COMMUNIST PARTY OF INDIA (MARXIST - LENINIST) - LIBERATION

COMMUNIST PARTY OF INDIA (MARXIST - LENINIST) - LIBERATION, TAMILNADU

Monday, September 14, 2015

மாலெ தீப்பொறி 2015 செப்டம்பர் 16 - 30, தொகுதி 14 இதழ் 4

எதிர்வருகிற பீகார் தேர்தல்களில்
இககமாலெயையும் இடதுசாரி கூட்டணியையும் ஆதரிப்பீர்!

நண்பர்களே,

பீகாரில் விரைவில் சட்டமன்ற தேர்தல்கள் நடக்கவுள்ளன. பாஜகவின் மதவெறி, மக்கள்விரோத நிகழ்ச்சி நிரலுக்கு இந்தத் தேர்தல்களில் ஒரு வலுவான பதிலடி தர வேண்டிய அவசர அவசியம் இருக்கிறது. தலித் படுகொலைகள் பற்றி ரன்வீர் சேனா கொலைகாரர்கள், கேமரா முன்பு, பெருமையாகப் பேசியதை, உயர்மட்ட பாஜக தலைவர்கள் நிதியளித்ததை, ஆதரவளித்ததை கோப்ராபோஸ்ட்டின் ரகசிய நடவடிக்கை படம் பிடித்துள்ளது. ரன்வீர் சேனா, தண்டனை பற்றிய அச்சமின்றி இருப்பதை லாலு - ராப்ரி ஆட்சி அனுமதித்தது; நிதிஷ் குமார் அரசாங்கம் பாஜகவைப் பாதுகாக்க அமீர் தாஸ் ஆணையத்தை கலைத்தது. லாலு - ராப்ரி, நிதிஷ் ஆட்சிகளின் உதவியுடனும் அந்த ஆட்சிகள் அடிபணிந்ததாலும், பாஜக, நிலப்பிரபுத்துவ அதிகாரத்தின் கட்சியாக இருந்ததை, கோப்ராபோஸ்ட் அம்பலப்படுத்துதல்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

இன்றும், காக்ரியாவில் பார்பெட்டாவிலும் போஜ்பூரில் குர்முரியிலும் தலித் பெண்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. ஜகனாபாத்தில் தோழர் உபாத்யாய் யாதவ், போஜ்பூரில் தோழர் சதீஷ் யாதவ் போன்ற மக்கள் செல்வாக்குமிக்க இடதுசாரித் தலைவர்கள் கொலைவெறியுடன் தாக்கப்படுகின்றனர். நல்லிணக்கத்தை சீர்குலைக்கவும் மதவெறி வன்முறையை கட்டவிழ்த்துவிடவும் விஷமிகளால் தொடர்முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. பாஜகவுக்கு பொருத்தமான பதிலடி தர, பீகாருக்குள் நிலப்பிரபுத்துவ - மதவெறி தாக்குதலை எதிர்ப்பதற்கான அவசர அவசியத்தை, இந்தச் சம்பவங்கள் நினைவூட்டுகின்றன.

நரேந்திர மோடியும் நிதிஷ் குமாரும் வளர்ச்சி பற்றி வானளாவப் பேசுகின்றனர். மோசடி மகா முடிப்புகள் பற்றிய அறிவிப்புகள் மூலம் மக்களை ஏமாற்றப் பார்க்கின்றனர். ஆனால், பீகார் மக்கள் கடுமையான பொருளாதார பிரச்சனைகள், உரிமைகள் மறுப்பு ஆகியவற்றுக்கு எதிராக அன்றாடம் போராட்டம் நடத்த வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருக்கிறார்கள்.

இந்தக் கட்டத்தில், போராடும் மக்களின் நோக்கங்களை முன்னெடுத்துச் செல்ல, ஓர் ஒன்றுபட்ட, சுதந்திரமான முகாமாக இடதுசாரிகள் ஒன்றிணைந்துள்ளது, ஜனநாயகம், நீதி, கவுரவம், சமூக மாற்றம் ஆகியவற்றுக்காக களத்தில் போராடிக் கொண்டிருக்கும் மக்கள் மத்தியில் ஒரு புதுப்பிக்கப்பட்ட நம்பிக்கை செய்தியை எடுத்துச் சென்றுள்ளது. தேஜமு மற்றும் அய்முகூவின் இருதுருவ திவாலாத்தனம், துரோகம் ஆகியவற்றுக்கு எதிராக, இடதுசாரிகளை ஓர் உற்சாகமளிக்கும் மூன்றாவது மாற்றாக, ஜனநாயகம், நீதி, சமூக மாற்றம் ஆகியவற்றின் உண்மையான பாதுகாவலனாக வலுப்படுத்துவது இப்போது காலத்தின் தேவையாக உள்ளது.

இகக மாலெயின் தேர்தல் பிரச்சாரம் முழுக்க முழுக்க மக்கள் பங்களிப்பைச் சார்ந்தே உள்ளது. உங்களால் இயன்ற எல்லா விதங்களிலும், எங்கள் வேட்பாளர்கள் பற்றி எடுத்துச் சொல்வதன் மூலம், உங்கள் கருத்துக்கள் மற்றும் பங்கேற்பால் எங்கள் பிரச்சாரத்தை செழுமைப்படுத்துவதன் மூலம், எங்கள் தேர்தல் நிதிக்கு பங்களிப்பதன் மூலம், இகக மாலெயை ஆதரிக்க வேண்டுமென வேண்டுகோள் விடுக்கிறோம். உங்கள் பங்களிப்பை காசோலையாகவோ, பணமாகவோ அல்லது நேரடி பணப்பரிமாற்றமாகவோ பின்வரும் வங்கிக் கணக்கில் செலுத்தலாம்.
CPI(ML) at Syndicate Bank Savings a/c No 90502010057518, Nirman Vihar Branch, Delhi 110092, IFS Code: SYNB0009050.

நன்றி

இகக (மாலெ) மத்திய கமிட்டி
06 செப்டம்பர் 2015

தீயிலிட்டுச் சுட்டுச் சோதித்தாலும்...

சுதந்திரமான பாலுறவு பற்றி, இளவயது பாலுறவு பாதுகாப்பு பற்றி பேசியதால் தமிழ்நாட்டின் கலாச்சாரக் காவலர்களின் தாக்குதலுக்கு ஆளான குஷ்பு, அதன் பிறகு அரசியல் அரங்குக்குள்ளும் நுழைந்துவிட்ட குஷ்பு, பெண்ணை, பெண் அரசியல்வாதியை, பெண் முதலமைச்சரை தரக் குறைவாகப் பேசி கண்டனத்துக்கு உள்ளாகி இருக்கும் இளங்கோவனுக்கு ஆதரவாகப் பேசுகிறார். இயங்கியல் விதிகள் பிசகின்றி செயல்படுகின்றன. ஒன்று அதன் எதிர்மறையாக மாறுகிறது.

ஜெயலலிதாவுக்கு, பெண் என்ற விதத்தில் அவமானத்தை எதிர்கொள்வது, இழிவுபடுத்தப்படுவது புதிதல்ல. நடிகராக, திருமணம் செய்து கொள்ளாத பெண்ணாக, அரசியல்வாதியாக நிறைய பார்த்துவிட்டார். தாங்கி நின்று விட்டார். அவர் கடந்து வந்த தூரத்தை, தமிழ்நாட்டின் மற்ற முதலாளித்துவ அரசியல்வாதிகள் கடந்து வரவில்லை என்பதற்கு இளங்கோவனின் ஆணாதிக்க ஆணவம் ஒரு சான்று. ஜெயலலிதாவும் ஆணாதிக்கக் கருத்துக்களின் கைதிதான், பிரதிநிதிதான் என்பதை பிறகு பார்க்கலாம்.
இளங்கோவன் என்ன சொன்னார் என்று தமிழக மக்களை குழப்புவதில் செய்தி ஊடகங்கள் ஒரு பங்காற்றியிருக்கின்றன. காங்கிரஸ் கட்சியினர் நடத்திய டாஸ்மாக் எதிர்ப்புப் போராட்டத்தில் பேசிய அவருடைய மிகவும் அநாகரிகமான சொற்களை செய்தி ஊடகங்கள் ஒரு முறை ஒளிபரப்பின. அதற்கு எதிர்ப்புக்கள் எழத் துவங்கிய பிறகு, தான் தவறாக எதுவும் பேசவில்லை என்ற அவருடைய சமாதானங்கள் ஒளிபரப்பப்பட்டன. தொலைக்காட்சி கேமிராக்கள் முன் தனது அநாகரிக சொற்களுக்கு விளக்கம் அளித்தபோது அவர், தான் கூட்டத்தில் பேசியதை திருப்பிச் சொல்லி, அப்படிச் சொன்னது தவறில்லை என்று  சொல்லவில்லை. கட்சிகளுக்கு இடையில் கள்ள உறவு என்று தான் சொன்னதை தவறாக புரிந்துகொண்டு விட்டனர் என்றுதான் சொன்னார்.

ஆக, தமிழ்நாட்டில் பலரும், இளங்கோவன், கள்ள உறவு என்று சொன்னதற்கு இவ்வளவு எதிர்ப்பா என்றும், இந்த எதிர்ப்பு அதீதம் என்றும் கருத வாய்ப்பு உருவானது. இளங்கோவன் சொன்னதை திருப்பிச் சொல்வதை முதலாளித்துவ ஊடகங்களே தவிர்க்கின்றன. தீப்பொறியும் இளங்கோவன் சொன்னதை திருப்பி இங்கு சொல்லப் போவதில்லை. சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.

இரண்டு அரசியல் தலைவர்கள் சந்திப்பை கள்ள உறவு என்று சொல்வதும் மிகவும் கண்டனத்துக்கு உரியது. சகித்துக் கொள்ள முடியாதது. கள்ள உறவு என்பது, அரசியலில் பயன் படுத்தப்படும் சொல்லாடல் அல்ல. பெண்ணை இழிவுபடுத்த, ஒடுக்கி வைக்க, காலம்காலமாக பயன்படுத்தப் படும் ஆணாதிக்கச் சொல்லாடல்தான்.

திருமணத்துக்கு அப்பாற்பட்ட ஆண் - பெண் உறவை கள்ள உறவு என்று பொதுப் புத்தி அறிந்து வைத்திருக்கிறது. திருமண உறவில் ஒரே ஒரு கூடுதல் அம்சம், சமூகத்தால் அங்கீகரிக்கப்பட்ட உடலுறவு. அது சமூகத்தால் அங்கீகரிக்கப்படாதபோது, கள்ள உறவு, என்று அறியப்படுகிறது. அது பெண்ணை இழிவுபடுத்த சொல்லப்படுவது. ஏனென்றால், திருமண உறவின் மேன்மையைப் பாதுகாக்க வேண்டியது பெண்ணின் பொறுப்பு. அப்படி பாதுகாக்காத பெண் நிந்திக்கப்படுவதுதான் இங்கு நியதி. இந்தச் சொல்லாடல்களில், கள்ளக் காதலன் இருப்பதுபோல் கள்ளக் கணவன் இருப்பது இல்லை. கணவன் கள்வனாக இருக்கலாம். அவனுக்காக ஓர் ஊரையே கூட எரிக்கலாம். சிலை வைப்பார்கள். ஆனால், கள்ளக் காதலன் கூடாது. ஊரை எரித்தவள் கற்புக்கரசி. பத்தினி. மற்றவள் பரத்தை. வீரமணி, கருணாநிதி என பலரும் பெருமை பேசும், திராவிடக் கலாச்சாரத்தின் முக்கியமான இரட்டைகள் இவை. இந்த அளவுக்கு ஆணாதிக்கக் கனம் கொண்ட ஒரு சொல்லாடலை இரண்டு வேறு பால் அரசியல்வாதிகள் சந்திப்பைப் பற்றி நக்கலாகச் சொல்லப் பயன்படுத்தும்போது, அதைத் தவறாகப் புரிந்து கொள்ளாமல் வேறு விதமாக புரிந்து கொள்ள என்ன இருக்கிறது? தான் பேசியதாக இளங்கோவன் சொல்வதே தவறு என்றால், அவர் உண்மையில் பேசியது படுகேவலமானது. எந்த நாகரிக வரையறைக்குள்ளும் அடங்காதது.

கள்ள உறவு என்றுதான் சொன்னேன் என்று இளங்கோவன் தப்பித்துவிட முடியாது. இளங்கோவனை விமர்சிப்பதால் ஜெயலலிதா தப்பிக்க வழி கிடைத்துவிடும் என்று கருதுவது அரசியல் சாதுரியமாக இருக்க முடியாது. கருணாநிதி முதல் வைகோ வரை இளங்கோவனை சந்தித்தும் அறிக்கை மூலமும் ஆறுதல் சொல்லும்போது தாங்கள் ஆணாதிக்கப் பிரதிநிதிகள், பெரியார் கருத்துக்களின் கல்லறை மீது தங்கள் அரசியல் கட்டிடத்தைக் கட்டுபவர்கள் என்பதையே உறுதிப்படுத்துகிறார்கள். உண்மையில் இவர்கள் இளங்கோவன் சொன்னதை மறைக்கப் பார்க்கிறார்கள். டாஸ்மாக் எதிர்ப்புப் போராட்டங்களைத் திசைத்திருப்ப அஇஅதிமுக, இளங்கோவன் சொன்னதை பயன்படுத்திக் கொள்கிறது என்பதால், இளங்கோவன் வெளிப்படுத்திய ஆணாதிக்கக் கருத்தின் தீவிரத்தை குறைத்து மதிப்பிட்டுவிட முடியாது. மக்கள் சார்பு போராட்டம் ஒன்றை நியாயப்படுத்த, தீவிரப்படுத்த, ஆதிக்கத் தன்மை கொண்ட ஒரு கருத்து ஒருபோதும் துணையாகாது. நெற்றிக் கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்று சொல்லிப் பழக்கப் பட்டவர்கள் நாம்.

இலங்கை தமிழர்கள் பிரச்சனைகள் பற்றி முதலமைச்சர் ஜெயலலிதா, பிரதமர் மோடிக்கு கடிதங்கள் எழுதுவது பற்றி சிறிலங்கா ராணுவ அமைச்சகத்தின் இணையப் பக்கத்தில் தவறாக குறிப்பிடப்பட்டிருந்தபோது, கருணாநிதி முதல், கட்சி பேதமின்றி அனைவரும் அதைக் கண்டித்தார்கள். எங்கே போனது அந்த நாகரிகம் என்று ஜெயலலிதா சரியாகவே கேள்வி எழுப்புகிறார். கூடவே, உங்களுக்கு எல்லாம் அரசியல் கணக்குதான், அதைத் தாண்டி வேறு கொள்கைப் பற்று இல்லாதவர்கள் நீங்கள் என்றும் சுட்டிக் காட்டுகிறார்.

இங்கும் ஒரு பெண்ணை தரக் குறைவாகப் பேசியதுதான் பிரச்சனையாகியிருக்கிறது. பிரச்சனையில் தொடர்புடைய இன்னொரு நபர் பிரதமர் மோடி. அவர் அவமானப்படுத்தப்பட்டதாக பெரிய காத்திரமான தீர்மானகரமான குரல்கள் பாஜகவினரிடம் இருந்து கூட எழவில்லை.
இளங்கோவனின் கருத்துக்கு எதிராக அஇஅதிமுகவினர் போராட்டம் என்ற பெயரில் நடத்திய அராஜக நடவடிக்கைகளும் இளங்கோவன் சொன்னதை நியாயப்படுத்தாது. இந்த முறைகளில் தமிழ்நாட்டில் யாருக்கும் உடன்பாடு இல்லை. இது இளங்கோவனை எதிர்கொள்ளும் வழிமுறை இல்லை. அவர்களுக்குத் தெரிந்ததை, அவர்களுக்குச் சொல்லப்பட்டதை, 2014 செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் செய்து பழக்கப்பட்டதை, அவர்கள் செய்தார்கள். இந்த அளவுக்குத்தான் தமிழ்நாட்டில் நாகரிகம் வளர்க்கப்பட்டிருக்கிறது. இங்குதான் ஜெயலலிதாவும் சிக்கிக் கொள்கிறார்.

 அஇஅதிமுகவினரின் சீற்றத்துக்கு தங்கள் அம்மாவுக்கு ஏற்பட்ட களங்கம் காரணம்அந்த தெய்வத்தாய்க்கு ஏற்பட்ட களங்கத்தைப் போக்க தொலைக்காட்சி காமிராக்கள் முன் அவர்கள் சீற்றம் வெளிப்படுத்தப்பட்டது
சட்டமன்றத்தில் அன்று திமுககாரர்களால் ஜெயலலிதா அவமானப்படுத்தப்பட்டபோது அஇஅதிமுககாரர்கள் இன்று கொதித்து எழுந்ததுபோல் எழவில்லை. அன்று அவர்கள் ஆட்சியில் இல்லாமல் போயிருக்கலாம். ஆனால் செல்வாக்கு இருந்தது. சில சட்டமன்றத் தொகுதிகள் கைவசம் இருந்தன. அஇஅதிமுக என்ற அமைப்பு அப்போதும் இருந்தது. அன்று இல்லாதது ஒன்றுதான். ஜெயலலிதா அன்று அம்மா இல்லை. அன்று அவர் வெறும் செல்வி ஜெயலலிதா. ஜெயலலிதாவைச் சுற்றிக் கட்டப்பட்டுள்ள அம்மா பிம்பமும் ஆணாதிக்கக் கருத்துகளை வலுப்படுத்தும் பிம்பம்தானே தவிர அவரைப் போற்றுவதற்கான பிம்பம் அல்ல. அம்மா என்று ஜெயலலிதாவை அழைப்பதன் அவர் மூலம் தன்னலமற்றவர், தன் மக்களுக்காக வாழ்பவர் என்று காட்ட முயற்சி செய்வார்கள் என்றால், அதையும் ஒருபோதும் தமிழக மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

அஇஅதிமுகவினர் கட்டியெழுப்பியுள்ள அம்மா சிறையில் இருந்து ஜெயலலிதாவும் விடுபட வேண்டியுள்ளது. ஆனால், அவர் தேர்ந்தெடுத்துள்ள அரசியல் வழியில் அது சாத்தியமும் இல்லை.

ஜெயலலிதாவை அரசியல்ரீதியாக எதிர்கொள்ள முடியும். ஏனென்றால், அவருடைய ஆட்சி முழுக்க முழுக்க மக்கள் விரோத ஆட்சி. இதற்கு முன்பும் அவருக்கு தமிழக மக்கள் அரசியல் பாடம் கற்பித்துள்ளனர். ஒரு முதலமைச்சராக அவர் மக்களுக்கு இழைத்த துரோகங்கள் அடிப்படையில் அவருக்கு தண்டனை அளித்தனர். அவர் பெண் என்பதற்காக அவரை தமிழக மக்கள் தண்டிக்கவில்லை. அவர் பெண் என்பதை பயன்படுத்தி எதிர்கொள்ள நினைப்பவர்கள் அரசியல் செயல்பாடுகளில் இருந்து நிரந்தர விடுமுறை பெற்றுக் கொள்ளலாம். அவர்கள் நவீன காலத்துக்கு, நவீன சிந்தனைக்கு பொருந்தாதவர்கள். ஜெயலலிதா ஆட்சி, அனைத்தும் தழுவிய மக்கள் விரோத, குற்றமய அலட்சிய ஆட்சி என்பது, அவரை பெண் என்ற விதத்தில் இழிவுபடுத்துவதை ஒரு போதும் நியாயப்படுத்தாது. முதலில், நமது அரசியல்வாதிகள் நாகரிகம் கற்றுக் கொள்ள வேண்டும். ஆணாதிக்க ஆணவக் கருத்துக்களில் இருந்து விடுபடுவது அடுத்த விசயம்.

தமிழ்நாட்டு அரசியல்வாதிகள், நாட்டின் பிற பகுதிகளில் பாஜககாரர்கள் பேசுவது போல் பேசிக் கொண்டிருக்க வேண்டியதில்லை. தமிழ்நாட்டின் ஜனநாயக வரலாறு வேறு.

பெண்ணுரிமைக் கருத்துக்கள் பற்றி பாரதி,   பெரியார் சொன்னவற்றை எத்தனை முறை தீயிலிட்டுச் சுட்டுச் சோதித்தாலும் அவற்றை சுட்டுப் பொசுக்கி விட முடியாது.

தாயும் குழந்தைகளும்

நரேந்திர மோடி உள்ளிட்ட மத்திய பாஜக அமைச்சர்கள், தமது செயல்பாடு பற்றி, ஆர்எஸ்எஸ் அமைப்பிடம், விளக்கம் தந்துள்ளனர். தாயிடம் குழந்தைகள் நடந்ததைச் சொல்வது தவறாகுமா எனத் தங்கள் செயலை நியாயப்படுத்தவும் செய்கின்றனர். ஆர்எஸ்எஸ் ஆட்சியைக் கட்டுப்படுத்துகிறது என்பதை, தேசியவாத இந்துவான மோடி ஒப்புக்கொள்ளும் போது, மதவாத பாசிசம் பகிரங்கமாக முன்வந்துள்ளது.

இந்தி தெரிந்திருக்காவிட்டால்... (நாடு தப்பித்திருக்குமா?)

டிஜிட்டல் உலகத்தின் வருங்காலத்தில், இனி, ஆங்கிலம், இந்தி மற்றும் சீன மொழி மட்டுமே செல்வாக்கு செலுத்தும் என்கிறார், நரேந்திர மோடி. பிரதமர், தம் தாய்மொழி குஜராத்தியாக இருந்தபோதும், தாம் இந்த அளவுக்கு முன்னேறியுள்ளதற்கு, தமக்கு இந்தி தெரியும் என்பதே காரணம் என்கிறார். மோடியின் கூற்று, இந்திதான் இந்தியாவின் மொழி, இந்தி கற்பவர்களே முன்னேற முடியும் என ஆணவமாகச் சொல்லும், இந்தித் திணிப்புதானே?

தோழர் காம்கோவின் கேள்விகள்

நிறைய தொலைக்காட்சி விவாதங்களில், நெறியாளர்கள் ஏடாகூடமாகக் கேள்விகள் கேட்கிறார்கள். நாடு தழுவிய வேலை நிறுத்தத்தின் குறைந்தபட்ச ஊதியம் ரூ.15,000 என்ற கோரிக்கையை, இடதுசாரி இயக்கங்களில் அந்த அளவுக்கு படி தரப்படுகிறதா எனக் கேட்டு, திசை திருப்ப சிறுமைப்படுத்த முயற்சிக்கிறார்கள். மடக்கிவிட்டதாக மகிழ்ச்சி அடையவும் வாய்ப்பு உண்டு. ரைஸ் வில்லியம்ஸ் என்ற அய்க்கிய அமெரிக்க நாட்டவர், லெனின் பேசியதாகச் சொன்ன ஒரு விஷயம் நமக்கு நினைவுக்கு வருகிறது. “தோழர் காம்கோவின் கேள்விகள், பத்து அறிவாளிகள் விடை அளிக்க முடியாததை விட அதிகமான கேள்விகளை ஒரு மடையனால் கேட்க முடியும் என்ற மூதுரையை எனக்கு நினைவுபடுத்துகின்றன.”
  
பிகாசஸ் குதிரை போல் தமிழக மக்கள்
ஜெயலலிதாவிடம் அடிபணிய மாட்டார்கள்

தமது ஆட்சியின் இறுதிக் கட்டத்தில் செப்டம்பர் 9, 10 சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தியுள்ளார் ஜெயலலிதா. சொத்துக் குவிப்பு வழக்கு தண்டனை, பிணை, பின் நீதிபதி குமாரசாமி தீர்ப்பால் விடுதலை என அடுத்தடுத்த கட்டங்களில் நகர்ந்த ஜெயலலிதா, ஆர்.கே.நகர் வெற்றிக்குப் பிறகும் உற்சாகம் குறைந்தே காணப்பட்டார். உச்சநீதிமன்ற மேல் முறையீடு பற்றிய கவலையும், தமிழக மக்கள் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை தம்மைத் தண்டிக்கிறார்கள் என்ற கவலையும், இயல்பானது தானே!

திரும்பவும், சட்டமன்ற 110 அறிவிப்புக்கள், மேசை தட்டல்கள், இப்போது 110க்கெல்லாம் பெரிய 110 ஆக சர்வதேச முதலீட்டாளர் மாநாடு, அதில் இரண்டு தினங்களில் ரூ.2.42 லட்சம் கோடி முதலீடு எனத் தயங்காமல் சொல்லி, தேர்தலுக்குத் தயாராகிறது அஇஅதிமுக. மத்திய அரசோடு இணக்கமான ஓர் அணுகுமுறையை ஜெயலலிதா எடுத்துள்ளார். சர்வதேச முதலீட்டாளர் மாநாட்டில் தமக்குப் பக்கத்திலேயே பாஜக மத்திய அமைச்சர்கள் பொன்.ராதாகிருஷ்ணனும், நிர்மலா சீத்தாராமனும் இருக்குமாறு பார்த்துக் கொண்டார்.

சிறகுகள் உள்ள குதிரை, முப்பரிமாண டிஜிட்டல் தொழில் நுட்பங்களோடு, ஜெயலலிதாவின் காலடிகளில் வணங்கி ஆசி பெற்றது. 2016ல், இந்த பிகாசஸ் குதிரைக்கு எம்எல்ஏ சீட் தந்தாலும், ஆச்சர்யப்பட ஏதுமில்லை.
தமிழ்நாட்டின் எதிர்க்கட்சிகள், ஆட்சியின் கடைசிக் காலத்தில் மாநாடு தேர்தல் நோக்கம் கொண்டது என எழுப்பும் விமர்சனத்தில், நிச்சயம் பொருள் உள்ளது. அதே போல் 2011 முதல் 2015 வரை போடப்பட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தத் தொகைகளில் 5.64% மட்டுமே யதார்த்தத்தில் முதலீடாக வந்துள்ளது என கருணாநிதி எழுப்பிய விமர்சனத்துக்கும், ஜெயலலிதா பதில் சொல்லக் கடமைப்பட்டுள்ளார். மத்திய அரசின் தொழில் கொள்கை மற்றும் மேம்பாட்டு துறை அறிக்கையின்படி பிரதமர் மோடி 26 நாடுகளுக்குப் போய் நாடு முழுவதற்கும் திரட்டிய அந்நிய நேரடி முதலீடு வெறும் ரூ.1.89 லட்சம் கோடி; அம்மா இரண்டே நாள்களில் திரட்டியது ரூ.2.42 லட்சம் கோடி என, அஇஅதிமுக துதிபாடிகளின் சவடாலை தமிழ்நாட்டு மக்கள் நிச்சயம் ரசிக்க மாட்டார்கள்.

முதலாளித்துவ எதிர்க்கட்சிகள் தாண்டி, பாட்டாளி வர்க்கக் கட்சி வேறு சில கேள்விகளை எழுப்பியாக வேண்டியுள்ளது. மூலதனம் முதலீடு எவ்வளவு வந்தாலும், அது பிரும்மாண்டமாக மறு உற்பத்தியில் ஈடுபடுவதுபோல், சுரண்டல் அடிப்படையிலான முதலாளி தொழிலாளி உறவையும் மறுஉற்பத்தி செய்யும். குறைந்த கூலி, நிரந்தரமற்ற, ஒப்பந்த, பயிற்சி வேலை வாய்ப்புகளே உருவாகின்றன.

மூலதனத்திற்கு என்ன சலுகைகள் தரப்படுகின்றன என்பதைத் தமிழக அரசு வெளிப்படைத் தன்மையுடன் தமிழக மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும். எவ்வளவு மூலதனம் வந்தது, என்னென்ன சலுகைகள் தரப்பட்டன, எவ்வளவு வேலை வாய்ப்பு எத்தகைய வேலை வாய்ப்பு உருவானது என்ற விவரங்கள் அனைத்தும் வெள்ளை அறிக்கையாய் வர வேண்டும். நோக்கியா ஃபாக்ஸ்கான் ஓடிச் சென்றதிலிருந்து தமிழக அரசு என்ன பாடம் எடுத்துக் கொண்டது, தொழிலாளர்களுக்கு என்ன பாதுகாப்பு செய்துள்ளது எனச் சொல்லியாக வேண்டும்.

குற்றச் செயல்களில், மக்களுக்குப் பாதகமான பிற விசயங்களில், தமிழகம் முதலிடம் பெற போட்டியிடுகிறது என்பதை தமிழக மக்கள் நன்கு அறிந்துள்ளார்கள். சர்வதேச முதலீட்டாளர் மாநாட்டில், ஜெயலலிதா, திரும்பவும் மின்மிகை மாநிலம் எனச் சொல்வது, விவசாயத்தையும் விளைநிலத்தையும் ஒழித்துக் கட்டி, தனியார் மின்நிறுவனங்களைக் கொழுக்க வைக்கும் முயற்சியே என்பதையும் மக்கள் அறிவார்கள்.

11.09.2015 தேதிய தினமணி தலையங்கம் கூசாமல் பொய் சொல்கிறது. ‘2.42 லட்சம் கோடி ரூபாய்க்கான முதலீடு வந்து சேரும் போது, ஒரு கோடி தமிழக இளைஞர்கள் வேலை வாய்ப்பு பெற்றிருப்பார்கள்.’ தினமணி நாளேட்டின் பொய்யை, அதே நாளில் அதே ஊடகக் குழுமத்தின் தி இந்தியன்  எக்ஸ்பிரசின் முதல் பக்கத்தில் டி.முருகானந்தம் என்ற செய்தியாளர் ரூ.2.42 லட்சம் கோடி முதலீட்டில் 4,70,065 வேலை வாய்ப்புக்கள் உருவாகும் என எழுதியதில் அம்பலமானது. சுமார் ரூ.2ணீ லட்சம் கோடி முதலீடு வந்தால், சுமார் 4தீ லட்சம் பேருக்கு வேலை என தமிழக அரசு சொல்லி, அதை தி இந்தியன் எக்ஸ்பிரசும் சொல்லும்போது, தினமணி கணக்கில் மட்டும் அது ஒரு கோடி பேருக்கு வேலை வாய்ப்பு என்று ஆகிறது.

தமிழக மக்கள், தினமணி போல் தமது துதிபாடிகளாக இருப்பார்கள் என ஜெயலலிதா, கருதி விடக் கூடாது. திமுக, தேமுதிக போன்ற எதிர்க் கட்சிகளின் பலவீனங்கள் தாண்டி, தமிழக மக்கள், தொழிலாளர்கள், விவசாயிகள், தங்களை மதிக்காத, தங்கள் நலன்களை மிதிக்கிற ஆட்சியை, 1996, 2006 போல் 2016லும் தண்டிக்க வாய்ப்புண்டு என்பதால் ஆட்சியாளர்கள் கவனமாக இருக்க வேண்டும்.   11.09.2015

பிரபல கன்னட எழுத்தாளர் பேராசிரியர் கல்புரகி படுகொலைக்கு
இகக மாலெ கண்டனம்

புது தில்லி, ஆகஸ்ட் 31

பிரபல கன்னட எழுத்தாளரும் ஹம்பி பல்கலை கழகத்தின் துணை வேந்தருமான பேராசிரியர் எம்எம் கல்புரகி படுகொலைக்கு இகக மாலெ கண்டனம் தெரிவிக்கிறது. தார்வாத்தில் உள்ள அவரது இல்லத்தில் அவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.

பேராசிரியர் கல்புரகி (வயது 77), அவரது பகுத்தறிவு கருத்துக்களுக்காக, மறைந்த யு.ஆர்.அனந்தமூர்த்திக்கு (அவரது மரணத்தை ஆர்எஸ்எஸ் அமைப்புகள் கொண்டாடின) ஆதரவாக இருந்ததற்காக, பஜரங் தள் போன்ற ஆர்எஸ்எஸ் அமைப்புக்களின் வசவுகளுக்கும் மிரட்டலுக்கும் இலக்காக இருந்தார். நரேந்திர தபோல்கர், கோவிந்த் பன்சாரேவுக்கு அடுத்து, பேராசிரியர் கல்புரகி, இந்துத்துவா அமைப்புக்களின் மிரட்டல்களுக்குப் பிறகு படுகொலை செய்யப்பட்ட மூன்றாவது பகுத்தறிவுவாதி; மூடநம்பிக்கை எதிர்ப்புப் போராளி.
உள்ளூர் பஜ்ரங் தள் தலைவர், பேராசிரியர் கல்புரகியின் படுகொலையை பாராட்டியிருக்கிறார். பகுத்தறிவுவாதி கே.எஸ்.பகவானுக்கும் இதே கதி நேரும் என்று எச்சரித்திருக்கிறார்.

சங் பரிவார் தீவிரவாதிகள் தொடர்பான வழக்குகள் மோடி அரசாங்கத்தால் பலவீனப்படுத்தப்படுவதால், அவர்கள் துணிச்சல் பெற்றுள்ளனர். தபோல்கர் படுகொலை பற்றிய மத்திய புலனாய்வுத் துறை விசாரணைக்கு உதவ போதுமான ஊழியர்களை பணிக்கு அமர்த்துவதை பாஜக தலைமையிலான மகாராஷ்டிரா அரசாங்கம் தாமதப்படுத்துகிறது. மோடி அரசாங்கமும் விசாரணை அமைப்புக்களும் டீஸ்டா செதல்வாத் போன்ற மதவெறி எதிர்ப்பு செயல்பாட்டாளர்களை துன்புறுத்தி வருகின்றன. பல்வேறு மதவெறி எதிர்ப்பு, முற்போக்கு செயல்பாட்டாளர்கள் சமூக ஊடகங்களில் சங் ஊழியர்களின் மிரட்டல்களுக்கு தொடர்ந்து ஆளாக்கப்படுகிறார்கள்.

பேராசிரியர் கல்புரகி படுகொலையில் துரிதமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் சங் தீவிரவாத அமைப்புக்களுக்கு நிதிவரத்து, பயிற்சி ஆகியவை பற்றி முழுமையான விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் மோடி அரசாங்கத்தின் உதவியுடன் தேசிய புலனாய்வு அமைப்பு சங் தீவிரவாத வழக்குகளை பலவீனப்படுத்துவதைத் தடுக்க நீதித்துறை தலையிட வேண்டும் என்றும் இகக மாலெ கோருகிறது.

கவிதா கிருஷ்ணன்
அரசியல் தலைமைக் குழு உறுப்பினர்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) விடுதலை

பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்து பொய்யிலேயே வாழ்ந்து வருபவர்களுக்கு, செப்டம்பர் 2ல், மெய்யாகவே அடி விழுந்தது
11.09.2015

பாரதிய ஜனதா கட்சியும், சங் பரிவாரின் அங்கமான பாரதிய மஸ்தூர் சங்கமும், மத்திய அரசாங்கம், மத்தியத் தொழிற்சங்கங்கள் முன் வைத்த கோரிக்கைகளில் சிலவற்றை ஏற்றுக்கொண்டு சிலவற்றைப் பரிசீலிக்க முன்வந்துள்ள போது வேலை நிறுத்தம் தேவையற்றது எனப் புலம்பினார்கள். 02.09.2015 தலையங்கத்தில் தினமணிதேவை வேலை, வேலை நிறுத்தம் அல்லஎன உபதேசம் செய்தது.

மோடியும் அருண்ஜெட்லி போன்ற மூத்த அமைச்சர்களும் கூட வேலை நிறுத்தக் கோரிக்கைகள் பற்றி ÷லை 19, ஆகஸ்ட் 26, 27 தேதிகளில், சங்கங்களோடு பேசிய பிறகு, வேலை நிறுத்தம் செய்தது நியாயம் அல்ல எனவும், முதன்மைப் பிரச்சனையான தொழிலாளர் சட்டத் திருத்த விசயத்தில் மத்திய அரசு, முத்தரப்பு பேச்சுவார்த்தைகள் மூலமே மாற்றம் வரும் என உறுதியளித்த பிறகு எப்படி வேலை நிறுத்தம் செய்யலாம் எனவும் தொலைக் காட்சி அறிவாளிகள் சிலர் ஆத்திரப்பட்டனர். வேலை நிறுத்தம் எப்படி நடந்தது எனப் பார்ப்பது, மோடி அரசைத் தொழிலாளர்கள் நம்பினார்களா இல்லையா என்பதைப் புலப்படுத்த நிச்சயம் உதவும்.

வேலை நிறுத்தம் எப்படி நடந்தது?

பலப்பல லட்சம் பேர் என சில கோடி பேர் வரை, நாட்டில் எல்லா திசைகளிலும், பல்வேறு துறைகளிலும் இந்த வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்டனர். ஒரு நாள் வேலை நிறுத்தத்தால் தேசத்தின் பொருளாதாரத்திற்கு ரூ.25,000 கோடி இழப்பு என தொழில் வர்த்தக அமைப்பினர் ஊளையிட்டனர். இது  மட்டுமே, வேலை நிறுத்தம், வெற்றிகரமாக, மூலதனக் கூட்டத்தின் மீது இடியாய் இறங்கியதைக் காட்டும் சான்று அல்லவா?

வங்கி, காப்பீடு என பொதுத்துறை மற்றும் தனியார் துறை நிதி தொழிலில் மட்டும் 20 லட்சம் பேர் வேலை நிறுத்தம் செய்தனர். பாதுகாப்புத் துறை தொழில்களில் 5 லட்சம் பேர் வேலை நிறுத்தம் செய்தனர். நிலக்கரி உள்ளிட்ட சுரங்கத் தொழில் நின்றது. மின்சாரம், எரிசக்தி, எண்ணெய் தொழில்கள், துறைமுகங்கள், தோட்டங்கள் வரை வேலை நிறுத்தம் பரவியது. அரசு துறைகளில் உள்ள நிரந்தரம் செய்யப்படாத தொழிலாளர்கள், ஒப்பந்தத் தொழிலாளர்கள், பொறியியல், சணல், ஆட்டோமொபைல் போன்ற எண்ணற்ற தொழில்களில் வேலை நிறுத்தம் நடந்தது. சாலைப் போக்குவரத்தும் பெரும்பாலான மாநிலங்களில் முடங்கியது. மேற்கு வங்கத்தில், கடுமையான ஒடுக்குமுறையை வேலை நிறுத்தம் சந்தித்தது. 1970களின் நடுப்பகுதியில் சித்தார்த்த சங்கர் ரே தொடுத்த பயங்கரத்தை இப்போது மமதா ஏவினார். நாட்டின் சில இடங்களில் எஸ்மா ஏவப்பட்டது. ஆனாலும் மீறப்பட்டது. இவ்வளவு பெரிய வேலை நிறுத்தத்தை ஆதரிக்கிறாரா எதிர்க்கிறாரா என ஏதும் சொல்லாமல் ஜெயலலிதா மவுனம் காக்க, சில்லறை அமைச்சர் ஒருவர் வேலை நிறுத்தம் மாநில அரசுக்கெதிராகவும் இருக்கும்போது, நாங்கள் எப்படி ஆதரிக்க முடியும் என முக்கி முனகி சொல்லி முடித்தார்.

நாடு தழுவிய வேலை நிறுத்தம் வெற்றி பெற்றது தெளிவு. நிலப் பறிப்பு சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் விவசாய சமூகமும், இடதுசாரி ஜனநாயக சக்திகளும் நடத்திய போராட்டங்களால், எழுந்த பிரும்மாண்டமான எதிர்ப்பால், மோடி அரசாங்கம் நிலப்பறி சட்டத்தில் பின்வாங்கியது. உற்சாகம் பெற்ற தொழிலாளர்கள், செப்டம்பர் 2 அன்று, நில உரிமைகள் போல் உழைப்பவர் உரிமைகளிலும் சமரசம் ஏதும் இல்லை என, சங் பரிவார் சதிகாரர்களுக்குச் செய்தி சொல்லி உள்ளனர்.

மோடி அரசு என்னதான் சொன்னது?

வேலை நிறுத்தத்தைத் தவிர்க்க முடியாது எனப் புரிந்து கொண்ட மோடி அரசு, தனது சங்பரிவார் குரு ஆர்எஸ்எஸ் மூலம், பிஎம்எஸ்சை குறைந்தபட்சம் செப்டம்பர் 2 வேலை நிறுத்தத்தை கைவிட வைக்க 27.08.2015 அன்று ஒரு பத்திரிகைச் செய்தி வெளியிட்டது. அந்த பத்திரிகைச் செய்தியை பேச்சுவார்த்தைகள் நடத்திய அமைச்சர்கள் குழு சார்பாக வெளியிட்டது. அதில் பின்வருவனவற்றைச் சொன்னது.
1.            சில வழிகாட்டுதல்கள் அடிப்படையில் குறைந்தபட்சச் சம்பளம் நிர்ணயித்து இந்தியா முழுவதும் பொருத்தப் பார்க்கிறோம். 2. சமூகப் பாதுகாப்பை அமைப்புசாராத் தொழிலாளிக்கு அமலாக்க வழி காண்கிறோம். 3. போனஸ் சட்ட தகுதி வரம்புகளை ரூ.3,500 என இருப்பதை ரூ.7,000 ஆகவும், ரூ.10,000  என இருப்பதை ரூ.21,000 ஆகவும் உயர்த்துகிறோம். 4. ஒப்பந்தத் தொழிலாளர்களுக்குக் குறைந்தபட்சச் சம்பளத்தை உத்தரவாதம் செய்கிறோம். 5. வருங்கால வைப்பு நிதி ஓய்வூதியம் குறைந்தபட்சம் ரூ.1,000 ஆக்குகிறோம். 6. தொழிலாளர் சட்டத் திருத்தங்களை முத்தரப்பு பேச்சுவார்த்தைகள் மூலம் மட்டுமே செய்வோம். மாநிலங்களுக்கும் அவ்வாறே அறிவுறுத்துகிறோம். 7. மாநில அரசாங்கங்கள் யூனியன் பிரதேச அரசாங்கங்கள் தொழிலாளர் சட்டங்களைக் கறாராகப் பின்பற்ற ஆலோசனை வழங்குகிறோம். மத்திய அரசு கறாராகக் கண்காணிக்கிறோம். 8. முத்ரா, மேக் இன் இந்தியா, ஸ்கில் இந்தியா மற்றும் நேஷனல் கேரியர் சர்வீஸ் போர்ட்டல் முன் முயற்சிகள் மூலம், வேலை வாய்ப்பைப் பெருக்கப் பார்க்கிறோம். 9. சிறப்பு அறிவோ/நேர்த்தியோ தேவைப்படாத துவக்க நிலை வேலைகளுக்கு நேர்காணல் ஒழித்துக் கட்டப்படும். வெளிப்படைத் தன்மையைக் கொண்டு வரவும், வேலைக்கு அமர்த்துவதை துரிதப்படுத்தவும் இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. 10. கடந்த சில ஆண்டுகளோடு ஒப்பிடும்போது, வெங்காயம் பருப்பு வகைகள் நீங்கலாக பண வீக்கம் ஆகக் குறைவாக உள்ளது. இந்த இரண்டின் விலையையும் கட்டுப்படுத்த அவசியமான நடவடிக்கை எடுக்கிறோம். காலியிடங்களை நிரப்பத் தடையில்லை, நிரப்ப சம்பந்தப்பட்ட துறைகள் தேவையான நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. தொழிலாளர்களின் வேலை, சம்பளம் மற்றும் சமூகப் பாதுகாப்பில் அரசு அக்கறை கொண்டுள்ளது. ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியப் பிரச்சனை பரந்த கலந்தாலோசனையைக் கோருகிறது; தேவை எனில், இந்தப் பிரச்சனைக்காக ஒரு குழு அமைக்கப்படும்.

தொழிலாளர் வர்க்கமும் தொழிற்சங்க இயக்கமும் மத்திய அரசின் முன்வைப்பை ஏன் ஏற்க மறுத்தனர்?

மத்திய அரசு, பற்றி எரிகிற பிரச்சனைகளுக்கு நேரடியான உடனடியான குறிப்பான பதில் தராமல் இழுத்தடிக்கவும் ஏமாற்றவும் பார்த்தது. தொழிலாளர் விரோதத் திருத்தச் சட்டங்களை அரசாங்கம் திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கைக்கு, முத்தரப்பு பேச்சு வார்த்தைகள் மூலம் தீர்வு காணலாம் என அரசு சொன்னது. விஷமே வேண்டாம் என நாம் சொல்லும் போது, விஷம் ஒரு கோப்பையா அல்லது ஒரு கரண்டியா என்பதை, அரசு தொழிலாளர்கள் மற்றும் முதலாளிகள் பேசி முடிவு செய்யலாம் என, எப்படியும் விஷம் அருந்துமாறு அரசு வலியுறுத்துவதை நாம் நிராகரித்துள்ளோம். இதில் அரசு இறங்கி வந்துள்ளதாகச் சொல்வது ஏமாற்றாகும்.

விலைவாசி குறைந்துவிட்டது, வெங்காயம் பருப்பு மட்டுமே பிரச்சனை என மோடி அரசு சொல்வது உண்மைக்குப் புறம்பானது. இப்படிச் சொல்வது குரூரமமான, வக்கிரமான கிண்டலாகும். குறைந்தபட்சச் சம்பளம், சட்டப்படி தந்துதான் ஆக வேண்டும். சட்டங்களை அமல்படுத்தித்தான் ஆக வேண்டும். இவற்றை உறுதி செய்வதாகச் சொல்ல மோடி அரசு, வெட்கித் தலை குனிய வேண்டும். வருங்கால வைப்பு நிதி ஓய்வூதியம் குறைந்த பட்சம் ரூ.1,000 ஆக்குவதை மன்மோகன் அரசு ஏற்கனவே ஒப்புக் கொண்டுவிட்டதை, மோடி அரசு இப்போது புதிதாகச் சொல்வது போல் சொல்ல முன்வருவது மோசடியாகும். போனஸ் தகுதி வரம்புதான் மாற்றப்பட்டுள்ளது. போனஸ் பணிக்கொடை உச்சவரம்புகள் நீக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை ஏற்கப்படவில்லை.

அங்கன்வாடி, சத்துணவு, ஆஷா போன்ற அரசுத் திட்டத் தொழிலாளர்களை அரசு தன் தொழிலாளர்களாக ஏற்றால், உடன் விளைவாய் சமூகப் பாதுகாப்புகள் வந்து சேரும். பொத்தாம் பொதுவாக, என்ன ஏது எவ்வளவு எப்போது எனச் சொல்லாமல் சமூகப் பாதுகாப்பு பற்றிப் பேசுவது ஏமாற்றே. வேலை வாய்ப்பிற்கு மோடி அரசு, கால வரையறையுடன் கூடிய எந்த உத்தரவாதமும் வழங்கவில்லை. அரசியல் சாசனத்தின் வழிகாட்டும் கோட்பாடுகளில் உள்ள சம வேலைக்குச் சம ஊதியம் என்பதையும், ஒப்பந்தத் தொழிலாளர் சட்ட மத்திய மாநில அரசுகளின் விதிகள்படியான சம வேலைக்கு சம ஊதியம் என்பதையும் கூட மோடி அரசு மறுக்கிறது. பரந்த ஆலோசனை, கமிட்டி போடுவது என்ற மோசடிகளை விட்டுவிட்டு, உடனடியாகச் சம வேலைக்குச் சம ஊதியம் வேண்டும் என்பதே, தொழிலாளர் வர்க்கத்தின் கோரிக்கையாகும். பொதுத் துறையில் அரசு பங்குகளை அகற்றக் கூடாது, கேந்திரத் தொழில்களில் அந்நிய நேரடி முதலீடு கூடாது என்ற நாட்டு நலனையும் இறையாளுமையையும் வலியுறுத்தும் கோரிக்கை பற்றி, மத்திய அரசு பதிலே சொல்லவில்லை.

இந்தியத் தொழிலாளர் வர்க்கத்தின் உற்பத்தித் திறன் கணிசமாக உயர்ந்துள்ளபோது, கூட்டப்பட்ட மதிப்பில் லாபத்தின் பங்கு வெகுவாக உயர்ந்து கூலியின் பங்கு வெகுவாகக் குறைந்துள்ளபோது, உழைப்பவர் எவரானாலும் மாதம் ரூ.20,000 குறைந்தபட்ச கூலி என்பதே நியாயமானதாகும். இதுவும் விலை உயர்விற்கு ஏற்ப மாற வேண்டும். சங்கங்கள் கூட்டு பேர அடிப்படையில், மாதம் ரூ.15,000 கோரின. இதற்கு மத்திய அரசு நேரடி பதில் சொல்லாமல், பிஎம்எஸ் மூலமாக சில மாநிலங்களில் சில வகை தொழிலாளர்களுக்கு ரூ.20,000 வரை குறைந்தபட்சச் சம்பளம் தரத் தயார் என்ற ஒரு செய்தியைப் பரப்பிவிட்டது. உண்மையில், அரசு இந்தப் பிரச்சனையில் திட்டவட்டமான குறிப்பான எந்த உத்தரவாதமும் தரவில்லை.
மொத்தத்தில் செப்டம்பர் 2 வேலை நிறுத்தம், அதற்கு முன்பு நடந்த பேச்சுவார்த்தைகள், மற்றும் 27.08.2015 தேதிய அரசின் பத்திரிகைக் குறிப்பு ஆகியவை, வேலை நிறுத்தக் கோரிக்கைகள் வெறும் தொழிற்சங்கக் கோரிக்கைகள் அல்ல, அவை, அரசியல் கோரிக்கைகள் என்பதைத் தெளிவுபடுத்திவிட்டன.

பால் கெட்டி என்ற அய்க்கிய  அமெரிக்கப் பெரும் பணக்காரர் ஒருவர், 100 டாலரை வங்கியிடமிருந்து வாங்கினால், அது உங்களுடைய பிரச்சனை, 100 மில்லியன் டாலர் கடன் வாங்கினால், அது வங்கியின் பிரச்சனை என்றார். இந்தியாவில், இன்று, நாட்டின் கார்ப்பரேட்டுகள் இயற்கை வளங்களை மனித வளங்களைச் சூறையாடுவதோடு நிற்காமல், அரசாங்க கஜானாவிலிருந்து வங்கிகளிடம் இருந்தும் அள்ளி அள்ளிக் கொள்ளையடிக்கிறார்கள். எஃகு துறை நிறுவனங்கள் மட்டும் ரூ.4.2 லட்சம் கோடி வங்கிக் கடன்களைத் திரும்பத் தரவில்லை. கடன் வாங்கிய 42% நிறுவனங்கள், வட்டி கட்டுவதை நிறுத்திவிட்டார்கள். கூடுதல் வட்டி விகிதத்திற்கு, மத்திய மாநில அரசுகள் சர்வதேச நிதி நிறுவனங்களிடம் வாங்கிய பணத்தை அசலும் வட்டியுமாக, ஒவ்வோர் ஆண்டும் ஆயிரமாயிரம் கோடிகள் கட்டுகின்றன. கண்ணுக்குத் தெரிந்து சிலர் கைகளில் செல்வம் குவிந்துள்ளபோது, நல்ல காலங்கள் கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு மட்டும்தான் என்பதை, இந்தியாவின் விவசாய சமூகமும், கருத்தாலும் கரத்தாலும் உழைப்பவர்களும் இனியும் ஏற்கத் தயாரில்லை.

உலகப் பொருளாதார நெருக்கடி முதலாளித்துவ நெருக்கடி இந்தியாவை எப்படி தொட்டுப் பார்க்கிறதோ, அப்படியே உலகம் முழுவதும் நடைபெறும் மக்கள் இயக்கங்களும் அவர்களின் கோரிக்கைகளும் கூட, இந்தியாவை நிச்சயம் தொட்டுப் பார்க்கத்தான் செய்கின்றன. அட்லாண்டிக் கடலின் இரண்டு பக்கங்களிலும், குறிப்பாக பிரிட்டனிலும் அய்க்கிய அமெரிக்காவிலும் சில முக்கிய மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. அவை வால் ஸ்ட்ரீட்டைக் கைப்பற்றுவோம் இயக்கம், குறைந்தபட்சச் சம்பளத்திற்கான இயக்கங்கள், சிக்கன நடவடிக்கைகளுக்கெதிரான இயக்கங்கள் ஆகியவற்றின் தொடர்ச்சியே ஆகும். இங்கிலாந்தின் தொழிலாளர் கட்சி, அய்க்கிய அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் செல்ல நாய்க்குட்டியாக பிரிட்டனை மாற்றி இருந்தது. இப்போது அந்த தொழிலாளர் கட்சியின் தலைமைப் பதவிக்கான முதன்மை வேட்பாளராக, ஜெரிமி கோர்பின் மாறி உள்ளார். அவர், பொது சேவைகள் நாட்டுடைமையாக்கப்பட வேண்டும், வெளிநாடுகளில் ராணுவ தலையீடுகள் கூடாது, வசதியானவர்க்குக் கூடுதல் வரி போட வேண்டும் எனக் கோரும், தெருப் போராளி ஆவார். அய்க்கிய அமெரிக்காவின் ஜனநாயகக் கட்சியில் குடியரசுத் தலைவர் வேட்பாளராக பெர்னி சேண்டர்ஸ், முயற்சி செய்கிறார். ‘என் மனதைப் பொறுத்தவரை, செல்வம் மற்றும் வருமான ஏற்றத்தாழ்வே, நம் காலத்தின் முதன்மையான தார்மீக/அறப் பிரச்சனையாகும். கீழ்நிலையில் உள்ள 90% மக்களின் கைகளில் உள்ளதற்கு நிகரான செல்வத்தை, உயர் 1%த்தின் பத்தில் ஒருவரே வைத்துள்ளார் என்பதில், ஏதோ ஆழமான தவறு உள்ளதுஎன, சேண்டர்ஸ் விஸ்கோன்சினில் 10,000 பேர் மத்தியில் பேசி உள்ளார்.

செப்டம்பர் 2 வேலை நிறுத்தம், நாட்டின் நிகழ்ச்சிநிரலில், மக்களை, அவர்களது கவுரவமான பாதுகாப்பான வேலையை, அவர்களது குறைந்தபட்சச் சம்பளத்தை, மய்யமான இடத்திற்குக் கொண்டுவந்து நிறுத்த முயன்றுள்ளது. அனைத்து வகை தொழிலாளர்களுக்கும், விவசாயிகளுக்கும் பதில் சொல்லாமல் ஆட்சியாளர்கள் மனம் போனபடி, இனி நடக்க முடியாது.
மக்கள் விருப்பங்கள் மக்கள் இயக்கங்கள் நச்சுப் பிரச்சாரங்கள் தாண்டி முன்னேறும்

இந்தியப் பெருமுதலாளிகள், கார்ப்பரேட் ஊடகங்கள், அறிவாளிகள், மத்திய மாநில அரசாங்கங்கள் ஆகியவற்றின் ஊதுகுழலான தினமணி எழுதிய 02.09.2015 தேதியதேவை வேலை, வேலை நிறுத்தமல்லதலையங்கம்கடுமையான தொழிலாளர் நலச் சட்டங்கள் இந்தியாவில் அந்நிய முதலீடுகள் வரவைத் தடுப்பதாக இருக்கின்றன என்பது மறுக்க முடியாத உண்மைஎன்றது. தன் வாதத்தைத் தானே பொய்யாக்கி, 11.09.2015 தேதியிட்ட தலையங்கத்தில் இரண்டு தினங்களில் ரூ.2.42 லட்சம் கோடி முதலீட்டை ஈர்த்ததற்கு ஜெயலலிதா அரசை மெச்சிப் பாராட்டி உச்சி குளிர்ந்துள்ளது! மறுக்க முடியாத உண்மைகள், தமிழ்நாட்டிற்கும் பொருந்தாது போலும்!
அடுத்து மேலும் விஷம் தோய்ந்த விஷமம் நிறைந்த ஒரு பொய்யைச் சொல்கிறது. ‘கோடிக்கணக்கான இளைஞர்கள் வேலைக்காகக் காத்திருக்கிறார்கள் என்பதையும், அவர்கள்  தற்காலிகப் பணியில் சேரத் தயாராக இருக்கிறார்கள் என்பதையும் நாம் மறந்துவிடக் கூடாது. பணி நிரந்தரம் ஓய்வூதியம் போன்றவற்றில் இன்றைய இளைய தலைமுறையினர்க்கு உடன்பாடு இருப்பதாகத் தெரியவில்லை.’ தின மணியின் மூலதன விசுவாசம், முதலாளியின் முடிவை தொழிலாளர்கள் குரல் என்பதாகச் சொல்லப் பார்க்கிறது. நிரந்தர வேலை, ஓய்வூதியம், சமூகப் பாதுகாப்பு வேண்டாம், சங்கம் வேண்டாம், சட்டம் வேண்டாம், மனம் போன போக்கில் சுரண்ட வேண்டும், சட்டமும் சர்க்காரும் தடுக்காமல் முதலாளிகள் விரும்பும்படி லாபம் சம்பாதிக்க விட வேண்டும் என தேசத்தின் செல்வங்களை, வருமானத்தை, தமக்குச் சாதகமாக மறுபங்கீடு செய்துகொள்ளப் பார்க்கும் கார்ப்பரேட்டுகளின், நவதாராளவாதக் குரலே தினமணியின் தலையங்கம். இவற்றை எல்லாம் தாண்டி மக்கள் இயக்கங்களும் வரலாறும் நிச்சயம் முன்னே செல்லும்.

செப்டம்பர் 2 போராட்டத்தில் ஏஅய்சிசிடியு, அவிகிதொச

கோவையில் நடந்த மய்ய சங்கங்களின் பேரணி, ஆர்ப்பாட்டத்தில் பிரிக்கால், சாந்தி கியர்ஸ் தொழிலாளர்கள், மாநகராட்சி தூய்மைப் பணித் தொழிலாளர்கள் என 800க்கும் மேற்பட்டோர் ஏஅய்சிசிடியு கொடிகளுடன் அணிதிரண்டனர். ஏஅய்சிசிடியு அகில இந்திய தலைவர் தோழர் எஸ்.குமாரசாமி உரையாற்றினார்.

சென்னையில் நகரத்திலும் அம்பத்தூரிலும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன. ஏஅய்சிசிடியு இணைப்பு சங்கங்களுடன். சுதந்திர தொழிற்சங்கங்களும் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றன. குடியிருப்பு பகுதிகளில் நடத்தப்பட்ட தீவிர பிரச்சாரத்தால், ஆயிரக்கணக்கான அமைப்புசாரா தொழிலாளர்கள் பணிக்குச் செல்லவில்லை.

திருவள்ளூர் மாவட்டத்தில் செங்குன்றம், சோழவரம், கும்மிடிபூண்டி, மாதவரம் ஆகிய  இடங்களில் ஏஅய்சிசிடியு, அவிகிதொச தோழர்கள் 500க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். நடைபாதை வியாபாரிகள் கடைகளை மூடி போராட்டத்தில் அணி வகுத்தனர்.

புதுக்கோட்டையில் கந்தர்வக்கோட்டை, கறம்பக்குடி, புதுக்கோட்டை, கீரனூர் ஆகிய மய்யங்களில் ஏஅய்சிசிடியு, அவிகிதொச தோழர்கள் மற்ற இடதுசாரி அமைப்புகளுடன் கூட்டாக மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு கைதாகினர். முந்திரி தொழிற்சாலைகளை மூட வேண்டிய நிர்ப்பந்தம் உருவானது.
நெல்லையில் 2 மய்யங்களில் நடந்த ஆர்ப்பாட்டங்களில் ஏஅய்சிசிடியு தோழர்கள் கலந்து கொண்டனர். தூத்துக்குடியில் கன்டெய்னர் லாரி தொழிலாளர்கள் ஏஅய்சிசிடியு தலைமையில் முழுமையான வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

திருச்சியில் துப்பாக்கித் தொழிற்சாலை ஒப்பந்தத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்தனர். ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்ட அனைத்து தொழிற் சங்கப் பேரணிக்கு ஏஅய்சிசிடியு மாநிலச் செயலாளர் தோழர் தேசிகன் தலைமை வகித்தார்.

சேலம், பள்ளிப்பாளையம், குமாரபாளையம், ஈரோடு, நாகர்கோவில், திண்டுக்கல், தஞ்சை, கும்பகோணம், கரூர் ஆகிய மய்யங்களில் கூட்டு ஆர்ப்பாட்டங்களில் ஏஅய்சிசிடியு மாநில நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். கரூர் மின்வாரிய அலுவலகத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தோழர் பால்ராஜ் கலந்து கொண்டனர். குளித்தலையில் பொது விநியோகத் திட்ட சுமை தூக்கும் தொழிலாளர்கள் கலந்துகொண்டனர்.
விழுப்புரத்தில் அவிகிதொச, ஏஅய்சிசிடியு தோழர்கள் 7 மய்யங்களில் மறியல் போராட்டம் நடத்தி 500க்கும் மேற்பட்டோர் கைதாகினர். மதுரையில் அவிகிதொச ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

விட்டுக் கொடுப்பீர்களா, பிரதமர் அவர்களே?

மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு,

விட்டுக் கொடுக்கச் சொல்லும் உங்கள் செய்திகளை தொலைக்காட்சியில், கைப்பேசியில் வரும் குறுஞ்செய்திகளில், பெரிய பெரிய அலங்கார தட்டி விளம்பரங்களில் அடிக்கடி பார்க்க நேரும் இந்தியப் பிரஜை எழுதிக் கொள்வது.

நான் நலமில்லை. நீங்கள் நலமாக இருப்பது தெரிகிறது.

2014 போல், 2015 உங்களுக்கு ராசியான ஆண்டாக அமையவில்லை. 2014ல் மாபெரும் வெற்றி. 2015 துவங்கியதில் இருந்து, நாட்டு மக்களின் அதிருப்தியின் வடிவத்தில் உங்களை ஏழரை விரட்டுகிறது. அளவுக்கு அதிகமாக தேர்தல் பிரச்சாரத்தில் பேசிவிட்டதன் விளைவை நீங்கள் அனுபவிக்கிறீர்கள் என்றே எண்ண வேண்டியிருக்கிறது.

2015 டில்லி தேர்தல்களில் நீங்கள் வாங்கிய அடி, மேற்குவங்க உள்ளாட்சித் தேர்தல்களிலும் உங்களைத் தொடர்ந்தது. வாய்ப் பேச்சிலேயே நிலப்பறி மசோதாவுக்கு ஒப்புதல் பெற்றுவிடலாம் என்று எதிர்ப்பார்த்தீர்கள். நாட்டு மக்கள் போராட்டங்கள் உங்கள் எண்ணத்தில் தண்ணீர் ஊற்றின. மண்டியிட்டீர்கள். மண்டியிட்டு எழுந்துகொள்ளும் முன்பே, நாடு முழுவதும் இருக்கிற நகர்ப்புற, நாட்டுப்புற, அமைப்பாக்கப்பட்ட, அமைப்பாக்கப்படாத தொழிலாளர்கள் உங்கள் ஆட்சியை குற்றவாளிக் கூண்டில் ஏற்றி கேள்வி கேட்டார்கள். அக்கம்பக்கமாக உங்கள் ஆதர்ச பூமியான குஜராத்தில் விவசாய நெருக்கடியால், வேலையின்மையால் கடுமையாக பாதிக்கப்பட் டுள்ள மக்கள், போராட்டத்தில் வீதிக்கு வரக் காத்திருந்த மக்கள், தங்கள் கோரிக்கைகளை முழுவதும் பிரதிபலிக்காவிட்டாலும், நெருக்கடி முற்றியதால், இட ஒதுக்கீடு என்ற கோரிக்கையில் வீதிக்கு வந்தனர். ஒரே பதவி, ஒரே ஓய்வூதியம் என்ற வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்திய ராணுவ வீரர்களின் போராட்டத்தின் முன் நீங்கள் அடிபணிந்த அழகு இருக்கிறதே, அப்படி ஓர் அழகு. நீங்கள் சாக்குபோக்கு காட்டியது கூட அவர்கள் மத்தியில் வேகவில்லை.

எப்படியோ, மக்கள் தொடர்பு நிறுவனங்கள் எழுதிக் கொடுப்பதும் அரசியல் யதார்த்தமும் வேறு வேறு என்பதை நீங்கள் போதுமான அளவு இப்போது புரிந்துகொண்டிருக்க வேண்டும்.

உங்கள் அரிதாரத்தின் அடுத்த சாயமும் சற்று வெளுத்தது. உங்கள் வெளிநாட்டுப் பயணங்களுக்கு ஓராண்டில் ஆகியுள்ள செலவு பற்றி லோகேஷ் பத்ரா என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேட்டிருந்த விவரங்களுக்கு கிடைத்துள்ள பதில் எங்களுக்குச் சற்று அதிர்ச்சியாகவே இருக்கிறது. நீங்கள் பத்து லட்ச ரூபாய் சூட் போடுபவர்தான். ஆனாலும், உங்கள் வெளிநாட்டுப் பயணங்களுக்கு ஓராண்டில் ரூ.37.22 கோடி செலவு என்ற செய்தி எங்களுக்கு அதிர்ச்சி தருகிறது. எங்களால் கோடி ரூபாய் என்பதை கேட்க முடியும், எழுதிப் பார்க்க முடியுமே தவிர, வாழ்நாளில் எப்போதும் மொத்தமாக பணமாகப் பார்க்க முடியாது.

அந்தச் செய்தி மேலும் சொல்கிற உள்விவரங்கள் தேநீர் வியாபாரியாக இருந்த ஒருவர் ஆடம்பர வாழ்க்கை வாழ இந்திய ஜனநாயகத்தில் இடம் இருக்கிறது என்பதைக் காட்டுகின்றன. ஆஸ்திரேலியாவுக்குச் சென்ற போது மட்டும் ரூ.8.91 கோடி செலவாகியுள்ளது. இதில் ஓட்டலில் தங்கியிருந்ததற்கு மட்டும் ரூ.5.60 கோடி செலவிடப்பட்டுள்ளது. நவம்பர் 14 முதல் 18 வரை அய்ந்து நாட்கள் அங்கு தங்கியிருக்கிறீர்கள். நாளொன்றுக்கு ஒரு கோடி ரூபாய்க்கும் மேல் செலவு செய்துள்ளீர்கள். அப்படி என்ன செலவு பிரதமர் அவர்களே? அருணாசலம் கூட இந்த அளவு செலவு செய்ய கஷ்டப்பட்டாரே. உங்கள் கூட வந்த அதானிக்கும் சேர்த்து செலவு செய்திருந்தால் கூட இவ்வளவு செலவாகியிருக்குமா?

நியூயார்க் சென்றிருந்தபோது ஓட்டல் அறை வாடகை ரூ.11.51 லட்சம் என்று அந்த விவரம் சொல்கிறது. என்ன இருக்கும் அந்த அறையில்? மான்டெக் சிங் அறையில் கழிப்பறை செப்பனிட ரூ.40 லட்சம் செலவு என்று விவரம் வந்தபோது, நீங்களும் சேர்ந்துதான் அது பற்றி கேள்வி எழுப்பினீர்கள். இப்போது இந்தச் செலவை எப்படி நியாயப்படுத்துவீர்கள்? (கர்நாடகா ஆளுநர் வாஜ÷பாய் வாலா பாஜககாரர். குஜராத் சட்டமன்றத்தில் சபாநாயகராக இருந்தவர். அவர் கூட சமீபத்தில் தனது வீட்டு மராமத்து பணிகள் செய்ய ரூ.6 கோடி செலவு செய்தாராம்). நீங்கள் எல்லாம் எங்கிருந்து வருகிறீர்கள்? உங்களையெல்லாம் வடிவமைக்கிற ஆர்எஸ்எஸ் ஏதோ கட்டுப்பாடான, கறாரான அமைப்பு என்று தோற்றம் மட்டும் தரப் பார்க்கிறது. ஆனால், உங்கள் அனாவசிய செலவுகளை அங்கீகரித்து உங்களுக்கு பாஸ் மதிப்பெண்கள் தரும் என்றால், அது என்ன கறார்? என்ன கட்டுப்பாடு?

வங்காள தேசத்துக்கு பயணச் செலவு ரூ.1.35 கோடி ஆகியிருக்கிறது. அதானி விமானம் தரவில்லையா? அல்லது அதானி தந்த விமானத்துக்கு அரசு பணத்தில் இருந்து கட்டணம் தந்தீர்களா? அங்கு ஓட்டலில் தங்கிய செலவு ரூ.19.35 லட்சம். இது நியூயார்க் அறை வாடகையை விட அதிகமாக இருக்கிறது.

வெளிநாடுகளுக்கு அரசு முறைப் பயணம் செல்லும்போது, அந்த நாடுகளில் உள்ள நமது தூதரகத்தில் தங்க முடியாதா? நம்மை விருந்தினராக அழைப்பவர்கள்தான் தங்குவதற்குக் கூட இடம் தர மாட்டார்களா? உணவு தர மாட்டார்களா? இது என்ன அரசியல் நடைமுறை? எங்கள் பணத்தில் அனுபவிக்கிறீர்கள் என்பதைத் தவிர வேறு எதுவும் இந்த விசயத்தில் எங்களுக்குப் புரியவில்லை.

உங்களுடைய இன்டர்நெட் செலவு ரூ.13.83 லட்சம் ஆனது என்கிறார்கள். நாங்கள் 10, 15 வருடங்கள் கூட இன்டர்நெட்டுக்கு அவ்வளவு செலவு செய்ய முடியாதே. நீங்கள் மட்டும் எப்படி இப்படி செலவு செய்தீர்கள்? செல்ஃபி எடுக்க செலவே ஆகாதே? செலவு செய்வதற்குக் கூட தனி திறமை தேவையோ?

எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாத அளவுக்கு நீங்கள் செலவு செய்திருக்கிறீர்கள். நீங்கள் செய்துள்ள இந்தச் செலவில் நாட்டின் ஒரு கிராமப்புற மாவட்டத்தின் கழிப்பறை தேவையை உங்கள் கணக்குப்படி கூட நிறைவு செய்ய முடியும். 11 லட்சம் கழிப்பறைகள் கட்ட ரூ.11 கோடிதான் தூய்மை இந்தியா திட்டத்தில் ஒதுக்கப்படுகிறது. தூய்மை இந்தியா என்று துடப்பக்கட்டையுடன் போஸ் கொடுத்தீர்களே தவிர, அதற்குப் பிறகு அந்த விசயத்தில் வேறு குப்பை எதுவும் உங்கள் தரப்பில் இருந்து கொட்டப்படவில்லை. தூய்மை இந்தியா திட்டத்தில் ஒரு கிராம பஞ்சாயத்து ரூ.20 லட்சம் செலவு செய்ய வேண்டும் என்று சொன்னீர்கள். இந்த எந்தத் தொகையும் நீங்கள் சில நாட்கள் செய்திருக்கிற செலவோடு, அந்த செலவு வகையினங்களோடு ஒப்பிட்டுப் பார்க்கவே முடியாததாக இருக்கிறது.

தலையை மட்டும் தண்ணீருக்கு மேல் வைத்துக் கொண்டு, எப்படியோ தாக்குப்பிடித்து, இவ்வளவு பிரச்சனைகளில் நாங்கள் வாழ்க்கை நடத்தும்போது, நீங்கள் எங்கள் பணத்தில் இருந்து நாளொன்றுக்கு ரூ.1 கோடி செலவு செய்துவிட்டு, எங்களிடம் இருக்கும் அற்பசொற்பத்தையும் பறிக்கும் கொள்கைகளை அமலாக்கிவிட்டு, ஏதோ கொஞ்சம் ஒட்டிக் கொண்டிருப்பதையும் விட்டுத் தரச் சொல்கிறீர்கள். இது நியாயமா? ஏமாற்று அரசியல் நடத்தும் உங்களைப் போன்றவர்களுக்காகவே பாரதி சொல்லி வைத்தானோ?
நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறமுமின்றி
வஞ்சனை சொல்வாரடி கிளியே
வாய்ச் சொல்லில் வீரரடி.

நீங்கள் வாய்ச்சொல் வீரரா? எரிவாயு மானியத்தை விட்டுத்தரச் சொல்லி எங்களைக் கேட்கும் நீங்கள், இந்த ஆடம்பர செலவுகளையெல்லாம் விட்டுக் கொடுக்க முன்வருவீர்களா? இனி இப்படி அனாவசிய, ஆடம்பர செலவு செய்ய மாட்டேன் என்று உறுதி தருவீர்களா? பிரதமர் பதவியில் அமர்ந்த முதல் ஆண்டிலேயே ஆடம்பரமாக, அனாவசியமாக செய்த செலவு அத்தனையும் பைசா கணக்குப் போட்டு கருவூலத்துக்கு திருப்பித் தருவீர்களா? அவ்வப்போது மனம் திறந்து பேசும் நீங்கள், உங்களுக்கான அன்றாட செலவுகள் என்ன, அதில் அரசு பணம் எவ்வளவு, உங்கள் சொந்தப் பணம் எவ்வளவு என்று மனம் திறந்து சொல்வீர்களா?

அப்பட்டமான மக்கள் விரோத கொள்கைகளின் ஆட்சிக்கு தலைமை தாங்கிக் கொண்டு, இது போன்ற செலவுகளையும் விட்டுக் கொடுக்க மறுப்பீர்களானால், கடைசியில் நீங்கள் விட்டுத் தந்தே தீர வேண்டிய ஒன்று உங்களிடம் இருக்கும். உங்கள் பிரதமர் பதவி.

இப்படிக்கு
உங்கள் தேர்தல் வாக்குறுதிகளை நம்பி ஏமாந்து போன
பல கோடி இந்தியப் பிரஜைகளில் ஒரு பிரஜை

அய்லான் குர்தியின் மரணத்துக்கு
அய்க்கிய அமெரிக்காவும் அய்ரோப்பாவும்தான் பொறுப்பு

துருக்கி கடற்கரையில் முகம் புதைந்து மடிந்த சிரிய நாட்டு அகதிக் குழந்தையே அய்லான் குர்தி. அவன் உடல் தரை ஒதுங்கும் முன்பே அவன் தாயும் சகோதரனும் கடலில் மூழ்கிச் செத்து விட்டார்கள்.

கடந்த சில ஆண்டுகளில் ஆசியாவிலிருந்து ஆப்பிரிக்காவில் இருந்து அய்ரோப்பாவிற்கு காலாகாலமாக மனிதர்கள் பயணம் செய்த மத்தியதரைக் கடல் ஆயிரமாயிரம்  பேர்களுக்கு ஜல சமாதி ஆகியுள்ளது. வடக்கு ஆப்பிரிக்காவிலிருந்து மேற்கு ஆசியாவில் இருந்து மக்கள் மேலை நாடுகளுக்கு குடியேற விரும்பித் தேர்வு செய்து செல்வது குறைவே. அவர்கள் போரால், வாழ வழி இல்லாமல் சொந்த நாட்டை விட்டு விரட்டப்படும் அகதிகள் ஆவார்கள்.

சிரியாவும் இராக்கும் தொன்மையான பாரம்பரிய நாடுகள். இதே பிராந்தியத்தில்தான் இஸ்ரேலும் ஈரானும் உள்ளன. அநியாயமாக அரபு மக்களை சொந்த மண்ணை விட்டு ஜியானிஸ்ட்கள் விரட்டி இஸ்ரேலை உருவாக்கியதிலிருந்தே இந்தப் பிராந்தியம் போர் மேகங்களால், பதட்டத்தால் சூழப்பட்டது. உலக வரலாற்றில் வினோதமான முறையில் யூத மதத்தினர்க்கு மேற்கு உலகம் தனி நாட்டை உருவாக்கித் தந்தது. நிதி மூலதனம் ஆப்பிரிக்கா மற்றும் ஆசிய எரிசக்தி வளங்கள் மீது கட்டுப்பாடு செலுத்த வழி செய்யும் புறக்காவல் நிலையமாக இஸ்ரேல் ஆனது. அன்றிலிருந்து இன்று வரை பாலஸ்தீனர்கள் அகதிகளாக்கப்பட்டுவிட்டனர்.

பாலஸ்தீனர்கள், ஈழத் தமிழர்கள், ஆப்கன், லிபிய, எரித்ரிய சிரிய அகதிகளின் வலியை பா.அகிலனின்பதுங்கு குழி நாட்கள்என்ற கவிதை, நம்மைக் கலங்கடித்து பதற வைத்து உணர்த்துகிறது.
நீங்கள் அறிவீர்கள் என்னை
கட்டப்பட்ட புனை கதை சுவடிக்குள்
சிறையிடப்பட்டது எனது வரலாறு,
உங்களுக்கு அறிவிக்கப்பட்ட நான்
உங்கள் தாழ்வாரங்களை நிரப்பும்
வேண்டப்படாத அசுத்த விருந்தினன்,
தேசங்களின் எல்லைகளைத்
திருட்டுத்தனமாய்க் கடக்கும்
கள்ளக் குடியேறி,
சமரசமின்றி இறப்பை ஏந்திச் செல்லும்
முரட்டுப் போராளி,
அறியீர்கள் நீங்கள்
வரலாற்றின் மூத்த வேர்களில்
எனக்கொரு வீடு இருந்ததை
கவர்ந்து,
எனது தெருக்கள் தூக்கிலிடப்பட்டதை.....

ஆசியர்களும் ஆப்பிரிக்கர்களும் மனித அலைகளாக, துருக்கியில் இருந்து கிரீஸ், லிபியாவிலிருந்து இத்தாலி, பால்கன் வழியாக அய்ரோப்பாவிற்குள் நுழைகிறார்கள். கடலுக்கு அடுத்து, கன்டெய்னர்களில் மூச்சுத் திணறி சாகிறார்கள். போதைப் பொருட்கள் ஆயுதங்கள் கடத்தல் தொழிலைக் காட்டிலும் அகதிகள் கடத்தல் இந்தப் பிராந்தியத்தில் பல பில்லியன் யூரோ தொழிலாகச் செழித்துள்ளது. 30,000 பேர் மனிதக் கடத்தல் தொழிலில் உள்ளனர்.

கதவுகளை மூடிய அய்ரோப்பா, அய்லான் குர்தி சாவுக்குப் பிறகு, மெல்லத் திறக்கிறது கதவுகளை. இந்த ஆண்டு இது வரை 3,66,100 பேர் நுழைந்துள்ளனர். இது 4 லட்சம் ஆகக் கூடும். அடுத்த ஆண்டு 4ணீ லட்சம் ஆகும்.
கிரீசில் 52%, ஸ்பெயினில் 50%, குரோஷியா 47%, இராலி 42%, பிரான்ஸ் 25%, ஸ்வீடன் பெல்ஜியம், பின்லாண்ட் 22%, ஹங்கேரி 20%, இங்கிலாந்து 16% என்ற அளவில் இளைஞர்கள் வேலை வாய்ப்பின்மை, பொருளாதார நெருக்கடி ஆகியவை வலதுசாரி அந்நியர் எதிர்ப்பு வெறியை விசிறி விடுகின்றன. உலகப் போர்கள், யூதப் படுகொலை ஆகியவற்றுக்குப் பிறகு, அய்ரோப்பிய நாகரிகத்தின் மிகப் பெரிய அறச்சிக்கல், இப்போது ஏற்பட்டுள்ளது.
அய்க்கிய அமெரிக்கா இன்று வரை, பெரிதாக ஏதும் செய்யவில்லை

அகதிகளில் பெரும் எண்ணிக்கையினர் சிரியா நாட்டினரே. அடுத்து வருவது ஆப்கானியர்கள். சுமார் 2 கோடியே 30 லட்சம் பேர் இருக்கிற சிரியாவில், 2011ல் புவி அரசியல் நோக்குடன் அய்க்கிய அமெரிக்க அய்ரோப்பிய ஏகாதிபத்தியங்கள் பஷார் அல் அஸ்ஸôத்துக்கு எதிராகத் துவக்கிய ஆட்சி  மாற்ற உள்நாட்டுப் போரில் 1ணீ கோடி பேர் வீடிழந்துள்ளனர். 4 லட்சம் பேர் மடிந்தனர். 4 ஆண்டுகளில் 40 லட்சம் பேர் அகதிகள் ஆகி உள்ளனர்

பெரும்பாலான சிரியா நாட்டு அகதிகள் துருக்கியில் உள்ளனர். போர் முடிந்தால் நாடு திரும்பலாம். துருக்கியில் நீடித்து வேலை பார்த்துத் தங்க முடியாது. அதனால்தான் அய்ரோப்பா நோக்கி ஓட்டம் எடுக்கின்றனர்.
ஏகாதிபத்தியம் பயங்கரவாதம் என்ற சுழலேணி வளர்ச்சி 21ஆம் நூற்றாண்டில் மனித குலம் சந்திக்கும் சவால். அய்க்கிய அமெ ரிக்கா ஆயுதமும் நிதியும் தந்து ஊட்டி வளர்த்த தான் தலிபான், அல் கொய்தா, அல் துஸ்ரா என்ற பயங்கரவாத அமைப்புக்கள். அய்க்கிய அமெரிக்காவுக்கு ஆதரவாகவே சவுதி அரேபியா, குவெத்தார், துருக்கி செயல்பட்டுள்ளன. ஆப்கன் ஆக்கிரமிப்பு, இராக் ஆக்கிரமிப்பு, லிபியாவில் கடாஃபி படுகொலை, சிரியாவில் ஆட்சி மாற்ற முயற்சி என அய்க்கிய அமெரிக்காவும் அய்ரோப்பாவும் கூட்டாகத் தோண்டிய கிணற்றிலிருந்து, இன்று அய்எஸ்அய்எஸ் (இசுலாமிய ஸ்டேட் ஆப் இராக் மற்றும் சிரியா) தோன்றியுள்ளது.

நிதி மூலதன ஏகாதிபத்திய உலகம், ஒரு பக்கம் இஸ்ரேலையும், மறுபுறம் சவுதி, குவெட்டார், துருக்கியையும் வைத்துக் கொண்டு, இசுலாமிய உலகில் சன்னி ஷியா மோதல்களை ஊக்குவிக்கிறது. ஈரானை சுற்றி வளைத்து அடக்க எடுத்த முயற்சி வெற்றி காணவில்லை. அலா வெய்ட் ஷியாவான அஸ்ஸôத் ஆட்சியையும் அகற்ற முடியவில்லை. இந்த ஏகாதிபத்தியத் தலையீட்டால்தான், அய்லான் குர்தி போன்ற ஆயிரமாயிரம் குழந்தைகள் மடிந்துள்ளனர்.

இகக(மாலெ) 9ஆவது காங்கிரஸ் ஆவணத்தின் சர்வதேச சூழல் தீர்மானம் பத்தி 4, இன்றைய அகதிகள் பிரச்சனையின் மூல வேரைச் சுட்டிக் காட்டுகிறது. “செப்டம்பர் 11அய் அடுத்து அய்க்கிய அமெரிக்கா தொடுத்த பயங்கரவாதத்துக்கு எதிரான போர் என அழைக்கப்படுவது (அதற்குப் பயங்கரவாதப் போர் எனப் பெயரை மாற்ற வேண்டும்), ஆசியாவிலும் ஆப்பிரிக்காவிலும் பல பகுதிகளுக்கு தொடர்ந்து பரவுகிறது. இப்போதும் பத்தாண்டுகளுக்கும் மேலாக, முதலில் ஆக்கிரமிப்புக்கு உள்ளான ஆப்கானிஸ்தான், இராக் இரு நாடுகளிலும் போர் தொடர்கிறது. பயங்கரவாதத்தை எதிர்கொள்வதாகவும் ஜனநாயகத்துக்கு உதவுவதாகவும் சொல்லி, அய்க்கிய அமெரிக்காவும் அதன் நேட்டோ கூட்டாளிகளும், இதனை புதிய புதிய சாக்குகளுடன் புதிய புதிய இலக்குகளுடன் ஒரு நிரந்தரப் போராக்கி விட்டனர்.

சதாம் உசேனைக் கொன்றுவிட்டு இராக்கை ஆக்கிரமித்த பிறகு, அய்க்கிய அமெரிக்க - நேட்டோ அச்சு லிபியாவைக் குறி வைத்து வலுவான தலைவராக இருந்த மும்மர் கடாபியைத் தீர்த்துக் கட்டியது. இப்போது சிரியாவில் ஆட்சி மாற்றம் கொண்டு வருவதில் மும்முரமாய் உள்ளது. அதே போல், அல் கொய்தா தலைவர் பின் லேடனை பாகிஸ்தானில் கொன்ற பிறகு, அய்க்கிய அமெரிக்காவும் அதன் பிரிட்டிஷ் பிரெஞ்சு கூட்டாளிகளும் ஆப்பிரிக்கா எங்கும் அல் கொய்தா ஆவிகளைக் கண்டுபிடிப்பதில் மும்முரமாய் உள்ளனர்.”
அயலான் குர்தியின் மரணத்துக்கு, அய்க்கிய அமெரிக்க, அய்ரோப்பிய ஏகாதிபத்திய ராணுவத் தலையீடே காரணம்.          12.09.2015

புத்தர் சாரதியாக இருந்திருந்தால்....

செப்டம்பர் 18, 2015 தேதிய பிரண்ட் லைன் இதழில் வெளியான வரலாற்றியலாளர் ரோமிலா தாப்பர் நேர்காணலில் இருந்து சில பகுதிகள்

தாராளவாத விழுமியங்களின் இழப்பு

கடந்த இருபத்தைந்து ஆண்டுகளில் இந்தியர்கள் மத்தியில் மாறுபட்ட கருத்துக்கள், கண்ணோட்டங்கள் பற்றிய சகிப்புத்தன்மையின்மை வளர்ந்து வருவதாக கருதுகிறீர்களா? தொடர்ந்து ஆரோக்கியமான விவாதங்கள் நடத்துகிற தொழில்முறை வரலாற்றியலாளர்கள் பற்றி நான் பேசவில்லை. ஆனால், வாதங்களில் ஈடுபடுகிற இந்தியர்களின் மரபு பற்றி என்ன கருதுகிறீர்கள்? வரலாற்றுரீதியான புரிதல் என்ற விதத்தில் இன்று அவர்கள் இல்லை என்று உணருகிறீர்களா?

நாடு சுதந்திரம் பெற்று அறுபது ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், தாராளவாத விழுமியங்கள் விரவிப் பரவியிருக்க வேண்டும்; அப்படி நடக்கவில்லை. மாறாக அவற்றை இழக்கிறோம் என்பது வருத்தமளிக்கிறது. தாராளவாத விழுமியங்களை போற்றுபவர்கள் இன்று மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே இருக்கிறார்கள். உண்மையில் அவர்கள் மிகச்சிறிய சிறுபான்மை. நாம் எதிர்கொள்கிற பிரச்சனைகள் பற்றி விமர்சனரீதியாக சிந்திக்க பெரும் பாலான மக்கள் தயங்குகிற போக்கு கவலை அளிக்கிறது. அவர்களுக்கு என்ன தரப்படுகி றதோ அதை ஏற்றுக்கொள்கிறார்கள். இளைஞர்கள் சுதந்திரமாக சிந்திக்க, அவர்களைச் சுற்றியுள்ள உலகத்தைப் பற்றி கேள்வியெழுப்ப கல்வி அவர்களை ஊக்குவிக்கவில்லை. அவர் களுக்குச் சொல்லப்படுகிற அனைத்தையும், ஒரு பகுத்தறிவு கண்ணோட்டத்தில் இருந்து  கேள்வி எழுப்பாமல், சிந்திக்காமல், அவர்கள் நம்புகிறார்கள். இது மிகவும் கவலையளிக்கிறது.

இணையதளத்தில் தேடிப் பார்த்து அங்கு என்ன கிடைக்கிறதோ அதை நம்பகமான பொருளாக கருதுவது ஒரு வகையான நம்பிக்கையாக இருக்கிறது.

ஆம். ஏனென்றால், எல்லாவிதமான மக்களும் இணையதளத்தில் பங்காற்றுகிறார்கள்; போதுமான ஆதாரங்கள் கொண்ட சிந்தனைமிக்க கட்டுரைகள் முதல் விவரங்கள் அற்றவை வரை இணையதளத்தில் பார்க்க முடிகிறது.

அங்கு தரக்கட்டுப்பாடு என்று ஏதும் இருப்பதில்லை.

அது அனைவருக்கும் கிடைக்கும்படி இருக்கிறது. தகவல் அனைவருக்கும் கிடைக்கும்படி இருந்தால் அதை பாராட்டலாம்; ஆனால், அது நம்பத் தகுந்ததா இல்லையா என்று யாரும் சொல்லவில்லை என்றால் அது ஆபத்துதான். ஆபத்து பற்றிய விழிப்புணர்வும் இல்லை. பள்ளிகளில் புத்திசாலித்தனமான கற்பித்தல் இருந்தால் அந்த விழிப்புணர்வு வரும்.

இணையதளத்தில் நீங்கள் எதையும் எழுத முடியும்; பதிவேற்றம் செய்ய முடியும். நீங்கள் செல்வாக்குமிக்கவர் என்றால், நிபுணத்துவம் இல்லாமலேயே, நீங்கள் கருத்துருவாக்கத்தை உருவாக்க முடியும்; வடிவமைக்க முடியும்; இந்திய வரலாற்றைப் படிப்பது தொடர்பாக வெளிநாடுகளில் இது தொடர்ந்து நடக்கிறது.

சமூக ஊடகங்கள் இப்போது மேற்கோள் காட்டப்படுகின்றன. இதற்கு முன்பு இந்த அளவு கவனத்தை அவை பெறவில்லை. இன்று அரசியல் விவாதமானாலும், வேறு எதுவானாலும் சமூக ஊடகங்கள் முன்னிற்கின்றன. சமூக ஊடகங்கள், இணையதளம், அச்சு மற்றும் தொலைக்காட்சி ஊடகங்கள் இன்று கருத்துருவாக்குபவையாக இருக்கின்றன. இளைஞர்கள் நல்ல புத்தகங்களைப் படிப்பது கவலை தரும் விதத்தில் குறைந்துவிட்ட நிலையில், அவை அவர்கள் மத்தியில் தாக்கம் செலுத்துபவையாக இருக்கின்றன. எனவே, வரலாற்றைப் படிப்பது என்றால் என்ன என்பதை விளக்க, வரலாறு என்பது யார் வேண்டுமானாலும் எல்லோரும் சொல்லும் கதையல்ல என்பதைச் சொல்ல, ஒரு வழிமுறை கொண்ட, ஓர் ஆய்வு வழிமுறை கொண்ட, விமர்சனரீதியாக கண்டறியும் வழி முறை கொண்ட ஒரு துறை என்பதைச் சொல்ல, இந்த நிறுவனங்களை பயன்படுத்துவது முக்கியமானது. வரலாறு பற்றி, வரலாறு பற்றிய எழுத்துக்கள் பற்றி, அதன் கண்டறியும் வழிமுறைகள், அது பற்றிய தத்துவார்த்த புரிதல்கள் பெறாமல், அது பற்றி ஏதும் சொல்வதற்கு தயவுசெய்து தயங்குங்கள்; பவுதிகவியலாளரின் கண்டுபிடிப்பு பற்றி உங்களுக்கு தெரியாது என்பதால் அதைப் பற்றிச் சொல்ல தயங்குவது போலவே தயவு செய்து தயங்குங்கள் என்று சொல்ல வேண்டி யிருக்கிறது. ஆனால், இன்று ஒருவருக்கு ஒரு விசயம் புரிகிறதோ இல்லையோ, ஒரு வரலாற்றியலாளரின் கருத்துக்களை மதிப்பிடும் உரிமை கோருகிறார்கள். அந்தப் புள்ளியில் இருந்து, அவர்களுக்கு உடன்பாடு இல்லையென்றால் அந்த வரலாற்றியலாளரை திட்டுகிறார்கள். இந்த உரிமை மறுக்கப்பட வேண்டும் என்று நான் சொல்லவில்லை - ஆனால், சுயமதிப்பீட்டில் ஓரளவு பணிவாக இருப்பது உதவியாக இருக்கும்.

புத்தர் சாரதியாக இருந்திருந்தால்

துவக்ககால இந்தியா: தோற்றம் முதல் கிமு 1300 வரை என்ற உங்கள் ஆய்வில், மகாபாரதப் போர் பற்றி நீங்கள் ஒரு கம்பீரமான வரி எழுதியிருக்கிறீர்கள். கிருஷ்ணனுக்குப் பதில் புத்தர் சாரதியாக இருந்திருந்தால், அர்ச்சுனனுக்கு வழங்கப்பட்ட அறிவுரை மாறுபட்டிருக்கும் என்று எழுதியிருக்கிறீர்கள். அது பற்றி விரிவாகச் சொல்ல முடியுமா?

பல வரலாற்றியலாளர்களும் எனது கருத்தில் உடன்படுவார்கள்; எனது வாதம் என்னவென்றால், பகவத் கீதை மவுரியர் காலத்துக்குப் பிறகு எழுதப்பட்டது. அப்போது புத்த, ஜைன மரபுகள் நன்கு நிறுவப்பட்டிருந்தன; முந்தைய பிராமண மரபுடனும், உருவாகிக் கொண்டிருந்த பகவத் போதனைகளுடனும் சைவப் பிரிவுகளுடனும் கூடி இருந்தன. கிமு முதல் ஆயிரமாண்டு நெடுக இந்த இரட்டைத் தன்மை தொடர்ந்தது. இலக்கண மேதை பதஞ்சலி, அவற்றின் உறவை பாம்புக்கும் கீரிக்கும் இடையிலான உறவுடன் ஒப்பிடுகிறார்; அவற்றுக்கிடையே புரவலர்களுக்கான, பின்பற்றுபவர்களுக்கான போட்டி இருந்தது. அசோகரின் கொள்கை, புத்தரின் போதனைகள் ஆகியவற்றுக்கு பகவத் கீதை போதனைகள் ஒரு வழியில் காரணம் என்று சில அறிஞர்கள் சொல்கிறார்கள். சில பிராமண எழுத்துகள், பிராமணர்களுக்கும், அவர்களால் நாத்திகர்கள், வேடதாரிகள், புத்தமதக்காரர்கள், ஜைன மதக்காரர்கள் என அழைக்கப்பட்ட வெவ்வேறு மதக் குழுக்களுக்கும் இடையில் நடந்த பொது விவாதங்கள் பற்றிய விமர்சனக் குறிப்பாகாதா?

எனவே, புத்தர் அர்ச்சுனனுடன் உரையாடியிருந்தால், அவர் என்ன சொல்லியிருப்பார்? இந்தப் போர் உண்மையிலேயே அவசியமா? நீ எதற்காகப் போரிடுகிறாய்? நீ ஒரு ராஜ்ஜியத்துக்காகப் போரிடுகிறாய். அப்படிச் செய்யும்போது நீ உன் உறவினர்களை கொலை செய்வாய் என்று சொல்லியிருப்பார். அந்த ராஜ்ஜியம் ஆளுகைக்கான சிறந்த வடிவமா என்று கூட அவர் கேட்டிருக்கலாம். பல கண சங்கங்கள்/தலைமைக் குழுக்கள், உறவுகள் அடிப்படையிலான சமூகங்கள் என பல அப்போது இருந்தன; புத்தர் அவர்கள் செயல்பாட்டு முறைபால் ஈர்க்கப்பட்டிருந்தார். துறவிகள் அமைப்புக்கு அதை மாதிரியாக பயன்படுத்தினார்.

கி.பி. அய்ந்தாம் நூற்றாண்டில் கூட, மகத மன்னன் அஜாதசத்ருவுக்கு எதிராகப் போரிட்ட கண சங்கங்களை ஆதரித்தார்.

வன்முறை, ஒரு குறிப்பிட்ட பிரிவு மக்களை அல்லது நிகழ்வை சார்ந்து இருக்கும் என்றால், அகிம்சை அனைவராலும் பின்பற்றப்பட வேண்டுமல்லவா என்று கூட அவர் கேட்டிருக்கக் கூடும். சத்ரிய சாதியின் தர்மம் தீமையை அழிப்பது என்பது கிருஷ்ணன் சொல்கிற செய்தி. சத்ரியர்களின் இரண்டு பிரிவினருக்கு, நல்லவர்கள், தீயவர்கள் என்ற இரண்டு பிரிவினருக்கு இடையில்தான் போர் நடக்கிறது. நல்லவர்கள் ஸ்வதர்மத்தை (வருணாசிரம தர்மத்தை) நிலைநாட்டுகிறார்கள். வருணாசிரம தர்மம் சொல்வதுபடி அவர்கள், அவர்கள் கடமையைச் செய்கிறார்கள். வன்முறையைத் தவிர்க்க மேலும் பேச்சுவார்த்தை நடத்தலாம் என்று புத்தர் சொல்லியிருக்கக் கூடும். இது போரை அவசிய மற்றதாகக் கூட ஆக்கியிருக்கும். அப்படி நடந்திருந்தால், மகாபாரதமே இருந்திருக்காது! அப்படியானால், இன்னொரு விசயம் இருக்கிறது - துன்பப்படுபவர்கள், தன்னை நம்புவர்கள் தன்னிடம் வந்தால், தான் அனைத்தையும் சரி செய்வதாக கிருஷ்ணன் சொல்கிறான். இதை பக்தி மார்க்கத்துடனும் பகவத மார்க்கத்துடனும் தொடர்புப்படுத்தலாம். ஒரு குறிப்பிட்ட கடவுள் மீது நம்பிக்கை வைப்பது, உங்கள் அனைத்து இடர்களையும் அந்தக் கடவுளிடம் உங்கள் சொந்த தெய்வத்திடம் சொல்வது, என்பதுதான் செய்தி. கடவுள்களின் இருத்தல் பற்றி புத்தருக்கு மாறுபட்ட கருத்துக்கள் இருந்திருக்கலாம். துன்பங்கள், அவற்றுக்கான காரணங்களை புரிந்துகொண்டு, அந்தப் புரிதலின் மூலம் ஒருவர் தீர்வை கண்டறியலாம்.

(நேர்காணல் செய்தவர் ரனபீர் சக்ரவர்த்தி)

அய்ந்தும் மூணும் எட்டு....
அம்மா சொன்னா மேசையைத் தட்டு....

சர்வதேச முதலீட்டாளர் மாநாடு, அதற்குப் பிறகு விடுமுறை என சில நாட்கள் இடைவெளிக்குப் பிறகு சட்டமன்றம் மீண்டும் கூடும். செப்டம்பர் 13 வரை சட்டமன்றத்துக்கு விடப்பட்ட விடுமுறை அரசு ஊழியர்களுக்கு, தமிழகத்தின் தனியார் நிறுவன ஊழியர்களுக்கும் கிடைக்கும் என்று விதி 110ன் கீழ் ஜெயலலிதா அறிவிப்பு.... வேலை இழந்த அந்த ரெனால்ட் நிசான் தொழிலாளி திடுக்கிட்டு எழுந்தார். அவர் கண்டது கனவு. வெறும் கனவு. நிரந்தர விடுமுறை பெற்றுவிட்ட தொழிலாளி அவர்.

இவர்களைப் போன்ற உழைக்கும் மக்கள் பிரச்சனைகள் பற்றி எதுவும் பேசாமல், விதி 110ன் கீழ் அறிவிப்புகளை வெளியிடுவதை மட்டுமே விதியாகக் கொண்டுள்ள ஜெயலலிதா ஆகஸ்டு 31 அன்று தமிழ்நாட்டில் புதிதாக 16 வட்டங்கள் ரூ.16 கோடி செலவில் உருவாக்கப்படும் என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் என்றவுடன் அதிமுகவினர் மேசை தட்டினார்கள். இதன் மூலம் தற்போது தமிழ்நாட்டில் செயல்பட்டுவரும் 269 வட்டங்களுடன் புதிய வட்டங்கள் சேர்த்து 285 ஆக அதிகரிக்கும் என்று ஜெயலலிதா வாசிக்க, அதற்கும் மேசையைத் தட்டினார்கள். புதிய வருவாய் கோட்டங்கள் 5 உருவாக்கப்பட்டு வருவாய் கோட்டங்களின் எண்ணிக்கை 80லிருந்து 85 ஆக உயரும் என்றார். கூட்டல் பெருக்கல் கணக்குக்கும்கூட மேசை தட்டும் மேதாவிகள். புதிய வட்டங்கள் உருவாக்குவது இருக்கட்டும். அதற்கேற்ப ஊழியர்கள், உள்கட்டுமான வசதிகள் செய்யப்படுமா? புதிதாக உருவாக்கப்பட்ட பல தாலுகாக்கள் தனியான அலுவலகங்கள் இல்லாமல் தத்தளித்துக் கொண்டிருக்கின்றன

அனைத்துத் துறைகள் சம்பந்தப்பட்ட அறிவிப்புகளையும் ஜெயலலிதாவே விதி 110ன் கீழ் அறிவித்துவிட்டு, அவையைவிட்டுக் கிளம்பி விடுகிறார். அந்தந்த துறை அமைச்சர்களுக்கு அம்மா பற்றி புகழ் பாடுவதும் எதிர்த்தரப்பில் உள்ளவர்களை நக்கல் நய்யாண்டி செய்வதும் மட்டுமே வேலை. என்ன கேள்வி கேட்டாலும் அதற்கு ஏதோ ஒரு பதிலைச் சொல்லிவிட்டு, மறக்காமல் அம்மா பற்றி பாடாமல் அமர்வதில்லை அமைச்சர்கள்.

மாற்றுத் திறனாளிகளுக்கு ஓய்வூதியம் வழங்கப்படுவதில், அவர்கள் அநாதைகள், ஆதரவற்றவர்கள் என்று பிரித்துப் பார்த்து தரப்படுகிறது, இது சரியல்ல என்று எதிர்க்கட்சி உறுப் பினர் ஒருவர் கூறியதற்கு, சமூக நலத்துறை அமைச்சர் வளர்மதி, அநாதைகள், ஆதரவற்ற வர்கள் என்று ஏன் பிரித்துப் பார்க்கிறீர்கள், தனக்கு யாரும் இல்லை என்று விண்ணப்பித்தால் அவர்களுக்கு ஓய்வூதியம் தரப்படுகிறது, இந்த அரசு தகுதியானவர்களுக்கு ஓய்வூதியத்தை வழங்குகிறது, என்றார்.

50 சதவீத ஊனம் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு மாதம் 1,000 ரூபாய்தான் ஓய்வூதியமாக தரப்படுகிறது. அந்த ஆயிரம் ரூபாயைப் பெற அவர் அநாதையாக, ஆதரவற்றவராக இருக்க வேண்டும் என்கிறது இந்த கருணைத் தாய் ஆட்சி! மாற்றுத் திறனாளிகள், யாரையாவது சார்ந்துதான் வாழ முடியும். யாருடைய உதவியும் இல்லாமல் எப்படி அவர்கள் இயங்க முடியும்? அப்படி யாராவது அவர்களுடன் இருந்தால் அந்த மாற்றுத் திறனாளிக்கு இந்த அற்ப ஆயிரம் ரூபாயும் கிடையாதாம்.

முதியோர் ஓய்வூதியம் பெற அவர்கள் ஆதரவற்றவர்களாக இருக்க வேண்டும் என்கிறது ஜெயலலிதா அரசு. எல்லா வசதிகளையும் அனுபவித்துக் கொண்டிருக்கும் அமைச்சர்களுக்கும் எம்எல்ஏக்களுக்கும் ரூ.55,000 சம்பளம். அவர்கள் குடும்பத்திற்கே இலவச சிறப்பு மருத்துவ சிகிச்சை. பேருந்திலும் ரயிலிலும் அவருக்கும் அவர் கூட செல்பவர்க்கும் கட்டணம் கிடையாது. சட்டசபை கூட்டத்திற்கு, கமிட்டி கூட்டங்களுக்கு வந்தால் ஒரு நாளைக்கு படி ரூ.500. அதுவும் கூட்டத்திற்கு முன் இரண்டு நாட்களுக்கும் கூட்டம் முடிந்தபின் ஒரு நாளைக்கும் அந்த படி உண்டாம். இலவச தொலைபேசிக் கட்டணம். பதவி போன பின்பும் சலுகைகள். ஓய்வூதியம். சட்டமன்ற உறுப்பினர்கள் குடும்பத்தோடு சலுகைகள் அனுபவிப்பார்கள். மாற்றுத் திறனாளிகளும் முதியோர்களும், கணவனை இழந்த பெண்களும் துணையை இழந்த பெண்களும் ஆதரவில்லாமல் அநாதையாக இருந்தால்தான் மாதம் 1,000 ரூபாய் பெறுவார்கள். அதைப் பெறுவதற்குள் பலருக்கு ஆயுள் முடிந்துவிடும்.

கண் பார்வையற்றவர்கள் இந்தத் திட்டத்தின் கீழ் உதவி பெற முடியாது. ஆனால், கண் பார்வையற்றவர்களுக்காக பேருந்து நிலையங்களில் அவர்கள் செல்ல வேண்டிய பேருந்துகளை அறிந்து கொள்வதற்காக ஒலி எழுப்பி எச்சரிக்கை செய்யும் கருவி பொருத்தப் போகிறோம் என்கிறார் அமைச்சர் வளர்மதி. பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் பஸ்ஸில் ஏறிச் செல்ல பண உதவி தர மாட்டார்களாம். பஸ் வருவதை அறிவிக்க கருவி பொருத்தப் போகிறார்களாம். என்னவொரு சீரிய திட்டம்.

மாற்றுத் திறனாளிகளோ, முதியவர்களோ தகுதியானவர்களுக்கு உதவித் தொகை தரப்படுகிறது. நலிவடைந்த ஒருவர் உதவித் தொகை பெறுகிறார் என்றால் அவர் பொருளாதாரரீதியாக உயரும்போது உதவித் தொகை நிறுத்தப்படுகிறது. அதே நேரத்தில் மற்றொரு நலிவடைந்த ஒருவருக்கு ஓய்வூதியம் தரப்படுகிறது. இது அரசின் கடமை. இது ஒரு தொடர் திட்டம்என்கிறார் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார். வயதானவர்களுக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கும் அவர்களால் பொருளீட்ட முடியாது என்பதால்தான் ஓய்வூதியமே. பின் அவர்கள் எப்படி பொருளாதாரரீதியாக உயர்வார்கள்? அவர்களை பொருளாதாரரீதியாக உயர்த்த இந்த அரசு அப்படி என்ன செய்துவிட்டது? கோடி கோடியாய் கொள்ளையடித்துச் சம்பாதிக்கும் அதானி போன்ற பெருமுதலாளிகளுக்கு அரசு சலுகைகளை, மானியங்களை வழங்குகிறது. ஜெயலலிதா போகும் இடமெல்லாம் கட்அவுட்டும் குத்தாட்டமும் வைத்து மக்கள் பணத்தை கரியாக்குபவர்கள், சிக்கன நடவடிக்கை என்று சொல்லி தமிழ்நாட்டில் உள்ள 2,74,000 மாற்றுத் திறனாளிகளுக்கு சமூக நலத்துறை மூலம் தரப்படும் ஓய்வூதியத்தை ஒழித்துக் கட்டுகிறார்கள்.

ரூ.63,000 கோடிக்கு அதிகமான மூதலீடுகளைக் கொண்ட 11 லட்சம் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள், 60 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பையும் கொடுத்து தமிழ்நாட்டில் இயங்கி வருகின்றன, இந்தியாவிலேயே முதல் மாநிலமாக தமிழகம் விளங்குகிறது, சென்னை கிண்டி தொழிற்பேட்டையில் ரூ.100 கோடி மதிப்பீட்டில் அடுக்குமாடி தொழில் வளாகம் அமைக்கப்படும் என்று பெருமை பேசுகிறார் ஜெயலலிதா. நோக்கியா போன்ற நிறுவனங்கள் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களை வீட்டுக்கு அனுப்பி விட்டதால் அவர்கள் குடும்பங்கள் வீதியில் நிற்பது பற்றி மவுனம் காக்கிறார்.

பள்ளிக் கல்வி மற்றும் உயர் கல்வி மானியக் கோரிக்கையில் அதற்கு ரூ.100 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது, இதற்கு ரூ.50 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது, தனியார் பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீட்டில் மாணவர் சேர்க்கை ÷லை 31 வரை 2 லட்சத்து 17 ஆயிரத்து 43 மாணவர்கள் பயன் அடைந்துள்ளனர் என்று பட்டியல் வாசித்தார்கள் அமைச்சர்கள். ஆனால், நடைமுறையில், பல பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் முறையான கட்டிடங்கள் இல்லாமல் கல்யாண மண்டபங்களில் இயங்குகின்றன. பல பள்ளிகள் அடிமட்ட வேலைகளைப் பார்க்க ஊழியர்களே இல்லை. பல அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்களே சம்பளம் கொடுத்து தினக் கூலித் தொழிலாளர்களை நியமித்து துப்புரவுப் பணியை செய்துகொள்கிறார்கள். அரசுப் பள்ளிகளில் எழுத்தர்கள் வேலையை ஆசிரியர்களே பார்க்கும் அவல நிலை உள்ளது. பல பாடங்களுக்கு ஆசிரியர்களே கிடையாது. தமிழ் ஆசிரியர்கள் இல்லாமல் தமிழ் பாடம் படிக்க வழி இல்லா நிலையில் தமிழ்நாட்டு மாணவர்கள் உள்ளனர். 25 சதவீத இட ஒதுக்கீட்டில் பல பள்ளிகள் மாணவர்களைச் சேர்ப்பதேயில்லை. அப்படியே சேர்த்தாலும் மாணவர்களிடம் கட்டாயமாக காசைப் பிடுங்கிக் கொள்கின்றன கல்வி நிறுவனங்கள். அந்த மாணவர்களை ஒதுக் கியே வைத்து பாடம் நடத்தும் அவலம் நடக் கிறது. அய்ந்தாண்டு ஆட்சி முடியும் தருவாயில் இன்னும்கூட இலவச மடிக்கணினி, சைக்கிள் போன்றவை தங்களுக்கு கிடைக்கவில்லை என்று தினமும் மாணவர்கள் போராட்டங்கள் நடக்கின்றன. பகுதி நேர ஆசிரியர்கள் கொண்டு பல பள்ளிகளில் பாடங்கள் நடத்தப்படுகின்றன. அவர்களுக்கு ரூ.2,000 தொகுப்பூதியமாக வழங்கப்படுகிறது. அது இனிமேல் ரூ.4,000 ஆக வழங்கப்படும் என்கிறார் அமைச்சர் வீரமணி. அது எப்போது முதல் அமலாகும் என்று சொல்லவில்லை. இந்த 4,000 ரூபாய்க்காக அந்த ஆசிரியர்கள் நாய் படாத பாடு பட வேண்டும். பற்றாக்குறை வருமானத்திற்கு வேறு வேலைக்கும் அவர்களால் செல்ல முடியாது. இதையெல் லாம் மறைத்துவிட்டு இந்தியாவிலேயே கல்வியின் வளர்ச்சிக் குறியீட்டில் ஜெயலலிதாவின் ஆளுமை திறனால் தமிழகம் முதலிடம் வகிக்கிறது என்று வெட்கமில்லாமல் பேசுகிறார்கள்.

செப்டம்பர் 2 பொது வேலை நிறுத்தத்திற்கு ஆதரவாக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஒன்று சேர்ந்து கோரிக்கை வைத்தார்கள். இது தேர்தல் நேரம் என்றபோதும் இந்தியா முழுவதும் மோடி அரசின் மக்கள் விரோத, தொழிலாளர் விரோதக் கொள்கைகளுக்கு எதிராக மக்கள் மத்தியில் எழுந்துள்ள எதிர்ப்பலையால் தமிழகத்தில் உள்ள எதிர்க்கட்சிகள் அனைத்தும் சட்டமன்றத்தில் பொது வேலை நிறுத்தத்திற்கு ஆதரவாக குரல் எழுப்பி, தலைமைச் செயலகத்தின் முன் மறியல் நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. தலைமைச் செயலகத்தின் முன் மறியலில் ஈடுபட்ட எதிர்க் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களைக் கூட ஜெய லலிதாவின் காவல்துறை கண் மூடித்தனமாக தாக்கியது. எந்த அளவிற்கு ஜெயலலிதாவின் ஆட்சியில் ஜனநாயகம் உள்ளது என்பதற்கும் மோடி அரசுக்கு ஜெயலலிதாவின் ஆதரவு எந்த அளவுக்கு உள்ளது என்பதற்கும் இந்த நிகழ்ச்சி ஒரு சான்று. நில அபகரிப்பு சட்டத்தை  ஆதரித்த ஜெயலலிதா, நாடு முழுவதும் எழுந்த எதிர்ப்பால் மோடி அந்தச் சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என்று அறிவித்த பின்னர், சத்தம் காட்டாமல் இருக்கிறார்.

திருநெல்வேலி மாநகராட்சியில் 1,40,216 குடியிருப்புகளில் நாளொன்றுக்கு 180 மெட்ரிக் டன் திடக் கழிவுகள் சேகரிக்கப்பட்டு  தாமிரபரணியில் கொட்டப்படுகின்றன. இறைச்சிக் கழிவுகளும் கொட்டப்படுகின்றன. 81 இடங்களில் நிமிடத்திற்கு 11 லட்சம் லிட்டர் கழிவு நீர் தாமிரபரணி ஆற்றில் கலக்கிறது. பவானி மற்றும் காவேரி ஆற்றிலும் சாக்கடை கழிவுகள், தனியார் ஆலைக் கழிவுகள் கலக்கின்றன. அதை உடன் தடுக்க நடவடிக்கை வேண்டும் என்று எம்எல்ஏ தங்கவேல் எடுத்து கூறியதற்கு அமைச்சர் வெங்கடாச்சலம், தமிழக மாசுக் கட்டுப் பாட்டு வாரியம் மிகச் சிறப்பாகச் செயல்பட்டு கண்காணித்து வருகிறது, ஆறுகளில் கழிவு நீர் கலக்கவில்லை என்றார். உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி, தமிழகத்தில் அனைத்துப் பகுதிகளிலும் சீரான குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. தேர்தலை மனதில் கொண்ட எதிர்க்கட்சியினர் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள் என்று கூறி முழுப் பூசணிக்காயை சோற்றுக்குள் மறைக்க முயற்சிக்கிறார்.
தேர்தல் நேரம் என்பதால் எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டங்கள் நடத்துகின்றன என்று அதிமுக அமைச்சர்கள் சொல்கிறார்கள். அதே தேர்தல் நேரம்தான் அம்மாவை வெங்காய விலை பற்றியும் ஒக்கேனக்கல் பரிசல் விபத்து, விழுப்புரம் ரயில் விபத்து, யானைத் தாக்குதல் பற்றியும் அறிக்கை விட வைக்கிறது. கிலோ 70 ரூபாய்க்கு விற்கும் வெங்காயத்தை பண்ணைப் பசுமைக் கடைகள் மூலம் ரூ.55க்கு கிடைக்க ஏற்பாடு செய்துள்ளேன் என்று அறிக்கை விடுகிறார். தமிழ்நாட்டில் எத்தனை பண்ணைப் பசுமைக்கடைகள் உள்ளன? எல்லாரும் அங்கு போய் வாங்க முடியுமா? அது பற்றியெல்லாம் கேட்கக் கூடாது. ஆனால், அவர் அறிக்கை விடுத்த நேரம் வெளிச்சந்தையிலேயே வெங்காயம் அந்த விலைக்கு வந்துவிட்டது. டில்லியில் ரூ.30க்கு வெங்காயம் தர கேஜ்ரிவால் அரசு ஏற்பாடு செய்திருந்தது. பிற மாநிலங்களை ஒப்பிடும் வழக்கம் கொண்ட தமிழக அரசு இந்த விசயத்தை ஒப்பிடாமல் விட்டுவிட்டது.

பரிசல் விபத்து, இரயில் விபத்து, யானைத் தாக்குதலில் மரணமுற்றவர்கள், காயம்பட்டவர்களுக்கு ரூ.1 லட்சம், 50,000 வழங்க உத்தரவிட்டுள்ளேன் என்று ஜெயலலிதா அறிக்கை விடுகிறார். நல்லது. ஆனால், சேஷசமுத்திரத்தில் பாதிக்கப்பட்ட தலித்துகளுக்கு, தூத்துக்குடியில் கொலை செய்யப்பட்ட விசைப் படகு தொழிலாளர் சங்கத் தலைவர் பார்த்திபன் குடும்பத் திற்கு எந்த உதவியும் இதுவரை அரசாங்கத்திடம் இருந்து கிடையாது. குறைந்தபட்சம் கண்டன அறிக்கை கூட ஜெயலலிதாவிடம் இருந்து கிடையாது. இதிலிருந்தே ஜெயலலிதாவின் அரசியலை புரிந்து கொள்ளமுடியும்.

சாராயக் கடைகளை மூடச் சொல்லி போராடும் பெண்களை திசை திருப்புவதற்காக 10,000 சுய உதவிக்குழுக்கள் இந்த ஆண்டு தொடங்கப்படும் என்று அறிவிக்கப்படுகிறது. ரூ.6,000 கோடிக்கு வங்கிக் கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்துள்ளார் ஜெயலலிதா. சுய உதவிக் குழுக்கள் மூலமாக உழைக்கும் பெண்களை கடனாளியாக மாற்றிக் கொண்டிருக்கும் இந்த அரசாங்கம் அவர்களை மேலும் கடன் பொறியில் சிக்க வைத்து சீரழிக்கவே புதிய சுய உதவிக் குழுக்கள். உண்மையிலேயே பெண்கள் மீது அக்கறை கொண்ட அரசு என்றால், கடன் பொறியில் சிக்கித் தவிக்கும் பீடிப் பெண் தொழிலாளர்கள், விசைத்தறித் தொழிலாளர்கள் போன்றவர்களுக்கு அரசு மானியம் வழங்க வேண்டும். செய்யுமா ஜெயலலிதா அரசு?

24,000 கோடி ரூபாயில் ராமநாதபுரத்தில் அனல்மின் திட்டம் தொடங்கப்படும் என்று ஜெயலலிதா அறிவிக்கிறார். இன்னொருபுறம் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், எம்எல்ஏக்கள் உட்பட யார் வேண்டுமானலும் மின் உற்பத்தி நிலையங்கள் ஆரம்பிக்கலாம். அரசின் மின் பகிர்மான நிறுவனம் அதை வாங்கிக் கொள்ளும் என்று அறிவித்து மின் உற்பத்தியில் தனியாரை அதிகளவில் ஈடுபடச் செய்ய ஜெயலலிதா அரசு ஆவன செய்யும் என்று சொல்லாமல் சொல்கிறார்

இருக்கிற அனல்மின் நிலையங்களில் உள்ள ஓட்டைகளை சரி செய்ய நடவடிக்கையில்லை. கூடங்குளத்தில் முதல் அணுஉலையில் மின் உற்பத்தி தொடங்கிவிட்டது. இரண்டாவது அணுஉலையில் இரண்டு மாதத்தில் மின் உற்பத்தி என்றெல்லாம் அறிவித்துக் கொண்டே இருக்கிறார்கள். ஆனால், அதுபற்றி அம்மாவிடம் இருந்துதான் சத்தமே இல்லை. மாறாக, உண்மை நிலையைச் சொல்லுங்கள் என்று போராடும் மக்களுக்குள் பிளவு ஏற்படுத்த வழக்குகளும் வாய்தாக்களும் தொடர்கின்றன.

பொதுப்பணித் துறை அமைச்சர் பன்னீர்செல்வம் திருவைகுண்டம் அணையில் சிறப்பாக தூர் வாரப்படுகிறது, பேச்சிப்பாறை, வைகை அணைகளிலும் தூர் வாரப்படும் என்கிறார். திருவைகுண்டம் அணைப் பகுதியை விட்டுவிட்டு அணையில் இருந்து 5 கிலோ மீட்டருக்கு அப்பால் தூர் வாரும் பணி என்ற பெயரில் மணல் கொள்ளை நடக்கிறது. அது தடுக்கப்பட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் குறிப்பாக பெண்கள் போராடுகிறார்கள். ஆனால், அமைச்சர் தலைகீழ் விசயத்தைப் பேசுகிறார்
ஆம்னி பஸ்கள் போல் அரசு பஸ்கள் இல்லை, சீர் செய்ய வேண்டும் என்று சொன்னால், பேருந்துகளை தனியாருக்குத் தாரை வார்க்கச் சொல்கிறீர்களா, அது நடக்காது என்கிறார் போக்குவரத்துத் துறை அமைச்சர். போக்குவரத்து ஊழியர்களுக்கு, அதுவும் ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு பணப் பாக்கி ஆண்டுக் கணக்கில் தரப்படாமல் உள்ளது, அதைக் கொடுக்க உடன் நடவடிக்கை வேண்டும் என்றால், இது என்ன நான்கு ஆண்டு பிரச்சினையா, ஆண் டாண்டு காலமாக உள்ளது ஆணவமாகப் பேசு கிறார் அமைச்சர் தங்கமணி.

மொத்தத்தில் சட்டமன்றம் வெறும் மேசை தட்டும் மன்றமாக, பொய்யுரைக்கும் மன்றமாக போய்க் கொண்டிருக்கிறது. அங்கே அநீதியும் அகங்காரமும் தலைவிரித்தாடுகிறது. அறிவிப்புகளை மட்டுமே அடுக்கிக் கொண்டிருக்கும் அம்மா மீண்டும் அரியணை ஏறி ஏமாற்ற மக்கள் அனுமதிக்க மாட்டார்கள்.  

ஜனநாயக வழக்கறிஞர்கள் சங்கத்தின்
தலையீட்டால் பெறப்பட்ட மூன்று உத்தரவுகள்

உத்தரவு 1 - 19.08.2015

செங்குன்றத்தில், ஜிஎன்டி சாலையில் 500க்கும் மேற்பட்ட சாலையோர நடைபாதை வியாபாரிகள் உள்ளனர். அந்த பகுதியில் உள்ள அரிசி ஆலை முதலாளிகள் தங்கள் லாரிகளை நிறுத்த சாலையோர வியாபாரிகள் தடையாக இருப்பதால், அவர்கள் போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதாக மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படை யில், மாதவரம் வட்டாட்சியர், சாலையோர வியாபாரிகளை 18.08.2015 அன்று அப்புறப்படுத்தப் போவதாகவும், அவர்களது உடைமைகள் திருப்பி தரப்பட மாட்டாது என்றும் 14.08.2015 அன்று பத்திரிகைகளுக்கு செய்தியளித்தார்.

இதையறிந்த இகக மாலெ மாவட்டச் செயலாளர் தோழர் எஸ்.ஜானகிராமன், மாநிலக் குழு உறுப்பினர் தோழர் .எஸ்.குமார், மாவட்டக் குழு உறுப்பினர் தோழர் .ராமன் ஆகியோர், ஏஅய்சிசிடியுவில் இணைந்துள்ள திருவள்ளூர் மாவட்ட சிறுகடை வியாபார அமைப்புசாரா தொழிலாளர் சங்கம் மூலம் உயர்நீதி மன்றத்தில் வழக்கு போட்டு தடையாணை பெற ஜனநாயக வழக்கறிஞர்கள் சங்கத் தோழர்களை அணுகினர்.

மூத்த வழக்கறிஞர் திரு.கே.எம்.ரமேஷ் உதவியோடு வழக்கு உடனடியாக தாக்கல் செய்யப்பட்டு, 17.08.2015 அன்று அவசர வழக்காக எடுத்துக் கொள்ள அனுமதி கேட்டு, சென்னை உயர்நீதிமன்ற இரண்டாவது அமர்வு நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. அன்று அனுமதி மறுக்கப்பட்டது. 18.08.2015 அன்று, ரிட் மனு எண்: 25695/2015 விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படாததால் நீதிமன்றம் வழக்கை எடுத்துக் கொள்ள அனுமதி மறுக்கப்பட்டதால் வழக்கறிஞர்கள் சங்க தோழர்கள் இந்த வழக்கு நடைபாதை வியாபாரிகளுடைய வாழ்வாதார சம்பந்தப்பட்டது, இன்று வழக்கு எடுத்துக் கொள்ளப் படவில்லையென்றால் அவர்கள் அப்புறப்படுத்தப்படுவார்கள் என்று முறையிட்டபோதும், நீதிமன்றம் அனுமதி கொடுக்க மறுத்தது; தொடர்ந்து தோழர்கள் தங்கள் நிலைப்பாட்டை வலியுறுத்தியதால் நீதிமன்றம், வாய்மொழியாக அரசு வழக்கறிஞரிடம் அன்று ஒரு நாள் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளக் கூடாது என உத்தரவிட்டது.

19.08.2015 அன்று வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. ஜனநாயக வழக்கறிஞர்கள் சங்கத் தோழர்களின் வாதங்களை கேட்டறிந்த நீதிமன்றம் மாவட்ட ஆட்சியர் சம்பந்தப்பட்ட பகுதியில் ஆய்வு மேற்கொள்ள வேண்டுமெனவும், நடைபாதை வியாபாரிகளை அப்புறப்படுத்தாமல் ஏற்கனவே இருந்து வந்த நிலை தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டது. வழக்கு நிலுவையில் இருக்கிறது. நடைபாதை வியாபாரிகளுடைய உரிமை நீதிமன்றத்தால் தற்காலிகமாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஆனால் அவர்கள் உரிமைகளை தொடர்ந்து நிலைநாட்டிட மக்கள் மத்தியிலான போராட்டமே அவசியமாகிறது.

உத்தரவு 2 - 19.08.2015

சென்னை பாரதி மகளிர் கல்லூரி 50 வருடங்கள் தாண்டிய பழைமை வாய்ந்த கல்லூரிகளில் ஒன்று. இந்த கல்லூரியில் 4,500க்கும் மேற்பட்ட பெண் மாணவர்கள் படித்து வருகிறார்கள். இங்கு கழிப்பறை வசதி, உணவக வசதி போன்றவை பல வருடங்களாக பிரச்சனைக் குரியவையாகவே இருக்கின்றன.
இதை எதிர்த்து, அந்த கல்லூரியில் பயிலும் அகில இந்திய மாணவர் கழகம் (அய்சா) மாநிலச் செயலாளர் தோழர் சீதா மாணவர்களுடன் கையெழுத்து இயக்கம் நடத்தி, கல்லூரி நிர்வாகத்திடம் மனு அளித்தும் பல முறை நேரடியாக முறையிட்டும், கல்லூரி நிர்வாகம் தற்காலிகமாக சில ஏற்பாடுகளை செய்தது. பின்பு அதே நிலை தொடர்கிறது.

இந்தப் பின்னணியில் மாணவர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு தோழர் சீதா போட்டியிட கல்லூரி நிர்வாகத்தை அணுகி மனு கேட்டபோது கல்லூரி நிர்வாகம் கடந்த 25 வருடங்களாக, 80% வருகைப் பதிவேடும், எல்லா தேர்வுகளிலும் வெற்றி பெற்ற மாணவர்களே போட்டியிட முடியும் என்ற நடைமுறை இருப்பதாகவும், தோழர் சீதாவுக்கு இந்த இரண்டு நிபந்தனைகளும் பொருந்தாது எனவும் கூறி மனு அளிக்க மறுத்தனர். தோழர் சீதா கோரிக்கைகளை வலியுறுத்த கல்லூரி முதல்வர் அறை வாசலிலேயே சக மாணவர்கள் உதவியுடன் ஒரு நாள் அடையாள பட்டினிப் போராட்டம் நடத்தினார். பின்பு வழக்கறிஞர் அறிவிப்பும் அனுப்பப்பட்டது. சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள்முதலமைச்சர், பிரதமர், குடியரசு தலைவர் பதவிகளுக்கு கல்வித் தகுதி கேட்கப்படாதபோது மாணவர் நலனுக்காக தேர்தலில் போட்டியிடும் மாணவரிடம் நிபந்தனைகள் விதிப்பது அநியாயமானது, சட்டவிரோதமானது எனச் சொல்லப்பட்டது.
நிர்வாகம் கோரிக்கைகளை ஏற்க மறுக்கவே, சென்னை உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு எண்: 25988/2015 19.08.2015 அன்று தாக்கல் செய்யப்பட்டு, அன்றே அவசர வழக்காக எடுத்துக் கொள்ள அனுமதி கேட்கப்பட்டு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்தது.  20.08.2015 அன்று கல்லூரியில் நடக்கவிருக்கும் மாணவர் சங்கத் தேர்தலில் தோழர் சீதா போட்டியிட அனுமதி வழங்க கல்லூரி நிர்வாகத்திற்கு உத்தரவிடக் கோரி வழக்கறிஞர்கள் சங்கத் தோழர்கள் வாதங்கள் முன்வைத்தனர்.

வாதங்களை கேட்டறிந்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ்  சட்டத்தின்பால் இல்லை என்றாலும், நியாயத்தின்பால் கோரிக்கைகளோடு சேர்ந்திருப்பதாக சொல்லி, 20.08.2015 அன்று மாணவர் சங்கத் தேர்தலில் தோழர் சீதா போட்டியிட கல்லூரி நிர்வாகம் அனுமதிக்க வேண்டுமென  உத்தரவிட்டார்.

தோழர்கள் அன்றே கல்லூரி முதல்வரை சந்தித்த னர். கல்லூரி முதல்வர், தேர்தல் நடத்தினால்தானே சீதா பங்கேற்க முடியும், தேர்தலையே ரத்து செய்து விடுவோம் என்றார்.

20.08.2015 அன்று கல்லூரி நிர்வாகம் காலை 10.00 மணியளவில் தோழர் சீதாவிற்கு வாய்ப்பு வழங்காமல் தேர்தலை துவக்கியது. தோழர்கள் காலை 11.30 மணியளவில் உத்தரவு நகலை கல்லூரி முதல்வர் அவர்களிடம் அளித்தப் பிறகு தேர்தல் நிறுத்தப்பட்டது. மீண்டும் தோழர் சீதாவை தலைவர் பதவிக்கு போட்டியிட அனுமதித்து மறு தேர்தல் நடத்தப்பட்டது. சீதா தேர்தலில் பங்கேற்றுள்ளார். ஜனநாயக உரிமை மீட்கப்பட்டுள்ளது. நீதிமன்றத்தின் இறுதி உத்தரவின் அடிப்படையில் தேர்தல் முடிவு அறிவிக்கப்படும்.

மாணவர் சங்கத் தேர்தலை ரத்து செய்யக் கூடிய சூழலில் இந்த உத்தரவு வரவேற்கப்பட வேண்டிய ஒன்றாகும்.

உத்தரவு 3 - 11.09.2015

காஞ்சிபுரம் மாவட்டம், மாம்பாக்கத்தில் உள்ள டைமண்ட் இன்ஜினியரிங் ஆலையில் 1,000த்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். கேள்வி கேட்டால் வேலை நீக்கம், பணிக் கொடை மறுப்பு, சம்பளம் மறுப்பு என பல்வேறு பழிவாங்கும் நடவடிக்கைகளை நிர்வாகம் மேற்கொண்டு வந்தது. தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்த பிஃஎப் தொகை ரூ.2 கோடியே 78 லட்சத்தை பிஃஎப் அலுவலத்தில் செலுத்தாமல் நிர்வாகமே எடுத்துக் கொண்டது.

இந்த சட்டவிரோத நடவடிக்கைகளை எதிர்த்து தொழிலாளர்கள் ஏஅய்சிசிடியுவில் இணைந்து போராட்டங்கள் நடத்தினார்கள். மே 1 அன்று கொடியேற்ற முயன்ற தொழிலாளர்களை காவல்துறை மூலம் நிர்வாகம் தடுத்தது. தொடர்ந்து போராடிய தொழிலாளர் முன்னணிகள் 30 பேர் மீது (மாவட்டத் தலைவர் தோழர் இரணியப்பன் உட்பட) பொய் வழக்கு போட்டு மூன்று முன்னணி தோழர்களை  சிறையிலடைத்தது. தொழிலாளர்கள் தொழிலாளர் ஆணையரகம், சட்டமன்ற முற்றுகை, பட்டினி போராட்டம் என பல போராட்டங்கள் நடத்தினார்கள். போராட்டம் தொடர்கிறது.

இந்தப் பின்னணியில் 20.08.2015 முதல் தொடர் காலவரையற்ற உண்ணாநிலை போராட்டத்திற்கு அனுமதி கேட்டு காவல்கண்காணிப்பாளர்  அலுவலகத்தில் மனு அளித்தபோது இது போன்ற நிகழ்ச்சிக்கு இந்தியாவில் எங்கும் அனுமதி வழங்க மாட்டார்கள் என்று சொல்லி மனுவை வாங்காமல் திருப்பி அனுப்பினர். மாம்பாக்கம் காவல் ஆய்வாளருக்கு மனு அளித்து அவரும் வாங்க மறுக்கவே தபாலில் மனு அனுப்பப்பட்டது. போக்குவரத்து  பாதிக்குமென்றும், காவல் சட்டம் 30(2) பிரிவு அப்பகுதியில் நடைமுறையில் இருப்பதால் அனுமதி மறுக்கப்படுவதாகவும் சொல்லி காவல்துறை 19.08.2015 அன்று கடிதம் வழங்கியது. இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது. உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் சங்கத் தோழர்கள், பிரிவு 30(2)படி காவல் துறை சட்டம் ஒழுங்குபடுத்த மட்டுமே அதிகாரம் படைத்ததென்றும், அனுமதி மறுக்க அப்பிரிவில் இடமில்லையென வாதிட்டார்கள். முன்னாள் முதலமைச்சர், இந்நாள் முதலமைச்சர் கூட தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியதை குறிப்பிட்டு ஏற்கனவே இது போன்ற வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பை சுட்டிக் காட்டினார்கள். அரசு தரப்பில் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்திற்கு அனுமதி மட்டும் தருவதாக சொல்லப்பட்டது. இதை தோழர்கள் ஏற்க மறுக்க, சென்னை உயர்நீதிமன்றம்காவல் துறை உத்தரவை ரத்து செய்து, தொழிலாளர்கள் அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கால வரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட அனுமதி அளித்துள்ளது.


இந்த நீதிமன்ற நடவடிக்கைகளில், ஜனநாயக வழக்கறிஞர்கள் சங்க அமைப்பாளர்கள் பாரதி, சுரேஷ், விஜய், அதியமான், சங்கர், ரமேஷ் முன்னணி பங்காற்றினர். நீதிமன்ற நடவடிக்கைகள் தொடர்கின்றன.

Search