பொறுப்பு என்று சொல்லி ஊராட்சிகளில் நலத்திட்டங்களை செயல்படுத்தவது, ஒவ்வொரு வீட்டிற்கும் கழிப்பறை வசதிக்கான செலவில் பாதித் தொகையை ஏற்றுக் கொள்வது என்றெல்லாம் செய்து ஆலைக்கு எதிரான போராட்டங்களை தணித்து வைத்திருக்கிறார்கள்.
தொகுதியின் இன்னொரு பகுதி விவசாயப் பகுதியாகும். அத்திக்கடவு பாசனம் பயன்பெறுகிறது. அத்திக்கடவு - அவினாசி திட்டம் வந்தால் இன்னும் கூடுதல் பயன் பெறும். இப்பகுதி விவசாயிகள் வனவிலங்கு ஆபத்துகளையும் சந்திக்கிறார்கள். கறிவேப்பிலை விவசாயம் பிரதானமாக உள்ளதால் கறிவேப்பிலை பவுடர் தயாரிக்கும் தொழிற்சாலை வந்தால் விவசாய விளைபொருளுக்கு சந்தை கிடைக்கும் என்பது எதிர்பார்ப்பாக உள்ளது. தொகுதியில் அரசு கலைக் கல்லூரி கோரிக்கையும் உள்ளது.
இப்பகுதியிலுள்ள டாஸ்மாக் சாராயக் கடையை அப்புறப்படுத்த பட்டினிப் போராட்டம், மறியல், உயர்நீதிமன்றத்தில் வழக்கு என, கட்சி பல போராட்டங்கள் நடத்தியிருக்கிறது. கூடலூர் பேரூராட்சியில் விலை இல்லாப் பொருட்கள் வழங்கக் கோரி நடத்திய போராட்டத்திற்குப் பின்பே மக்களுக்கு அவை வழங்கப்பட்டன. கூடலூர் பேரூராட்சியில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டு 2 வார்டுகளில் அதிமுக, திமுகவுக்கு அடுத்து 3ஆவது இடத்தில் வந்தோம்.
ஏப்ரல் 14 அம்பேத்கர் பிறந்த தினத்தன்று நடத்தப்பட்ட வேட்பாளர் அறிமுகக் கூட்டத்திற்கு இகக(மாலெ) மாவட்டச் செயலாளர் தோழர் பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தார். பிரிக்கால் சங்கத்தின் பொதுச் செயலாளர் தோழர் சுவாமிநாதன், சாந்தி கியர்ஸ் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் தோழர் பாலமுருகன், ஏஅய்சிசிடியு மாநிலச் செயலாளர் தோழர் குருசாமி, மாவட்ட பொதுச் செயலாளர் தோழர் தாமோதரன், மாவட்டத் தலைவர் தோழர் சந்திரன் ஆகியோர் உரையாற்றினர். இகக (மாலெ) அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் தோழர் எஸ்.குமாரசாமி மேட்டுப்பாளையம் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் தோழர் நடராஜனையும், கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் தோழர் வேல்முருகனையும் அறிமுகம் செய்து சிறப்புரையாற்றினார். வேட்பாளர்கள் இருவரும் உரையாற்றினர். 
கந்தர்வகோட்டை தொகுதியில் தோழர் ஆர்.வனிதா
தோழர் வனிதா கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினர். இவரது ஊரான வீரடிப்பட்டியில் சாலை வசதி, பேருந்து வசதி கோரி நடைபெற்ற போராட்டத்தில் முன்னணி பாத்திரம் ஆற்றியவர். இந்த ஊராட்சியில் 22 ஏக்கர் நிலம், நில மற்றவர்களுக்கு பிரித்து கொடுக்கப்பட்ட போராட்டத்திலும் பங்கு பெற்றவர். இவர் அகில இந்திய விவசாய கிராமப்புற தொழிலாளர் சங்கத்தின் மாநிலக் குழு உறுப்பினராக உள்ளார். மட்டங்கால் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியின் இயக்குனராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். நூறு நாள் வேலை திட்டத் தொழி லாளி. தொகுதியில் நடைபெற்ற கூலி உயர்வு, தலித் உரிமை, சாராய ஆலை எதிர்ப்பு, நலத் திட்ட உதவிகள் கோரி நடைபெற்ற இகக(மாலெ) போராட்டங்களில் முன்னணி பங்காற்றியவர்.
2011 தொகுதி மறு சீரமைப்பில் உருவாக்கப் பட்ட இந்தத் தொகுதி கிராமப்புறங்களை மட்டுமே கொண்ட தனித் தொகுதி. நெல், கரும்பு, வாழை, முந்திரி ஆகியவை பிரதான விவசாய விளைபொருட்களாகும். விவசாய வேலையில் பெரும்பாலும் பெண்களே ஈடுபடுகின்றனர். ஆண்கள் குறிப்பாக இளைஞர்கள் திருப்பூர், கோவை, சென்னை என உள்நாட்டிலும் சிலர் வெளிநாடுகளுக்கும் வேலைக்கு செல்கின்ற நிலை உள்ளது. தொகுதியில் எவ்வித வளர்ச்சியையும் பார்க்க முடியவில்லை. 20%க்கு மேல் தலித்துகளும் கிட்டத்தட்ட அதே வாழ்நிலையில் முத்தரையர்களும் வாழ்கின்றனர்.
சாதி ஆதிக்கமும் தீண்டாமையும் தொடர்கிற தொகுதி. இன்னமும் ஊர் பொது சொத்தில் தலித்துகளுக்கு உரிமை கிடையாது. டீக்கடைகளில் தனிக்குவளை, தனிச் சுடுகாடு, வழிபாட்டு உரிமை மறுப்பு, சுடுகாட்டுக்கு பாதை மறுப்பு என அநீதிகள் தொடரும் இடமாக உள்ளது. ஊராட்சிகளில் இட ஒதுக்கீடு இருந்தும் அதில் வெற்றி பெற்ற பஞ்சாயத்து தலைவர்கள் இருக்கையில் அமர முடியாது என்ற சூழல் உள்ளது. ஆதிக்க சாதிகளின் கட்டளைகளுக்கு ஏற்ப செயல்படுபவர்களே வெற்றி பெற முடிகிறது. சில விதிவிலக்குகளும் உண்டு. முத்தரையர் சமூக அதிமுக பேரூராட்சி சேர்மன் மீதே தீண்டாமை கடைப்பிடிக்கப்பட்டதாக புகார்களும் இருந்தன. தொகுதியின் அதிமுக எம்எல்ஏ சுப்பிரமணியன், ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சராக இருக்கிறார். ஆனால் பகுதி மக்களுக்கு எவ்வித வளர்ச்சித் திட்டத்தையும் கொண்டு வரவில்லை.
தொகுதியில் உள்ள பெரியகோட்டை ஊராட்சியில் உள்ளாட்சித் தேர்தல்களில் போட்டியிட்ட கட்சி வேட்பாளர் தலைவர் பதவியில் வெற்றி பெற்றார்.
தமிழ்நாட்டின் மிகவும் பின்தங்கிய மாவட்டங்களில் ஒன்றான புதுக்கோட்டைக்குள் வருகிற இந்தத் தொகுதியில், அரசு முந்திரி தொழிற்சாலை துவக்க வேண்டும், எல்லா கிராமங்களுக்கும் சாலை வசதி, பேருந்து வசதி ஏற்படுத்த வேண்டும், நீர் நிலைகள் ஆழப்படுத்தப்பட்டு பராமரிக்கப்பட வேண்டும், தனி நபர் ஆக்கிரமிப்பில் உள்ள நிலம், ஏரி, குளம் ஆகியவை விடுவிக்கப்பட வேண்டும், தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் நிர்ணயிக்கப்பட்ட கூலி வழங்க வேண்டும், கூலி உயர்த்தப்பட வேண்டும், திட்டத்தை பேரூராட்சிப் பகுதிக்கும் விரிவுபடுத்த வேண்டும், டாஸ்மாக் கடைகளும் இந்தத் தொகுதியில் உள்ள சாராய ஆலையும் மூடப்பட வேண்டும், விவசாயத்துக்கான ஆழ்துளை கிணறுகளுக்கு உடனடியாக மின்சார இணைப்பு வழங்க வேண்டும், சிறு, குறு, நடுத்தர விவசாயிகளுக்கு காலதாமதம், நிபந்தனைகளின்றி வங்கிக் கடனும், கல்லூரி மாணவர்களுக்கு கல்விக் கடனும் தடையின்றி வழங்க வேண்டும், தொகுதியின் வளர்ச்சிக்கு சிறு தொழில்கள் ஊக்குவிக்கப்பட வேண்டும், காவிரி கூட்டுக் குடிநீர் திட்டம் விரைவாக அமல்படுத்தப்பட வேண்டும், சிறு விவசாயிகள் பயன்படுத்த ஏதுவாக சமுதாய போர்வெல் அமைக்கும் முறை செயல்படுத்தப்பட வேண்டும் போன்ற கோரிக்கைகள் மக்கள் மத்தியில் எழுப்பப்படுகின்றன.
ஏப்ரல் 14 அம்பேத்கர் பிறந்த தினத்தன்று நடத்தப்பட்ட வேட்பாளர் அறிமுகக் கூட்டத்திற்கு மாவட்டக் குழு உறுப்பினர் தோழர் ஜோதிவேல் தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் தோழர் ஆசைத்தம்பி வேட்பாளர் தோழர் வனிதாவை அறிமுகம் செய்து வைத்தார். மாநிலக் குழு உறுப்பினர்கள் தோழர்கள் இளங்கோவன், கண்ணையன், தேசிகன், வளத்தான் ஆகியோருடன் கறம்பக்குடி ஒன்றிய செயலாளர் தோழர் விஜயன், ஏஅய்சிசிடியு மாவட்டப் பொறுப்பாளர் தோழர் சிவராஜ் உரையாற்றினர். புஇகவின் தோழர் பெரியசாமி நன்றி கூறினார்.
வேடசந்தூர் தொகுதியில் தோழர் ஜெயந்தி
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் தாலுகா, கோட்டநத்தத்திலுள்ள வசந்தகதிர்பாளையத்தைச் சேர்ந்தவர் இவர். 2006ல் கோட்டநத்தம் ஊராட்சியில் உள்ளாட்சி தேர்தலில் வார்டு உறுப் பினராக போட்டியிட்டு அதிக வாக்கு வித்தியாசத் தில் வெற்றி பெற்றவர். ஊராட்சி பகுதி முழுக்க மக்கள் பிரச்சனைகளுக்காக குரல் கொடுத்து வந்தவர். குஜிலியம்பாறை ஒன்றியத்தை தாலுகாவாக ஆக்க தொடர்ந்து போராடி வருபவர். கோட் டநத்தத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க ஊராட்சி மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி போராடி வருபவர். மீண்டும் 2011ல் இதே வார்டில் போட்டியிட்டவர்.
தொகுதியில் தொடர்ந்து மழை பொய்த்து வருவதால் இது வறட்சிப் பகுதியாக அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. இது ஒரு கிராமப்புற விவசாய தொகுதி. விவசாயத்துக்கு நீர் ஆதாரம் இல்லை என்பதுடன் கடும் குடிநீர் பஞ்சமும் நிலவுகிறது. பகுதியில் தொழில் துவங்க அரசாங்கம் அளித்த சலுகைகளைப் பயன்படுத்திக் கொண்டு கிட்டத்தட்ட 100 பஞ்சாலைகள் செயல்படுகின்றன. சிறுமிகளை வேலைக்கமர்த்தும் திருமாங்கல்யத் திட்டம் இந்தப் பஞ்சாலைகளில்தான் முதன்முதலில் அமல்படுத்தப்பட்டது. பஞ்சாலைகளில் கூலி ரூ.130 தாண்டவில்லை. எனவே தொகுதி இளைஞர்கள் வேலை தேடி திருப்பூர் போன்ற இடங்களுக்கு இடம் பெயர்கின்றனர். இங்கு இயங்கிவரும் சிமெண்ட் ஆலைகளும், கல்குவாரிகளும் சுற்றுச் சூழலை பாதிப்புக்குள்ளாக்குவதோடு நிலத்தடி நீரையும் மாசுபடுத்துகின்றன. தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஆளுங்கட்சியைச் சேர்ந்த எஸ்.பழனிச்சாமி, இந்த அய்ந்து ஆண்டுகளில் எந்த மக்கள் பிரச்சனைக்கும் தீர்வு காணவில்லை.
2 ஆண்டுகளுக்கு முன்னர் துவங்கப்பட்ட அரசு கலைக் கல்லூரி கட்டிடப் பணிகள் இன்னும் நிறைவு பெறவில்லை. இது உடனடியாக முடிக்கப்பட வேண்டும். கோவிலூரில் பேருந்து நிலையம் இல்லாமல் மக்களும் மாணவர்களும் அவதிப்படும் நிலைக்கு முற்றுப் புள்ளி வைத்து புதிய பஸ் நிலையம் கட்டப்பட வேண்டும். வேடசந்தூரை நகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும். தேசிய ஊரக வேலை உறுதித்திட்ட கூலி பாக்கி உடனடியாக வழங்கப்பட வேண்டும். உத்தரவாதமாக வேலை கிடைக்க வேண்டும். இந்தக் கோரிக்கைகள் தொகுதி மக்கள் மத்தியில் உள்ளன.
பொதுத் தொகுதியான இதில் இகக (மாலெ) தலித் வேட்பாளரை நிறுத்தியுள்ளது.
ஏப்ரல் 14 அம்பேத்கர் பிறந்த தினத்தன்று நடத்தப்பட்ட வேட்பாளர் அறிமுகக் கூட்டத்திற்கு மாவட்டப் பொறுப்பாளர் தோழர் முருகேசன் தலைமை வகித்தார். வேட்பாளர் தோழர் ஜெயந்தியை அறிமுகப்படுத்தி மாநிலக்குழு உறுப்பினர் தோழர் என்.கே.நடராஜன் உரையாற்றினார். மாவட்ட அமைப்புக் குழு உறுப்பினர்கள் தோழர்கள் மணிவேல், பொன்னுத்துரை, ஜானகி, ஜெயவீரன் உரையாற்றினர்.

Sunday, April 17, 2016

Search