COMMUNIST PARTY OF INDIA (MARXIST - LENINIST) - LIBERATION

COMMUNIST PARTY OF INDIA (MARXIST - LENINIST) - LIBERATION, TAMILNADU

Monday, November 16, 2015

மாலெ தீப்பொறி 2015 நவம்பர் 16 - 30 தொகுதி 14 இதழ் 8

பாஜகவுக்கு எதிரான வலுவான தீர்ப்பு! நிதிஷ் ஆதரவு வாக்கு அல்ல: திபங்கர் பட்டாச்சார்யா

இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழின் சி.ஜி.மனோஜ்
இகக மாலெ பொதுச் செயலாளர் தோழர் திபங்கர் பட்டாச்சார்யாவுடன் பேசியதில் இருந்து
சி.ஜி.: பீகார் தேர்தல் முடிவுகளை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?
திபங்கர்: இது ஒரு மாநிலத் தேர்தல் என்று சொல்வதை விட ஒரு தேச அளவிலான தேர்தல் என்று சொல்லலாம். அந்த வகையில் இது ஒரு வலுவான பாஜக எதிர்ப்பு தீர்ப்பு. இது நிதிஷ் ஆதரவு தீர்ப்பு, ஆட்சியில் இருப்பவர்களுக்கு ஆதரவான தீர்ப்பு என்ற கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை. மூன்று அம்சங்கள் இந்தத் தீர்ப்பை முழுவதுமாக முடிவுக்குக் கொண்டு வந்துவிடுகின்றன. முதலாவதாக, மோகன் பகவத்தும் வி.கே.சிங்கும் பேசிய விசயங்கள் பாஜகவின் தலித் விரோத மனப்போக்கை முழுவதுமாக அம்பலப்படுத்திவிட்டன. இரண்டாவது தாத்ரி. மூன்றாவது பாஜகவின் எதேச்சதிகாரமும் இறுமாப்பும். குஜராத்தைச் சேர்ந்த இரண்டு தலைவர்களால் முன்செலுத்தப்பட்ட பாஜகவின் பிரச்சாரம், பாஜகவுக்கு எதிராக செயல்பட்டது. பீகார் சுயமரியாதை வாதமும் தாக்கம் செலுத்தியது. இது மண்டலுக்குப் பிறகு பாப்ரிக்குப் பிறகு நடந்த 1995 வகை தேர்தல். அப்போதும் இடஒதுக்கீடு பற்றிய அச்சம் இருந்தது. இப்போது பாப்ரிக்கு பதில் தாத்ரி இருக்கிறது. இவற்றின் தாக்கம் கிட்டத்தட்ட ஒரே மாதிரி இருந்தது. லாலு - நிதிஷ் கூட்டணியும் எடுபட்டது. அவர்கள் பிரச்சாரம் புத்திசாலித்தனமானதாக, அதன் அமலாக்கம் இன்னும் புத்திசாலித்தனமானதாக, அந்த கூட்டணி கச்சிதமானதாக இருந்தது.
சி.ஜி.: இடதுசாரி கண்ணோட்டத்தில் இருந்து இதை எப்படிப் பார்க்கிறீர்கள்? முதல் முறையாக ஆறு இடதுசாரி கட்சிகள் சேர்ந்து தேர்தலில் போட்டியிட்டிருக்கின்றன.
திபங்கர்: இடதுசாரி கண்ணோட்டத்தில் இருந்து சொல்ல வேண்டுமானால், கூடுதல் ஆர்வத்துடனும் ஆற்றலுடனும் நாங்கள் எங்கள் தேர்தல் வேலைகளை சற்று முன்னதாகவே துவங்கியிருந்தால், அது இன்னும் திறன்மிக்க பிரச்சாரமாக இருந்திருக்கக் கூடும். ஒற்றுமையின் விளைவு பெரிதாக இல்லை. ஆயினும் இடதுசாரிகளுக்கு இது நல்ல முடிவுதான். மொத்த வாக்குகளில் நாங்கள் 4% வாக்குகள் பெற்றுள்ளோம். சென்ற முறை நாங்கள் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. இகக ஒரு தொகுதியில் வெற்றி பெற்றது. இது ஒரு தேசிய வகை தேர்தலாக அல்லாமல், வழமையான தேர்தலாக இருந்திருந்தால் இடதுசாரிகள் இன்னும் கூடுதல் வெற்றிகள் பெற்றிருக்க முடியும்.
சி.ஜி.: சாதி ஒரு மேலோங்கிய பாத்திரம் ஆற்றும் போது, ஒரு தாக்கம் ஏற்படுத்துவது இடதுசாரிகளுக்கு எவ்வளவு கடினமானது?
திபங்கர்: இது ஒரு புனைவு. மக்களுக்கு நிச்சயம் அந்த அடையாளங்கள் இருக்கின்றன. வலுவான இணைப்புகள் இருக்கின்றன. ஆனால், அது உண்மையிலேயே வெறும் சாதி இணைப்புகள் பற்றியதுதான் என்றால், இடதுசாரிகளுக்கு கொஞ்சமும் இடம் இருக்காது. ஏனென்றால் ஒவ்வொரு சாதியும் ஏதோ ஒரு கட்சியால், தலைவரால் முன்பதிவு செய்யப்பட்டுவிடுகிறது. முசாஹர் சாதி மட்டும்தான் மீதமிருந்தது. அதற்கும் ஜிதன்ராம் மாஜி கட்சி துவங்கிவிட்டார். அவரது கட்சியில் மாஜி மட்டும்தான் வெற்றி பெற்றிருக்கிறார் என்ற யதார்த்தம் இந்தக் கருத்தை முழுவதுமாக நிராகரிக்கிறது. சாதி ஒரு காரணிதான்; அரசியல்ரீதியாக அடையாளமும் நிச்சயம் இருக்கிறது. ஆனால் செயலூக்கமிக்க வர்க்கக் கண்ணாடி மூலமும் நீங்கள் அதைப் பார்க்கலாம்.
சி.ஜி.: மேற்கு வங்கத்தில் அடுத்த ஆண்டு தேர்தல்கள் நடக்கவுள்ளன. அங்கு இடதுசாரி ஒற்றுமை எவ்வாறு செயல்படும்?
திபங்கர்: மேற்குவங்கம் வேறு மாதிரியான ஓர் ஆட்டம். அங்கு இடது முன்னணி ஆட்சியில் இருந்துள்ளது. இன்று வரை சிங்கூர் பற்றியோ, நந்திகிராம் பற்றியோ வருத்தம் தெரிவித்து ஒரு வார்த்தை கூட வரவில்லை என்பது முக்கியமானது. விவசாய சமூகம் தொடர்பான பிரச்சனைகள், இடதுசாரிகளின் நம்பகத்தன்மையை அரித்துவிடுகிற பிரச்சனைகள் ஆகியவற்றை கண்டு கொள்ளாமல் கடந்து செல்ல முடியாது என நான் கருதுகிறேன்.
சி.ஜி.: ஆக, மேற்கு வங்கத்தில் கூட்டணி எதுவும் இருக்காதா?
திபங்கர்: இடதுசாரிகள், குறிப்பாக இககமா, எப்படி பதில்வினையாற்றுகின்றனர் என்று பார்க்க வேண்டும். மம்தா பானர்ஜி கடுமையான அரசியல் நெருக்கடியைச் சந்திக்கும்போதும் முக்கியத்துவம் வாய்ந்த விதத்தில் மீட்சி ஏன் நடக்கவில்லை என்று அவர்கள் சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும். இடதுசாரிகளின் நம்பகத்தன்மை ஒரு கடுமையான பிரச்சனை என்பது மட்டுமே விளக்கமாக இருக்க முடியும்.
சி.ஜி.: அப்படியானால், மேற்கு வங்கத்தில் ஆறு இடதுசாரி கட்சிகளும் சேர்ந்து நிற்பது உறுதியில்லையா?
திபங்கர்: இல்லை, அவ்வாறு இல்லை. மேற்கு வங்கத்தில் விவகாரம் வேறு என்றும் அங்கு பிரச்சனை அடிப்படையிலான கூட்டு நடவடிக்கை என்ற அம்சமே மேலோங்கி நிற்கும் என்றும் ஏற்கனவே நாங்கள் தெளிவுபடுத்தியுள்ளோம். நாங்கள் இடது முன்னணியில் ஓர் அங்கம் அல்ல. பீகார் அய்க்கியம் பீகாருக்கான தனித்த தன்மை கொண்டது.
சி.ஜி.: செவ்வாய் அன்று சந்திக்கும் இடதுசாரி தலைவர்கள் முன்பு உள்ள நிகழ்ச்சிநிரல் எத்தகையது?
திபங்கர்: முதலாவதாக, பீகார் தேர்தல் முடிவுகள் பற்றி கருத்துக்களை பரிமாறிக் கொள்வோம்; வருங்கால நடவடிக்கை பற்றிய உரத்த சிந்தனையும் இருக்கும்.

பீகார் நிகழ்வின் சாரம்:

எதேச்சதிகார மதவெறி பாஜகவுக்கு எதிரான ஆர்ப்பரிக்கும் பதிலடி
அய்க்கிய ஜனதா தளம் - ராஷ்ட்ரடிய ஜனதா தளம் - காங்கிரஸ் கட்சிகளின் கச்சிதமான கூட்டணியின் தீவிரமான பிரச்சாரம்
இடதுசாரிகளின் கருவான வலிமையும் வளரும் உள்ளாற்றலும் மெய்ப்பிக்கப்பட்ட நிகழ்வு

பல்வேறு விதமான கருத்துக் கணிப்புகளுக்குப் பிறகு, பீகார் பேசியது என்று நாம் இறுதியில் தெரிந்து கொண்டோம். ஆளுகிற சங் - பாஜகவின் கூச்சலிடுகிற தீய வாய்களை பீகார் தேர்தல் முடிவுகள் பேச்சிழக்கச் செய்து விட்டன; அதே நேரம், வெளிப்படையாகவே ஆர்எஸ்எஸ் உந்தித் தள்ளும் அரசாங்கத்தால் ஆளப்படுகிற இந்தியாவில், ஜனநாயகத்தைப் பாதுகாக்கும் ஒவ்வொரு குரலும் பன்மடங்கு பெருக்கப்பட்டு ஒலித்துள்ளது. மோடி - ஷா இரட்டையர்கள் விஷமத்தனமாக சொன்னதற்கு மாறாக, பீகார் தேர்தல்கள், பாகிஸ்தா னில் அல்லாமல், இந்தியா முழுவதும் கொண்டாட்ட பட்டாசுகளை பற்ற வைத்துள்ளன. 2015 துவக்கத்தில் டில்லி தேர்தல் முடிவுகள், நரேந்திர மோடியின் ஆணவமிக்க எதேச்சதிகார ஆட்சிக்கு வலுவான பதிலடி கொடுத்தன; இப்போது பீகார், ஓர் உண்மையான எதிர்ப்பின் பதாகையை பறக்கவிட்டுள்ளது. இரு துருவ தேர்தல், அய்க்கிய ஜனதா தளம் - ராஷ்ட்ரிய ஜனதா தளம் - காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவாக மாபெரும் அலை ஆகிய அழுத்தங்களையும் மீறி, புரட்சிகர கம்யூனிஸ்டுகள், தங்கள் போராட்டங்களின் தியாகங்களின் மய்யங்களை நம்பகத்தன்மையுடன் தக்க வைத்துக் கொண்டுள்ளனர்.
பீகார் தேர்தல் முடிவுகளின் திசையைப் பார்ப்பது அவ்வளவு கடினமானதல்ல. தனது காதுகளை திறந்து வைத்துள்ள எந்த அரசியல் நோக்கரும் தனித்து தெளிவாகக் கேட்டிருக்கக் கூடிய, நீண்டதொரு தேர்தல் பிரச்சாரம் முடிவுக்கு வரும் வேளையில் பாஜகவுக்கு எதிரான ஆர்ப்பரிப்புடனான புறக்கணிப்பாக பின்பு மாறிய, முணுமுணுப்புகளை எளிதாகக் கேட்டிருக்க முடியும். இருப்பினும் நடக்கப் போவது என்ன என்று தெளிவாகத் தெரிந்ததை கருத்துக் கணிப்புகள் காணத் தவறின. உண்மையான தேர்தல் முடிவுகள் வரத் துவங்குவதற்கு சில நிமிடங்கள் முன்பு வரை, மரியாதைக்குரிய தொலைக்காட்சி அலைவரிசைகள், தேஜமு ஆதரவு போக்குகளையே தொடர்ந்து வெளியிட்டுக் கொண்டிருந்த விதம், அச்சமூட்டும் தணிக்கை அறிகுறிகளையே குறிப்பதாக இருந்தது. நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு நெருக்கடி நிலை கால ஊடக தணிக்கை முறை போல் அல்லாமல், இது கார்ப்பரேட்டுகளால் செலுத்தப்பட்டதாக, தாமாகவே முன்வந்தும் கூட செய்யப்பட்டதாக இருந்தது; ஆனால், அது ஆபத்தை மட்டுப்படுத்திவிடவில்லை. உண்மையை குறிப்பிட்டுச் சொல்வதும், அது பற்றி செய்தி வெளியிடுவதும் தேச விரோத, அரசு விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவது  என்ற குற்றச்சாட்டுகளுக்கும் இட்டுச் செல்லும் அளவுக்கு, இப்போது ஆபத்தானவையாக மாறிவிட்டனவா?
அய்க்கிய ஜனதா தளம் - ராஷ்ட்ரடிய ஜனதா தளம் - காங்கிரஸ் கூட்டணிக்கு பீகாரில் எண்ணிக்கைரீதியாக சாதகமான நிலை இருந்தது. 2014ல் மோடி அலை உச்சத்தில் இருந்தபோது கூட, இந்த மூன்று கட்சிகளின் ஒட்டுமொத்த வாக்குகள் 145 இடங்களுடனான ஒரு வசதியான பெரும்பான்மையை தந்திருக்கும். இந்த எண்ணிக்கைரீதியாக சாதகமான நிலையை, ஜிதன்ராம் மாஜி, பப்பு யாதவ் போன்றவர்களின் கலகம், சமாஜ்வாதி கட்சி மற்றும் ஏஅய்எம்அய்எம் (அனைத்திந்திய மஜ்லீஸ் இதேஹதுல் முஸ்லிமீன்) போன்ற கட்சிகளின் நுழைவு போன்ற புதிய காரணிகள் குறைத்திருக்கக் கூடும். பிரதான நீரோட்ட ஊடகங்கள், இந்தக் காரணிகளை பெரிதுபடுத்திக் காட்டி, சமாஜ்வாதி கட்சி - தேசிய வாத காங்கிரஸ் கட்சி - பப்பு யாதவ் என்ற இல்லாத ஒரு கூட்டணியை பீகாரின் மூன்றாவது அணி என காட்டி, அதே நேரம், சக்தி வாய்ந்த போராட்டங்கள் மட்டுமின்றி, தொடர்ச்சியான தேர்தல் பலத்துடனுமான வரலாறு கொண்ட, கொள்கை அடிப்படையிலான ஒரே மாற்று மேடையான இடது முகாமை திட்டமிட்ட விதத்தில் புறக்கணித்தன. தேர்தல்கள் முடியும் முன்பே அந்த மூன்றாவது அணி உடைந்து போனது. ஏஅய்எம்அய்எம் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்த முடியவில்லை. இகக மாலெ பெற்ற 3 இடங்கள் கூட பெற முடியாமல், பாஜகவின் கூட்டாளிகள் கண்கவர் விதத்தில் வீழ்ந்தனர்.
நிதிஷ் - லாலு - காங்கிரஸ் கூட்டணி பெற்ற அமோக வெற்றிதான் பொதுவான அரசியல் நோக்கரை உண்மையில் வியப்படையச் செய்துள்ளது. 2014ல் கிடைத்திருக்கக் கூடிய 145 இடங்கள், 2015ல் 178 என எப்படி மாறியது என்பதுதான் பீகார் தேர்தல் நிகழ்வின் உண்மையான அரசியல் கதை. நிதிஷ் குமாரின் ஆதரவாளர்கள், இந்த வெற்றி அவரது ஆட்சிக்குக் கிடைத்த வெற்றி என்றும் நிதிஷ் குமாரின் வளர்ச்சி மற்றும் நல்லாளுகைக்கு கிடைத்த வெற்றி என்றும் விளக்கப் பார்க்கிறார்கள். ஆனால், இந்த விளக்கம் அக விருப்பத்தில் இருந்து வருவது; புறநிலைரீதியானது அல்ல. நிதிஷ் - லாலு கூட்டணி, எதிர்மறை பிரச்சாரத்தில் இருந்து, பாஜகவின் ஆணவமிக்க பிளவுவாத அரசியலில் இருந்து, பிரதானமாக வலிமை பெற்றது. மோடி - ஷாவின் பிரச்சாரம், முழுக்க முழுக்க அரசியல் இறுமாப்பு, கட்டுக் கடங்காத மதவெறி நஞ்சு ஆகியவற்றால் நிறைந்திருந்தது. மோகன் பகவத், வி.கே.சிங் ஆகியோர் இடஒதுக்கீடு பற்றியும் தலித்துகள் பற்றியும் மனதில் இருந்து பேசியது, பாகிஸ்தான், பசு, மாட்டிறைச்சி பற்றிய வெறித்தனமான பேச்சுக்களும், வளர்ச்சி பற்றிய ஏமாற்று கூற்றுக்களை கிழித்தெறிந்து, சங் - பாஜக இயல்பின் அவலட்சணமான நிலப்பிரபுத்துவ - மதவெறி முகத்தை அம்பலப்படுத்தின. குஜராத்திகள் இரண்டு பேர் பீகாரை நிலப்பிரபுத்துவ - மதவெறி பிரச்சாரத்தால் தாக்குகிறார்கள் என்ற யதார்த்தம், நிதிஷ் பிரச்சாரத்தின் பீகார் சுயமரியாதை என்ற கருத்துக்கு வலுவான அதிர்வலைகளை உருவாக்கியது. புத்திசாலித்தனமான, புதிதான நிதிஷ் - லாலு பிரச்சாரம் இந்தச் செய்தியை தெளிவான கவனக் குவிப்புடனும் மிகப் பெரிய ஆற்றலுடனும் மக்கள் மத்தியில் எடுத்துச் சென்றது.
இகக மாலெ, இகக, இகக மா கட்சிகள், ஆறு இடதுசாரி கட்சிகளின் ஒன்றுபட்ட சுதந்திர முகாமாக இந்தத் தேர்தல்களைச் சந்தித்தன. 2010ல் சட்டமன்றத்தில் ஒரே ஓர் இடதுசாரி உறுப்பினர் என்ற எண்ணிக்கையில் இருந்து தற்போது மூன்று இடங்களில் வெற்றி என ஓரளவு அந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது; இடதுசாரி கட்சிகளின் ஒட்டு மொத்த வாக்குகள் 4%, சட்டமன்றத்தில் மூன்று இடங்கள் என பெற்றிருப்பது, வேறு பொருளில் இரு துருவ பீகார் என்று சொல்லப்படுவதில், நம்பகத் தன்மையும் உள்ளாற்றலும் கொண்ட ஒரே மூன்றாவது சக்தி இடதுசாரிதான் என்பதைக் குறிப்பிட்டுக் காட்டுகிறது. பல பத்தாண்டுகால போராட்டங்கள் மூலம் கட்டியெழுப்பப்பட்ட இடதுசாரி அடித்தளத்தை பாதுகாப்பதும், நேர்மையான மக்கள் ஆதரவு அரசியல் என்ற பொருளில் இடதுசாரிகளின் கேள்விக்கு உள்ளாக்கப்பட முடியாத நம்பகத்தன்மையையும் நல்லெண்ணத்தையும் வாக்குகளாக மாற்றுவதும், அலைகள் வீசும் ஒரு தேர்தலில் எளிதானது அல்ல; இந்தத் தேர்தல் புயலில், மூன்று இடங்களைப் பெற, இகக மாலெ, தனது கருவான வலிமையை ஆழமாக, முழுவதுமாக பயன்படுத்த வேண்டியிருந்தது. கிராமப்புற வறியவர்களின் திடமான ஆதரவு, இளைஞர்களின் உணர்வுமிக்க, துடிப்பான பாத்திரம், விவசாயிகளின், பெண்களின் அதிகரித்த அளவிலான பங்கேற்பு ஆகியவை இகக மாலெ பிரச்சாரத்துக்கு அடிப்படையான வலிமையும் ஆற்றலும் தந்தன. அதீத ஏற்றத் தாழ்வுகள் கொண்ட இந்தத் தேர்தல் போரில், பகை பாராட்டும் ஊடகச் சூழலில் பெற்றுள்ள இந்த வெற்றி, உண்மையில் நினைவில் நிற்கக் கூடியது. போஜ்பூரில் தேர்தல் நடப்பதற்கு முன்பு இகக மாலெ செயல்வீரர் சதீஷ் யாதவ் கொல்லப்பட்டார். இகக மாலெயின் மூன்று நம்பிக்கை தரும் வேட்பாளர்களான, சிவானின் தரோலியில் வெற்றி பெற்ற விவசாயத் தொழிலாளர்கள் தலைவர் தோழர் சத்யதியோ ராம், சிவானின் சரேடியிலும் போஜ்பூரின் அஜியோனிலும் மூன்றாவது இடங்களில் வந்த இளம்தோழர்கள் அமர்ஜித் குஷ்வாஹாவும் மனோஜ் மன்சிலும் வேட்பு மனு தாக்கல் செய்யும் போதே, பொய் வழக்குகளில் கைது செய்யப்பட்டார்கள்.
சந்தேகத்துக்கு இடமின்றி ஒரு தேசியச் சூழலில்தான் பீகார் தேர்தல்கள் நடந்தன. பீகார் தேர்தல் முடிவுகள் நிச்சயம் தேசிய அள வில் ஒரு பெரிய அதிர்வலையையும் உடன் விளைவுகளையும் உருவாக்கும். நாடாளுமன்ற அரங்கத்துக்குள் எதிர்க்கட்சி அரசியலுக்கு ஊக்கம் அளிப்பது, மாநிலங்களவையில் கூடுதல் இடங்கள் பெறும் பாஜகவின் கனவுகளுக்கு ஒரு பின்னடைவை ஏற்படுத்துவது ஆகியவற்றுடன், நாட்டில் நடந்து கொண்டிருக்கிற பல்வேறு ஜனநாயகப் போராட்டங்களுக்கு, மக்கள் போராட்டங்களுக்கு இந்த முடிவுகள் உத்வேகம் தரும். பீகாரைப் பொறுத்தவரை, இந்த புதிய கட்டத்தை லாலு மண்டல் - 2 என்று விவரிக்கிறார்; நல்லாட்சி நீதியுடனான வளர்ச்சி என்ற தனது பிரபலமான தளங்களை நிதிஷ் தொடர்ந்து பேசி வருகிறார். பீகாரில் புதிய ஆட்சி தனது வாக்குறுதிகளுக்கு பொறுப்பேற்க வேண்டும் என்பதை வலியுறுத்துவதோடு, இகக மாலெயும் இடதுசாரி கட்சிகளும், வேலை வாய்ப்பு, விவசாயம், கல்வி, மருத்துவம், இளைஞர்களுக்கும் பெண்களுக்கும் வாய்ப்புகள், உரிமைகள், அனைவருக்கும், குறிப்பாக பீகார் சமூகத்தின் நலிந்த பிரிவினருக்கும் அடிப்படை ஜனநாயக உரிமைகள் மற்றும் நீதி ஆகியவற்றின் மீது தெளிவான கவனம் செலுத்தும் இடதுசாரிகளின் கூட்டு வேண்டுகோளில் முன்வைக்கப்பட்ட மாற்று திசைவழி மற்றும் முன்னுரிமைகளுக்காக போராட வேண்டும். பீகாருக்கும் இந்தியாவுக்கும் இது ஒரு முக்கியமான அரசியல் கட்டம்; புரட்சிகர கம்யூனிஸ்டுகள், இலக்கு பற்றிய முழுமையான தெளிவுடனும் கொள்கைப் பற்றுடனும் துணிச்சலாக முன்செல்ல வேண்டும்.

கடுமையான இடையூறுகளுக்கு மத்தியில் இகக மாலெ பெற்ற வெற்றிகள்

ஒரு சத்தமான தேர்தல் பிரச்சாரத்தை நடத்த இகக மாலெ, வர்த்தகரீதியாக யாரையும் அமர்த்தவில்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும். பெரிய விளம்பர தட்டிகளோ, காணொளி காட்சிகள் கொண்ட வாகனங்களோ, ஹெலிகாப்டர்களோ, தலைவர்களின் தேர்தல் உரைகளின் தொலைக்காட்சி ஒளிபரப்புகளோ இகக மாலெவுக்கு இல்லை. அச்சு ஊடகத்தில் ஓரளவு செய்திகள் வெளியாயின. டில்லி அல்லது பாட்னாவில் இருக்கும் அரசு எந்திரத்தின் துணை பெற்ற மற்ற வேட்பாளர்கள் போல் அல்லாமல், இகக மாலெ வேட்பாளர்கள் பலர், சிறைகளில் இருந்து கொண்டு போட்டியிட்டார்கள்; பலர் மக்கள் போராட்டங்களை நடத்தியதற்காக பொய் வழக்குகளில் கைது செய்யப்பட்டார்கள். இகக மாலெயின் ஒரே தேர்தல் பிரச்சார ஊடகம் மக்களேதான். இது பலவீனமாக இருப்பதற்கு பதிலாக பலமாக மாற்றப்பட்டது.
கடுமையான இடையூறுகள் இருந்தபோதும், போராட்டங்கள், இயக்கங்கள், தியாகங்கள் ஆகியவற்றின் விளைவாக உருவான மிகப் பெரிய நம்பிக்கை காரணமாக இகக மாலெ வெற்றி பெற்றது.

நிலத்துக்கான தலித் மக்களின் போராட்டத்தை ஆதரித்ததற்காக சிறை வைக்கப்பட்ட தோழர் சத்யதேவ் ராம்

10,000 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வேட்பாளரை தோற்கடித்த தோழர் சத்யதேவ் ராம் (தரோலி, சிவான்) சிறையில் இருந்து கொண்டே போட்டியிட்டார். அவரும் இகக மாலெ சிரேடி (சிவான்) தொகுதி வேட்பாளருமான தோழர் அமர்ஜித் குஷ்வாஹாவும், 2013ல் நிலமற்ற தலித் தொழிலாளர்கள் தங்கள் உரிமையான நிலத்தை எடுத்துக் கொள்ள போராடியபோது, பொய் வழக்குகள் போடப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்கள். உள்ளூர் பாஜக சட்டமன்ற உறுப்பினர் தலைமையில், பாஜக ஆதரவு பெற்ற நிலப்பிரபுக்கள் தலித் மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். தோழர்கள் சத்யதேவ் ராமும் அமர்ஜித் குஷ்வாஹாவும், பாஜக ஆதரவு பெற்ற குண்டர்கள் கைது செய்யப்பட வேண்டும் என்றும் தலித் மக்களுக்கு நிலம் தரப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தி மாவட்ட நிர்வாகத்தை அணுக அங்கு சென்றனர். பாஜக சட்டமன்ற உறுப்பினரையும் அவரது குண்டர்களையும் தண்டிப்பதற்கு மாறாக, நிதிஷ் தலைமையிலான பீகார் நிர்வாகம் அந்தத் தோழர்கள் மீது கொலை வழக்கு போட்டு அவர்களை கைது செய்தது. பாஜகவுக்கும் அய்க்கிய ஜனதா தளத்துக்கும் கடுமையான போட்டியாளராக இருந்த தோழர் அமர்ஜித் குஷ்வாஹா மூன்றாவது இடம் பெற்றுள்ளார். தரோலியில் தோழர் சத்யதேவ் ராமை வெற்றி பெறச் செய்ததன் மூலம், சிவான் மக்கள், ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் மாஃபியா தலைவர் ஷகாபுதீனுக்கு எதிராகப் போராடிய ஜவஹர்லால் பல்கலை கழக மாணவர் சங்கத்தின் முன்னாள் தலைவர் தோழர் சந்திரசேகர் உள்ளிட்ட எண்ணற்ற தியாகிகளுக்கும், நிலமற்ற வறிய தலித் மக்களின் உரிமைகளையும் கவுரவத்தையும் பாதுகாக்க சிறைகளையும் துப்பாக்கிக் குண்டுகளையும் எதிர்கொண்ட பலருக்கும் மரியாதை செலுத்தியுள்ளனர்.

தோழர் சுதாமா பிரசாத்: தராரியின் நிலப்பிரபுத்துவ எதிர்ப்பு அறுதியிடல்

272 வாக்குகள் வித்தியாசத்தில் தேஜமு வேட்பாளரை தோற்கடித்த தோழர் சுதாமா, போஜ்பூர் வறிய மக்களின், ஒடுக்கப்பட்ட சாதி விவசாயிகளின் நிலப்பிரபுத்துவ எதிர்ப்புப் போராட்டத்தில் முன்னணியில் இருப்பவர். ஆதர்ச தலைவரும், இந்தப் பகுதியில் கட்சியின் தோற்கடிக்கப்படாத சட்டமன்ற உறுப்பினருமான மறைந்த தோழர் ராம்நரேஷ் ராமின் புகழ்மிக்க மரபில் தொடர்பவர்.
நகைமுரணாக, மகாகூட்டணி, லோக் ஜனசக்தி, சமாஜ் வாதி கட்சி ஆகிய கட்சிகளின் தராரியின் மற்ற வேட்பாளர்கள் அனைவரும் ரன்வீர் சேனாவுடன் தொடர்பு உள்ளவர்கள். மோடியின் கூட்டாளியான ராம் விலாஸ் பாஸ்வான் தலைமையிலான லோக் ஜனசக்தி கட்சி, ரன்வீர் சேனாவைச் சேர்ந்த சுனில் பாண்டேயின் மனைவி கீதா பாண்டேயை வேட்பாளராக நிறுத்தியது; சுனில் பாண்டே அய்க்கிய ஜனதா தள கட்சியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர்.
மகா கூட்டணி அகிலேஷ் பிரதாப் சிங்கை வேட்பாளராக நிறுத்தியது. அவர் ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்; மத்திய அமைச்சர். இந்தத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர். ரன்வீர் சேனா தலைவர் பிரம்மேஷ் சிங்கின் இறுதி நிகழ்ச்சியில், உழைக்கிற வறிய தலித் மக்களை படுகொலை செய்யும் சிற்பியாக இருந்த பிரம்மேஷ்வர் சிங்கை, ‘100, 200 ஆண்டுகளில் ஒரு முறைதான் இவரைப் போன்றவர்கள் பிறக்கிறார்கள். அவரது ஆகிருதி நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினரையும் விட மேலானது என்றார். பிரம்மேஷ்வர் சிங் மகன் இந்துபூஷண் சிங்கை சமாஜ்வாதி கட்சி தனது வேட்பாளராக நிறுத்தியது. இப்போது ரன்வீர் சேனாவின் முகப்பு அமைப்பு ஒன்றுக்கு அவர்தான் தலைவர்.
சந்தர்ப்பவாத ஆளும்வர்க்கக் கட்சிகளுக்கு சமூக நீதி, சோசலிசம், தலித் பெருமை போன்றவை பற்றிய பேச்சுக்கள் எவ்வளவு உள்ளீடற்றவை என தராரியின் இதுபோன்ற நிலைமைகள் நினைவூட்டுகின்றன. பதானி தோலாவின் வறிய மக்களின் ரத்தம் தோய்ந்த மண்ணில், அத்வானியின் கலக யாத்திரையை தடுத்து நிறுத்தியதாக பெருமை பேசும் லாலு அரசாங்கம், பத்தாண்டுகளுக்கும் மேலாக, குற்றம் பற்றிய அச்சமின்றி படுகொலைகள் செய்ய, பாஜக - ஆர்எஸ்எஸ்ஸின் ரன்வீர் யாத்திரையை அனுமதித்தது. அதன் பிறகு அய்க்கிய ஜனதா தளமும் நிதிஷ் குமாரும், பாஜக முதல்முறையாக பீகாரில் ஆட்சியில் பங்கேற்க உதவி செய்தனர். அதற்கு, அமீர் தாஸ் ஆணையத்தை, ரன்வீர் சேனா படுகொலைகள் பற்றிய உண்மையை நீதியை குழிதோண்டி புதைத்தனர். 2015ல், மற்ற எல்லா போட்டி அமைப்புகளும், வரலாற்றை மறுதலித்து, பாதிக்கப்பட்டவர்களை இழிவுபடுத்தி, ரன்வீர் சேனா தொடர்புகள் உள்ள வேட்பாளர்களை தேர்தல்களில் நிறுத்தின.
ஆனால், தராரி, பதானி தோலா போராளிகளின் மரபை உயர்த்திப் பிடித்தது. கர்பாலா நிலத்துக்காகப் போராடிய இசுலாமியர்கள், ரன்வீர் சேனாவினரால் விரட்டப்பட்டபோது, ஒடுக்கப்பட்ட சாதியினரின் வீடுகளில்தான் தஞ்சம் புகுந்தனர் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். மதங்களுக்கு இடையிலான இந்த ஒற்றுமையை இகக மாலெதான் கட்டியெழுப்பியது. ரன்வீர் சேனாவால் இந்த மரபை படுகொலை செய்ய முடியவில்லை. 2015ல் தராரி மீண்டும் மதவெறி - நிலப்பிரபுத் துவ - ரன்வீர் சேனா தொடர்புகள் கொண்ட வேட்பாளர்களை தோற்கடித்து, இகக மாலெயின் தோழர் சுதாமா பிரசாத்தை வெற்றி பெறச் செய்தது.

தோழர் மெஹ்பூப் ஆலம்: மக்கள் போராட்டங்களின் வெற்றி

கதிஹார் மாவட்டத்தின் பல்ராம்பூர் தொகுதியில் தோழர் மஹ்பூப் ஆலம் மீண்டும் வெற்றி பெற்றுள்ளார். பாஜக வேட்பாளரை 23,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்துள்ளார். பர்சோய்/பல்ராம்பூர் தொகுதியில் இகக மாலெ இதற்கு முன் மூன்று முறை வெற்றி பெற்றுள்ளது.
இந்தப் பகுதியில் சக்திவாய்ந்த நிலப்பிரபுக்களுக்கு எதிராக, வறிய தலித் மக்கள், பழங்குடியினர், இசுலாமியர் ஆகியோரின் போராட்டங்களை முன்னெடுத்ததற்காக, தோழர் மஹ்பூப் ஆலம் மீது பல்வேறு பொய் வழக்குகள் போடப்பட்டுள்ளன. ஆனால், கடுமையாக பின்தங்கிய இந்தப் பகுதியில் மக்களின் அசைக்க முடியாத அன்பையும் நம்பிக்கையையும் தோழர் மெஹ்பூப் ஆலம் பெற்றுள்ளார். துன்புறுத்தல், அநீதி, வன்முறை போன்ற தாக்குதல்களுக்கு உள்ளாக்கப்படும்போது, தோழர் மஹ்பூப் ஆலமும் இகக மாலெயும்தான் தங்களுக்கு பாதுகாப்பு என்று அந்த மக்கள் நன்கு அறிவார்கள்.

இங்கு சொல்லப்பட்டுள்ள இகக மாலெயின் போராட்டங்கள், உறுதியான மதச்சார்பின்மைக்காக களத்தில் நடந்து கொண்டிருக்கிற போராட்டங்கள். ஆட்சியில் இருக்கும் தலைவர்களின் சந்தர்ப்பவாத ஒற்றுமை மூலம் அல்லாமல், சக்தி வாய்ந்தவர்களுக்கு எதிரான அதிகாரம் அற்றவர்களின் ஒருமைப்பாட்டின் மூலம் உருவாக்கப்பட்ட மதச்சார்பின்மை அது.

Search