COMMUNIST PARTY OF INDIA (MARXIST - LENINIST) - LIBERATION

COMMUNIST PARTY OF INDIA (MARXIST - LENINIST) - LIBERATION, TAMILNADU

Tuesday, June 16, 2015

2015 ஜூன் 16 மாலெ தீப்பொறி

ஒரு பெண்ணாக இருந்தும்...

             நாம் அனைவரும் ரகசியமாய் ஆண்கள்தான். காலையில் கவனமாக மீசையை ஷேவ் செய்து விடுகிறோம்.
             ஒரு பெண்ணாக இருந்தபோதும் நான் சுவாசிக்கிறேன். உயிரோடு இருக்கிறேன். இந்த நாட்டில் வாழ்கிறேன். இதுவே மாபெரும் சாதனை.
             ஒரு பெண்ணாக இருந்தபோதும் கங்கனா ரனாவத் நன்றாக நடிக்கிறார். நல்ல நகைச்சுவை உணர்வுடன் இருக்கிறார்.
             நான் ஒரு பெண்ணாக இருந்தும் கூட ஒரு டீ போட்டு குடித்துவிட்டு சில மெயில்களையும் பார்த்து விட்டேன்.
             (ஒபாமா ஒரு பார்க் பெஞ்சில் அமர்ந்திருப்பதையும், அவருக்கு முன்பு ஜெர்மனி சான்சலர் ஏஞ்சலா மெர்க்கல் நின்று கொண்டிருக்கும் படத்தைப் போட்டு) ஒபாமா ஒரு செக்ஸிஸ்ட்... இவ்வளவு பெரிய பெஞ்சில் அவரே முழுமையாக உட்கார்ந்து ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறார். பாவம் ஒரு பெண்ணாக இருந்தும் மெர்க்கல் நின்று கொண்டிருக்கிறார்.
             மோடி ஒரு ஆணாக இருந்தாலும் கூட, எல்லை தாண்டி மியான்மருக்குள் சென்று தீவிரவாதத்துக்கு எதிராக சண்டை போட முடிகிறது.
             இது மோடியின் தவறு அல்ல.அவர் ஆர்எஸ்எஸ்லிருந்து வந்தவர். அங்கு தலைவர்களின் பாதங்களை பெண்கள்தான் கழுவ வேண்டும்.
             அன்பான மோடிஜி, பெண்ணாக இருந்தாலும் கூட இன்று உரிய நேரத்தில் அலுவலகம் வந்து விட்டேன். நான் பதக்கம் பெற தகுதியானவர் என நினைக்கிறேன்.
             ஆர்எஸ்எஸ் சகாக்களில் பெண்களிடம் நீங்கள் பலவீனமானவர்கள். உங்களால் உலகத்தோடு போட்டி போட முடியாது என்றுதான் சொல்லித் தரப்படுகிறது.
             எப்படி இவ்வளவு பேர் மோடிக்கு ஓட்டுப் போட்டார்கள்? பாஜகவிலும் இருக்கிறார்கள். ஆச்சரியம்தான் போங்கள்.
             பெண்கள் மீது வெறுப்பு இருந்தாலும் ஏராளமான பெண்கள் சாதனை படைத்திருக்கிறார்கள் என்பதை பிரதம மந்திரிக்கு நினைவூட்ட விரும்புகிறேன்.
             அய்எஸ்அய்எஸ்க்கு எதிரான குர்தீஸ் இனப் பெண்களின் போராட்டம் மோடிக்கு தெரியவில்லை
             ஒரு பெண்ணாக இருந்தும் கூட மேரி க்யூரி இயற்பியல் மற்றும் வேதியிலுக்கான நோபல் பரிசை வென்றார்.
             நான் ஒரு பெண்ணாக இருந்தாலும் கூட, நான் நினைத்தபடி எனக்குப் பிடித்தபடி செயல்படுவேன். அடுப்பங்கரையில் நேரத்தை செலவிட மாட்டேன். நண்பர்களுடன் இரவு நீண்ட நேரம் வரை வெளியில் செல்வேன். என்னுடைய வாழ்க்கையை நான் வாழ்வேன்.

             நான் பெண்ணாக இருந்தாலும் கூட, பொறுத்துக் கொள்வேன், மன்னிப்பேன், இன்னொரு வாய்ப்பு தருவேன், புன்முறுவல் செய்வேன். சிரிப்பேன்.அழுவேன்.காயப்படுத்துவேன்.குணப்படுத்திக் கொள்வேன், கொண்டாடுவேன், நம்பிக்கையோடு இருப்பேன், பிரார்த்திப்பேன்.

ஊழல் வேட்பாளரை தோற்கடிக்க இடதுசாரி வேட்பாளரை
வெற்றி பெறச் செய்வோம்!

ஊழல் வழக்கில் இரண்டு முறை முதலமைச்சர் பதவி இழந்த ஜெயலலிதா, அவர் இரண்டாவது முறையாக ஊழல் வழக்கில் பதவியிழந்த பிறகு நடக்கும் இரண்டாவது இடைத் தேர்தலில் ஆர்கே நகர் தொகுதியில் போட்டியிடுகிறார். ஊழல் குற்றச்சாட்டில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய கர்நாடகா அரசு முடிவு செய்து அரசாணை வெளியிட்டிருக்கிற நிலையில், ஊழல் குற்றவாளியாக இருந்தவரை எதிர்த்து இடதுசாரி கட்சிகளின் வேட்பாளராக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தோழர் சி.மகேந்திரன் களமிறங்குகிறார்.

மக்கள் பணத்தை வாரியிறைத்து தேர்தல் நடத்தப்பட்டு ஒரு சட்டமன்ற உறுப்பினர் தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுதியில் எந்த காரணமும் இல்லாமல் அந்த சட்டமன்ற உறுப்பினர் பதவி விலகுகிறார். மீண்டும் அங்கு தேர்தல் நடக்கிறது. தேர்தல் நடப்பதற்கு பதவி விலகல்களுக்கு எல்லாம் பின்னால் இருக்கும் காரணம் ஊழல். பொதுவில் சொல்லும்படி எந்தக் காரணமும் இல்லாமல் பதவிக் காலம் முடியப் போகிற நேரத்தில் ஒரு சட்டமன்ற உறுப்பினர் பதவி விலகுகிறார் என்றால் ஆதாயம் இல்லாமலா இருக்கும்? மீண்டும் மக்கள் பணம் விரயமாகப் போகிறது. தற்கொலை செய்து கொண்டவர்களுக்கு ரூ.3 லட்சம் தரும் அஇஅதிமுக இந்த தேர்தல் செலவுகளை ஏற்குமா?

இடைத்தேர்தல் வந்தாதான் ஏதோ கொஞ்சம் நடக்குது
ஜெயிச்சுப் போன எம்எல்ஏ செத்தாக்க நல்லது...
அறிவுமதியின் பாடல் வரிகள் இன்றும் பொருந்துபவை. மக்களுக்கு ஏதும் நடக்கிறதோ இல்லையோ, பதவி விலகிய ஆர்கே நகர் தொகுதி எம்எல்ஏவுக்கு ஏதாவது நிச்சயம் நல்லதுநடந்திருக்கும். அக்கம்பக்கமாக மக்களுக்கும் ஏதோ நடக்கிறது. சென்னையின் விளிம்பு நிலை மக்கள் வாழ்கிற ஆர்கே நகர் தொகுதியில் இன்று சாலைகள் போடப்படுவதாகவும் குடிநீர் விநியோகம் செய்யப்படுவதாகவும் சொல்லப்படுகிறது.
ஜெயலலிதாவின் சொத்து மதிப்பு 2011ல் இருந்து 2015ல் ரூ.117 கோடி என இரண்டு மடங்கு உயர்ந்துள்ளது. இது ஜெயலலிதாவே காட்டியுள்ள கணக்கு. குமாரசாமிக்கு இந்தக் கணக்கில் எந்த சம்பந்தமும் இல்லை.

 ஊழல் குற்றவாளியாக இருந்த ஒருவரின் வருமானம் எப்படிப் பெருகுகிறது என்று இனி தமிழ் நாட்டில் அவரவர் புரிந்துகொள்வார்கள். கொடநாடு எஸ்டேட் மதிப்பே ரூ.4,500 கோடி என்று கருணாநிதி ஒரு கணக்கு சொல்கிறார். இதற்கு ஜெயலலிதா என்ன கணக்கு தருவார்? அவரது அசையாச் சொத்துக்களின் சந்தை மதிப்பு உயர்ந்து இரண்டு மடங்கு உயர்வு ஏற்பட்டுள்ளது என்று வைத்துக் கொள்வோம். இதே கால கட்டத்தில், அஇஅதிமுகவை தங்கள் தொகுதியில் வெற்றி பெற வைத்த ஆர்கே நகர் தொகுதியின் வறிய மக்களுக்கு அன்றாட வாழ்க்கையை நகர்த்துவதே சவாலாக இருந்தது
1991 முதல், 1996 - 2001 காலகட்டம் தவிர, 2015 வரை கிட்டத்தட்ட இருபதாண்டு காலம், இந்தத் தொகுதியில் அஇஅதிமுக காரர்கள்தான் சட்டமன்ற உறுப்பினர்கள். இருபதாண்டு காலமாக குடிநீர், குடியிருப்பு, சாக்கடை போன்ற அடிப்படை வசதிகள் கூட பெறாத அந்தத் தொகுதி, புரட்சித் தலைவி வெற்றி பெற்ற பிறகு, சொர்க்க பூமியாகப் போகிறது என்கிறார்கள் அஇஅதிமுககாரர்கள்.
ஜெயலலிதா முதலமைச்சராக இருக்கிற தமிழ்நாட்டின் ஒரு பகுதிதான் ஆர்கே நகர் தொகுதி. முதலமைச்சர் என்ற விதத்தில் ஆர்கே நகர் தொகுதி மக்களுக்கு அடிப்படை வசதிகள் உருவாக்குவதில் ஜெயலலிதாவுக்கு நிச்சயம் பொறுப்பு உண்டு. ஆர்கே நகர் தொகுதி அஇஅதிமுக காரர்களிடம் இருந்த இருபதாண்டு காலமும், ஊழல் வழக்குகளில் பதவி இழந்த காலங்கள் தவிர, ஜெயலலிதாதான் முதலமைச்சர். முதலமைச்சராக இருந்து பாதுகாக்காத மக்கள் வாழ்வுரிமைகளை, சட்டமன்ற உறுப்பினர் ஆகி பாதுகாத்து விடுவார் என்று அஇஅதிமுகவினர் நம்மை நம்பச் சொல்கிறார்கள். ஜெயலலிதா மனுதாக்கல் செய்ய வந்த போது, தேர்தல் அலுவலரின் அந்தச் சிறிய அறையில் மூன்று குளிர்சாதனப் பெட்டிகள் இருந்ததாகவும், அதற்கு முந்தைய நாள் ஜெயலலிதா வரும் வழியில் புதிய சாலை போடப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. நடக்கும் நல்லது எதுவானாலும் ஜ÷ன் 27க்குப் பிறகு வடிந்துவிடும்.

நலத்திட்டங்கள் என்று அவர் சொல்லி வருவதை மட்டும் சொல்லி, வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கை ஜெயலலிதாவுக்கு இல்லை. இருபதாண்டுகள் செய்யாததை இனி செய்வதாகச் சொன்னால் தொகுதி மக்கள் நம்ப மாட்டார்கள் என்று நம்புகிறார். எனவே, அனைத்து அமைச்சர்கள் உள்ளிட்ட 50 பேர் கொண்ட குழு ஒன்றை உருவாக்கி தேர்தல் பிரச்சார வேலைகளை முடுக்கிவிடுகிறார். சட்ட மன்றம் இயங்கவில்லை, அமைச்சர்கள் எல்லாம் போய்விட்டார்கள் என்று சொல்லப்படுகிறது. சட்டமன்றம் இயங்கியபோதும் மக்களுக்கு  எதிரான நடவடிக்கைகள்தான் அரங்கேறின.
ஆந்திர காவல்துறையினர் தமிழ்நாட்டின் பழங்குடி தொழிலாளர்களை சுட்டுக் கொன்ற பிரச்சனையில் மனித உரிமை ஆணையம் நடத்தவிருந்த விசாரணைக்கு அய்தராபாத் உயர்நீதி மன்றம் தடை விதித்துள்ளது. மீண்டும் மத்திய அரசுக்கு கடிதங்கள் எழுதுகிறார் ஜெயலலிதா. சுட்டுக்கொல்லப்பட்ட தமிழக தொழிலாளர்களுக்கு நியாயம் வேண்டும் என்று இன்னும் ஜெயலலிதாவிடம் இருந்து எந்த உறுதியான குரலும் வரவில்லை.
மழை பொய்க்கிறது. விவசாயிகள் மேட்டூர் தண்ணீரை எதிர்ப்பார்த்திருக்க, அது வராது என்று சொன்னவர் மாற்று ஏற்பாடுகள் பற்றி கவலைப்படவில்லை. நீர்வளத்துறையின் திருச்சி மண்டல தலைமைப் பொறியாளர் மழை வேண்டி சிறப்பு பூஜைகள் நடத்தச் சொல்லி, நடத்தப்பட்ட பூஜைகள் பற்றிய விவரங்களை அவருக்கு உடனடியாக தெரிவிக்கச் சொல்லி ஆணை பிறப்பிக்கிறார். நீர்ப்பாசனத் திட்டங்களுக்கு ஒவ்வோர் ஆண்டும் நிதிநிலை அறிக்கையில் நிதி ஒதுக்கப்படுகிறது. வெளிநாட்டு வங்கிகள் உதவியுடனான திட்டங்கள் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்படுகின்றன.
 இவற்றை நிறைவேற்ற வேண்டிய அதிகாரி, கடவுளிடம் கையேந்தச் சொல்கிறார். மழை பெய்யாததற்கு தமிழக மக்களுக்கு கடவுள் பக்தி இல்லாதது காரணம் என்று ஜெயலலிதாவும் தலைமைப் பொறியாளரும் சேர்ந்து சொன்னாலும் வியப்படைவதற்கில்லை. கடவுளை நிந்திக்கும் கருணாநிதி ஆட்சி செய்வதால்தான் தமிழ்நாட்டில் மழை பெய்யவில்லை என்று சொல்லக் கேட்டிருக்கிறோம். பூஜை செய்யச் சொல்லி ஆணை பிறப்பித்தவர்கள், அதிகாரபூர்வமாகக் கூட இது போன்ற கருத்துக்களை வெளியிடலாம். பால் கொள்முதல் செய்யாதது அரசின் தவறு. ஆவின் நிறுவன ஊழல் வெளிவந்ததால் பால் உற்பத்தியாளர்களுக்கு தண்டனையா? ஊட்டச் சத்து, உணவு எதுவும் இன்றி தமிழகக் குழந்தைகள் வாடும்போது பால் தெருவில் கொட்டப்படுகிறது. ஜெயலலிதா இந்த விசயத்திலும் நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை.
டில்லியில் போராடுகிற துப்புரவு தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து ராகுல் காந்தி சுட்டெரிக்கிற வெயிலில் நடுச்சாலையில் அமர்ந்திருக்கிறார். மக்களுக்கு அவர் மீது நம்பிக்கை வருமா? துன்பங்கள் அனைத்துக்கும் காங்கிரஸ் காரணமாக இருந்ததை மக்கள் மறப்பார்களா? தமிழ்நாட்டு மக்கள் துன்பத்துக்கு நான்காண்டு கால அஇஅதிமுக ஆட்சியின் குற்றமய                   அலட்சியமே காரணம் என்பதை தமிழக மக்களும் மறக்க மாட்டார்கள். அதனால், ஆர்கே நகரை சந்திக்கும் துணிச்சல் ஜெயலலிதாவுக்கு இல்லை.
இடைத்தேர்தல் நியாயமாக நடக்காது, அஇஅதிமுகவின் பண பலமும் அதிகார பலமும் ஜனநாயக இயக்கப்போக்கை முடக்கிவிடும் என்று காரணம் சொல்லி திமுக, பாஜக, பாமக, காங்கிரஸ், தேமுதிக, மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள் போன்ற கட்சிகள் இடைத்தேர்தலை புறக்கணித்துவிட்டன. அஇஅதிமுகவினர் ஒரு வாக்குக்கு ரூ.8,000 தர இருப்பதாக ராமதாஸ் கண்டுபிடித்துள்ளார். அறுக்க மாட்டாதவனுக்கு அருவாள் கோணல், ஏதோ ஒரு குதிரைக்கு சறுக்கியது சாக்கு என்று சொல் வழக்குகள் உண்டு. விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தவிர, தமிழ்நாட்டில் 2016ல் ஆட்சியைப் பிடிக்கப் போவதாகச் சொல்லி வரும் எதிர்க்கட்சிகள், இடைத்தேர்தலை புறக்கணிப்பதற்குச் சொல்லும் காரணங்கள் அப்படித்தான் உள்ளன. ஆர்கே நகர் உட்பட தமிழக மக்களின் வாழ்வாதாரப் பிரச்சனைகளில் பொருளுள்ள போராட்டங்கள், தலையீடுகள் செய்யாத கட்சிகள் எந்த அடிப்படையில் மக்களை அணுக முடியும்? மக்கள் மத்தியில் நம்பகத்தன்மையிழந்து நிற்பது தான் தேர்தலை எதிர்கொள்ள முடியாமல் போவதற்கு முக்கியமான காரணம் என்பதை இந்தக் கட்சிகள் மறைக்கப் பார்க்கின்றன. ஸ்டாலினோ, கருணாநிதியோ மக்கள் மத்தியில் என்ன சொல்லி வாக்கு கேட்பார்கள்? ஊழல் ஜெயலலிதாவை முறியடிக்க திமுகவுக்கு வாக்களியுங்கள் என்று அவர்களால் சொல்ல முடியாது. காங்கிரசுக்கும் இது பொருந்தும். சுயவிவரங்கள் தந்த அன்புமணி இளவரசன் மரணம் பற்றி, அந்த மரணத்தின் பின் பாமக இருந்தது பற்றி சொல்லவில்லை. ஆர்கே நகர் வாக்காளர்கள் இளவரசனை மறந்துவிட மாட்டார்கள். ஜெயலலிதாவுக்கு கொடியன்குளம் என்றால் ராமதாசுக்கு நாயக்கன்கொட்டாய். என்ன சொல்லி வாக்கு கேட்பது? கார்ப்பரேட் ஆதரவு கொள்கைகளை அமல்படுத்துவதை ஜெயலலிதா பார்த்துக் கொள்வார், நாங்கள் ஆர்கே நகரில் உள்ள மசூதிகளை, பாகிஸ்தானுக்கு மாற்றுவோம் என்று சொல்லியா பாஜகவினர் வாக்கு கேட்பார்கள்?
ஊழல் மலிந்துள்ள அஇஅதிமுக ஆட்சியின் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு எதிராக போராட, இடதுசாரி அரசியலை பலப்படுத்த வேண்டியுள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் களத்தில் நிற்கிறார்.

இடதுசாரி அரசியலே, மக்கள் ஆதரவு அரசியலே, நவதாராளவாத கொள்கை எதிர்ப்பு அரசியலே சரியான மாற்று என்று மக்கள் மத்தியில் சொல்ல வேண்டியுள்ளது. மாற்றம் காண காத்திருக்கும் மக்கள், இடதுசாரி வேட்பாளரை வெற்றி பெறச் செய்து 2016 எப்படி இருக்கும் என்பதை ஊழல் ஆட்சியின் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு இப்போதே உணர்த்த வேண்டும்.
அம்பேத்கர்
பெரியார்....
அன்று போலவே
இன்றும் தேவை

அய்அய்டி நிர்வாகம் பணிந்தது’.‘மாணவர் அமைப்பு மீதான தடை ரத்து’.இன்பத் தேன் காதில் கண்ணில் எல்லாம் பாய்ந்தது.
சென்னை அய்அய்டியின் அம்பேத்கர் பெரியார் படிப்பு வட்டத்துக்கு அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டதற்கும் மத்திய அரசுக்கும் சம்பந்தம் இல்லை என்று நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் வெங்கய்யா நாயுடு சொல்கிறார். இந்தியாவின் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் பாகிஸ்தான் கட்டுப் பாட்டில் இயங்குகிறதா? பாஜகவின் ஸ்மிரிதி இரானிதான் அங்கு அமைச்சர். அவர் தலைமையிலான அமைச்சகம்தான் தனக்கு வந்த அனாமதேய கடிதத்தை இணைத்து விசாரிக்கச் சொல்லி சென்னை அய்அய்டிக்கு கடிதம் அனுப்பியது. அய்அய்டி நிர்வாகமும் விரைவாக செயல்பட்டு அங்கீகாரம் ரத்து என்றது. இது சாதாரண தர்க்கம்.மத்திய அரசுக்கும் அம்பேத்கர் பெரியார் படிப்பு வட்டத்துக்கு அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டதற்கும் சம்பந்தம் இல்லை என்று வெங்கய்யா நாயுடு சொல்வது பொய்.தர்க்கத்தை மேல் நோக்கி நீட்டித்து, சென்னை அய்அய்டியில் நடந்த அத்துமீறலுக்கும் ஆர்எஸ் எஸ் க்கும் சம்பந்தம் உண்டு என்று கூட சொல்ல முடியும்.

ஓர் அனாமதேய கடிதம், நாடு தழுவிய அளவிலான ஒரு ஜனநாயகப் பிரச்சனைக்கு இட்டுச் செல்ல, தமிழ்நாட்டில் வலுவான அடிப்படை  இருக்கிறது. அந்த அனாமதேயக் கடிதம் பின்வரும் குற்றச்சாட்டுக்களை எழுப்புகிறது.
1. அம்பேத்கர் பெரியார் படிப்பு வட்டம் மோடி அரசாங்கத்துக்கு எதிராக வெறுப்பைப் பரப்புகிறது.
2. அம்பேத்கர் பெரியார் படிப்பு வட்டம் எஸ்சி எஸ்டிக்களுக்கும் இந்துக்களுக்கும் இடையில் வெறுப்பைப் பரப்பி நிறுவனத்தின் சூழலை கெடுக்கிறது.
3. அம்பேத்கர் பெரியார் படிப்பு வட்டம் சைவ உணவுக்காரர்களுக்கு தனி உணவு விடுதி ஏற்படுத்துவது பற்றிய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் சுற்றறிக்கை தொடர்பாக, கூட்டம் நடத்துகிறது.
4. மொழி அரசியல் மற்றும் மத்திய நிதியை சமஸ்கிருதம், இந்தி மொழிகளுக்கு செலவழிக்க அய்அய்டி நிர்வாகம் முன்னுரிமை தருவது பற்றி கூட்டம் நடத்துகிறது.
அய்அய்டி நிர்வாகம் அங்கீகாரத்தை ரத்து செய்து அம்பேத்கர் பெரியார் படிப்பு வட்டத்துக்கு தந்த கடிதத்தில், சர்ச்சைக்குரிய நடவடிக்கைகளில் ஈடுபட்டதாலும் முன்னுரிமைகளை தவறாக பயன்படுத்தியதாலும்            அமைப்பின் அங்கீகாரம் ரத்து செய்யப்படுவதாக சொல்லப்படுகிறது. சர்ச்சைக்குரிய நடவடிக்கை எது என்றோ, எந்த உரிமை, எப்படி தவறாக           பயன்படுத்தப்பட்டது என்றோ அந்தக் கடிதத்தில் விவரம் இல்லை.
அனாமதேய கடிதம் குறிப்பிடும் செயல்பாடுகளை சர்ச்சைக்குரியவை என்று அய்அய்டி நிர்வாகம் கருதுமானால், நாம் பிரிட்டிஷ் ஆட்சி காலத்துக்கு திரும்பிக் கொண்டிருக்கிறோம் என்று பொருள். எனவே, அம்பேத்கர் பெரியார் படிப்பு வட்டங்கள் போன்ற அமைப்புக்களின் தேவை, அம்பேத்கர் பெரியார் முன்வைத்த கருத்துக்களின் தேவை இன்னும் அதிகரிக்கிறது.
அம்பேத்கர் பெரியார் பெயரிலான ஓர் அமைப்பின் அங்கீகாரத்தை ரத்து செய்ய அய்அய்டி நிர்வாகத்துக்கு வந்தத் துணிச்சலுக்குப் பின் தமிழக அரசின் மவுன ஒப்புதல் இருக்கிறது. சனாதன நடைமுறைகளை பின்பற்றுவர்கள் நடத்தும் ஆட்சி இந்தப் பிரச்சனையில் தலையிடாது என்று அய்அய்டி நிர்வாகம் நம்பியிருக்கிறது. அங்கீகார ரத்துக்கு எதிராக தமிழ்நாடு முழுவதும் நடந்த போராட்டங்கள் மீது காவல்துறையின் ஒடுக்குமுறை ஏவப்பட்டது. ஜெயலலிதா முழுமையான மவுனம் கடைபிடித்தார்.
ஆனால் இடம் தெரியாமல் கைவைத்து விட்டதை இந்துத்துவா சக்திகள் போதுமான அளவு உணர்ந்து கொள்ளும்விதம் நாட்டில் உள்ள ஜனநாயக முற்போக்கு சக்திகள் எதிர்ப்பு தெரிவித்துவிட்டார்கள். அம்பேத்கர், பெரியார் என்ற பெயர்கள் மிகச்சரியாகவே அவர்களுக்கு அச்சம் உருவாக்கியிருக்கின்றன. காளியின் நிறம் கருப்பல்ல என்று விவாதம் நடத்துகிற  விவேகானந்தா படிப்பு வட்டம் இயங்கும்போது, அம்பேத்கர் பெரியார் படிப்பு வட்டம் இயங்குவதில் என்ன தடை இருக்க முடியும்? இந்தப் பெயர்கள் அரசியல்தன்மை கொண்டவையாக இருப்பதாகவும் அது மாணவர்கைள பிளவு படுத்துவதாகவும் ஆளுமைகள் பெயர்கள் ஏதும் இல்லாமல் அமைப்பு வைத்துக் கொள்ளும்படியும் ஏற்கனவே இரண்டு முறை இயக்குநர் அவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

ஆர்எஸ்எஸ் பத்திரிகையான ஆர்கனைசர், அம்பேத்கர் பெரியார் படிப்பு வட்டத்தின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டது சரியே என்றும் சில குறியீடுகளை அனுமதியின்றி பயன் படுத்துவது ஒழுங்கீனம் என்றும் சொன்னது. கல்வி நிறுவனங்கள் சிவப்பு கருத்தியலாலும் அம்பேத்கர் பெரியார் படிப்பு வட்டம் போன்றவற்றாலும் பாதிக்கப்பட்டுள்ளன என்றும் இந்து எதிர்ப்பு, பாரத் எதிர்ப்பு பிளவுவாத கருத்துக்களை அவை பரப்புகின்றன என்றும் கவலைப்பட்டது. அம்பேத்கரே இந்தக் கருத்துக்களை ஒப்புக்கொள்ள மாட்டார் என்றும், கம்யூனிஸ்ட் எதிரி என்று அவர் தன்னை அறிவித்துக் கொண்டவர் என்றும் சொன்னது. நாம் கோய பல்ஸ், ஹிட்லர் முறைகளை கேட்டறிந்திருக்கிறோம். ஆர்எஸ்எஸ் அப்படிச் செயல்படுவதை இப்போது பார்க்கவும் முடிகிறது. அம்பேத்கர் ஒடுக்கப்பட்ட பிரிவினர் மத்தியில், அவர்களுக்கு அவசியப்படும் விதத்தில் சென்று சேர்வதால் ஆர்எஸ்எஸ்ஸூக்கு ஏற்படும் அச்சம் புரிந்து கொள்ளக் கூடியதே.
நாடு முழுவதும் தலித் மக்கள் மீதான தாக்குதல் அதிகரிக்கிறது. மே 14 அன்று, ராஜஸ்தானின் நாகார் மாவட்டத்தில் டங்காவாஸ் என்ற கிராமத்தில் நிலப்பிரச்சனையில் மேல் சாதிக்காரர்கள் தலித்துகள் மேல் ட்ராக்டர் ஏற்றியதில் 3 பேர் கொல்லப்பட்டனர். 14 பேர் படுகாயமடைந்தனர். பெண்கள் பாலியல்ரீதியாகக் கடுமையாகத் தாக்கப்பட்டனர். வீடுகள் நாசமாக்கப்பட்டன. தலித் மக்கள் அனுமதிக்கப் பட்ட மருத்துவமனைக்குச் சென்று அங்கு அவர்களுக்கு சிகிச்சை தரக்கூடாது என்றும் மிரட்டியுள்ளனர். காவல்துறையினர் தலையிட்ட பிறகுதான் சிகிச்சை நடந்துள்ளது. தலித்துகள் தான் தங்கள் உறவினர்களை ட்ராக்டர் ஏற்றிக் கொலை செய்தார்கள் என்று பாதிக்கப்பட்ட தலித்துகள் மீதும் காவல் துறையினர் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளனர்.
மகாராஷ்டிராவின் பர்பானி மாவட்டத்தில் உள்ள உம்ரா கிராமத்தில் மேல்சாதி மராத்தாக்களால் தலித் ஊராட்சித் தலைவர் ஹரிபாவ் கம்ப்ளே தாக்கப்பட்டு இப்போது ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் உள்ளார். 80 வயதான அவரது தந்தையும் அவருமாகச் சேர்ந்து திருட முயற்சி செய்தனர் என்று முதல் தகவல் அறிக்கை பதிவாகியுள்ளது.அம்பேத்கர் பெருமை சொல்லும் பாடல் ஒன்றை ரிங்டோனாக வைத்திருந்ததற்காக மகாராஷ்டிராவில் தலித் இளைஞர் ஒருவர் மராத்தா இளைஞர்களால் அடித்துக் கொல்லப்பட்டார். அவர் மீது இரு சக்கர வாகனத்தை ஏற்றினார்கள்.
தலித்துகள் மீது தொடரும் தாக்குதல்களுக்கு தமிழ்நாடு விதிவிலக்கல்ல. மார்ச் 2, 2015 அன்று, கிருஷ்ணகிரியில் கோவில் திருவிழாவுக்கு வந்த தலித் இளைஞர்களை மேல்சாதி இளைஞர்கள் கெட்ட வார்த்தைகளில் திட்ட, எதிர்ப்பு தெரிவித்த தலித் இளைஞர்கள் தாக்கப்பட்டார்கள். அவர்களில் ஒருவரின் வாயில் ஒரு மேல்சாதிக்கார இளைஞன் சிறுநீர் கழிக்கிறான்.
தூத்துக்குடியைச் சேர்ந்த தலித்துகள் 4 பேர் மீது இரட்டை கொலை செய்ததாக காவல் ஆய்வாளர்  சோடித்த வழக்கில் அவர்கள் மூன்று மாதங்கள் சிறையில் இருக்க நேர்ந்தது. அவர்களுடைய நிலத்தை மிகக்குறைந்த விலைக்கு ஒரு நிலவர்த்தக தாதாவுக்கு விற்கச் சொல்லியிருக்கிறார்.அவர்கள் மறுத்ததால், பொய் வழக்கில் சிறையில் அடைத்திருக்கிறார்.
அய்அய்டியில் ஆசிரியர்களில் 87 சதத்தினர் மேல்சாதியினர். கடந்த 7 ஆண்டுகளில் 3 எஸ்டி மாணவர்கள் மட்டுமே எம்எஸ் படிப்புக்கு சேர்க்கப்பட்டுள்ளனர்.
2011ல் வெளியிடப்பட்ட தகுதியின் மரணம்என்ற ஆவணப்படம், அதற்கு முந்தைய 4 ஆண்டுகளில் அய்அய்டி, ஏய்ம்ஸ் போன்ற உயர்கல்வி நிறுவனங்களில், 18 தலித் மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டது பற்றி விவரித்தது. மே 2007ல் சமர்ப்பிக்கப்பட்ட பேராசிரியர் தொராட் கமிட்டி ஏய்ம்ஸ் நிறுவனத்தில் தலித் மாணவர்கள் இழிவுபடுத்தப் படுவதை அம்பலப்படுத்தியது.
இங்கு குறிப்பிடப்பட்டவை அனைத்தும் வெளியில் தெரிந்தவை. வெளியில் தெரியாமல் தாக்குதல்கள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. பெரியார், அம்பேத்கர் சொன்ன சாதி ஒழிப்போ, தலித் மக்கள் விடுதலையோ இன்னும் தூரத்தில்தான் உள்ளது. அவர்கள் காலத்தை விட நிலைமைகளில் முன்னேற்றம் இருந்தாலும் முழுவதுமாக சீரடைந்துவிட்டதாக சொல்ல முடியவில்லை. எந்த பிற்போக்கு கருத்துக்களுக்கு சக்திகளுக்கு எதிராக அவர்கள் இருவரும் போராடினார்களோ அந்தக் கருத்துக்கள், சக்திகள் மேலோங்கியவையாக, இதுவரை இல்லாத அளவு அதிகாரம் படைத்தவையாக இருக்கும்போது அம்பேத்கரையும் பெரியாரையும் மாணவர்களும் மற்றவர்களும் நாடுவது இந்துத்துவ சக்திகளுக்கு பிரச்சனைக்குரியதே.
இன்றும் தமிழ்நாட்டில் 69% இடஒதுக்கீடு அமலாகிறது என்றால், அதற்கு அன்று பெரியார் மேற்கொண்ட நடவடிக்கைகள் காரணம். 1921ல் மக்கள் தொகையில் 2 சதம் மட்டுமே இருந்த பார்ப்பனர்கள், அந்த மக்கள்           தொகையில் 28.2 சதம் ஆங்கில அறிவு பெற்றவர்களாக இருந்தார்கள். 1921 ஜூன் - டிசம்பர் மாதங்களில் (அரசுப் பணிகளில்) நியமனம் செய்யப் பட்டவர்களில் 22 சதம் பார்ப்பனர், 48 சதம் பிராமணர் அல்லாதோர், 3 சதம் தாழ்த்தப்பட்டோர். பிராமணர் அல்லாதோர் கூடுதலாக இருப்பினும் மாத வருமானம் ரூ.35க்கும் மேல் பெறும் பதவிகளில் பார்ப்பனர்களே அதிகம். பார்ப்பனர் ஆதிக்கம் பற்றிய இது போன்ற அம்சங்களை பெரியார் தொடர்ந்து சுட்டிக் காட்டி வந்தார். 1921, 1922, 1927 ஆண்டுகளில் வழங்கப்பட்ட ஆணைகள் பார்ப்பனர் அல்லாதோர் எண்ணிக்கை அரசுப் பணிகளில் அதிகரிக்க உதவின. இட ஒதுக்கீடு அமல்படுத்தப்பட்ட போதும் பெரியார் அதில் முழுமையாக திருப்தியடைந்து விடவில்லை. 3 சத பார்ப்பனர்கள் 16 சத உத்தியோகமும் 30 சத தாழ்த்தப்பட்டோர் 8 சத உத்தியோகமும் பெறுகின்றனர் என்று 11.11.1928ல் குடி அரசு பத்திரிகையில் எழுதினார். இன்றைய இடஒதுக்கீடு, மீண்டும் மீண்டும் இடஒதுக்கீடு எதிர்ப்பாளர்களால் கேள்விக்கு உள்ளாக்கப்படுகிறது. ஆயினும் தொடர்கிறது. தமிழ்நாட்டின் ஆட்சியாளர்கள், நான் பாப்பாத்தி என்று சொன்னவர்கள் உட்பட, இடஒதுக்கீடு விசயத்தில் 69% தவிர வேறு பேசவோ, 50% என்ற உச்ச வரம்புக்கு இறங்கவோ முடியாது. வாக்கு வங்கியில் இருந்து அமைச்சரவை வரை எல்லாம் ஆடிப்போகும்.
1950ல் இந்திய அரசாங்கம், இந்த இட ஒதுக்கீடு அரசியல் சாசனத்துக்கு முரணானது என்று சொன்னபோது, அதற்கெதிராக தமிழ் நாட்டில் நடந்த போராட்டங்களால்தான் முதல் அரசியல் சாசன திருத்தம்                   மேற்கொள்ளப்பட்டு, இட ஒதுக்கீட்டுக்கான சட்டம் வகுக்கும் மாநில அரசுகளின் உரிமை உறுதி செய்யப்பட்டது. அனைத்து சாதியினரும் கோவில் அர்ச்சகர்கள் ஆகலாம் என்பதற்கும் தமிழ்நாட்டில் தான் 1970ல் சட்டம் இயற்றப்பட்டது.
அரசியல், அதிகார வெளியில், பார்ப்பனர் ஆதிக்கத்துக்கு முடிவு கட்டும் நடவடிக்கைகளுடன் பெரியார் நின்றுவிடவில்லை. தீண்டாமை ஒழிப்பு, பெண்ணடிமை ஒழிப்பு, மூடநம்பிக்கை ஒழிப்பு என இந்து மதத்தின் அனைத்து பிற்போக்கு அம்சங்களுக்கும் எதிராக தீவிரமான கருத்துப் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இந்துத்துவ பிற்போக்கு சக்திகளுக்கு பெரும் சவாலாய் எழுந்தார். இந்துத்துவ சக்திகளுக்கு பெரியார் என்ற பெயர் கேட்டால் நடுக்கம் ஏற்படுவது இதனால்தான். இன்று இருக்கிற பரந்த விரிந்த ஜனநாயக வெளியில் கூட, இந்து மதத்துக்கு, இந்து கடவுளர்க்கு, இந்துமத பழக்க வழக்கங்களுக்கு எதிராக, அன்று பெரியார் எழுப்பியது போன்ற நேரடியான, அதிர்ச்சி தரும் கேள்விகளை எழுப்ப முடியவில்லை.
உதாரணத்துக்கு சில:
இந்து மதமும் கடவுளும் கோவிலும் இல்லாவிட்டால் மனித சமுதாயம் எதிலே கெட்டுவிடும்?”
உங்களுக்கு கடவுள் நம்பிக்கையோ மத நம்பிக்கையோ இருக்கக் கூடாது.உங்களை இந்த தாழ்ந்த நிலைக்கு ஆக்கியது இந்துக் கடவுளும் மதமும்தான் என்பதை உணர வேண்டும். நீங்கள் உங்கள் அறிவையே பிரதானமாக நம்ப வேண்டும். உங்களை ஈடேற்றுவது உங்கள் அறிவே தவிர, கடவுளும் மதமும் அல்ல”.
மகளை துரோகம் செய்வதும் தம்பியை துரோகம் செய்வதும் மட்டுமல்ல ராமாயணத்தில் இருப்பது. ஒருவனுக்கு 60 ஆயிரம் பெண்டாட்டிகள். சென்னை நகர கார்ப்பரேசன் கூட போதாது இந்த குடும்பத்துக்கு. இந்த           அக்கிரமத்தை மகாயோக்கியன் என்று கூறப்படும் ராமனாவது கேட்டானா?”
நமது பண்டைய பெருமையான ஏடுகள் அழிக்கப்பட்டன.ஆற்றில் எறியப்பட்டன. மிஞ்சியிருப்பவைகளுக்கு பார்ப்பானே அர்த்தமும் விளக்கமும் எழுதி வந்துவிடுகிறான். அவன் நீதி சொன்னால், பகவான் சொன்னான். அசரீரி சொல்லிற்று. பார்வதிக்கு பரமசிவன் சொல்ல, அதை நந்தி கேட்டிருந்து நாரதரிடம் சொல்ல நாரதர் ரிஷியிடம் சொல்ல அதை தேசிய பாஷையில் பிராமணோத்தமர்களுக்கு காதில் கூற அதற்கு நான் அர்த்தம் கூறுகிறேன். அதை நம்பு. இல்லாவிடில் நரகம் என்று எழுதி விடுகிறான்”.
நம் நாட்டின் அரசியல் முதல் மக்களின் ஒழுக்கம் வரை சீர்பட வேண்டுமானால் குறளைப் படியுங்கள்.  ராமாயணத்தைக் கொளுத்துங்கள். புராணப் பண்டிகைகளைக் கொண்டாடாதீர்கள்”.
பார்ப்பானை ஒழிக்க வேண்டுமானால் அவனுக்கு பக்கபலமாக ஆதரவாக பாதுகாப்பாக இருக்கிற கடவுளை மதத்தை சாஸ்திரத்தை கோவில்களை எல்லாம் ஒழிக்க வேண்டும்”.
மதமும் கடவுளும் இருக்கிறவரை பார்ப்பான் இருந்துதான் தீருவான். ஒருவன் எதனால் பார்ப்பான் என்றால் மதப்படி, கடவுள் அமைப்புப்படி என்றுதான் சொல்கிறான். நாம் ஏன் சூத்திரர்கள் என்றால் கடவுள் அப்படி அமைத்திருக்கிறார். சாஸ்திரத்தில் இருக்கிறது. மதப்படிதான் என்கின்றனர். எனவே  சூத்திரத் தன்மைக்கும் பார்ப்பானின் உயர்சாதித் தன்மைக்கும் காரணமாக இருப்பது கடவுள் மதம் சாஸ்திரம் ஆகியவையேயாகும் என்பதால் அவை ஒழிக்கப்பட வேண்டும் என்கிறோம்”.
பேய் இருக்கிறது என்பது எவ்வளவு பொய் சங்கதியோ அவ்வளவு பொய் சங்கதி கடவுள் இருக்கிறது என்பதும். தேவர்கள் என்பதும் பெரும் பொய்யேயாகும். மேல் உலகம் என்பதும் மகாமகா பொய்யேயாகும். ஏனெனில் இந்த உலகத்தில் இருந்து ஆகாய மார்க்கத்தில் சுமார் மூன்று கோடி மைல் தூரத்தில் சூரியன் இருக்கிறது. அதுவரை தூர திருஷ்டிக் கண்ணாடியால் ஆகாயம் பார்க்கப்பட்டாகிவிட்டது. எங்கேயும் உஷ்ணம் தவிர எந்த உலகமும் தென்படவில்லை”.
சாதியை அழித்துவிட்டால் இந்து மதம் நிலைக்குமா?அல்லது இந்து மதத்தை வைத்துக் கொண்டு சாதியை அழிக்க முடியுமா? சாதியையும் மதத்தையும் அழித்துவிட்டு கடவுளை வைத்துக் கொண்டிருக்க முடியுமா?”
இப்படியெல்லாம் எழுதியும் பேசியும் தமிழ்நாட்டில் ஜனநாயகக் கருத்துக்களுக்கு தளம் இட்ட பெரியார் பெயர் இந்துத்துவ சக்திகளுக்கு எட்டிக்காயாகவே இருக்கும்.
பெரியாரை எதிரியாய் பார்க்கும் இந்துத்துவ சக்திகள் அம்பேத்கரை கையகப்படுத்தப் பார்க்கிறார்கள். அம்பேத்கர் இந்து மதமே வேண்டாம் புத்த மதத்துக்குச் சென்றுவிடுங்கள் என்று தலித் மக்களுக்குச் சொன்னதை           அவர்களால் மறைத்துவிட முடியாது. தலித் மக்கள் அதிகாரம், சமூக விடுதலை, இந்து மதம் பற்றி அம்பேத்கர் பின்வருமாறு சொல்கிறார்:
தாழ்த்தப்பட்ட வர்க்கங்கள், தங்களுடைய தற்போதைய பரம்பரையாக அடிமைப் பட்டவர்கள் என்ற நிலையில், பெரும்பான்மையினரின் ஆட்சிக்கு தங்களை கீழ்ப்படுத்திக் கொள்வதற்கு சம்மதிக்க முடியாது. பெரும் பான்மையினரின் ஆட்சி நிறுவப்படுவதற்கு முன், தீண்டாமையில் இருந்து தங்கள் விடுதலை நிறைவு பெற்ற உண்மையாக வேண்டும். இது, பெரும்பான்மையினரின் முடிவுக்கு விடப்படக் கூடாது. தாழ்த்தப்பட்ட வர்க்கங்கள் சுதந்திரமான குடியுரிமை பெற்றவர்களாக வேண்டும். நாட்டின் பிற குடிமக்களைப் போன்றே அனைத்து குடியுரிமையின் அனைத்து உரிமைகளுக்கும் தகுதியுடையவர்களாக்கப்பட வேண்டும்”.
இந்து மதம் பாசிச நாசிச சித்தாந்தங்களைப் போன்ற ஓர் அரசியல் சித்தாந்தமாகும் என்பதையும் அது முற்றிலும் ஜனநாயகத்துக்கு எதிரானது என்பதையும் காங்கிரஸ் மறந்து விடுகிறது. இந்து மதம் அதன் போக்கில் விடப்பட்டால் - அதைத்தான் இந்து பெரும்பான்மையினர் விரும்புகின்றனர் - இந்து மதத்திற்கு வெளியே உள்ளவர்கள் மற்றும் இந்து மத எதிர்ப்பாளர்கள் ஆகியோரின் வளர்ச்சிக்கு அது அச்சுறுத்தலாக அமையும். இது இசுலாமியர்கள் கருத்து மட்டும் அல்ல; தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் பார்ப்பனர் அல்லாதவர்களின் கருத்தும் ஆகும்”.
இந்து மதத்தை பாசிசம் என்று சொன்ன அம்பேத்கர், ராமனை அயோக்கியன் என்று சொன்ன பெரியார், சுயமரியாதை, அரசியல் அதிகாரம் ஆகியவற்றை வலியுறுத்திய இந்தத் தலைவர்கள், சூரிய நமஸ்காரம் செய்யாதவன் கடலில் மூழ்கிவிடு என்று சொல்பவர்களுக்கு அங்கீகாரம் கிடைத்துள்ள சூழலில் அன்று போலவே இன்றும் தேவை. இந்துத்துவ சக்திகள் அவர்களை எதிரிகளாகக் காட்ட முயற்சி செய்தாலும் யதார்த்த நிலைமைகள் ஒடுக்கப் பட்ட மக்களை அவர்கள் நோக்கியே செலுத்துவதை தடுத்து விட முடியாது.
அய்அய்டி சென்னை அம்பேத்கர் பெரியார் படிப்பு வட்ட அங்கீகாரத்தை ரத்து செய்த பிறகு நாடு முழுவதும் உள்ள மாணவர்கள் ஜனநாயக முற்போக்கு சக்திகள் மத்தியில் அந்த அமைப்புக்கு பெரும்அங்கீகாரம் கிடைத்துள்ளது. ஜேஎன்யு, அய்அய்டி மும்பை, அய்அய்டி டில்லி, ஜாதவ்பூர் பல்கலை கழகம், வாரணாசி இந்து பல்கலை கழகம் ஆகிய இடங்களில் இப்போது அம்பேத்கர் பெரியார் படிப்பு வட்டங்கள் உருவாகியுள்ளன.
நிலப்பிரபுத்துவ மிச்சசொச்சசங்களுக்கு எதிராக, ஜனநாயக விழுமியங்களை நிலை நிறுத்த, விஞ்ஞானபூர்வ அணுகுமுறையை வளர்த்தெடுக்க, மூளைக்குப் போடப்படும் விலங்குகளை அகற்ற பெரும்பங்கு ஆற்றிய அம்பேத்கரும் பெரியாரும் நாட்டில் உள்ள பிற்போக்கு இந்துத்துவ சக்திகளுக்கு சிம்ம சொப்பனமாக தொடர்வார்கள். இன்றைய நிலைமைகளில் அம்பேத்கர் பெரியார் படிப்பு வட்டத்தைச் சுற்றி எழுந்த பிரச்சனையும் விளைவுகளும் துவக்கம் மட்டுமே. ஜனநாயக விழுமியங்களை விழுங்கிவிட இந்துத்துவ சக்திகள் அனைத்தும் தழுவிய முயற்சிகள் மேற்கொள்ளும்போது, அம்பேத்கர் பெரியார் படிப்பு வட்டங்கள் பரவலாகின்றன.

ஜூன் 3 அன்று சென்னையில் இகக மாலெ, புரட்சிகர இளைஞர் கழகம், அகில இந்திய மாணவர் கழகம் இணைந்து அம்பேத்கர் பெரியார் படிப்பு வட்டத்துக்கு தடை விதித்ததை உடனடியாகத் திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி முற்றுகைப் போராட்டம் நடத்தின. இகக மாலெ அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் தோழர் எஸ்.குமாரசாமி தலைமையில் நடந்த இந்தப் போராட்டத்தில் புரட்சிகர இளைஞர் கழக தேசியச் செயலாளர் தோழர் கே.பாரதி, மாநிலத் தலைவர் தோழர் ராஜகுரு, மாநிலப் பொதுச் செயலாளர் தோழர் தனவேல், ஏஅய்சிசிடியு மாநிலச் செயலாளர்கள் தோழர்கள் கே.பழனிவேல், ஜி.முனுசாமி, ஆர்.மோகன்  அகில இந்திய மாணவர் கழகத்தின் மாநிலச் செயலாளர் தோழர் சீதா ஆகியோர் கண்டன உரையாற்றினர். போராட்டத்தில் பங்கேற்ற அனைவரும் கைது செய்யப்பட்டு மாலை விடுவிக்கப்பட்டனர். ஜூன் 1 அன்று டில்லியில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் இகக மாலெ அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் தோழர் கவிதா கிருஷ்ணன் கலந்துகொண்டார்.

Search